தூய்மையான பாரதம்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 2 of 14 in the series 9 நவம்பர் 2014

Modi-Lead_2192688g

அ.ப. சுப்பிரமணியன்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனியில் பல நாடுகள் கலந்து கொண்ட ஓர் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த மண்ணுலகம் மாசடைவதைப் பற்றி அதில் ஆய்வு செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தின் இறுதியில் “உலகின் எல்லாப் புதிய பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு பாரத வாழ்க்கை முறைதான்” என்று தீர்வு காணப்பட்டது.

”அவரவர் நாடும், உலகமும், இயற்கை வளங்களும் மாந்தர் அனுபவித்து வாழ்வதற்கே” என்று மற்ற நாடுகளெல்லாம் வாழ்ந்த காலத்தில் நமது முன்னோர்கள் மட்டுமே மேற்கூறியவற்றைத் தூய்மையாக வைத்திருந்து அவற்றை வரும் நம் சந்ததிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதைக் கடமையாகக் கொண்டு வாழ்ந்தார்கள்.

அதனால்தான் நாட்டையும் இயற்கையையும் வழிபடுபொருள்கள் ஆக்கினார்கள். “பாரத பூமி பழம்பெரும் பூமி; நீரதன் புதல்வர்; இந்நினைவகற்றாதீர்” என்றார் பாரதியார். தாய்க்கு நிகரான நம் நாட்டை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று இன்று நினைவூட்ட வேண்டி இருக்கிறது. ஏனெனில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது. குடியிருப்புகள் அதிகமாகின்றன. வாகனங்கள் பெருகுவதால் அவற்றால் ஏற்படும் மாசும் அதிகமாகிறது.——1

எட்வின் சாட்விக் என்ற பிரிட்டானிய அறிஞர் 1842-இல் அப்போதைய லண்டன்பற்றி எழுதுகிறார். “வீடுகள் காற்றோட்டமில்லாமல் இடித்துக் கொண்டிருக்கின்றன. சுற்றிலும் குப்பை; தெருவுக்கு நடுவே சாக்கடை ஓடுகிறது. இதில்தான் வீடுகளிலிருந்து எல்லாக் கழிவுகளும் அடைக்கலம் ஆகின்றன. தெருக் கோடியில் தண்ணீர் குளம் போலத் தேங்கியிருக்கிறது.”

அவர் அப்போது எழுதியது இன்று எல்லா நகரங்களுக்கும் பொருந்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். நகரங்களே இப்படி என்றால் கிராமங்களின் நிலையைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இதை மாற்றித் “தூய்மையான பாரதம்” உருவாக்க நம் அரசு திட்டமிட்டிருக்கிறது. அதற்குத் தோள் கொடுக்க வேண்டியது நம் எல்லோரின் கடமையாகும்.

தூய்மையான பாரதம் என்பதன் அடிப்படை நோக்கமே வீட்டில், தெருக்களில், அலுவலகங்களில், பள்ளிகளில், கோயில்களில், பூங்காக்களில், மற்றுமுள்ள பொது இடங்களில் எல்லாம் தூய்மை நிலவ வேண்டும் என்பதுதான். இது தனிப்பட்ட அரசால் மட்டும் முடியாது.–2

ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் என்பார்களே அதுபோல ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நம் நாடு தூய்மையாய் இருக்க வேண்டும் என்று மனம் வைத்துக் கடமையாற்றுவதால்தான் முடியும்

ஏனெனில் தனிமனிதன் தூய்மையாக இருந்தால் அவன் இல்லம் சுத்தமாக இருக்கும்; ஒரு தெருவில் எல்லா வீடுகளுமே தூய்மையாக இருந்தால் அந்தத் தெருவே தூய்மையான தெரு எனும் பெயர் பெறும்; ஒரு கிராமமோ அல்லது நகரமோ அதன் அனைத்து வீதிகளும் மாசு மறுவற்று விளங்குமானால் அந்தக் கிராமம் அல்லது நகரம் சிறப்படையும். அந்த நிலை எல்லாக் குடியிருப்புகளுக்கும் வருமானால் நமது பாரத நாடு தூய்மையான பாரதம் எனும் பெயர் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

நமது நாட்டின் இளைஞர் சக்தி மிகப்பெரியது. அத்துடன் வழிகாட்டக் கூடிய முதியோர் சக்தியும் ஒன்று சேருமானால் நாம் எல்லாவற்றையும் சாதிக்கலாம். நமது முன்னாள் சாதனைகள் எல்லாமே இப்படித்தான் நடந்திருக்கின்றன. ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் நம் பாரதத்தைத் தூய்மையாக்கத் தங்கள் வீட்டையும் தெருவையும் இது நம் இந்தியா என்று நினைக்க வேண்டும்.—3

வீடுகளில் தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவித்தலை அறவே நிறுத்த வேண்டும். ஒரு பொருளை வாங்கும் முன்னர் அது தேவைதானா என்று பல முறை சிந்தித்துப் பார்த்தபின்னரே அதை வாங்க வேண்டும். வாங்கிய பொருளின் பயன்பாடு முடிந்த பின்பு அதனை உடனே வீட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் அது ஒரு சுமையாக மாறிவிடுவதோடு பலவிதமான மாசுகள் அதன் மூலம் வர அது வழி வகுக்கிறது. பலவீடுகளில் புழக்கத்தில் இல்லாத தேவையற்ற சாமான்களைப் போட்டு வைப்பதற்காகவே ஓர் அறையையே வைத்திருப்பார்கள். அந்த அறை எப்போதும் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருக்கும். சரியான வெளிச்சமில்லாததால், காற்றோட்டமில்லாததால் அந்த அறையினுள் உருவாகும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அனைவரின் உடல் நலத்தையுமே பாதிக்கும். அதனால் பல நோய்கள் உண்டாகும்.

அதுபோல வீட்டின் தோட்டத்தின் மீது யாருமே அக்கறை செலுத்துவதில்லை. அது சரியான வடிகால் வசதியின்றி நீர் தேங்கும்படி இருத்தல் தவிர்க்கப் பட வேண்டும். கழிவுநீர் செல்லும் சாக்கடைகள் அடிக்கடி அடைப்புகள் நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும்.—4

தோட்டத்தில் இருக்கும் மரம், செடி. கொடிகளிலிருந்து விழும் இலைகள் உடனுக்குடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் அவை நிறையச் சேர்ந்து பல கிருமிகளின் உறைவிடமாக மாறிப் போய் நோய்களின் உற்பத்தி இடமாக மாறிவிடும். பிறகு நோய்களே வந்து சேரும். முன்னோர் சொன்ன “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை எண்ணி நம் இல்லம் தூய்மையாக இருக்க நாம் செயல் புரிந்துகொண்டே இருக்க வேண்டும்.

ஒரு சிலர் தங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கக் காட்டும் அக்கறையை அவர்கள் வசித்துக் கொண்டிருக்கும் இல்லம் இருக்கின்ற தெருவின் மீது காட்டுவதில்லை. அதை அவர்கள் பொது இடம்தானே என்று அலட்சியமாகக் கருதுவதோடு எப்படி எல்லாம் அசுத்தமாக்க முடியுமோ அப்படி எல்லாம் அசுத்தப் படுத்துகிறார்கள். நம் நாட்டின் கிராமம் நகரம் எல்லாவற்றிலுமே இது நடக்கிறது. வீதியைத் தூய்மையாக்கும் பணி துப்புரவுத் தொழிலாளர் மட்டுமே செய்யவேண்டிய பணி என்று நாம் நினைக்கும் மனப்பான்மை மாற வேண்டும். அந்த மகத்தான பணியில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு என்று எண்ண வேண்டும்.தெருவில் குப்பைகளைக் கொட்டுவது முதலில் நிறுத்தப் பட்டாலே அது தூய்மையாக மாற வழி வகுக்கும்.–5

குப்பைகளை அதற்கென்று உள்ள தொட்டியில் போடவேண்டும். கிராமங்களில் தெருவின் ஓரங்களில் உள்ள சிறு செடிகள் களையப்பட வேண்டும். மழை நீர் தேங்காமல் ஓடி விட சரியான வாய்க்கால் வசதிகள் செய்யப்பட வேண்டும். அதுபோலவே ஒவ்வொரு வீட்டின் கழிவு நீரும் ஊர்க்கடைசியில் சென்று சேர வடிகால் வசதிகள் செய்யப்பட வேண்டும். நீர் தேங்குவது, மற்றும் குப்பைகள் குவிந்திருப்பது எல்லாமே கண்ணுக்குத் தெரியாத நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வளர வழி வகுக்கும். அது சுகாதாரக் கேட்டினை உண்டாக்கும் என்பதை உணர வேண்டும்

தெருக்களில் கண்ட இடங்களில் துப்புவது தவிர்க்கப்படவேண்டும். ஈ மொய்க்கக் கூடிய பொருள்களைத் தெருக்களில் வீசி எறியக் கடாது. அடுத்து பூங்காக்கள்; சிறுவர் முதல் பெரியவர்வரை வந்துபோகும் முக்கியமான ஒரு இடம் பூங்காவாகும். பூங்காவினில் தேவையற்ற செடிகள் களையப்பட வேண்டும். மேலும் புதர்கள் பூங்காக்களில் இருக்கக்கூடாது. விழுகின்ற இலைகளை அவ்வப்போது அப்புறப்படுத்தல் அவசியமாகும்.–6 அங்கு தின்பதற்கு என்று சிலர் பல தின்பண்டங்களை எடுத்து வருகின்றனர். அவர்கள் தின்று முடித்த பின்னர் காலியான தட்டுகள் மற்றும் கோப்பைகளை அவற்றுக்கென்றிருக்கும் உரிய குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

அடுத்து நிறைய பொதுமக்கள் வந்து போகும் இடங்களாக இரண்டைப் பார்க்கலாம். அவை ரயில்வே நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் ஆகும். இவற்றில்தாம் பொதுமக்களாகிய நாம் மிகவும் கவனத்துடன் தூய்மையாக இருத்தல் மிகவும் அவசியமாகிறது. இரயில் நிலையத்தின் நடைமேடைகளில் துப்புவது, பயணச்சீட்டு போன்ற காகிதங்களைக் கிழித்துப் போடுவது முதலியவை அறவே தவிர்க்கப்பட வேண்டும். தண்டவாளங்களில் பிளாஸ்டிக் குவளைகள், காகிதத் தட்டுகள், எச்சில் இலைகள் போன்றவற்றை எறிதல் கூடாது. பேருந்து நிலையங்களில் ஒரு சிலர் பழங்களை உரித்துத் தின்ற பின்னர் பழத்தோல்களைத் தரையில் போட்டுவிட்டுச் செல்கிறனர். பொது இடங்கள் எல்லாம் நமக்கு உரிமையான சொத்துகள் என எண்ணி அவற்றைத் தூய்மையாக வைத்திருத்தல் நமது பொறுப்பு என்று எண்ணினாலே தூய்மையான பாரதம் தானாக வந்து சேரும்.

காடுகள் நம் நாட்டின் செல்வங்கள் ஆகும். அவை மழையைப் பொழிய வைப்பதில் பெரும் பங்கு வைக்கின்றன. அவற்றைத் தூய்மையாகப் பேணுவது ஒவ்வொருவரின் கடமையாகும். காடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களில் ஒரு சிலர் பிளாஸ்டிக் குவளைகளையும் பைகளயும் போடுவதோடு விலங்குகள் நடமாடும் வழிகளில் கண்ணாடி பாட்டில்களை உடைத்தும் போட்டு விடுகிறார்கள்–7.

பிளாஸ்டிக்கைத் தின்று விடுவதாலும் உடைந்த கண்ணாடிச் சில்லுகள் காலில் குத்தி விடுவதாலும் பல விலங்குகள் உயிரிழக்கின்றன. இதுபோன்றவை நிகழாமல் இருக்க அனைவரும் காடுகளில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும்.

திருக்கோயில்களைத் தூய்மையாக வைத்திருப்பது அங்கு செல்லும் ஒவ்வொருவரின் கடமையாகும். அங்கு இறைவனின் சார்பாக அளிக்கப்படும் பிரசாதங்களைத் தின்றபின் இலைகளையும் மீதம் இருக்கும் பிரசாதங்களையும் கோயில் பிரகாரங்களில் போடக்கூடாது. மேலும் அங்கு அளிக்கப்படும் விபூதி குங்குமம் போன்றவற்றை நெற்றியில் அணிந்தபின் மீதம் இருப்பவற்றைச் சுவரில் தடவுதல் கூடாது. தங்கள் பெயர்களையும் தேர்வு எண்களையும் சுவர்களில் எழுதக் கூடாது.

முதல் நாள் கடவுளுக்கு அணிவிக்கப்பட்டு களையப்பட்ட மலர் மாலைகள் அப்புறப்படுத்தப்படும் போது அவற்றைக் கண்ட இடங்களில் குவித்தல் தவறான செய்கையாகும். கோயில்களில் விமரிசையாக நடக்கும் திருவிழாக்களின்போது பலர் கூடுவார்கள். அப்போது சரியான தங்கும் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்படுதல் மிகவும் அவசியமாகும். அக்காலங்களில் மிகக் கவனமாகத் தூய்மை பேண வேண்டும்.—-8

தெருக்களிலும் இது போன்ற பொது இடங்களிலும் தனி ஒரு மனிதன் தூய்மையைக் கடைபிடிப்பதோடு அந்த இடங்களைத் தூய்மை செய்வதும் அவசியமாகும். அச்செயல் ஒருவரால் மட்டுமே நடத்த முடியாதது ஆகும். எனவே அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. அதற்காகத் தன்னார்வத் தொண்டர்களை அறிதல், பள்ளிகளில் பரப்புதல், அறிவியல் பூர்வமாக உணர்த்துதல், நிதியளிப்பு போன்ற வகைகளில் பங்காற்ற வேண்டும். சுற்றுப்புறத் தூய்மையில் ஆர்வமுள்ள சில தன்னார்வத் தொண்டர்களைக் கண்டறிதல் அவசியமாகும்.

அவர்களுக்குத் தூய்மையான பாரதம் அமைய வேண்டியதன் அவசியம் புரிந்திருக்க வேண்டும். அதுதான் முக்கியமாகும். அந்தத் தொண்டர்களை எல்லாம் ஒருங்கிணத்து ஓர் அமைப்பை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். அந்த அமைப்பினர் ஒரு சில குழுக்களைத் தங்களுக்குள் அமைத்துக் கொள்ளல் நல்லது.—-7

இந்தக் குழுக்களில் இருப்பவர்கள் தங்களுக்குள் எந்தவிதமான வேறுபாடும் பார்க்கக்கூடாது. உயர்தகுதி எதையும் பாராமல் தூய்மைப்பணிக்காக தெருவில் இறங்கிப் பணி செய்யத் தயராயிருத்தல் மிகவும் அவசியமாகும். அப்போதுதான் தூய்மையான பாரதம் என்ற குறிக்கோள் நிறைவேறும்—9

ஒவ்வொரு குழுவும் கிராமம் அல்லது நகரத்தின் ஒவ்வொரு பகுதியைத் தத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்பகுதியைத் தூய்மையாக வைத்திருத்தல் அக்குழுவின் பொறுப்பாகும். இப்படிச் செயல்படுவதன் மூலம் செயல்கள் விரைவாக முடிவதோடு அனைவரின் பங்களிப்பும் சேர்கிறது.

ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் பணியாற்றினாலே ஓராண்டுக்கு ஏறக்குறைய நூறு மணிக்குமேல் தனிமனித உழைப்பு தூய்மையான பாரதத்திற்குக் கிடைக்கும்.   அதன் விளைவுகள் பாரதத்தின் தூய்மைக்குப் பெரும் பங்களிப்பாக இருக்கும். தூய்மையான பாரதம் என்னும் கனவும் நிறைவேறும். இக்குழுக்கள் தம்மால் முடிந்த போது அருகில் உள்ள பள்ளிகளுக்குச் செல்ல வேண்டும்.

பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குத் தூய்மையான பாரதத்தின் மேன்மையினைப் புரிய வைக்க வேண்டும். சுத்தம் சோறு போடும்; கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழானாலும் குளித்துக் குடி போன்ற பழமொழிகளின் அவசியத்தை உணர்த்தவேண்டும். நம் அரசின் தூய்மையான பாரதம் என்னும் நோக்கத்தை நிறைவேற்ற அவர்களின் பங்கைச் செலுத்த வேண்டும் என்று அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும்.——10

மேலும் மாணவர்களுக்கு அறிவியல் பூர்வமான சில ஆலோசனைகளையும் வழங்கலாம். கழிவு மேலாண்மை என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். திடக் கழிவுகள், என்பதோடு மக்கும் குப்பைகள், மற்றும் மக்காத குப்பைகள் என்பவை என்னென்ன என்பது மாணவர்களுக்குத் தெரிந்திருப்பது மிகவும் அவசியமாகும். அத்துடன் குப்பைகளைச் சேகரித்து அவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் விதத்தையும் அவர்களுக்கு விளக்க வேண்டும்.

தூய்மையான பாரதம் உருவாகி அதன் மூலம் நாம் அடையும் பயன்கள் பற்றி அவர்களுக்குத் தெரிந்தால்தான் அவர்கள் இத்திட்டத்தில் மனப்பூர்வமாக ஈடுபடுவார்கள். அவர்கள்தாம் வருங்காலப் பெரியோர்கள். எனவே தூய்மையான பாரதம் எனும் ஒரு நல்ல திட்டத்தில் அவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும்.

நல்ல மனம் கொண்ட ஒரு சிலரிடம் இத்திட்டம் நிறைவேற உழைக்கத் தேவையான கருவிகள் வாங்கித்தரச் சொல்லலாம். தேவையான நிதிகளும் திரட்டலாம். அனைத்துக் குடிமகன்களும் தங்களால் முடியும் வகையெல்லாம் பணியாற்றினால்தான் தூய்மையான பாரதம் எனும் இத்திட்டம் நிறைவேறி நம் நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும்—-11

நம் நாட்டின் அலுவலகங்களில் கடைபிடிக்கப்படும் தூய்மையைப் பற்றி சற்று சிந்தித்தல் அவசியமாகிறது. தனியார் அலுவலகமோ, அல்லது அரசு அலுவலகமோ முதலில் சுற்றுப்புறத்தைச் சரியாக வைத்திருக்க வேண்டும். சுற்றுச் சுவர்களின் மீதும் அவற்றின் அருகிலும் செடிகொடிகள் மற்றும் புதர்கள் இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். அலுவலகச் சுவர்களில் முளைக்கும் சிறு செடிகள் உடனேயே களைந்தெறியப்பட வேண்டும். அலுவலகத்தின் உள்ளே நல்ல வெளிச்சம், காற்றோட்டம் இருக்க வேண்டும். சிறிய பூச்சிகள் வராதவாறு அவ்வப்பொழுது மருந்து தெளித்தலும் அவசியமாகும்.

முக்கியமாக பல அலுவலகங்களில் உடைந்துபோன நாற்காலிகள், மேசைகள், அலமாரிகள், போன்றவற்றைச் சேமித்து வைத்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அவற்றை உரிய அனுமதி பெற்று உடனேயே அப்புறப்படுத்தவேண்டும். அதுபோல ஆண்டுக்கணக்கில் தேவையற்ற கோப்புகளையும் வைத்திருப்பது தவிர்க்கப்பட வேண்டும். ஆண்டுக்கொருமுறை எல்லாக் கோப்புகளும் பரிசீலிக்கப்பட்டுத் தேவையற்றவை அழிக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஊழியரும் தான் பணிபுரியும் அலுவலகத்தினைத் தன் இல்லம் போல் கருதித் தூய்மையாக வைத்திருக்க எண்ண வேண்டும்.—12

வீடுகளிலும், அலுவலகங்களிலும், பொதுநிலையங்களிலும் பனியாற்றும் துப்புரவுப் பணியாளர் மட்டுமே அந்தந்த இடங்களில் தூய்மை செய்யும் பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுவது சரியானதன்று. நமக்கும் அந்த இடத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற கடமை இருக்க வேண்டும். இதில் பணிபுரியும் அலுவலர்களின் மற்றும் அதிகாரிகளின் பங்கு மிக முக்கியம். ஒவ்வொரு மேசைக்கும் கீழே இருக்கும் கூடையில்தான் தேவையற்றவற்றைப் போட வேண்டும் என்ற எண்ணம் எல்லா அலுவலர்களுக்கும் இருந்தால் அலுவலகங்களில் கண்ட இடங்களில் குப்பைகள் சேர்வதைத் தவிர்க்கலாம்.

மேற்கண்ட இடங்களில் மட்டுமன்றி வீட்டிலும் ஒரே நாளில் எல்லாவற்றையும் சுத்தம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அது சலிப்பும் ,களைப்பும் தருவதோடு நாம் எடுக்கும் முயற்சி வெற்றியடையாமல் போகக்கூடிய வாய்ப்பும் உள்ளது. எனவே ஒரு சில விதிமுறைகளைக் கடைபிடிக்கலாம்.

அதாவது நாள்தோறும் சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டியவை. குளியலறை கழிப்பறை போன்றவை இதில் அடங்கும். வாரத்திற்கொருமுறை சுத்தம் செய்ய வேண்டியவை. விரிப்புகள் மற்றும் தொலைப்பேசி போன்றவற்றை இவ்வகையில் கூறலாம். மாதம் ஒருமுறை செய்ய வேண்டியவை எனத் தரைகளைச் சுத்தம் செய்தல், ஒட்டடை அடித்தல், குழாய்களைச் சரி பார்த்தல் முதலியவற்றைக் கூறலாம்.—13

இப்பொழுது எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தியபின் அந்தப் பொருளின் பயன்பாடு முடிந்து போவதால் அப்பொருள் தேவையற்றதாக மாறி விடுகிறது. அதுவும் ஒருமுறை பயன்படுத்தியபிறகு தூக்கிப்போடப்படும் பொருள்கள் நிறைய இப்பொழுது வந்துவிட்டன. அவற்றாலேயே குப்பை பெருகி தூய்மை கெடுகிறது.

மேல்நாடுகளில் சுழற்சி முறையில் மறு உருவாக்கம் செய்யக்கூடிய தாள்களைத்தாம் பயன்படுத்துகிறார்கள். அதுபோலவே மைக்குப்பிகளும் எழுதுகோல்களும் வந்துள்ளன. நாமும் அவற்றைப் பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வந்தால் குப்பைகள் குறையும். நமது நாட்டின் எல்லா மக்களும் தூய்மையான பாரதம் என்னும் அரசின் குறிக்கோள் நிறைவேற சில உறுதிமொழிகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும்.

நான் என்னால் முடிந்த மட்டும் வாரத்தில் இரண்டு மணிநேரம் தூய்மையான பாரதம் உருவாகக் கடமையாற்றுவேன்.

எந்த இடத்திலும் குப்பை போட மாட்டேன். யாரையும் போட விடமாட்டேன்.

எல்லாஇடங்களிலும் தூய்மை நிலவ வேண்டும் என்ற குறிக்கோளை என் குடும்பம் கிராமம் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்குப் பரப்புவேன்.

முக்கியமாக சிறுவர்கள் இந்த உறுதிமொழிகளை மேற்கொண்டால் நம் எதிர்கால பாரதம் தூய்மையாக மிளிறும் என்பது உண்மையாகும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலும் இவற்றைச் சொல்லித் தருதல் அவசியமாகும்.—14

நமது நாட்டின் ஆறுகள் நமக்கு இயற்கை கொடுத்த செல்வங்கள். அவற்றை நாம் தாய் போல நேசிக்கிறோம். அதனாலேயே அவற்றுக்குப் பெரும்பாலும் கங்கா, காவேரி, யமுனா என்று பெண்களின் பெயரால் அழைக்கிறோம். அவற்றில் நீராடுவதைப் புண்ணியமாகக் கருதுகிறோம். அவற்றுக்குத் தெய்வங்கள் போல வழிபாடு நடத்துகிறோம்.

ஆனால் அந்தச் செல்வத்தை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்பதைச் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும். ஆற்றங்கரைகளில் பல கிராமங்களும் நகரங்களும் இருக்கின்றன. அவற்றின் கழிவுநீரெல்லாம் ஆற்றில்தான் போய்க் கலக்கின்றன. மேலும் ஆற்றங்கரையில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் ஆற்றில்தான் கலக்க விடப்படுகின்றன.

பல சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளின் சாயக் கழிவுகள் கலப்பதால் ஆற்று நீரின் வண்ணமே மாறிப்போய் அது தூய்மை கெட்டு மாசடைகிறது. அதில் குளிப்பவர்களுக்குத் தோல் நோய்கள் உண்டாகின்றன. பல உயிரினங்களும் இறக்க நேரிடுகிறது.

முன்பெல்லாம் ஆற்றுநீரை அப்படியே குடிநீராகக் கூடப் பயன்படுத்துவார்கள். இப்போது எந்த ஆற்றுத் தண்ணீரையும் குடிக்க முடியாத அளவு மாறிப் போய் விட்டது. எனவே முதலில் ஆற்று நீர் மாசடைவதைத் தடுப்பதற்காக அரசும் பலவித முயற்சிகள் செய்து வருகிறது. அதற்கு ஒவ்வொரு குடிமகனும் கை கொடுக்க வேண்டியது அவசியமாகும்.—-15

உதாரணமாக நம் நாட்டின் வற்றாத ஜீவ நதிகளில் ஒன்றான கங்கை மிக முக்கியமானதாகும். அதில் நீராடுவதை அனைவரும் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். அதைத் தூய்மைப் படுத்த அரசாங்கம் ஒரு திட்டம் கொண்டு வந்தது. கங்கை நதித் தூய்மைத் திட்டம் என்ற அத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு சில நல்ல பயன்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.

கங்கை நீர் முதலில் மாசடைந்திருந்தபோது அதன் உள்ளே சூரிய ஒளி சென்று 18 செ.மீ தான் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் நீரானது சற்றுத் தூய்மையானபின் இப்போது சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சூரியஒளி உள்ளே சென்று இப்போது 30 செ.மீ அளவுக்கு தெரிகிறது.அதுமட்டுமன்று. முன்பு கங்கை நீரின் மாசளவு 19 டிகிரியாக இருந்தது. திட்டம் செயலாற்றத் தொடங்கிய பிறகு அது 18.1 டிகிரியாக மாறி இருக்கிறது.

இது எதைக் காட்டுகிறது? உழைப்பின் மாறா உறுதிகள் உளவோ? என்பதைக்காட்டுவதோடு முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் உணர்த்துகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் காந்தியடிகளின் பிறந்த நாளன்று தூய்மையான பாரதம் எனும் உயரிய திட்டம் தொடங்கப்பட்ட்து.—15

இத்திட்டத்தின்படி காந்தியடிகளின் 150- ஆம் பிறந்த நாள் வரும் 1916 அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் நம்பாரதம் தூய்மையாக மிளிர வேண்டும். அதற்காக 3 மில்லியன் அரசு ஊழியர்கள், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடமையாற்ற இருக்கிறார்கள். எல்லாரும் ஒருங்கிணைந்து இப்படிப் பாடுபடும்போது வெற்றி நிச்சயம்.

இதற்கு ஓர் உதாரணமும் பார்க்கலாம். நம்நாட்டில் மேகாலயா மாநிலத்தில் மாவ்லேநான்க் என்ற ஒரு கிராமம் உள்ளது. இது ஷில்லாங் நகரில் இருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு 90 குடும்பங்கள் வசிக்கிறார்கள் இக்கிராமம் 100 % படிப்பறிவு பெற்றுள்ளது. அத்துடன் மிகத் தூய்மையான கிராமமாக ஆசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

ஒவ்வொரு குடும்பமும் தினம் தோறும் தங்கள் குப்பைகளை மூங்கில் கூடைகளில் சேகரித்துப் பின் அவற்றை உரமாக்குகிறார்கள். அந்த ஊரில் பாலித்தீன் பைகளே கிடையாது. புகை பிடிப்போர்களே இல்லை. பொதுக் கழிப்பிடம் கட்டி அதைக் கிராம மக்க்ளே பராமரிக்கிறார்கள். அங்குள்ள சிறு குழந்தைகளும் குப்பையைக் கண்டால் எடுத்து உரிய தொட்டியில் போடுகின்றன.

இது எப்படிச் சாத்தியமாகியது? எல்லோரும் ஒன்று பட்டு தூய்மையான கிராமம் உருவாக வேண்டும் என்று உழைத்ததால்தானே?. கிராமங்களே இந்தியாவின் அடிப்படை. தூய்மையான கிராமங்ளை உருவாக்கி, அது போல தூய்மையான நகரங்களை உருவாக்கி நாம் எல்லோரும் தூய்மையான பாரதம் உருவாக்க உறுதி மேற்கொள்வோம்.

Series Navigationஅறுபது ஆண்டு நாயகன்ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12ஆதலினால் காதல் செய்வீர்எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருதுதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பாபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *