1984 ஆம் ஆண்டு. திருமணத்துக்காக விடுப்பெடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் கர்நாடகத்தில் உள்ள ஹோஸ்பெட்டிலிருந்து புதுச்சேரிக்கு வர ஒரு நாள்முழுக்க பயணம் செய்யவேண்டும். ஹோஸ்பெட்டிலிருந்து குண்டக்கல் வரைக்கும் ஒரு தொடர்வண்டி. அங்கிருந்து சென்னைக்கு ஒரு தொடர்வண்டி. அதற்குப் பிறகு விழுப்புரத்துக்கு ஒரு தொடர்வண்டி. அப்புறம் புதுச்சேரிக்கு ஒரு வண்டி. எனக்கு தொடர்வண்டிப் பயணங்கள் பிடிக்கும் என்பதால் நேரத்தைப்பற்றி கவலைப்படாமல் இப்படி மாறிமாறிப் பயணம் செய்தேன். சென்னையில் சென்ட்ரல் நிலையத்திலிருந்து பூங்கா நிலையத்துக்குச் செல்லும் வழியில் ஒரு பெரிய புத்தகக்கடை இருந்தது. பயணத்தில் படிப்பதற்குச் சில புத்தகங்கள் வாங்கலாம் என நினைத்து கடைக்குள் சென்று பார்த்தேன். முதல் மேசையிலேயே நீலகண்டப் பறவையைத் தேடி என்னும் புத்தகத்தைப் பார்த்தேன். வங்க நாவல்கள்மீது ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததால், உடனே அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டேன். எழும்பூரில் விழுப்புரம் வண்டிக்காக இரண்டு மணிநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. அப்புறம் நான்கு மணி நேரம் பயணம். விழுப்புரத்தைத் தொடும்போது புத்தகத்தைப் படித்துமுடித்திருந்தேன். திருமணத்துக்காகச் செல்லும் சூழலில் காதல் தோல்வியையும் காதலின் தீவிரத்தையும் கருப்பொருளாகக் கொண்ட நாவலை வாசிக்க நேர்ந்தது ஒரு வித்தியாசமான அனுபவம் என்றே சொல்லவேண்டும்.
மணந்துகொள்ள முடியாத காதலியை காலமெல்லாம் நினைத்துநினைத்து ஏங்கிப் பித்தனாக அலையும் அதன் மையப்பாத்திரம் என் மனத்தில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. மையப்பாத்திரத்தின் பெயர் மணீந்திரநாத். என் நினைவுகளில் குறிஞ்சிமலர் அரவிந்தன் குடியிருந்த இடத்தில் மணீந்திரநாத் குடிபுகுந்தார். அவர் போய் இவர் எப்படி நுழைந்தார் என்பதே எனக்குத் தெரியவில்லை. நாவலில் காடு, மலை, வயல்வெளி, கிராமங்கள், ஆற்றங்கரை என அவர் சுதந்திரமாக அலைந்து திரிவதுபோலவே, என் மனத்துக்குள்ளும் சுதந்திரமாக நுழைந்துவிட்டார். அவர் காதலியின் பெயர் பாலின். வெள்ளைக்காரப் பெண். அந்தக் காதலை, வீட்டிலிருந்த பெரியவர்களும் சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஈடேறாத அந்த இலட்சியக்காதல் அந்த வயதில் என்னை மிகவும் ஈர்த்தது. நீலக் கழுத்துள்ள அந்த வெள்ளைக்காரப்பெண்ணை அவன் நீலகண்டப் பறவையாக உருவகித்து காலமெல்லாம் தேடிக்கொண்டே இருக்கிறார். சரத்சந்திரர் கட்டியெழுப்பிய தேவதாஸ்-பார்வதி காதல் ஒருவிதமானது என்றால், அதீன் பந்தோபாத்யாய கட்டியெழுப்பிய மணீந்திரநாத்-பாலின் காதல் முற்றிலும் வேறுவிதமானது. நிறைவேறாத அக்காதலை ஒருபுறமாகவும் இந்திய சுதந்திரப் போராட்டத்தை இன்னொருபுறமாகவும் அமைத்து எழுதப்பட்ட இந்த நாவல் இந்திய நாவல்களிலேயே மிகமுக்கியமானது. ஐநூறு பக்கங்களுக்கும் அதிகமாக நீண்ட இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தளித்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. நீலகண்டப்பறவையைத் தேடி நாவல் இருக்கிற காலம்வரைக்கும் அதீன் பந்தோபாத்யாயவின் பெயரும் கிருஷ்ணமூர்த்தியின் பெயரும் நிலைத்திருக்கும் என்று தோன்றியது. நாவலின் களமும் தரிசனமும் ஒரு காரணம். தங்குதடையற்ற வாசிப்புக்கு உகந்தவகையில் மொழிபெயர்த்திருந்த கிருஷ்ணமூர்த்தியின் மொழியாளுமை இன்னொரு காரணம்.
திருமணத்துக்குப் பிறகு, வீட்டிலிருந்த சில நாட்களில் நாவலின் சில பகுதிகளைமட்டும் தேர்ந்தெடுத்து மீண்டும் படித்தேன். அந்த நாவல் வாசிப்பு கொடுத்த பரவசத்தைத் தெரியப்படுத்தும் விதமாக இரண்டு பக்கங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதி, கிருஷ்ணமூர்த்தியின் பெயரைக் குறிப்பிட்டு தில்லியில் உள்ள நேஷனல் புக் டிரஸ்டு முகவரிக்கு அனுப்பிவைத்தேன். ஏறத்தாழ ஒரு மாதம் கழித்து எனக்கு அவரிடமிருந்து ஓர் அஞ்சலட்டையில் பதில் வந்தது. அப்போதுதான் அவர் கொல்கத்தாவில் வசிப்பவர் என்று தெரிந்துகொண்டேன். என் கடிதம் தில்லியிலிருந்து அவருக்கு அனுப்பப்பட்டதை அவர் குறிப்பிட்டிருந்தார். நான் அந்தப் பதிலை எதிர்பார்க்கவே இல்லை. அந்த மொழிபெயர்ப்பைப் பாராட்டி தனக்கு வந்த முதல் வாசகர் கடிதம் என அதை அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த வரி எனக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. அப்போது எனக்கு அது ஒரு பழக்கமாகவே இருந்தது. ஒரு புத்தகம் எனக்கு மிகவும் பிடித்திருந்தால், உடனே அந்த எழுத்தாளருக்கு அதை எழுதித் தெரியப்படுத்திவிடுவேன். பிடிக்காவிட்டாலும் எழுதவேண்டும் என்று என் நண்பர்கள் சொல்வதுண்டு. ஆனால், பிடிக்காவிட்டால் மெளனமாக இருந்துவிடுவதே என் வழக்கம்.
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலேயே நாங்கள் 1984 ஆம் ஆண்டில் இப்படித்தான் கடிதங்கள் மூலமாக நண்பர்களானோம். அவருடைய கையெழுத்து தெளிவாக நிதானமாக எழுதப்பட்டதுபோல அழகாக இருக்கும். நான் அப்போது ஒரு சில சிறுகதைகளைமட்டுமே எழுதியிருந்தேன். தீபம், கணையாழி, தாமரை என ஒரு சில இதழ்களில்மட்டுமே அவை வெளிவந்திருந்தன. நீங்கள் ஏதேனும் எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டு எழுதிய அவருடைய கடிதத்துக்கு என் எழுத்து முயற்சிகளைப்பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். என்னை ஊக்கமுடன் செயல்படும்படி தூண்டி, நம்பிக்கை ஊட்டும் சொற்களுடன் அவர் பதில் போட்டிருந்தார்.
அவருடைய பெயரைத் தாங்கிய எந்த மொழிபெயர்ப்பையும் நான் ஒருபோதும் தவறவிட்டதில்லை. படித்ததில் பிடித்ததை அவருக்கு எழுதித் தெரிவிக்கவும் தயங்கியதில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கணையாழி இதழில் வெளிவந்த என்னுடைய ‘முள்’ என்னும் சிறுகதையை அந்த ஆண்டின் மிகச்சிறந்த சிறுகதையாக இலக்கியச்சிந்தனை தேர்ந்தெடுத்து விருதளித்தது. நான் அவருக்கு அதைத் தெரியப்படுத்தினேன். அவர் உடனே அந்தக் கதையைத் தேடிப் படித்துவிட்டு பாராட்டி எழுதியிருந்தார். அந்த வயதில் அவ்வரிகள் ஊட்டிய மகிழ்ச்சிக்கும் ஊக்கத்துக்கும் அளவே இல்லை.
1984 முதல் 1999 வரை, அவ்வப்போது மடல்கள் எழுதிக்கொண்டாலும், 1999 ஆம் ஆண்டில்தான் நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். தன் உறவினர் வீட்டில் நிகழ்ந்த திருமணத்துக்காக அவர் பெங்களூர் வந்திருந்தார். நான் குடியிருக்கும் அல்சூர் பகுதியிலேயே அந்த உறவினர் வசித்து வந்தார். எங்கள் சந்திப்பை அது இன்னும் எளியதாக்கியது. ஒரு மாலையில் நானும் என் மனைவியும் அந்த வீட்டுக்குச் சென்று அவரைப் பார்த்தோம். ஒல்லியான தோற்றம். புன்னகை மிளிர்ந்த முகம். வேட்டி சட்டையில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் எழுந்து வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டார். அப்போதுதான் அவருடைய ஒரு கை பாதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். உடல்தோற்றத்துக்குச் சம்பந்தமே இல்லாதவகையில் அவர் குரல் மட்டும் கணீரென்று இருந்தது. ”வாங்க ஐயா, வாங்க. செளக்கியமா இருக்கறீங்களா ஐயா?” என்றபடி என்னை அழைத்துச் சென்று உட்காரவைத்தார். ஒவ்வொரு வாக்கியத்துக்கும் அவர் ஐயா என இணைத்துக்கொண்டு பேசியது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. அப்படிச் சொல்லவேண்டாம் என்றும் அவரைவிட நான் வயதில் சிறியவன் என்றும் திரும்பத்திரும்பச் சொன்னேன். “அது பழகிடுச்சி ஐயா, இப்ப திடீர்னு நிறுத்தமுடியுமா?” என்று சிரித்தார். பிறகு, தன் வீட்டில் இருந்த அனைவரிடமும் என்னை மகிழ்ச்சியோடு அறிமுகப்படுத்தினார். நான் என் மனைவியை அவர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினேன். “பதினஞ்சி வருஷமா எனக்குத் தெரிஞ்ச நண்பர். கடிதம் மூலமாவே பழகிப்பழகி நண்பர்களாகிட்டோம். என்னுடைய புத்தகம் எது வந்தாலும் உடனே படிச்சிட்டு கடிதம் போட்டுடுவார். இங்க அல்சூர்லதான் இருக்கார். நல்ல எழுத்தாளர்” என்று தம் வீட்டாரிடம் சொன்னார் அவர்.
பேச்சு வளர்ந்துவளர்ந்து எப்படியோ அவருடைய இளமைக்காலத்தைச் சென்று தொட்டுவிட்டது. அப்போது அவருக்கு எழுபது வயதிருக்கும். வேலையிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஆனால் தன் பத்து வயது அனுபவங்களையெல்லாம், என்னமோ நேற்று நடந்ததைச் சொல்வதுபோலச் சொன்னார். அவருடைய வீட்டில் இருந்தவர்களுக்கும் அந்தச் சங்கதிகள் புதிதாக இருந்தன. “எங்ககிட்டயெல்லாம் இப்படி சொன்னதே இல்ல, உங்கள பார்த்ததும்தான் ஊத்தெடுத்ததுமாதிரி இப்படி சொல்ல வருது போல” என்று ஆச்சரியத்தோடும் ஆர்வத்தோடும் அவர் சொன்னதை அவர்களும் கேட்டுக்கொண்டார்கள். பள்ளி அனுபவங்கள், கல்லூரி அனுபவங்கள், ஆங்கிலத்தில் எழுதியது, தமிழில் எழுதியது என ஏராளமாகச் சொன்னார். அன்று இரவு பத்துமணிக்கு மேல்தான் அவர் வீட்டிலிருந்து நாங்கள் கிளம்பினோம்.
அவர் அங்கே தங்கியிருந்த நான்கு நாட்களும் அவரை நான் சந்தித்தேன். ஒரு நாள் மாலை நானும் அவரும் அல்சூர் ஏரிவரைக்கும் நடந்து சென்றோம். அவருக்கு நான் ஏரிக்கரையோரம் இருந்த தமிழ்ச்சங்கத்தைக் காட்டினேன். கல்கத்தாவில் இயங்கி வரும் தமிழ்ச்சங்கத்தைப்பற்றி அவர் தன் அனுபவங்களைச் சொன்னார். அந்தத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சொற்பொழிவை வங்க மொழியில் மொழிபெயர்த்ததை பேச்சோடு பேச்சாகக் குறிப்பிட்டார்.
நாங்கள் உட்கார்ந்திருந்த சிமெண்ட் பெஞ்சுக்கருகில் புறாக்கள் அமர்ந்திருந்தன. அதைப் பார்த்ததும் சட்டென்று எனக்கு நீலகண்டப்பறவையின் நினைவு வந்துவிட்டது. அதன் மொழிபெயர்ப்பு அனுபவத்தைப்பற்றிச் சொல்லும்படி கேட்டுக்கொண்டேன். “நல்ல மொழிபெயர்ப்புன்னுதான் எல்லாரும் சொல்றாங்க. ஆனா, அத செய்யும்போது எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. பக்கத்துக்கு பக்கம் புதுசுபுதுசா மரங்களுடைய பெயர், செடிகளுடைய பெயர்னு வந்துட்டே இருந்தது. வெறுமனே ஒரு மரம், ஒரு செடின்னு சொல்லக்கூடாது, பொருத்தமான பேரோடுதான் சொல்லணும்ன்னு எனக்கு ஒரு பிடிவாதம். அதுக்கு இங்க்லீஷ் பேரும் தெரியலை. அதனால, என் நண்பரொருவரை பார்த்துப் பேசி, இப்படி ஒரு புத்தகத்தை நான் தமிழ்ல மொழிபெயர்க்கிறேன். நிறைய மரங்கள் பேர், செடிகள் பேர்லாம் வருது. நான் அத ஒரு லிஸ்ட் போட்டிருக்கேன். நீங்க அதையெல்லாம் எனக்கு காட்டணும். மரத்த பார்த்தா நான் அதனுடைய பேரை தமிழ்ல எழுதிடுவேன்னு சொன்னேன். அவரும் உற்சாகமா ஒத்துண்டார். ரெண்டே நாள்ல எனக்கு எல்லாத்தயும் காட்டி புரிய வச்சிட்டார். மொழிபெயர்ப்புல இது ஒரு பெரிய பிரச்சினை தெரியுமா? சரியானத கண்டுபுடிச்சி எழுதிட்டோம்ன்னா, அதுவே பெரிய சந்தோஷமா மாறிடும்” என்று சொன்னபடி கரையோரமாக ஒதுங்கி உடையும் சிற்றலைகளையே பார்த்தார்.
பிறகு பேச்சு நாவலைப்பற்றித் திரும்பிவிட்டது. அந்த நாவலில் எனக்குப் பிடித்த ஒரு காட்சியை நினைவிலிருந்து சொன்னேன். நாவலைப் படித்து பல ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அக்காட்சியின் தீவிரம் அப்படியே நெஞ்சில் இருந்தது. பித்து முற்றிய நிலையில் ஒரு கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு படகில் எங்கோ செல்கிறார் மணீந்திரநாத். வழியில் ஒரு நாய் தென்படுகிறது. அந்த நாயையும் தன் படகில் ஏற்றிக்கொள்கிறார். இடையில் பார்த்த தீவில் இறங்கி சிறிதுநேரம் உலவுகிறார். அக்குழந்தையை ஒரு புல்வெளியில் கிடத்திவிட்டு அமர்கிறார். அவர் நெஞ்சிலேயே உள்ள நீலகண்டப்பறவையின் நினைவு அவரை எங்கோ உந்தித் தள்ளுகிறது. அனைத்தையும் மறந்து அங்கிருந்து . உடனே வெளியேறிவிடுகிறார். பொழுது சாய்ந்த வேளையில் அவர் வீட்டுக்குத் திரும்பியபோது எல்லோரும் குழந்தையைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார். அப்போதுதான் அக்குழந்தையை தான் எடுத்துச் சென்றதும் தீவில் விட்டுவிட்டு வந்ததும் நினைவுக்கு வருகிறது. உடனே அங்கே படகை எடுத்துக்கொண்டு விரைகிறார். குழந்தையைக் கொன்று உண்ண ஓநாய்கள் வட்டமிட்டபடி இருக்க, தனித்த ஒரு வீரனாக நாய் அக்குழந்தைக்கு பாதுகாப்பு கொடுத்தபடி நின்றிருக்கிறது. மணீந்திரநாத் ஓடிச் சென்று குழந்தையை எடுத்துக்கொள்கிறார். அதுதான் அந்தக் காட்சி. நான் சொல்லி முடிக்கும் வரைக்கும் காத்திருந்த அவர் “எனக்கும் அந்த காட்சி ரொம்ப புடிக்கும் ஐயா” என்று புன்னகைத்தார். தொடர்ந்து, “திக்கற்றவருக்கு தெய்வமே துணைன்னு சொல்ற சொல் சத்தியமாச்சே, மாறுமா?” என்று பொறுமையாகச் சொன்னார்.
அடுத்தநாள்தான் திருமணம் நடக்கவிருந்தது. அவர் என்னிடம் திருமண வரவேற்புக்கு வருகிறீர்களா என்று கேட்டார். நான் சற்றே தயங்கினேன். ”தெரியாதவங்க கல்யாணமாச்சேன்னு யோசனையா? நீங்க வந்ததும் நானும் வெளியே வந்துடறேன். சாப்பாட்டு நேரம் வரைக்கும் ரெண்டு பேரும் பேசிட்டிருப்போம். அப்பறமா நீங்க கெளம்பிடலாம், என்ன சரிதானே ஐயா” என்றார். உரையாடலுக்குத் தவிக்கும் அவருடைய ஏக்கத்தை என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் சொன்னவிதமாகவே மறுநாள் மாலை மண்டபத்துக்குச் சென்றிருந்தேன். பெங்களூர்தான் என்றாலும் அந்த மண்டபம் இருக்கும் பக்கமெல்லாம் நான் சென்றதே இல்லை. அதனால் அதைக் கண்டுபிடிப்பது சற்றே சிரமாக இருந்தது. சிறிது தாமதமாகத்தான் என்னால் அங்கே செல்லமுடிந்தது. மண்டபத்தின் வாசலிலேயே அவர் நின்றிருந்தார். “உங்களுக்காகத்தான் காத்திட்டிருக்கேன். கண்டுபிடிக்க சிரமமா இருந்ததா?” என்று கனிவோடு கேட்டார். ஆமாம் என்பதுபோல மெதுவாக நான் தலையசைத்தேன். ”ஒரு நிமிஷம், உள்ள போயி வந்துடலாம்” என்று சொன்னபடி உள்ளே அழைத்துச் சென்று, அவருடைய சகோதரரையும் மற்றும் சில உறவினர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்புறம் அவர் திட்டப்படியே வெளியே வந்து உட்கார்ந்துவிட்டோம். அவர் தன் பையிலிருந்து சில புத்தகங்களை எடுத்து கையெழுத்திட்டு எனக்குக் கொடுத்தார்.
அடுத்தநாள் காலை அவர் ஊருக்குச் சென்றுவிட்டார். அவருடைய உறவினர்கள் பலர் பெங்களூரிலும் சென்னையிலும் வசித்துவந்தார்கள். மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு குடும்பத்தில் திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடந்தபடியே இருந்தது. அந்த விசேஷங்களுக்கெல்லாம் அவரும் வந்து கலந்து கொண்டார். அவர் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாலேயே எனக்குக் கடிதம் எழுதிவிடுவார். அவர் இங்கே தங்கியிருக்கும் நாட்களில் ஒன்றிரண்டு மாலைப்பொழுதுகளையாவது அவருக்காக ஒதுக்கவேண்டும் என்பதற்காக இந்த முன்னேற்பாடு. அல்சூரில் இருந்த உறவினர்கள் பெங்களூரைவிட்டே போய்விட்டார்கள். அதனால் ஒருமுறை கோரமங்களாவில் ஓர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இரண்டு முறைகள் அகர என்னும் இடத்தில் தங்கியிருந்தார். அப்புறம் அவர் பெங்களூர் வரவில்லை. மடல் எழுதுவதும்கூட குறைந்துவிட்டது.
அதையடுத்து, 2009 ஆம் ஆண்டில் திசையெட்டும் இதழ் விருது வழங்கும் விழாவில்தான் அவரை நான் சந்தித்தேன். மிகவும் மெலிந்திருந்தார். துணைக்கு எப்போதும் ஓர் ஆள் தேவையாக இருந்தது. அன்று அவருக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. அவருடைய சுயசரிதை நூலான ‘நான் கடந்து வந்த பாதை’ அன்றைய விழாவில் வெளியிடப்பட்டது. அதை வாங்கிவந்து சில நாட்களிலேயே படித்துவிட்டேன். ’சாதனைப்புள்ளியை நோக்கி’ என்ற தலைப்பில் அந்தப் புத்தகத்தைப்பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதினேன். அதன் பிரதியை அவருக்கு அனுப்பியிருந்தேன். அது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது.
அந்த விழா நடைபெற்றதற்கு மறுநாள், அவர் தி.நகரில் ஒரு தெருவில் நடந்துசென்றபோது தடுக்கி கீழே விழுந்துவிட்டார். நோய்ப்படுக்கை என்பது அன்றிலிருந்து தொடங்கியது. திசுக்கள் சிதைவு, எலும்பு நெகிழ்வு என என்னென்னமோ பிரச்சினைகள். ஒரு சில மாதங்களுக்குப் பிறகுதான் அவரால் எழுந்து நடமாட முடிந்தது. கடிதங்கள் எழுதுவது குறைந்துபோய், அவ்வப்போது தொலைபேசியில் பேசுவதை வழக்கமாகக் கொண்டார். திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிலப்பதிகார மொழிபெயர்ப்பு, குறுந்தொகை மொழிபெயர்ப்பு, திருக்குறள் மொழிபெயர்ப்பு என எல்லாத் தகவல்களையும் அவர் தொலைபேசியிலேயே பகிர்ந்துகொண்டார். தமிழிலிருந்து இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை வங்கமொழியில் மொழிபெயர்த்ததற்காக அவருக்கு சாகித்திய அகாதெமியின் சிறந்த மொழிபெயர்ப்பாளர்க்கான விருது கிடைத்தது. தமிழிலிருந்து வங்கமொழிக்கும் வங்க மொழியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்து பல நூல்களை வெளியிட்டிருக்கும் சூழலில் வங்கமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காகவும் தனக்கு விருது கிடைக்கவேண்டும் என அவர் விரும்பினார். அந்த விருப்பம் நியாயமாகவே தோன்றியது. அந்த விருதுக்குப் பொருத்தமான வகையில் அவருடைய மொழிபெயர்ப்பு நூல்கள் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. அது கிடைத்திருக்கவேண்டும். ஆனால் அது நிறைவேறவில்லை.
2012 ல் நான் சென்னையில் இருந்தபோது, அவருடைய விரிவான நேர்காணலொன்று காக்கைச்சிறகினிலே இதழில் வெளிவந்திருந்தது. நான் அதை மிகவும் விரும்பிப் படித்தேன். அதையொட்டி உரையாடும்பொருட்டு நான் அவரை அழைத்தபோது, அவர் சென்னைக்கு வந்திருப்பதாகவும் தாம்பரத்தில் மகள் வீட்டுக்கு வந்திருப்பதாகவும் சொன்னார். தொடர்ந்து வந்த ஞாயிறு காலையில் அவரைப் பார்க்கச் சென்றேன். உடல் நலிந்திருந்தாலும் மனத்தளவில் உற்சாகமாக இருந்தார். அதே கணீர் குரல். ஐயா எனச் சொல்லி முடிக்கும் அதே உற்சாகமான பேச்சு. அப்போது ஈடுபட்டிருக்கும் சில வேலைகளைப்பற்றி பகிர்ந்துகொண்டார். நான் என்னுடைய கதைத்தொகுதி ஒன்றை அவரிடம் கொடுத்தேன். “எத்தனாவது தொகுதி ஐயா?” என்று கேட்டார். ”பதினாலாவது” என்றேன். “அப்படி போடு. ரொம்ப சந்தோஷம்யா. இருபது முப்பதுன்னு எழுதிட்டே போம்யா. இதுக்குலாம் என்ன கணக்கு வேண்டியிருக்கு? இந்த ஊருல ஒருத்தனும் மதிக்கமாட்டான். அத நெனச்சி நாம கவலைப்படவே கூடாது. இதுதான் நம்ம உலகம்ன்னு நாம எழுதிட்டே இருக்கணும்” என்று சொன்னபடி என் கைகளை வாங்கி அழுத்தினார். எவ்வளவு மெலிந்த கை. எவ்வளவு சின்ன விரல்கள். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிக்கொண்டே இருந்த அந்தக் கைகளின் தீண்டுதலை எனக்கு வழங்கப்பட்ட ஆசியாகவே நான் எடுத்துக்கொண்டேன். அப்போதே அவருக்கு உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. இந்து மிஷன் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகளை என்னிடம் காட்டினார். ”இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கி. அதயும் முடிச்சிட்டுதான் டாக்டர்கிட்ட காட்டணும்” என்றார். ஒரு வாரம் கழித்துப் பேசினேன். மருத்துவமனையில் காட்டிவிட்டதாகவும் சில புதிய மருந்துகளை அவர்கள் கொடுத்திருப்பதாகவும் சொன்னார். அதற்குப் பிறகு அவர் கல்கத்தாவுக்குச் சென்றுவிட்டார்.
ஜனவரி மாதத்தில் புத்தகக்கண்காட்சி நடைபெற்று வந்த சமயத்தில் அவர் என் வீட்டு எண்ணில் என் மனைவியிடம் பேசினார். நான் அப்போது வீட்டில் இல்லை. தனது எண்ணைக் கொடுத்து, வந்ததும் தன்னோடு தொடர்புகொள்ளும்படி சொல்லியிருக்கிறார். தகவல் கிடைத்ததும் நான் அவரைத் தொடர்புகொண்டேன். ”என்னய்யா அடிக்கடி செல் நெம்பர மாத்தறிங்க? மாத்தினா சொல்லக்கூடாதா?” என்று கேட்டார். நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். “சென்னைக்கு வந்திருக்கேன்யா” என்றார். “என்ன, ஏதாவது திருமணமா?” என்று வழக்கம்போலக் கேட்டேன். “இல்லைய்யா, இனிமே சென்னைதான். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி இனிமே சென்னை கிருஷ்ணமூர்த்தி. இங்கதான் இருப்பேன். வந்தா பாருங்க” என்றார். “எங்க, தாம்பரத்துலதான?” என்று கேட்டேன். “இல்லை, இங்க போத்தீஸ் பக்கத்துல ஒரு அறையில தங்கியிருக்கேன். தாம்பரம் பொண்ணு வெளிநாடு போயிருக்கா. அவ வரவரைக்கும் இந்த ஏற்பாடு” என்றார். அந்தச் சமயத்தில்தான் அவர் மொழிபெயர்ப்பில் ஒரு சிறுகதையொன்று கணையாழி இதழில் படித்த ஞாபகம் வந்தது. உரையாடல் எப்படியோ அந்தத் திசையில் சென்றுவிட்டது. புதிதாக அவர் மொழிபெயர்த்து முடித்த படைப்புகள், வெளிவந்திருக்கும் புத்தகங்கள் பற்றி ஆவலோடு பகிர்ந்துகொண்டார். ”தனியாதான் இருக்கேன்யா. ஓய்வா இருக்கும்போது பேசுங்கய்யா” என்று கேட்டுக்கொண்டார்.
மே மாதமா, ஜூன் மாதமா என்பது நினைவிலில்லை. அப்போது பேசும்போது தாம்பரத்து வீட்டுக்குத் திரும்பிவிட்டதாகவும் மகள் வெளிநாட்டிலிருந்து வந்துவிட்டதாகவும் சொன்னார். அப்போது “எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?” என்று கேட்டார். “சொல்லுங்க, கண்டிப்பா செய்றேன்” என்றேன். வங்க மொழியில் மொழிபெயர்ப்பதற்காக, புதிய தமிழ்ச்சிறுகதைகளின் பட்டியலொன்றைத் தயாரித்துக் கொடுக்குமாறு கேட்டார். கொல்கத்தாவிலிருந்து தமிழ்த்தொகுப்பு ஒன்றைக் கொண்டுவரும் திட்டத்தை, ஏதோ ஒரு நிறுவனத்திடமிருந்து அவர் எதிர்பார்த்திருந்தார். அது வந்ததும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களிடம் அனுமதி பெற்று, வேலையைத் தொடங்கிவிடுவதாகச் சொன்னார். அடுத்த வாரமே, இருபத்தைந்து எழுத்தாளர்களின் சிறுகதைகளின் தலைப்புகளைப் பட்டியலிட்டு அவருக்கு அனுப்பியிருந்தேன். அவர் உடனே செல்பேசியில் அழைத்து, தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார். “இது போதும்யா. இன்னும் கடிதம் வரலை. வந்ததும் உங்களுக்குச் சொல்றேன். நீங்கதான் இவங்களுக்கெல்லாம் சொல்லி அனுமதி வாங்கித் தரணும்” என்றேன். “நிச்சயமா வாங்கித் தரேன்” என்று நான் சொன்னேன். பிறகு ”உங்க கதை ஒன்னு அனுப்பி வையுங்க” என்று கேட்டார். நான் அவருக்கு பச்சைக்கிளிகள் சிறுகதையை அனுப்பி வைத்திருந்தேன். அவருக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. “நீங்க கொடுத்த பட்டியல்ல உங்க பேரு இல்ல. அதனாலதான் நானே கேட்டு வாங்கினேன். இப்ப உங்க பேர்ல இந்தக் கதைய நானே சேர்த்துக்கறேன்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். தொடர்ந்து ”இத்தன வருஷம் பழகியிருக்கோம். உங்க கதையில ஒன்னயாச்சிம் செய்யணும்ன்னே எனக்கு தோணாம போயிடுச்சே. எப்படி மிஸ் பண்ணேன்னே தெரியலை” என்று சொல்லிவிட்டு சில நொடிகள் பேசாமலேயே இருந்தார். “பரவாயில்லை விடுங்க சார், இது ஒரு பெரிய விஷயமா?” என்று நான் சொன்னேன். என் சொற்கள் அவரை எட்டியதாகவே தெரியவில்லை. ”இந்த கதைய கண்டிப்பா செஞ்சிடுவேன்” என்று அடுத்த்டுத்து இரண்டுமுறை சொல்லிவிட்டு சிரித்தார்.
அன்று சிரிப்போடு முடிந்த உரையாடல்தான் நான் அவரோடு இறுதியாகப் பேசிய உரையாடல். தொடர்ந்து ஏதேதோ வேலை நெருக்கடிகள். அலுவல் நிமித்தமான பயணங்கள். அலைச்சல்கள். அவரை அடிக்கடி நினைத்துக்கொள்வேனே தவிர அவரோடு பேசவில்லை. 07.09.2014 அன்று அவர் இந்த மண்ணுலகைவிட்டு மறைந்துவிட்டார். எண்பதாண்டுகளுக்கும் மேல் நீண்ட நெடிய வாழ்க்கை. அதில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை. வங்க இலக்கியத்துக்கும் தமிழுக்கும் இடையே பாலமாக இருந்தவர் அவர். இருமொழியினருக்கும் இது மாபெரும் இழப்பு.
இதை எழுதிக்கொண்டிருக்கும் கணத்தில், நீலகண்டப் பறவையைத் தேடி நாவலில் என் மனம் கவர்ந்த காட்சி மீண்டும் மனத்தில் விரிகிறது. புல்வெளியில் கிடத்தப்பட்டிருக்கும் குழந்தையும் பாதுகாப்பாக நின்றிருக்கும் நாயும் கொண்ட அச்சித்திரத்தை நாவலின் சட்டகத்தைத் தாண்டி விரிவாக்கிக்கொள்கிறது என் மனம். ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்ட மகத்தான படைப்பையும் அதைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளரையும் அச்சித்திரத்தோடு இணைத்துக் கொள்கிறேன். ஒவ்வொரு மூல படைப்பாளியையும் ஒரு மொழிபெயர்ப்பாளர் தன் தாய்மொழிக்காக பாதுகாத்துக்கொண்டிருக்கிறார். தாராசங்கர் பானர்ஜிக்கு த.நா.குமாரசாமி போல, விபூதிபூஷண் பந்தோபாத்யாயவுக்கு ஆர்.ஷண்முகசுந்தரம்போல, மாணிக் பந்தோபாத்யாயவுக்கு த.நா.சேனாபதி போல, அதீன் பந்தோபாத்யாயவுக்கு சு.கிருஷ்ணமூர்த்தியைச் சொல்லலாம். மூல ஆசிரியர்களின் பேரும் படைப்பும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும்வரை மொழிபெயர்ப்பாளர்களின் பேரும் நிலைத்திருக்கும்.
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்