பேருந்து நிலையம்

0 minutes, 17 seconds Read
This entry is part 20 of 22 in the series 8 மார்ச் 2015

 

ஆனால் ஊருக்‍குள் புதிதாக நுழைபவர்களுக்‍கு ஊர்க்‍கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் எதுவும் தெரிவதே இல்லை. தான் தோன்றித் தனமாக ஊருக்‍குள் நுழையும் இவர்கள் சில விஷயங்களைப் பார்த்து, மனம் கொதித்த பின்னரே மாற்றமடைகிறார்கள். ஊர் பெரிய மனிதர்கள் ஊர் பழக்‍கவழக்‍கததை, கட்டுப்பாட்டை எவ்வளவுதான் எடுத்துக்‍ கூறினாலும் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.

கமுதி பேருந்து நிலையத்திற்குள் ஒருவன் வெள்ளை வேட்டி சட்டையை அணிந்து கொண்டு நுழைகிறான் என்றால் அவன் எவ்வளவு துணிச்சல் நிறைந்தவனாக இருக்‍க வேண்டும். நிச்சயமாக அவன் அந்த மகா அலெக்‍சாண்டரரை எதிர்த்து தீருத்துடன் போரிட்ட போரசின் வம்சாவழியாகத் தான் இருக்‍க வேண்டும். பேருந்து நிலையத்திலிருந்த 230 பேரும் தங்களது 450 கண்களால் அந்த மாவீரனனைப் பார்த்தார்கள். ( 2 பேர் குருட்டுப் பிச்சைக்‍காரர்கள் – 3 பேர் தூங்கிக்‍ கொண்டிருந்தார்கள்) அவர்களது மனதில் தோன்றிய எண்ணங்கள்:

அய்யோ பாவம்

அறியாமை நிறைந்தவன்

ஊருக்‍கு புதுசு போல

யாருக்‍கும் பயப்படாதவன்

தைரியசாலி

இவன்தாண்டா ஆம்பள

யாரு பெத்த பிள்ளையோ

இவனுக்‍கு ஏன் இந்த வேலை

யாராவது காப்பாந்துங்களேன்

புதுமாப்பிள்ளையாக இருப்பானோ

 

ஒரு டீக்‍கைடக்‍காரர் ஹரப்பா-மொஹஞ்சதாரோ பகுதியிலிருந்து தோண்டி எடுக்‍கப்பட்ட பனியன் ஒன்றை போட்டபடி, “தம்பீ ஊருக்‍கு புதுசுங்களா” என்று வினவினார். அந்த வெள்ளை வேட்டிசட்டை வீரனும் அதிகமாகவும் அல்லாமல், குறைவாகவும் அல்லாமல் நடுவாந்திரமாக தலையசைத்து விட்டு செல்ல முயன்றபோது, டீ கிளாஸ் கழுவிய தண்ணீரை அந்த மனிதர் திடீரென விசிறியடித்தார். அப்பொழுதுதான் புரிந்தது பேருந்து நிலையத்திற்குள் அத்தனை பேர் கும்பலாக இருந்தாலும், டீக்‍கடை முன் ஒருவர் கூட இல்லையே என்பது. அந்த விசிறியடிக்‍கப்பட்ட அழுக்‍கு நீரின் 90 சதவீதம் சாலையில் விழுந்தாலும், 10 சதவீத தண்ணீர் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்களின் மேல் லேசாக தெரித்தது . இது தினமும் நடைபெறும் விஷயம் என்பதால் அவர்கள் அதைக்‍ கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சகஜமாக எடுத்துக்‍ கொண்டார்கள். அந்த அழுக்‍கு நீரிலிருந்து சில குறுவிநாடிகளில் தப்பித்த அந்த மாவீரனும், இதை பெரிதாக எடுத்துக்‍ கொள்ள வேண்டாம் என்று தனக்‍குத்தானே சமாதானம் சொல்லிக்‍ கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

 

பேருந்து நிலையத்தில் இதையெல்லாம் எதிர்பார்த்ததைப் போல் நின்று கொண்டிருந்த இளம் பெண்கள் “களுக்‍” என்று சிரித்தார்கள். அவர் பெருமையாக நினைத்துக்‍ கொண்டார். “பரிதாபகரமான பட்டிகாட்டு கேர்ள்ஸ்” என்று எண்ணி மீண்டும் சிரித்தார். அந்த பெண்கள் தங்களுக்‍குள் குசுகுசுவென பேசிக்‍ கொண்டனர். அவ்வப்பொழுது சிரித்துக்‍ கொண்டனர். போரசின் பேரனோ தனக்‍கு பெண்கள் மேல் அவ்வளவாக ஆர்வம் இல்லை என்பது போல் கண்டு கொள்ளாமல் இருந்தார்.

 

அப்பொழுது ஒரு விநோதமான சப்தம் கேட்டது. ஒரு பேருந்து (பார்ப்பதற்கு அப்படித்தான் இருந்தது) பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தது. கப்பல் உடைக்‍கும் தொழிற்சாலையில் ஏற்படும் சப்தத்திற்கு இணைாயன அந்த பேருந்தின் கீச் கீச் சப்தம் எலும்பு ​மஜ்ஜை வரை ஊடுருவி சிலிர்க்‍கச் செய்தது. அந்தப் பேருந்தில் இருந்து வெளிப்படும் சப்தம் கட்டாந்தரையில் மண்வெட்டியை உரசுவது போல்பற்களை கூசச் செய்தது. பேருந்தில் ஒரு பகுதியில் தகரம் ஒன்று டப…டப…டப… வென ஆபத்தான் வகையில் அடித்துக்‍ கொண்டே வந்தது. ஒரு இரும்பு தகரத்தைக்‍ கூட சுவற்றில் ஒட்டப்பட்ட ஸ்டிக்‍கரைப்போல பிரிக்‍க முடியும் என்று உலகுக்‍கு உணர்த்தியிருந்தார்கள். அந்த பேருந்து உருவாக்‍கப்பட்ட போது, அதற்கு கண்ணாடி இலையில் ஜன்னல் போட்டிருப்பார்கள் போல. அந்த அநியாயமான செயல் இனிமேல் நடக்‍கக்‍ கூடாது என்று நினைத்தார்களோ என்னவோ… கண்ணாடி இருந்த சுவடுகளை மட்டும் விட்டு வைத்திருந்தார்கள். அதன் அர்த்தம் என்னவெனில், ஒருபேருந்துக்‍குள் உள்செல்வதற்கும், வெளியே வருவதற்கும் இரண்டு வழிகள் மட்டுமே என்பது ஏற்கக்‍ கூடியதாக இல்லை என்றும், தங்களுக்‍கு பேருந்தின் அனைத்துப் பக்‍கங்களிலும் வழி வேண்டும் என்றும் அரசாங்கத்துக்‍கு எடுத்துரைப்பதாக இருந்தது. அரசாங்கமும், மக்‍களின் செயலுக்‍கு மரியாதை செலுத்தி அந்த ஆபத்தான தகரத்தை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டார்கள்.

 

 

மேலும் ஒரு பேருந்தை டபுள் டக்‍கர் பேருந்தாக நினைத்து முதன் முதலில் பயணம் செய்தவர்களும் அவ்வூர் மக்‍களே, பேருந்தின் உட்புறம் மட்டும் அல்ல, பேருந்தின் மேற்கூரையும் பயணம் செய்வதற்கு ஏற்ற இடம்தான் என்பதை முதன் முதலில் யோசித்து செயல்படுத்தியவர்களும், உலகுக்‍குக்‍ கூறியவர்களும் அவர்களே. சேவல்கள், கோழிகள், ஆடுகள், கன்றுக்‍ குட்டிகள்… இவற்றுடன் ஒரு 40 பேர் பேருந்தின் மேற்கூரையில் பயணிக்‍கக்‍ கூடிய மாபெரும் சாகசத்தை நிகழ்த்திக்‍ காட்டியவர்கள் அவர்கள்…

 

சுமார் 120 பேருடன் குலுங்கி குலுங்கி நகர்ந்து வந்த பேருந்தானது, பேருந்து நிலையத்திற்குள் நுழையும் சாகச நிகழ்ச்சியில் தடைக்‍கற்றகளாக அமைந்த விஷயம், பேருந்த நிலையத்தின் தரைப் பகுதிதான். கூலிக்‍கு ஆள் வைத்து தோண்டினாலும் அத்தனை பள்ளங்களை தோண்டி விட முடியாது என்பதற்கு ஏற்ப பேருந்து நிலையம் முழுவதும் மேடு, பள்ளங்கள் நிறைந்து கிடந்தன. அதில் அந்த பரிதாபகரமான பேருந்து மேலும் கீழும் ஆடி வந்த நிலையைப் பார்த்தால் பேருந்து தன் கடைசி காலத்தை எண்ணிக்‍ கொண்டிருக்‍கிறதோ என்று நினைக்‍கத் தோன்றும். இவ்வளவு கலவரங்களுக்‍கும் நடுவே ஒரு அசட்டையான மனிதர் “நாங்கள் எல்லாம் ரயிலுக்‍கே வழிவிட்டதில்லை” என்பது போல் பேருந்தை மறைத்தபடி நிற்க, அவரை விலகச்செய்வதற்காக அத்தனை சத்தங்களுக்‍கும் நடுவே ஓட்டுநர் “ஹாரன்” அடிக்‍கும் கூத்தும் அங்கு நடைபெற்றது. பேருந்தின் அபாய ஒலி தனக்‍கு கேட்கவில்லை … ஏதோ ஓட்டுநர் தன்னை விலகச் சொல்லி ஹாரன் அடித்ததால் தான் விலகிச் செல்ல நேர்ந்தது என்பதுபோல், அந்த மனிதரும் லேசாக விலகிக்‍ கொடுத்தார்.

 

அந்த பேருந்து, பள்ளங்களில் ஏறி இறங்கி மேலும் கீழும் தத்திக்‍ குதித்து செல்வதைப் பார்த்தால், பயணிகள் அனைவரும் பசிபிக்‍ பெருங்கடலில் கப்பலில் பயணம் செய்த அனுபவத்தை அடைந்திருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

 

பேருந்தை நிறுத்தியதும், அதன் அடியில் ஒரு பிச்சைக்‍காரர் சென்று படுத்துக்‍ கொண்டார். “இந்த வருடம் வெயில் ஜாஸ்தி” என்று அவர் அங்கலாய்த்துக்‍ கொண்டார். ஒவ்வொரு நாளும்பேருந்து கிளம்புவதும் அவர் உயிர் பிழைப்பது ஒரு அரிய நிகழ்வு…

 

“மெட்ராசுல சில பஸ்சுகள்ள 36 பேர் தான் பயணம் செய்கிறார்களாம்” என்கிற விஷயம் அவர்களை ஆச்சரியப்படுத்தியது மட்டும் அல்ல, கோபமும் படுத்தியது. “120 பேர் போக வேண்டிய பஸ்ஸுல36 பேரை ஏத்திகிட்டு போறான்னா அவனுக கிறுக்‍குப் பயலுகளா இருப்பானுங்களோ…மத்த ஆளுக எல்லாம் எப்படி வேலைக்‍கு போவாங்க….அப்படியாப்பட்ட திமிர் பிடிச்ச கண்டரக்‍டர சும்மா விடலாமா?” என்று ஆவேசப் படுவார்கள். பேருந்தில் எந்த பிரச்னை என்றாலும் கண்டக்‍டரை தூக்‍கி போட்டு மிதிப்பது காலம்காலமாக தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் பழக்‍க வழக்‍கம். 120 பேர் பயணிப்பதற்குத்தான் ஒருபேருந்து என்கிற மனநிலையைப் அவ்வூர் மக்‍களில் ஆழ்மனதில் பதிந்து விட்ட மிகத் தெளிவான விஷயமாகும். அந்த பெருமை நமது அரசாங்கத்திற்கே உரியது.

 

பேருந்தின் அபாய நுழைவை விழிகள் விரிய ஆச்சரியமாக பார்த்துக்‍ கொண்டிருந்த மினிஸ்டர் ஒய்ட் வேட்டி சட்டை அணிந்திருந்த இளைஞர் ஒருவிஷயத்தை உணராமலேயே தற்குறியைப்போல் நின்று கொண்டிருந்தார்.

 

பேருந்து நிலையத்தில் நாம் நம்மை மறந்து நிற்கிறோம் என்றால்நாம் அடிக்‍கடி தரையை நோட்டம் விட வேண்டும். ஏனெனில் கண்டிப்பாக நாம் நிற்கும் இடத்தில் ஒரு பள்ளமும், அதில் நிறைய கழிவு நீரும் தேங்கி நிற்கும். அதேபோல், அவ்வழியாக வரும் பேருந்து எவ்வளவுதான் மெதுவாக வந்தாலும் அந்த பள்ளத்தின் அருகில் வரும் பொழுது மட்டும் வேகமாக அதற்குள் இறங்கும். அப்பொழுது தெறிக்‍கும் கழிவு நீரின் ஒரு பகுதி கண்டிப்பாக நம்மேல் அபிஷேகம் நடத்திவிடும்.

 

அதேபோல் வானத்தையும் அடிக்‍கடி பார்த்துக்‍கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் நிற்கும் இடத்திற்கு மேலே கண்டிப்பாக ஒரு மரக்‍கிளை இருக்‍கும். அந்த மரக்‍கிளையில் கண்டிப்பாக ஒரு காகம் அமர்ந்திருக்‍கும். அந்த காகமும் கண்டிப்பாக கக்‍கா போகும். அந்த கக்‍கா கண்டிப்பாக நம்மேல் தான் சரியாக விழும். ஒரு காகத்தின் குறி என்றுமே தவறியதில்லை.

 

இவையெல்லாம் காலம் காலமாய் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் நிஜங்கள். ஆகவே அனைத்தையும் முன்னுணர்ந்து ஒரு போர் வீரனைப் போல் ஜாக்‍ரதையாக நடந்து கொள்ள வேண்டும். நாலாப் பக்‍கங்களிலிருந்தும் எப்படி வேண்டுமானாலும் தாக்‍குதல்நடைபெறலாம் என்பதை உணர்ந்திருக்‍க வேண்டும்.

 

இவை எவற்றையும் உணராக அந்த மினிஷ்டர் ஒயிட் இளைஞர் ஒரு அமைச்சரைப் போல் ஆசுவாசமாக நின்று கொண்டிருந்தார்.

 

ஆனால் இதுபோல் இனி ஒரு நிகழ்வு இவ்வாறு நடைபெற வாய்ப்பே இல்லை என்பது போல் அந்த நிகழ்வு நடைபெற்றது. ஒரே நேரத்தில் நடைபெற்ற இருமுனைத் தாக்‍குதலிலிருந்து அந்த துடிப்பான வீர இளைஞன் தப்பினான். தனக்‍கு இணை இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்பது போல் அமைந்திருந்தது அந்த இளைஞனின் செயல். முதல் முறையாக உலக வரலாற்றில் மோசமான ஒருகாகமும், ஒரு மோசமான பேருந்தும் தோற்றுப் போயின.

 

பேருந்து நிலையத்திலிருந்த 250 பேரும் ஆச்சரியப்படவில்லை. இளம் பெண்கள் மனதிற்குள்ளாக அந்த இளைஞனைப் பாராட்டினார்கள்.

 

உலகில் எதை எதையோ வற்றாத ஜீவநதி என்று சொல்கிறார்கள். கங்கையும் கூட ஒரு நாள் வற்றிவிடக்‍ கூடும். ஆனால் பேருந்து நிலையத்தில் இருக்‍கும் ஒரு கழிவு நீர் ஓடை கடும் கோடையில் கூட என்றுமே வற்றுவதில்லை. பேருந்து சக்‍கரத்தின் அழுத்தத்தால் ஒரு நாளைக்‍கு நூறு முறை கழிவு நீர் ஓடையிலிருந்து நான்கு பக்‍கங்களிலும் தெரித்தாலும், மீண்டும் அந்த இடத்தை கழிவு நீர் நிரப்பிவிடும். அது ஒரு வற்றாத கழிவு நீர் ஓடை என்றால் மிகையில்லை.

 

ஒரு ரயில் பெட்டியில் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதற்கு இணையான இந்த பேருந்துபயணத்தில் உட்கார இடம் கிடைப்பது என்பது தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. சீட் பெறுவதற்கு இணையான முயற்சி தேவை என்றாலும், “முயற்சித்துப் பார் கிடைத்தாலும் கிடைக்‍கும்” என்கிற மனதின் குருட்டு நம்பிக்‍கைக்‍கு மயங்கி அந்தப்பேருந்தில் ஒரு இருக்‍கையை பிடிக்‍க முயற்சி செய்தார் அந்த மினிஸ்டர் ஒயிட் வேட்டி-சட்டை.

 

120 பேர் ஒரு பேருந்தில் இருந்து இறங்குவதும், மீண்டும் 120 பேர் அந்த பேருந்திற்குள் சென்று அடைவதும், எரிமலைக்‍ குழம்பு கடலில் கலப்பதற்கு இணையான காட்சியாகும். தனக்‍கான இருக்‍கையை பிடிப்பதில் யாரும் நேர் வழியை கடைபிடிப்பதில்லை.

 

பேருந்து ஓட்டுநர் இறங்கிச் செல்வதற்கான வழியை பயணிகள் யாரும் உபயோகிக்‍கக்‍ கூடாது என்று பல நூறுமுறை எடுத்துரைத்தும், யாரும் கேட்பதாக இல்லை. அந்த வழியாக பேருந்திற்குள் நுழைவதற்கு 10 பேர் (புத்திசாலிகள்) காத்திருப்பார்கள்.

 

“அண்ணே, இதை தூக்‍கி மொத சீட்ல எடம் போடுங்கண்ணே” என 15 கிலோ எடையுள்ள ஆட்டுக்‍ குட்டி ஒன்றை நீட்டுவார் ஒருவர். மற்றொருவர் 10 கிலோ எடையுள்ள மற்றொரு உயிரினத்தை இடம்பிடிக்‍க தூக்‍கிக்‍ கொடுப்பார் மறுக்‍க முடியாத அளவுக்‍கு… ஏனெனில் அது ஒரு 4 வயது குழந்தையாக இருக்‍கும்.

 

இந்த கொடுமைக்‍கு எல்லாம் ஆளாகக்‍ கூடாது என்கிற ஒரே நோக்‍கத்தில் தான் ஓட்டுநர், தான் அமர்ந்திருக்‍கும் இடத்திற்கு கீழே வட்டமாக ஒரு ரகசிய பாதை அமைத்திருந்தார். அதன் வழியாக யாருக்‍கும் தெரியாமல் பேருந்தின் கீழ் வழியாக இறங்கி, பேருந்திற்கு அடியிலேயே தவழ்ந்து சென்று பின்பக்‍கம் வழியாக எழுந்துசெல்வார். சமீப காலமாக அதிலும் ஒரு மிகப்பெரிய சிக்‍கல் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால், அந்த பிச்சைக்‍காரர் தனது இல்லத்திற்குள் ஒரு அந்நியன் நுழைவதை அனுமதிக்‍க விரும்பவில்லை என்பதுதான்.

 

அரசு பேருந்துக்‍ கழகத்தில் ஒரு ஓட்டுநராக தான் பணிபுரிவது என்பது எல்லைக்‍ கட்டுப்பாட்டுக்‍ கோட்டில், பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போர் புரிவதற்கு எந்தவிதத்திலும் குறைந்த செயல் இல்லை என கண்ணீர் வடித்துள்ளார் அந்த ஓட்டுனர்… எத்தனை விதமான எதிரிகளை சந்திக்‍க வேண்டியதிருக்‍கிறது என ஒவ்வொரு நாளும் அலுத்துப் போவார்.

 

கட்டட வேலைக்‍கு செல்லும் ஒரு மனிதர் பேருந்தில் ஜன்னல் வழியாக மண்வெட்டியை போட்டு இடம்பிடிக்‍க முயற்சி செய்வார். மற்றொருவர் அதை எடுத்து வெளியே போட்டுவிட்டு அமர்ந்து கொள்வார்.இவர்களுக்‍கு இடையே நடைபெறும் துவந்த யுத்தத்தை மத்தியஸ்தம்செய்து வைப்பதற்கு இறுதியில் நடத்துனரையே தேடிப்பிடித்து நடுவராக நியமிப்பார்கள். இதில் என்ன கொடுமை என்றால் நடத்துனர் எந்த பக்‍கத்திற்கு பாதகமாக தீர்ப்பு வழங்குகிறாரோ, அந்த மனிதரின் கிராமத்து பக்‍கம் எதிரிகள் உருவாகி விடுவார்கள். பின் ஒவ்வொரு நாளும் அந்த கிராமத்தை கடந்து செல்வது என்பது ‘வாகா’ எல்லைக்‍கட்டுப்பாட்டுக்‍ கோட்டை கடப்பதற்கு சமமான விஷயமாகிவிடும்.

 

“டேய் இந்த கண்டக்‍டரு தான நம்ம சம்முவத்த போலீஸூல மாட்டி விட்டவன்” என பேருந்திற்குள் ஜாடை மாடையாக பேசிக்‍ கொள்பவர்களிடம் டிக்‍கெட் வாங்காமல் பயணம் செய்வதற்கு அனுமதித்து விடுவார் நடத்துனர்.

 

இந்த கிருத்திரம் பிடித்த சாலமன் பாப்பையா வேலையே தனக்‍கு வேண்டாம் என்றுதான் பேருந்து நின்றதும்… தாங்க முடியவில்லை என்றாலும் ஓடிச்சென்று அரசு பொது கழிவறைக்‍குள் தஞ்சம் அடைந்து விடுவார் நடத்துனர்.

 

ஹிட்லரின் சித்ரவதை முகாம்களுக்‍கு இணையான ஒரு இடம் உலகத்தில் உண்டென்றால், அது அரசு பொது கழிவறைகள் தான். அதுவும் பேருந்து நிலையத்திற்குள் இருக்‍கும் அரசு பொது கழிவறைகள் பற்றி ஹிட்லரால் கூட கற்பனை செய்து பார்த்திருக்‍க முடியாது. அத்தகைய இடத்திற்குள் தன்னைக்‍ காப்பாற்றிக்‍ கொள்ள ஒரு மனிதன் தஞ்சம் அடைகிறான் என்றால் இந்த உலகம்தான் எவ்வளவு கொடுமையானது.

 

இன்று இவர்களிடமிருந்து தன்னைக்‍ காப்பாற்றி விட்டால் குலதெய்வத்திற்குமொட்டை போடுவதாக ஒவ்வொரு நாளும் பயந்து போய் வேண்டிக்‍ கொள்வதால் அவர் தலையில் முடி இருந்ததை யாராலும் பார்க்‍க முடிந்ததே இல்லை. சாதா முருகன் மொட்டை முருகன் ஆன கதையும் இதுவே. ஆனால் ஊழியர்கள் மத்தியில் பக்‍தியில் சிறந்தவன் மொட்டை முருகன் என்கிற பேச்சும் உண்டு. அரசு பொது கழிவறையில் பக்‍கத்து கழிவறையில் ஒழிந்து கொள்ளும் ஓட்டுனருக்‍குத்தான் தெரியும் அது என்னவிதமான பக்‍தி என்று.

 

இரும்பு அடிக்‍கும் இடத்தில் ஈக்‍கு என்ன வேலை என்பதுபோல், பேருந்து நிலையத்தின் இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் மினிஸ்டர் ஒய்ட் வேட்டி-சட்டை இளைஞர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

 

இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் அந்த இளைஞர் பேருந்தில் சீட் பிடிக்‍கும் முயற்சியில் தன்னையும் உட்படுத்திக்‍ கொண்டார் என்கிற விஷயம் அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது. அவர் பேருந்தை நோக்‍கி ஓடிச் சென்றது அத்தனை பேருக்‍கும் வியப்பை ஏற்படுத்தியது.

 

அவர் எல்லாவற்றையும் கவனித்திருந்தார்.

எதற்கும் தயாராக இருந்தார்.

தன்னால் முடியாதது ஒன்றும் இல்லை என்று கூறிக்‍கொண்டார்.

மனதிற்குள் விவேகானந்தரை நினைத்துக்‍ கொண்டார்.

 

பேருந்திற்குள் இடம் பிடிப்பதற்கு கூட்டம் அலைமோதியது. ஒருவர் தான் கட்டியிருந்த வேட்டியை கழற்றி ஜன்னல் வழியாக இடமபிடித்தார். மற்றொருவர் அந்த வேட்டியை எடுத்துக்‍ கட்டிக்‍ கொண்டு அமர்ந்து கொண்டார். தனக்‍கு எப்படியும் ஒரு வேட்டி கிடைக்‍கும் என்கிற நம்பிக்‍கையில் கோடு போட்ட அண்ட்ராயருடன் பேருந்து நிலையத்திற்கு செல்வதும், தனக்‍கு எப்படியும் ஒரு ஜோடி செருப்பு கிடைக்‍கும் என்ற நம்பிக்‍கையில் வெறுங்காலுடன் கோவிலுக்‍குச் செல்வதும் வேத காலத்திலிருந்து கடைபிடித்து வரும் நமது பாரம்பரிய வழக்‍கம்தானே.

 

வேட்டியை இழந்தவரும், வேட்டியை பெற்றவரும் துவந்த யுத்தத்திற்கு தயாராகிக்‍கொண்டிருக்கும் அதேவேளையில் மற்றொருவர் கடப்பாறை ஒன்றை ஜன்னல் வழியாக செருகினார்.

 

அவர் பெரிய அளவில் மீசை வைத்திருந்ததாலும், அர்னால்ட் ஸ்வாஷ்னேக்‍கரைப் போல் முரட்டு உடலமைப்பைப் பெற்றிருந்ததாலும் அவருடைய சீட் கன்பார்ம் செய்யப்பட்டது. மற்றொருவர் ஜன்னல் வழியாக தன்னையே சீட்டுக்‍கு ஒப்புக்‍கொடுத்தார்.

 

ஒரு பெரியவர் இவ்வாறு அங்கலாய்த்துக்‍ கொண்டார்.

 

“அந்த காலத்துல எல்லாம் மஞ்சப் பைய போட்டாலே நமக்‍கு சீட்டு கெடைச்சிடும், ஆனா இப்போ என்ன நடக்‍குது தெரியுமா, என்னோட முருகன் படம் போட்ட மஞ்சப் பைய், சம்முவம் வீட்டு கொடியில கோவணத்துணிக்‍கு மத்தியில காயுது. அட என்னைய விடுய்யா,….. முருகனுக்‍கு ஒரு மரியாதை வேணாம்மா….? மனசாட்சி இல்லாதவன்”

கோபம் கெப்பளிக்‍க சண்முகத்தை திட்டிக்‍ கொண்டிருந்தார்.

 

இத்தனை களேபரங்களுக்‍கு மத்தியில் அந்த வீர இளைஞன் வேட்டியை மடித்துக்‍ கட்டிக்‍ கொண்டு, துள்ளிக்‍ குதித்தபடி, அப்பாவிகள் பேருந்துக்‍குள் நுழையும் படிகட்டுகள் வழியாக முண்டியடித்துக்‍ கொண்டு ஏறினார். ஒரு வயதான பெண்மணி மோசமான கெட்டவார்த்தை ஒன்றை உபயோகித்து திட்டினார். அந்த கெட்ட வார்த்தையை இந்த காதில் அந்த காது வழியாக நழுவவிட்டபடி, ரஜினி படத்திற்கு முதல் நாள், முதல் ஷோவுக்‍கு டிக்‍கெட்வாங்குவதாக கற்பனை செய்து கொண்டு இஞ்ச் பை இஞ்சாக முன்னேறினார்.

 

யாரோ ஒருவர் அவரது வேட்டியை அவிழ்க்‍க முயற்சி செய்தார். அந்த மானங்கெட்ட முயற்சியை நொடியில் முறிடியடித்து 3 படிகளைக்‍ கடந்து பேருந்திற்குள் முன்னேறினார் அந்த வீர இளைஞர். சுனாமியில் சிக்‍கிய சிறு படகைப் போல் தத்தளித்த அவர், அறுவடைக்‍கு செல்லும் பெண்மணி ஒருவரின் அரிவாளால் லேசாக உரசப்பட்டு வீல்ல்…. வீல்ல்ல்… வீல்ல் என்று வண்டிச் சக்‍கரத்தில் அடிபட்ட நாயைப் போல் கத்தினார். அந்தப் பெண்மணி அதற்காக வருத்தப்பட்டதாகவோ… கண்டு கொண்டதாகவோ தெரியவில்லை. அந்த ஒரு குறு விநாடியில் குறுக்காக ஒரு கடப்பாறை நீட்டிக்‍ கொண்டு நிற்பதை கவனிக்‍காமல் மோதிக்‍கொள்ள, முட்டிப் பகுதியில் உள்ள கிண்ணம் புள்ளி ஒரு சதவீதம் இடம் பெயர்ந்தது. வலி என்றால் அதுதான் வலி. எலும்பு மஜ்ஜையில் புழு பூச்சிகள் ஊர்ந்தன.

 

தான் இன்னும் உயிரோடு இருப்பதை அவர் இன்னமும் நமபினார். முன்னேறு, சீக்‍கிரம் இடத்தைப் பிடி,… என அவரது உள் மனம் கதறியது. பாலைவனத்தில் ரோஸ்மில்க்‍ கிடைத்தது போல், அவ்வளவு கூட்டத்திலும் அந்த ஒரே ஒரு சீட்டில் மட்டும் யாருமே அமராமல், இடம்பிடிக்‍க முயற்சிக்‍காமல் இருந்தது அவருக்‍கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கடவுள் கருணைக்‍கு எல்லையே இல்லை என்று நினைத்துக்‍ கொண்டார். இன்னும் ஒரே ஒரு தாவுதல்தான்… அந்த சீட் தனக்‍குத்தான் என்று நினைத்துக்‍கொண்டார். ஓஷோ குறிப்பிடுவார்… ஒரே தாவுதலில் ஞானத்தை சென்றடையுங்கள் என்று… அதுபோல் அவர் அந்த கடைசித் தாவுதலை முயற்சி செய்தார்.

 

முன் பற்களில் 2-ல் சீட் கம்பியில் முட்டிக்‍ கொண்டு ரத்தம் வழிந்தாலும், அந்த அதிசயம் நிகழ்ந்து தான் விட்டது. அவருக்‍கு சீட் கிடைத்து விட்டது. கடவுளே உனது கருணையே கருணை, உனக்‍கு கோடான கோடி நன்றி என்று அகமகிழ்ந்து தேவாரம் பாடினார்.

 

எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது.

எப்பொழுதும், எவ்வளவு முயற்சிசெய்தாலும் தான் அமர்வதற்கு சீட் கிடைக்‍காதே என்ற சிந்தனையில் சில விநாடிகள் கடந்தன

 

5 வினாடிகளுக்‍குப் பிறகு…. அவர் அதை உணர்ந்தார்… அப்பொழுதுதான் அவருக்‍குப் புரிந்தது, யாரும் ஏன்?இந்த இருக்‍கையை தேர்ந்தெடுக்‍கவில்லை என்பது….

 

இது நிச்சயமாக ஒருபெரிய மனிதன் செய்கிற காரியம் அல்ல, சின்ன மனிதாக இருந்தால்கூட அவ்வாறுசெய்திருக்‍கக்‍ கூடாது. இதை செய்வதற்கு முன் சிறிதேனும் யோசித்திருக்‍க வேண்டும். எவ்வளவு அநாகரிகமான செயல் இது என வெட்கப்பட்டிருக்‍க வேண்டும். வாழ்க்‍கையில் எவ்வளவுதான் போட்டி-பொறாமைகள் இருந்தாலும் இது ஒரு முறையற்ற செயல் என்ற சிந்தனை வந்திருக்‍க வேண்டும். ஒரு பயணத்திட்டத்திற்காக ஒரு மனிதன் இந்த அளவுக்‍கு கீழிறங்கிப் போய் செயல்பட்டிருக்‍கக்‍ கூடாது. இப்படி கீழ்த்தரமான செயலை செய்து சுகமான பயணம் ​மேற்கொள்ள ​நினைக்‍கும் யோசனை நிச்சயமாக ஆச்சரியப்படுத்துகிறது. மனிதர்கள் இந்த அளவுக்‍கு தரம் தாழ்ந்து போவார்களா? ஒரு வேளை ஒரு அவசரத்தில் இந்தச் செயலை செய்து விட்டு, பின்னர் இவ்வாறு முட்டாள்தனமாக செய்து விட்டோமே என்று வருத்தப்பட்டிருப்பானோ? வருத்தப்பட்டிருந்தால்தான் இந்த கேவலமான செயலுக்‍கு பரிகாரம் செய்திருப்பானே. நிச்சயமாக இவன் மனசாட்சி இல்லாதவனாகத்தான் இருக்‍க வேண்டும். இவனை கட்டிய மனைவி பாவம் இவனோடு எப்படித்தான் குடும்பம் நடத்துகிறாளோ.

 

ஆனால் எவ்வளவுதான் குருட்டுத்தனமான, விவேகமற்ற காரியங்களில் நம் கிராம மக்‍கள் ஈடுபட்டாலும், இவனைப் போன்ற கிருக்‍கன்களை ஜாக்‍கிரதையாக தவிர்த்து விடுகிறார்கள். இவ்வளவு கூட்டத்திலும், களேபரத்திலும், மக்‍கள் இந்த இருக்‍கையை மட்டும் தவிர்த்திருக்‍கிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயமாக புத்திசாலிகள்தான். இவர்களைப்போய் விவேகமற்றவர்கள் என்று நினைத்து விட்டேனே. உண்மையில் தான்தான் விவேகமற்றவன் என நினைத்து அந்த வீர இளைஞர் வருந்தினார்.

 

இந்தக்‍ காரியத்தை செய்தவன் எப்படியும் தனது இருக்‍கைக்‍கு உரிமை கொண்டாடிக்‍ கொண்டு இங்கு வருவான். அவனைப் பார்த்து 4 கேள்வி நாக்‍கைப் பிடிங்கிக்‍கொள்கிற மாதிரி கேட்க வேண்டும்

 

நீயெல்லாம் ஒரு மனிதனா? மனசாட்சியை எங்கே சென்று அடகுவைத்தாய் மானமில்லாதவனே. இப்படி ஒரு செயலை செய்து இருக்‍கையில் இடம்பிடித்து நீ எதை சாதிக்‍கப் போகிறாய். வெட்கம் என்ற பதத்தின் பொருள் அறியாதவனே என அவன் வெட்கித்தலைகுனியும்படி கேட்க வேண்டும்.

 

அதற்காகவாவது இன்னும் சிறிது நேரத்திற்கு இந்த இம்சையை பொறுத்துக்‍ கொள்ள வேண்டியதுதான். பேருந்தில் இருந்த அனைவருக்‍கும்​தெரியும். இவன் பொறுத்துக்‍ கொண்டு அமர்ந்திருக்‍கிறான் என்று. அவன் எழுந்து கொள்ள முடியாததன் காரணத்தையும் அவர்கள் அறிவார்கள். அருகில் நின்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் “தமபி துண்டு ஏதாவது வேண்டுமா?”என கேட்டபடி தன் தோளில் இருந்த துண்டை எடுத்து நீட்டினார். ஏற்கெனவே அனுபவப்பட்டிருப்பார் போல என நினைத்துக் ‍கொண்டார். பேருந்தில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு வித குரூர குறுஞ்சிரிப்பு கலந்திருந்தது. ஆனால் யாரும் வெளிப்படையாக காட்டிக்‍ கொள்ளவில்லை.

 

அந்த வீர இளைஞன் பேருந்தின் ஜன்னல் வழியாக தீவிரமாக நோட்டம் விட்டுக்‍ கொண்டிருந்தான். அவருக்‍கு வெற்றிலை போட்டு குதப்பிக்‍ கொண்டிருந்தவர்கள் யாரைப் பார்த்தாலும் சந்தேகமாக இருந்தது.

 

வெற்றிலை போட்டு வாயில் குதப்பிக்‍கொண்டிருந்த எந்த மனிதன் அந்த வீர இளைஞனிடம் அடிவாங்கினானோ. யாருக்‍கும் தெரியாது.

Series Navigationதிரை விமர்சனம் – எனக்குள் ஒருவன்நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்
author

சூர்யா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *