கிளி

This entry is part 12 of 19 in the series 25 ஜனவரி 2015

இன்ஸ்பெக்டர் ரஞ்சன், குற்றம் நடந்த, இடத்திற்கு வந்தபோது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த இடம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ளடக்கமாக அமைந்த ஒரு தனி வில்லா வீடு. வாசலில் ஒரு மிகப்பெரிய கேட்.  கேட்டிலிருந்து வீட்டிற்கு இடையே இருபது அடிக்கு சிமென்ட் கற்களால் வேயப்பட்ட தரை. ஒரு பெரிய ஹோண்டா சிஆர்வி நிற்க ஒரு போர்டிகோ. அதன் தலையில் இரண்டடுக்கு வீடு. இவையெல்லாம் அடைத்த இடம் போக எஞ்சிய இடத்தில் அலங்காரத் தென்னை, ஒரு மாமரம், நிறைய பூச்செடிகள், க்ரோடான்ஸ் என வீட்டம்மாளின் ரசனை தெரிந்தது. தலைக்கு மேல் ஒரு கூண்டில் கிளி ஒன்று கீச் கீச் என்று கத்திக்கொண்டிருந்தது.

கூண்டுக்கு நடுவே மரத்தாலான சிறிய குச்சி ஒன்று திங்க விடப்பட்டிருக்க, அதன் மீது அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது.

வீட்டு காவல்காரனுக்கு ஐம்பது வயது இருக்கலாம். வாசலில் இரண்டு கான்ஸ்டபில்கள் அவனை மடக்கி அமர்த்தியிருக்க அழுதுகொண்டிருந்தான். போர்டிகோ வாசலில் சிமென்ட்டில் சரிவான தளம் சமீபத்தில் போடப்பட்டிருந்தது. அதன் மீது , யாரோ நடந்து சென்ற கால் தடம் கேட்டை நோக்கிய திசையில் தெரிந்தது.

சப் இன்ஸ்பெக்டர் தரணி உடன் வர, இன்ஸ்பெக்டர் ரஞ்சன், போர்டிகோ தாண்டி, வீட்டினுள் நுழைந்து, மாடிப்படியேறி முதல் மாடி சென்றார். உள்ளே ஒரு படுக்கை அறையில் ….ச்சு..

அந்த  வட்ட முகம், எந்த ஆணையும் அத்துமீற வைக்கும் அழகான வழவழ பிங்க் நிற உதடுகள், கருமையான நீண்ட தலை மயிர், பக்கவாட்டில் சரிய முயன்ற மார்புச் செழுமை என இத்தனை அழகையும் கொண்ட அந்த பதினேழு வயது இளம் பெண், அணிந்திருந்த நைட்டி  இடுப்பு வரை உயர்த்தப்பட்டு, தொடைகளின் இடையே……

ஒரு அழகான பெண்ணை எத்தனையோ விதமாக பார்க்க ஆண் மனம் ஏங்கித் தவிக்கலாம். பூமியின் எட்டாவது அதிசயத்தை, அவளது வனப்பை இப்படி ஒரு அவல நிலையில் பார்க்க கிடைத்த தருணத்தை என்னவென்று சொல்வதென்று அறியாதவராய் இன்ஸ்பெக்டர் ரஞ்சன், படுக்கையில் கிடந்த அவளது போர்வையை அவள் மேல் போர்த்தினார். அந்த துர்பாக்கிய நிலையிலும், அவலத்திலும் அவள் உடலின் வனப்பு, அவரின் மூளையில் ஒரு வக்கிர ஓநாயை விழித்தெழ வைத்தது.

எஞ்சிய வீட்டை நிறுத்தி நிதானமாக ஆராய்ந்தபடியே, இன்ஸ்பெக்டர் ரஞ்சன், பிற்பாடு, படியிறஙகி தரை தளம் வர, பின்னாலேயே தொடர்ந்தார் சப் இன்ஸ்பெக்டர் தரணி.

கேட் அருகே வந்த ரஞ்சனுக்கு மாடியில் பார்த்த பூலோக தேவதையின் உடல் வனப்பு கண்களை உறுத்தியது. கண்களை அகல விரித்து, மூடித்திறக்க, அந்த கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

‘சார், இந்த சிமென்ட்ல கால் தடம் இருக்கு தான்.. வாசல் கேட்டை பாத்தாமாதிரி.. யாரோ நடந்து வெளியில போயிருக்காங்க.. ‘ என்றார் தரணி.

‘எப்படி சொல்றீங்க தரணி?’

‘கால் தடத்தைப் பாக்கும்போது ஆம்பளைதான் சார்.. இளம் வயசா இருக்கலாம்.. நடந்து போய் ஒரு எட்டு மணி நேரம் இருக்கலாம் சார்..நேத்து அந்த வாட்ச்மேன் ரங்கன்கிட்ட‌ விசாரிச்சேன் சார்.. அவன் தான் சொன்னான், சிமென்ட் வேலை நேத்து பாத்திருக்காங்க.. ‘

‘குட் காட்ச் தரணி.. சீன் ஆஃப் க்ரைம்ல எவிடென்ஸா இதைக் குறிச்சி வச்சிக்கோங்க.. நம்ம இன்வெஸ்டிகேஷனுக்கு தேவைப்படும்’ என்றார் ரஞ்சன்.

இருவரும் காவல்காரன் ரங்கனை நெருங்கினார்கள். ரங்கன், இப்போது தலையில் கைவைத்தபடி சோகமாய் அமர்ந்திருந்தான். சற்று தள்ளி கைகளைப் பிசைந்தபடி ஒரு பெண் நின்றிருந்தாள்.

‘என்னய்யா, எத்தனை வருஷமா இங்க வாட்ச்மேனா இருக்க?’ அதட்டலாக கேட்டார் ரஞ்சன்.

‘பத்து வருஷமா சார்’

‘குடும்பம் இருக்கா?’

‘ஒரே ஒரு பொண்ணு சார். பேரு ரம்யா. பொஞ்சாதி செத்துப்போச்சி. இந்த வீட்டுக்கு வேலைக்கு வரதுக்கு முந்தியே சார்’

‘சார், அந்தப் பொண்ணு ரம்யாவையும் சொல்லி வரவச்சிட்டோம்.. அதோ நிக்கிது சார்’ என்று சற்று தள்ளி நின்றிருந்த பெண்ணைக் காட்டி காதருகே கிசுகிசுத்தார் தரணி. அந்தப் பெண் விசித்து அழுது கொண்டிருந்தது.

‘தரணி, அந்த பொண்ணை நீங்க விசாரிங்க.. ‘

ரஞ்சன் ஆணையிட, தரணி, அந்தப் பெண் ரம்யாவை நோக்கிச் செல்ல,

‘ நேத்து இங்க என்ன நடந்தது?’ என்று தன் கேள்வியை ரங்கனிடம் வீசினார் ரஞ்சன்.

‘சார், எங்க ஓனர் ப்ரகாஷ் திருச்சிக்கு ஒரு கல்யாணத்துக்கு பொஞ்சாதியோட போயிருக்காரு சார். அவரோட ஒரே பொண்ணு அஞ்சலிக்கு இஸ்கூல்ல எக்ஸாம் சார்..அதுனால அது போவலை சார்.. என் அக்கா பையன் குமாரு கார்பென்டர் சார். எங்க ஓனர், கேட்டாண்ட சிமென்ட் தளம் போட குமாராண்ட‌ சொல்லிருந்தாரு சார். அவனும் நேத்து வந்தான். வேலையை எட்டு மணி கிட்ட முடிச்சிட்டு அவனும் போயிட்டான் சார்… ஆனா அப்பால தான் சார் நான் கவின்ச்சேன்.. இருட்டுல சிமென்ட்ல நடந்து போயிருக்குறான்.. வீட்டுக்கு வந்தானான்னு என் பொண்ணுக்கு ஃபோன் பண்ணி கேட்டேன் சார். வரலைன்னு சொன்னா.. அப்பால நான் அவனுக்கு போன் போட்டு சொன்னேன் சார்.. ராவைக்கு சரி பண்ண முடியாது.. அதுனால காலைல வந்து மறுக்கா போடறேன்னு சொன்னான் சார்..’

‘ நீ அவனுக்கு கால் பண்ணும்போது நேரம் என்ன?’

‘எட்டு மணி இருக்கும் சார்’

‘சரி மேல சொல்லு’

‘அதுக்கப்புறம், அஞ்சலியம்மா தூங்கிட்டாங்களான்னு பாத்துட்டு கீழ கதவை சாத்திட்டு நான் இங்க கேட்ல வந்து உக்காந்துட்டேன் சார்..’

‘அப்புறம் அந்த பொண்ணு இறந்துட்டான்னு உனக்கு எப்படி தெரியும்?’

‘சார், காலைல சிமென்ட் வேலை பாக்க குமாரு வந்தப்போ, சிமென்ட் மிக்ஸ் பண்ண தண்ணி கேட்டான் சார்.. மோட்டார் சுவிட்ச்சு மாடில இருக்கு சார்.. அதை ஆன் பண்ண் மாடிக்கு போனப்போ தான் சார் பாத்தேன். கோயில் சிலை மாதிரி இருக்கும் சார் அந்த பொண்ணு.. அத்தை அந்த கோலத்துல……’

ரங்கன் மீண்டும் விசித்து அழுதான்.

அப்போது தரணி அருகே வர, தரணியும், ரஞ்சனும் தனியே ஒதுங்கினார்கள்.

‘சார், அந்த பொண்ணு ரம்யாகிட்ட பேசினேன் சார். எட்டு மணிக்கு ரங்கன், குமாரு வீட்டுக்கு வந்தானான்னு கேட்டு ஃபோன் பண்ணிருக்கான்.. அப்போ குமாரு சிமென்ட்ல கால் வச்சி கலைச்சிட்டதா சொல்லிருக்கான் சார்’

‘ஆமா, ரங்கனும் அதே தான் சொன்னான்’

‘சார், எனக்கு என்ன தோணுதுன்னா…’ என்றுவிட்டு நிறுத்திய தரணியை,

‘சொல்லுங்க தரணி’ என்று ரஞ்சன் மேற்கொண்டு பேசப் பணிக்க,

‘சார், எனக்கு என்ன தோணுதுன்னா, அந்தப் பொண்ணை அந்த ரங்கன் தான் கொன்னிருக்கணும் சார்’

‘எப்படி சொல்றீங்க தரணி?’

‘சார், அவனுக்கு பொண்டாட்டி பத்து வருஷம் முந்தியே செத்துப்போச்சி.. அப்படீன்னா, அவனுக்கு அப்போ வயசு நாப்பது இருக்கணும். அந்தப் பொண்ணு தனியா இருந்திருக்கு. சோ, அவன் அந்த பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணி கடைசியில அது கொலையாகியிருக்கணும் சார்’

‘மோட்டீவ் ஓகே.. ஆனா, அதுக்காக எவிடென்ஸ் இல்லாம அந்தப் பொண்ணு கிட்ட தப்பா நடந்திருக்கான்னு சொல்ல முடியாது தரணி.. ஃபாரென்ஸிக் ரிப்போர்ட் வரட்டும்..அந்தப் பொண்ணோட பாடியை அடாப்ஸிக்கு அனுப்பியாச்சா?’

‘ஃபோட்டோ செஷன் முடிஞ்சதும், நீங்க பாத்ததுமே அனுப்பியாச்சு சார்’

‘ஓகே.. அப்படீன்னா ஃபாரென்ஸிக் ரிப்போர்ட்ல தான் க்ளியர் பிக்ச்சர் கிடைக்கும்’

‘ஆமா சார்.. கொடுத்து வச்சவன் அந்த ஃபாரென்ஸிக் டாக்டர் சார்.. அந்த பொண்ணு என்னா ஒடம்பு சார் அதுக்கு, சிலுக்குக்கு கூட அப்படி ஒரு உடம்பு இருக்கலை சார்…..’

‘தரணி.. அந்த பொண்ணு பாவம் பதினேழு வயசுல சாவு.. எத்தனை கனவு கண்டிருக்கும் அது.. காதல் கூட பரிச்சயமாச்சோ இல்லையோ..பாவம்..செத்துப் போன பொண்ணை பத்தி இப்படி பேசுறது….’

‘சார், நீங்க வேற.. பாவம் புண்ணியமெல்லாம் இந்தக் காலத்துல ஏது சார்.. போன வாரம் அந்த கற்பழிப்பு கேஸ் பாத்தோமே.. பதினைஞ்சு வயசு தான்.. கொலை பண்ணினவன் பலவந்தப்படுத்தினப்போ அவ இணங்கலைன்னு கொன்னுட்டான்..  அடாப்ஸில அவளுக்கு பால்வினை நோய் கன்ஃபர்ம் ஆயிருக்கு.. நம்ம நல்ல மனசுக்கு நாம பாவம் பாக்குறோம்தான் சார்.. ஆனா, உண்மை இதுதான்’ என்றார் தரணி.

ரஞ்சனுக்கு யோசனையாக இருந்தது.

தரணி சொல்வது உண்மை தான்.. அந்த பதினைந்து வயதுப் பெண் மூர்க்கமாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்திருந்தாள்.. தாக்கியவன் வன்புணர்ச்சி செய்ய முயன்று, அதற்கு அந்தப் பெண் இணங்காததால், ஆத்திரத்தில் உயிர் போகும் அளவு தாக்கியதாக வாக்குமூலம் கொடுத்தான். அவளது அடாப்ஸி ரிப்போர்டில், அவளுக்கு பால்வினை நோய் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.

மூர்க்கமாகத் தாக்கியவனுக்கு பால்வினை நோய் எதுவும் இருக்கவில்லை. அவன் அவளை கற்பழிக்கவும் இல்லை. ஆனால், அந்தப் பெண்ணுக்கு பால்வினை நோய் இருந்திருக்கிறது.. பதினைந்து வயதில்.. அப்படியானால் அவள் வேறு ஒரு ஆணுடன் கலவியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.. அவனிடமிருந்து அவளுக்கு பால்வினை நோய் தொற்றியிருக்க வேண்டும்..

பால்வினை நோய் தொற்று இருக்கிறதெனில் அவன் எத்தனைக்கு பெண் பித்தனாக இருந்திருக்க வேண்டும்? அப்படி ஒரு ஆணிடம் ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு என்ன விதமான பழக்கம் இருக்க முடியும்? அந்த பெண்ணின் பெற்றோர்களின் அழுகுரலுக்கு செவி சாய்த்து,  பதினைந்து வயதுப்பெண்ணின் மானம் போய் விடக்கூடாது என்ற ஸ்திதியில், அவளது குடும்ப மானம் கப்பலேறிவிடக்கூடாதென்கிற ஸ்திதியில் அவளுக்கு பால்வினை நோய் இருந்த விவகாரம் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த கொலை விவகாரம் வெளியே வந்த போது, மீடியாவால் மிகவும் உரத்து தமிழகமெங்கும் பேசப்பட்டது. ஃபாதர் டிவி, கலைஞி டிவி, மாயா டிவி என ஒரு டிவி விடாமல் ஒரு விவாத மேடை விடாமல் இந்த விவகாரம் தமிழகமெங்கும் உரத்து பேசப்பட்டது.

ஒரு பெண், அதுவும் இளம் பெண் கூக்குரலிட்டால் என்ன ஏதென்று கூட அறியாமல், பாய்ந்து வந்துவிடுகிற சமூகம் தானே இது. உண்மையில், மூர்க்கமாகத் தாக்கியவன் ஒரு வகையில் தப்பித்திருக்கிறான் என்று தான் சொல்ல வேண்டும். அவளைப் புணர்ந்திருந்தால் அவனுக்கு பால்வினை நோய் வந்திருக்கலாம். ஒரு வேளை அந்தப் பெண் தனக்கு பால்வினை நோய் இருப்பதை அறிந்தே இருந்திருக்கலாம். பதினெட்டு வயதடைய, தனக்கு பால்வினை நோய் தந்தவனையே மணக்க முடிவு செய்திருக்கலாம். அல்லது மானத்துக்கு பயந்து தற்கொலை செய்ய முனைந்திருக்கலாம். மூர்க்கமாகத் தாக்கியவனுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை. எதையும் அறியாமல் தானாக வந்து தலையை கொடுத்து கொலைப்பழியில் மாட்டிக் கொண்டு விட்டான்.  அந்தப் பெண் வேண்டாம் என்று சொன்னபோதே விலகிப்போயிருந்தால், கொலைப்பழி இல்லை. வேறொரு நல்ல பெண்ணாகப் பார்த்து காதலித்து கரம் பிடித்து வாழ்ந்திருக்கலாம். இனி ஆயுள் முழுவதும் சிறை.

இவர்களைப் பொருத்த வரை , ‘பெண்’ என்றாலே பரிசுத்தம். எல்லாப்பெண்ணும் பரிசுத்தம். அது கூட, பெண்ணின் வகையான பரிசுத்தம் இல்லை. ஆணின் வகையான பரிசுத்தம். அப்பழுக்கில்லை. இந்த நினைப்பு அந்த பெண்ணுக்கான சுதந்திரத்தை தடை செய்வதையே புரிந்துகொள்ளாத மூர்க்கமான நம்பிக்கை. முட்டாள்தனமான நம்பிக்கை. ஒரு பெண், தன்னிடம் அண்டுபவனை ‘வேண்டாம்’ என்று சொல்கிறாளானால், தான், அவனுக்கு பொருத்தமான இணை இல்லை என்கிற நினைப்பாகக் கூட இருக்கலாமென்கிற எளிய சிந்தனை இல்லை. பெண்ணை பெண்ணாகப் பார்த்தால் தானே, இப்படியெல்லாம் சிந்தனை கொள்ள. பெண்ணை பெண்ணாக பார்க்க இயலாத மனப்போக்கின் விளைவு.

ஃபாரென்சிக் ரிப்போர்ட்டுடன் தரணி ஓடி வர, சிந்தனை கலைந்தார் ரஞ்சன்.

‘ நான் சொன்னேன்ல.. அந்தப் பொண்ணு கொலை செய்யப்படுறதுக்கு முன்னாடி கொலையாளி அவளை கற்பழிச்சிருக்கான் சார்..’

‘ஓ..ஓகே.. ஆனா, இப்பவும் கற்பழிச்சது அந்த ரங்கன் தான்னு சொல்லணும்னா, டி என் ஏ டெஸ்ட் எடுக்கணுமே?’

‘ஒரு சந்தேகத்துல அதையும் செய்யச் சொல்லிருந்தேன் சார்.. அதுகூட ரெடி.. அந்த பொண்ணு உடம்புல இருந்த செமன்ல இருக்குற டி என் ஏ வும், ரங்கனுடையது நூறு பர்சென்ட் ஒத்துப்போகுது சார்’

‘ஓ..அப்போ என்ன சொல்ல வரீங்க தரணி?’

‘சார், ரொம்ப சிம்பிள் சார்.. நேத்து வேலைக்கு வந்தவன் 8 மணிக்கு வெளியில போயிட்டான்.. அதுக்கு எவிடென்ஸ், ரங்கன் பொண்ணும், அந்த சிமென்ட் தளமும் தான்..  அதுக்கப்புறம் இந்த வீட்டுல இருந்தது ரங்கனும், அந்தப் பொண்ணும் தான்…  அந்தப் பொண்ணு தனியா இருக்கிறதை பயன்படுத்தி ரங்கன் அவளை கெடுத்துட்டான்.. வெளியில சொல்லிடுவாளோன்னு கழுத்த நெரிச்சு கொலை பண்ணியிருக்கான் சார்..அதுக்கு ப்ரூஃப், அந்த பொண்ணோட பெண்ணுருப்புல அந்த ரங்கனோட விந்தணுதான்…’

தரணியிடமிருந்து ஃபாரென்சிக் மற்றும் அடாப்ஸி ரிப்போர்ட் வாங்கி ஆழமாக சற்று நேரம் பார்த்துவிட்டு, ரஞ்சன் மீண்டும் அண்ணாந்து பார்க்க அந்தக் கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அந்த ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

‘சரி.. நீங்க ரிப்போர்ஸ் எல்லாத்தையும் ஒண்ணா ஃபைல் பண்ணிட்டு இருங்க. நான் இதோ வந்திடறேன்’ என்றுவிட்டு ரிப்போர்ட்களுடன் அகண்டார் ரஞ்சன்.

ரஞ்சன் நேராக காவலாளி ரங்கனின் வீட்டை விசாரித்து அடைந்தார். அங்கே ரம்யா இருந்தாள். வீட்டை கவனமாக நோட்டமிட்டவருக்கு ஹாலில் ஒரு மூலையில் ஒரு மூட்டை கண்ணில் பட்டது.

‘என்ன இது?’

‘பழைய துணிங்க. லாண்டரிக்கு போடுறதுக்கு.. குமாரு வந்து எடுத்துட்டு போவான்’

‘குமாரா?’

‘ஆமாங்க.. அவன் லாண்டரியும் பண்ணுவான். அவன் தான் எங்க வீட்டுக்கு லாண்டரி’ என்றாள் ரம்யா.

‘அவன் வீடு எங்க?’

‘பக்கத்துலதான்’

‘காட்டறியா?’

ரம்யா வழிகாட்ட, அருகாமையில் இருந்த குமாரின் வீட்டை அடைந்த ரஞ்சன் அங்கே மேஜையில் இருந்த சில மெடிக்கல் பில்களை எடுத்து வைத்துக்கொண்டார்.

குமாரின் விட்டை விட்டு வெளியேறி, அந்த மெடிக்கல் பில்லுக்கான மருந்துக்கடையில் விசாரித்துவிட்டு கொலை நடந்த வசந்த விகாருக்கு  வந்தடைந்த ரஞ்சன், தரணியை அழைக்க, தரணி விரைப்பாய் வந்து நின்றார்.

‘தரணி, அந்த குமாரை கஸ்டடியில எடுத்தாச்சா?

‘எடுத்தாச்சு சார்’

ரஞ்சன் மீண்டும் அண்ணாந்து பார்க்க அந்தக் கிளிக்கூண்டு தெரிந்தது. அகலமான கிளிக்கூண்டு. அதன் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு பறந்து வந்து அமர்வதும், பிறகு, பின்பக்கமாக நடந்து மீண்டும் துவங்கிய முனைக்கு வருவதுமாக இருந்தது அந்த அழகான கிளி.

மாலை நான்கு மணி அளவில் கையில் ரிப்போர்டுடன் வந்தார் தரணி. ரஞ்சன், ரிப்போர்டை வாங்கிப் பார்த்துவிட்டு,

‘தரணி, நேத்து எட்டு மணிக்கு அப்புறம் இந்த வீட்டுல எத்தனை பேர் இருந்தாங்கன்னு நீங்க நினைக்கிறீங்க?’ என்றார்.

‘ரெண்டு பேர் சார். ஒண்ணு அந்த ரங்கன், இன்னொன்னு அந்தப் பொண்ணு அஞ்சலி’

‘எப்படி சொல்றீங்க?’

‘ஃபுட் மார்க்ஸ் சார். சரியா கேட்டை பாத்த திக்குல இருக்கு. எட்டு மணிக்கு  புதுசா போட்ட சிமென்ட் தளத்து மேல நடந்து போயிருக்கான். கால் தடம் அவனோடதுதான். ஃபாரென்சிக்ல ஃப்ரூஃப் ஆயிடிச்சு’

‘ஒரு சமயம் அவன் பின்பக்கமா நடந்திருந்தா?’

சற்று நேர யோசனைக்கு பிறகு,

‘அவன் வீட்டுக்குள்ள போயிருக்கலாம் சார்’

‘எக்ஸாக்ட்லி.. குமார் வெளியில போகலை.. வீட்டுக்குள்ளதான் போயிருக்கான்.. ராத்திரி முழுக்க இந்த வீட்டுக்குள்ள தான் இருந்திருக்கான்.. அவனுக்கு அஞ்சலி மேல ஒரு கண்ணு.. அவளை அனுபவிக்க திட்டம் போட்டிருக்கான்.. இந்த வீட்டுக்கு சிமென்ட் வேலைக்கு போகுறதுக்கு முந்தி மருந்துக்கடையில ஆணுறை வாங்கியிருக்கான். அவனுக்கு கல்யாணம் ஆகலை.  காலைல குமார் தான் முதல்ல வந்திருக்கான்..’

‘ஓகே சார்.. ஆனா, அந்தப் பொண்ணோட வாகினாவுல ரங்கனுடைய செமன் ட்ரேசஸ் இருக்கிறதா நிரூபிக்கப்பட்டிருக்கே சார்..அது எப்படி?’

‘அதை அவனே சொல்வான்.. இழுத்துட்டு வாங்க அவனை’ என்றார் ரஞ்சன்.

சப் இன்ஸ்பெக்டர் தரணி பணிக்க, இரண்டு கான்ஸ்டபுல்கள் குமாரை இழுத்து  வந்தார்கள். ரஞ்சன் கையிலிருந்த லத்தியை எடுத்து,  குமாரின் நடுவயிற்றில் வேகமாக குத்த, ‘அம்மாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்’ என்ற கூவலுடன் அலறி விழுந்தான் குமார்.

‘சொல்றா. ராத்திரி ஏன் இந்த வீட்டுக்குள்ள பதுங்கின? அவளை கற்பழிச்சது நீ. கொன்னது நீ.  ஆனா, பழியை ரொம்ப புத்திசாலித்தனமா வாட்ச்மேன் ரங்கன் மேல போட்டுட்ட. அதுக்கு ரங்கன் வீட்டுல லாண்டரிக்கு துணி எடுத்தது உனக்கு வசதியாப் போயிடிச்சு.. அது எப்படின்னு  என் கொல்லீக் தரணிக்கு புரியிறா மாதிரி இப்ப நீ சொல்லப்போற.. இல்லைன்னா இதே லத்தி உன் வாய் வழியா குடல் வரைக்கும் போகும்’ என்றார் ரஞ்சன்.

அடிவயிற்றில் விழுந்த அடியால், மூச்சுத் திணறிய குமார் மெல்ல நிதானித்து,

‘அஞ்சலி மேல எனக்கு ஒரு கண்ணு சார். ரொம்ப நாளா நேரம் பாத்துக்கிட்டு இருந்தேன். அன்னிக்கு சிமென்ட் வேலை பாக்க என்னை கூப்பிட்டாங்க.. வீட்டுல ஓனர் இல்லை. அஞ்சலி தனியா இருந்தா. அதுதான் சமயம்ன்னு நான் மருத்துக்கடையில ஆணுறை வாங்கிக்கினேன். பத்து வருஷமா பொஞ்சாதி இல்லாம இருந்தாரு ரங்கன் சித்தப்பா. அவரு ராத்திரியில லுங்கியில கஞ்சி விடுவாறுன்னு தெரியும்.. லாண்டரிக்கு எடுத்தப்போ தண்ணி ஊத்தி, அவரோட விந்துவை சேகரிச்சேன்.. அதை அப்படியே ஒரு ஆணுறையோட மேல் பாகத்துல தடவிக்கிட்டேன்… அன்னிக்கு நான் வெளியே போயிட்டேன்னு எவிடென்ஸ் உருவாக்க, சிமென்ட் தளத்துல நானா பின் பக்கமா நடந்து வீட்டுக்குள்ளாற போய் பதுங்கிட்டேன்.. நடு ராத்திரி எந்திரிச்சு, அந்த ஆணுறையை போட்டுக்கிட்டு அவளை கத்தியை கழுத்துல வச்சி ரேப் பண்ணினேன். அப்புறம் எங்க உண்மையை சொல்லிடுவாளோன்னு கழுத்தை நெரிச்சு கொலை பண்ணினேன். அப்புறம் காலைல சிமென்ட் வேலை பாக்க வரா மாதிரி வந்துட்டேன்’ என்றான் குமார்.

‘வாவ்.. ரஞ்சன் சார்.. சூப்பர் ப்ரேக்த்ரூ சார்..எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?’

‘அந்தக் கிளிதான் காட்டிக்கொடுத்தது. குமார் மேல சந்தேகம் வந்தது. ஆனா, அந்தப் பொண்ணோட வாகினாவுல ரங்கனோட செமன் எப்படின்னு குழப்பம் இருந்தது? குமாரோட வீட்டுல நோண்டினப்போ, கிடைச்ச மெடிக்கல் பில்ஸ வச்சு மெடிக்கல் ஷாப்ல விசாரிச்சப்போ, அவன் ஆணுறையும் வாங்கினதா சொன்னாங்க. ஒரு பேச்சுக்கு குமார் அந்த ஆணுறையை போட்டுக்கிட்டு அஞ்சலியை பலவந்தப்படுத்தினான்னு வச்சிக்கிட்டா, அப்போ செமன் ட்ரேஸ் ரங்கனோட எப்படி மேட்ச் ஆகுதுன்னு ஒரு கேள்வி வருது. குமார்தான் ரங்கன் வீட்டுல சலவைக்கு துணி எடுக்குறான்னு விசாரணையில‌ தெரிஞ்சது..சோ,  ஒரு ஆணுறையோட மேல்பக்கத்தை ஒருத்தர் ஏன் இப்படி பயன்படுத்தியிருக்கூடாதுன்னு யோசிச்சேன்.. குமார் மாட்டிக்கிட்டான்’ என்றார் ரஞ்சன்.

– ராம்பிரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationபேச்சுத்தமிழில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம்தொந்தரவு
author

ராம்ப்ரசாத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *