ஆனந்த பவன் ( நாடகம் ) காட்சி-16

This entry is part 18 of 23 in the series 7 டிசம்பர் 2014

 

 

 

இடம்: ஒய்.எம்.சி.. ஹாஸ்டல்

 

காலம்: பிற்பகல் ஐந்து மணி.

 

உறுப்பினர்: ரங்கையர், ஜான்ஸன், மோனிகா மில்லர்

 

(சூழ்நிலை: ரங்கையர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு ஜான்ஸன் (வயது 55) மாடியிலிருந்த கீழே இறங்கி வருகிறார். ரங்கையர் படிக்கட்டின் கீழே நின்று கொண்டிருக்கிறார். ஜான்ஸனின் பேச்சில் ஆங்கிலேயர் தமிழ் பேசும் அன்னிய வாடை)

 

 

 

ஜான்ஸன்: ஹலோ ரங்கையர் சௌக்யமா?

 

ரங்கையர்: சௌக்கியம். என்னமோ நீங்க வரச் சொன்னதா சாரங்கன் சொன்னான்.

 

ஜான்ஸன்: எஸ், நீங்க மேல்லே ஏற வாண்டாம். நான் கீளே வர்றேன்.

 

(அவர் இறங்கி வருகிறார்).

 

ரங்கையர்: என்ன விஷயம்? ஏதோ ராகவன் சமாச்சாரம்ணு சொன்னானே! ஏதாவது கேபிள் வந்ததா அப்படியிருந்தாலும் அவன் எங்க ஹோட்டலுக்கே கொடுப்பானே!

 

ஜான்ஸன்: ஈஸி ஈஸி ஒண்ணுமில்லே ஜஸ்ட் ஒரு ஸ்மால்மாட்டர். ஐ’ல் கம் டு த பாய்ண்ட். ரூமுக்குப் போலாம் வாங்கோ.

 

(ரங்கையரை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் செல்கிறார்)

 

ஜான்ஸன்: கூலா எதனா சாப்பிடறீங்களா?

 

ரங்கையர்: மழையும் காத்துமா இருக்கு. கூலா ஒண்ணும் வாண்டாம். என்னமோ ஏதோன்னு சைக்கிள் மிதிச்சுண்டு வந்ததிலே, நாக்கை வரட்றது. ஒரு டம்ளர் வெந்நீர் கிடைக்குமா?

 

ஜான்ஸன்: யூ மீன் ஹாட் வாட்டர் (மணியை அழுத்துகிறார்) பாய் ஒரு டம்ளர் ஹாட் வாட்டர் கொண்டு வா. கிச்சன்லே போய்க் கேள்.

 

ரங்கையர்: என்ன விஷயம் சொல்லுங்கோ!

 

ஜான்ஸன்: நான் இந்த ஊர் வந்து பதினொரு வர்சம் ஆச்சு… நீங்க இங்க வர்றது இது மூணாவது தடவை இல்லியா மிஸ்டர் ரங்கையர்.

 

 

ரங்கையர்: ஆமா… டயம் கெடைக்கறதில்லே! நேக்கென்னமோ நீங்க நடத்தற ஹாஸ்டலைப் பார்க்கணும். கொழந்தைகளோட விளையாடணும்னு ஆசை உண்டு… முடியறதில்லே… நீங்க எதுக்கு வரச் சொன்னீங்கோ?

 

ஜான்ஸன்: பதற வாண்டாம் மிஸ்டர் ரங்கையர்! எனக்கு ராகவன் பத்தி ரொம்ப அப்ரீஷியேஷன்… ரொம்ப அன்பு.

 

ரங்கையர்: இதெல்லாம் எதுக்குச் சொல்றேள்ணே தெரியலியே.

 

ஜான்ஸன்: அவன் ஒரு நல்ல ஸ்போர்ட்ஸ்மேன். எதிலயும் எப்பவும் ஃபஸ்ட்டா வரணும்னு துடிப்பான்.

 

ரங்கையர்: நீங்க நீட்டிண்டே போறது, என்னமோ போல இருக்கு.

 

(அதற்குள் பையன் வெந்நீர் கொண்டு வந்து நீட்டுகிறான்)

 

ஜான்ஸன்: ரொம்ப சூட் இருக்கா?

 

ரங்கையர்: வெதமாத்தான் இருக்கு.

 

ஜான்ஸன்: ப்ளீஸ் டிரிங் இட்!

 

(ரங்கையர் குடித்து விட்டு டம்ளரை பையனிடம் நீட்டுகிறார்)

 

ஜான்ஸன்: மிஸ்டர் ரங்கையர், ராகவன் ஒங்களுக்கு  எப்போ லெட்டர் போட்டது?

 

ரங்கையர்: மாசத்துக்கு ரெண்டு போடுவான். போன மாசம் ஒரே ஒரு தபால்தான் போட்டான்.

 

ஜான்ஸன்: என்ன எழுதியிருந்தான்?

 

ரங்கையர்: சௌக்கியமா இருக்கிறதாகவும் இன்னும் நாலு மாசத்திலே வர்றதாகவும் எழுதியிருந்தான்.

 

ஜான்ஸன்: (யோசனையோடு) அவ்ளோதானா?

 

ரங்கையர்: நீங்க என்னமோ ஒரு வெடிக் குண்டைத் தூக்கிப் போடப் போறேள் போலத் தோணறது! எதுவாருந்தாலும் டப்ணு போட்டு ஒடச்சிடுங்கோ. இதுவா அதுவாண்ணு மனசு படபடக்கிற ஸ்ரமமாவது கொறயும்.

 

ஜான்ஸன்: ஆர் யூ தட் மச் ஸ்ட்ராங்க்?

 

ரங்கையர்: என்ன கேக்கறேள்?

 

ஜான்ஸன்: ஐம் ஸாரி. ஒங்கள்கு அவ்வளவு மனசு வலிமை இருக்கா?

 

ரங்கையர்: தாங்கி ஆகணும்னா வலிமையை உண்டாக்கிறது பகவத் கிருபை.

 

ஜான்ஸன்: மிஸ்டர் ரங்கையர், ஐ ஆம் வெரி மச் ஸாரி!

 

ரங்கையர்: சொல்லிடுங்கோ!

 

ஜான்ஸன்: ஒங்க பையன் எறந்து போயி பதினஞ்சு நாளாச்சு!

 

ரங்கையர்: (தடுமாறி எழுந்திருக்க முயலுகிறார் கால் இடறி நாற்காலி கீழே விழுகிறது) நீங்க… நீங்க… நீங்க என்ன சொல்றேள்?

 

ஜான்ஸன்: ஷ்யூர்!

 

ரங்கையர்: யார் சொன்னது? ஒங்களுக்கு எப்படித் தெரியும்… நெஜம்மாவா? ஜான்ஸன் !  நெஜம்மா  ராகவன் காலமாய்ட்டானா!

 

ஜான்ஸன்: (சட்டைப் பையில் கையை விட்டு ஒரு கவரை எடுக்கிறார்; அதில் ஒரு போட்டோவும் ஒரு கடிதமும் இருக்கின்றன) இந்தப் போட்டோவைப் பாருங்கோ மிஸ்டர் ரங்கையர் கப்பல் டாங்கர் வெடிச்சு கை கால் எல்லாம் கருகிப் போய் ராகவன் செத்துட்டான். இந்த மொகம் மட்டும் தெரியாது… இது ராகவன்தான் இல்லியா?

 

ரங்கையர்: (போட்டோவை வாங்கிப் பார்க்கிறார்) ஆமா… இது ராகவன்தான், பகவானே! பகவானே! இதையும் நான் தாங்கணுமா ஸ்வாமி…

 

(விம்மி வெடித்துக் கொண்டு அலறுகிறார்)

 

ஜான்ஸன்: ஈஸி… ஈஸி மிஸ்டர் ரங்கையர் நீங்க தாங்கிக்கிறதா சொன்னீங்க… டோன்ட் பீ எ சைல்ட்… இந்தாகோ இந்த லெட்டரைப் படிங்கோ.

 

(நடுநடுங்கும் கரத்தோடு அவர் நீட்டிய கடிதத்தை வாங்கிக் கொள்கிறார் ரங்கையர். கடிதத்தை பிரித்து வாசிக்கிறார்)

 

பின்னணியில் ராகவன் குரல்: தேவரீர் தகப்பனார் அவர்களுக்கு அனேக நமஸ்காரத்துடன் ராகவன் எழுதிக் கொள்வது க்ஷேமம். முந்தாநாள் எங்கள் கப்பலின் மாஸ்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த என்ஜினியரிங் க்ரூ பையன் வினாயக் மாச்வே கால் சறுக்கி விழுந்து மண்டை சிதறி ஸ்தலத்திலேயே மாண்டு விட்டான்.

 

இப்போதெல்லாம் மரணம் திடீர் திடீரென்று எதிர்பாராத நேரத்தில் எல்லாம் தலை நீட்டி என்னைப் பார்த்து பல்லிளிக்கிறது! எனக்கு பயம் போய் ரொம்ப காலம் ஆகி விட்டது.

 

பயாதஸ்யா க்னிஸ்தபதி

பயாத்தபதி சூர்ய

பயாதிந்திரஸ்ச வாயுஸ்ச

மிருத்யுர்தாவதி பஞ்ச –

 

என்று ஸ்ருதியில் சொன்னதை நீங்கள் அடிக்கடி வாசித்துக் காட்டுவீர்கள்.

 

எல்லாவற்றையும் எதிர்பார்த்து எதற்கும் சித்தமாகக் காத்திருப்பதில் ஒரு நிம்மதி புலப்படும். நான் அப்படியே இருந்து வருகிறேன்.

 

எனினும், இரண்டு வருஷமாக உங்களிடம் மறைத்த விஷயத்தை, நான் இப்போது ஒப்புக் கொண்டாக வேண்டும். அதற்கு இன்று நாள் வந்துவிட்டது. அப்பா, எனக்கு விவாகமாகி ஓர் ஆண் குழந்தைக்கு நான் தந்தையுமாகி விட்டேன்.

 

என்னோடு பணிபுரிந்த நண்பன் பெர்னார்ட் மில்லர் என்ற அமெரிக்கனின் சகோதரி மோனிகா மில்லரை, நான் திருமணம் செய்து கொண்டேன். இது காதல் திருமணமல்ல. அப்படி இருந்தால் உங்கள் அனுமதிக்காக, நான் போராடி யிருப்பேன்.

 

திடீரென்று ஒருநாள் பெர்னார்ட் மில்லர், பாய்லர் வெடித்து, மாண்டு போனான். அவர்கள் குடும்ப நண்பனான நான் செய்தியைச் சொல்லி ஆறுதல் தெரிவிக்க, சான்பிரான்ஸிஸ் கோவுக்குப் போனேன். மார்த்தா மில்லர் அவனுடைய தாய். அவள் வாங்கியிருந்த ஏகப்பட்ட கடன்களுக்காக வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்தார்கள். தாய் தந்தையின்றி, அநாதையாக வாழ்ந்த மோனிகா நடுத்தெருவில் நிற்க வேண்டி வந்தது. தன்னை ஏற்றுக் கொள்ளும்படி அவள் வேண்டினாள். என்னால் தவிர்க்க முடியவில்லை. அவளை, சான் பிரான்ஸிஸ்கோவில் ஒரு ஹிந்துவின் முன்னிலையில் நான் வைதீக முறைப்படி திருமணம் செய்து கொண்டேன்.

 

இதை ஜமுனாவின் திருமணம் முடிந்த பிறகு உங்களுக்குத் தெரிவிப்பதே பொருத்தமாயிருக்கும் என்று நாள் தள்ளினேன். பம்பாயில் அவளுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்து ஓராண்டுகிறது.

 

மோனிகாவை என் புத்திக்கும் முயற்சிக்கும் எட்டிய அளவு ஹிந்துப் பெண்ணாக்கி உள்ளேன். சிரத்தையும் நம்பிக்கையும் அவளைப் புனிதவதி யாக்கியுள்ளன.

 

ஒருவேளை வினாயக் மாச்வேக்கும், பெர்னார்ட் மில்லருக்கும் நேர்ந்தது போலவே எனக்கும் நேர்ந்து விட்டால், மோனிகாவும் நம் வம்சவித்தான குழந்தை யோகியும் உங்களைத் தேடி வருவார்கள். அவர்களை எக்காரணத்தி னாலும், திரஸ்கரித்து விடாமல் ஏற்று அவர்களுக்கு நல்வழி காட்டும்படி தங்கள் பாதாரவிந்தத்தில் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.

 

 

இப்படிக்கு

ராகவன்.

 

 

ரங்கையர்: ஹே ராமா… ராமா… எத்தனை சோதனைடா ஸ்வாமி… நேக்கு இதைத் தாங்க முடியுமோ… நேக்கு இந்த வலு இருக்கோ

 

(தேம்பி அழுகிறார்)

 

ஜான்ஸன்: ஈஸி… ஈஸி மிஸ்டர் ரங்கையர்! டு யூ வான்ட்டு ஸீ… ஒங்க மருமகள், பேரன் ரெண்டு பேரும் பார்க்கணுமா?

 

ரங்கையர்: அவா வந்திருக்காளா?

 

ஜான்ஸன்: எஸ் மேல இருக்காங்க (மணியை அழுத்துகிறார்) பையா மேலே இருக்கிற மிஸியையும் கொளந்தையையும் கூட்டிக்கிட்டு வா.

 

 

(திரை)

 

[தொடரும்]

Series Navigationசெட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழாடோனி மொரிசனின் பிலவ்ட் (Beloved By Toni Morrison) அயல்மொழி இலக்கியம்
author

வையவன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *