தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்

This entry is part 6 of 19 in the series 24 மே 2015
rocky pond

ஆங்கில வகுப்புகள் மதிய தூக்கத்திலும் கலகலப்பாகவே நடந்தன. பாட நூலான தாமஸ் ஹார்டியின் நாவல் ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” சூடு பிடிக்கத் தொடங்கியது.
அந்த கதை நடந்த காலம் 1826. இங்கிலாந்து நாட்டின் வெசெக்ஸ் எனும் கிராமத்தில் கதை துவங்குகிறது.அதன் கதாநாயகன் மைக்கல் ஹென்சார்ட் வேலை இல்லாத இளைஞன். கிராமங்களில் அறுவடை சமயங்களில் பண்ணை வேலை செய்பவன். அந்த கிராமத்து சந்தைக்கு மனைவியும் கைக்குழந்தையுமான மகளுடன் வந்தவன் அங்கு மதுபானம் விற்பனையாகும் ஒரு கூடாரத்தில் நுழைகிறான். போதை அதிகமானதும் தன்னுடைய மனைவி சூசனையும் குழந்தை எலிசபெத் ஜேன் என்பவளையும் விற்கப்போவதாகச் சொல்லி ஏலம் விடுகிறான்.
அங்கு கூடியிருத்த கிராமத்து மக்களுக்கு அது விசித்திரமாகத்தான் இருந்தது. ஆனால் அங்கு வந்த ஒரு இளம் மாலுமி அதிக பணம் கொடுத்து அவர்களை வாங்குகிறான். அவனை முறைத்துப் பார்த்த சூசன் தன்னுடைய விரலில் இருந்த திருமண மோதிரத்தைக் கழற்றி அவனை நோக்கி வீசிவிட்டு குழந்தையுடன் அந்த மாலுமியுடன் சென்றுவிடுகிறாள்.
கடும் போதையில் மேலும் குடித்துவிட்டு அங்கேயே படுத்து தூங்கி விடுகிறான். அந்த மது விற்கும் மூதாட்டி கூடாரத்தை மூடிவிட்டு வீடு சென்று விடுகிறாள்.
காலையில் கண்விழித்த ஹென்சார்டுக்கு இரவு நடந்தது கனவா என்று எண்ணிப்பார்க்கிறான். சுற்றுமுற்றும் பார்த்தபோது அந்த மோதிரத்தைக் கண்டெடுக்கிறான். சட்டைப் பையில் அந்த மாலுமி திணித்திருந்த பண நோட்டுகளைப் பார்கிறான். அப்போதுதான் நடந்த அனைத்தும் நினைவுக்கு வருகிறது. தான் செய்த முட்டாள்தனத்தை எண்ணி வருந்துகிறான். தன்னை விட்டுப் போய்விட்ட சூசன் மீது கோபமும் கொள்கிறான். இருந்தாலும் அவளுடைய சாதுவான சுபாவத்தை எண்ணிய அவன் அவள் மீது இறக்கம் கொண்டதோடு தன்னுடைய கொடூரச் செயலை எண்ணி வருந்துகிறான்.
அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது என்று முடிவு கொள்கிறான். அதற்குமுன் அந்த கிராமத்து தேவாலயம் சென்று பீடத்தண்டை மண்டியிட்டு பரிசுத்த வேதாகம நூலை இறுகப் பற்றிக்கொண்டு இனிமேல் இருபத்து ஓரு வருடம் மதுவைத் தொடுவதில்லை என்று சத்தியம் செய்கிறான். அவன் கடந்து வந்த இருபத்தோரு வருடங்கள் என்பதால் அந்த கணக்கு. அதன்பின் பல மாதங்கள் ஊர் ஊராகத் தேடியும் பயனில்லாமல் இறுதியில் ஒரு துறைமுகம் சென்று சேர்கிறான். அங்கு அவன் தேடுபவர்கள் போன்றவர்கள் கப்பல் ஏறிச் சென்றுவிட்டதாகக் கேள்விப்படுகிறான். இனி ஏதும் செய்ய இயலாது என்ற நிலையில் தேடுவதை அத்துடன் முடித்துக்கொண்டு கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகரை நோக்கிச்  செல்கிறான்.

கதையை நகர்த்திச் செல்லும் தாமஸ் ஹார்டியின்  அன்றைய இங்கிலாந்தின் கிராமப்புற வர்ணனைகளும், ஹென்சார்ட் பற்றிய தகவல்களும் சமுதாய அமைப்புகள் பற்றிய பார்வையும் மிகவும் சுவையாக  இருக்கும். இதுவரை படித்த கதை பற்றி நாங்கள் விவாதம் செய்வோம். அதில் கதை நடந்த சூழல், கதை மாந்தர்களின் குணநலன்கள்  அன்றைய சமுதாய நிலைப்பாடு போன்றவற்றை ஆராய்வோம். அப்போது வகுப்பில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் விழித்துக்கொண்டு ஆர்வத்துடன் விவாதத்தில் பங்கெடுப்போம்! அது கண்டு வகுப்பாசிரியர் குண்டர்ஸ் பெருமிதம் கொள்வார்.இதுவே இலக்கியம் படிப்பதில் உள்ள சிறப்பு.

ஒரு சனி ஞாயிறு அண்ணன் வீடு சென்று வரலாம் என்று முடிவு செய்தேன்.அங்கு சென்றுவர சுமார் ஐந்து மணி நேரமாகும் திருவண்ணாமலை சென்று, உளுந்தூர்பேட்டை வழியாக கள்ளக்குறிச்சி சென்றுவிடலாம். அங்கிருந்து வேப்பூர் பஸ் மூலம் அண்ணன் வசிக்கும் முடியனூர் கிராமத்தில் இறங்கிவிடலாம்.
சனிக்கிழமை விடியலிலேயே புறப்பட்டுவிட்டேன்.வட ஆற்காட்டு கிராமங்களைப் பார்த்தது இனிமையான அனுபவமே. திருவண்ணாமலையில் கள்ளக்குறிச்சி பஸ் நின்றது. அதில் பிரயாணத்தைத் தொடர்ந்தேன். சுமார் காலை பத்து  மணிக்கெல்லாம் முடியனூரில் இறங்கிவிட்டேன்.
பேருந்து நின்ற இடத்தில் ஓர் ஒட்டுக்கடை இருந்தது. அதன் எதிரே வீதியின் மறு புறத்தில் அண்ணி பணிபுரியும் ஆரம்பப் பள்ளி இருந்தது. சனிக்கிழமையில் அரை நாள் பள்ளி. நான் அங்கு சென்று அண்ணியைப் பார்த்தேன். அவர் உடன் என்னுடன் வெளியே வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அண்ணி திருச்சியில் ஹோலி கிராஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றவர். ஆசிரியை பயிற்சி பெற்று லுத்தரன் மிஷன் பள்ளியில் பணிபுரிந்தபோது அண்ணனை மணந்துகொண்டார். முதல் குழந்தை பிறந்தபின் வேலையிலிருந்து நின்றுவிட்டார். அண்ணன் பி.டி. பட்டம் பெற்றபின் இருவருக்கும் அரசாங்கத்தில் வேலை கிடைத்து இங்கு வந்துள்ளனர். அண்ணன் அங்கிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த நாகலூரில் போர்டு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். பேருந்து இருந்தாலும் சில நாட்களில் சைக்கிளில்கூட பணிக்குச் செல்வார்.

          அது கல் வீடு. குறுகலான நுழைவாயில்.நீண்ட கூடம். ஒரு தனி அறையும் சமையல் அறையும் இருந்தன. மொட்டை மாடி இருந்தது.குளியல், கழிவறை கிடையாது.பின்புற தோட்டம் செல்லவேண்டும். அநேகமாக எல்லா வீடுகளுமே கல் வீடுகள்தான். கருங்கல்லுக்கு இங்கு குறைவில்லை.
           இந்தப் பகுதி முழுதும் நிறைய கற்பாறைகளும் குன்றுகளும் நிறைந்துள்ளன. ஆறுகள் இல்லையென்றாலும் ஆங்காங்கு கற்பாறைகளில் குடைந்தெடுத்த குளங்கள் உள்ளன. அதுபோன்றே கற்பாறைகள் நிறைந்த பகுதிகளில் குடைந்தெடுத்த ஆழமான கிணறுகள் உள்ளன. அவற்றின் கீழே சென்று குளிக்க படிகள் செதுக்கியுள்ளனர்.  கற்பாறைகள் நிறைந்திருந்தாலும் அடியில் நீர் வளம் மிகுந்திருந்தது. இங்கு நன்செய் நிலங்கள் காண முடியவில்லை. சோளம், கம்பு, கேழ்வரகு,விளையும் புன்செய் நிலங்களே அதிகம் காணப்பட்டன. கிணறுகளிலிருந்து பம்ப் மூலம் நீர் இரைத்து வயல்களில் பாய்ச்சி விவசாயம் செய்தனர். ஏராளமான மரங்களும் செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து பசுமையான பகுதியாகத்தான் காட்சியளித்தது. ஆனால் எங்கு பார்த்தாலும் கற்பாறைக் குன்றுகளுக்கும் மலைகளுக்கும் இங்கு குறைச்சலில்லை.
அண்ணனிடம் இன்னும் நான் சகஜமாகப் பேசவில்லை.ஒருவித கூச்சம் நிலவியது. அதனால் இடையில் அண்ணியை வைத்துக்கொண்டுதான் பேசுவோம். அது வேடிக்கையாக இருக்கும். எனக்கு ஏதாவது வேண்டும் என்றால் அண்ணியிடம் கூறுவேன். அண்ணனும் அங்குதான் இருப்பார். அதற்கு அவர் அண்ணியிடம் பதில் கூறுவார். சிறு பிள்ளையில் நாங்கள் இருவரும் ஒன்றாக வளராததே இந்த கூச்சத்திற்கு காரணம் . அண்ணியைப் புதிதாகப் பார்த்தாலும், முன்பு ஒரு முறை ஊரில் இருந்தபோது பேசியதால் அவ்வளவு கூச்சம் இல்லை. இந்த நிலைமை நீண்ட நாட்கள் நீடித்தது.
          அண்ணன் ” ரேலி ” வைத்திருந்தார். அதை அப்பா சிங்கப்பூரிருந்து அனுப்பியது. அப்போது அதுதான் விலை உயர்ந்தது. அதை எடுத்துக்கொண்டு ஊரைச் சுற்றிப் பார்ப்பேன்.
          கற்பாறைக் கிணற்றில் குளிக்கச் சைக்கிளில்தான் செல்வேன். அது சற்று தொலைவில் இருந்தது.எனக்குத் துணையாக பாண்டுரங்கன் என்பவன் வருவான்.அவனுக்கும் என் வயதுதான் இருக்கும். உள்ளூர்தான். விவசாயம் செய்துவந்தான். அவன் அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வருவானாம். சில எடுபிடி வேலைகள் செய்து உதவுவான். அவன்  என்னுடன் நெருக்கமானான். நான் மருத்துவம் பயில்கிறேன் என்பதால் என்னிடம் மிகுந்த மரியாதையுடன் பழகினான்.. அவன் தன்னை உடையார் என்று சொல்லிக்கொண்டான். அந்தப் பகுதியில் உடையார் சாதியினர் அதிகம் உள்ளதாகக் கூறினான்.
          அவனிடம் தூண்டில் போடலாமா என்று கேட்டேன். உடன் இரண்டு தூண்டில் தயார் செய்து வந்தான்.சைக்கிளில் சென்று பாறைகளில் நிறைந்திருந்த குளத்தில் தூண்டில் போட்டு மீன் பிடித்தோம்.
          ஞாயிற்றுக்கிழமை அண்ணன் அண்ணியுடன் கள்ளக்குறிச்சியில் உள்ள ஆற்காடு லுத்தரன் ஆலயம் சென்றோம்.அது எங்களுடைய லுத்தரன் சபையைச் சேர்ந்ததுதான்.தரங்கம்பாடியில் சீகன்பால்க் துவங்கிய சுவிசேஷ லுத்தரன் சபைதான். இரண்டாம் உலகப் போருக்குப்பின்பு அந்த சபை இரண்டாகப் பிரிக்கப்பட்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை, ஆற்காடு லுத்தரன் சபை என்று ஆனது. அது கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி.உளுந்தூர்பேட்டை ஆகிய  பகுதிகளில் சுவிசேஷப் பணியை மேற்கொண்டது. அதன் தலைமையகம் கடலூரில் இருந்தது.அதற்கு தனி பேராயர் இருந்தார். ஆராதனை முறைகள் அனைத்தும் ஒரே மாதிரிதான்.
          அந்த வார இறுதி அங்கு இனிமையாகக் கழிந்தது. ஒரு நாள் கூட இருந்துவிட்டு திங்கள் மாலையில் மீண்டும் வேலூர் புறப்பட்டேன்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationமிதிலாவிலாஸ்-20பரிசுத்தம் போற்றப்படும்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *