சாவடி 19-20-21 காட்சிகள்

This entry is part 22 of 22 in the series 28 டிசம்பர் 2014

காட்சி 19

madras-me00

காலம் பகல்   களம் உள்ளே

 

அய்யங்கார் வீடு. ஊஞ்சலை ஒட்டி அய்யங்கார் மனைவி நாயகி நின்றிருக்கிறாள். தரையில் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து முகத்தை தோள் துண்டால் மூடியபடி விசும்புகிறான் அவள் சகோதரன் ரத்னவேலு. ஊஞ்சலில் ஒரு மஞ்சள் துணிப்பையில் இருந்து ரூபாய் நோட்டுக் கட்டுகள் வெளியே சரிந்து இருக்கின்றன. அதில் ஒன்று பிரிந்து, ஊஞ்சலைச் சுற்றி அங்கங்கே பணம்.

 

நாயகி : எதுக்கு அண்ணே அழுவறீங்க? அழுதாலும் தொழுதாலும் ஆட்டக்காரங்க விதி மாறிடுமா?

 

ரத்ன : ராத்திரி பயணம் வச்சிருக்கேன்’மா. போறதுக்கு முந்தி..

 

நாயகி : அண்ணி வரல்லியா, அண்ணே?

 

ரத்ன: அவளும் இப்ப  உன்னியப் பாக்க வரேன்னு ஒரே அடம். எப்பவும் சொல்றதைத் தான் சொன்னேன்.. கௌரவப்பட்டவங்க இருக்கற இடம்.. வேண்டாம்டீன்னு..புரிஞ்சுக்கிட்டா..

 

நாயகி : உங்களுக்கு இல்லாத கௌரவமா அண்ணே?

 

ரத்ன : அதெல்லாம் சபையிலே தங்கச்சி. காலப் பிரமாணம் தப்பாம  தகிட தாம் ததி கிட தாம் திமி தகிட தக தகிட ஜுன தகிட தகட கிட தகிட தக அப்படின்னு தனி வாசிச்சுக் கிட்டே போய் தீர்மானம் கொடுத்து நிறுத்தினா வாய்ப்பாட்டு வித்துவான் அந்தக்குடி இந்தக்குடி ஆத்தாகுடி அம்மாகுடின்னு ஒரு அய்யர்சாமி சபாஷ்ம்பாரு. சபையிலே நூறு ஐயருங்க ஆஹான்னு கை தட்டிட்டு ஒண்ணுக்கு போக ஓடுவாங்க.. ஆனா நான் அவங்க ஊஞ்சல் போட்டு வீசி ஆடிக்கிட்டிருக்கற நடு வீட்டுக்குள்ளே நுழைஞ்சா? கமகம் உதிர்க்கிற வித்துவானும் சரமாரியா திட்டு உதுத்துட்டு தீட்டுன்னு தரையை கழுவி விடுவாரு.. மேளக்காரப் பயலே வெளியே போடான்னு  ஓட்டுவாரு..போவுது.. பணத்தை பத்திரமா வ்ய்யி தாயி.. மூவாயிரமும் கொசுறும் இருக்கு.. நாயக்கர் போட்டுக் கொடுத்த துட்டு..

 

நாயகி : எதுக்கு அண்ணே இது? கேட்டேனா?

 

ரத்ன : நீ கேக்காட்டாலும் என் கடமை.. நீ சம்பாதிச்சது, அம்மா, பாட்டி சம்பாதிச்சது.. நான் தூக்கிட்டுப் போக முடியாது.. அம்மாவை விட்டுட்டுப் போற துன்பமே போதும்.. காசை வேறே முழுக்க முழுங்கி..பத்திரமா எடுத்து வய்யிம்மா.. எங்க மாப்பிள்ளை அய்யங்கார் சாமி கிட்டே மறக்காம சொல்லு

 

நாயகி: அவரு காசு பணமெல்லாம் வாங்கக் கூடாதுன்னு கண்டிப்பா இருக்கறவர்.. வேணாம் அண்ணே.. இதை எடுத்துப் போயிடுங்க.. நான் வச்சுக்கிட்டா பிரச்சனை தான் வரும்..

 

ரத்ன: ஒரு பிரச்சனையும் வராது.. வாங்கிக்கம்மா.. சொன்னாக் கேளு.. அண்ணன் உனக்கு நல்லது தான் செய்யறேன்.. அய்யங்கார் சாமி புரிஞ்சுப்பார்..

 

(நாயகி வாங்கிக் கொள்கிறாள்)

 

நாயகி : அம்மா என்ன செய்யுது அண்ணே?

 

ரத்ன : நான் வரும் போது தூங்கிட்டு இருந்துச்சு..

 

நாயகி : நீங்க சாயந்திரம் கிளம்பும்போது முழிச்சுக்குமே

 

ரத்ன : (சுவரில் முட்டி அழுதபடி) பாவி நான்.. என்ன செய்ய? ராத்திரி ஆயிடுச்சுன்னு சாயந்திரம் அஞ்சு மணிக்கே சோறு கொடுத்துட்டு .. பக்கவாதத்துக்கு மருந்துச் சாப்பாடுன்னு முடக்கத்தான் கீரையும் ஆக்கி வச்சிருக்கு.. அதிலே

 

நாயகி : அதிலே?

 

ரத்ன : அபின் கலந்து ஊட்டி விட்டுட்டுப் போறேன்.. ராத்திரி முழுக்க எளுந்திருக்காது.. விடிகாலையிலே (விசும்புகிறான்).

 

நாயகி : அழாதீங்க அண்ணே..காலையிலே நல்லது நடக்கும்..அம்மா கூட நடக்கலாம். போய்ட்டு வாங்க… வேறே ஏதாவது சன்மத்துலே சந்திப்போம்..அப்போ பணம், தூக்குச் சட்டியிலே கருவாட்டு குழம்பு எல்லாம் வேணாம் . அண்ணியோட வாங்க, போதும்..

 

ரத்னவேலு விசும்பியபடி போகிறான்.

 

 

காட்சி 20

 

காலம் : பகல்  களம் : உள்ளே

 

சேட்: பனாரஸி பத்தா போடுறீங்களா போலீஸ்ஜி?

 

அய்யங்கார்: அது என்ன பூவரச எலையை சேர்மானம் சேர்த்து முழுங்கறதா?

 

நாயுடு: ஆடுதொடா இலை.. சும்மா இருக்கீறா?.

 

சேட்: ரெண்டு நாளைக்கு ஒரு வாட்டி ரெயில்லே பனாரஸ்லே இருந்தே வெத்தலை வரவலக்கறேன்.. எங்க பிதாஜி இலுத்துப் பறிச்சுட்டு கிடக்கார்.. அதான் போடுவார்

 

அய்யங்கார்: அதுக்கு பனாரஸ்லே இருந்து கங்காஜலமாவது வருவிச்சிருக்கலாம்.. போற இடத்துக்குப் புண்ணியம்.. வெத்தலை போட்ட வாயோடவா.. சரி விடுங்கோ சேட்டரே

 

நாயுடு: சேட்ஜி, எனக்கு அவசரமா ஒரு தகவல் தெரிஞ்சாக வேண்டியிருக்கு. ஒரு தில்லுலே இங்கே அடகுக் கடையிலே படி ஏறிட்டேன்

 

சேட்: அடகு மட்டுமில்லே விக்கறதும் வாங்கறதும் செய்யறது தான்

 

அய்யங்கார் கொஞ்சம் அதிர்ந்து, ஏதோ சொல்ல நினைக்க, நாயுடு கையமர்த்துகிறார்.

 

நாயுடு: இந்தா வக்கீலே பனாரசி குத்தா

 

சேட்: (பெரிதாகச் சிரித்து) குத்தான்னா நாய் போலீஸ்ஜி

 

நாயுடு: அதுவுமப்படியா? நல்லது.. ஆமா, எப்படி நீங்க நிம்பள், நம்பள் இல்லாம நல்ல தமிழா பேசறீங்க? இந்தூர் சேட்டா?

 

சேட்: இந்தூர் இல்லே ஷஹரன்பூர். ஆனா முப்பது வருடம் முந்தி வந்ததும் பாஷையைத் தான் கத்துக்கிட்டேன்.. தொழில் செய்ய மனுஷாளோட பேசணும்.. அவங்க பேசற மாதிரி பேசணும்..கத்துக்கிட்ட பாடம் அதான்

 

நாயுடு: சுபோஜெயம்.. ஆமா, சேட்டு, நீங்க தான் அந்த எதிர்சாரி சத்திரத்துக்கு உடமைஸ்தரா?

 

சேட்: அது மட்டும் எங்கையிலே இருந்தா இன்னேரம் இடிச்சுட்டு நாலடுக்கு கட்டடம் கட்டி நானே குடி வந்திருப்பேனே.. சவுகார்பேட்டை மூத்திரச் சந்திலே ஒண்டிக்கிட்டு உக்காந்திருக்க வேணாம்

 

அய்யங்கார்: சவுகார்பேட்டை உள்ளே போனதில்லே.. அங்கேயும் மூத்திரச் சந்து உண்டா?

 

சேட்: உண்டு ஆனா இந்தி பேசற மூத்தரம்

 

நாயுடு: மூத்தர விவகாரம் இருக்கட்டும்.. சேட்ஜி, சத்திரத்துலே நீங்க பாத்யதை கொண்டாடலியா? ரிஜிஸ்தர் ஆபீஸ் குமாஸ்தா தப்பா கை காட்டிட்டானா?

 

சேட்: பாத்தியதைன்னா அனுபவ பாத்யதை. இது டிரஸ்ட் சொத்து.. கோவில் முத்தங்கி செய்ய பணம் கம்மியாச்சுன்னு எங்கிட்டே வந்தாங்க பெரிசுங்க.. பத்ததாயிரம் அச்சாரம் கொடுத்தேன்.. பதிலுக்கு உள்ளே கூடம் வரைக்கும் சரக்கு அடைச்சு வைக்க அனுமதி கிடைச்சது.. ரெண்டு டிரஸ்டி கேசு போட்டு.. இழுத்துக்கிட்டு போவுது.. வாசல் கம்ராவை மட்டுமாவது கொடுங்கன்னு கேட்டேன்.. இண்டரீமா கெடச்சிருக்கு…

 

நாயுடு: நகை நட்டெல்லாம் அந்தப் பிசாசு வூட்டிலா வச்சுப் பூட்டுவீங்க?

 

சேட்: சூரஜ்மால் சேட்டுக்கு இது ஒண்ணுதானா பிசினஸ்.. சூரத்திலே இருந்து நயம் மல்துணி, பம்பாய் சில்க், பனாரஸ் பட்டு.. நைனியப்ப நாயக்கன் தெருவிலே ஜவுளிக்கடை நம்முதுதானே.. சீட்டித் துணி அடுக்கி வச்சிருக்கேன்.. ஏதோ பிரயோஜனம் ஆனா சரிதான்..

 

நாயுடு: அட அமர்க்களப் படுத்தறீங்களே.. ஆமா, கட்டிடத்துக்கு வேறே யாரும் அனுபோக பாத்யதை உண்டுங்களா?

 

சேட்: ஒரு பிள்ளைக்கும் கிடையாது.. கட்டிடம் இடிச்சுக் கட்டலாம்னா டிரஸ்ட் டீட்லே ஷரத்து இல்லே .. ஒரு நாள் இல்லாட்ட ஒரு நாள் உத்தரக்கட்டை இடிஞ்சு விழப் போவுது.. அதுக்கு முந்தி நான் சீட்டித்  துணியை மாத்தியாகணும்..

 

கண்ணாடிப் பெட்டியில் வைத்திருக்கும் நகைகளைப் பார்த்த நாயுடு, அய்யங்காரிடம்

 

நாயுடு:  பார்த்தீரா? அதான் தண்டட்டி.. தெக்குப் பக்கம் காதிலேயோ மூக்கிலேயோ மாட்டுவாங்க (சேட்டிடம்) தண்டட்டி கூட விக்கறீங்களா? பட்டணத்துலே அதெல்லாமா போட்டுக்கறாங்க.

 

சேட்: (கொஞ்சம் மிரண்டு சமாளித்து சின்னச் சிரிப்போடு) இதுக்கு பேரு என்ன டண்டண்டியா? நீங்க சொல்லித்தான் தெரியும்.. யாரோ அடகு பிடிச்சுட்டு திருப்பாம போனது.. அதான் விக்கறதுக்கு எடுத்து வச்சிருக்கேன்.. வேணுங்களா? நல்ல ரேட்டா பேசிக்கலாம்..

 

நாயுடு: அதை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்.. அய்யங்கார் காதிலே தான் கடுக்கனைக் கழட்டிட்டு மாட்டி அழகு பார்க்கணும்

 

அய்யங்கார்: இதையெல்லாம் காதுலே போட்டா காது தனியா அறுந்து விழுந்துடும்.. கோர்ட்டுக்கு எப்படிப் போறது?

 

நாயுடு: அதான் தலைப்பா கட்டிடுவீரே.. நல்லது கெட்டது எதுவும் காதிலே விழாம..

 

அய்யங்கார்: (தண்டட்டியையே பார்த்தபடி) இதை எங்கேயோ பார்த்த மாதிரி ஞாபகம்.. சட்டுனு நினைவு வர மாட்டேங்குது

 

நாயுடு: வெண்டிக்கா சாப்பிடும்.. ஞாபக சக்தி வளருமாம்.. கிளம்பலாமா?

 

அய்யங்கார்: (சேட்டிடம்) ஆமா பக்கத்துலே சின்னதா ஒரு வீடு.. அதுவும் அடச்சுப் பூட்டி .. நம்மளது தானா?

 

சேட்: சல்லிசா வந்தது.. வாங்கிப் போட்டேன்.. அட அத்தையாவது மாத்திக் கட்டலாம்னா, சத்தரத்துக்கும் இதுக்கும் மேற்குச் சுவர் பொதுவாம்.. டிரஸ்ட் டீட் பிரகாரம் எதையும் இடிக்க, மாத்திக் கட்ட அனுமதிக்கற ஷரத்து இல்லே..ஏண்டா வாங்கினோம்னு ஆயிடுச்சு.. அப்பப்ப பகல்லே படுத்து சிரம பரிகாரம் செஞ்சுக்க, எங்க ஜைன சாமி வந்துச்சுன்னா தங்க வைக்க அங்கே தான் ஜாகை

 

அய்யங்கார்: ஜைன குருவா? எப்படி இருப்பார்?

 

சேட்: திகம்பரர்

 

நாயுடு: அப்படீன்னா?

 

சேட்: நாலு திசையை உடுப்பா இடுப்பிலே உடுத்தினவர்..

 

நாயுடு: ஓ.. மொட்டக்கு..திகம்பர சாமியாரா.. மங்களம் உண்டாகட்டும்..வரட்டா சேட்டு.. இன்னும் ஒரு எலை இருந்தா கொடுங்க.. போற வழியிலெ மென்னுக்கிட்டு போறேன்..ஆமா, இதுலே வேறே சேர்மானம் சேர்க்கறது உண்டா?

 

சேட்: நான் செய்யறது இல்லே.. ஊர்லே புகையிலை வச்சு லகரி ஏத்திக்கறதும் உண்டுதான்.. திகம்பர சாமியாருக்கு சேவகம் பண்ணிட்டு லகரியோட நிக்க மனசு கேக்கலே

 

அய்யங்கார்: பொம்மனாட்டி சன்னியாசிகளும் வருவாளோ இங்கே?

 

நாயுடு: ஓய் வக்கீலு ரண்டி போத்தாமூ (ஓய் வக்கீலே போகலாம் வாரும்)..  கோர்ட் தொறந்தே வச்சிருந்திருக்கலாம்..

 

காட்சி 21

 

காலம்: பிற்பகல்  களம்: வெளியே

 

நாயுடு தெருமுனை வரை அய்யங்கார் தோளில் கை போட்டபடி ‘கோடையிலே இளைப்பாறி’ பாட்டை உண்டு இல்லை என்று பண்ணிக்கொண்டு வருகிறார். அய்யங்கார் தப்பித்து போவதாக பாவனை காட்ட கையை இறுக்கப் பற்றி தெருவோர சந்துக்குள் நுழைகிறார்.

 

சட்டென்று அவர் முகபாவம் மாறுகிறது.

 

நாயுடு: ஓய் வக்கீலு, அக்கட சூடண்ட (ஓய் வக்கீல்.. அங்கே பாரும்)

 

அய்யங்கார்: பொம்பளை சன்னியாசியா

 

நாயுடு: நாசமாப் போச்சு.. சத்திரத்தோட பின்னங்கதவு அது.. பிரம்மாண்டமா பூட்டி வச்சது.. பக்கத்திலே சேட்டோட சின்ன வீட்டுக் கதவு.. தொறந்தபடிக்கு இல்லே..

 

அய்யங்கார்: அது திறந்து கிடந்தா நமக்கு என்ன சாத்தியிருந்தாத் தான் என்ன?

 

நாயுடு: யோவ் ஆளே இல்லாத வீட்டை இப்படி பின்னங்கதவை மட்ட மல்லாக்க தொறந்து போட்டுட்டா இருப்பான்

 

அய்யங்கார்: எவாகுவேஷன் நேரம்’பா. எவனாவது உள்ளே காசு பணம் தேறுமான்னு பாக்க வந்திருப்பான்.. என்ன கிடைச்சதோ.. வண்டி வச்சு ஏத்திண்டு போயிருக்கான்..

 

நாயுடு: வண்டியா? எப்படிச் சொல்றீர்?

 

அய்யங்கார் மண்ணுலே பாரும்.. இது மாடு படுத்த எடம்.. இது நொகத்தடி அழுத்தின எடம்.. இது வண்டி ரோதை..சக்கரம் போகுது பாரு..

 

நாயுடு குனிந்து உட்கார்ந்து பார்க்கிறார்

 

பக்கத்தில் வீட்டு வாசலில் சுருட்டு பற்ற வைத்தபடி நின்றிருந்த பெரியவர் சத்தமிடுகிறார்

 

பெரியவர்: யோவ் ஆருய்யா அது.. ஒண்ணுக்கிருக்க வேறே எடமே கெடக்கலியா?

 

நாயுடு: (நிமிர்ந்து நின்று) சாமி சத்தியமா நான் குத்தவைக்கலே பெரிசு.. வேணும்னா வந்து பாத்துக்க

 

பெரியவர்: ஆமா அதை  மோந்து வேறே பார்க்கணுமாக்கும்..

 

நாயுடு: சொன்னாக் கேக்கணும்.. ரிடையர்ட் ஆர்மிக்காரன் அதெல்லாம் செய்ய மாட்டான்யா .. தொட்டு வேணா பாரு..

 

பெரியவர்: கிரகசாரம்.. அது வேறேயா.. ஆர்மி ஐயர் சொன்னீங்கன்னா அப்பீலே இல்லே

 

நாயுடு: உம்ம காலடியிலே குப்பையைப் போட்டு பொசுக்க.. என்னைப் பாத்தா ஆர்மிக்காரன் மாதிரி தெர்லியா?

 

பெரியவர்: வெள்ளெழுத்து..

 

நாயுடு: (பெரியவரை நெருங்கி வந்து, நைச்சியமான குரலில்) ஏன் பெரிசு, வீட்டுப் பொழக்கடக் கதவை இப்படியா தொறந்து போட்டுட்டு போவாங்க? நீராவது வீட்டுக்காரரை பார்த்தா சொல்ல மாட்டீங்களா? திருட்டுப் பசங்க அலையற ஊரு.. எம்டன் வேறே வேலையக் காட்டியிருக்கான்.. அட எதுத்த வீட்டைச் சொல்றேன்யா

 

பெரியவர்: சேட்டு கிட்டே எல்லாம் நான் பேச முடியாதுப்பா.. கேக்க ரெண்டு துட்டு, பேச நாலு துட்டு கேட்பான் அவன்..

 

நாயுடு: துட்டு கொடுத்தா கதவைத் தொறந்துடுவானா?

 

பெரியவர்: (சுருட்டைக் காதில் வைத்தபடி) குழந்தைப் பிள்ளையாட்டம் கேக்கறே பாரு ஆர்மி.. காசு கொடுக்காமலா ராத்திரியிலே எவனெல்லாமோ வரான்.. போறான்.. பொம்பளை வேறே கூட.. வண்டி.. மாடு.. நம்மூட்டு வாசல்லே தான் சாணி எல்லாம்

 

நாயுடு: (பரபரப்பாக) நீரு தூக்கத்திலே கனாக்கினா கண்டிருப்பீர்

 

பெரியவர்: எங்கே தூங்கறதாம்? வண்டி இரைச்சல்.. மூட்டைப் பூச்சி, கொசுத் தொல்லை,  உம்ம காதுலே ரெண்டு கொசு விருந்து சாப்பிடுது

 

நாயுடு அவசரமாகத் தட்டி விடுகிறார்.

 

நாயுடு: சரி நீர் தூங்கலே.. பண்டி எப்புடு ஒச்சிந்தி? எப்புடு பைதாரிந்தி? (எப்ப வண்டி வந்துச்சு? எப்ப கிளம்பிச்சு?)

 

பெரியவர்: அது ஆச்சு ராத்திரி எட்டு மணி  மணிக்கூண்டுலே அடிச்சது பாரு அப்பத்தான் வந்துச்சு… கால் அவர்லே கிளம்பிடுச்சு…. இப்ப என்ன டயம் ஆவுது?

 

அய்யங்கார்: (வாட்சைப் பார்த்து)  ஓடலியே இது .. பகல் பத்து மணியாவது இருக்கும்

 

நாயுடு: எங்கே போச்சு வண்டி? ஏதாச்சும் தகவல் தெரியுமா?

 

பெரியவர் கோவிலுக்கு பிரார்த்தனையாம்.. திருப்பதி போறவங்கன்னு வண்டிக்காரன் சொன்னான்..

 

அய்யங்கார் : வேறே எதுவும் சொன்னானா?

 

பெரியவர்: சுருட்டுக்கு நெருப்பு வேணும்னு கேட்டான்.

 

நாயுடு வக்கீல் விரசா வாருமய்யா.. வேலை ஏகமாக் கிடக்கு..

 

அய்யங்கார் கையைப் பிடித்து இழுத்தபடி அவசரமாகக் கிளம்புகிறார் நாயுடு. பெரியவர் சாவகாசமாகக் காதில் இருந்து சுருட்டை எடுத்து வாயில் வைத்து இன்னொரு முறை பற்ற வைக்கிறார். பற்றவில்லை. வக்காளி சுருட்டு என்று அலுத்துக் கொண்டு காதில் வைத்தபடி உள்ளே போகிறார்.

 

அந்தச் சின்னச் சந்து ஆள் அரவமில்லாமல் இருக்கிறது,ஒரு சைக்கிள் மெல்ல வருகிறது. சைக்கிளில் வந்தவர் வீடு வீடாகப் பார்த்தபடி வருகிறார். நாயுடுவையும் அய்யங்காரையும் பார்த்து வண்டியை நிறுத்துகிறார்.

 

வந்தவர் நீங்க இந்த தெருவா சார்

 

நாயுடு ஆமா, அதுக்கென்ன இப்போ

 

வந்தவர் பார்த்த ஞாபகம் இல்லியே

 

நாயுடு உங்களைப் பாத்திருக்கேனே

 

வந்தவர் என்னையா? எங்கே

 

நாயுடு கவர்மெண்ட் ஆசுபத்திரி டாக்டர் இல்லே.. நாலு மாசம் முந்தி ஆஸ்துமா அதிகமாகி என் சம்சாரத்தை கூட்டியாந்தேனே ஞாபகம் இருக்கா?

 

அய்யங்கார் : டாக்டருக்கும் வக்கீலுக்கும் கிளெயிண்ட் எல்லாரையும் ஞாபகம் வருமா என்ன?

 

நாயுடு சந்தடி சாக்குலே வக்கீலையும் சேர்த்துக்கிட்டீரே?

 

வந்தவர் (டாக்டர்): நீங்க.. ஆமா ஞாபகம் வருது… கார்ப்பரேஷன் ஓவர்சீயர் இல்லே

 

அய்யங்கார் ஏதோ சொல்ல வர, நாயுடு அவர் கையை அழுத்தி சும்மா இருக்கச் சொல்கிறார்.

 

நாயுடு: அய்யா அதப்பிடியே இருக்கட்டும்.. நீங்க இங்கே ..பரபரன்னு இருக்கப்பட்டவராச்சே சார் நீங்க.. காலையிலே ஆஸ்பத்திரி.. மதியத்துலே மெடிக்கல் காலேசுலே பிள்ளைங்களுக்கு சொல்லித் தர்றது…

 

டாக்டர் : ஆமாமா.. இன்னிக்கு காலேஜ் லீவு… குண்டு போட்டதாலே யுனிவர்சிட்டியே ஒரு வாரத்துக்கு அடைச்சாச்சு

 

நாயுடு: உங்க வீட்டு தோட்டத்திலே ஒரு குச்சு இருந்தா சொல்லுங்க. வந்து ஒண்டிக்கறேன்.. எம்டன் வந்தா நீங்க காப்பாத்திடுவீங்க

 

டாக்டர்: நீங்க ஒண்ணு.. நானே எவாகுவேட் பண்ணலாம்னு இருக்கேன்

 

அய்யங்கார்: இந்தத் தெருவிலே வீடு பார்க்கலாம்னு தோணிணதா? ப்ளேன் பறந்தா கூட கண்டு பிடிக்க முடியாத எடம்.. சரியான பங்கர் தான்..

 

டாக்டர்: இல்லே இல்லே ஒரு பேஷண்டை தேடி வந்தேன்

 

நாயுடு: என்ன ஆச்சு? மருந்து கிருந்து மாத்திக் கொடுடத்திட்டாரா உங்க கம்பவுண்டர்?

 

டாக்டர்: அதெல்லாம் இல்லே.. மெடிக்கல் காலேஜ்லே அந்தாள் ஸ்டாப் வேறே.. லீவா இல்லே என்னமாவது சேதாரமான்னு ..

 

நாயுடு அந்த கிளார்க்கு பேர் என்ன

 

டாக்டர்: மருதையா

 

நாயுடு: அட்ல எவுருமே இக்கட லேதே? (அப்படி யாருமே இங்கே இல்லியே) ..(சுருட்டோடு பெரியவர் திரும்ப வெளியே வர) யோவ் பெரிசு.. மருதையன் யாருய்யா?

 

பெரிசு: (சுருட்டைக் கடித்தபடி)  அடையாளம் சொல்லுப்பா

 

டாக்டர்: ஆறு ஆறு விரல் கையிலே..

 

நாயுடு: என்னது?

 

டாக்டர்: இதிலென்ன ஆச்சரியப்படறதுக்கு இருக்கு? பகவான் படைப்பிலே சில பேருக்கு கையே இல்லே.. அதை விடவா?

 

அய்யங்கார்: அதானே ..

 

நாயுடு : என்ன அதானே.. ஆறு கை யாருக்கும் இல்லியே.. அதை என்ன சொல்றீர்?

 

டாக்டர்: (சைக்கிளில் ஏறத்தயாராக, நாயுடுவைப் பார்த்து) ஆஸ்துமா இப்ப எப்படி இருக்கு உங்க வீட்டம்மாவுக்கு?

 

நாயுடு: அதுக்கென்ன அமோகமா இருக்கு.. சுவாசம் அடச்சு நீளம்மா பேச முடியாமப் போவுதா.. வீட்டுலே சண்டை சச்சரவு கம்மி.. அப்படியே விட்டுட்டேன்

 

டாக்டர்: you are a funny guy

(அவர் சைக்கிள் நகர)

 

நாயுடு (அய்யங்காரிடம்) என்ன எளவுக்கு பன்னின்னு திட்டறாரோ? போவட்டும்..  வக்கீல் ஒரு வேலை செய்யும்

 

அய்யங்கார்: அவரை வழி மறிச்சு நானும் பன்னி பெலோன்னு சொல்லட்டுமா?

 

நாயுடு: அதெல்லாம் வேணாம்.. நீர் சும்மா இந்தத் தெருவிலே யாரையோ தேடற மாதிரி நடை பழகும்.. நான் இதோ வந்துடறேன்.. எனக்கு ஒரு சந்தேகம்.. சத்திரத்துக்கும் பக்கத்து சம்சாரி வீட்டுக்கும் ஏதோ கசமுச அதான்யா வெவகார சமாசாரம் இருக்கு போல.

 

ஐயங்கார்:  .. கார்பாலிக் சோப்பு போட்டு வாயைக் கழுவும்.. ரிடையர் ஆகிற நேரத்துலே உம்ம புத்தி போறதே.. கிரகசாரம்..

 

நாயுடு: கிரகத்துக்கு என்ன எளவுக்கு ஆசாரம்? நீர் இரும்.. நான் உள்ளே போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்

 

நாயுடு திறந்து கிடந்த சேட் வீட்டுக் கொல்லைப் புறமாக உள்ளே நுழைகிறார்.

 

தெருவில் இருவர் பேசியபடி போகிறார்கள்

 

தெருவில் போகிறவன் 1 : கும்மோணம் தனலட்சுமி சதிர்க்கச்சேரின்னானுவ.. மூஞ்சிலே தான் லெச்சுமியைக் காணோம்னா (மிகையாகக் குனிந்து பார்த்து) தனத்தையும் இல்லே காணோம்..

 

தெருவில் போகிறவன் 2 : இம்மாம் தூரம் கும்மோணத்திலே இருந்து எம்டனுக்கும் பயப்படாம கிளம்பினவ, அக்கம் பக்கத்துலே கடன் வாங்கியாவது மாட்டிக்கினு வந்திருக்கலாமில்லே?

 

நாயுடு (வந்தபடி) கசமுச தான் அய்யரே..

Series Navigationஇலக்கிய வட்ட உரைகள்: 7 – மதிப்புரைகளும் கு.ப.ரா குறித்த மதிப்புரைகளும்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *