தப்பிக்கவே முடியாது

This entry is part 11 of 15 in the series 1 மார்ச் 2015

நாகா டோர்செட் ரோட்டில் இருக்கும் அந்த மூவறை வீட்டை 70 களில்தான் வாங்கினார். 20000 தான் விலை. மாதத்துக்கு 120 வெள்ளி செலுத்திக் கொண்டிருக்கிறார். நாகலிங்கம் என்கிற நாகாவைப் பற்றித் தெரிந்துகொள்வோம். 12 வயதில் சிங்கப்பூருக்கு வந்தவர். வந்ததுமுதல் அடைக்கலராஜ் வம்சாக்கடையில் தான் வேலை செய்கிறார். அடைக்கலராஜிடம் தான் காசு என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, குடும்பம் என்றால் என்ன என்றெல்லாம் நாகா தெரிந்துகொண்டார். ‘நமக்கு வரும் காசை கடவுள் மாதிரி பாக்கணும் தம்பீ. அப்பத்தான் கடவுள் விரும்புற வழில அது செலவாகும்’ என்பார். ‘யாருக்கும் புத்தி சொல்லக்கூடாது. நாம வாழ்ந்து காட்டுனா அவுங்க மாறிடுவாங்க’ என்பார். அந்தக் கடையில் கல்லாவுக்கு அவர் தரும் மரியாதையே தனி. அந்த நாற்காலியில் வெள்ளை உரைபோட்ட தட்டையான மெத்தை போடப்பட்டிருக்கும். அதில் மரியாதையாக வந்து அமர்வார். அனாவசியமாக எதையுமே பேசமாட்டார். இப்போது அவருடைய மகன் அருணாசலம் கடையை கவனித்துக் கொண்டிருக்கிறார். அந்த நாற்காலி அந்த மெத்தை மாறவில்லை. இப்போது கடையில் மூத்த ஊழியர் நாகாதான். அருணாசலம் இல்லாத சமயத்தில் நாகா தான் கல்லாவைப் பார்த்துக் கொள்வார். அந்த நாற்காலியை மரியாதையாக ஓரமாய் நகர்த்திவைத்து விட்டு நின்றுகொண்டுதான் கல்லாவில் காசைப் போடுவார் எடுப்பார். அருணாசலம் சொல்லியும் அவர் கேட்கவில்லை. ‘அந்த நாற்காலியைப் பார்த்தால் அப்பா உட்காந்து இருக்கது மாரியே இருக்கு தம்பீ. பரவாயில்ல’ என்பார்.
நாகாவின் மனைவி வள்ளி. நாகா வள்ளித்தாயீ என்றுதான் கூப்பிடுவார். ‘ஈன்ற தாயை நான் கண்டதில்லை. எனது தெய்வம் வேறெங்குமில்லை.’ கண்ணதாசன் பாட்டில் சொன்னதை வாழ்க்கையாக்கிக் கொண்டவர் நாகா. திருமணமாகி பத்தாண்டுகள் தள்ளிப் பிறந்தவன்தான் பாலா. பிரசவத்திற்காக ஒரே கட்டில் இருக்கும் சிறப்புப் அறையை கே கே மருத்துவமனையில் பதிவு செய்தார். பாலா பிறந்த 40ஆம் நாள் தேவையை 100 பேரை அழைத்து விருந்து வைத்துக் கொண்டாடினார். ‘அந்த தாள்ச்சாவில் வெண்ணையாக வெந்த கத்தரிக்காய் ருசி அடடா’ என்று இப்போதுகூட சப்புக் கொட்டுவார் அருணாசலம். ஏகப்பட்ட உடைகள் பால்பாட்டில்கள் என்று பரிசுகள் குவிந்தன. வள்ளித்தாயின் தோழி தீபா 5 பிள்ளைகளுக்குத் தாய். பால் பாட்டில்களைப் பார்த்துவிட்டுச் சொன்னார். ‘இந்தப் பாட்டில்களப் பாத்தா இன்னொரு புள்ள பெத்துக்கணும்போல இருக்கு வள்ளி’ அதை நினைத்து நினைத்து சிரித்துக் கொள்வார் வள்ளி.
நாகா போன்று ஒரு கணவன் அமைய பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும் தெரியுமா? காலணியை கழட்டி வைக்கும்போதே அந்தக் காலணி வைக்கும் தட்டலமாரியை தட்டி சுத்தம் செய்து விடுவார். பாலா விட்டுச்சென்ற விலையுயர்ந்த காலணியை துடைத்து உள்ளே எடுத்து வைத்துவிடுவார். கழுவக்கிடக்கும் பாத்திரங்களை கழுவிவிடுவார். காய்ந்திருக்கும் உடுப்புகளை எடுத்து மடித்து அந்தந்த அலமாரியில் சேர்த்துவிடுவார். மின்விசிறி, மின்விளக்கு எதிலாவத் ஒரு ஒட்டடை நீங்கள் பார்த்துவிட்டால் 1000 வெள்ளி பரிசு உங்களுக்குத் தரலாம். அவ்வளவு சுத்தம். வாரம் ஒருமுறை வெற்றிட விளக்குமாறால் (வேகூம் கிளீனர்) வீட்டை உறிஞ்சித்தள்ளி ஈரத்தூரிகையால் (மோப்) மொத்த வீட்டையும் துடைத்துவிடுவார். வாரம் ஒரு முறை தலையணை மெத்தைக்கு உரை மாற்றுவதும் நாகாதான். எல்லாவற்றையும் முடித்து கடைக்குப் போகும்போதே என்னென்ன சாமான்கள் அன்றைக்கு வாங்க வேண்டும் என்ற பட்டியலும் தயாராகிவிடும். வரும்போது வாங்கி வந்துவிடுவார். வள்ளி எப்போதும் கட்டாவ் வாயில் அல்லது கைத்தறி சேலைகள் தான் அணிவார். எல்லாமே விலை உயர்ந்ததாகத்தான் இருக்கும். வெள்ளைக்காரர் யாருக்காவது தமிழனின் நாகரிகம் பற்றித் தெரிந்துகொள்ள ஆசை ஏற்பட்டால் நாகாவின் அடுப்படியைக் காட்டலாம். வெள்ளைக்கல் திருகை ஆட்டுக்கல், அம்மி, மண் களயங்கள், மண்பானைகள், மீன் குழம்பு வைக்க, பால் உறை ஊற்ற மண் சட்டிகள், பனைநாரால் பின்னிய முறம் கூடைகள் எல்லாமே பார்க்கலாம். எல்லாமும் அறந்தாங்கி வாரச்சந்தையில் ஆசைஆசையாய் வாங்கி வைத்து கொண்டுவந்து சேர்த்தது. தொடக்கப்பள்ளி படிக்கும்போதே விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பாலாவுக்கு நாகா வாங்கித் தந்திருந்தார். ஆசிரியர் கேட்டுக் கொண்டதால் அந்த கடிகாரத்தை பாலா பள்ளிக்கு வரும்போது கட்டுவதில்லை. வள்ளித்தாய் அவனுக்கு தினமும் 2 வெள்ளி கொடுப்பார். அவனுடைய பென்சில் டப்பாவில் யாருக்கும் தெரியாமல் 2 வெள்ளியை வைத்துவிடுவார் நாகா. அது பாலாவுக்குத் தெரியும். குடும்பம் ஒரு கோயில் என்பது இந்தக் குடும்பத்தைப் பார்த்துத்தானோ?
90களில்தான் கணினி பயன்பாட்டுக்கு வந்தது. எல்லாருக்கும் முந்தி பாலாவுக்கு கணினி வாங்கித் தந்தவர் நாகாதான். செலவுகள் கூடிக்கொண்டே போகின்றன. ஒரு நாள் வீ.வ.க விலிருந்து மாதத்தவணை செலுத்தும் நாள் கடந்துவிட்டது. உடனே காசைக் கட்டவேண்டுமென்று கடிதம் வந்தது. இப்படியெல்லாம் நாகாவுக்கு கடிதமே வராது. எல்லா பாக்கிகளையும் உடனுக்குடன் கட்டிவிடுவார். ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கடிதம் வந்தது ஞாபகம். தண்ணிக்காசு செலுத்தும் நாள் தாண்டிவிட்டது என்று. இது இரண்டாவது கடிதம். ஆனாலும் வீட்டுக்கு செலுத்தமுடியாமல்தான் தாமதமாக்கினார் நாகா. நாகாவுக்குப் புரிந்தது. தன் சம்பாத்தியம் போதவில்லை என்று. ஒரு நாள் தமிழ்முரசில் ஒரு விளம்பரம் வந்தது. ஜாகா வேலைக்கு ஆள் தேவையாம். உடனே நேரில் சென்றார். இரவு 10 மணிமுதல் 3 மணிவரை 5 மணிநேர வேலையை ஒப்புக்கொண்டார்.எந்தக் காரணம் கொண்டும் பாலாவின் எந்தத் தேவையும் தடைபட்டுவிடக் கூடாது. பாலாவின் அறையைப் பார்த்திருக்கிறீர்களா? அது மூவறை வீடுதான். அவன் அறைக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தமே இருக்காது. ஒரு 5 நட்சத்திர ஹோட்டல் அறைபோல ஆக்கியிருந்தார் நாகா.தினமும் சோப்புப் போட்டுக் குளிப்பதுபோல் அந்த அறையை சுத்தம் செய்வது நாகாதான். சுவர் வண்ணம், குளிரூட்டி, அலமாரி, கட்டில் மெத்தை தலையணைகள் அத்தனையும் எப்போதும் புதிதுபோலவே தோன்றும். வாழ்க்கை ஓடுகிறது. இதோ பாலா தேசிய சேவையில் சேரும் நாள் வந்துவிட்டது. நாகாவும் வள்ளித்தாயும்தான் பாலாவைக் கூட்டிச் சென்றார்கள். பாலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டார் நாகா. பாலாவின் முதுகுக்கு மட்டும் தெரிவதுபோல் அழுதார். அந்த அதிகாரியின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னார் ‘எம்புள்ளய நல்லாப் பாத்துக்கங்கய்யா’ அந்த அய்யா என்ற வார்த்தையைச் சொல்ல முடியாமல் குளறினார். குலுங்கி அழுதுவிட்டார். பாலா பிறந்தபோது சிரித்துக் கொண்டே கண்ணீர் சிந்தியதை வள்ளித்தாயீ பார்த்திருக்கிறார். ஆனால் இப்படி அழுது அவர் பார்த்ததில்லை. ‘எல்லாரும் பாக்குறாங்கப்பா. சும்மா இருங்கப்பா’ என்றான் பாலா.
கடையில் கல்லாவில் நின்றுகொண்டிருந்தபோது அப்படியே மயக்கம்போட்டு விழுந்துவிட்டார் நாகா. தூக்கம் பத்தவில்லையோ? அருணாசலம்தான் மருத்துவமனியில் சேர்த்தார். பாலா வந்து பார்த்தபோது இரண்டு பாட்டில்களில் சலைனும் குளுகோசும் ஓடிக் கொண்டிருந்தது. மானிட்டர் இருதயத் துடிப்பை எழுதிக் கொண்டிருந்தது. ‘என்னப்பா இங்க வந்து படுத்துட்டிங்க’ என்றான் பாலா. அவன் போனபிறகு வள்ளித்தாயீ சொன்னார். ‘அவனுக்குக் கொஞ்சங்கூட பாசம் தெரியலங்க. கலங்குறானா பாத்திங்களா?’ என்றார். ‘அப்புடி இல்ல தாயீ. அவனுக்குக் காண்பிக்கத் தெரியல. நடிக்கத் தெரியல.ஒனக்குத்தான் புரியல. இன்னும் சில மாதங்கள்ல வீட்டுக்கடன் முடிஞ்சிடும். வீட்ட அவங்கிட்ட கடனில்லாம ஒப்படச்சுடணும்.அவன் வெவரமானவே. பொழச்சுக்குறுவான்.’ என்றார் நாகா. ‘ஒரு சேதில்ல. நம்ம குமாரசாமி இல்ல. அவரு மகளோட சுத்துறான். வீட்லயும் அந்தப் புள்ளக்கிட்டதான் எப்போதும் பேசிக்கிட்ருக்கான். ஒங்களுக்கும் அந்தப் புள்ளயத் தெரியும். அது பேரு தனம்.’ என்று ஒரு புது சேதியைத் தூக்கிப் போட்டார் வள்ளித்தாயீ. ‘அட! அந்தப் புள்ளயா. குமாரசாமி விரும்பிட்டா முடிச்சுற வேண்டிதுதான்’ சிரித்தார் நாகா.
எல்லா சிகிச்சையும் முடிந்து நாகா வீட்டுக்கு வந்துவிட்டார். இரண்டு மாதச் சம்பளத்தை ரொக்கமாகக் கொடுத்தார் அருனாசலம். ‘நல்லா ரெஸ்ட் எடுங்கண்ணே. கடய நா பாத்துக்கிறேன். தாயம்மா. உங்களுக்கு ஏதும் வேணும்னா ஒடனே கூப்படுங்க. அண்ணே எங்க கடையில வேல பாக்குறாருன்னு ஒருக்காலமும் நெனக்காதிங்க தாயீ. அவரு எனக்கு அப்பாம்மா’ அருணாசலத்திற்கு குரல் உடைந்தது.
வீட்டுக் கடனின் கடைசித் தவணையை செலுத்திவிட்டார் நாகா. வள்ளித்தாயிடம் சொன்னார். ‘அப்பா! முடுச்சாச்சு தாயீ. இனிமே இந்த வீடு நம்ம வீடு. நாம புள்ளக்குத் தர்ற ஒரே சொத்து இதுதான். ரொம்ப சந்தோஷமா இருக்கு தாயீ.’ என்றார். ரொம்ப நல்ல மனுஷங்களுக்கு சந்தோஷத்திலதான் இறப்பு வருமாம். அன்று இரவே நாகா தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். அந்த வீட்டுத் தொகுதிக்குக் கீழேயே நிறைய நாற்காலிகள் போடப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் வருவதும் போவதுமாக இருந்தனர். ஏராளமான மலர் வளயங்கள். அதில் ஒரு வளயத்தில் இப்படி எழுதியிருந்தது. ‘ஒரு சிலர்தான் மனிதர்களாக வாழ்கிறார்கள். நாகா மாதிரி’ அந்த வளயத்தை வைத்தவர்கள் அடைக்கலராஜ் கடை சிப்பந்திகள் தான். பாலா அசந்துவிட்டான் . ‘அப்பாவுக்கு இவ்வளவு பெரிய வட்டமா? எப்படி எனக்கு யாரையுமே தெரியவில்லை. அவர்களுக்கெல்லாம் என்னைத் தெரிகிறதே.’ பதிலில்லாத கேள்விகளை தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
ஒரு துக்கம் முடிந்தது. ஒரு கொண்டாட்டம் தொடங்கியது. குமாரசாமி வீட்டுக்கு பெண் கேட்கச் சென்றது முதல் அவன் திருமணம் வரை அத்தனையையும் அருணாசலம் தான் செய்தார். தனம் மருமகளாக வந்து நுழைந்தாள். வள்ளித்தாயீ வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைப் புரட்டத் தயாரானார். பகல் முழுவதும் தனியாக இருப்பது எப்படி? இதுதான் போராட்டமா? தன் வீட்டுக்குப் பக்கத்தில்தான் பக்ருதீன் சாப்பாட்டுக் கடை. அங்குதான் சிலசமயம் வள்ளித்தாயீ பசியாறுவார். நாகாவுக்கு ரொம்பவும் நெருங்கிய நண்பர் அவர். அந்தக் கடையில் தோசை சுடும் வேலையை ஏற்றுக்கொண்டார் வள்ளி. ‘அம்மா இங்க வேல பாக்குறதா நெனக்காதீங்க. நீங்க எங்களோட இருந்தா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாமில்லியா?’ என்றார் பக்ருதீன். அது உண்மைதான். இங்கிருப்பது கொஞ்சம் பாரம் குறைவதுபோல் இருக்கிறது.
நாகா வாங்கித் தந்த புடவைகளெல்லாம் பழசாகிவிட்டது. புதிதாக அவர் எந்தப் புடவையுமே வாங்கவில்லை. அந்தச் சேலைகளை துவைக்கும் எந்திரத்தில் போடுவதே இல்லை. தனியாக கையில் துவைத்து காயப்போட்டுக் கொண்டார். ஒருநாள் தனம் அறையிலிருந்து பேசுவது தெளிவாகக் காதில் விழுந்தது. ‘ஒங்க அம்மாவோட துணிகளப் பாத்தாலே அருவருப்பா இருக்கு. வெளியில அவங்க துணிகளப் போடச் சொல்லாதீங்க. அவங்க ரூமுலேயே காய வச்சுக்கட்டும்.’ அந்த அறையின் சுவர்களை வெறிக்க வெறிக்க பார்த்தார் வள்ளித்தாயீ. ‘நா இங்கதான் இருக்கேன் வள்ளித்தாயீ. கவலப்படாத’ நாகா பேசுவதுபோல் இருக்கிறது. ஒவ்வொரு சம்பவமும் முதல் சம்பவத்தைத் தூக்கிச் சாப்பிடுவதுபோல் இருக்கிறது. அடுத்த கட்டம் இதோ அரங்கேறுகிறது. ‘அம்மா! நாங்க ஒரு காண்டோ வாங்கலாம்னு இருக்கோம். இந்த வீட்ட வித்துட்டு அங்கே போயிடுவோம். ரெடியா இருங்க. நாளக்கு ஹவுஸிங் போர்டு போகணும்.’ தொண்டைக்குள் தூண்டிமுள் குத்திய மீன்போல் துடித்தார் வள்ளித்தாயீ. ‘வேண்டாம் பாலா. வேற வீட்ல என்னால இருக்கமுடியாது பாலா. எனக்குப் பிறகு வித்துக்க பாலா. நா இருக்குற வரக்கும் இங்கேயே இருந்துர்றம்ப்பா’ முடிக்கமுடியாமல் சில சொற்களை விழுங்கினார். ‘நீ விக்கலேன்னா உன்னோட வாழமுடியாதுங்கிறா தனம். வெட்டிவிட்றவா?’ கத்தினான் பாலா. சாளரத்துக்கு வெளியே அமர்ந்திருந்த இரு மைனாக்கல் பயந்து பறந்தன. அடுத்த நாள் வீவக சென்றார்கள். சில தாள்களில் கையெழுத்துக் கேட்டார்கள். அந்தத் தாள்களிலேயே தன் இதயத்தையும் கழற்றி வைத்துவிட்டு வெளியேறினார் வள்ளித்தாயீ. இன்னும் ஒரு வாரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் ஒருநாள். பாலாவிடம் தனம் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. ‘ஒங்க அம்மாவோட சட்டி பானை அம்மி ஆட்டுக்கல்லு எதுவுமே அங்க வரக்கூடாது. தூக்கி எல்லாத்தயும் தோம்புல போடுங்க’ ‘ஏன் இன்னும் சாவு வரல.’ துடித்தார் வள்ளித்தாயீ. பக்ருதீனிடம் சொன்னார். அவர் சொன்னார். ‘எல்லாத்தயும் நா வச்சுக்கிறேம்மா. ஒங்களுக்கும் ஒரு ரூமு ஒதுக்கித் தர்றேன். நீங்க காண்டோ போகவேணாம்’ என்றார். ‘இல்லண்ணே. ஏதோ நாம கோவிச்சுக்கிட்டு இருக்கதுமாரி ஆயிடும். நானும் போறேன்’
காண்டோவில் ஒரு சிறிய அறை வள்ளித்தாய்க்கு ஒதுக்கப்பட்டது. யாரும் எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி கழிவறையைப் பயன்படுத்திக் கொண்டார். தனத்தின் முகத்துக்கு முன் நிற்பதை சுத்தமாக தவிர்த்துக் கொண்டார். சில நேரங்களில் வள்ளித்தாயீ அங்குதான் இருக்கிறார் என்பதைக்கூட மறந்துவிடுவார்கள். தூங்கமுடியாமல் துடித்தார். ஒருநாள் பாலாவும் தனமும் ரொம்பவும் காரசாரமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.
‘எப்புடிவாவது வாங்கீறணும். நம்ம ஸ்டேடஸு என்னான்னு எல்லார்க்கும் காண்பிக்கணும்.’
‘முடியாது தனம். மாதத்துக்கு 1000 வெள்ளி இன்ஸ்டால்மெண்டே வரும். இன்சூரன்ஸ், ரோட் டாக்ஸ், பெட்ரோல், இங்கே கார் நிறுத்த மாசம் 300 ஆக மொத்தம் மாசத்துக்கு 2000 இல்லாம கார வச்சு மேய்க்க முடியாது. ஒனக்கு புரியமாட்டேங்குது.’
ஊர்க்காரன் மாதிரி பேசாதீங்க. முதல்ல எறங்கணும். எப்படியும் சமாளிச்சிறலாமுன்னு அப்புறந்தான் தெரியும். ஒங்க அம்மா அந்த பக்ருதீன் கடையில எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க. இங்கதான் இருக்காங்க. சாப்பாடு அங்க ஆயிடுது. வாங்குற காசுக்கு என்னா செலவு. கார் நிறுத்துற காசயும் தண்ணிக்காசயும் அவுங்களக் கட்டச் சொல்லுங்க.’
எல்வாவற்றையும் கேட்டுக்கொண்டு மொத்த உடம்பையும் போர்வைக்குள் மூடிக்கொண்டு கிடந்தார் வள்ளித்தாயீ. அந்தப் போர்வை நாகா எப்போதும் போர்த்தியிருக்கும் போர்வை. உயிர் பிரியும்போதும் அதைத்தான் போர்த்தியிருந்தார். ‘வந்துரு தாயீ வந்துரு. என்கிட்ட வந்துரு.’ என்றது போர்வை. அடுத்தநாள் பக்ருதீன் கடைக்குப் போகும்போது கழுத்துக்கு மேலே தலை பாராங்கல்லாகக் கனத்தது. நேரம் ஆக ஆக தலையே அறுந்து விழுந்து விடும்போல் இருந்தது. பக்ருதீன் அப்படியே மருத்துவமனனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். பாலா இரவுதான் மருத்துவமனைக்கு வந்தான். அவனால் வள்ளித்தாயை உயிருடன் பார்க்கமுடியவில்லை. தனமும் வந்திருந்தாள். இப்போது தரமாட்டார்களாம். நாளைக்காலை 10 மணிக்குத்தான் கிடைக்குமாம். பாலாவிடம் பக்ருதீன் சொன்னார். என்னுடைய வண்டியிலேயே கொண்டுவந்துர்றேன் தம்பீ. ஒங்க காண்டோ எனக்குத் தெரியாது. நீங்களும் வந்தீங்கன்னா சேர்ந்தே போயிடலாம். இதில் எதிலுமே தனம் கலந்துகொள்ளவில்லை. வள்ளித்தாயின் சேமநலநிதியில் எவ்வளவு இருக்கும். அதை எப்படி வாங்குவது என்று கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். பிறகு பாலா தனத்திடன் ஏதோ பேசிவிட்டு வந்தான். பாலா சொன்னதை பக்ருதீன் எப்படித்தான் ஜீரணித்துக் கொண்டார் என்றே தெரியவில்லை. ‘எல்லாரையுமே அல்லாஹ் ஏதோ ஒரு நன்மைக்காகத்தான் அவரவர் போக்கில் வைத்திருக்கிறான். அதை நாம் குறை சொன்னாலோ மாற்ற நினைத்தாலோ அல்லாஹ்வுக்கு தெரியாததை நாம் செய்கிறோம் என்று ஆகிவிடும்’ என்று பக்ருதீன் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அதனால்தானோ என்னவோ பாலா சொன்னதை ரொம்ப சாதாரணமாக எடுத்துக்கொண்டார். அப்படி என்னதான் சொன்னான் பாலா. ‘நாம வீட்டுக்கே கொண்டுபோக வேணாம் அங்கிள் நேரே மண்டாய்க்கு கொண்டுபோய் விடுவோம். நம்ம வீட்ல இதுவரை எந்த நல்ல காரியமும் நடக்கல. மொதமொதல்ல ஒரு துக்கம் நடக்கவேணாம்னு தனம் சொல்லுது அங்கிள்.’ இந்தச் சேதியை சர்வசாதாரணமாக எடுத்துக்கொண்டார் பக்ருதீன். அவருக்குத்தான் இவர்களைப்பற்றி ஏற்கனவே தெரியுமே. பக்ருதீன் எல்லா ஏற்பாடுகளையும் மளமளவென்று செய்தார். தன் வீட்டுக்குக் கீழேயே இறுதி மரியாதையை வைத்துக்கொண்டார். இரவோடு இரவாக தமிழ்முரசில் விளம்பரமும் முறையாகக் கொடுத்துவிட்டார். எல்லாக் காரியமும் முடிந்தது. அன்று மாலை 5 மணியளவில் ஊர்வலம் புறப்பட்டது. கடைசியில் பாலாவும் தனமும் காரில் வந்தார்கள். முதல்முறையாக தான் ஒரு சுழலில் சிக்கித் தவிப்பதுபோல் பாலா உணர்கிறான். எல்லாம் கடந்துவிட்டது. இனிமேல் உணர்ந்து என்ன பயன். இதுவும் முடிந்துபோனது.
இப்போது தனம் ஒரு நாய் வாங்கியிருக்கிறாள். பெயர் ஜானியாம்.இப்போது பாலாவுக்கு இன்னொரு வேலையும் சேர்ந்து விட்டது. காலையில் அழைத்துக் கொண்டு நடக்கப் போகவேண்டும். ஒரு கையில் பிளாஸ்டிக் பை. இன்னொரு கையில் பிளாஸ்டிக் உரை. எங்காவது அசிங்கம் செய்தால் அள்ளிப் போட்டுக் கொள்ள வேண்டும். வள்ளித்தாயீ இருந்த அந்தச் சிறிய அறை இப்போது ஜானிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. என்ன ஜென்மமடா இதுகள். நாட்கள் ஓடுகின்றன.
ஒரு நாள் ஜானியை அழைத்துக் கொண்டு வழக்கம்போல் இறங்கினான் பாலா. கீழே சாலையில் ஒரு பிஎம்டபிள்யூ நின்று கொண்டிருந்தது. ஓட்டுநர் இருக்கையில் ஒரு பெண். பின்னால் ஒரு சக்கர நாற்காலியில் தன் அம்மாவை வைத்துத் தள்ளிக்கொண்டு வந்தான் புனிதன். ஓட்டுநர் இருக்கையில் இருப்பது புனிதனின் மனைவிதான். சக்கர நாற்காலி காரை நெருங்கியதும் அம்மாவின் இரு முழங்கால்களுக்குக் கீழே ஒரு கையும் இன்னொரு கையை மேல் முதுகில் தோள் பகுதியில் வளைத்துக் கொண்டு அப்படியே ஒரு கோழிக்குஞ்சைத் தூக்குவதுபோல் அம்மாவைத் தூக்கி பின் இருக்கையில் சரித்து அம்மாவின் புடவையைச் சரிசெய்தான். புனிதாவின் மனைவி தன் கைகளை அப்படியே பின்புறமாக நீட்டி அந்தத் தாயின் கையோடு பதித்துக் கொண்டார். காருக்குப் பின்னால் சாமான்கள் வைக்கும் பகுதியைத் திறந்து அதிலிருந்த ஒரு வெள்ளைத் துணியை எடுத்து உதறி அழகாக விரித்து அதன்மீடு அந்த சக்கரநாற்காலியை மடித்து படுக்கவைத்தான் புனிதன். பிறகு அம்மாவுக்கு அருகிலேயே அமர்ந்துகொண்டு ஒரு கையை கழுத்துக்குப் பின்புறமும் மறுகையை தாவாவைத் தாங்கியபடியும் வைத்துக் கொண்டு ‘ குலுங்காமல் ஓட்டுமா’ என்று செல்லமாக தன் மனைவியைக் கேட்டுக்கொண்டான் புனிதன். கார் நகர்கிறது. ஜானி பாலாவின் பிடியிலிருந்து நழுவி சற்று தூரத்தில் அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதை ஒரு காவல்துறை அதிகாரி நோட்டமிடுகிறார். இரண்டையுமே கவனித்த பாலா அவசரமாக ஓடி ஜானி போட்ட அந்த அசிங்கத்தை கையில் உரையில்லாமலேயே எடுத்து பையில் போட்டுவிட்டு காலல் துறை அதிகாரியைப் பார்த்து ‘எதிர்பாராமல் ஓடிவந்துவிட்டது. வழக்கமாக நான் கவனமாகப் பார்த்துக் கொள்வேன்.’ என்றான். ‘நல்லவேளை. கொஞ்சம் தாமதித்திருந்தால் சம்மன் பறந்திருக்கும். ஜாக்கிரதை. இதற்கெல்லாம் இப்போது அபராதம் அதிகம்’ என்றார். எப்படியோ சம்மனிலிருந்து தப்பிவிட்டான் பாலா.
மனிதர்களின் சம்மனிலிருந்து தப்பிவிடலாம். நாளை இறைவனிடமிருந்து இறங்கப் போகும் சம்மனிலிருந்து அவனால் தப்பிக்கவே முடியாது என்பது புனிதனைப் பார்த்தபின் அவனுக்குப் புரிந்திருக்கலாம்.
யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationவைரமணிக் கதைகள் -5 இடிதாங்கிஉதிராதபூக்கள் – அத்தியாயம் 4
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Govind says:

    மிக மிக நன்றி, இந்த மாதிரி கதைகள் தமிழின் சொத்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *