பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்

This entry is part 8 of 23 in the series 7 டிசம்பர் 2014

 

1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று ‘பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற – அவரது காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தவரும் மணிக்கொடி காலத்தவருமான எழுத்தாளர். ‘மறு ஜன்மம்’ என்ற அவரது சிறுகதை ‘மணிக்கொடி’ யில் வெளிவந்திருக்கிறது. ’கலைமகள்’ நாவல் போட்டியில பரிசு பெற்றவர்.

கலைமகள் காரியாலயம் சிறந்த எழுத்தாளர்களது அருமையான படைப்புகளை 1950களில் பதிப்பித்து வந்தது. கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தேனீ போன்று புதுமையான படைப்புகளைத் தேடி, இனம் கண்டு அறிமுப்படுத்துவதில் ஆர்வமிக்கவர். புதுமைப்பித்தனது சர்ச்சைக்குரிய – ராஜாஜி முகம் சுளித்த – ‘சாப விமோசனம்’ போன்ற கதைகளை கலைமகளில் வெளியிட்டவர். அவரது தேர்வில் புதுமைப்பித்தனின் ’காஞ்சனை’, தி.ஜானகிராமனின் ‘கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக் ஷா’, கி.சந்திரசேகரனின் ‘பச்சைக்கிளி’ ந.சிதம்பர சுப்பிரமணியனின் ‘இதயநாதம்’, ‘ஆர்வி’யின் ‘குங்குமச் சிமிழ்’ போன்ற அருமையான நூல்கள் ‘கலைமகள்’ வெளியீடாக வந்தன. அந்த வரிசையில் பி.எம்கண்ணன் 1943ல் எழுதிய ‘பெண் தெய்வம்’ நாவலும் வெளியானது. அந்த நாவலைப் படித்த நான் மிகவும் பரவசமானேன். ஆரவாரமின்றி, பிரச்சார நெடியில்லாமல், மனித வாழ்வின் பெருமை சிறுமைகளை ரசமாக எளிய மொழியில் வெளிப்படுத்துகிறவராக பி.எம்.கண்ணனை நான் கண்டேன். படித்து 60 ஆண்டுகள் ஆகியும் அந்நாவலின் கதைமாந்தர்களும் அவர்களது பாத்திரப்படைப்பும், யதார்த்தமான குடும்பப் பிரச்சினைகளின் சித்தரிப்பும் என் நெஞ்சில் நிழலாடுகின்றன. 15க்கு மேற்பட்ட நாவல்களும்,  3 சிறுகதைத் தொகுப்புகளும் வெளியிட்ட பி.எம்.கண்ணன் இன்று முழுதுமாக மறக்கப் பட்டவர். இன்றைய தலைமுறையினர் மட்டுமின்றி மூத்த தலைமுறையினர் பலரும் கூட அவரை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். ‘இல்லாததே இல்லை’ என்று சொல்லப்படுகிற ‘கூகிளி’ல் கூட அவரது சிறுகதை ‘மறு ஜன்மம்’ ‘மணிக்கொடி’யில் பிரசுரமான செய்தி தவிர வேறு எதுவும் பி.எம்கண்ணனைப் பற்றி நிறைவான தகவல் கிடைக்கவில்லை.

எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்கள் ஆசிரியராக இருந்த ‘குமுதம்’ பத்திரிகையின் ஆரம்பக் கட்டங்களில் – 1950களில் சிறப்பான தொடர் நாவல்கள் வெளிவந்தன. எஸ்.ஏ.பி யின் ‘காதலெனும் தீவினிலே’ போன்ற விறுவிறுப்பான நாவல்களைத் தொடர்ந்து பி.எம்.கண்ணனின் ‘நிலவே நீ சொல்’, ‘பெண்ணுக்கு ஒரு நீதி’ ஆகிய நாவல்கள் 1964ல் தொடராக வந்து வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

ஆனந்த விகடனில் வெளிவந்த ‘லக்ஷ்மி’ (டாக்டர் திரிபுர சுந்தரி) அவர்களின் ‘மிதிலா விலாஸ்’ நாவல் போல குடும்பப் பிரச்சினைகளை, பெண்களின் வாழ்க்கையில் நிகழும் சிக்கல்களை முன் வைத்தே பி.எம்.கண்ணனின் நாவல்கள் அதிகமும் அமைந்தன. வாழ்வின் எந்த சம்பவத்தையும் யதார்த்தத்திலிருந்து விலகாமல் நம்பகத்தன்மையுடன் படைத்ததால் வெற்றிகரமான படைப்பாளியாக அவர் கருதப்பட்டார்.

நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற புரட்சி எதையும் அவர் செய்து விடவில்லைதான். ஆனால் வாழ்க்கையின் மீது அக்கறை கொண்டவராக, தனிமனித, குடும்ப பிரச்சினைகளை, சந்தர்ப்பவசத்தால் கீழ்மையில் விழும் மனிதர்களின் வக்கிரங்களை, அவர்களிடையே அபூர்வமாய்த் தென்படும் மனிதநேய மேன்மைகளை எல்லாம் அவர் தன் அனுபவத்தால், மனங்கொள்ளும் அருமையான படைப்புகளாக்கியவர்.

அவரது பாத்திரங்களில் அற்ப மனம் படைத்த, நாக்கு வழியே பிறரை நோகடிக்கும் மானிடர்கள், மொட்டைக் கடிதங்களை அனுப்பி அப்பாவி மனிதர்களின் வாழ்வைச் சீர்குலைக்கிற கயவர்கள் மட்டுமல்லாமல் தெய்வத்தோடு வைத்து வணங்கத் தக்க மாமனிதர்களும் இருக்கிறார்கள். இவர்களில் அதிகமும் பெண்களாகவே இருக்கிறார்கள். ‘பெண்தெய்வம்’ என்கிற நாவலில் இப்படிப்பட்டவர்களைக் காணலாம். கீழ்மை மனங்கொண்டு பிறரது துன்பத்தில் இன்பங் கண்டவர் ஒரு கட்டத்தில் மனசாட்சியின் உறுத்தலால் பிராயச்சித்தம் காண்பவர்களையும் காட்டுவது நம்பகத்தனமையோடு உள்ளது.

நாவலில் வரும் நான்கு விதமான பெண்களை அவர் சித்தரிப்பது ரசமானது:

“இந்தப் பெண்களால் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கொடுத்துவிட்டது. அந்தக் குடும்பத்தையே திரஸ்கரிக்கத் தயாராக இருக்கிறது சமூகம்!

பெண்கள் என்ன, அத்தனை சக்தி வாய்ந்தவர்களா? ஆம்! அவர்கள் இல்லாமல் எந்தக் காரியம் ஆகும்! நல்லதுக்கும் சரி, கெட்டதுக்கும் சரி, பெண் இல்லாமல் முடியுமா? ஒரு புருஷனின் வாழ்க்கை பூரணத்துவம் பெற, பெண் இல்லாவிட்டால் எப்படி? அவ்விதம் இருப்பினும் பெணகளில்தான் எத்தனை வகை! எத்தனைகுணம்! எத்தனை பேதம்!

பெண்களை பூஜித்தால் தெய்வம்; தூஷித்தால் பிசாசு! ஆனால் பூஜித்தாலும் தெய்வம், தூஷித்தாலும் தெய்வம் என்று சொல்லக்கூடிய பெண்களும் இருக்கிறர்கள். அவர்கள் நூற்றுக்கு ஒன்று, ஆயிரத்துக்கு ஒன்று; அவ்வளவுதான். அவள் பெண்தெய்வம்! இந்த இரண்டு வகைகள் மட்டுமின்றி, பெண்களில் இன்னும் ஒரு வகை உண்டு. பூஜித்தாலும் பேய், தூஷித்தாலும் பேய் என்கிற ஜாதி அது. அந்த ஜாதிப் பெண்களுக்கு மனசில் எப்போதுமே சந்தோஷம் என்பது மருந்துக்கும் கூட இருக்காது. இது தவிர இன்னொரு ரகமும் உண்டு. பூஜித்தால் பிசாசு, தூஷித்தால் தெய்வம் என்பது அது. இந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கொண்டாடினாலோ வந்தது ஆபத்து! கடிந்து கொண்டாலோ அடங்கி நடப்பார்கள்” – இப்படி வாழ்க்கையில் நாம் காணும் யதார்த்தங்களை பி.எம்.கண்ணனின் படைப்புகளில் காணலாம்.

அவரது பாத்திரச் சித்தரிப்புகளும், வர்ணனைகளும் கூட அவரது எழுத்துவண்ணத்தை காட்டக்கூடியவை. பாசாங்கற்று, தன் சாமர்த்தியத்தைக் காட்டுவதாக இல்லாமல் நம்பகத்தன்மையுடன் கதை சொல்பவராகவே அவரது நாவல்களைப் படித்தபின் நமக்குத் தோன்றும். கதை முடிந்த பிறகு உள்ளுக்குள் அது உண்டாக்கும் அலையடிப்பு வாசகனைக் கரைசேர்க்கும் வல்லமை உடையது அவரது எழுத்து! நவீனக்கூறுகள் நிறைந்த இன்றைய இலக்கியச் சூழலில் அவரது படைப்புகள் சனாதனமாக இன்றைய தலைமுறையினருக்குத் தோன்றலாம். ஆனாலும் அன்றைய நாவலாசிரியர்களில் பி.எம்.கண்ணன் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாளி என்பதும் அவரது நாவல்கள் மறு வாசிப்புக்கு உரியன என்பதும் மறுக்க முடியாதவை.

அவரது படைப்புகள்(எனக்குக்கிடைத்தவரை):

சிறுகதைத்தொகுப்புகள்:

 1. பவழமாலை 2.தேவநாயகி 3. ஒற்றை நட்சத்திரம்.

நாவல்கள்:

1.பெண் தெய்வம் 2.மண்ணும் மங்கையும் 3.வாழ்வின் ஒளி 5.நாகவல்லி 5.சோறும் சொர்க்கமும் 6.கன்னிகாதானம் 7.அன்னை பூமி 8.முள் வேலி 9.காந்த மலர் 10.ஜோதி மின்னல் 11.நிலவுத் தாமரை 12.தேவானை 13.தேன் கூடு 14.அன்பே லட்சியம் 15. மலர் விளக்கு 16.நிலவே நீ சொல் 17.பெண்ணுக்கு ஒரு நீதி.

Series Navigationஇளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்நான் துணிந்தவள் ! கிரண்பேடி வரலாறு
author

வே.சபாநாயகம்

Similar Posts

2 Comments

 1. Avatar
  டாக்டர் எல். கைலாசம் says:

  சபாநாயகம் அய்யா,
  பி.எம்.கண்ணனைப் பற்றி கலைமகளில்வெளிவந்த அந்தக்கால எழுத்தாளர்கள்தொடரில் படித்துவிட்டு சொல்லுங்கள்
  டாக்டர் எல்.கைலாசம்
  ராஜாளி ஆக்கியோன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *