டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

author
0 minutes, 20 seconds Read
This entry is part 18 of 32 in the series 29 மார்ச் 2015

டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015

மார்ச் 21, 2015 அன்று அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இயங்கி வரும் அவ்வை தமிழ் மையமானது ‘தமிழ் இசை விழா’வை ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மையத்தின் தலைவர் திரு. விவேக் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார்.

வீணா இசைப்பள்ளி, நாகலட்சுமி இசைப்பள்ளி, கர்நாட்டிகா இசைப்பள்ளி, சப்த ஸ்வரா இசைப்பள்ளி, லலிதா இசைப்பள்ளி மற்றும் கோஸ்பல் தேவாலய இசைக் குழுமம் ஆகியவற்றில் இசை பயிலும் குழந்தைகள் உட்பட சுமார் 90 குழந்தைகள் கலந்து கொண்டு மொத்தம் 32 தமிழிசைப் பாடல்களைப் பாடினர். பல்வேறு இராகங்களில் அமைந்த பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள், இசை அறிஞர்களின் பாடல்கள் எனப் பல பிரிவுகளிலிருந்தும் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக இடைவிடாமல் தமிழிசைப் பாடல்கள் பாடப்பட்டது.

தமிழ் மீதும், தமிழிசை மீதும் தணியாத ஆர்வம் கொண்டு பல்வேறு அறப்பணிகளைச் செய்து வரும் புரவலர், தமிழிசைக் காவலர் திரு. பால் பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவர் டல்லாஸ் தமிழ் அன்பர்களுடன் இணைந்து டல்லாஸ் தமிழ்ச்சங்கம் அமைத்தவர். அமெரிக்கத் தமிழ் அன்பர்களுடன் சேர்ந்து பல மாநிலங்களில் இருந்த தமிழ்ச்சங்கங்களை ஒன்றிணைத்துப் பெட்னா (Federation of Tamil Sangams of North America – FeTNA) என்ற பேரமைப்பை உருவாக்கியவர், அதே போல் தமிழக மாணவர்கள், பள்ளிகளுக்கு உதவும் தமிழ்நாடு அறக்கட்டளை அமைப்பையும் (Tamil Nadu Foundation – TNF) உருவாக்கியவர். பல தமிழ் அறிஞர்களை அமெரிக்காவிற்கு அழைத்து வந்து உரையாற்றும் வாய்ப்பு உருவாக்கியவர். தமிழிசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், உ.வே.சா பற்றி ஆவணப்படம் எடுத்த இயக்குநர் செகநாதன், இயக்குநர் பாரதிராசா, கவிப்பேரரசு வைரமுத்து, மேலாண்மை பொண்ணுசாமி உள்ளிட்டவர்களின் கலைப்பணிகளை பெட்னா அமைப்பின் வழியாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர். தமிழிசைக்கு எனத் தனியாக ‘இன்னிசை அறக்கட்டளை”யை உருவாக்கியவர். அந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு ஆய்வுகளையும், தமிழிசைப் பேரகராதி உள்ளிட்ட நூல்களையும் வெளியிட உதவியவர். தெற்காசிய ஆய்வு மற்றும் தகவல்கள் நிறுவனம் (South Asia Research and Information Institute – SARII) என்ற அமைப்பை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிப் பல ஆய்வுக் கருத்தரங்குகளை ஆண்டு தோறும் நடத்தி வருபவர்.

திரு. பால் பாண்டியன் அவர்கள் தனது சிறப்புரையில் தமிழிசைக்கு நீண்ட நெடிய வரலாறு இருப்பதாகவும், தொல்காப்பியம் காலம் முதல் அதற்கான குறிப்புகள் இருப்பதாகவும், சங்க கால நூல்கள், காப்பியங்கள், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் நிறைய இசைக்குறிப்புகள் , இசைக்கருவிகள் பற்றிய தகவல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இசைக்கு மொழி தேவையில்லாவிட்டாலும், மொழிக்கு இசை வேண்டும் எனவும், அதனால் தான் தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என மூன்று கூறுகளாக முத்தமிழாக வளர்ந்ததாகவும் குறிப்பிட்டார். எனவே இதைப் போல் தமிழிசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். டல்லாஸ் நகரில் அத்தகைய தமிழிசை நிகழ்ச்சியை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடத்தும் அவ்வை தமிழ் மையத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். டல்லாஸ் நகரில் தமிழிசை வளர தங்களது சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் இசைப்பள்ளி ஆசிரியர்களைப் பாராட்டி அவர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.

விழாவின் நிறைவாக, தமிழ் இசை விழாவில் பங்கேற்றுப் பாடல்களைப் பாடிய அனைத்துக் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. பரிசுக் கோப்பைகளை ஓக்லகாமா மநிலத்தில் இருந்து விழாவிற்கு வந்திருந்த பெரியவர் திரு. மாசிலாமணி, டல்லாஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி. கீதா அருணாச்சலம், அவ்வைத் தமிழ் மையத்தின் நிர்வாகிகள் விவேக் வாசுதேவன், மோகன் தண்டபானி, சங்கர் சண்முகசுந்தரம், கேசவன் ஶ்ரீரங்கம், ஜெபா செல்வராஜ், ஶ்ரீதர் இராகவேந்திரன்  ஆகியோர் வழங்கினர்.

இறுதியாக, அமைப்பின் செயலாளர் திரு. மோகன் தண்டபானி நன்றியுரை ஆற்றினார்.

விழாவின் அனைத்து நிகழ்வுகளையும் அவ்வைத் தமிழ் மையத்தின் மழலை நிலை ஆசிரியை திருமதி. அனிதா சங்கர் மற்றும் தன்னார்வலர் திருமதி. உமா விவேக் ஆகியோர் தொகுத்து நெறியாள்கை செய்து வழங்கினர். 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இவ்விழாவை வெற்றிகரமாக நடத்த கடந்த 6 வாரங்களாக வேலை செய்தனர்.





More Photos at Photo Gallery

Watch and enjoy the promotional video!!
About Avvai Tamil Center

அவ்வை தமிழ் மையமானது முற்றிலும் தன்னார்வலர்களால் (volunteers) நடத்தப்படும் லாப நோக்க்கமற்ற, தமிழ்க்கல்விக்கான தொண்டு நிறுவனமாக (non-profit organization) பதிவு செய்யப்பட்டு உள்ள நிறுவனமாகும்.

Location:
Avvai Tamil Center @
Childrens Light House
10660 Eldorado Pkwy
Frisco, TX 75035

Tamil Classes On Every Sunday
2:00 to 4:00 PM

Contact Us:
214.901.7735
info@avvaitamil.org
www.avvaitamil.org

Series Navigationஅழகிய புதிர்மூளைக் கட்டி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *