மருத்துவக் கல்லூரி வகுப்பின் முதல் நாள்.
காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டேன். விடுதி உணவகத்தில் புது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பசியாறினோம். அங்கு ஓரளவு அறிமுகம் செய்துகொண்டோம். இனி பார்வையாளர்களின் கண்காணிப்பு இல்லை. ஆனால் சீனியர் மாணவர்கள் எங்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். இனி வகுப்புகள் முடிந்து மாலையில்தான் ரேகிங் தொடரும்.அதுவரை கவலையில்லை.
முதல் நாள் என்பதால் நாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதில் அவசரம் தேவையில்லை. இனி ஆறரை வருடங்கள் ஒன்றாகத்தானே பயணிக்கப்போகிறோம். பெயர்களை மட்டும் தெரிந்துகொண்டோம். அதுகூட சுலபமாக நினைவில் இல்லைதான்.
பசியாறி முடித்தபின் நாங்கள் அனைவரும் செம்மண் வீதியில் கல்லூரி நோக்கி நடையிட்டோம். அந்த காலைப் பொழுது மிகவும் ரம்மியமாக இருந்தது. ஆங்காங்கு நின்ற பூ மரங்களில் இலைகள் அசைந்து மெல்லிய பூங்காற்று வீசி எங்களை வரவேற்றன. சற்று தூரத்தில் நின்ற கற்பாறை மலைகள்கூட ஆடாமல் அசையாமல் நின்று எங்களை வாழ்த்தின. பறவையினங்கள் உரத்த குரலில் கீச்சிட்டு ஆரவாரம் செய்தன. மருத்துவம் பயிலப்போகும் முதல் நாள் என்பதால் மனதில் உண்டான ஆர்வமும் உற்சாகமும் அவ்வாறு இயற்கையின் அழகையும் கண்டு இரசிக்கச் செய்திருக்கலாம்.
நாங்கள் அனைவருமே ஆங்கிலத்தில்தான் உரையாடிவாறு நடந்து சென்றோம். இந்த முப்பத்தைந்து பேர்களில் எத்தனை தமிழர்கள் உள்ளனர் என்பது தெரியவில்லை. ஏனோ அதைத் தெரிந்துகொள்ள ஆவல் கொண்டேன். இன்று எப்படியும் யார் யார் எங்கிருந்து வந்துள்ளனர் என்பது தெரிந்துவிடும். அதோடு அந்த இருபத்தைந்து பெண்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
கல்லூரி முதல்வர் அறைக்கு முன்பு அனைவரும் நின்றோம். அதன் அருகில்தான் பெண்கள் விடுதி இருந்ததால் அவர்கள் முன்பே அங்கு வந்து விட்டனர்.பரவாயில்லை. அனைவரும் அழகான பெண்கள்தான்! பெரும்பாலோர் நல்ல நிறத்தில் இருந்தனர். அவர்களில் சிலர் அபார அழகுடன்கூட காட்சி தந்தனர். அவர்களில் தமிழ்ப் பெண்கள் எத்தனை பேர்கள் என்பது தெரியவில்லை.
கல்லூரி அலுவலக அதிகாரி எங்களை வரவேற்றார். அவர் பெயரும் ஆர்தர். அவர் ஒவ்வொருவருக்கும் கால அட்டவணை தந்தார். அதில் எந்தெந்த வகுப்புகள் எப்போது எங்கு நடைபெறும் என்பது இருந்தது. காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணிவரை வகுப்புகள். இடையில் ஒரு மணி முதல் இரண்டு வரை மதிய உணவு நேரம். அப்போது விடுதி சென்றுவிட்டு திரும்பலாம்.
முதல் வகுப்புக்குச் சென்றோம். அது ஆங்கில வகுப்பு. அதை நடத்தியவர் குண்டர்ஸ் என்பவர். அவர் மங்களூரைச் சேர்ந்தவர் என்று அறிமுகம் செய்துகொண்டார். அவருடைய தாய்மொழி மல்பாரி. அவருடைய மனைவி டாக்டர் குண்டர்ஸ் என்பவர்தான் ஒ.ஜி. என்ற ” பெண் பாலியல் நோய் மற்றும் பிரசவம் ” எனும் பிரிவின் பேராசிரியை. அவர் மருத்துவமனையில் பணிபுரிந்தார். நான்காம் ஐந்தாம் ஆண்டுதான் நாங்கள் அவரிடம் பிரசவம் பயில்வோம். மருத்துவமனை இங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வேலூர் நகரில் இருந்தது. இங்கிருந்து கல்லூரிப் பேருந்துகள் குறித்த நேரத்தில் அங்கு மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும். அங்கு செல்ல அரை மணி நேரமாகும்.
ஆங்கிலப் பாடம் மிகவும் எளிமையானது என்றும் அதை சிரமம் பாராமல் விரும்பி கற்கலாம் என்று கூறிய குண்டர்ஸ், மருத்துவம் பயில தேர்வு பெற்றுள்ள எங்கள் அனைவரையும் வாழ்த்தி வரேவேற்றார். அதன்பின்பு எங்களைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவதாகக் கூறி எங்களை அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். அது எங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகத் தெரிந்தது. காரணம் பெயர்கள் தெரியவில்லை என்பதோடு யார் யார் எங்கிருந்து வந்துள்ளனர் என்பதும் தெரியவில்லை. குறிப்பாக அந்த பெண்களைப் பற்றியும் ஏதும் தெரியவில்லை. அவர்களில் யார் யார் தமிழ்ப் பெண்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவல் கொண்டேன். ஆதலால் இதை நல்ல வாய்ப்பாகக் கருதி முழுமையான கவனம் செலுத்தினேன். ஒரு தாளில் அவர்களுடைய பெயர்களையும் அங்க அடையாளங்களையும் குறித்துக்கொண்டேன்.மற்றவர்கள் நிலையு ம் அப்படித்தான் இருந்திருக்கும்.
அந்த வகுப்பறை மிகவும் பெரியது. உட்கார நீண்ட இருப்பிடமும் அதன் எதிரே நீண்ட மேசையும் இருந்தன. ஆண்கள் ஒரு பகுதியிலும் பெண்கள் ஒரு பகுதிலும் அமர்ந்திருந்தோம். முதல் வரிசையிலிருந்து ஒவ்வொருவராக பெயரையும் ஊரையும் கூறினோம். நான் தமிழ் மாணவ மாணவியரின் பெயர்களை மட்டும் குறித்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தினேன்.
ஏபல் ஆறுமுகம் – மலேசியா , பெஞ்சமின் – தமிழ் நாடு, டேவிட் ராஜன் – தமிழ் நாடு, கிளெமென்ட் தீனதயாளன் – தமிழ் நாடு, பிரேமன் ஜெயரத்னம் – ஸ்ரீ லங்கா, எல்மோ பாஸ்கர் ஜான்சன் – தமிழ் நாடு, ஜி. ஜான்சன் – சிங்கப்பூர், கீதா லீலா கோவில்பிள்ளை – தமிழ் நாடு, மகாதேவி – மலேசியா, மீரா நரசிம்மன் – தமிழ் நாடு, மைதிலி ரெங்கநாதன் – தமிழ் நாடு, பிரேமா துரைசாமி – சிங்கப்பூர், சூரியபிரபா – தமிழ் நாடு, கணேஷ் கோபாலக்கிருஷ்ணன் – தமிழ் நாடு, எட்வர்ட் ரத்தினம்- பர்மா. இவர்களில் ஒன்பது பேர்கள்தான் தமிழ் நாட்டு மாணவ மாணவிகள். மீரா நரசிம்மன், மைதிலி ரெங்கநாதன், கணேஷ் கோபாலக்கிருஷ்ணன் ஆகியோர் பிராமணத் தமிழர்கள். இவர்கள் தவிர தமிழர் அல்லாத இன்னும் ஐந்து பிராமணர்கள் இருந்தனர். மொத்தம் எட்டு பிராமணர்கள் எங்கள் வகுப்பில். ( இதை ஏன் கூறுகிறேன் எனில் கிறிஸ்துவக் கல்லூரியாக இருந்தாலும் இங்கு திறமைக்குதான் முன்னுரிமை தரப்படுகிறது என்பதற்காக. )
தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். அதே வேளையில் மலையாளிகள்தான் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். அவர்கள் மொத்தம் பதினேழு பேர்கள்! மீதமுள்ள அனைவரும் இந்தியாவின் வேறு மாநிலங்களின் மாணவ மாணவிகள். காஷ்மீர், பஞ்சாப், அஸ்ஸாம், மேகலேயா .வங்காளம், மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், ஆந்திரா ஆகிய இதர மாநிலங்களிலிருந்தும் வந்திருந்தனர். ( அவர்களைப்பற்றி பின்பு கூறுவேன் )
அறிமுகத்துக்குப் பின்பு ஆங்கிலப் பாடம் பற்றி சிறு விளக்கம் தந்தார். மருத்துவம் ஆங்கிலத்தில் பயிலப்போவதால் இங்கு இரண்டாம் மொழிப் பாடம் ( தாய்மொழி ) கிடையாது என்றார். அதனால் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது நல்லது என்றார். மருத்துவம் படித்து முடித்து உலகின் பல பகுதிகளுக்குச் சென்று பணிபுரியவும் ஆங்கிலம் பெரிதும் பயன்படும் என்று கூறினார். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆங்கிலம் பொது மொழியாகப் பயன்படுவதையும் நினைவுபடுத்தினார். ஆங்கில வகுப்புக்கு ஒரேயொரு பாடநூல்தான் பயன்படுத்தப்படும் என்றார். அது உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர் தாமஸ் ஹார்டி எழுதி ஆங்கில இலக்கியத்தில் பெரிதும் பேசப்படும் ” தி மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிஜ் ” ( The Mayor of Casterbrid ge ) என்ற பெயர் கொண்ட நாவல். தாமஸ் ஹார்டி பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் அவருடைய நாவல்களைப் படித்ததில்லை. இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் முடிவு செய்தேன். அந்த நாவலை வேலூரில் உள்ள ” காலேஜ் புத்தகக் கடையில் ” வாங்கலாம் என்றார். இனிமேல் அங்கில வகுப்புகள் வாரம் இருமுறை மதியம் இரண்டு மணிக்கு நடைபெறும் என்றும் கூறினார். அதன்பின் எங்களை சுதந்திரமாக விட்டுவிட்டார்.
நாங்கள் ஒருவரைப்பற்றியோருவர் தெரிந்துகொள்வதில் ஈடுபட்டோம். பெண்கள் அனைவருமே மிகவும் அன்போடு கை குலுக்கி தங்களை அறிமுகம் செய்துகொண்டனர். பெரும்பாலோர் நவநாகரீக நங்கைகள்தான்! எனக்கு பெயர்களை நினைவில் வைத்திருப்பதில் சிரமம் உண்டானது. இன்னும் ஆண்களின் பெயர்களே சரிவரத் தெரியவில்லை. பெண்கள் பெயர்களை நினைவில் வைத்திருக்க நாளாகும். பழகப்பழகத்தானே மனதில் பதியும்! ஆனால் ஓர் உண்மையை முதல் நாளிலேயே தெரிந்துகொண்டேன். அனைவருமே வசதியான குடும்பத்துப் பிள்ளைகள்தான்!
மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டு ஏறக்குறைய புகுமுக வகுப்பு போன்றுதான் இருந்தது. அங்கு அறிவியல் பிரிவில் பயின்ற அதே பாடங்கள்தான். இங்கும் இயற்பியல், வேதியியல் , தாவரவியல், விலங்கியல் படங்கள் பயிலவேண்டும். அதோடு கரிம வேதியியலும் உயிர் இயற்பியலும் ( Organic Chemistry and Biophysics ) சேர்ந்த ஒரு புதிய பாடமும் பயில வேண்டும்.
இயற்பியல் பாடம் பரிசோதனைக் கூடத்தில் நடந்தது. அதன் விரிவுரையாளர் ரோஸ் என்பவர். அவர் தமிழர். மிகவும் சாதுவான பண்பாளர். பாட நூல்களின் பெயர்களைத் தந்தபின்பு எங்களை அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். நாங்கள் மீண்டும் அறிமுகம் செய்துகொண்டோம். அப்போது ஒரு சிலரின் அடையாளம் தேர்ந்தது.
வேதியியல் வகுப்பை நடத்தியவர் பூனூஸ் மாத்யூஸ். இவர் மலையாளி. அவருடைய ஆங்கிலத்தில் அதன் பாணி தென்பட்டது. அவரும் நூல்கள் பற்றி கூறியபின் அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். இன்னும் பலரை நான் அடையாளம் கண்டுகொள்ள அது உதவியது.
தாவரவியல் வகுப்பும் பரிசோதனைக்கூடத்தில் நடந்தது. நடத்தியவர் ஜேக்கப் ஜான் என்பவர். இவர் மலையாளி. நூல்கள் பற்றி கூறியபின் அறிமுகம்தான்.
விலங்கியல் வகுப்பும் பரிசோதனைக்கூடத்தில்தான். நடத்தியவர் பூணன் அம்மையார். இவரும் மலையாளிதான். இங்கும் நூல்கள் பற்றி கூறியபின்பு பழைய பல்லவிதான் – அறிமுகம்!
கரிம வேதியியலும் உயிர் இயற்பியலும் சோதனைக்கூடத்தில்தான் நடந்தது. அதை நடத்தியவர் ஜேம்ஸ் வர்கீஸ் என்பவர்’ சற்று வயதானவர். தலை வழுக்கையாகிவிட்டது. அவருடையே பெயரே கூறும் அவரும் மலையாளி என்பதை!
இவ்வாறு ஒரே நாளில் ஆறு முறை அறிமுகம் செய்துகொண்டதால் பல பெயர்கள் நினைவில் நின்றன. முகங்களைப பார்த்து பெயரைச் சொல்வதில்தான் இன்னும் சிரமம் இருந்தது.அதற்கு இன்னும் இரண்டொரு நாட்கள் ஆகலாம்.
அன்று மாலை வகுப்புகள் முடிந்து விடுதி திரும்ப மனமில்லை. . அங்கு சீனியர் மாணவர்கள் எங்களுக்காக ஆவலுடன் காத்திருப்பார்கள்!
( தொடுவானம் தொடரும் )
- ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.
- காசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே
- அபிநயம்
- ஆத்ம கீதங்கள் – 26 காதலிக்க மறுப்பு .. !
- தாய்மொழி வழிக்கல்வி
- நேபாளத்தில் கோர பூபாளம் !
- இமாலய மலைச்சரிவு நேபாளத்தில் நேர்ந்த ஓர் அசுரப் பூகம்பத்தால் மாபெரும் சேதம், உயிரிழப்பு
- தொடுவானம் 65. முதல் நாள்
- பனுவல் வரலாற்றுப் பயணம் 3
- இரு குறுங்கதைகள்
- “மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “
- சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை
- ஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…
- முக்காடு
- சொப்பன வாழ்வில் அமிழ்ந்து
- வைரமணிக் கதைகள் – 13 காலம்
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3
- தலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?
- இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்
- ஒரு துளி கடல்
- பாலுமகேந்திரா விருது – (குறும்படங்களுக்கு மட்டும்)
- ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2015 மாத இதழ்
- ஹியாம் நௌர்: துயரின் நதியில் நீந்துபவள்
- அருந்ததி ராய்: நிகழ் நிலையில் விதைந்தாடும் சொற்கள்
- சில்வியா ப்ளாத்: சாவின் கலையைக் கற்றுக் கொண்டவள்
- மிதிலாவிலாஸ்-11