ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்

This entry is part 16 of 23 in the series 18 ஜனவரி 2015

புற அழகின் உச்சம் பெண்ணின் உடல்.

அப்படி ஒரு அழகான‌ பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன். மிஸ்டர் இந்தியா ஆவது லிங்கேஸ்வரனுக்கு கனவு.

பேரழகுப்பெண் தியா. மிஸ்டர் இந்தியா ஆகத்துடிக்கும் படிப்பறிவு மிக இல்லாத நாயகன். ஒரு சந்தர்ப்பத்தில், உடன் நடிக்க வேண்டிய ஆண் மாடல் ஜான் ஒத்துழைக்க மறுக்க, வேறு மாடல் தேவைப்படுகையில், லிங்கேஸ்வரன் பயன்படுகிறான். பழகபழக லிங்கேஸ்வரன் மீது காதல் வருகிறது. லிங்கேஸ்வரன் வளர வளர, எதிரிகள் வளர்கிறார்கள். எதிரிகள் வெட்டும் குழியில் லாவகமாக விழுகிறான் லிங்கேஸ்வரன். முகம், உடல் சிதைகிறது. தன்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்குவதும், அவர்களிடமிருந்து தான் காதலித்த பெண்ணைக் காப்பாற்றுவதும் தான் கதை.

கதை இவ்வளவுதான். ஆனால், சொல்வதற்கு சமூகவியல், மானுடவியல் சார்ந்து வேறு விஷயங்கள் இருக்கின்றன.

அழகுப் பெண் மாடல் தியா. அறிவுக்கூர்மையும் திறமையும் நிறைந்திருந்தால் தான் போட்டி மிகுந்த மாடல் உலகில் நிலைத்த இடம் கிடைக்கும். அவருக்கு, படிப்பறிவு இல்லாத நாயகனுடன் காதல் சாத்தியப்படுவது போல் காட்டுகிறார்கள்.

சற்றேரக்குறைய இதையே தான் பல தமிழ் படங்களிலும் கதையாக காட்டுகிறார்கள். காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி என்று ஒரு லிஸ்டே போடலாம்.

காதல் திரைப்படத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பஞ்சர் ஒட்டும் பரத்திடம் காதலை வயப்படுவதன் மூலம், தன்னைப்போலவே படித்து முதல் மதிப்பெண் வாங்கும் யாரையுமே சந்தியாவுக்கு தெரியாது என்கிற ரீதியில் கதை நகர்கிறது. காதல் திரைப்படத்தின் கதை, உண்மைக்கதை என்று சொன்னார்கள்.

ஒரு கேள்வி? படிப்பறிவு இல்லாத, குரங்கு மார்க் சோப்புக்கெல்லாம் மாடலாகப் போகும் லிங்கேஸ்வரனை தேர்ந்தெடுப்பதன் மூலம், அறிவுக்கூர்மையும் திறமையும், கச்சிதமான உடலும் நிறைந்த ஆண் மாடல்கள் வேறு யாரையுமே தியாவுக்கு தெரியாது என்கிற ரீதியில் கதை நகர்கிறது.

இது போன்ற காதல்களை மிக மிக அதிக அளவில் இப்போதுள்ள சமூகத்தில் அவதானிக்க முடிகிறது. ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். முன்னணி ஐடி நிறுவனத்தில் ஐந்திலக்க ஊதியம் வாங்கும் ஒரு பெண் ஒரு பையனை காதலிக்கிறார். அந்த காதலர் படிப்பு குறைவு. வேலையிலும் இல்லை. இதனால் அவர்களுக்குள் ஈகோ பிரச்சனைகள். இந்த நிலையில் தன்னை நோக்கி வரும், இதர, அதே ஐடி நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஆண்களின் காதல் கடிதங்களை நிராகரிக்கிறார். கேட்டால், குழப்பத்தில் இருக்கிறாராம்.

பொறியியல் படிப்பும் ஐடி நிறுவன வேலையும் பல விஷயங்களை நிரூபனமாக சொல்லிவிடும். நாள் ஒன்றுக்கு 17 மணி நேரம் படிக்க வேண்டும். 1200 க்கு 1000க்கும் மேல் மதிப்பெண்கள் வாங்கினால் தான், வங்கியில் கல்விக்கடன் கிடைக்கும். வங்கிக்கடனை தக்க வைக்க, ஒவ்வொரு செமஸ்டரிலும் விடாமல் மார்க் வாங்க வேண்டும். ஆக, ஞாபகசக்தி, நுண்ணறிவு, சீரான நிலைத்தன்மை வாய்ந்த உழைப்பு, கட்டுக்கோப்பு, ஒழுங்கு, வரைமுறைகளுக்கு உட்படுதல் என பல திறன்களை நீருபனமாக பார்க்க வழி செய்கிறது. இதன் நிறை என்னவெனில், யாரையேனும் பார்க்கக் கிடைக்கும் சில மணித்துளிகளில், அவரது கல்வியைக் கொண்டே அவரது திறன்கள் குறித்து துல்லியமாக ஊகிக்க‌ ஒரு வழி கிடைக்கிறது.

இப்படி திறன்களை நீருபனமாக காணக் கிடைக்கும் இடங்கள் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே கேள்வி? இதனினும் விட எவ்வகையில் பிற, ஒப்புக்கொள்ளப்பட்ட காதல்கள் மேலானதாக இருக்கிறது என்பதே கேள்வி?

ஒரு சமூகத்தின் மக்களை வந்தடையும், இலக்கியங்கள் வாயிலாக, சினிமாக்கள் வாயிலாக, இன்னபிற ஊடகங்கள் வாயிலாக, இப்படியான ஆரோக்கியமான‌ விஷயங்கள் தொடர்ந்து ஏன் நிராகரிக்கப்படுகின்றன என்கிற கேள்வி எழுகிறது. இதன் பின்னால் ஒரு நுண் அரசியல் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இதை (Structuralism) ஸ்ட்ரக்ச்சுரலிஸம் ஒரு சமூகத்தின் மீது நிகழ்த்தும் பாதகங்களின் மீதான எதிர் விசையாகவே நான் பார்க்கிறேன்.

ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள். திருமண மையங்களில் நீங்கள் பார்க்கலாம். மணமகன் மீதான எதிர்பார்ப்புகள் என்கிற இடத்தில், மணமகன் வருடத்திற்கு 25 லகரம் ஊதியம் வாங்குபவராகவும், உயர் மேல்படிப்பு படித்தவராகவும், வெளி நாட்டில் வேலை செய்பவராகவும் , அல்லது வியாபாரம் செய்பவராகவும் இருக்க வேண்டும் என்பது உச்சபட்ச எதிர்பார்ப்பு எனக் கொள்ளலாம்.

இப்படியான எதிர்பார்ப்புகள், உள்ளூரிலேயே வேலை பார்த்து மாதத்திற்கு ஒரு லட்சம் ஊதியம் வாங்குபவரை நிராகரிக்க வைக்கின்றன தானே? பொருளாதார வசதிகள் இல்லாத பெற்றோருக்கு மகனாக பிறந்து தங்கள் சொந்த உழைப்பாலும், முயற்சியாலும் திறமையாலும் மேலே வருபவர்களால் பட்டமேல்படிப்பு படிக்க வாய்ப்பிருக்காது. ஏனெனில் Bread Earner என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக , தங்கை, அக்காள்களின் திருமணத்திற்காக உடனடியாக‌ வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள்.

ஆனால் வருடத்திற்கு 25 லகர ஊதியம் வாங்க, ஐ.ஐ.டியிலோ, ஐ.ஐ.எம்மிலோ படித்திருக்க வேண்டும். இதற்கெல்லாம் டியூஷன் கோச்சிங் என்று ஆகும் செலவு ஒரு மத்திய குடும்பத்து பின்புலனில் வரும் மாணவனுக்கு சாத்தியமில்லை. இள நிலைகல்வி முடித்ததுமே முது நிலைக்கல்வியும் வெளி நாட்டில் படித்திருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். வெளி நாட்டில் முதுனிலை கல்வி கற்க முடிவது, பெற்றோர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த குடும்பங்களில் மட்டுமே நிகழும்.

அப்படியானால், மறைமுகமாக, பையனை பெற்றவர்களுக்கும் சேர்த்து, எதிர்பார்ப்புகள் வைப்பதாகத்தான் பொருள் படுகிறது. மணம் செய்துகொள்ளப்போகிறவரின் சம்பாதிப்பு, திறமை மீது எதிர்பார்ப்புகள் வைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. மணம் செய்யப்போகிறவரின் பெற்றவர்கள் எத்தனை சம்பாதிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்புகள் நீள்வது , சர்வ நிச்சயமாக ஒரு உச்சகட்ட அபத்த ஸ்ட்ரக்ச்சுரலிசமாகத்தான் தெரிகிறது.

இப்படியான அபத்த ஸ்ட்ரக்ச்சுரலிசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் எதிர் விசையை தேர்வு செய்வதில் தான், காதல், ஓகேஓகே, ஐ போன்ற படக்கதைகள் உருவாகின்றன என்றே நான் நினைக்கிறேன். ஓகேஓகே படத்தில் ஒரு காட்சி. அப்பா பார்த்த அமேரிக்க மாப்பிள்ளையை ஒரு ரெஸ்டாரென்டில் சந்திப்பார் மீரா.

அவன் பி.எம்.ஐ அது இதென்று ஓவராக பேசி வெறுப்பேற்றுவான். ஐ யில் ஒரு காட்சி. உடன் நடிக்கும் ஜான், தியாவை படுக்கைக்கு அழைப்பான். கேட்டால் ‘ஒன்றுமே இல்லாமல் நான் எதற்கு உன்னுடன் ஜோடியாக நடிக்க வேண்டும்?’ என்று கேள்வி கேட்பான். இவைகளை இந்த அபத்த ஸ்ட்ரக்ச்சுரலிசத்தின் குறியீடாகவே பார்க்கிறேன்.

உபரித்தகவல்: இந்த அபத்த அல்லது மிதமிஞ்சிய‌ ஸ்ட்ரக்ச்சுரலிசத்திற்கு ஒரு பக்க விளைவு இருக்கிறது. வெளி நாடுகளில் பணியில் இருக்கும் முக்காலே மூணு வீசம் ஆண்களின் மனைவிகள், அதிகம் படித்தவர்களாகவோ அல்லது வேலை பார்ப்பவர்களாகவோ இல்லை. ஆர்ட்ஸ் அல்லது இதர படிப்புகள் படித்தவர்களாகவே இருக்கிறார்கள். இதில் உள்ள Statistics பற்றி எழுதப்போனால் அதற்கே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்பதால் விட்டுவிடலாம். இதனால் சொல்ல வருவது யாதெனில், இயற்கை எல்லாவற்றிலும் ஒரு சுழற்சி முறையை கையாள்கிறது என்பதைத்தான். பொறியியல் படித்து , ஐந்திலக்க ஊதியம் வாங்கும் பெண்களில் எத்தனை பேர் 30 வயதுக்கும் மேல திருமணமாகாமல், மணக்க இணை கிடைக்காமல் இருக்கிறார்கள் என்பதை ஒரு திருமண தகவல் மையத்தில் கணக்கெடுத்துப் பார்த்தால் அபத்த ஸ்ட்ரக்ச்சுரலிசத்தின் உண்மை நிலை புரியும்.

மனிதனின் அர்த்தங்களன்றி பூவுலகிற்கு வேறு அர்த்தங்கள் இல்லை என்று சார்த்தர் சொல்கிறார். மனித குலம் தன்னிடம் இருக்கும் அர்த்தங்களின் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்கிறது.
ஒன்றை மதிப்பீடு செய்வதில் தவறு நேர்ந்தால், குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளி ஆகவும் வாய்ப்பாகிவிடுகிற‌து தானே. இந்த அர்த்தங்களை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் நமக்கெல்லாம் இருத்தலியமும், பின் நவீனத்துவமும் தெரிந்து என்ன பயன்?

இந்த அர்த்தங்களை மாற்றித்தான் பார்ப்போமே. கடவுள் எங்கிருக்கிறார் என்ற கேள்வியுடன் இருத்தலியம் சொல்வது என்ன? அர்த்தங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்பதைத்தானே.

உடலின் பல்வேறு தசை நார்களை Steroids மூலமாக, protein Supplement மூலமாக, உசுப்பேற்றி வெளிக்கொணரும் டெக்னிக்கல் அறிவை வைத்துக்கொண்டு ரயில்வே வேலைக்காக ஏன் ஜிம்மில் அடித்துக்கொள்ள வேண்டும்? அதே அறிவை வேறு ஒரு வழியில் பயன்படுத்தி, வில்லன் ஹீரோ ஆவதாக காட்டலாமே?

சுரேஷ் கோபி இன்ஃப்லுயன்சா வைரஸ் குறித்து சொல்கையில்,

‘ஆங். நானும் அந்த H4N2 வைரஸ் பத்தி கூகில்ல படிச்சிருக்கேன். நல்ல ட்ரிக் தான்.. ஆனா, அதை ஆராய்ச்சிக்குன்னு சொல்லி வரவழைக்க பணமோ, இல்லை உங்களை மாதிரி டாக்டர் பட்டமோ என்கிட்ட இல்லை.. ” என்று வில்லனுக்கும் ஒரு உயர் தரத்தை காட்சியில் வழங்கியிருக்கலாம்.

“இப்படி திறன்களை நீருபனமாக காணக் கிடைக்கும் இடங்கள் ஏன் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே கேள்வி? இதனினும் விட எவ்வகையில் பிற, ஒப்புக்கொள்ளப்பட்ட காதல்கள் மேலானதாக இருக்கிறது என்பதே கேள்வி?” என்று சொல்லியிருந்தேன் அல்லவா?

இக்கேள்விகளுக்கெல்லாம் , நம் குருட்டு சமூகத்தில் தீர்மானமான பதில்கள் எப்போதுமே இல்லை. தீர்மானமான பதில்கள் இல்லாமையே இந்த சமூகத்தை குருடாகவே வைத்திருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். மேலும் நம் சமூகம், இத்தீர்மானமான பதில்கள் இல்லாமையையே ஒரு கலாச்சாரமாக மாற்றும் அபத்தத்தை கைகொள்கிறது. ஷங்கரின் ஐ, காதல், ஓகேஓகே போன்ற திரைப்படங்கள் இதைத்தான் செய்வதாக நினைக்கிறேன்.

பார்வையாளனின் பல்ஸ் அறிந்து படம் எடுக்க வேண்டும், ரசிகனின் பல்ஸ் அறிந்து இசை கோர்க்க வேண்டும், வாசகனின் பல்ஸ் அறிந்து, புத்தகம் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார்கள். வாசகன், பார்வையாளன், ரசிகனின் தரம் என்ன என்கிற கேள்வி எழுகிறது. இப்படி இல்லாமைகளையே ஒரு கலாச்சாரமாக மாற்றுவதான சமூகத்தில், வாசகனின் ரசனையை ஒத்த எழுத்தோ, படங்களோ, இன்ன பிற ஊடகங்களோ ஒரு மாய பிம்பத்தையே கட்டமைக்கின்றன. இங்கே முன்னணி நடிகர்கள் இல்லாமைகள் மீது கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்தை பிரதிபலித்து பேர் வாங்குபவர்களாக இருக்கிறார்கள் என்பதை நான் எழுத வேண்டியதில்லை. அதனாலேயே அவர்களது படங்களும் உலக மொக்கைகளாக இருக்கின்றன. மாங்கு மாங்கென்று எழுதுகிறார்கள். 300 பிரதிகள் விற்றால் பெரிய விஷயம்.

சமீபமாக ஒரு சீனியர் எழுத்தாளர், வருமானத்துக்கு ஒரு தொழில் செய்ய ஆலோசனை கேட்டிருந்தார். பிற்பாடு அவரே சொன்னார். மாடு மேய்க்கவும், கூட்டங்களில் பேசவும் தான் பெரும்பாலானோர் ஆலோசனைகள் வழங்கியதாக. இன்னொரு சீனியர் எழுத்தாளர் கையேந்துகிறார். கற்றவனுக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. எழுத்தாளனுக்கு கற்றல் , புதிதாக கற்றுக்கொள்வது, கற்றதை கைவிட்டு மீண்டும் கற்பதும் கைவந்த கலை. ட்யூஷன் எடுக்கலாம். கொள்ளை பணம் வரும். Non-taxable Income!! நம்மூரில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தான் சிலபஸ் மாற்றுகிறார்கள். ஆக, ஒரு முறை கற்றால் ஐந்து வருடங்களுக்கு அதாவது 60 மாதங்களுக்கு பயன்படுத்தலாம். இந்த ஆக்கத்தின் மூலம் அவர்களுக்கு இந்த ஆலோசனையை வழங்குகிறேன்.

இதற்கு முந்தைய ஷங்கரின் படங்களில் ஊழல், கருப்புப்பணம் என்று ஒரு மையம் இருந்தது. அதற்கு ஒரு உலகலாவிய இருப்பு இருக்கும். ஷங்கரின் ‘ஐ’ யை கொஞ்சம் மாற்றி Bio War என்று கதை பண்ணியிருக்கலாம்.

வில் ஸ்மித் நடித்த ‘I am Legend’, ‘HULK’ போன்ற திரைப்படங்கள் ரகத்தில். பயோ வார் முனைப்பில், தவறாக செலுத்தப்பட்ட கிறுமிகளால் பூதாகார உருவங்கள் அடைந்து, வாட்ஸாப்பில் ஃப்லிர்ட் செய்ய மிகப்பெரிய பொத்தான்கள் செய்து காதலிக்கு மெஸேஜ் அனுப்புவதாக, அவலட்சனமான காதலன், காதலியை சந்திக்க வேண்டி இமேஜ் காப்ச்சரிங் தொழில் நுட்பம் மூலமாக , த்ரி டியில் உருவம் செய்து அதை காதலியோடு உலவவிட்டு பிற்பாடு எல்லா நினைவுகளையும் டேடா ட்ரான்ஸ்ஃபர் செய்து சந்தோஷப்படுவது போலவும், காதலியின் நினைவுகள் அடங்கிய சிடி போல் ஒரு கோடி சிடிக்கள் செய்து குவித்து, அதனுள் விழுந்து டொனால்ட் டக் போல நீச்சல் அடித்து பாடுவதாக‌, டேடா ட்ரான்ஸ்ஃபர் செய்த சிடி கீழே விழுந்துவிட அதை பூதாகார காதலன் எடுக்க முடியாமல் அழுவது போலெல்லாம் கிராபிக்ஸில் புகுந்து விளையாடி காட்சிகள் செய்து அதகளம் செய்திருக்கலாம்.

ஷங்கரின் பிரம்மாண்டங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்திருக்கும். ஒரு உலகலாவிய செய்தியை சொன்னதாக இருந்திருக்கும். அப்படி ஏதும் இல்லாதது, ஷங்கரின் பிராண்ட் மிஸ்ஸிங் என்றே நினைக்க வைக்கிறது.

காதல், ஒகேஓகே போன்ற படங்களின் வரிசையில் ஷங்கரின் ஐ, போன்ற‌ படங்களும் அபத்த அல்லது மிதமிஞ்சிய‌ ஸ்ட்ரக்ச்சுரலிசத்தையே மையமாக வைத்து கட்டமைக்கப் படுகின்றன என்றே தோன்றுகிறது.

இந்த விமர்சனத்தை இப்போது நீங்கள் வாசித்துவிட்டீர்கள். இனி வரும் காலங்களிலாவது, இந்த விதமான அபத்த ஸ்ட்ரக்ச்சுரலிசத்தை கடாசிவிட்டு உருப்படியாக , வெறும் பொழுதுபோக்கை மட்டும் குறிவைக்காமல் , சமூகத்திற்கு பயனுள்ள வகையில், சமூக கடமைகளோடு படங்கள் வரலாம் என்று நான் நம்புகிறேன்.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationதென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *