ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20

This entry is part 12 of 33 in the series 4 ஜனவரி 2015

 

வையவன்

 

காட்சி-20

 

இடம்: ஆனந்தபவன்

 

நேரம்: மூன்று நாள் கழித்து, ஒரு முற்பகல் வேளை.

 

உறுப்பினர்: சுப்பண்ணா, சாரங்கன், உமாசங்கர், மாதவன், ராமையா.

 

(சூழ்நிலை: சுப்பண்ணா வடை போட்டுக் கொண்டிருக்கிறார். பக்கத்தில் ராமையா நின்று கொண்டிருக்கிறார்)

 

 

சுப்பண்ணா: கெழக்கு மேக்கே போனா, மேக்கு கெழக்கே வர்றது. எல்லாமே சக்கரம்தான். சுத்திண்டிருக்கிற சக்கரம்.

 

ராமையா: ஏண்ணா எத்தனை லிட்டர் அரிசி போடட்டும்?

 

சுப்பண்ணா: என்னையே வந்து கேளும். பத்து வருஷமா வடிச்சுக் கொட்டிண்டு தானே இருக்கீர்! எத்தனை லிட்டர் போடணும்ணு ஒமக்குத் தெரியாதா?

 

ராமையா: என்னண்ணா தெரியாமத்தானே கேட்டேன்! அதுக்கு இப்படி சொர சொரண்ணு பொரியறேளே.

 

சுப்பண்ணா: பின்னே ஒர்த்தன் விடாமே என்னையே வந்து நோண்டினா, நேக்கு எரிச்சலா வராதோ? நானே சாயங்காலம் கொத்ஸு போடலாமா சாஹு போடலாமாண்ணு முழிச்சிண்டிருக்கேன். இந்த சாரங்கன் ஓடி வந்து மெனுபோர்டை மாதவன் எழுதினானாம். கன்னா பின்னாண்ணு ஒரே தப்புங்கறான், லேடீஸ் ரூம் சர்விங்குக்கு மணி நாயாப் பறக்கறான்னு உமா சங்கர் ஒரு பெட்டிஷன் குடுபுக்கிறான். வெங்காயம் வெலை ஏறிடுத்து. திருமாங்குடிலே சீப்பா இருக்கு போய்ட்டு வந்துடுவமாண்ணு, ஸ்டோர் ஐயாக்கண்ணு என்னை யோசனை கேக்கறான்… இத்தினி நாள் அக்கடாண்ணு இருந்தேன். இந்த ரங்கண்ணா மூணு நாள் ஹோட்டலுக்கு வரல்லே… ஹோட்டல்லே கெடந்து திமிலோகப் படறது!

 

சாரங்கன்: வேற யாரைப் போய்க் கேப்போம்?

 

சுப்பண்ணா: அடேய்… அடேய்… நான் சுப்பண்ணா தாண்டா… ரங்கண்ணா இல்லே.

 

சாரங்கன்: ரங்கண்ணா இல்லேன்னா ஹோட்டல் நடந்தாகணுமே மாமா.

 

சுப்பண்ணா: (ஆழ்ந்த பெருமூச்செறிகிறார்) நடக்கும் நடக்கும்… அது பாட்டுக்கு நடந்துண்டு போகும். யார் இல்லேன்னா எது நின்னுடப் போறது! அததுக்கு நியமிக்கப்பட்டவா வருவா! நடத்திண்டு போவா.

 

மாதவன்: அது நீங்க இல்லியா?

 

சுப்பண்ணா: நான் இல்லேடா! நான் வெறும் சரக்கு மாஸ்டர். ரங்கண்ணா மாதிரி ஆல் ரவுண்டர் இல்லே. இந்த ஹோட்டலோட சாரதி இல்லே. வெறும்ன ஒரு குதிரைதான்! நேக்கே கூட ரங்கண்ணா பார்வை, ரங்கண்ணா வார்த்தை தேவைப்படறது. அது ஒரு லகான் மாதிரி, ஒரு சவுக்கு மாதிரி, ஒரு ஷொட்டு மாதிரி.

 

ராமையா: ரங்கண்ணா இனிமே ஹோட்டலுக்கே வரமாட்டாராண்ணா?

 

சுப்பண்ணா: நீ அவரை வீட்டுக்குப் போய்ப் பாத்தியோ?

 

ராமையா: பாத்தேன்.

 

சுப்பண்ணா: எப்படியிருக்கார்?

 

ராமையா: என்னமோ பிரம்மஹத்தி பிடிச்சவராட்டம், ஈஸிசேரிலே படுத்துண்டிருக்கார்! நான் போனதும் வா ராமையா உட்காருன்னார். அந்த வெள்ளைக்காரப் பொண்ணு பொடவையும் ஜாக்கெட்டுமா ஒரு டம்ளர்ல ஜலம் கொண்டு வந்தது. என்ன பேசறது? என்ன சமாதானம் சொல்றது? என்ன ஆறுதல் சொல்ல நம்மால முடியும்? அதுவும் ரங்கண்ணாவுக்கு! அசடாட்டம் முழிச்சுண்டு உட்கார்ந்திருந்தேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு எப்பண்ணா ஹோட்டலுக்கு வரப் போறேள்னு கேட்டேன். மெதுவா நிமிர்ந்து, ஒரு பார்வை பார்த்தார்! சாந்தமான பார்வை தான். நிரபராதி ஒருத்தன் பார்க்கறாப்ல ஒரு பார்வை. அது அப்டியே என்னைக் கொன்னுடுத்து! பேசாம தலை குனிஞ்சுண்டேன் அஞ்சு நிமிஷம் கழிச்சு எழுந்துண்டேன். வர்றேண்ணான்னேன். சரின்னார்.

 

சாரங்கன்: கேக்கவே சங்கடமாருக்கு!

 

உமாசங்கர்: ரெண்டு மசாலேய்ய்ய்!

 

சாரங்கன்: இருடா முக்கியமான விஷயம் பேசிண்டிருக்கோம்!

 

உமாசங்கர்: ஓய்… ரங்கையர் இல்லாமே ஒமக்கு ஒடம்பு துளுர்த்துப் போச்சு. வாடா போடாங்கறீர்!

 

சாரங்கன்: அப்படியா! தப்பு, தப்பு. கொஞ்சம் இருங்கோ உமாசங்கர்ஜி!

 

உமாசங்கர்: இந்த நக்கல் தானே வாணாங்கறது!

 

சாரங்கன்: பின்னே மரியாதை கேட்டியோன்னா!

 

உமாசங்கர்: அந்த அவமரியாதையே தேவலாம்!

 

சுப்பண்ணா: அப்பா உமாசங்கர், இம்சிக்காதே! நாங்க மூணு நாளா, ரங்கண்ணா ஹோட்டலுக்கு வராம, என்னமோ சூன்யம் விழுந்துட்டதைப் பத்தி பேசிண்டிருக்கோம்.

 

உமாசங்கர்: அண்ணா, இன்னமே வரமாட்டாரா மாமா?

 

சாரங்கன்: ஆசை தீர முந்திரிப் பருப்பை வறுத்து ஜமாய்க்கலாம்னு கேக்றியோ…

 

உமாசங்கர்: ஒம்ம புத்தி ஒம்ம விட்டு எங்கே போப் போறது? அண்ணா இல்லாமே ஹோட்டல் பேஸ்து அடிச்சுப் போயிருக்றது. அவனவன் டேபிள்ளே, டில்லி எருமையாட்டம் அசமஞ்சமா நடந்துண்டு போறான்.

 

மாதவன்: பெரியண்ணா போய் ரங்கண்ணாவைப் பார்த்தாரோ?

 

சுப்பண்ணா: மொத நாள் பார்த்தப்போ, ஹோண்ணு மார் வெடிக்கறாப்ல ரங்கண்ணா அவரைக் கட்டிப் புடிச்சு, தேம்பித் தேம்பிச் சின்னக் கொழந்தை யாட்டமா அழுதிருக்கார்.

 

மாதவன்: பெரியண்ணாவுக்கு வேற என்ன பண்ண முடியும்?

 

சுப்பண்ணா: யார்தான் என்ன பண்ண முடியும்? ஒரு பக்கம் இடின்னா மனுஷன் எவனும் தாங்கிப்பான்! ரெண்டு பக்கமும் இடின்னா தாங்கிண்டு நிற்க முடியுமோ? ரங்கண்ணாவா இருக்கறதாலே, ஏதோ சமாளிச்சுண்டு நிற்கறார்.

 

உமாசங்கர்: (மசால் தோசைகளை எடுத்துத் தட்டில் போட்டு நகர்கிறபோது) பார்ப்போம், பகவான் ஏதாவது வழி பண்ணுவான்.

 

சுப்பண்ணா: என்னடாது, திடீர்னு உமாசங்கருக்குப் பக்தி முத்திடுத்து!

 

(தூரத்தில்) உமாசங்கர் குரல்: சுப்பண்ணா…சுப்பண்ணா ஓடி வாங்கோ… பெரியண்ணா கல்லாவிலிருந்தே விழுந்துட்டார்… ஓடி வாங்கோ!

 

 

(திரை)

 

[தொடரும்]

Series Navigation‘அந்த இரு கண்கள்’சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *