அமுதசுரபி – மே 2013
“வெங்கடேசா… வெங்கடேசா…”
“இதோ வந்துட்டேன்ப்பா…” வந்த மகனிடம் காசை கொடுத்தார் சுதர்ஸன், வெங்கடேசனின் அப்பா. “ரேஸர் ஒண்ணு வாங்கிட்டு வாப்பா…” காசை வாங்கியவன் முதுகுக்கு பின்னாடி அம்மாவோட குரல் கேட்டது “அப்டியே பொட்டுக்கடலை அரைக்கிலோ வாங்கிட்டு வந்துடுப்பா…”
வீட்டுக்கு பக்கத்திலேயே பெட்டிக்கடை இருப்பது ரொம்ப சவுகரியமாக போய் விட்டது. “நேத்து இட்லிக்கு மாவு அரைக்கலைன்னு தங்கச்சி சொல்லுச்சு… இந்தாப்பா… இட்லி மாவு ஃபிரெஷ்ஷா இருக்கு.. எடுத்துட்டு போப்பா…” உரிமையோடு இட்லி மாவு பாக்கெட்டை எடுத்து வைத்த கடைக்கார அண்ணாச்சி, அதோடு ஒரு தினசரி காலண்டரையும் வெங்கடேசன் கையில் திணித்தார்.
“தாங்ஸ் அங்கிள்…” என்றவாறு காலண்டரை வெளியே எடுத்தவனின்; முகம் அதில் இருந்த கடவுள் படத்தைப்; பார்த்ததும் சுருங்கி போனது. “அங்கிள்.. இந்த காலண்டர் வேண்டாம்… எதாவது நேச்சுரல் ஸீனரீஸ் படம் போட்ட காலண்டர் இருந்தா கொடுங்களேன்…” வெங்கடேசன் கேட்டப்படி காலண்டரை கொடுத்த அண்ணாச்சி ‘பிள்ளையார் படம் போட்ட காலண்டரை தானே கொடுத்தேன்’ என்றவாறு முணுமுணுத்துக் கொண்டார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் வெங்கடேசனுக்கு கடவுள் மேல் ஏனோ நம்பிக்கை இல்லை. இத்தனைக்கும் காலையிலேயே அவன் அம்மா சுப்ரபாதத்தை முணுமுணுத்தபடியேதான் வேலையை தொடங்குவாள். அமாவாசை, பிரதோஷம், சோமவார விரதம், சனிக்கிழமை விரதம் என வீட்டில் களைக்கட்டும் விரதங்களுக்கும் குறைவில்லை. அப்பாவோட அமாவாசை தடபுடல்களுக்கு காய்கறி வாங்குவதிலிருந்து, வாழையிலை வாங்குவது வரை தட்டாமல் உதவி செய்பவன், அப்பா துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு, தீபாராதனை தட்டை ஏந்தி விட்டால், அந்த இடத்தை விட்டு சட்டென நகர்ந்து விடுவான்.
“வெங்கடேசு… இந்தா… காக்காய்க்கு வச்சுட்டு வாப்பா…” வாழையிலையின்; ஓரப்பகுதி கிழிக்கப்பட்டு, அதில் அன்றைய அனைத்து மெனுக்களும்; வைக்கப்பட்டிருந்தது. “ஏம்மா..? இன்னைக்கு மட்டும் தான் காக்காவுக்கு பசிக்குமா…? தினமும் அதுங்களுக்கு சாப்பாடு வைக்கலாம்ல…?”நக்கலடித்தான். “ஏட்டிக்கு போட்டியா பேசாத வெங்கடேசா… உங்க தாத்தா தான் காக்கா உருவத்துல வந்து சாப்பிட வர்றாருப்பா..” “நீ பார்த்தியாம்மா…?” மகனின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை அம்மாவுக்கு. “பேசாம இருடா… அப்பா வர்றாரு… நீ இப்படி பேசறத கேட்டாருன்னா வருத்தப்படுவாரு…”
பனிரெண்டாம் வகுப்புக்கு வந்து விட்டான் வெங்கடேசன். ஸ்பெஷல் கிளாஸ், கோச்சிங் கிளாஸ் எல்லாம் முடித்து விட்டு வெங்கடேசன் வீட்டுக்கு வரும்போது மணி ஏழாகி விட்டது. பசியோடு வந்த அண்ணனுக்கு, இலையில் சர்க்கரை பொங்கலை வைத்து நீட்டினாள் தங்கை கோமதி.
“இன்னிக்கு என்ன விஷேசம்…? அம்மா சக்கரை பொங்கல்லாம் செஞ்சுருக்காங்க…?”
“அதுவா… நீ நல்லா மார்க்கு வாங்கணும்னு அம்மா ஒன்பது வாரம் நம்ப புத்துமாரியம்மன் கோயில்ல வெளக்கு போட்டுக்கிட்டு இருக்காங்க… இன்னிக்கோட ஒன்பது வாரம் முடியுது.. அதான்; சர்க்கரை பொங்கல் வச்சு சாமி கும்புட்டுட்டு, அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..” அன்று இரவு உணவு அம்மா சாப்பிடவில்லை. “ஏம்மா… இப்டி விரதம், விரதம்னு இருந்து ஒடம்ப கெடுத்துக்குறீங்க..” மகன் வாஞ்சையோடு கேட்டான்.
“எல்லாம் உனக்காகதாம்ப்பா… நீ நல்லாயிருக்கிறது பார்க்கறத தவிர எங்களுக்கு வேற என்ன ஆசை இருக்கப் போவுது…?” பாசத்தை தாண்டி அம்மாவின் கண்களில் சோர்வு தெரிந்தது.
“நான் நல்லாயிருக்கணும்னா, நீ நல்லா சாப்பிடுக்கிட்டு, சந்தோசமா இருக்கணும்… நான் வரும்போது நீ கோயில், குளம்னு சுத்தாம வீட்லயே இருக்கணும்… அப்பா ஒரு பக்கம் சாமி, கோயில், டொனேஷன்னு செலவு பண்ணிக்கிட்டு இருக்காரு… நீங்க ஒரு பக்கம் சாப்புடாம இருந்து உடம்ப கெடுத்துக்குறீங்க… இல்லாத ஒண்ணுக்காக எதுக்கு வீண் செலவு செய்றீங்கன்னு புரியலை..”
“அய்யய்யோ… வெங்கடேசா.. நீ வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு… எதாவது தெய்வ குத்தம் ஆயிட போவுது..?” அம்மா பதறினாள். “நீங்க தெய்வ குத்தம்னு சொல்றீங்க… நான் தெய்வமே குத்தம்ங்கிறேன்..”
தேர்வு முடிவும் நன்றாக வந்தது. குடும்பமே நன்றிக்கடன் செலுத்த குல தெய்வம் கோயிலுக்கு பயணப்பட்டது. “அப்பா… கோமதிக்கும், ராதிக்கும் ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்.. எனக்கும் காலேஜ் ஃபீஸ் கட்டணும்… நீங்க தனி ஆளா எப்படி சமாளிக்க போறீங்கன்னு எனக்கு கவலையா இருக்கு… நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பேயில்லாம இப்படி கும்பல கூட்டி செலவு பண்ணிக்கிட்டு இருக்கீங்களேப்பா…?”
“நீ நல்ல மார்க் வாங்கிட்டீன்னா குலதெய்வத்துக்கு கெடா வெட்டறதா வேண்டிக்கிட்டேன்டா… இதுக்கெல்லாம் கணக்கு பாக்க கூடாது…”
“அப்பா.. நான் கஷ்டப்பட்டு படிச்சேன்… எங்க டீச்சர்ஸ் நல்லா சொல்லிக் கொடுத்தாங்க… நம்ப வீட்ல எல்லாரும் ஸப்போர்ட்டா இருந்தீங்க.. என்னால நல்லா ஸ்கோர் பண்ண முடிஞ்சுது… செதுக்கின இந்த கல்லு சிலை எனக்கு என்னா செஞ்சுடுச்சுன்னு நீங்க இத்தனை செலவை இங்க வந்து செய்றீங்கப்பா…?”
“உங்க டீச்சர்ஸ் உனக்கு நல்லா பாடம் சொல்லிக் கொடுத்திருக்கலாம்… நாங்க எல்லாரும் அணுசரனையா நடந்திருக்கலாம்… நீயும் கஷ்;டப்பட்டு படிச்சிருக்கலாம்… இதெல்லாம் நம்பளால முடியற விசயம்… ஆனா பரீட்சையில சுலபமான கேள்விகள் வரணும்.. படிச்ச விசயங்கள் உனக்கு மறக்க கூடாது.. உன்னோட பேப்பரை திருத்தறவங்க நல்ல மனநிலையில இருக்கணும்… இதெல்லாம் நமக்கு அப்பாற்பட்ட விசயங்கள்தானே… இதுக்கெல்லாம் தெய்வத்தோட அருள் வேணுமில்லையாப்பா…”
“அதாவது உங்களால முடியாத விஷயத்தை நீங்க சொல்ற தெய்வத்தை வச்சு நிறைவேத்திக்கிறீங்க.. அந்த தெய்வமும் இந்த கெடாவுக்கு ஆசைப்பட்டு எனக்கு மார்க் போட்டுடுச்சுன்னு சொல்ல வர்றீங்க… அப்டிதானேப்பா…?”
“எனக்கு பதில் சொல்ல தெரியலடா… நீங்கள்ல்லாம் நெறைய படிக்கிறீங்க.. உலக விசயத்தை தெரிஞ்சுக்க நெறைய சன்னல்கள் இருக்கு.. இந்த காலத்து பசங்களுக்கு பேரண்ட்ஸ்கிட்ட வெளிப்படையா பேசவும் முடியுது.. அதுனால இந்த வயசுல இந்த சந்தேகமெல்லாம் வர்றது இயல்புடா…”
“இல்லப்பா… எனக்கு எத்தனை வயசானாலும், நீங்க சொல்ற அந்த கடவுளை நான் நம்ப மாட்டேன்.. நமக்கு வாழ்க்கையின் மேல உள்ள பிடிப்பு தான் நம்ம பலவீனம்.. இதுல பிரச்சனை வராம இருக்கணும்கிறதுக்காக நம்ப புடிச்சுக்கிட்ட தொங்கற ஒரு விஷயத்தை நான் நம்பிக்கைன்னு சொல்றேன்;.. நீங்க கடவுள்ங்கிறீங்க… நம்பளோட பலவீனத்தை விடாமுயற்சி மூலம் ஜெயிக்கலாம்னு நான் சொல்றேன்.. நீங்க சாமி பூஜை கடாவெட்டுன்னு செலவு பண்ணி அந்த பலவீனத்தை மறைக்க பார்க்கிறீங்க… இதுதான் நமக்குள்ள இருக்குற வித்தியாசம்ப்பா…”
“அப்ப இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைன்னு சொல்றியா வெங்கடேசா… நீ சொல்ற மாதிரி இதெல்லாம் வெத்து நம்பிக்கைன்னே வச்சுக்குவோம்… நாம பலவீனப்பட்டு போய் நிக்கற எல்லா நேரத்திலேயும் நமக்கு நம்பிக்கை கை கொடுக்கிறது இல்லப்பா.. சொல்லப்போனா, நம்பிக்கையும் நம்பள விட்டுட்டு போன பிறகு தான் நாம பலவீனமடையறதே… அந்த நேரத்துல ஏதோ ஒண்ணு மேல ஒரு பற்றுக்கோடு ஏற்படுது.. ஏதோ ஒண்ணு நம்பள இயக்குது… அதுதான்பா கடவுள்ங்கிறது..”
“இல்லைப்பா… என்னால இதை ஏத்துக்க முடியல… ஆதி காலத்துல திடீர்னு வானத்திலேர்ந்து கொட்;டற மழை, எங்கேர்ந்தோ வர்ற மின்னல் வெளிச்சம், கடமுடான்னு அதிர வைக்கிற இடிச்சத்தம், எட்டாத தூரத்துல இருக்கிற சூரியன், ஏன் பிரம்மாண்டமா நிக்கிற யானை இதெல்லாம் பார்த்து, ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட பயம்தான் இந்த இயற்கையெல்லாத்தையும் கடவுளா மாத்துடுச்சு… பிறகு, மனிதர்களா கட்டமைச்சுக்கிட்ட இந்த சமுதாயத்தை காலம்ங்கிற கருவி தள்ளும்போது அது சிதைஞ்சுடாம கட்டுக்கோப்பா கலாச்சார விதிமீறல்கள் இல்லாம ஒரு சட்டத்துக்குள்ளேயே அடைஞ்சு தலைமுறைகளை கடத்துறத்துக்காக நம்பளாலேயே படைக்கப்பட்ட ஒரு விசயம் தான் கடவுள். அதனால தான் கடவுளை நம்பள மாதிரியே உருவங்களாக படைச்சு, சிலை செஞ்சு, வழிபாடுங்கிற ஒன்றை ஏற்படுத்தனாங்க.. சுயஒழுக்கமும்; சிந்தனையும் தார்மீக நியாயமும் வார்த்தெடுத்த வளர்ப்பும் நமக்குள்ள இருந்துச்சுன்னா இந்த பழக்கவழக்கங்களை நாம ஏன் தொடரணும்…? உன்னோட மதம் பெரிசா.. என்னோட மதம் பெரிசான்னு இல்லாத ஒண்ணுக்காக ஏன் இத்தனை வன்முறை, அடக்குமுறைகள் இந்த உலகத்துல நடக்குது..?.; இத்தனை வளர்ச்சிக்கப்புறமும், இத்தனை ஆயிரம் வருஷங்களுக்கப்புறமும் இதையெல்லாம் இன்னும் நம்ப தான் வேணுமாங்கப்பா…?”
“அதையேதாம்பா நானும் சொல்றேன்.. இத்தனை வளர்ச்சிக்கப்புறமும், இத்தனை ஆயிரம் வருஷங்களுக்கப்புறமும் இதையெல்லாம் இன்னும் நம்பறோம்னா நீ சொல்ற சுயஒழுக்கம், சுய சிந்தனையையும் தாண்டி ஏதோ ஒண்ணு இருக்க தானே செய்யுது.. எப்பல்லாம் மனசு சஞ்சலப்படுதோ, அப்பல்லாம் தெய்வம்ன்னு ஒண்ணு மாரியாவோ, மேரியாவோ, அல்லாவாவோ உணரப்படுதுடா… ஆனா நீ கேக்கற மாதிரி கேள்வியெல்லாம் உன் வயசுல தோணினாலும் சின்ன வயசுலேர்ந்து சாமி கண்ண குத்திடும்னு சொல்லி வளர்க்கப்படும் பயம் நம்பள மறிச்சுடும்ப்பா.. அப்றம் அனுபவம் அது தப்புன்னு புரிய வச்சுடும்பா…”
“அப்ப பயம் தான் பக்தி ஆயிடுச்சுன்னு நீங்களும் ஒத்துக்கிறீங்க… அப்படிதானுங்களே..?” வெங்கடேசன் மடக்கினான். “ஆமாம்னும் சொல்லலாம்.. இல்லைன்னும் சொல்லலாம்ப்பா..” “இன்னுமும் சொதப்புறீங்களேப்பா…” மகன் கிண்டலடிக்க “உங்கம்மா நம்பள தேடிக்கிட்டு வந்துட்டா பாரு… வா போகலாம்..” பேச்சை மாற்றியவாறு எழுந்த அப்பாவை குறும்புச்சிரிப்புடன் பார்த்து, “ரொம்ப பேசினா சாமி கண்ண குத்துடும்னு இல்லப்பா… அப்டிதானே…?” என்றான் கண்ணடித்தவாறு.
வருடங்கள் நகர்ந்தது தெரியவேயில்லை. வெங்கடேசன் படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்து விட்டான். ராதிகா கல்யாணமும்; முடிந்து விட்டிருந்தது. கோமதி படித்துகொண்டிருந்தாள். சென்னையில் அவனுடன் வேலை பார்க்கும் ஹரிணியை வெங்கடேசனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவளது ஆழ்ந்த சுபாவம், அமைதியான பேச்சு, கூர்மையான அறிவு, அதிராத நடை என ஒவ்வொன்றுமே வெங்கடேசனை அவளை நோக்கி இழுத்தது. தயங்கி, தயங்கி காதலை சொல்லியே விட்டான்.
‘அய்யய்யோ… எங்கப்பா இதுக்கெல்லாம் ஒத்துப்பார்ன்னு எனக்கு நம்பிக்கையேயில்ல..’, ‘என்னோட சம்பாத்தியம் என் குடும்பத்துக்கு இப்ப தேவைப்படறது..’இ ‘இன்னும் எங்காத்துல வரன் பார்க்கவே ஆரம்பிக்கலே’–ன்னு நழுவிக்கிட்டே இருந்த ஹரிணியை தோளை தொட்டு நிறுத்தினான்.
“என்ன… இப்பவே இப்படி தொடறீங்க…?” வெடுக்கென்று நகர்ந்தவளை புன்சிரிப்புடன் பார்த்தான் வெங்கடேசன். “ஹரிணி…” நிதானமாக ஆரம்பித்தான், “உங்களை எனக்கு பிடிக்கலைன்னு, நீ ஒத்த வார்த்தை சொல்லியிருந்தேன்னா, நான் இப்ப உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்… ஒண்ணு.. உன்னை விட்டு போயிருந்திருப்பேன்.. இல்லைன்னா அட்லீஸ்ட் உன்னை இம்ப்ரஸ் பண்ணறதுக்காவது டிரை பண்ணியிருப்பேன்… ஆனா நீ சொன்ன காரணமே உனக்கு என்னை பிடிச்சுருக்குன்னு சொல்லுது.. ஒன்னோட தோளை தொட்டு கூப்பிடதுக்கு கோபப்படாம, இப்பவே இப்படி தொடறீங்களேன்னு பிகு பண்ணிக்கிட்ட… எம்மேல ஈடுபாடு இல்லாமலா இப்படி நடந்துக்குவே…? எப்டி.. எப்டி.. அய்யாவோட ஜட்ஜ்மெண்ட்…?” பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு, தலையை சாய்த்து ஒயிலாக கேட்கும் வெங்கடேசனை கண்ணை பார்த்து பேச தயங்கியவாறு, “நீங்க என்ன சொல்றீங்க வெங்கடேஷ்…?” என்றாள் ஹரிணி குளறளாக.
“நான் சொல்றதுக்கு என்ன இருக்கு…? உன் வாய் சொல்லாததை உன்னோட கண்ணே சொல்லிடுச்சு.. எனக்கு அது போதும் ஹரிணி..” என்றான் உற்சாகமாக.
ஹரிணியின் பெற்றோர்க்கு விஷயம் தெரிய வந்தது. அப்பாவை தனியே அழைத்து அழுத்தமாக பேசும் மகளை ‘பேசறது ஹரிணி தானா?’ என்றவாறு கூர்ந்து பார்த்தார் அப்பா. “அப்பா… வெங்கடேஷ் ரொம்ப நல்லவர்ப்பா… வீட்டுக்கு ஒரே பையன். ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. பங்சுவாலிட்டி, மொராலிட்டி, சின்சியாரிட்டின்னு ரொம்ப நல்ல பேரு அவருக்கு ஆபிசுல..”
“ஹரிணி.. வாழ்க்கைக்குன்னு வரும்போது, அதை தாண்டி சில குவாலிட்டியும் வேணும்மா…” பொறுமையாக பேசினார் அப்பா. “அவர்க்கிட்ட என்ன குவாலிட்டி இல்லைன்னு நீங்க சொல்றீங்கப்பா…?” ஹரிணியின் கிசுகிசுப்பாக வந்தது. “நான் விசாரிச்சவரைக்கும் அவர்க்கிட்ட கடவுள் பக்தி இல்லைம்மா… ஆசார, அனுஷ்டானத்தை மதிக்காதவன், மனுஷாளை மட்டும் எப்படி மதிப்பான்..? உன்னை கடைசி வரைக்கும் வச்சு காப்பாத்துவான்னு என்னம்மா நிச்சயம்…?
“பக்தியும், ஆசாரமும் தான் ஒரு மனுஷனை, மனுசனா வாழ வைக்குமாப்பா…? நல்ல குடும்பம், சிறந்;த வளர்ப்புங்கிற பின்னணியில வர்ற ஒருத்தரு, எப்போதும், ஒழுக்க நெறியிலேர்ந்தோ, தார்மீக கடமையிலேர்ந்தோ தவர்றதேயில்லை… அதுக்கு தேவைப்படறது நல்ல மனசு தானே தவிர, சிறந்த பக்தி இல்லைப்பா…”
“ஒவ்வொரு மனுஷனையும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பலமுறை சோதிச்சு பார்க்குதும்மா… சந்தர்ப்பவசமா சூழ்நிலை விரிச்ச வலையில விழுந்துடாம அவனை காப்பாத்தி கையப்பிடிச்சு அழைச்சுண்டு வர்றது அவனோட தெய்வ பக்தி மட்டும்தான்… அது தான் அவனோட ஆன்மபலமா மாற்ரது…”
“நீங்க என்னப்பா சொல்ல வர்றேள்;…? சந்தர்ப்பம் கிடைக்காதவரைக்கும் தான் ஒரு மனுசன் நல்லவனா இருக்க முடியும்ங்கிறேளா..?” குரலில் கோபத்தை மறைத்தப்படி பேசினாள். “இருக்கலாம்… ஆனா சந்தர்ப்பம் கிடைச்சாலும் கெட்டுப்போகாம இருக்கணும்னா தெய்வபக்தி அவசியம்னு சொல்றேம்மா…”
“சரிப்பா… நான் என்ன சொன்னாலும் நீங்க கன்வின்ஸ் ஆக போறதில்ல.. நாளைக்கு நானே அவரை நம்மாத்துக்கு அழைச்சுண்டு வர்றேன்..” என்றவாறு பேச்சை துண்டித்துவிட்டு செல்லும் மகளை கவலையாக பார்த்தார் அப்பா.
அடுத்த நாள் அந்தி சாயும் நேரம் வெங்கடேசனோடு உள்ளே நுழைந்தாள் ஹரிணி. காபி உபசாரத்திற்கு பிறகு நேரடியாக பேச்சை ஆரம்பித்தார் ஹரிணியின் அப்பா. “சார்.. இவ எனக்கு ஒரே பொண்ணு… மருமான் எங்களவாளா இருந்துருந்தா ரொம்ப சந்தோசப்பட்டிருப்பேன்.. ஆனா என் பொண்ணு விருப்பப்பட்டுள்ளாளேன்னு தான் உங்கள வரச் சொன்னேன். ஆளும் பார்க்க ஜம்முனு இருக்கீங்க.. பிக்கல், பிடுங்கல்னு பெரிசா எதுவும் இல்லை. நல்ல வேலை.. கை நெறைய சம்பாத்தியம்.. ஆனா இது மட்டும் போதாது இல்லீங்களா..?”
அவரின் சற்று நேர ஆசுவாசத்திற்குள் வெங்கடேசன் உள்ளே புகுந்தான். “இதையும் தாண்டி ஒரு மாப்பிள்ளைக்கு வேறென்ன தகுதி இருக்குணும்னு எதிர்ப்பார்க்குறீங்க சார்..” என்றவன் தொடர்ந்தான், “சார்… நீங்க உங்க பொண்ணுக்கு சீர், வரிசைன்னு செலவழிக்க வேணாம்.. மண்டபம், சமையல்காரர்னு அலைய வேணாம்… நாங்க ரிஜிஸ்டர் ஆபிஸ்ல போய் மாலை மாத்தி கல்யாணம் பண்ணிக்கிறோம்… எனக்கு அது போதும் சார்..”
“ஆனா அது எங்களுக்கு போறாதே சார்;… எங்க பொண்ணுக்கு ஊரடைச்சு பந்தல் போட்டு, கடனவொடன வாங்குனாலும் மூணு நாள் விமரிசையா, சடங்கு சம்பிரதாயத்தோட வேத மந்திரங்கள் ஓத, அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்து கல்யாணம்; பண்ணனும்னு ஆசையா இருக்குங்க… சுமங்கலி பிரார்த்தனையிலேர்ந்து, கட்டு சாத கூடை வரைக்கும், எம்பொண்ணுக்கு பார்த்து பார்த்து செய்யணும் கனவு கண்டுட்டோமே சார்.. இந்த மாதிரி சீர்த்திருத்தம்ங்கிற பேர்ல மூணாம்பேருக்கு, நாலாம்பேருக்கு தெரியாம கல்யாணம் பண்ணறதுல எங்களுக்கு இஷ்டமில்லைங்க…”
“சார்.. கடவுள் மேல நம்பிக்க இல்லாத ஒருத்தன் எப்டி சார் சடங்கு சம்பரதாயத்தோட கல்யாணம் பண்ணிக்க முடியும்.. இது என்னோட கல்யாணம் சார்.. நான் ஏன் இதுல காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும்..?”
“ஏன்னா கல்யாணங்கிறது நீங்க மட்டும் சம்பந்தப்பட்ட விசயம் இல்லீங்களே… அது ரெண்டு குடும்பம் சம்பந்தப்பட்டதுங்க… வாழ போற நாட்கள்ல நீங்க ஆவணி அவிட்டம்னா பூணூல் மாத்திக்க வேணாம்… வேதங்களை பாராயணம் செய்ய வேணாம்.. மடி, விழுப்புன்னு ஒதுங்க வேணாம்.. ஒதுக்க வேணாம்.. அதுக்காக சம்பிரதாயம் சடங்குகள கடைப்பிடிக்க வேண்டாமா…? அக்ரஹாரத்திலேயே குடியிருக்கலைன்னாலும் அப்பப்ப கோயில்; குளத்துக்கு போயிட்டு வர வேணாமா…? ஓரேடியாக இல்லைன்னாலும் ஓரளவுக்காவது கடவுள் நம்பிக்கை இருக்க வேணாமா…? இருக்கிற ஒரே மகளை ஒரு நாத்திகன் கையில பிடிச்சு கொடுத்துட்டு எப்படி சார் நாங்க நிம்மதியா கண்ண மூடறது…?”
“சார்.. உங்களை என்னால புரிஞ்சுக்க முடியுதுங்க… ஆனா நீங்க தான் நாத்திகனோட வாழ்க்கை எந்த வரன்முறைக்கும் கட்டுப்பட்டதல்ல.. அவங்க எந்த தார்மீக நியாயத்துக்கும் உடன்பட மாட்டாங்கன்னு தவறா நெனைக்குறீங்க.. நிச்சயமா கடைசிவரைக்கும் உங்க பெண்ணை நல்லப்படியா வச்சு பார்த்துக்க என்னால முடியும் சார்… ஆனா அதுக்காக என்னால முகமூடி போட்டுக்கிட்டு, மூடநம்பிக்கைகளுக்கு மத்தியில வாழ முடியாது சார்… நான் எந்த சந்தர்ப்பத்திலேயும் நானாக தான் இருக்கணும் நினைக்கிறேன்.. எந்த சூழல்களுக்காகவும், என்னை அடகு வைக்க எனக்கு உடன்பாடு இல்ல சார்…என் குடும்பமும், என் குழந்தைகளும் இப்படிதான் இருக்கணும்னு நினைக்கிறேன்… இது என் குடும்பத்து மேல நான் வைக்கிற ஆளுமையா பார்க்காதீங்க.. என்னோட சிந்தனையா பாருங்க சார்…”
“அப்ப, நீங்க உங்க பிடிவாதத்திலேர்ந்து இறங்கி வர தயாரில்லைன்னு வச்சுக்கவா…?” என்றார். “என்னால, என் சுயத்தை இழக்க முடியாது சார்..” என்றான் வெங்கடேசன் பிடிவாதமாக. “அப்ப என்னாலயும், என் பெண்ணை உங்களுக்கு கட்டி கொடுக்க முடியாது சார்..” அவரின் குரலில் உறுதி தெரிந்தது.
“எங்கப்பா தான் இவ்ளோ இறங்கி வர்றாளே…? எனக்காக கூட உங்க முடிவை மாத்திக்க மாட்டேளா..?” அழுகையும், வீம்பும் வழிந்தது ஹரிணியின் பேச்சில்.
“என்னை பத்தி மத்தவங்களை விட உனக்கு நல்லா தெரியும் ஹரிணி.. எனக்கு தெரிஞ்சு நிரூபிக்கப்பட்ட உண்மைகளை தான் என்னால நம்ப முடியுது.. கல்யாணத்துக்கு இது தகுதி இறக்கமா நீங்க நெனைச்சீங்கன்னா, சாரி, இதுக்கு என்னால ஒண்ணும் பண்ண முடியாது…” வேகமாக கிளம்பி வெளியே வந்தவன், ஏதோ நினைத்தவாறு திரும்ப உள்ளே வந்தான், “சார்… நான் இப்படி பட்டவர்த்தனமா பேசறதுக்கு காரணம் முகமூடி போட தெரியாத என்னோட நேர்மையே தவிர, என்னோட கடவுள் மறுப்பு கொள்கை இதுக்கு காரணமில்ல..” வண்டியை கிளப்பிக் கொண்டு வந்து விட்டான்.
மறுநாள் ஹரிணி வேலைக்கு வரவில்லை. முதலில் அசட்டையாக இருந்த அவனுக்கு, அடுத்தடுத்த நாட்களும் அவள் வராததால், மனசில் எங்கோ வலித்தது. ஹரிணியின் அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஒருவாரம் கழித்து, அவளது ராஜினாமா கடிதம் தபாலில் வந்த போது, வெங்கடேசன் உடைந்தே போனான். நம்பி வந்தவளை நடுவழியில் விட்டுட்டேனோ..? என்னோட கொள்கை தணலில்ல நானே என்னோட காதலை எரிச்சுட்டேனா..? என்னாலேயே இதை தாங்க முடியவில்லை… என் ஹரிணி, என் பிரிவை எப்படி தாங்குவா..? சும்மாயிருந்தவளை காதல் என்ற பெயரில் அலைகழிச்சுட்டேனோ…? அவள் குடும்பம் என்னிடம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது..? சத்தியசீலன் ஒழுக்கசீலன்னு நெனச்சுக்கிட்டு நம்பி வந்தவளை இப்போது நட்டாற்றில் விட்டு விட்டேனே..? திருமணமான பிறகு கைவிடுவது தான் துரோகம் அல்ல… மனதளவில் அவளை கந்தர்வ மனம் புரிந்த பிறகு எனது கொள்கைகளுக்காக அவளை நழுவ விட்டு விட்டேனே… எண்ண அலைகளி;ல் சிக்கி தவித்தான்.
அவளாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம்… எனக்காக பெற்றோர்களிடம் வாதாடி இருக்கலாம்… வெங்கடேசனை பிடிக்கும் என்பது, வெங்கடேசனின் கொள்கைகளையும் உள்ளடக்கியது தானே… என்றெல்லாம் ஹரிணி வாதிடுவாள் என்று எதிர்ப்பார்த்து பிறகு ஏமாந்து விட்ட அவனது உணர்வுகள் ஆறுமாத காலமாக அவளில்லாத வெளியை நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக மங்க தொடங்கி விட்டது. அவனது அந்த உணர்வின் வெளிப்பாடு சாப்பாடு தூக்கம் அலுவலக வேலை என எல்லாப்பக்கமும் வியாபிக்க ஆரம்பிக்க இனியும் தாக்குபிடிக்க முடியாது என முடிவெடுத்து ஹரிணியின் வீட்டுக்கு போனான்.
மனசின் வேகத்திற்கு விடுவிடுவென்று வீட்டினுள் நுழைய போனவனை ஹரிணியின் வீட்டு வாசலில் கழட்டிக் கிடந்த செருப்புகள் சற்று நிதானிக்க வைத்தது. காலடிச்சத்தம் கேட்டு வெளியே வந்த அவள் அப்பா, முதலில் திகைத்து பிறகு அதிர்ந்தார்.
“இப்படி வாங்கோ…” என்று வெளிப்புறமாக அவனை இழுத்தவர், “எம்பொண்ணு இருக்குறாளா.. செத்துட்டாளான்னு பாக்க வந்தீங்களா…? இத்தனை நாள் அவ படற பாட்டை எங்களால கண்ணெடுத்து பார்க்க முடியல… இப்ப தான் ஒரு வழியா இந்த கல்யாணத்துக்கு ஒத்துண்டுருக்கா… இந்த நேரத்துல சரியா இங்க வந்து நிக்கறேளே… இது நியாயமா..? நீங்க சொல்ற மாதிரி, பிறப்பு, வளர்ப்பு இது ரெண்டும் உங்ககிட்ட வார்த்தெடுத்த ஒழுக்க நெறி உங்களுக்குள்ள இருந்ததுன்னா, எந்த ஒரு சந்தர்ப்பமும் உங்களை நியாயவானாகவே நிலைச்சிருக்க வைக்கும்னா நீங்க இப்டியே போயிடுங்க… நீங்க வந்த சுவடுக் கூட எம்பொண்ணுக்கு தெரிய வேணாம்..” கையெடுத்து கும்பிட்ட ஹரிணியின் அப்பாவை கண்களில் நீர்கசிய பார்த்தான் வெங்கடேசன். வாசலை நோக்கி கையைக் காட்டினார் அந்த மனிதர்.
நாட்கள் நகர்ந்தன. நிமிடங்கள் நரகமாயின. ஹரிணி, ஹரிணி, ஹரிணி.. திரும்பிய பக்கமெல்லாம் அவளே தெரிந்தாள்.. அவளின் சிரிப்பு, பார்வை, பேச்சு என அவளுடைய நினைவுகளை மட்டுமே அவனால் நினைக்க முடிந்தது. ஒரு சந்தோஷ தருணத்தில் ஹரிணி கேட்டது ஞாபகத்திற்கு வந்தது. “கடவுளையே நம்பாதவனோட பேரு வெங்கடேசன்.. எப்படி ஒரு முரண்பாடு பார்த்தியா..? நீ ஏன் இந்த பேரை மாத்திக்க கூடாது…”? என்றாள்.
“என்னால முடியாது ஹரிணி… இந்த வெங்கடேசன்ங்கிற என்னோட பேரு எங்கப்பா, அம்மாவோட நம்பிக்கையின் வெளிப்பாடு.. அதை மாத்தறதுக்கு எனக்கு உரிமையில்ல ஹரிணி…”
“ரியலி நான் ரொம்ப லக்கிப்பா.. கல்யாணத்துக்கு பிறகு என்னையும் இப்படிதானே நீ புரிஞ்சுக்குவே… பிள்ளையாரப்பா… இவருக்கு தெரியாம உனக்கு சிதறு தேங்காய் உடைக்கிறேன்ப்பா..” அவனை பார்த்து கண்சிமிட்டியவாறு அவன் கையை தன் கையில் எடுத்து, அதில் மெலிதாக முத்தமிட்டாள். அதுதான் முதலும், கடைசியுமான முத்தம். அவள்; முத்தமிட்ட கையை எடுத்து வாயில் ஒற்றிக் கொண்டான். கண்களின் நீரால் வாயில் உப்புக்கரித்தது.
நினைவுகளின் அழுத்தத்தில் வாய்விட்டு அரற்றினான்… “கடவுளே.. இந்த அவஸ்தையிலிருந்து என்னை காப்பாத்தேன்;;…”
ழூழூழூ
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்