நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4

This entry is part 19 of 25 in the series 3 மே 2015

 

மங்கலான தெருவிளக்கின் வெளிச்சத்தில் குறுகிய அந்த தெருவில் நடந்தாள் யாழினி. அவள் வீட்டின் முன் தெருமக்கள் குழுமியிருக்க, அங்காங்கே சிலர் கூடிக் கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

வயிற்றை பிசைந்து குடல் தொண்டையில் ஏறுவதைப் போன்று அடைத்தது யாழினிக்கு.

 

அருகில் வந்த சகாதேவன் இப்பதான் வரியா யாழினி என்றான்

 

“ம் என்னாச்சு, அம்மா அப்பா எங்க சகா,” என்றாள் யாழினி. சகா தேவன் எதிர்வீட்டில் வசிப்பவன் சம வயதுடையவன், தூரத்து உறவில் அத்தை மகன்.

 

“வந்து யாழினி, வாயேன் செங்கம் வரைக்கும் போய்ட்டு வந்துடலாம்,” என்றான்

 

“எதுக்கு சகா இப்பதான செங்கத்துல இருந்து வந்தேன், அப்பா வந்துட்டா என்ன பண்றது அதுக்குள்ள சுடு தண்ணி வைக்கணுமில்ல,” என்றாள் யாழினி.

 

“அய்யோ நான் பெத்த மவளே இன்னாடி சொல்வேன் உன்கிட்ட,” என்று கதறிக் கொண்டு வந்தாள் சகாவின் தாய்

 

யாழினி குழப்பப் பார்வையோடு நிற்க, “அம்மா சும்மா இருக்கமாட்டியா நீ !” என்று அதட்டிய சகாதேவன், சன்னலில் இருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்து நடுவீட்டில் விளக்கேற்றினான்.

 

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது. என்னவாயிற்று அம்மா அப்பா எங்கே போனார்கள். சகா ப்ளீஸ் அம்மா எங்கடா, அப்பா எங்க காணோம்,” என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் யாழினி.

 

“அத்தையும் மாமாவும் செங்கம் போயிருக்காங்க போன இடத்துல சின்னதா ஆக்சிடெண்ட் பெரிய அடி எல்லாம் இல்ல யாழினி, வந்திருவாங்க உன்னை இங்கயே இருக்க சொன்னாங்க,” என்றான் சகா.

 

“பிறகெதற்கு விளக்கேற்றினாய் ?”

 

“ச்சே அசடே நல்லபடியா வரணும்ன்னு விளக்கேத்த மாட்டாங்களா,” என்றான் சகா தேவன்.

 

“ஆக்சிடெண்ட் எந்த பஸ் சகா நாராயணா தானே அந்த பஸ்ல ஸபாட் அவுட் ரெண்டு பேருன்னு சொன்னாங்களே! அய்யோ,” என்று அலறி விழுந்தாள் யாழினி.

 

சகா அதிர்ந்து போய் நின்றான்.

 

யாழினிக்கு கோபமாய் வந்தது அப்போதே சொன்னாளே யார் என்று பார்த்துவிட்டு போகலாம் என்று அவன் உடல் இச்சைத் தீர வேண்டும் அந்த வேகம் தானே அவளை இழுத்துக்கொண்டு வந்தான்.

 

சட்டென்று எழுந்து வெளியே வந்தாள் யாழினி! விடுவிடு வென்று செங்கம் சாலையை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

 

“ஏய் யாழினி என்னாச்சு உனக்கு இப்ப! இப்ப தரமாட்டாங்க உடம்ப! அங்க ஆம்பிளைங்க இருக்காங்க, எடுத்துட்டு வருவாங்க,” என்று கூடவே ஒடி வந்தான் சகா. பற்ற வந்த அவன் கைகளை நீக்கித் தள்ளினாள் யாழினி.

 

இன்னமும் கொஞ்சம் உயிராவது இருக்கவேண்டும் இந்த சம்பவம் பொய்யாக வேண்டும் கடவுளே. கை கால் முறிந்து கிடைத்தால் கூட போதும் நான் உட்கார வைத்து பார்த்துக் கொள்வேன் என்றே மனம் பதறியது.

 

வேக நடையில் இருளில் கல் இடற குப்புற விழப் போனவளை தாங்கிப் பிடித்தான் சகாதேவன்.

 

அதே நேரம் குன்று மறைவில் இருந்து வெளிப்பட்ட ராகவின் கண்கள் இடுங்கியது. கோபத்தில் தகித்தது. கையும் களவுமாய் பிடிபட்டுவிட்டாள். ஏக பத்தினி போல் அல்லவா பாசாங்கு செய்தாள். இப்போதோ இன்னொருவனுடன் அதுவும் ரோட்டிலேயே அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு அந்த பாறையின் மீதே அமர்ந்துக்கொண்டான். ராகவ்.

 

விடுவிடுவென்று நடந்து கொண்டிருந்தவர்களை இடைமறித்து அந்த ஆட்டோ ஏற்றிக் கொண்டு செங்கம் நோக்கிச் சீறியது.

 

செங்கம் அரசாங்க மருத்துவ மனை.

 

சுற்றிலும் மதில் சுவர் கட்டப்பட்டிருக்க, மரங்கள் சூழ்ந்திருந்தது. அந்த மருத்துவ மனை, சவக்கிடங்கினுள் பொதுமக்கள்  எட்டி பார்ப்பதும் பிறகு மூக்கைப் பொத்திக் கொண்டு வெளியேறுவதுமாய் இருக்க, வராந்தாவில் சுருண்டு படுத்திருந்தாள் யாழினி.

 

அவளின் வேண்டுதல்கள் கடவுளின் செவியை தீண்டியிருக்கவில்லை. பெற்றோர் இருவரும் முகத்திற்கு கீழ் சிதைந்து சிதிலமாகியிருந்தார்கள்.

 

உங்கப்பனும் நானும் ஒன்னா செத்துடனும்டி யாழினி என்று அம்மா காதில் கிசு கிசுத்தாள்.

 

எப்பொதும் சொல்லும் அந்த வாய்ச்சொல் நிஜமாகிவிட்டதே! என்னை அல்லவா நிராதரவாக விட்டுச் சென்றுவிட்டார்கள்.

 

கண்கள் சுழன்றது ராகவ் தூர அமர்ந்திருந்தான். நேற்று இழைய இழைய நடந்தவன், கைகளை இறுகப் பற்றி விடாதிருந்தவன் தலையைக் கவிழ்ந்து தள்ளி அமர்ந்திருந்தான்.

 

ஆதரவாய் சாய்த்துக்கொள்ள கூட அருகில் வரவில்லையே! அவன் முகம் கடு கடு வென்றிருந்தது. சிறு சலனமும் அந்த முகத்தில் தெரியவில்லை. இவன் மனம் என்ன கல்லா என்று யாழினி எண்ணிக்கொண்டிருந்த வேளையில் ராகவின் மனநிலை வேறாக இருந்தது.

 

ஒரு பெண் இப்படி இரட்டை வேடம் போடுவாளா? வேறொரு ஆடவனைத் தொட அனுமதிப் பாளா? என்று எண்ணிக்கொண்டிருந்தான். அவனின் சிறுவயதில் அக்கம் பக்கத்தில் அவன் கண்ட தவறான உறவுகள் அவனை அவ்வாறு சிந்திக்கச் செய்திருந்தது.

 

இரு வேறு திசையில் பயணித்த இருவர் சிந்தனையும் பிரிவிற்கு வகை தேடியது. இயற்கையோ எப்பொழுதும் பெண்ணிற்கு பாதகம் என்பதை உணராத யாழினியின் மனதில் ராகவின் மீது வெறுப்புணர்வு தோன்றியது. தன் பாரத்தை அசுவாசப்படுத்திக் கொள்ள தோள் கொடுக்காத துணைவன் எத்தகையவன். வெறும் உடல் பகிர்வு மட்டும் தான் மணவாழ்வா? அதற்கு மிஞ்சியது வேறு எதுவும் இல்லையா? தகப்பனாய், தோழனாய் இன்னும் எத்தனை உறவுகள் இருக்கிறதோ அத்தனை உறவுகளின் கூட்டமைப்புமாய் அவனால் இருக்க ஆகாதா?

 

சகாதேவன் யாழினியின் அருகில் வந்தான். கொஞ்சம் டீ குடி யாழினி, இப்படி பட்னி கிடந்தா செத்துப் போனவங்க திரும்ப வந்துடப் போறாங்களா? என்று பேசிக் கொண்டிருக்க ராகவின் தமக்கை வந்து சேர்ந்தாள் அங்கு. ராகவ் தனித்து அமர்ந்திருந்த நிலையும், திருமணம் நிச்சயத்த நேரத்தில் சகுனத் தடையும், யாழினியை எப்படி விலக்கி விடலாம் என்று யோசித்தது அவள் மனம்.

 

மெல்ல ராகவின் அருகில் அமர்ந்தவள், ராசி கெட்டவளை எப்படிடா நம்ம வீட்டுக்கு மருமகளாக்குறது, நம்ம வீட்ல கெட்டது நடந்தா என்னத்த செஞ்சு தொலைக்க, பேசாம கூட இருந்து காரியத்தை முடிச்சுட்டு, கை செலவுக்கு ஒரு ஆயிரமோ ஐநூறோ கொடுத்துட்டு வந்து சேருடா என்று கிசு கிசுத்தாள்.

 

ஏற்கனவே காட்சியின் வசமாய் பொய்க் கற்பனையை உருவாக்கிக் கொண்டு கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ராகவிற்கு அது சரியெனப்பட்டது. இந்த ஒழுக்கங் கெட்டவளோடு இனி வாழமுடியாது என்று முடிவெடுத்தான்.

 

நினைப்ப தெல்லாம் நடப்பதில்லை !  நடப்ப தெல்லாம் நினைப்பதில்லை !

 

[தொடரும்]

Series Navigationஇந்த கிளிக்கு கூண்டில்லைவைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *