0
1. துவக்கு
0
கோமதி அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தாள் அவனுக்கு அது புதிதான விஷயமில்லை. எல்லா விடுமுறை நாட்களிலும் அவள் இப்படித்தான் இருப்பாள். வீக் எண்ட் ஜாய் என்று அதற்கு பெயரும் சொல்வாள்.
‘ எல்லா விடுமுறை நாட்களும் நம்ம பேட்டரியை ரீ சார்ஜ் செய்துக்கற நாளுங்க. அத எல்லாரும் செஞ்சு கிட்டா சோர்வே வராது ‘
இது கிட்டத்தட்ட மேற்கத்திய மனோபாவம் என்று நினைத்துக் கொள்வான் அவன். ஆனால் வெளியில் சொல்வதில்லை. அவள் சந்தோஷத்தைக் கெடுப்பானேன். தவிரவும் மீதமுள்ள ஐந்து நாட்களும் என்ன ஓட்டமாக ஓடுகிறாள். அதற்கு இந்த ரீ சார்ஜ் அவசியம் தான் என்று நினைத்துக் கொள்வான்.
சனி ஞாயிறு சோம்பல் கோமதிக்கு இல்லை. எல்லா நாளும் போலத்தான். இவன் எழுந்திருப்பதற்குள் அவள் குளித்து முடித்து ‘குப்’பென்று மலர்ந்திருப்பாள். எங்கிருந்து வருகிறது இவளுக்கு இந்த எனர்ஜி ? சில அபூர்வ நாட்களில் பனிமலர்களைப் போல் அவள் முகத்திலும் ஈரத்திவலைகள் இருக்கும் . அது அவன் சில நாட்களில் சீக்கிரம் எழுந்துவிட்டதனால் கிடைத்த தரிசனம். அதற்காகவே ஒவ்வொரு இரவும், காலை சீக்கிரம் எழுந்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொள்வான். ஆனால் அவனால் முடிவதில்லை. அது சரி தினமும் கிடைத்துவிட்டால் அது ரசிக்கக் கூடியதாக இல்லாமல் போய் சராசரியாக, சாதாரணமாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் அவனுக்கு உண்டு.
பிரபா இன்னும் எழுந்திருக்கவில்லை. பிரபாவிற்கு மூன்று வயது. ப்ளே ஸ்கூல் போகிறான். ரொம்ப துரு துரு.
கோமதி அலுவலகம் செல்லும்போது, அவனைக் கொண்டு விட்டு, சாயந்தரம் அழைத்துக்கொண்டு வருவாள். வரும் போதே, ஏதாவது பேசிக்கொண்டே வருவான் பிரபா. அவன் பாஷை கோமதிக்கு மட்டும்தான் புரியும். அவனுக்கு புரிந்ததேயில்லை.
கோமதி இன்று பிரபாவுடன், எங்கோ வெளியே செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது. வேலைகள் ஜெட் வேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. கோமதி எப்பவும் வேகம்தான். இன்று கொஞ்சம் கூடுதல் வேகம்.
‘ என்னங்க… காபி வச்சிருக்கேன்.. எடுத்துக்கங்க. டிபன் காஸரோல்ல இருக்கு. மதிய சாப்பாடு “அவன்” ல வச்சிட்டுப் போறேன். சூடு பண்ணிக்குங்க.. என்ன சரியா? ‘
எங்கே போகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம்தான். ஆனாலும் கேட்கவில்லை. போகும்போது எப்படியும் தகவல் வரும். எங்கு போகிறார்கள்? எப்போது வருவார்கள் ? என்று.
பிரபாவிற்கு இன்று விடுமுறை நாள் என்று எப்படித் தெரிகிறதோ ? எழுந்தவுடன் பாத்ரூம் வாசலில் போய்தான் நிற்கிறான். கோமதி, ஐந்து நிமிடத்தில் அவனுக்கு பல் தேய்த்து, குளிப்பாட்டி, பாலிஷ் செய்யப்பட்ட பட்டாக, அவனைக் துவாலைப் பல்லக்கில் தூக்கி வருகிறாள். ஒரு அழுகை இல்லை; சிணுங்கல் இல்லை; இதுவும் அவனுக்கு தினசரி ஆச்சரியம். கோமதிக்கு எல்லோரும் எப்படி வசப்படுக்கிறார்கள்?
பவுடர் அடித்து, புதுத் துணி போட்டு, பிரபாவும், மடிப்பு கலையாத காட்டன் சேலையில் கோமதியும், ரெடியாகி விட்டனர். கழுத்தில் நாப்கினோடு பிரபா, ஸ்ட்ரா டம்ளரில், பால் குடித்துக்கொண்டிருக்கிறான். இட்லியைப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டே, பருப்பு சாதம் கலந்து கொண்டிருக்கிறாள் கோமதி. ஏற்கனவே நிரைக்கப்பட்ட கூல் கெக் அருகில். அட்டவணை போட்டது போல் எல்லாம் நடக்கிறது. கோமதி ஆணாக பிறந்திருந்தால் ஒரு ராணுவ அதிகாரியாக ஆகியிருக்கக் கூடும். பெண்ணாக இருந்தால்மட்டும் என்ன. கோமதிக்கு அந்த தகுதிகள் நிறையவே இருக்கிறது.
‘ பீரோவிலேர்ந்து ஐநூறு ரூபா எடுத்திருக்கேன். சின்னவரை வெளியே கூட்டிட்டு போறேன். வர்ர சாயங்காலமாயிரும் நேரத்துக்கு சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ‘
‘கோமதி உனக்கு ரெஸ்டே வேண்டாமா?’ என்று கேட்க வேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை. சில மனிதர்கள் ஓடுவதில்தான் உற்சாகமே அடைகிறார்கள். அவர்களுக்கு ரெஸ்ட் என்பது ரெஸ்ட் இன் பீஸ்தான். கோமதி அந்த ரகம்.
கோமதியும் பிரபாவும் கிளம்பிப் போய்விட்டிருந்தார்கள். ஷோபா சக்தி எழுதிய ” கொரில்லா ” நாவலை, புத்தகக் கண்காட்சியில் கோமதி வாங்கித் தந்தது, அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஈழப் போராளிகளைப் பற்றிய நாவல். அதை கையில் எடுத்துக்கொண்டான். படிக்க படிக்க, காஸரோல் இட்லியும் கோப்பைக் காபியும் அவனுக்கு மறந்து போனது.
ஒரே மூச்சில் முடித்துவிட்ட போது மணி பார்த்தால் இரண்டு.
கோமதி மனது சங்கடப்படுமேயென்று இட்லியையும், உணவையும், ” அவனில்” சூடு பண்ணிக் கொண்டு சேர்த்து சாப்பிட்டான். திரும்பவும் நாற்காலியில் சாய்ந்தபோது, தூக்கம் வருவதற்கு பதிலாக துக்கம் வந்தது. படித்த பக்கங்கள் அவனை புரட்டி எடுத்தன.
என்னமாய் எழுதி இருக்கிறார் ஷோபா சக்தி!
“ அது ஒரு நீள் சதுர அறை! அளவு? ஒரு 22 சவப்பெட்டிகளை நீள வாட்டில் அடுக்கும் அளவிற்கு இருந்தது!”
போரும் மரணமும் வேறு எந்த நினைப்பையோ கற்பனையையோ தராது போலிருக்கிறது.
வாய் விட்டு சிரித்த ஒரு நிகழ்வைப் பற்றி சிலாகித்தான் அவன்.
“ அது ஒரு பேருந்து. ஒரு பெரியவர் நின்று கொண்டிருக்கிறார். அவனருகில் நெருக்கமாக ஒரு இளைஞன். பெரியவர் அவனைப் பார்த்து கேட்கிறார்:
“ நீ ராணுவ வீரனா?”
“ இல்லை “
“ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவனா?”
“ இல்லை அய்யா”
“ ஆளுங்கட்சிக்காரனா?’”
“ இல்லை பெரியவரே”
“ தனித் தமிழ் கட்சியா?”
“ இல்லை இல்லை இல்லை”
“ இல்லை தானே! அப்புறம் ஏன் என் காலை மிதித்துக் கொண்டிருக்கிறாய். காலை எடுடா நாய் பெற்ற மகனே!”
கண்களை மூடிய போது புத்தகக் காட்சிகள் ஒரு திரைப்படம் போல் அவனுள் விரிந்தன. உடல் தூக்கிவாரிப்போட்டது காட்சிகளின் வன்முறையால்.
0
கதவு மெல்லத் திறக்கப்படும் ஓசை கேட்கிறது. ” உஷ் ” என்று ஒரு சத்தம். கோமதியாக இருக்கவேண்டும். கூடவே கீச்சுக்குரலில் ‘ ஜோ ஜோவா?
பூனை நடை நடந்து அவனைக் கடந்து போகிறார்கள். கொண்டுவந்த பொருட்களையெல்லாம் மேசையின் மேல் வைக்கிறார்கள். கோமதி படுக்கை அறைக் கதவைத் திறந்து உள்ளே போகும் சத்தம் தெளிவாக கேட்கிறது.
மெல்ல கண்களைத் திறக்கிறான் அவன்.
‘ அத்தாக் ‘
பிரபா ஒரு கையில் ஏ கே 47 பொம்மைத் துப்பாக்கியும், இன்னொரு கையில் ராணுவ பீரங்கி வண்டி பொம்மையும் வைத்துக்கொண்டு நிற்கிறான்.
‘ கோமதி இந்த சனியன்களை மொதல்ல வெளியே தூக்கி எறி ‘
அதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசாத அவன் கத்துகிறான்.
அவன் .. சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கும், கண்ணிவெடியில் கால்களை இழந்த இந்திய அமைதிப்படை வீரன் மருதநாயகம்.
0
பி.கு. தமிழ் ஈழத்தில் ” துவக்கு ” துப்பாக்கியைக் குறிக்கும் சொல்.
0
2. பிதாமகன் ஆ
“ ஊதாரிப்பய “ என்று ஓங்கிய குரலில் திட்டிக் கொண்டிருந்தார் ராமசாமி. அவர் குறிப்பிட்ட ஊதாரிப்பய அவர் மகன் கணேசன். பத்தாவது படிக்கிறான். படிப்பில் எந்த சோடையுமில்லை. ஆனால் கையில் தான் காசு நிற்காது. அனாவசியமாக எதுவும் செலவு செய்பவனுமில்லை அவன். கொஞ்சம் சினிமா, அதிகமாக புத்தகங்கள் அவ்வளவுதான்.
இன்று ராமசாமியின் கோபத்திற்கு காரணம் இருக்கிறது. பாட புத்தகம் வாங்கக் கொடுத்த நூறு ரூபாயை மிச்சம் இல்லாமல் செலவு செய்துவிட்டு வந்து நிற்கிறான் கணேசன்.
சாந்தலட்சுமி பெயருக்கேற்றவாறு சாந்தமானவள். எதற்கும் அதிர்வதில்லை அவள். சமையற்கட்டின் வாசற்படியோரம் அவளது ஒரு பாதி முகம்தான் தெரிகிறது. ஓரக்கண் அடுப்பில் இருக்கும் வெண்டைக்காய் தீய்ந்து போகாமல் கண்காணிக்கிறது.
“ஏ ஜடம் கொஞ்சமாவது உணர்ச்சியைக் காட்டு. ஒன் புள்ள இப்படியே போனான் இருக்கறதுக்கு எடம் கூட இல்லாம கஷ்டப்படுவான். தத்தாரி..”
‘என்னடா ஆச்சு’ என்று கண்ணாலேயே கேட்கிறாள் அம்மாக்காரி. கை நிறைய புதுப்புத்தகங்களை எடுத்துக் காட்டுகிறான் கணேசன். கண் இமைகளை லேசாக மூடித் திறக்கிறாள். அட இவ்வளவுதானா என்று அதற்குப் பொருள்.
ராமசாமி, பிள்ளைகளை அடித்து வளர்ப்பதில், நம்பிக்கை இல்லாதவர். ரெண்டொரு சுடு சொற்கள் திருத்த முடியாவிட்டால், அடி மட்டும் திருத்திவிடுமா என்ற கேள்வி அவர் மனதுக்குள் உண்டு. அவருடைய சிறு பிராய அனுபவங்களும் அதற்குக் காரணம். அவருடைய தந்தையாரும் அவரை அடித்ததில்லை. ஏன் இப்போது அவர் திட்டுவது போல், திட்டியது கூட இல்லை.
ஆனாலும் அவர் ஒன்றும் வாழ்க்கையில் சோடை போகவில்லை. படித்தார். நல்ல அரசாங்க வேலைக்கான தேர்வில் முதலாவதாக வந்தார். இன்று கை நிறைய சம்பாதிக்கிறார். ஆனால் அவரொத்த பையன்கள் கண்டிப்பின் காரணமாக கையில் பணம் சேர்ந்ததும் கெட்டொழிந்தது அவருக்கு கூடுதல் ஞானத்தைக் கொடுத்திருந்தது. விளையாட்டும் கேளிக்கைகளும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். தன் பிள்ளைகளுக்கு உணர்த்தியிருந்தார். ஆனால் அவை அளவு மீறிப் போகும்போதுதான் அவர் கோபப்படுகிறார்.
கணேசன் சரியான புத்தகப் பைத்தியம். புதிதாக ஏதாவது கடையில் தென்பட்டால் வாங்க அவன் கை அரிக்கும். ஆனால் அவன் ஒன்றும் மர்ம நாவல்களையும், பாக்கெட் நாவல்களையும், வாங்குவதில்லை. அவன் வாங்குவதெல்லாம் ஒன்று இலக்கியம் அல்லது பொது அறிவு.
ராமசாமி பல நெறிகளைக் கொண்டவரானாலும் புத்தகம் படிக்கும் பழக்கம் அவரிடம் அறவே இல்லை. அதனால் புத்தகங்களுக்காக செலவழிக்கும் காசு வீண் என்பது அவர் எண்ணம். படிக்கும் எண்ணமிருந்தால் நூலகம் இருக்கவே இருக்கிறது என்பது அவர் கட்சி.
ராமசாமி கோபம் தணிந்து கொல்லைப்பக்கம் போய்விட்டார். கணேசன் டிரங்கு பெட்டிக்குள் புதிதாக வாங்கிய புத்தகங்களை அட்டை போட்டு அடுக்கிக் கொண்டிருக்கிறான். வாசலில் தபால்காரரின் சைக்கிள் மணியோசை கேட்கிறது.
“ சார் மணியார்டர் “
காசித்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டே, ராமசாமி கொல்லைப் புறத்திலிருந்து வருகிறார்.
“ கொடுப்பா.. எங்கிருந்து? “
நாள் கிழமையென்றால் சாந்தலட்சுமியின் அண்ணன் அவளுக்கு பணம் அனுப்புவதுண்டு. அதுவாகத்தான் இருக்கும் என்பது அவர் நினைப்பு.
“ தம்பி பெயருக்கு வந்திருக்குங்க. டெல்லியிலிருந்து..”
“ யாருக்கு கணேசனுக்கா..” அவர் குரலில் ஆச்சர்யம்.
“ ஆமாங்க.. தம்பி ஏதோ போட்டியிலே கலந்துகிட்டது போலிருக்கு. அதான் பரிசு அனுப்பியிருக்காங்க..”
வாசலில் நடைபெற்ற உரையாடலை கேட்டு கணேசனே வந்துவிட்டான். இப்போது சாந்தலட்சுமி வாசல் நிலைப்படியில் பாதி முகம் காட்டி நிற்கிறாள்.
“ ஓ ஸயின்ஸ் டேலண்ட் எக்ஸாமா? “ என்றபடியே மணியார்டர் ·பாரத்தை வாங்குகிறான் கணேசன். கையொப்பமிட்டபின் பணத்தை தருகிறார் தபால்காரர்.
ராமசாமியால் நம்பவே முடியவில்லை. ஐநூறு ரூபாய் நோட்டுகள். மொத்தம் பத்து. ஐயாயிரம் ரூபாய். புத்தகங்கள் மூலம் மகன் வைத்த வைப்புத்தொகைக்கான வட்டி.
இப்போதெல்லாம் ராமசாமி நிறைய புத்தகங்கள் படிக்கிறார். டிரங்கு பெட்டியிலிருந்து கணேசனும் சளைக்காமல் எடுத்துத் தருகிறான்.
0
3. கிளிஞ்சல் பொம்மைகள்
0
கிளிஞ்சல்கள், சின்ன வயது முதலே, அவனை ஈர்த்திருக்கின்றன. அப்பா அம்மாவுடன், கடற்கரைக்கு, சின்னப் பையனாக போன காலத்திலிருந்தே, அவன் கிளிஞ்சல்களை சேகரித்து ரகம் பிரித்து வைப்பான். மனிதர்களின் ரேகைகள் போல், கிளிஞ்சல்களின் மேல் பலவிதமான கோடுகள் இருப்பதைப் பார்த்து, அவன் வியந்திருக்கிறான். ஒரு கிளிஞ்சலைப் போல் மற்றொன்று இருந்ததாக அவனுக்கு நினைவில்லை. அவன் வகுப்புத் தோழர்களெல்லாம், அவனைப் போல் இனம் பிரித்துக் காண தெரியாதவர்கள். அவன், இரண்டு கிளிஞ்சல்களை கையில் வைத்துக்கொண்டு, அவற்றிற்குள் இருக்கும் வேற்றுமைகளை விவரிக்கும் போது, அவர்கள் அவனை வினோதமாகப் பார்ப்பார்கள். வளர்ந்தபின் கடற்கரைக்குப் போகும் போதெல்லாம், அவன் கிளிஞ்சல் பொம்மைகளால் கவரப்பட்டிருக்கிறான்.
இன்று கூட அப்படித்தான். ரேகாவையும், குழந்தைகளையும், வார விடுமுறை நாளானதால், கடற்கரைக்குக் கூட்டி வந்திருந்தான். அவர்கள் முன்னே சென்று விட்டிருந்தார்கள். அவன் கால்கள், அவனை அறியாமல், கிளிஞ்சல் பொம்மைக் கடையைத் தாண்டும்போது, தானாக நின்றுவிட்டன.
அழகான கிளிஞ்சல் பொம்மைகள். ஆண் பொம்மை, பெண் பொம்மை. ஆனை பொம்மை. தற்கால சிறுவர் சிறுமியர் ஆசைப்படும் டைனோசர் பொம்மை கூட இருந்தது. பெரிய கிளிஞ்சலில் முகம். சிறு கிளிஞ்சல்களினால் ஆன உடல். குழல் போன்ற கிளிஞ்சல்களினால் கோர்க்கப் பட்ட கைகள், கால்கள்.
ஏதோ ஒரு அட்டையிலோ அல்லது காகிதக் கூழிலோ அதை ஒட்டி வடிவமைத்திருந்தார்கள். காஸ் லைட் வெளிச்சத்தில் அவை பளபளவென்று மின்னின.
“ என்னங்க! கிளிஞ்சல் பார்க்க நின்னுட்டீங்களா? அப்படி என்னதான் இருக்குதோ அதிலே! ரேகாவின் குரல் பின்னாலிருந்து கேட்டது.
ரேகாவைக் காதலித்த போதெல்லாம், அவனும்,அவளும் இந்தக் கடற்கரைக்குத்தான் வருவார்கள். அப்போதும் அவன் கிளிஞ்சல் கடையைக் கவனிக்காமல் போனதில்லை. அப்போதும் ரேகாவிடம் இருந்து இதே கேள்விதான் எழும். ஆனால் அப்போதெல்லாம் அந்தக் கேள்வி ஒரு கொஞ்சல் தொனியில் இருக்கும். இப்போது, கல்யாணம் ஆகி, பதினாறு வருடங்களுக்குப் பிறகு, கேள்வி மட்டும் மாறவில்லை. ஆனால் தொனியில் கொஞ்சல் போய் அதட்டல் வந்திருக்கிறது. அலுப்பு வந்திருக்கிறது.
“ இந்தக் கிளிஞ்சல்களுக்குப் பின்னால் உழைப்பு இருக்கிறது ரேகா”
அவனுடைய பதிலும் மாறவில்லை. பதினாறு வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதே பதில். கிளிஞ்சல்களை அணு அணுவாக ரசித்தவனுக்குத்தான், அவைகளின் அருமை தெரியும். அதை பொம்மையாக்க தேவைப்படும் உழைப்பு புரியும். கிளிஞ்சல் பொம்மை செய்ய மேல் எது கீழ் எது என்று தெரியவேண்டும். மேல் கீழ் மாறிப் போனால் பொம்மையின் வடிவமே மாறிப்போகும். கிளிஞ்சல் பொம்மை செய்ய பொறுமை வேண்டும். சிறியது பெரியதாக பிரித்தெடுக்கும் பக்குவம் தெரிய வேண்டும். எது தலைக்கான கிளிஞ்சல், எது உடலுக்கான கிளிஞ்சல், எது கை எது கால் என்று புரிய வேண்டும். ஒட்டும்போது கையெல்லாம் பசை அப்பிக்கொள்ளும். கவனம் குறைந்தால் கிளிஞ்சல்கள் கையுடன் ஒட்டிக் கொள்ளும்.
“ என்னங்க கொழந்தைங்க எங்ங்கியோ போயிட்டாங்க. வாங்க “ ரேகாவின் குரலில் பதட்டம் இருந்தது. ‘ ங் ‘ கின் அழுத்தம் அவனை தரைக்கு இழுத்து வந்தது.
அவனுக்கு இரண்டு குழந்தைகள். விஜா எட்டாம் கிளாஸ் படிக்கிறாள். மிதுன் பத்தாவது. சிறு வயதில் அவர்களுக்குக் கிளிஞ்சல்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். வளர்ந்த பின் ரேகா அவனிடம் அவர்களை அதிகம் விடுவதில்லை.
“ உங்கப்பா மாதிரி நீங்களும் கிளிஞ்சல் பைத்தியம் ஆயிடாதீங்க “
அவன் ரேகாவை நோக்கி நடந்தான். விஜாவும் மிதுனும் தூரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு கடலைப் பற்றியும், அதன் ஆபத்துகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறான். அவர்கள் இயல்பாக ஜாக்கிரதை உணர்வு கொண்டவர்கள். கடலுக்கு அருகில் போகமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.
அவன் ரேகாவை நெருங்கிய போது, மிதுனும் விஜாவும் அருகே வந்திருந்தார்கள். விஜா ஓடி வந்து கழுத்தைக் கட்டிக்கொண்டாள். மிதுன் கைகளைக் கட்டிக்கொண்டு தனியே நின்றான். இவன் கை அசைத்தவுடன் அருகில் வந்து இடுப்பில் கை போட்டான்.
குழந்தைகளின் மனது ஈர சிமெண்டைப் போல.. எதை சொல்கிறோமோ அல்லது செய்கிறோமோ அது அழுத்தமாக அவர்கள் மனதில் படிந்து விடும். நல்ல விசயங்களை பதிய வைத்தல் அவசியம். கிளிஞ்சல் பொம்மைகளின் விலை மலிவை, அதைச் செய்யும் சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மட்டும் பார்த்து ஒரு கணிப்புக்கு வருகிறாள் ரேகா. அவளைச் சொல்லிக் குற்றமில்லை. அவள் வளர்ந்த விதம் அப்படி. ஆயிரம் ரூபாய்க்கு பஞ்சு பொம்மைகளை வாங்கிக் குவித்திருந்தார் அவளுடைய அப்பா. அதுவும் விஜா கைக்குழந்தையாக இருக்கும்போதே.. பேட்டரியில் இயங்கும் ரோபோ, சிறிய மோட்டார் சைக்கிள் என்று வாங்கிக் கொடுத்து அசத்துகிறார் மிதுனை.. ஆனாலும் கிளிஞ்சல் பொம்மைகளில் இருக்கும் உயிரோசை அவைகளில் இல்லைதான். அதைச் சொன்னால் ரேகாவுக்கு புரியாது. விஜாவையும் மிதுனையும் பார்த்தான்.
‘ இவர்களும் கிளிஞ்சல் பொம்மைகள் தான். எத்தனை ரகமான கிளிஞ்சல்கள் இவர்கள் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ‘
பிறந்தவுடன் போலியோ டிராப்ஸ், வளர்ந்தவுடன் ஜெர்மன் மீஸில்ஸ் தடுப்பூசி, எல் கே ஜி யில் இருந்து இதுவரை எத்தனையோ…. பேனா,பென்சில், புத்தகம், யூனி·பார்ம், ஷ¥, மருந்து போஷாக்கு என்று..
இதில் மேல் எது கீழ் எது என்று பார்த்து பார்த்து ஒட்டிய பெருமை ரேகாவிற்கு உண்டு. ஆனால் அவளுக்குத் தெரியாது அவள் ஒட்டிய கிளிஞ்சல்களால்தான் இன்று குழந்தைகள் ஆளுயரம், தோளுயரம் என்று வளர்ந்து நிற்கிறார்கள் என்று.
- ஏமாற்றம்
- கிரீன்லாந்தின் பனித்தளம் விரைவில் ஆறுகளாய் உருகி ஓடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது
- மணல்வெளி மான்கள் – 1
- மலேசியா தமிழ் எழுத்தாளர் திரு.பாலகோபால நம்பியார்
- ஆனந்த்—தேவதச்சன் கவிதைகள் அவரவர் கைமணல்–தொகுப்பை முன் வைத்து…
- இடைத் தேர்தல்
- சாவு விருந்து
- சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் : ஆய்வரங்கு
- மிதிலாவிலாஸ்-19
- தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி
- மூன்று குறுங்கதைகள்
- நெருடல்
- “ ப்ரோஜேரியா சிண்ட்ரோம்………..”
- முழுக்கு
- பல்லக்கு
- தனலெட்சுமி பாஸ்கரன் கவிதைகள் ‘ பறையொலி ” தொகுப்பை முன் வைத்து…
- சுப்ரபாரதிமணியனின் 5 நூல்கள் அறிமுகவிழா
- கடந்து செல்லும் பெண்
- மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா
- அந்தக் காலத்தில்
- வயசு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ் – அத்தியாயம் 6
- கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு
- சவுதி அரேபியாவின் ஷியாக்கள்- ரியாத்தின் இன்னொரு போர்- “வெறுப்பின் மொழி வலுவடைகிறது”
- சும்மா ஊதுங்க பாஸ் – 2