பெண்களும் கைபேசிகளும்

This entry is part 1 of 16 in the series 26 அக்டோபர் 2014

 

பெண்களின் வெளி உலகம் இன்று விரிவடைந்திருக்கிறது.

முகநூலின் பங்கு அதில் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆனால் முகநூலில் இடம்பெற இண்டர்நெட் தேவைப்படுகிறது

அத்துடன்,முகநூலைப் பயன்படுத்தும் பெண்கள் தாங்கள் என்ன

செய்கிறோம் என்பதை அறிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

 

.

கணினி வசதிகள் எதுவும் இல்லாத இடத்திலும்

இன்று கைபேசிகள் வந்துவிட்டன. அதிலும் கைபேசிகள்

வேலைக்குப் போகாமல் வீட்டிலிருக்கும் பெண்களிடம்

எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றன

என்பதற்கு இன்றுவரை நம்மிடம் கள ஆய்வுகள் இல்லை.

 

தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சாதிப்பெண், இன்னொரு குறிப்பிட்ட

சாதி ஆணுடன் காதல் உறவு கொள்வதாக மேடைகளில்

சாதித்தலைவர்கள் முழங்கிய போது அக்கருத்தை ஒட்டி

உளவியல் பேராசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர்

என்னுடன் உரையாடினார். வெறும் பாலியல் ஈர்ப்பு என்பதையும்

தாண்டி இந்தப் பிரச்சனையை அணுக வேண்டி இருப்பதை

நாங்கள் பேசிக்கொண்டிருந்த தருணத்தில் அவருடைய ஆய்வு

திருமணம் ஆகாத பெண்களைப் பற்றியதாக மட்டுமே இருப்பதைச்

சுட்டிக் காட்டினேன். அப்போது அவர் தன்னுடைய ஆய்வில்

திருமணம் ஆன பெண்களின் வாழ்க்கையில்

ஏற்பட்டிருக்கும் மன அழுத்தங்களையும் அவர் கணக்கில்

எடுத்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டினேன்.

 

 

திருமணம் ஆன, பெண்களின் வாழ்க்கையில்

கைபேசி எம்மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும்

குறிப்பாக வேலைக்குப் போகாத பெண்கள், ஹோம் மேக்கர்ஸ்

என்று பெருமையுடன் எங்களைப் போன்றவர்கள் அறிமுகப்படுத்தும்

ஹவுஸ்வொய்ஃப், நகரங்களிலும் கிராமங்களிலும் இப்பெண்களின்

வாழ்க்கையில் கைபேசியின் தாக்கம் எம்மாதிரியான விளைவுகளை

ஏற்படுத்தி இருக்கிறது?

 

குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்கள் அங்கீகாரங்களுக்காகவும்

ஆறுதல் மொழிகளுக்காகவும் ஏங்கி நிற்பதையும் ப்டுக்கை

அறை வரை தொலைக்காட்சி வந்துவிட்ட இன்றைய காலக்கட்டத்தில்

கணவன் – மனைவி இருவருக்குமான உரையாடல்கள்

குறைந்துவிட்டது.

அந்த இடத்தை முகநூலும் கைபேசியும் பிடித்துவிட்டன.

கைபேசியில் குறுஞ்செய்திகள் ஏற்படுத்தும் குழப்பங்களும்

பிரச்சனைகளும் இல்லாத குடும்பங்களே இல்லை என்று

சொல்கிற அளவுக்கு இதன் தாக்கங்கள் இருக்கின்றன.

அடுத்தவன் மனைவிக்கு ஆசை வார்த்தைகளைக் குறுஞ்செய்திகளாக

அனுப்பும் ஒவ்வொரு ஆணும் என்றாவது ஏதாவது ஒரு சூழலில்

அந்தப் பெண்ணின் இடத்தில் தன் மனைவியை, தன் மகளைப்

பார்க்கும் தருணத்தில் நிலை குலைந்துப் போகிறான்.

இதே நிலைப் பெண்ணுக்கும் ஏற்படுகிறது என்பதும் உண்மை.

எந்த ஒரு சமூகப்பிரச்சனையின் தாக்கமும் அதன் 3வது

தலைமுறையிடம் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது

சமூகவியல் ஆய்வுகள் சொல்லும் முடிவு.. எனவே,

என் தலைமுறையின் சில உண்மை சம்பவங்களை

மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுவது

தவறு என்பதையும் அறிவேன். ஆனால் தாக்கங்கள்

இருக்கின்றன.. அதை இல்லை என்று சொல்லவோ

அல்லது மறைக்கவொ முடியாது.

 

இத்தருணத்தில் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையில்

ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட சில தாக்கங்களைப்

பற்றி நினைவூட்டுவது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

 

 

என் கல்லூரி காலங்களில் எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆடவனைக்

காதலித்திருந்தால், அந்தச் செய்தி அவள் திருமணத்தின் போது

பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது ஒரு பெண் மனசால்

ஒருவனை நினைத்துவிட்டாலோ போதும். அவள் மாசிலா

கற்பிலிருந்து விலக்கப்பட்டவளாக நினைத்தார்கள். இந்த

பாஃர்மூலாவை வைத்து அன்றைய வார இதழ்களில் தொடர்கள்

வந்தன. திரைப்படங்கள் வந்தன. அதன் பின், திருமணத்திற்கு

முன், பெண் ஆண் வாழ்க்கையில் காதல் வருவதும் வராமல்

இருப்பதும் ரொம்பவும் சகஜம் என்ற மனநிலை வந்தது.

திருமணத்திற்கு முன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை,

திருமணம் ஆனபின், கணவன் மனைவி ஒருவருக்கொருவர்

உள்ளத்தாலும் உடலாலும் நம்பிக்கைத் துரோகம் செய்யாமிலிருக்க

வேண்டும் என்ற சமூக அறம் தானாகவே உருவானது.

அதுவும் சரியாகவெ இருப்பதாக எல்லோருமே ஏற்றுக்கொண்டோம்.

 

பெருநகர வாழ்க்கையில் கார்ப்பரேட் உலகத்தில் பெண் சில தனிப்பட்ட

பிரச்சனைகளைச் சந்திக்கிறாள்.

“திறந்திருக்கும் முதுகுகள்” என்று இப்பிரச்சனையை

முன்வைத்து நானொரு சிறுகதை எழுதி இருக்கிறேன். அக்கதையை

கோவையில் நடந்த என் படைப்புகளுக்கான கருத்தரங்கின் போது

மயூரா ரத்தினசாமி அவர்கள் மிகச்சிறந்த விமர்சனத்தை வைத்தார்.

அக்கதையின் படி, வேலைப்பார்க்கும் இடத்தில் “அப்படி இப்படி

தொடுவதும் உரசுவதும் சகஜம் என்பதும் அதை எல்லாம்

பொருட்டாக நினைத்தால் இன்றைய கார்ப்பரேட் உலகத்தில்

ஒரு பெண் தன் பயணத்தை தொடர முடியாது என்பதையும்

பெண் வேலைப்பார்த்தே ஆக வேண்டும் என்பதில் இருக்கும்

நடுத்தர வர்க்கத்தின் தேவை, அபிலாஷைகளையும்

எழுதி இருப்பேன். அதாவது இதெல்லாம் நடப்பது தான்,

படுக்கை அறையில் ஆண் பெண் பாலியல் உறவு நடந்துவிட்டால்

மட்டும் தான் குற்றம் என்ற நம் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை

உணர்த்தும் கதை அது. அக்கதையின் ஊடாக இதை ஏற்றுக்கொள்ளும்

நம் சமூகம் தன் உடலை பாட்டின் தாளத்துக்கு ஏற்றபடி இரவில்

மதுபான விடுதிகளில் ஆடும் நடன மங்கையிடம் மட்டும் ரொம்பவும்

வித்தியாசமாக காட்டும் இரட்டை மனநிலையை அக்கதையில்

வைக்கப்படும் கேள்வியாக இருக்கும்.

 

எனவே, இக்கண்டுபிடிப்புகளால்,,

ஆண் பெண் உறவுகளில் சமூகம் உருவாக்கி இருக்கும்

சட்டதிட்டங்கள் விதிமுறைகள் முழுக்க தகர்க்கப்படுமா?

குடும்பம் என்ற நிறுவனத்திற்கு இக்கண்டுபிடிப்புகள்

எம்மாதிரியான சவால்களை முன்னிறுத்துகின்றன?

இக்கண்டுபிடிப்புகள் பெண்களுக்கு வடிகால்கள் மட்டும் தானா?

இதெல்லாம் “சகஜம்பா” என்று கடந்து செல்வோமா?

 

 

Series Navigationதரி-சினம்
author

புதிய மாதவி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *