வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது

1
0 minutes, 27 seconds Read
This entry is part 23 of 28 in the series 12 ஏப்ரல் 2015

 
இப்பவோ அப்பவோ என்று ஒரு குரல் (கமெண்டோ?) கேட்டது. நான் சிவுக்கென்று திரும்பிப் பார்த்தேன். கலகலவென்று சிரிப்பொலி.

 

இடம் ஜெமினி பஸ் ஸ்டாப் ‘நின்றிருந்தவர்கள் ஐந்து பேர் இளைஞர்கள். பாவம்!’

 

அவர்கள் என்னைச் சொல்லவில்லை. ஏன், என்னைக் கவனிக்கக் கூட இல்லை. அவர்கள் தம்மில் மூழ்கிக் களித்துக் கொண்டிருந்தார்கள்.

 

வரவர நான் தான் ‘ஸென்ஸிடிவ்’ ஆகி வருகிறேன். வயிறு நிறையத்தான் பருத்து விட்டது. எப்படிக் கட்டினாலும் புடைவை எங்கேயாவது வழுக்கிக் கொண்டு விடுமோ என்று பயம் ஒரு கோடியில் முழித்து முழித்துப் பார்க்கிறது.

 

அந்தப் பயம் போகட்டும் அதைவிடப் பெரிது பெரிதாய் போன வாரம் டெண்ட்டில் பார்த்த பாலநாகம்மா படத்தில் வரும் பிசாசுகள் மாதிரி பயங்கர கோரமாய்ப் பல்லிளிக்கின்றன.

 

பிரசவம் என்பது எப்படியிருக்கும்? அது எத்தகைய அனுபவம்? திடீரென்று எங்கேயாவது அது நேர்ந்து விடுமா? இடம் பொருள் ஏவல் பாராமல் விமானத்தில், பஸ்ஸில், ரயிலில், ஆட்டோவில், ஆபீஸில் என்று அந்த ரகமான கதைகள், ஏதோ நான் விரும்பிக் கேட்டவை மாதிரி என்னை நோக்கியே எனக்காக வென்றே சொல்லப்படுகின்றன.

 

குனிவதும் நிமிர்வதும் சிரமமாய் விட்டன. அவ்வப்போது வயிற்றில் புரள்கிறது திடீரென்று சற்றும் எதிர்பாரா வேளையில் மானேஜர் எதிரில் நிற்கும்போது பஸ்ஸில் ஒரு கையால் கண்டக்டரிடம் சில்லறை எடுத்துத் தரும் போது உள்ளே உதைக்கிறது. ஹம்மா! இப்பவும் உதை. இந்த உதை உதைக்கிறதே இது ஆணா பெண்ணா?

 

ஆணோ, பெண்ணோ, ஓர் ஆசீர்வாதம்!

 

வயிற்றில் வளர்கிறதே அது என்னை ஆசீர்வதித்திருக்கிறது. அப்படி நினைத்தால் எல்லா பயங்களும் பூத்து விடுகின்றன. பொல்லென்று உதிர்ந்து போகின்றன.

 

‘நீங்க மெடர்னிடி லீவுக்கு அப்ளை பண்ணிடுங்க மேடம்!’ என்று மானேஜரே சொல்லுமளவு ஆகிவிட்டது.

 

எனக்கு லீவு போடப் பிடிக்கவில்லை.

 

இத்தனை சிரமம், பயம் எல்லாவற்றைக் காட்டிலும் எனக்குக் கிடைத்திருக்கிற தாய்மைப் பதவியைக் கொஞ்சம் கொண்டாடிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

 

இந்த உலகம் நான் தாயாகி விட்டேன் என்று தெரிந்து கொள்ளட்டுமே! ஆபீஸிலிருந்து இறங்கி ஜெமினி பஸ் ஸ்டாப் வந்து அங்கிருந்து வீடு போகிற வரை கொஞ்சம் பேருக்காவது என் கதை தெரியும். விவாகரத்து அதன் காரணம், என் மறுமணம்… எனக்குத் தெரியாதா, இந்த ஜனங்களை?

 

அவர்கள் மத்தியில் நான் தாய் ஆகிவிட்ட பெருமிதத்தைக் கொண்டாடிக் கொள்ளத் தோன்றுகிறது. வக்கரிப்பு அல்ல. வஞ்சம் தீர்க்கிற மாதிரியோ, அலட்டிக் கொள்கிற பாணியிலோ கூட அல்ல.

 

அந்த பரிதாபத்திற்குரிய பழைய பால கணேசனைப் பரிகசிக்கிற மாதிரியும் அல்ல-

 

பாவம் பாலகணேசன்! அவசரப்பட்டுட்டார். சந்தேகப்பட்டுட்டார். தன் மேல வந்திருக்குமோ? மே பி.

 

எல்லா சந்தேகமும், ஏன் எந்தச் சந்தேகமும், மொதல்ல தன் மேல படற சந்தேகம் தான்.

 

தனக்கே கொழந்தை பொறக்காதோன்னு தோணி எம் மேல திரும்பின சந்தேகம்.

 

இப்ப நெனச்சா அதெல்லாம் ஒரு கனவில் வாங்கின சம்மட்டியடி மாதிரி தோணறது. எனக்கு யார் மேலேயும் வருத்தமில்லே. எவர்கிட்டேயும் கோபம்இல்லே. மனசு பளிங்கு நீரோடை போல சாந்தியா இருக்கு. சந்தோஷமா இருக்கு. இதை அனுபவிக்க வேண்டாமோ?

 

லீவ் போட்டுட்டு என்ன பண்ணப் போறேன்?

 

எத்தனை நாழி கட்டில்லே பொரண்டுண்டு கதை புஸ்தகம் படிச்சிட்டு இருக்கிறது? மாமியார், நாத்தனார் எல்லாம் தந்தி கொடுக்கிற தூரத்திலேர்ந்து கேபிள் கொடுக்கிற தூரத்துக்குப் போயாச்சு.

 

நீயாச்சு ஒன் பயமாச்சுன்னு டாண்ணு ஒன்பது அடிச்சா இவரும் கௌம்பிடுவார். ஒன்பதுக்கு மேரி சரோஜா வருவா. வீட்டு வேலைக்காரி.

 

அவளுக்கு ஒரு நாளைக்கு ஒரு தரமாவது என்னைத் தொட்டுப் பார்க்கணும். மொகத்தை நீவுவா, தோளைப் பிடிப்பா எங்கே காலைக் காட்டும்மான்னு புடைவைக் கரையை ஒதுக்கிக் காலை அழுத்திப் பாப்பா. உப்பு வந்துடுமோன்னு அவளுக்கொரு பயம். ஏன்?

 

சினேகம்! வீட்டுக்காரி வேலைக்காரி என்ற எல்லைக்கோடு அப்பப்ப அழிஞ்சு போகிற சினேகம்! ஸ்பரிச வாஞ்சையிலே வழியற சினேகம். நேக்கு அதெல்லாம் பிடிக்கும். காட்டிக்க மாட்டேன்.

‘நீ ரொம்பப் படுத்தறே மேரி’ம்பேன்.

 

‘சும்மா இரும்மா, நாத்தி, மாமி இல்லாத பொண்ணு ஆபீஸுக்குப் போறே. ஆம்பளைக்கு என்ன தெரியும்? அவங்க பெத்திருக்காங்களா, பார்த்திருக்காங்களா! கர்ப்பிணின்னா இன்னா பொருள்னு தெரியவா போவுது’ என்பாள்.

 

அவ சொன்னா நேக்குப் புல்லரிக்கும்.

 

மேரி சரோஜாவுக்கு என் கதை ‘தரவ்’வா தெரியும். என் பயங்கள், என் ஏக்கங்கள், என் ஆசைகள்.

 

‘வேலைக்காரியாண்டே ரொம்ப வெச்சுக்கறே!’ விரலை நீட்டி இவர் – ஜெகன் மோஹன் எச்சரிக்கிறார்.

 

‘வாண்டாம்னா சொல்லுங்கோ ‘ஐ’ல் ஸ்டாப்.’

 

‘நோ, நோ! அப்படியெல்லாம் ‘கட்’ பண்ணச் சொல்லலே. இவ்வளவு ஓவரா வேணுமா…? அப்புறம் வேலைக்காரிக்குப் பயம் போய்டாதான்னேன். ஐ நோ யூ. உன் உள்ளுணர்வு சரியாத்தான் இருக்கும். இது அன்யூஷûவலா இருக்கிறதால நேக்கு அப்படிப்பட்டது’ என்று பின்வாங்கி விடுவார்.

 

ஆரம்ப நாட்கள்லே சமூகமும் பாலகணேசனும் கீறிவிட்ட ரணங்கள் நேக்கு ஒரு ஆபரேஷன் புத்தியை ஏற்படுத்தித்து. இப்ப நெனச்சா நேக்கே வெக்கமாயிருக்கு சே, நாமா இப்படி! அதுவும் கத்திக்குத் தாங்காத வெண்ணெய் மாதிரியுள்ள ஜெகனையான்னு சிரிச்சுப்பேன்.

 

‘மிஸ்டர் ஜெகன், நான் சம்பாதிக்கறேன்னு தானே என்னைக் கட்டிண்டேள்?”

 

“அப்பிடியே வச்சுக்கயேன், நேக்கென்ன கொறஞ்சுடப் போறது!’

 

‘நீங்க ரொம்ப முற்போக்குன்னு நெனப்போ?’

 

‘ஹூ ஸெட் ஸோ?’

 

‘விதவைத் திருமணம் பத்தி பேசறளே! எவளையாவது பாத்துப் பண்ணிக்கறது… எதுக்கு ஒரு விவாகரத்து கேஸைப் பிடிச்சேள்?’

 

‘கெடைச்ச விதவைங்களை விட ஒன்னை நேக்குப் பிடிச்சது.”

 

‘வாட் இஃப்? நான் மறுபடியும் என்னோட பர்ஸ்ட் ஹஸ்பெண்டை மீட் பண்ணி அவரையே திரும்பக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக, உங்களை டிவோர்ஸ் பண்ணிடறதா வச்சுக்குங்க. நீங்க தாங்கிப்பேளா?’

 

குலுங்கிக் குலுங்கிப் புரையேறுகிற மாதிரி ஜெகன் சிரித்து விட்டார். தலையைத் தட்டிக் கொண்டு சிரிப்பு கண்ணில் நீராக வழிய, அந்த முகம் இன்னும் ஞாபகத்திலே இருக்கு.

 

‘சீரியஸா கேக்கறேன்.’

 

‘தோ பாரும்மா! இதுக்கு மேல சிரிக்க முடியாது. நீ பாவம் அவலை நெனச்சு ஒரலக் குத்திண்டிருக்கே!’

 

‘என்ன சொல்றேள்?’

 

‘ஒரு ஆம்பிளை ஒங்கிட்டே தப்பு செஞ்சுட்டாங்கறதுக்காக ஆண்குலத்தோடேயே போருக்கு நின்னுண்டிருக்கே! இந்தக் கண்ணை, இந்த மூக்கை. இந்த ஒதட்டை வெச்சுண்டு…’

 

அப்புறம் என்ன செய்ய?

 

ஜெகன் எனக்கு அன்பை, காதலை, உணர்த்தினார். நான் மிகைப்படுத்தலே.

 

நேசம்னா எதுன்னு அவர்கிட்டத்தான் கத்துண்டேன். ஒரு இதயத்துக்குள்ள நொழயறதுன்னா என்னன்னு கத்துண்டேன். பேச்சு இல்லாமே, நிசப்தமா, நிர்மால்யமா.

 

நேத்திக்கோ முந்தா நாளோ ஆபீஸ்கேண்டீன்ல அப்பளம் விக்கிறவர், நான் டோக்கன் வாங்கிண்டிருக்கச்சே, மொதல் டேபிள்ள யாரண்டையோ பேசிட்டிருந்தார்.

 

‘பாலகணேசன் செகண்ட் ஒய்ப் டெலிவரி டயம். இப்ப போய் ஜாண்டிஸ் வந்துருக்கு. கேஸ் தேறாதுங்கறா. நேத்திக்கு அவா ஆபீஸ் போனேன். அவரைக் காணலே. விசாரிச்சதுக்கு விவரம் சொன்னா.’

 

நான் திரும்பிப் பார்த்தேன்.

 

அவர் என்னைக் கவனிக்கலே. டிபன் சாப்பிடறச்சே பேசற ஊர் வம்புதான் அது. குத்திக் காட்டணும்னோ காதுல விழணும்னோ சொன்னதில்லே.

 

பாலகணேசன் என்ன நினைப்பார்? ஒருத்தி வயத்தெரிச்சலை, ஊரறிய கோர்ட்டேறிக் கொட்டிண்டோம். பகவான் பழி தீர்த்துண்டான்னு நெனைப்பாரோ?

 

ஆமா! ஐ நோ ஹிம்.

 

அவரை நேக்குத் தெரியும்! மடத்தனமா பரம சண்டாளமா ஏதாவது தப்பைப் பண்ணிட்டுத் தலையைத் தலையை அடிச்சுப்பார். அதுக்காக அப்பறமும் அந்தத் தப்பைப் பண்ணாம விட்டிருவாரோ? ஊஹூம்.

 

இவாளை சிருஷ்டிக்கறச்சே பகவான் டெஸ்ட்டியூபிலே பாதரசத்தை ஊத்திப் பரிசோதனை பண்ணியிருப்பாரோ!

 

என்னது… இன்னிக்குன்னு பார்த்து 25 – ஜீ இத்தனை நாழியாக் காணோம்!

 

ஹம்மா… வயத்துக்குள்ளாற இதென்ன பயங்கர வலி… யம்மாடி.

 

சடார்னு அந்த பழைய பயம்.

 

இந்தக் கூட்டத்திலே ஏறி பஸ்ல ஏதானும் ஆயிடுமோ? மானேஜர் பேச்சைக் கேட்டிருக்கணுமோ?

 

‘அப்பளாம்… பப்படம்…’

 

நான் திரும்பவில்லை.

 

‘மேடம் அப்பளாம் வாங்கல்லியோ?’

 

‘அட நீங்களா மேடம்!’

 

நான் மெலிசாய்ச் சிரிச்சேன்.

 

‘மிஸ்டர் பாலகணேசன் சமாசாரம் கேள்விப்பட்டிருப்பேள்.”

 

‘வேறே ஏதாவது பேசுங்க சார்!’

 

‘எக்ஸ்க்யூஸ் மீ. தப்பா நெனைச்சுக்கப்படாது. ஒங்க வயத்தெரிச்சல் கொட்டிண்டதுக்கு அனுபவிக்கிறார்.’

 

‘சார், ப்ளீஸ்.’

 

அவர் ஓயவில்லை. ஓயும் உத்தேசமில்லை.

 

‘ஸெகண்ட் ஒய்ஃபுக்குப் பிரசவ டயத்தில ஜாண்டிஸாம் ஒங்களைப் படுத்தினேனே படுத்தினேனேன்னு தலை தலையாய் அடிச்சுக்கறார். நர்ஸிங் ஹோம் மாத்தியாச்சு. அரை மணி மின்னாடி பார்த்துட்டு வந்தேன்.’

 

‘எந்த நர்ஸிங் ஹோம்?’

 

‘கல்யாணி, நீங்க போய்ப் பார்த்தேள்னா அவருக்கு ரொம்ப ஆறுதலாயிருக்கும்.’

 

‘வெளையாடறேளா?’

 

‘நோ, நோ, சத்தியமாச் சொல்றேன்! நீங்க ஏதோ சாபம் கொடுத்துட்ட மாதிரி பொலம்பிண்டிருக்கார். அப்படியெல்லாம் இல்லேன்னு நிரூபிக்கிறாப்பல போய்ப் பார்த்துட்டு வந்தேள்னா…’

 

நான் யோசிச்சேன்.

 

இருக்கிற வலியையும் வேதனைகளையும் மறந்து அவரைப் பார்த்துச்சுடச் சுடக்கேக்கணும் போல ஒரு ஆத்திரம்.

 

‘நீங்களும் வர்றேளா?’

 

‘ஓ, எஸ்!’

 

ஓர் ஆட்டோவைக் கைதட்டி நிறுத்தினேன். ஏறி உட்காரும் போது மனசு குளிர்ந்துவிட்டது.

 

சே, பாவம்! முட்டாள் மனுஷர் அவர்கிட்டே சண்டை போட்டுக்க என்ன பாக்கி இருக்கு? நான் ஏன் போகணும்? போகணுமா? நல்ல மனசோட ஒரு வெல்விஷர் மாதிரி போனாத்தான் என்ன?

 

மிஸ்டர் பாலகணேசன்! இன்னும் பிதற்றிண்டு இருக்க வேண்டாம். பாரும், நானும் தாய் ஆயிட்டேன்.

 

ஒரு தாய் வேற எவளும் நாசமாய்ப் போயிடணும்னு வேண்டிக்க மாட்டான்னு சொல்லிட்டு வரணும்.

 

ஆட்டோ கௌம்பிடுத்து.

 

வண்டி ஜெமினி பாலம் ஏற்றச்சே என் பயம் எங்கேயோ போயிடுத்து.

 

கொஞ்ச நாழிக்கு முந்தி வந்த சின்னக்கோபம் கூடக் குளுந்துடுத்து.

 

பகவானே… தப்பித் தவறிப் பாலகணேசன் சம்சாரத்துக்கு எதுவும் ஆயிடப்படாது.

 

காப்பாத்து! அந்த ஆளுக்குப் பைத்தியம் பிடிச்சுடும். காப்பாத்துன்னு வேண்டிண்டுட்டேன்.

 

ஹம்மா… மறுபடியும் அந்த வலி.

 

வயத்திலே ஒதைக்கிற ஜீவனே! சித்த நாழி பொறு எந்த மனசுலேயும் கொதிப்போ, தவிப்போ இல்லாம நீங்கிடட்டும்.

 

நீ உதிக்கிற வேளை சுபவேளையா இருக்கட்டும் சித்த நாழி பொறுத்துக்கோ… சித்த நாழி.

 

+++++++++++++++++++

Series Navigationசிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2ஒரு பழங்கதை
author

வையவன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” ஓர் உதயத்தின் பொழுது ” சிறுகதை நேர்த்தியான நடையில் சுவையுடன் சொல்லப்பட்டுள்ளது. தாய்மையின் சிறப்பு அம்சம், அதனால் உண்டாகும் துன்பத்திலும் காணும் இன்பமும் அழகுபட கூறப்பட்ட்டுள்ளது. அதோடு முன்னாள் கணவனின் மனைவி மீது கொள்ளும் இரக்க சிந்தையும் சிறப்பு அம்சம் எனலாம். வாரம் ஒரு வைரமணிக் கதையை படைத்துவரும் வையவன் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும் ……….. டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *