காக்கிச்சட்டை – சில காட்சிகள்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 13 of 15 in the series 1 மார்ச் 2015

நம்மூரில் ஒரு ‘கலாச்சாரம்’ இருக்கிறது. பல வீடுகளில் பையன் ஓட்டும் பைக் அப்பா வாங்கித்தந்ததாக இருக்கும். மதியம் 1 மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, குளிக்காமல் தொப்பையை சொரிந்துகொண்டு, அரியர்ஸ் எக்ஸாம்க்கு பிட் எழுதும் மகனைப் பற்றி அம்மாக்காரி அக்கம்பக்கத்து வீடுகளில் ‘என் புள்ள மாதிரி வருமா? அவன் மனசு தங்கம்’ என்றெல்லாம் என்றெல்லாம் ‘கலவாணி’ சரண்யா ரேஞ்சுக்கு பில்டப் தருவாள். இதையெல்லாம் கேட்டு வகையாக ஒரு பெண் வந்து மாட்டும். இந்த இரண்டு பெண்களுமாக சேர்ந்து, எப்படியோ ஒப்பேற்றி வேலை என்கிற பெயரில் எதையாவது ஒன்றில் அவனை ஒண்டவைத்து, சமூகத்தில் அவனுக்கு ஒரு அடையாளத்தை இவர்களாக வழங்கி, அவனுக்கு அம்மாவாகவும், பொஞ்சாதியாகவும், குடும்ப புகைப்படத்தில் இடம் பிடிப்பார்கள்.

இவ்வகை ஆண்கள் ஒரு சமூகத்தில் எண்பது விழுக்காடு இருக்கலாம். இவர்கள் பல வகைகளில் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை. தாயின் பாசமும், பெண்ணின் காதலும் எளிதில் கிடைத்துவிடும். போதாதகுறைக்கு அந்த பெண்களே, சமூக அடையாளத்துக்கும் வழி பண்ணி விடுவார்கள். பிறந்த நேரம் என்ற ஒன்று இருக்கிறது. எதிர்பாலினத்திடம் ஒரு பரிதாப உணர்வை சம்பாதிக்கும் இடத்தில் இருப்பதே இவர்களது அதிக பட்ச தகுதியாக இயல்பிலேயே இருந்துவிடும்.

சிவாவின் குணச்சித்திரம் இந்தப் படத்தில் இந்த வகையான அதிர்ஷ்டசாலி ஆண்களை பொருந்தி இருக்கிறது.

க்ரைம் ப்ராஞ்ச் கான்ஸ்டபில் சிவா. போலீஸாவது கனவு என்றெல்லாம் படத்தில் பில்டப் கொடுக்கிறார்கள்.

‘கொலை செஞ்சவன் ஒரு வலதுகை பழக்ககாரனாகத்தான் இருக்கவேண்டும்’ என்பதை ஒரு மருத்துவர் சொல்ல, சிவா பவ்யமான மாணவன் போல கேட்டுக்கொள்கிறார். ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு கேஸ்கள் பற்றி கண்டுபிடிப்பது திவ்யா தான். போதாதகுறைக்கு அவரே அதற்கான ப்ரூஃப்களை சிவாவிடம் சேர்க்க அர்த்த ராத்திரியில் மெனக்கெடுகிறார்.

இந்த லட்சணத்தில் அமேரிக்க ரிட்டர்னை கலாய்ப்பதற்கு ஒரு காட்சி வேறு. ஒரு லட்சம் மாத வருமானம் என்பார் அமேரிக்க ரிட்டர்ன். சிவா பதிலுக்கு மின்னலே மாதவன் போல ‘லோக்கல்.. பதினான்காயிரம் சம்பளம்’ என்பார். இவ்வகை காட்சிகள் வெகு நாட்களாக, தரமான இயக்குனர், தரமில்லாத இயக்குனர் என பேதமின்றி திரைப்படங்களில் திணிக்கப்படுவதற்கு பின்னால், ஒரு அரசியல் இருக்கிறது. பார்வையாளனின் எண்ணிக்கையே திரைப்படங்களின் வெற்றியை தீர்மானிக்கிற என்கிற அளவுகோளின் படி அமேரிக்கா ரிட்டர்ன்களால், திரைப்பட உலகத்திற்கு பெரிதாக லாபமில்லை என்பது தான் அது. திரைப்படங்கள் வெற்றிபெற, எண்பது விழுக்காடு மனிதர்களை திருப்திசெய்ய வேண்டும்.

காட்சி படுத்த வேண்டியவை இருந்தும் திரைப்படங்கள் புறக்கணிக்கும் விஷயங்கள் இருக்கின்றன.

எதுவுமே சராசரி என்கிற அளவிற்கு மிஞ்சி இருந்தால், அது பிழைக்க கடும் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் சந்திக்கத்தான் வேண்டும் என்பது தான் நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.

உள் நாட்டில் ஒரு கம்பெனி வேலையை எடுத்துக்கொள்ளுங்கள். ஆறு பேரில் ஐந்து பேர் சராசரி. ஒருத்தர் சராசரிக்கும் மேல் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடினமான வேலையை இந்த ஐந்து பேரும் நைசாக, அந்த சராசரிக்கும் அதிகமான ஆளிடம் தள்ளிவிடுவார்கள். அந்த ஆறாவது ஆள் ராவும் பகலும் உழைத்து அந்த வேலையை முடிக்க, மீதமுள்ள ஐந்து பேரும் ‘ஒப்பேற்றிவிட்டு’ போய் விடுவார்கள். ஆனால், வருட முடிவில், ரேட்டிங்கில் இந்த ஐந்து பேரும் சேர்ந்துகொண்டு, ஆறாவது ஆளிற்கு ஆப்பு வைத்துவிடுவார்கள். இங்கே, சராசரிக்கும் அதிகமான திறனுள்ள ஒருவர் ஏமாற்றப்படுவதே நடக்கிறது. திறமை இருந்தும் ஏன் ஏமாளியாக இருக்கவேண்டும்? திறமை தான் இருக்கிறதே? எங்கே பிரச்சனை என்று நோண்டினால், ‘சராசரிகள் இருக்கும் இடத்தில் சராசரிக்கும் அதிகமானவன் இருந்தால் நேரும் சங்கடங்கள். நம்முடைய இடத்தை நோக்கி நாம் போகாவிட்டால், நேர்வது அவமானமும், அசிங்கமும் தான்’ என்று புரியவரும். அப்படியானால், சராசரிக்கும் அதிகமானவன் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அங்கே போய் விட வேண்டும் என்கிற நிர்பந்தம் தலை தூக்குகிறது.

சிலர் இயல்பிலேயே கடுமையாக வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். சராசரிகளுக்கு இவர்களால் எப்போதுமே பிரச்சனைதான். இந்த ஏற்ற இறக்கத்தில் ஒரு குழுவில் நேரும் மனச்சிக்கல்கள் ஏராளம். வேண்டுமென்றே ஒத்துழைக்க மறுத்தல், பாராமுகம் காட்டுதல், பாராட்ட மறுத்தல், சின்ன விஷயங்களை ஊதி பெரியதாக்குதல் போன்றவைகளால், சராசரிகள் , சராசரிக்கும் அதிகமானவர்களுக்கு ஏற்படுத்தும் நெருக்கடிகள் ஏராளம்.

இதனை எளிமையாக விளக்க இன்னொரு உதாரணமும் சொல்ல முடியும். ஒரு லட்சம் சம்பளம் வாங்குவதே பெரும் பிரச்சனை தான். பெண் பார்த்தால், பெண்ணிற்கு அக்காள் கணவர் இருபதாயிரம் சம்பளம் வாங்குபவராக இருப்பார். பின்னாளில் ஈகோ பிரச்சனை வரக்கூடாதென அவரே அதை இதை சொல்லி, இந்த வரனை தவிர்த்துவிடலாம். அக்காள் தங்கைகளுக்குள்ளேயே சண்டைகள் வரும். ‘எனக்கு மட்டும் இப்படி பாத்துட்டு, அவளுக்கு மட்டும் பெரிய இடமா பாக்குறீங்க?’ என்று வாக்குவாதங்கள் வரும். உள்ளூரில் பெண் ஏதாவது வங்கியிலோ, கல்லூரியிலோ பணியிலிருப்பார். அவர் காலம் முழுவதும் வேலைக்கு போக வேண்டும் என்று எண்ணியிருப்பார். வெளி நாட்டி மாப்பிள்ளை என்றால் வேலையை விட வேண்டி வரும் என்பதால் அவரே வெளி நாட்டு மாப்பிள்ளை வேண்டாம் என்பார். இதற்கப்புறம், ஜாதக பொறுத்தம், ஜாதிப் பொறுத்தம் என்கிற பெரிய கண்டம் இருக்கிறது. இப்படி பல காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

போதாதகுறைக்கு இவர்களுக்கெல்லாம் அடுத்தவர்களது பரிதாபமும் கிட்டாது. ஏனெனில் ‘காக்கிக்சட்டை’ மாதிரி படங்கள். ஜோல்னா பை மாட்டிக்கொண்டு, மூன்று மாத வாடகை தராமல், கண்ணாடி போட்டுக்கொண்டு நாவல் எழுதுபவர்களைக் கண்டால் பரிதாபம் வரும். அதே நாவலை, அமேரிக்காவில் ஐடியில் பணியில் இருக்கும் ஒருவன் செய்தால். வருவதில்லை தானே.சுருக்கமாக சொல்வதானால், “எதுவுமே சராசரி என்கிற அளவிற்கு மிஞ்சி இருந்தால், அது பிழைக்க கடும் பிரச்சனைகளையும், போராட்டங்களையும் சந்திக்கத்தான் வேண்டும்”.

அடையாளத்தேடல் என்பது மிகப்பெறும் வாதை. ஏனெனில், அடையாளங்களை பொறுத்துத்தான் பொருண்மை உலகில் ஒருவரின் வாழ்வாதார தேவைகள் பூர்த்தியாகின்றன. ஆகையால் அடையாளங்கள் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறான், சராசரிக்கும் அதிகமானவன். திறமை எங்கே அழைத்துச்செல்கிறதோ, அங்கே போக வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது தான்.

இந்த ஏற்ற இறக்கங்களை அதன் தன்மைகளோடும், சாதக பாதகங்களை சமூகத்திற்கு பயனுள்ள வகையில் மாற்றவே ஒரு சமூகம் சிந்திக்கவேண்டும், முயலவும் வேண்டும்.

ஆனால், ‘காக்கிச்சட்டை’ போன்ற திரைப்படங்கள், இதைச் செய்வதை விட்டுவிட்டு, எண்பது விழுக்காடு மனிதர்களை திருப்திப்படுத்தும் மலினமான யுக்தியை கொண்டே உருவாக்கப்படுகிறது. நகைச்சுவை என்னவெனில், இதுவே தெரியாமல், இந்தப் படத்தை சராசரிக்கும் அதிகமான திறன்கள் கொண்டவர்களே ரசித்து பார்ப்பது, புத்தகங்களை ஒரு சமூகம் வெறுத்தால் என்னவாகும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் ஆகிறது.

‘அவன் சாகலை. அவனால் ஆறு பேருக்கு வாழ்க்கை கிடைச்சிருக்கு’ என்று நர்சாக வரும் திவ்யா சொல்வதாக ஒரு காட்சி. எதிலுமே மேலோட்டமான பார்வை எத்தனை அபத்தமான புரிதல்களுக்கும், அதன் மூலமாக சரி – தவறு, நியாயம் – அநியாயம் ,தர்மம் – அதர்மம் போன்ற இருமைகளின் பாகுபாடுகள் எத்தனை அபத்தமானவைகள் என்பதற்கு நல்ல உதாரணம். ஒரு சமூகத்துக்கு பின் நவீனத்துவ சிந்தனைகளின் முக்கியத்துவத்தையும், புத்தகங்களின் அத்தியாவசியத்தையும் உணர்த்துகிறது.

ஷிரிதிவ்யா அழகாக இருக்கிறார். நாம் அணிந்திருக்கும் கண்ணாடிக்கும் சேர்த்து, அவரிடம் காசு தரலாம் போலிருக்கிறது. விஜய் டிவி நிகழ்ச்சியில் ‘இருபது கோடி ரூபா குடுங்க.. நானும் சிக்ஸ்பேக் பண்ணிக்காட்டுறேன்’ என்றவர் சிவா. போலீஸ் கெட்டப்பில் ஒல்லிக்குச்சி சிவா பொருந்தவில்லை. கொஞ்சமாவது பாடியாக தெரிய வேண்டும் என்று சட்டைக்குள் சட்டை போட முயன்றும் தோல்விதான். கொடுக்கப்படும் கேரக்டருக்கென தனியாக உழைக்கவேண்டும். சினிமா உலகில் உழைக்க பலர் காத்திருக்கிறார்கள். இருந்தும் வாய்ப்பு யாருக்கு வந்தடைகிறது என்பதைப் பார்த்தால்……………………………….

காக்கிச்சட்டை – தகுதிக்கு மீறிய வாய்ப்பு.

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigationஉதிராதபூக்கள் – அத்தியாயம் 4ஒவ்வொன்று
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *