பயணம்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 9 of 25 in the series 3 மே 2015

மாதவன் ஸ்ரீரங்கம்

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா ? இதற்கு நம் சர்க்காரில் என்ன தண்டனை என்று உனக்குத்தெரியாதா ? இத்தனை அசால்ட்டாக நிற்கிறாயே ? பூமியின் பிரஜைகளைப்பற்றி கொடுக்கப்பட்ட பயிற்சிகளையெல்லாம் மறந்துவிட்டாயா? ”

லூ எதுவும் பேசாமல் நின்றான்.

“எந்த இடத்தில் தொலைத்தாய் ?”

“சென்னையில். கோயம்பேடு அருகே ஒரு பொது ஊர்தியில்”.

அவள் சிந்தனையில் ஆழ்ந்தாள். பிறகு,
“சரி கடவுளிடம் நான் பேசுகின்றேன். உன் இருப்பிடத்திற்கு செல்”.
——————————————-
“இன்னா கவாலி ஆளியே காணம். வேலூரா” ?

“ஆங் திகாரு. சொம்மா காட்றியே பிலிமு. தொயிலபாரு தொர. இந்தா எவ்ளோ தருவ சொல்லு.” என்று தன் கையிலிருந்த தீப்பெட்டி சைஸ் பொருளை அவனிடம் கொடுத்தான். வெயில்பட்டு பொன்னிறத்தில் மின்னியது.

“இன்னா கவாலீது ? லைட்ருமாரிக்கீது. எங்கருந்து பீறாஞ்ச நைனா” ?

“ஆங் நல்லா சொல்லிக்கினியே. இது என் சித்தப்பாரு சிங்கப்பூர்லருந்து வாங்கியாந்தது கொமாரு”.

“எம்மா. நம்மான்டயேவா கவாலி” ?

“சர்த்தாம்பா. தெர்துல்ல. கோயம்பேடான்ட சிட்டிபஸ்ல போவச்சொல்ல அட்ச்சது. எத்தீனி தருவ அத்தச்சொல்லு”?

“பாத்தா கோல்டுமாரில்லியே” ?

“த்தோடா. கோல்டா இருக்கசொல்ல ஒன்னான்ட ஏன் வரன் ? ஸ்டெயிட்டா சேட்டான்டல்ல பூட்ருப்பன்”

“என்னன்னு தெர்ல எப்டி துட்டு குடுக்க ? அர்ஜன்டுன்னா சொல்லு கவாலி. 200ருவா தரேன்”.

“நீ பாத்செய்யி கொமாரு. ரெவுலரா தொயில் பண்ணிக்கிறோம்”

அவன் கொடுத்த ஐநூறைவாங்கிக்கொண்டு கபாலி டாஸ்மாக் செல்ல, குமார் அதை திருப்பி அப்படியும் இப்படியும் பார்த்தான். அதன் ஒரு மூலையில் ஏதோ பட்டன்போல இருக்க அதை அழுத்த அது படாரென்று விரிந்து சற்றுபெரிதானது.

நிறைய பட்டன்களுடன் ஒரு செல்போனை போல இருக்க குமார் ஆர்வமாகி சில பட்டன்களை அழுத்தினான்.
———————————————-
குமார் கண்விழித்தபோது அங்கு ஒரே கலவரமாயிருந்தது. பெரிய மதில்சுவருக்குள்ளிருந்துதான் அலறல்கள் கேட்டன. இந்தியா ஜிந்தாபாத் பாரத்மாதாகி ஜே என்றெல்லாம் குரல்கள்கேட்டன. டபடபடபவென துப்பாக்கிசுடும் சத்தமும் மனிதர்களின் ஓலங்களும் அழுகைக்குரல்களும் கேட்டன.

குரல்களில் எதுவும் தமிழில் இல்லை. ஏதோ வடமொழியிலிருந்தது. குமார் தன்னைச்சுற்றிப்பார்க்க எதுபற்றியும் கவனமின்றி செருப்பு தைத்துக்கொண்டிருந்தான் அந்தக்கிழவன். புதுப்பேட்டையில் இருந்த தான் எப்படி இங்குவந்தோம். இது என்ன இடம் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும்போதே சட்டென்று அவ்விடம் அமைதியாகிப்போனது. காம்பவுண்ட் சுவருக்குள்ளிருந்து தூசிகளும் புகையும் வெளிவந்தது.

ரத்தம்தெறித்த சீருடையில் அங்குவந்த பிரிட்டிஷ் சிப்பாய் கிழவனிடமிருந்து ஜெனரல் டயரின் செருப்பை வாங்கிக்கொண்டபோதுதான் குமாரை பார்த்தான். அவன் கையிலிருந்த ‘அதை’ வாங்கி வாயிலுள்ள சுருட்டை பற்றவைப்பதற்காக எதையெதையோ அழுத்த சட்டென்று…
———————————————

ஜான் கண்விழித்தபோது ஒரு அடர்ந்த காட்டிலிருந்தான். ஜாலியன் வாலாபாக்கில் இருந்த தான் எப்படி இங்கு வந்தோமென்று அவன் யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் அவன் இடதுபக்க விலாவில் அம்புதைத்தது.

சுற்றிலும் காட்டுவாசி மக்கள் அவனை சூழ்ந்து நின்றிருந்தார்கள். அவர்கள் கண்களில் இரைகிடைத்த திருப்தியிருந்தது. ஜான் வாயிலிருந்த சுருட்டு மெல்ல நழுவியது. வலிதாளாமல் அவன் தப்பித்து ஓடத்துவங்கியபோது பாய்ந்துவந்த ஈட்டியொன்று அவன் முதுகைத்துளைத்து நெஞ்சுக்குழிவழியே வெளிப்பட்டது.

அவர்கள் ஜானின் உடலை ஒரு மூங்கிலில் கட்டிச்சுமந்து இருப்பிடத்தித்கு எடுத்திச்சென்றார்கள். அவன் உடைகளை விலக்கிவீசியபோது சற்று தள்ளிச்சென்று விழுந்தது ‘அது’. எல்லோரும் ஜானின் உடலை அறுத்து தின்றுகொண்டிருக்க அவர்கள் தலைவன் ‘அதை’ கையிலெடுத்து என்னவென்று பார்த்தான். பிறகு ஜானின் விழிகளை வீசியெறிந்து விளையாடிக்கொண்டிருந்த தன் மகனிடம் வீச, சிறுவர்களுக்குள் அடிதடி நிகழ்ந்து கடைசியில் ஒரு சிறுவன் கைக்கு கிடைத்தபோது அதிலிருந்த சில பட்டன்கள் அழுத்தப்பட்டது…
——————————————-
விர்ச்சுவல் திரையில் கடவுள் வந்தார்.
அவள் கடவுளிடம் சொன்னாள்.
“லூ டைம் மெஷின் கருவியை தொலைத்து சொதப்பிவிட்டான். பிராஜக்டிற்கு வேறு ஆளைத்தான் அனுப்பவேண்டும்”.

“தெரியும். அவனை டெலிட் செய்தாயிற்று. கருவியை டெஸ்ட்ராய் செய்துவிடு” என்று கட்டளையிட்டுவிட்டு கடவுள் மறைந்துவிட அவள் கணினியை நெருங்கினாள்.
———————————————–
அம்பி மேல அடையவளைஞ்சானை நோக்கி ஓட அந்தப்பக்கத்திலிருந்து கோபாலன் கஸ்தூரி எல்லோரும் அம்பியின் திசையில் ஓடிவந்துகொண்டிருந்தார்கள். கோபாலன் தொலைவிலிருந்தே கத்தினான்.
“அம்பி ஓடுடா ஓடு. அவாள்லாம் அந்தப்பக்கத்துலேர்ந்து தொரத்தின்டுவராடா”

“அய்யோ கோபாலா இந்தன்ட பக்கத்துலேர்ந்தும் வராளே. என்ன பண்றது” ? என்று கேட்டபடியே அவர்களோடு ஓட்டத்தை தொடர எல்லோரும் சாத்தாரவீதியில் திரும்பி ஓடினார்கள்.

சரியாக அங்கே அவர்களை எதிர்பார்த்து ஒரு வீட்டிற்குள் காத்திருந்த கும்பல் குபீரென்று வெளிவந்து சூழ்ந்துகொண்டது. கோபாலன் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பின்வாசல்வழி எகிறிக்குதித்து ஓடி தப்பித்துச்செல்ல அம்பியும் கஸ்தூரியும் கும்பலில் வசமாக சிக்கிக்கொண்டனர்.

கும்பலில் ஒருவன் கையில் டெய்லரிங் கத்திரிக்கோலுடன் கஸ்தூரியை நெருங்கி அவன் சிகையை வெட்ட அவன் நாராயணா என்று அலறினான்.

அம்பியின் குடுமியையும் பூநூலையும் துண்டித்தபோது அவனுக்கு தன் நிலையை எண்ணி அழுகைவந்தது. கும்பல் வெற்றிக்களிப்போடு நகர அம்பி அழதபடியே சாபமிட்டான்.

“பெருமாள் ஒங்களையெல்லாம் சும்மா விடமாட்டார் பாருங்கோ. ஒங்க எல்லாத்துக்கும் கூலி கொடுப்பார்”.

அவர்கள் சிரித்தபடி அடுத்த தெருவைநோக்கி ஓடி தெற்குசித்திரைவீதியில் நுழைந்தபோது வழியில் நின்றிருந்த காட்டுவாசிச்சிறுவனை பார்த்தார்கள். கும்பலில் ஒருவன் குறும்பாக “டேய் இங்க பாருங்கடா இவனும் குடுமி வச்சிருக்கான்” என்றபடி சிறுவனை நெருங்க, அவன் பயந்து நகர எல்லோரும் சிறுவனைப்பிடித்து முடியை வெட்டியபோது அவன் கையிலிருந்த ‘அது’ கீழே விழ சின்னய்யன் ‘அதை’ எடுத்து என்னவென்று பார்க்க ஒரே பட்டன்களாக இருக்க, அவற்றை அழுத்த..
———————————————-
சின்னய்யன் கண்விழித்தபோது ஓடும் ரயிலில் தான் இருப்பதை ஆச்சரியத்துடன் உணர்ந்தான். எதிரிலிருந்த முதிய பெண்மனி இவனிடம் பிரியமாக கேட்டாள். “துமாரா நாம் கியாஹே பேட்டா”?

இவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ரயிலில் ஒரே கூட்டமாயிருந்தது. இரைச்சலாயிருந்தது. எல்லோரும் ஏதேதோ சளசளவென பேசிக்கொண்டிருந்த பாஷை சின்னய்யனுக்கு புரியவில்லை. அவனுக்கு பசித்தது. களைப்பாயிருந்தது. வீட்டிற்கு போகவேண்டும்போலிருந்தது. கையிலிருந்த ‘அதை’ திருப்பித்திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான். சரியாக அப்போது…
———————————————–
இந்தமுறை விர்ச்சுவல் திரையில் வந்த கடவுள் சற்று கோபமாக இருப்பதுபோலப்பட்டது அவளுக்கு.

“என்ன”?
“இல்லை கருவியை சுற்றி நிறைய பூமிப்பிரஜைகள் இருப்பதாக சிகனல் வருகின்றது”

கடவுள் துளியும் தயங்காமல் சொன்னார்.
“டெஸ்ட்ராய்”

கடவுள் மறைந்தபின் அவள் தயக்கத்துடன் ஒரு பட்டனை அழுத்தினாள்.
———————————————–
ஒரு தமிழ் நாளிதழ் செய்தி

செப் 4 நியுடெல்லி :
டெல்லி ரயிலில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா மூன்றுலட்சங்கள் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ——– தெரிவித்துள்ளார்.

Series Navigationயாமினி கிருஷ்ணமூர்த்தி (8)ஒரு மொக்கையான கடத்தல் கதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *