மழை மியூசியம்
பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு
[வெளியீடு: புது எழுத்து, ஜூன் 2014, பக்கங்கள் 48. விலை ரூ: 70]
நூல் குறித்து சில எண்ணப்பதிவுகள்_
லதா ராமகிருஷ்ணன்
[பிரதாப ருத்ரன் ( 1979 _ )
”இது இவரது முதல் கவிதைத் தொகுதி. ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பிரதாப ருத்ரனின் இயற்பெயர் முனிராசு. தர்மபுரியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். சூழலியலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவர் கவிதைகளை எழுதி வெளியிட்ட காலம் பொதுவான நவீன கவிதைக் காலம் என்று சொல்லலாம். ‘
மழை மியூசியம் என்ற தலைப்பில் ஜூன் 2014இல் வெளியாகியுள்ள கவிஞரைப் பற்றிய சுருக்கமான அறிமுகவரிகளாக நூலின் பின்னட்டையில் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து சில வரிகள் மேலே தரப்பட்டுள்ளன. ’புது எழுத்து’ வெளியீடாகப் பிரசுரமாகியுள்ள இந்த நூலில் 30 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 11 கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன.
‘கடந்துபோய் நாட்களாகியும் பார்க்கிற முகங்களில்
ஒரு முகமேனும் நீயாய் தெரிகிறது(முன்னிரவு யாகம்) என்ற வரியின் நீட்சியாய் ‘ஆசை முகம் மறந்து போச்சே, இதை யாரிடம் சொல்வேனடி தோழி’ என்ற பாரதியாரின் வரிகள் தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வந்தன. மிக எளிய வரிகள் பிரிவுத்துயரை, அதன் பரிதவிப்பை மிக அழுத்தமாக முன்வைக்கின்றன.
கூடு என்ற கவிதை இது:
வளைந்து வளைந்து
புனைந்ததை
நிமிர்ந்து பார்த்து
பறக்கிறது பறவை
சுதந்திரமாய்
அந்த பாரம்
இறங்கவேயில்லை
கனவிலும் கூட
எனக்கு
_ மனிதனும் சரி, பறவையும் சரி _ தங்களுக்கென வீடுகட்டிக்கொள்கிறார்கள். எனில், மனிதன் வீட்டிலேயே தளைப்படுத்தப்பட்டுவிட, கூட்டை விலகி நின்று பார்த்துவிட்டு உயரப் பறக்கும் சுதந்திரத்தை கவிமனம் பாரமாக உணராமல் என்ன செய்யும்!
ஒரு நுண்காட்சியிலும் கவிமனதின் கூர்நோக்கும், அவதானிப்பும் வாழ்வின் அகண்ட பெரும் சித்திரத்தை (the big picture) தேடிக் கண்டெடுத்துக்கொண்டுவிடுகின்றன.
வயலின் சுழல்
ஒற்றை முலையென
தன் இச்சையாய்
நகர்கிறது
நிலவு
வானவெளியில்
ஹேங்கரில் தொங்குகிறது
என்னறையில் மற்றும் ஒன்று
உயிரின் உள்வட்டத்தில்
சுழல்கிறது நான்
இசைக்கிறது வயலின்.
வார்த்தைகளின் வெகுதிருத்தமான தேர்வும், இடப்பொருத்தமும் தான் எந்தவொரு கவிதை யையும் கவிதையாக்குகின்றன. மேற்கண்ட வரிகளில் நிலவை ஒற்றை முலையென வர்ணித்தல், தன்னிச்சை என்பதல்லாமல் தன் இச்சை என்று பிரித்து தருவதில் வரவாகும் கூடுதல் அர்த்தங்கள், நிறுத்தற்குறிகள் எதுவும் தரப்படாத காரணத்தால் பொருள்குழப்பம் ஆங்காங்கே ஏற்படுவது தவிர்க்கமுடியாததாகும்போதும், நகர்கிறது நிலவு வானவெளியில் என்றும் வானவெளியில் ஹாங்கரில் தொங்குகிறது என்பதாகவும், ஹாங்கரில் தொங்குகிறது என்னறையில் என்றும், மற்றும் ஒன்று உயிரின் உள்வட்டத்தில் சுழல்கிறது என்றும் _ எவ்வெவ்வாறெல்லாமோ ஒத்திசைவு கூடிய அளவில் கவிதையில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளை கோர்த்தும் பிரித்தும் அர்த்த சாத்தியங்களை விரித்துக்கொண்டே போக முடிகிறது. ஹேங்கர் என்ற வார்த்தை உருவாக்கும் மனச் சித்திரங்கள் பல!
ஐஸ்கட்டியை சுமந்தபடி/ வியர்வையுடன் கடந்து செல்லும்/ஐஸ்காரன் என்ற தலைப்பிட்ட கவிதையில் இடம்பெறும் இந்த வரிகள் ஒரே சமயத்தில் அக, புற வாழ்க்கைச்சூழலுக்குக் குறியீடாகிவிடுகின்றன!
‘வோல்டேஜ் இல்லா டேப்ரெக்காட்ரராய் அழுகிறது குழந்தை (உனது முகாந்திரம்)
‘மியூசியங்களில் அறியும்
மழையைப் பற்றி
எதிர்காலம் ( மழை மியூசியங்கள்)
என இந்தத் தொகுப்பிலான கணிசமான கவிதைகளில் தனித்தனி வரிகளே தன்னிறைவான கவிதைகளாகிவிடுகின்றன!
அகமும் புறமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதே வாழ்க்கை என்பதிஅ அழுத்தமாகச் சுட்டுகின்ற இன்னொரு கவிதை ‘சுழன்று விரியும் சூன்யம்’. இக்கவிதையின் கடைசி ஆறேழு வரிகளில்
‘புத்தி பேதலித்த பிச்சைக்காரி
சினையுற்றுத் திரிகிறாள்
ஆண்மை வீறுகொண்டலைகிறார்கள்
சிகரெட் வளையப் புகையில்
மனம்
சுழன்று விரிய
அங்கேயும் சூன்யம்
_ இந்த வரிகளில் சுழன்று விரியும் மனதின் சூன்யத்திற்குக் காரணம் அந்தப் பிச்சைக் காரியும், அவளை சினையுற்றுத் திரியச் செய்தவர்களும், இனவிருத்தி இழந்து நிற்கும் அகோயா மரங்களும், இன்ன பிறவற்றின் இடையறா ஊடாட்டங்களும் தானே. இயற்கை வளத்தை அழிக்கிறோம்; பலவீனர்களைச் சுரண்டுகிறோம். இதையெல்லாம் பேராண்மைத் தனமாக பாவித்துக்கொண்டு அலைகிறோம்… ‘அலைகிறார்கள்’ என்ற வார்த்தைத் தேர்வு அர்த்தம் செறிந்தது; இடப்பொருத்தம் மிக்கது. இயற்கையைப் பேணத் தெரியாது, மனித மாண்பைப் பேணத் தெரியாது… எப்படிப்பட்ட பேராண்மையாளர்கள் நம்மைச் சுற்றி… நாமும் அவர்களில் ஒருவர்தானோ…
இதற்கு முன்பு படிக்கக் கிடைத்த நந்தாகுமாரனுடைய கவிதைகளில் (மைனஸ் 1) கவிஞர் பிரம்மராஜனுடைய கவித்துவப் போக்கு, மொழிநடையின் பிரதிபலிப்பைக் காண முடிவதாகவும், அதுவே அவருடைய கவிதையின் பலமாகவும், பலவீனமாகவும் அமைவ தாக மலைகள் இணைய தளத்தில் நந்தாகுமாரனுடைய கவிதைத்தொகுப்பு குறித்து எழுதியி ருந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்/ இப்போது, தோழர் பிரதாப ருத்ரனுடைய கவிதை களிலும் அதேவிதமான பிரதிபலிப்பைக் காணும்போது, இது பலமா பலவீனமா என்றில் லாமல் வேறொரு கோணத்தில் அது குறித்து எண்ணிப்பார்க்கவேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.
பிரம்மராஜனுடைய கவிதைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அதற்கு புரியாக் கவிதைகள், ஐரோப்பியக் கவிதைகள் என்று முத்திரை குத்திவிடப் புறப்படுகிறவர்களே அதிகம். அவரு டைய கவிதைகளில் புரியும் கவிதைகள், செழிப்பான பழந்தமிழ்க்கவிதை மரபுகள், உவமை கள் என எவ்வளவோ இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமலிருப்பதில் ஒருவித பாதுகாப்புணர்வைப் பெறுகிறார்களோ என்றுகூடத் தோன்றும். எனவே, பிரம்மராஜனுடைய கவித்துவப்போக்கைப் பின்பற்றினால், தங்களுடைய கவிதைகளில் பிரதிபலித்தால் எள்ளலும், கண்டனமும் தான் வரவு என்று நன்றாகவே தெரிந்திருந்தும் அதை ஆர்வமாகப் பின்பற்றி கவிதை எழுத முற்படுபவர்களுக்கு அத்தகைய தூண்டுகோலாகச் செயல்படுவது பிரம்மராஜனுடைய கவித்துவப் போக்கின் ஈர்ப்புவிசையும், அதில் அவர்களுக்கு உள்ள ‘convictionனுமே என்று தான் சொல்லவேண்டும்.
பிரம்மராஜனுக்குப் பிறகு நவீன தமிழ்க்கவிதை வெளியில் மொழிரீதியான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்கள் விரல்விட்டு என்ணக்கூடிய ஒரு சிலரே. ’அந்தக் காலகட்டத்தைய நவீன கவிதை உத்திகளெல்லாம் இப்போதைய கவிதைகளில் இரண்டறக் கலந்துவிட்டன’ என்று என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் உண்மையில் இன்று நவீன தமிழ்க்கவிதை வெளியில் கதைசொல்லலும், நவீன மோஸ்தரில் பிரச்சார முழக்கம் செய்வதும், வெகு யதார்த்த, run-on-the-mill பாணி எழுத்துமே மேலோங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில் நவீனம் என்ற வார்த்தைக்கு நியாயம் சேர்க்க முயலும் அளவில் கவிதையெழுத முனையும் பிரதாப ருத்ரன், நந்தாகுமாரன் போன்றோரின் முயற்சிகள் கவனத்திற்குரியவை. இங்கே துவாரகைத்தலைவனையும் குறிப்பிட வேண்டும். சங்கர ராம சுப்ரமணியன், ஸ்ரீநேசன், ரமேஷ்-ப்ரேம், பெருந்தேவி, இன்பா சுப்ரமணியன், அமிர்தம் சூர்யா, ராணி திலக், அய்யப்ப மாதவன், லீனா மணிமேகலை, பழனிவேள் இன்னும் சிலர் மொழி ரீதியான பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆரவாரமில்லாமல் பழந் தமிழ் சொல்லாடல்களைக் கொண்டு மிக நவீன கவிதையாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முபீன் சாதிகாவின் கவித்துவ முயற்சிகள் அடிக்கோடிட்டுக் குறிப்பிடப்பட வேண்டியவை.. (எனில், சமகாலக் கவிஞர்களில் பிரம்மராஜன் அளவு தொடர்ச்சியாக, extensive ஆக இத்தகைய பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டவர்கள் யாருமில்லை என்றே தோன்றுகிறது).
இந்தக் கவிதைத் தொகுப்பின் அட்டையைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லத் தோன்றுகிறது. அழகு என்றால் அழகு; ஆபாசம் என்றால் ஆபாசம். நூலின் அட்டை குறித்து இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. அந்த அட்டையின் ‘significance’, ‘relevance’ முக்கியத்துவம்’ குறித்து சில விவரங்களையாவது நூலில் தந்திருக்கலாம். எதுவாக இருந் தாலும் சரி, இந்த அட்டை குறித்து விமர்சனங்கள், கண்டனங்கள் எழும்பட்சத்தில் அதை கவிஞர் ‘ஐயோ, நான் ஆண் என்பதால், அல்லது, இன்ன சாதி என்பதால் என்னை வசை பாடுகிறார்கள்’ என்ற ரீதியில் அல்லாமல் நேர்மையாக, இலக்கியார்த்தமாக எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
பிரம்மராஜனின் பிரதிபலிப்பு, தாக்கம் இருந்தாலும் நந்தாகுமாரனின் கவிதையுலகின் களமும் பின்புலமும் கணிணி சார்ந்ததாய் ஒரு திடமான அடித்தளத்தைக் கொண்டிருக் கிறது. அதுபோல், தோழர் பிரதாப ருத்ரனுக்கு ‘சுற்றுச்சூழல்’, ‘இயற்கைப் பேணல்’ ஆகியவை அடித்தளமாக அமைந்தால் அவருடைய கவிதைகளுக்கான தனி அடையாளம் கிடைப்பது உறுதியாகும் என்று தோன்றுகிறது. நான் சொல்வதன் பொருள் கைத்தட்டலுக் காகவோ, உடனடி கவனத்திற்காகவோ ஒரு கருப்பொருளை சுவீகரித்துக் கொள்வது அல்ல என்பதை கவிஞர் பிரதாப ருத்ரன் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.
0
- கர் வாபஸி – வீடு திரும்புவோரை வாழ்த்தி வரவேற்போம்.
- தொடுவானம் 49. உள்ளத்தில் உல்லாசம்.
- அம்பு பட்ட மான்
- கலவரக் கறைகள்
- பெண்களுக்கு அரசியல் அவசியம் “ திருப்பூர் மத்திய அரிமா சங்க விருதுகள் 2014 ”
- வேழம்
- நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும்
- சிங்கப்பூர் ஜெயந்தி சங்கரின் படைப்புலகம்: கோவையில் இலக்கியச்சந்திப்பு கூட்டம்
- துணிந்து தோற்கலாம் வா
- எஸ் ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்- உயிர்மை நாவல் வெளியீட்டு விழா
- ‘அந்த இரு கண்கள்’
- ஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20
- சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு
- கண்ணாடியில் தெரிவது யார் முகம்?
- ஜல்லிக்கட்டின் சோக வரலாறு
- பிரசிடண்டுக்கும் வால்டருக்குமிடையிலான உரையாடல் அல்லது ஏகாதிபத்தியவாதியின் மக்கள் மீதான பற்று
- ஆத்ம கீதங்கள் – 12 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)
- காலச்சுவடு வெளியீடுகள்
- இலக்கிய வட்ட உரைகள்:8 துறவியின் புதிய கீதை எஸ். வைதேஹி
- நூலறுந்த சுதந்திரம்
- சைனாவின் புது வேகப் பெருக்கிச் சோதனை அணு உலை முழுத்திறனில் இயங்குகிறது
- பீகே – திரைப்பட விமர்சனம்
- Muylla Nasrudin Episodes by jothirlatha Girija
- மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு
- பாண்டித்துரை கவிதைகள்
- தொடு நல் வாடை
- “2015” வெறும் நம்பர் அல்ல.
- ரவா தோசா கதா
- தினம் என் பயணங்கள் – 40 புதிய உறவைத் தேடி .. !
- இளஞ்சிவப்பின் விளைவுகள்
- கோவில் பயணக் குறிப்புகள். இது ஆத்மார்த்தமான அனுபவ கோர்வை.
- மழை மியூசியம் பிரதாப ருத்ரனி’ன் கவிதைத் தொகுப்பு குறித்து சில எண்ணப்பதிவுகள்_
- சாவடி காட்சி 22 -23-24-25