ஒரு மொக்கையான கடத்தல் கதை

author
2
0 minutes, 18 seconds Read
This entry is part 10 of 25 in the series 3 மே 2015

 

சிவக்குமார் அசோகன்
சிறுகதை

ஒரு மொக்கையான கடத்தல் கதை

சிவக்குமார் அசோகன்

ஆர்.பி டிரேடர்ஸ் முதலாளியை ஏதாவது செய்ய வேண்டும். ஏதாவது என்றால் ஏதாவது இல்லை. அவர் கடைசி மூச்சு நிற்கும் வரை நினைவில் வைத்திருக்கும் படி, என் முகத்தை மறக்க முடியாத படி மூச்சு நிற்கும் வேளையில் நான் எதிரே போய் நின்றால் ‘நீயா?’ என்று கலவரத்துடன் தலையை எக்கிப் பார்த்துவிட்டு மண்டையை போட்டுவிட வேண்டும். அந்தளவிற்கு டர்ர்ர்ராக ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் எந்தவிதத்திலும், யாரிடமும் மாட்டிக் கொள்ளக் கூடாது. என் உடம்பு சப்பை. தாங்காது. வெளியே சொல்வதற்கே அவர் கூசிப் போய் விட்டுவிட வேண்டும்.

கல்லாவில் உட்கார்ந்திருக்கும் போது காறித் துப்பிவிடலாம். உடனடியாக வேலையாட்களால்- நூறு கிலோ ஜீனி மூட்டையை முதுகில் சுமந்து இரண்டாவது மாடிக்கு ஏறுகிறவர்கள்- கிழிக்கப் படுவேன். ஜீனி சாக்கைக் கிழித்து வெயிலுக்குத் திரை செய்வது போல என்னையும் கிழித்து வீசிவிடுவார்கள்.

எனவே துப்புவது தப்பு.

காலை நேரங்களில் பூங்கா பக்கம் அவரைப் பார்த்திருக்கிறேன். கரும்புக் கொல்லையை துவம்சம் செய்துவிட்ட யானை செரிமானத்திற்கு அனத்திக் கொண்டிருப்பது போல நடந்து கொண்டிருப்பார். கல்லாவில் பாதி பிள்ளையார் கணக்காகத் தெரிபவர், நடந்து போகும் போது தேர் கணக்காகத் தெரிவார். பல்க் என்றால் அப்படி ஒரு பல்க். மதுரை நாயக்கர் தூண் போல. பூங்காவில் அவர் நடந்து கொண்டிருக்கும் போது அரச மரத்துக்கு பின்னாடி ஒளிந்து கொண்டு, அருகே வரும் போது கரைத்த சாணியை மேலே ஊற்றி விடலாம் என்று யோசித்தேன். முகத்தை மட்டும் நன்றாகக் காட்டிவிட்டு விழுந்தடித்து ஓடிவிடலாம்.

என்ன நடந்தது என்று அவரும் பூங்காவும் சுதாரிப்பதற்குள் தப்பிக்க வழி இருக்கிறது. மறுபடி ஏதாவது யோசிப்பதற்குள், அவர் சாணியுடன் முகத்தைக் கேவலமாக சுழித்துக் கொண்டு விதிர்த்து என்னை வெறித்து நிற்பது போல் நினைத்துப் பார்த்தேன். கண் கொள்ளாக் காட்சி.

‘மீதி சில்லறை அஞ்சு ரூபா இல்லை.. இந்த சாக்லெட்டை வாங்கிக்க..’

‘என்னங்க எக்ஸ்பைரி ஆனதைக் கொடுக்கறீங்க…?’

‘அஞ்சு ரூபா சாக்லெட்! டேட் போய் பதினைஞ்சு நாள் தான் ஆகுது. ஒண்ணும் ஆகாது தம்பி.’

‘ஒண்ணும் ஆகாதுனா ஏன் சார் தேதி போடணும்? எனக்கு முதல்ல சில்லறை வேணும். நான் சாக்லெட்டே கேட்கலையே..’

‘கொஞ்சம் ஓரமா நில்லு… அடுத்த ஆளைக் கவனிக்கணும். இந்தா இரு நூறு ரூபா சாமானை வெச்சுட்டு போ.. நூத்தித் எழுபத்தஞ்சு ரூபா சில்லறையா கொடுத்துட்டு எடுத்துக்கோ.. இப்போதைக்கு நகரு… கூட்டம்.’

நகர்ந்திருப்பேன். அவரின் அடுத்த வார்த்தை தான் எனக்கு எக்குத் தப்பாகக் கோபமூட்டியது. ‘சாவு கிராக்கி காலையிலேயே.. ‘ என்று என் காதில் விழுவது போலவும், விழாதது போலவும் ஏதோ திட்டினார்.

எனக்கு குப்பென்று இரத்தம் தலைக்கு ஏறியது. ‘யாரு நானா சாவுகிராக்கி..அஞ்சு ரூபா சில்லறைக்கு சாக்லெட் கொடுக்கிறே.. அதுவும் எக்ஸ்பைரி.. கேட்டது தப்பு?’ என்று ஒருமையில் பேசிவிட..

‘ஏய் மரியாதையா பேசு…’ என்று அவர் சொல்ல, அதற்குள் வேலையாட்கள் என்னை சூழ்ந்து கொள்ள, ஆவேசமாக ‘அவனை அடிச்சு வெளில போடுங்கடா..’

போட்டார்கள். செருப்பும், மனசும் பிய்ந்து போய் ரோட்டில் கிடந்தேன். சுற்றிலும் சந்தடி நிறைந்த கடைத் தெருவே சற்று குனிந்து என்னைப் பார்க்கிறது. உச் கொட்டுகிறது. திருடனா என்கிறது. ‘திமிர் பிடித்தவன் என்ன பேச்சு பேசறான்’ என்று ஒரு வேலையாள் என்னை தெருவிடம் அறிமுகப்படுத்தினான்.

இது நடந்து ஒரு வாரம் ஆகிறது. ஒரு வாரமாகப் பேயறைந்தது போல் தான் இருக்கிறேன். இப்படி ஒரு அவமானத்தை நான் சந்தித்ததில்லை. அதுவும் தேவையில்லாத அசிங்கம். நான் என்ன செய்தேன்? அவர் கடையில் ஏறி சாமான் வாங்கியது குற்றமா? அல்லது இரு நூறு ரூபாய் துட்டை நீட்டியது தான் குற்றமா? காசு ஏறிப் போனதால் விளைகிற கொழுப்பை ஆர். பி ட்ரேடர்ஸிடம் காண்கிறேன். அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. அவசியமில்லை. கரைக்க வேண்டும். கொழுப்பைக் கரைக்க வேண்டும். அலறவிட வேண்டும்.

‘தப்பு தாம்ப்பா சில்லறை கொடுக்காமல் விட்டதிலிருந்து நான் செய்த எல்லாம் தப்பு. மன்னிச்சிடு’

மாட்டுச் சாணி வாங்க கோனார் தெருவுக்குப் போய்க் கொண்டிருக்கும் என்னை ‘அம் தினேஷ். எம்.சி.ஏ ஃபைனல் இயர்!’ என்று இந்தத் தருணத்தில் சுய அறிமுகம் செய்து கொள்வது அழகியதொரு முரண். என் காலேஜில் எம்.சி.ஏ டிபார்ட்மெண்ட் என்றில்லை எந்த டிபார்ட்மெண்ட் போய் தினேஷ் என்று கேட்டாலும், டாப்பர் தினேஷா என்று கேட்பார்கள். காலேஜ் முதல் செமஸ்டரிலிருந்து இந்த செமஸ்டர் வரை நான் தான் முதல் ரேங்க். மொத்தமிருக்கும் எழுபது பேரில் ஒருவன் அல்லது ஒருத்தியைக் கூட முதல் ரேங்க் எடுக்கவிட்டதில்லை. நிகர பர்சண்டேஜ் 93. விப்ரோவிலிருந்து கேம்ப்பஸ் வந்திருந்தது. கடைசித் தேர்வு எழுதி முடித்தக் கையோடு வந்துவிடு என்றிருக்கிறார்கள். சம்பளம் முப்பதாயிரம்.

இந்த மேல் விபரங்கள் எல்லாம், இந்தக் கதைக்கும், தொடர்ந்து வரப் போகும் நிகழ்வுகளுக்கும் கடுகத்தனை பிரயோஜனமில்லை என்றாலும், ஹீரோ(இல்லையா?) அறிமுகம் சற்றே பந்தாவாக இருக்க வேண்டியதன் அவசியம் பொருட்டே சொல்லப் பட்டிருக்கிறது.

”யாருப்பா அது?”

”சாணி விலைக்குக் கொடுப்பீங்களா?” இப்படி ஒரு டயலாக்கை என் வாழ்வில் நான் பேசுவேன் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று சொன்னால், இதற்கு மேல் எதுவும் வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன் என்று தான் அர்த்தம். கேட்டேன். வேட்டியையே ட்ரவுசர் போல் குறுக்கே விட்டுக் கட்டியிருந்த அழுக்கு ஆசாமி என்னை ஏற இறங்கப் பார்த்தார். அருகில் வந்தார். பாலில் குளித்துவிட்டு வந்தவர் போல அவர் மேலெல்லாம் ஒரே பால் வாடை. ஒரு மாதிரி குமட்டலாக இருந்தது.

”சாணியா? எதுக்கு?” அவ நம்பிக்கையாகக் கேட்டார்.

”ஆமா சார். என் அம்மா வாங்கிட்டு வரச் சொன்னாங்க.. எதுக்குனு தெரியல.. ” – அவர் விபரங்கள் கேட்கவில்லை.

”வாளி இருக்கா?”

”இதுல போட்டுக் கொடுத்துடுங்க..” என்று ஒரு பாலிதீன் கவரை நீட்டினேன். சாணி கை மாறியது. விலையைக் கேட்காதீர்கள்.

மறு நாள் அதிகாலை எழுந்து, காலியான ரெண்டரை லிட்டர் பெப்ஸி பாட்டிலில் சாணிக் கரைசலை ஊற்றிக் கொண்டு வெளியே கிளம்பும் சமயம் அம்மா விழித்துக் கொண்டாள்.

”என்னடா இது?”

”சாணி. ஒரு ப்ராஜெக்ட்க்காக..”

”பாத்ரூம் பூரா இது தான் வாடையா..? கருமம். என்ன ஏதுனு புரியாம இருந்தேன்.”

பூங்காவின் அரச மரத்தடி அருகில் பைக்கை நிறுத்தி, அங்கேயே ஒரு கால் மணி நேரம் நின்றிருப்பேன். அதிகம் காக்க வைக்கவில்லை அந்த ஆர்.பி.

மஞ்சள் நிற டி-சர்ட்டும், கருப்பு நிற லோயரும் அணிந்திருந்தார். சற்று நேரத்தில் அந்த மஞ்சள் பனியன் சாணி பனியன் ஆகப் போகிறது என்று நினைத்துக் கொண்டே பைக்கில் சாணி பாட்டில் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்தேன். இருந்தது. அவர் என்னைப் பார்த்துவிடாத படி மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். பைக்கில் சாய்ந்து உட்கார்ந்திருந்தேன்.

கையைக் காலை ஆட்டிக் கொண்டே யாரையோ அழைத்தார். அழைத்த திசையை நான் பார்த்தேன். இந்தக் கதை இந்த இடத்திலிருந்து அநியாயத்திற்கு ஃபேண்டஸியாகவோ அல்லது நம்ப முடியாதபடியோ இருந்தால் அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.. நடந்த நிகழ்வுகள் அப்படி.

அவள் செக்கச் செவேலென்று இருந்தாள். கால் முட்டியை சற்றே தாண்டிய ஒரு ட்ரவுசர். முதலில் அதைச் சொல்லுவதற்கு மன்னிக்கவும், முதலில் அதைத் தான் பார்த்தேன். கறுப்பு நிறத்தில் வட்டக்கழுத்து பனியன். கண்கள் காணும் காட்சிக்கு முரணாக invisible என்று பனியனில் எழுதியிருந்தது. கொஞ்சம் தொளதொளவென்றிருந்த அந்த பனியன் அவளின் மெல்லிய வியர்வையில் உடலுடன் ஒட்டியிருந்தது. சாணி மேட்டர் என்னாயிற்றா? இதற்கு மேல் அவளை வர்ணிக்கவிடாமல் யாராவது இப்படிக் கேட்பார்களா? அந்தத் திட்டமே இப்போது இல்லை தெரியுமா? நான் வேறு மாதிரி யோசித்துக் கொண்டிருந்தேன். ஏன் அப்படி யோசித்தேன் என்று இந்த நிமிடம் வரை எனக்கே ஆச்சரியம் தான். ஆனால் என் மூளையில் வினோதமாக அந்த ஐடியா தோன்றியது. செயல்படுத்த முடியுமா என்று என் மனசு குறுக்குக் கேள்வி கேட்கவில்லை. செய்துவிடு என்று மட்டும் தான் சொல்லியது.

ஆம், அந்தப் பெண் ஆர்பியின் மகளாக இருக்கும் பட்சத்தில் அவளைக் கடத்திவிட வேண்டும். மறுபடி படித்தாலும் அது தான் உண்மை. கடத்தல். சினிமாவா? நாவலா என்ற யோசனையெல்லாம் வேண்டாம். நிஜம். கிள்ளிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

என் அருகில் வந்தார்கள். திரும்பிக் கொண்டு கால்களை அகல விரித்துக் கொண்டு குனிந்து குனிந்து நிமிர்ந்தேன். என்ன பேசுகிறார்கள் என்று காதுகளை அனுப்பினேன். மகள் தான் ஊர்ஜிதம் ஆகிவிட்டது.

”இப்படி மெதுவா நடந்தா தொப்பை குறையாதுப்பா.. வேர்க்க வேர்க்க நடக்கணும். தோ இப்படி…” -அவள் கைகளை வீசிக் கொண்டு அவரைக் கடந்து நடந்து காண்பித்தாள். அவள் முன்னே நடந்து செல்வதை பின்னால் நின்று பார்த்துக் கொண்டு ‘அவள் முகமும் அழகு’ என்று சொன்னால் இரட்டை அர்த்தத்தில் சேருமா?

கற்பனை செய்யாதீர்கள். நான் அவர்கள் பின்னே ஒரு பத்தடி தள்ளி பூங்காவை அவர்களோடு வலம் வர ஆரம்பித்தேன். அவசர அவசியமாக ஒரு திட்டம் வேண்டும். ஆர்பி மகள் கடத்தல்.

கடத்தல்- கடத்துலுக்கான நாள், நேரம், இடம்- கடத்திய பின் எங்கே மறைப்பது- என்ன டிமாண்ட்- எப்போது ரிலீஸ்- எல்லாவற்றையும் விட விபரீதம் இல்லாமல், ஒரு சினிமா பார்த்துவிட்டு திரும்புவது போல் இயல்பு வாழ்க்கைக்கு எப்படித் திரும்புவது?

சீனிவாசபுரம் தாண்டி செந்தமிழ் நகர் என்று ஒரு லே அவுட் போட்டிருக்கிறார்கள். மண்ணை முகர்ந்தால் நெல் வாடை அடிக்கும். அந்தளவிற்கு விவசாய பூமியாக இருந்த நிலம், இப்போது சதுரம் சதுரமாக ப்ளாட்டாக மாறிவிட்டது. அந்த நகரின் ப்ளாட் நெ.48 எங்களுடையது. மொத்தமிருக்கும் 72 ப்ளாட்டில் நாலு வீடு தான் முளைத்திருக்கிறது. ஐந்தாவது வீடாக நாங்கள் கட்டிக் கொண்டிருக்கிறோம். முக்கால்வாசி கட்டியாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் வேலையிருக்கிறது. பணப் பிரச்சனை. ஒரு ரூமிற்கு கதவு போட்டுவிட்டோம். நிலை வைக்கும் போது யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். இந்த ரூம் தனது முதல் சேவையாக, அபர்ணாவைப் பதுக்கி வைத்திருக்கப் போகிறது என்று.

காலை பத்து மணி. பைக்கை நிறுத்திவிட்டு, உள்ளே சென்றேன். பூட்டியிருக்கும் கதவைத் திறந்தேன். உள்ளே அபர்ணா ஒரு இற்றுப் போன பாயில், கை, கால் இழுத்துக் கட்டப்பட்ட நிலையில், வாயில் பிளாஸ்திரியோடு என்னை முறைத்தாள். ‘ம்ம்ம்ம்’ என்று முனகிக் கொண்டே என்னருகில் வந்தாள். கண்களில் நீர்.

கடத்தியே விட்டாயா? என்று இத்தனை தாமதமாகவா கேட்பீர்கள். ஆம். எப்படி? சொல்கிறேன். அதற்கு முன், அபர்ணாவுக்குத் தண்ணீர் கொடுப்போம்.

கொண்டு வந்திருந்த பாட்டில் நீரை அவள் வாயில் ஊற்றினேன். பாதி தொண்டைக்கும், மீதி மாருக்கும் வழிந்தது. கன்று தாய்ப்பசுவிடம் பால் குடிக்கும் போது ஒரு மாதிரி முட்டுமே அந்த மாதிரி பாட்டிலை முட்டினாள்.
பயங்கரமான குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறாள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

‘என்னை எப்போ தான் விடப் போறே?’’ என்றாள்.

“உன்னை இங்கே கூட்டி வர்றப்பவே சொல்லிட்டேனே.. ?’’

“ உன் அப்பா கிட்டே பேசியிருக்கேன். எல்லாம் சரியா முடிஞ்ச உடனே உன்னை அனுப்பிடுவேன். கொஞ்ச தூரத்துல மினி பஸ் ஸ்டாப்பிங் இருக்கு. அங்க விட்டுடறேன். அங்கேயிருந்து நீ போயிடலாம்.’’

“ எங்க அப்பா கிட்டே ஃபோன் போட்டுக் கொடு, எத்தனை லட்சம் வேணும் நான் வாங்கித் தர்றேன்.’’

“இந்தா லட்சமெல்லாம் யாருக்கு வேணும்? சில கண்டீஷன்ஸ் போட்டுருக்கேன். சொல்றேன் கேளு..’’

அபர்ணா குழப்பத்துடன் பார்த்தாள். நனைந்த மேல் சுடிதார் உள்ளே இருப்பவற்றை ஒரு மாதிரி கோடிட்டுக் காட்டியது. நான் பார்ப்பதைக் கவனித்தவள், சற்றே திரும்பி உட்கார்ந்து கொண்டாள். சொல்லு என்பது போல் பார்த்தாள்.

“ உங்க கடைக்கு முன்னாடி ஒரு எட்டுக்கு நாலு ஃப்ளக்ஸ் போர்டு வைக்கணும்.. அதுல ‘இங்கு மீதி சில்லறைக்குப் பதிலாக எந்தவித சாமானும் கொடுப்பதில்லை. வாடிக்கையாளர்கள் எந்தப் பொருளுக்கு எந்த ரூபாய் கொடுத்தாலும், சரியான சில்லறை கொடுக்கப்படும்.’

அபர்ணா என்னை வியப்புடன் பார்த்தாள். அந்த வியப்பை வெளிப்படுத்தும் விதமாகத் தான் இருந்தது அவளுடைய கேள்வி.

“நீ என்ன லூஸா..?’’

“சொல்லிக்கோ.. ஒரு நாலாயிரம் கலர் நோட்டீஸ் அடிக்கணும். ‘ஆர்பி ட்ரேடர்ஸில் சில்லறைத் தட்டுப்பாடே இல்லை.. ஆயிரம் ரூபாய் கொடுத்து ரெண்டு ரூபாய்க்கு சாமான் வாங்கினாலும், மீதி சில்லறைக் கொடுக்கப்படும்’ அப்படினு பிட் நோட்டீஸ் அடிச்சு ஊர் பூரா கொடுக்கணும். லோக்கல் டீவியில இதையே விளம்பரம் பண்ணனும்.’’

அபர்ணா அழுதாள். “ பணம் கேட்டு கடத்துவாங்க.. முன் பகைக்குக் கடத்துவாங்க.. சில்லறைக்கா என்னைக் கடத்துனே..?’’

அபர்ணாவிடம் அன்று எனக்கு நடந்த அவமானத்தைச் சொன்னேன். சாணி திட்டத்தையும், அவளை பூங்காவில் பார்த்து திட்டம் மாற்றியதையும் சொன்னேன். உன் கோபம் நியாயமானது என்று சொல்வாள் என எதிர்பார்த்தேன்.

“உனக்குத் தலையில அடி பட்டிருக்கு’’ என்று மட்டும் சொன்னாள். இல்லை அப்படி எல்லாம் இல்லை. ஆனால் அதை அவளிடத்தில் நியாயயப் படுத்திக் கொண்டிருக்கவில்லை.

“உன் அப்பா கிட்டே இந்த கண்டீஷன்ஸ் எல்லாம் சொல்லியிருக்கேன். டீவியில விளம்பரம் கொடுத்துட்டாராம். ப்ளக்ஸூம், நோட்டீஸும் சாயங்காலம் ரெடி ஆகிடும்னு சொல்லியிருக்கார். அது ஊர்ஜிதமான உடனே உன்னை அனுப்பிடுவேன்.’’

அபர்ணா கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனாள். “நீ என்ன பண்றே?” என்றாள். சொல்லவில்லை. அவள் பி.இ படிக்கிறாள் என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்.

காலையில் பூரி வாங்கிக் கொடுத்தேன். மதியம் லெக் பீஸுடன் பிரியாணி. கூச்சமில்லாமல் ஒரு கட்டு கட்டினாள். ஒரு நாலு மணி சுமாருக்கு புது சிம்கார்டுக்கு ஆர்பியிடமிருந்து ஃபோன் வந்தது.

“ ஹலோ சொன்னதையெல்லாம் பண்ணிட்டேன்பா.. என் பொண்ணு..’’

“நம்புறேன். நைட் ஒன்பது மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவா.. என்னைப் பிடிச்சு வெளில தள்ளின.. சாவுகிராக்கினு திட்டினே..அதுக்கு பர்சனலா ஒரு நஷ்ட ஈடு இருக்கு..’’

“டேய்…. எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு.. நீ இருக்கிற இடத்தைக் கண்டுபிடிக்கறது ஒண்ணும் பெரிய கஷ்டமில்லை எனக்கு. பெருசு படுத்த வேணாம்னு பார்க்கிறேன்.”

“எனக்கும் தெரியும்டா..?’’

“மரியாதை?’’

“உனக்கு அவ்ளோ தான்.’’- பேசிக் கொண்டிருக்கிறேனே தவிர நெஞ்சுக்குள் பகீரென்றிருந்தது. கண்டுபிடித்தால் நாஸ்தி பண்ணிடுவார். அத்தனைக் கஷ்டமும் இல்லை.

“எனக்குத் தெரியும். போலீஸ்க்கு செலவு பண்றதை விட என் டிமாண்ட் ஈஸி உனக்கு. அதனால இதை செலக்ட் பண்ணிட்டே.. பொண்ணு வந்த உடனே மாட்டின போர்டை எடுத்துவிடலாம்னு நினைக்காதே… அப்படி பண்ணா வேற ப்ளான் வெச்சிருக்கேன். இதைவிட படு மோசமா இருக்கும் அது.”

ஆர்பி பயந்தார் என்பதைவிட, ஒரு மாதிரி அசூயை ஆனார். என்னுடைய மொக்கைக் கடத்தல் அவருக்கு சொல்ல முடியாத அவஸ்தையை ஏற்படுத்தியிருந்தது. எனக்கும் அது தான் வேண்டும். ஒரு சாதாரண மனிதனின், மிகச் சாதாரண கோபம்.

“வேண்டாம்.. “ என்று அலறினார். “பேங்க்ல லட்ச ரூபாய்க்கு சில்லறை மாத்தி வெச்சுக்கறேன். உன் ப்ளான் எதையும் என் கிட்ட காட்டிடாதே.. கொடுமை. வேற என்ன வேணும் சொல்லு”

“அஞ்சு ரூபா சில்லறையா ஒரு பத்தாயிரம் ரூபாயை ஊருக்கு அந்தண்டை பழைய மாரியம்மன் கோவில் இருக்கு தெரியுமா? கோவில் பக்கத்துல பெரிய தாடி வெச்சிட்டு ஒரு செருப்பு தைக்கிறவர் உட்கார்ந்திருப்பார். அவர் கிட்டே கொடுத்துட்டு திரும்பிப் பார்க்காம வந்துடணும். நீ மட்டும் வரணும். நீ கொடுக்கறதை மறைவான இடத்திலர்ந்து நான் பார்த்துட்டு இருப்பேன். கொடுத்துட்டு திரும்பி வீட்டுக்குப் போய் வீட்டு லேண்ட் லைன்ல இருந்து எனக்கு ஃபோன் பண்ணு. உன் பொண்ணை அனுப்பி வைக்கிறேன். டீல்!”

“மகா மோசம்!” என்றார் அழாத குறையாக.

ஒரு வாரம் கழிந்தது.

ஊர் முழுதும் இந்த சில்லறை விளம்பரம் எதிர்பார்த்ததை விட வேறு மாதிரி ஹிட் அடித்திருந்தது. ஆர்பியைத் தொடர்ந்து வேறு சில கடைகளும் இதே பாணியில் களமிறங்கின. ஆர்பி ட்ரேடர்ஸ் முதலாளியை மேலும் சில வணிகர்கள் ‘சரியான லூஸுப் பய.. விளம்பரமா இது..’ என்று கிண்டலடிக்கவும் செய்தனர்.

அபர்ணாவை அனுப்பிய மறுதினம் அதிகாலை அந்த செருப்பு அண்ணனிடம் பேசி வைத்தது போல ஐநூறு ரூபாய் கமிஷனுக்கு பத்தாயிரம் சில்லறை மூட்டையைப் பெற்றுக் கொண்டேன்.

நேற்று காலேஜ் பஸ் ஸ்டாப்பில் அபர்ணாவை அவள் அப்பாவுடன் பார்த்தேன். அவளும் பார்த்தாள். காட்டிக் கொடுத்துவிடுவாளோ என்று அவசரமாக ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன்.

பைக்கில் ஒரு திருப்பத்தை திரும்பும் வரை பார்த்தவள், கடைசி நொடி சிரித்தாள். ‘இழுக்காதே.. எப்படிக் கடத்தினாய் சொல்’ என்று கேட்கறீர்களா?

அதற்கு முன் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் ஆர்பி எனக்கு மாமனார் ஆன சுவாரஸ்யமான லவ் கம் ஆக்ஷன் கதை இருக்கிறது சொல்லவா?

நோ நோ நோ பேட் வேர்ட்ஸ் !

என்னது சாவு கிராக்கியா?

தொலைந்தீர்கள், குறித்துக் கொள்ளுங்கள், எண்ணி ஏழே நாளில் அடுத்து உங்களைத் தான் கடத்தப் போகிறேன்!

Series Navigationபயணம்நல்ல காலம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    மாதவன் ஸ்ரீரங்கம். says:

    மிகச்சிறப்பான சிறுகதை. இறுதிவரை ஒருவித திகிலும் நகைச்சுவையுமாக இருந்தது. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *