காத்திருக்கும் நிழல்கள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 5 of 23 in the series 14 டிசம்பர் 2014

மனஹரன், மலேசியா

 

காரை நிறுத்திவிட்டு, பள்ளி கெண்டினுக்குதான் ராஜாராம் வந்தார். வந்தவர் ‘சாப்பிடறத்துக்கு ஏதாவது இருக்கா?’ என்றார். ராஜாராமின் குரல் கேட்டதும் முதலில் எட்டிப் பார்த்தவள் செண்பகம்தான். அதற்குள் கெண்டீன் உரிமையாளர் கஸ்தூரி வந்துவிட்டார்.

‘இல்லண்ண எல்லாம் தீர்ந்து போயிடுச்சி, நீங்க வேற மீட்டிங் போயிட்டதா சொன்னாங்க’ என்றார் கஸ்தூரி. ராஜாராம் எப்போதும் கெண்டினில்தான் சாப்பிடுவார்

‘சோறு மட்டும்தான் இருக்கு மற்றதெல்லாம் தீர்ந்து போயிடுச்சி’ என   தொடர்ந்தாள்.

‘அக்கா’ என   செண்பகம்தான் அழைத்தாள். உள்ளே போனவளிடம் ‘ சொந்த கறி இருக்கு சாப்பிடறாரா, கேளுங்க’ என   செண்பகம்தான் கேட்டாள். அது ராஜாராமின் காதிலும் விழுந்தது.

‘ ஆமா அதை மறந்தே போயிட்டேன். அண்ணே சொந்த கறி இருக்கு வேணுமா” என்றாள் கஸ்தூரி.

‘சொந்த கறியா அது என்னாது’ என்ற ராஜாராமின் குரலுக்கு “ அது நாங்க சாப்பிடறத்து மட்டும் கொஞ்சமா சமைப்போம்’ என்றாள் கஸ்தூரி.

‘ சரி என்ன கறி ‘ என்ற ராஜாராமின் கேள்விக்குக்  கஸ்தூரி சொல்லுமுன்னே செண்பகம் முந்திக் கொண்டு சொன்னாள்.

‘கருவாட்டு குழம்பு’ செண்பகத்தின் குரல் மட்டும்தான் வந்து கொண்டு இருந்தது.  அவள் இன்னும் உள்ளேதான் இருந்தாள்.

‘ஆமாண்ண அதையும் செண்பகம்தான் வைத்தாள். நல்லதான் இருக்கு. காய்ந்த உப்புக்கருவாட்டையும் காத்தரிகாயும் போட்டு வைத்தா.. நான் இதையெல்லாம் வைத்தது இல்ல இன்னிமே வைக்க வேண்டியதுதான், ஆனா கடிச்சிக்கதான் ஒன்னுமில்ல    ஊருகா இருக்கு, கொண்டு வரட்ட’ என  பதிலுக்குக் காத்திருக்காமல் தட்டில் சோற்றைப் போட ஆரம்பித்து விட்டாள்.

அந்த கெண்டினுக்கு செண்பகம் வந்து ஒரு வருடம் இருக்கும். அங்கும் இங்கும் வேலை தேடிகிட்டு இருந்தவளை கஸ்தூரிதான் கெண்டினுக்கு கூட்டி வந்தாள். கெண்டிலில் வேலையும் போட்டு இருக்க இடமும் கொடுத்தாள். கெண்டினில் கொஞ்சம் கடினமான வேலை என்றால் செண்பகம்தான் செய்வாள். கஸ்தூரியால் முடியாது.

‘விடுக்க்கா நான் தூக்கறன்” என்று கனமான பொருளையும் தூக்கி வருவாள். வயது கொஞ்சம் கூடதான்.அந்த வயதையும் ஒரு நாள் செண்பகத்திடம் ராஜாராம் கேட்டபொழுது

‘ஏன் மாப்பிளை பார்க்க போறிங்கள.. அதுக்கெல்லாம் வயசு தாண்டிபோயிடுச்சி‘ என்றாள். செண்பகத்தின் வார்த்தையில் கொஞ்சம் கிண்டலும் கொஞ்சம் துள்ளலும் இருந்தது. அவள் பேசும்போது கண்களில் ஒரு வெகுளி நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும்.எப்போதும் ஒரு ஓரத்தில் உதட்டை கொஞ்சம் கடித்த வண்ணமாய் இருப்பாள்.

‘என் பேரை கேட்டவுடனே எல்லாருக்கும் செண்பகமே செண்பகமே என  பாடலை மெலிசாய் வாய்க்குள் முனுமுனுப்பார்கள்’ உங்களுக்கும் வந்ததா?’ என  ஒரு நாள் செண்பகம் கேட்டாள்

உண்மைதான் செண்பகம் அவள் பெயரை சொன்ன பிறகு அந்தப் பாடல்தான் முதலில் ஞாகத்தில் வந்தது. பிறகு வீட்டுக்குப் போய் பழைய கேசட்டுகளை தேடி அந்தப் பாடலை கேட்க வைத்தது. அதையெல்லாம் செண்பகத்திடம் சொல்ல முடியாது. அன்று முதல் அந்த கேசட்டிற்கு  காருக்குள் இடம் கொடுத்து விட்டார் ராஜாராம். அது மட்டுமல்ல தனியொரு கேசட்டில் இரு பக்கமும் இந்த செண்பகமே பாடலை மட்டும் பதிவு செய்து கேட்க வைத்துவிட்டது. சில வேளை கனவுகளில் செண்பகம் வந்து போன சுவடு தெரியும். மனசுக்குள் ஒரு குற்ற உணர்வு மேலோங்கும். ராஜாராமிற்கும் செண்பகத்திற்கும் ஒரு பனிரெண்டு வயதாவது வித்தியாசம் இருக்கும். வயதெல்லாம் கடந்த பிறகு  வயது வித்தியாசம் பார்ப்பது தேவையற்றது.

செண்பகத்தின் அந்த கருவாட்டுக் குழம்பிற்குப் பிறகு ராஜாராமிற்கும் சொந்த கறிதான்.செண்பகம்தான் மறக்காமல் எடுத்து வைப்பாள். பல வேளை வீட்டிற்கும் கொடுத்து அனுப்புவாள்.

ராஜாராம் அந்தப் பள்ளியில் ரொம்ப காலமாய் கிராணியாக வேலை பார்த்து வருகிறார். பிள்ளைகள் எல்லாம் தூரத்தில் இருக்கிறார்கள். வெளிநாட்டில் படிக்க சென்ற மகன் தியாகு உடன் படித்த வெள்ளைக்காரியைத் திருமணம் செய்ய அனுமதி கேட்டபோது சந்தோசமாய் அந்த வெள்ளைக்காரியை வரவழைத்து கோயிலில் திருமணம் முடித்து அனுப்பி வைத்தார். இப்போது அஸ்திரேலியாவில் இருக்கிற அவன் மாதம் ஒரு முறையாவது போன் செய்வான். இரு பேரப்பிளைகளின் படம்கூட வீட்டில் மாட்டி வைத்திருக்கிறார். மகள் அனுஜா ஜோகூரில் இருக்கிறார். முன்பு அடிக்கடி ஈப்போ வருவாள். இப்போது மிகவும் குறைந்து போனது. திருமணமாகி பத்து வருடம் ஆனாலும் குழைந்தைகள் இன்னும் இல்லை. அதில் ராஜாராமிற்கு கொஞ்சம் கவலைதான்

‘இந்தாங்க சாப்பாடு’ என  செண்பகம் கொண்டு வந்து கொடுத்தாள். உள்ளே இருந்த கஸ்தூரி ‘ அம்மா எப்படி இருக்காங்க?’ என கேட்டாள்

சோற்றை பிசைந்து கொண்டே ‘ ம்ம் இருக்காங்க, என் வீட்டுக்காரி இறந்த பிறகு அவங்கள பாக்கிறது கொஞ்சம் சிரமம்தான். இல்ல அதை சிரமம்ன்னு சொல்லக்கூடாது அம்மா நமக்கு சுமையா? இல்ல அவங்கள நல்ல பாத்துக்கனும். முடிஞ்சா ரொம்ப நல்லா பாத்துக்கணும் ‘ சாப்பிட ஆரம்பித்தார் ராஜாராம்.

‘அம்மா பெண்னிங்கறதாலா ஒரு பெண்போல பாத்துக்க ஆம்பலனால முடியாதுதான் நான் ரொம்ப முயச்சி பன்றன்’ சாப்பாட்டை மிகவும் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

‘நீங்க இன்னொரு கல்யாணம் பன்னிகிட்டா எல்லா சரியாயிடம், நான் வேணும்னா பொன்னு பாக்கறன் ‘ என்றாள் செண்பகம்.

‘அண்ண இன்னும் கொஞ்சம் சோறு போடட்டுமா’ கஸ்தூரி கேட்டாள். தலையாட்டிய  ராஜாராம் ‘ போதும்’ என்றார். கை கழுவிய ராஜாராம் கருவாட்டுக்குழம்பு சுவையாக இருந்தாக செண்பகத்தைப் பார்த்து சொன்னார். ‘உன்ன கட்டிக்க போறவான் ரொம்ப யோகக்காறான் உன்னோட சமையல மட்டும் சாப்பிட்டா அடுத்த நொடியே கால்ல விழுந்துடுவான்  யார் அந்த பாக்கியசாலியோ ‘ இன்னும் என்னென்னவோ புகழ்ந்தார்.

‘அட சும்மா கொஞ்சம் இருக்கீங்லா அதுக்கான காலம் எல்லா தூரம் ஓடியாச்சி அதுவெல்லாம் பழைய கதை புதுசா எதாவது சொல்லுங்க’ என்றாள் செண்பகம்.

‘என்ன, அண்ணா விட்டால் முதல் மரியாதை படத்துல சிவாஜி மீன் குழம்பை  சுவைத்து சாப்பிடுவாரே அதுபோல ஆயிடுவீங்கபோல’  என  கஸ்தூரி கூறியபோது ராஜாராமும் சேர்ந்து சிரித்தார்.

‘அப்ப யாரு அந்த, நீ தானா அந்த குயில்’ எனப்பாடி நாவினை சுழற்றினாள்.

ராஜாராம்  அலுவலகத்திலிருந்து புறப்படும் முன்னே அம்மா போன் செய்துவிட்டார்.

’ஐயா இவங்க இன்னிக்கு வெளியே போகனுமா கொஞ்சம் சிக்கிரம் வர முடியுமான்னு கேட்டாங்க’ என்றார்..

‘இதோ கிழம்பிட்டேன், அங்குதான்மா வாரன்’ என சொல்லி காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

ராஜாராமின் மனைவி செல்வி இறந்த பிறகு இப்படிதான் வேலைக்குப் புறப்படும் முன் அம்மாவை நண்பர் வீட்டில் விட்டு வருவார். அம்மாவிற்கு காலை பசியார மதியம் உணவு எல்லாம் அங்குதான். ராஜாராமிற்கு வேலை இல்லாத நாட்களில் ராஜாராம் அம்மாவோடுதான் வீட்டில் இருப்பார். நண்பர் வீடு என்றாலும் மாதம் நானூறு வெள்ளி கொடுத்துவிடுவார். ராஜாராமை பொறுத்த வரை அந்தப் பணம் பெரிதல்ல அவர்கள் அம்மாவைப் பார்த்துக் கொள்கிறார்களே அதுவே பெரிய விசயம்.

அம்மாவைக் காரில் ஏற்றிய பிறகு  ‘ராஜா அடுத்த மாசம் அவங்க பொண்ணுக்கு கல்யாணமாம்; அதனால அடுத்த மாதம் முதல் வேறு எடத்தை பாத்துக்க சொல்லிட்டாங்க’ என்றாள்

ராஜாராமிற்கு தெரிந்த விசயம்தான். பெண்ணின் கல்யாணத்திற்கு பிறகு முடியாது என  அப்போதே சொல்லி இருந்தார்கள். மீண்டும் அம்மாவிற்கு வேறு இடம் தேட வேண்டும்.

55 வயதிலேயே பணி ஓய்வு எடுக்க இருந்த ராஜாராமை இன்னும் கொஞ்ச நாள் வேலை செய்ய சொல்லிய அவன் மனைவி செல்வி இப்போது இல்லை. எல்லாமே எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு விடியற்காலை நெஞ்சு வலி என்றவள் பிணமாகத்தான் வீடு வந்தாள். அவள் இவ்வளவு சீக்கிரம் செத்துபோவாள் என கொஞ்சம்கூட ராஜாராம் நினைக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த மகன் தியாகு காரியம் முடியும் வரை இருந்துவிட்டுதான் சென்றான். வேலையை ராஜினமா செய்துவிட்டு அஸ்திரேலியா வந்துவிடுமடி அழைத்தான். பாட்டியை மகள் அனுஜா அழைத்து செல்வதாய் இருவரும் முடிவெடுத்து இருக்கிறார்கள்.

ராஜாராம் தம் அம்மாவை யாருடனும் அனுப்பி வைக்க முடியாது எனக் கூறிவிட்டார். மகள் அனுஜா விடுவதாக இல்லை.

‘நீங்களும் வேலை மாத்திகிட்டு ஜோகூருக்கு வந்து இருவரும் எங்ககூட இருந்திருங்கப்பா’ என்றால். ஆனால் ராஜாராம் அதற்கெல்லாம் தலையை ஆட்டிவிட்டு

‘என்னை எங்கம்மாவோடு விட்டிருங்க நான் எங்கம்மாவை பாத்துக்கறன் எப்ப என்னால முடியலையோ அப்போ நானா வருவேன் இப்ப வேணாம்’ என்ற ராஜாராமின் பதிலை எவராலும் தட்ட முடியவில்லை.

ஒரு மாதம் அம்மாவை  வீட்டில் விட்டுவிட்டு ராஜாராம் வேலைக்குச் சென்றான். இடையில் பலமுறை அம்மா தொலைபேசியால் அழைப்பாள். சில வேலை பள்ளியில் சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்று வருவான்.கடைசியில் அம்மாவிடம் பேசி நண்பரின் வீட்டில் காலையில் விடுவதாய் முடிவெடுக்கப்பட்டது. அம்மாவும் சந்தோசப்பட்டாள்.

தினசரி நண்பரின் வீட்டில் நடந்த அனைத்தையும் காரில் ஏறியவுடன் சொல்ல ஆரம்பித்து விடுவாள். ஒரு குறையோ குத்தலாகவோ அம்மா சொன்னதாக ஞாபகம் இல்லை. மகிழ்ச்சியாய் பகிர்ந்து கொள்வாள்.

ஒரு முறை ‘ராஜா நாளைக்கு அவங்களுக்கு கல்யாண நாளாம் இருவரும் பேசிக்கிட்டாங்க ஏதாவது பரிசு வாங்கினா அவங்களுக்கு கொடுக்கலாம் இந்தா காசு’ என்று ஒரு ஐம்பது வெள்ளித்தாளைக் கொடுத்தாள்.

‘காசு எதுக்கம்மா நான் வாங்கியாறன்’ என  ராஜாராம் சொன்னபோது ‘ இல்லய்யா என் பணத்துல வாங்கனும்னு நினைக்கிறேன்’ என அம்மாவின் வார்த்தைக்கு பின் ராஜாராம் ஒன்றும் சொல்லவில்லை.

ராஜாராமும் ஒரு அழகான பூக்கூடை ஒன்றை மறுநாள் அம்மாவிடம் கொடுத்து அனுப்பினான்.

மாலையில் காரில் ஏறிய அம்மாவின் முகத்தில் நிறைய சந்தோசம்.எத்தனை கிலோ என சொல்ல முடியாது

‘ராஜா இன்னிக்கு நான் பூக்கூடை கொடுத்தபோது இருவரும் என் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாங்கய்யா எனக்கு ரொம்ப சந்தோசமாய் போச்சி’

ராஜாராமிற்கும் சந்தோசமாய் இருந்தது. இப்படித்தான் அம்மா யாருக்கும் சிரமம் கொடுப்பதை தவிர்ப்பார்.

பள்ளியில் பல  வேலைகளுக்கு இடையில் அம்மாவிற்கு புதிய ஒரு இடத்தைத் தேடும் பணியும் தொடர்ந்தது.

பள்ளியில் கெண்டினுக்கான புதிய டெண்டர் பாரங்களைப் பெற்றவர்களின் பட்டியலில் இப்போது கெண்டீன் நடத்திக் கொண்டிருக்கும் கஸ்தூரியின் பெயர் இல்லை. சரி நேராக கேட்டுவிட்டு வரலாம் என  கெண்டீனுக்கு ராஜாராம் சென்று கேட்டபோது இவ்வருடத்துடன் கெண்டினை விட்டுவிடப்போவதாக கூறினார். ‘இல்லண்ண பிள்ளங்கெல்லாம் வேண்டாம்னு சொல்லுதுங்க நான் என்ன பன்றது’ என்றாள் கஸ்தூரி.

‘அப்ப செண்பகம்’ என  ராஜாராம் அறியாமல் கேட்டபோது

‘அதான் தெரியல அவ  எதாவது வேற வேல தேடாலாம்னு சொல்றா, நான் வீட்டுல சும்ம இருன்னா கேட்க மாட்டறா’ கஸ்தூரியின் பதிலைக் கேட்ட ராஜாராம் ‘என் வீட்டில எங்கம்மாவை பாத்துகிட்டா நான் மாசம் நானூறு வெள்ளி தரன்னு’ சொல்ல வார்த்தை வெளியானது தடுத்து நிறுத்தி, இன்னும் ரெண்டு நாள் கழித்து கேட்கலாம் என் தோன்றியது.

முதலில் அம்மாவிடம் கேட்க வேண்டும் என முடிவெடுத்தார் ராஜாராம்.

அன்று அம்மா காரில் உட்கார்ந்த உடனே விசயத்தை கூறினார். ‘அதுவும் சௌரியம்தான் ராஜா’ என்றார் அம்மா

இரண்டு நாள் ஒத்திகைக்குப் பிறகு, கஸ்தூரியிடம் சென்று ‘அம்மா பாத்துக்கர இடத்துல வேற இடம் பாக்க சொல்லிட்டாங்க, நானும் பல இடங்கள்ள கேட்டேன் இன்னும் சரியா அமையல நம்ம செண்பகம் காலையில எங்க வீட்டுல வந்து பாத்துக்கிட்டா ஒரு நானூறு வெள்ளி இல்ல நானூற்று ஐம்பது கொடுக்கறன். அவ்வளவு என் சக்தியால முடிஞ்சது. நான் வீட்டுக்கு வந்ததும் செண்பகம் புறப்பட்டு வந்துடலாம்’ என்றார் ராஜாராம்.

செண்பகத்தின் பெயர் பேசப்பட்டதும் அவள் அங்கு வந்துவிட்டாள்.

‘ம்ம்ம் வரலாம் என்னால உங்களுக்கு எந்த பிரச்னை வந்துடக்கூடாதுன்னு பாக்கறன் அப்புறம் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் என்னால எந்த சண்டையும் வந்துடக்கூடாது’ என  கிண்டலாக பதில் அளித்தாள்.

‘நல்லதா போச்சிண்ண என்னத்துக்கு வேற வேலையெல்லாம் நீங்க கொடுக்கற பணமே போதும் அதுல அவ ஆசை பட்டதை வாங்கிக்கட்டும்’ என்றாள் கஸ்தூரி.

அம்மாவிடம் முதல் நாளே ராஜாராம் சொல்லிவிட்டான். ராஜாராம் வேலைக்கு கிளம்பும் முன்னனே செண்பகம் வந்திருந்தாள். செண்பகத்திடம் வீட்டைக் காட்டி விட்டு தூங்கிக் கொண்டிருக்கும் அம்மா காட்டிவிட்டுச் சென்றார்.

படுக்கையிலிருந்து எழுந்த ராஜாராமின் அம்மா ‘ நீதான் அந்த செண்பகமா’ என கூறி ஏற இறங்க பார்த்தாள். செண்பகத்திற்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவிற்கு கொஞ்ச காலமாய் காரில் அதிகம் ஒலித்துகொண்டிருக்கும் செண்பகமே பாடல்தான் கேட்டது.

ராஜாராம் பள்ளியிலிருந்து இரண்டு மூன்று முறை வீட்டிற்கு டெலிப்போன் போட்டிருப்பார். செண்பகம்தான் பேசினாள். பிரச்னை எதுவும் இல்லையென்றாள்.

வீட்டின் சமையல் அறையிலும் ஐஸ் பெட்டியிலும் இருந்தவற்றைக் கொண்டு சமையலும் செய்துவிட்டாள்.அடிக்கடி ராஜாராமிற்கு போன் போட்டு கேட்டாள். உணவு வேளையின்போது வீட்டிற்கு வராத ராஜாராம் அன்று வீட்டிற்கு வந்தார். செண்பகம் எவ்வளவு வற்புருத்தியும் ராஜாராம் சாப்பிடவில்லை. இரவு வந்து சாப்பிடுவதாக கூறிச் சென்றுவிட்டார். செண்பகம் கருவாட்டுக்குழம்பு சமைத்திருக்கிறாள் என்ற விசயம் ராஜராமிற்கு தெரியாது

ஒருநாள் வேலை இடத்திலிருந்து போன் செய்த ராஜாராம் தம்முடைய நண்பரின் இறப்பிற்கு செல்வதாகவும் வருவதற்கு நிட்சயம் தாமதமாகும் என்பதால், தாம் வரும்வரை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். கஸ்தூரிக்கும் விசயத்தைக் கூறினார்.

அன்றுதான் செண்பகமும் ராஜாராமின் அம்மாவும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். பல விசயங்களுக்கு இடையில் ‘செண்பகம் நான் ஒன்னு கேக்கிறன், நீ ராஜாராமை கண்ணாலம் கட்டிக்கோ என்னை இவ்வலவு நல்ல பாத்துகிற நீ அவனையும் நல்லா பாத்துக்குவன்னு நம்பிக்கை எனக்கு இருக்கு’ என்று சொல்லியதோடு இல்லாமல் ராஜாராமின் காரில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் செண்பகமே செண்பகமே பாடலின் கதையையும் சொல்லி முடித்தாள்.

செண்பகம் பதில் எதுவும் சொல்லவில்லை. அதை பெரிது படுத்துகொள்வதாக காட்டிக்கொள்ளாமல் மற்ற விசயங்களை பேசினார்கள்.

ராஜாராம் வீடு வந்து சேர்வதற்கு மணி ஒன்பதாகிவிட்டது. வந்ததும் செண்பகத்தை அவள் வீட்டில் விட்டு வர உடனே புறப்பாட்டார். காரை ஸ்டார்ட் செய்ததும் நின்று போயிருந்த பாடல் தொடர்ந்தது

மூணாம்பிறையைப் போல
காணும் நெற்றிப் பொட்டோட
நானும் கலந்திருக்க வேணும்
இந்தப் பாட்டோட
கருத்தது மேகம்
தலை முடி தானோ
இழுத்தது என்ன!
பூவிழி தானோ
எள்ளுக்கும் ராசி பற்றிப்
பேசிப் பேசி தீராது
உன்பாட்டுக்காரன் பாட்டு
உன்ன விட்டுப் போகாது

 

பாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இருவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாடல். ராஜாராம் அம்மா சொன்ன கதை கவிதையாகி இருந்தது. வீடு வந்ததும் செண்பகம் இறங்கி சென்றுவிட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் அம்மா செண்பகத்திடம் சொன்ன அதே கதையை ராஜாராமிடம் சொல்ல ஆரம்பித்து விட்டார்.

‘அவ   ஆளுதான் கொஞ்சம் துடுக்கு; ஆம்பள மாதிரி கொஞ்சம் உறுதியான ஆளு மத்தபடி ரொம்ப நல்லவ’ என்றார்.

 

மறுநாள் கஸ்தூரியிடம் ‘ அம்மாவுக்கு இப்பா அடிக்கடி முடியாம போகுது. என்னால ஒண்டி முடியும்னு நினைக்கல அதன் செண்பகத்தை மனைவியாக்கிடலாம் என  நினைக்கிறேன்’ என  விசயத்தையெல்லாம் சொல்லி அனுமதி கேட்டபோது ‘அண்ண இதில் நான் சொல்வதற்கு ஒன்னுமே இல்லை செண்பகம்தான் முடிவு எடுக்கணும் நான் அவளுக்கு விளக்கி சொல்றன். செண்பகம் மட்டும்  எவ்வளவு நாளைக்கு தனியா இருப்பா நம்பிக்கையோடு இருங்க’ எனக்கூறி அனுப்பி வைத்தாள்

 

அன்றிரவு அஸ்திரேலியாவில் இருக்கும் மகன் தியாகுவிற்கு போன் செய்து சொன்னபோது கொஞ்ச நேரம் அவனிடமிருந்து பதிலே இல்லை.’நானும் அக்காவும் இதபத்தி பேசறும்’ என்று சொல்லி போனை வைத்துவிட்டான்.

 

ஒரு மணி நேரத்திற்கு பிறகு ராஜாராமின் மகள் போன் அழைத்தாள் ‘ அப்பா நான் தியாகுகிட்ட எல்லாத்தையும் சொன்னன் எங்களுக்கு இதில ஒரு வருத்தமும் இல்லப்பா’ என்றாள்.

‘உங்க பாட்டியை  பாத்துக்க என்னால மட்டும் முடியாது அதான் செண்பகத்தை கல்யாணம் பண்ணிகிட்ட கொஞ்சம் ஒத்தாசையா இருப்பா இதுவும் இன்னும் அவ  முடிவு சொல்லல. அப்படி சரியா அமைஞ்ச பதிவு பண்ணிட்டு கோயில தாலிகட்டிட வேண்டியதுதான்; நீங்ககூட வர வேண்டாம் எப்போதும்போல எப்பவாவது வந்தாபோதும் ’ என்றார்.

 

காலையிலேயே கஸ்தூரி எல்லா  விசயத்தையும் செண்பகத்திடம் சொன்னாள். செண்பகம் பதில் ஒன்றும் சொல்லவில்லை. எப்போதும்போல் வீட்டிலிருந்து புறப்பட்டாள்

ராஜாராம் செண்பகதிற்காக காத்திருந்தான். செண்பகம் வரவில்லை. கொஞ்சம் காத்திருந்துவிட்டு கஸ்தூரிக்கு போன் செய்தார். செண்பகம் புறப்பட்டு வந்துவிட்டாள் என்றார். வீட்டிற்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் ராஜாராம் வேலைக்குப் புறப்பாட்டார். பள்ளி சென்றடைந்ததும் போன் வந்தது; ராஜாராமின் அம்மாதான் பேசினார். இன்னும் செண்பகம் வீட்டிற்கு வரவில்லையாம். ஒரு வேளை ராஜாராம் ரொம்ப அவசர பட்டுவிட்டோமோ என்கிற ஒரு ஆதங்கம் மனசுக்குள் எழுந்து கொண்டே இருந்தது. இனி அம்மாவிற்கு புதிய வீட்டை  ஒன்றைத் தேட வேண்டியதுதான்.

ராஜாராம் பலமுறை செண்பகத்துடன்  தொடர்புகொள்ள முயன்றான். ஆனால் முடியவில்லை. காலம் ஓடியது. மகள் அனுஜாகூட பலமுறை போன் செய்து செண்பகத்தினைப் பற்றி தகவல் வந்ததா என விசாரிப்பாள்

ராஜாராமும் பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.

 

செண்பகத்தின் முகம் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து வந்தது. ஆனால் காரில கேக்கிற அந்த செண்பகமே பாட்டு மட்டும் பாடிக்கொண்டே இருந்தது.

ஒரு நாள்  ஞாயிற்றுக்கிழமை ஏதேச்சியாக பத்திரிகை திருப்பும்போது மனித உரிமை கழக  செய்தி ஒன்று இருந்தது. அதில் ஒரு குழுவினர் மகஜர் ஒன்றை  மனித உரிமை கழக  அதிகாரியிடம் கொடுத்த செய்தியாகும். அந்தக்குழுவில் பரிச்சையமான முகம். வேறு யாருமல்ல செண்பகம்தான். கொஞ்சம் வயதாகி இருந்தது.

செய்தியை பார்த்தும் ராஜாராம் திகைத்து நின்றார்.

‘எங்களுக்கும் தனி கழிவறை வேண்டும்; திருநங்கையர்  வேண்டுகோள்’

Series Navigationமருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்‍காக மட்டுமேபுத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *