ஒவ்வாமை

This entry is part 5 of 21 in the series 31 மே 2015

சிறகு இரவிச்சந்திரன்

சின்ன வயதில் படிப்பு எல்லாம் கிராமத்தில் தான். பச்சை பசேலென்று வயல்களும், இடையில் ஓடும் வாய்க்கால்களும் தான் அவரது மனதில் கலையான நினைவுகளாக இருந்தன. அவர் பெயர் சங்கமேஸ்வரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். வேலைக் காரணமாக இந்தியாவின் பல மூலைகளுக்கு அவரது காலடிகள் பட்டிருக்கின்றன. அங்கிருந்தெல்லாம் அவர் ஆசையாக கொண்டு வருவது தன் மனைவி கோமளவல்லிக்கான பரிசுப் பொருட்கள் இல்லை. எப்போதும் விதவிதமான வண்ண மலர்களை கொண்ட தொட்டிச் செடிகளை வாங்கி வருவார். ஒவ்வொன்றிற்கும் அதன் வேரடி மண்ணை தனியாக ஒரு பொட்டலமாக கட்டி வருவார். செடிகளுக்கும் உணர்வு உண்டு. வேரடி மண்ணைப் பிரிந்த நொடியில் சில செடிகள் வாடிப் போவதுண்டு.
இன்னொரு பழக்கமும் சங்கமேஸ்வரனுக்கு உண்டு. அதுதான் செடிகளோடு பேசுவது. கோமளவல்லி கூட குறைப்பட்டுக் கொள்வாள்.
“ மனுசரு என் கூட இவ்வளவு பேசியிருப்பாரா? எப்பவும் செடிகளோட தான்”
சங்கமேஸ்வரனுக்கு பச்சை என்றால் பிடிக்கும். கோமளாவுக்கு அது பிடிக்கவே பிடிக்காது.
“ என்ன இது? பைராகி மாதிரி.. எப்பவும் பச்சை “
“ உனக்குத் தெரியாது கோம்ஸ்! பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி. நீலம் அமைதி. சிவப்பு எப்போதும் எதிர்ப்பு உணர்வைத் தூண்டும்.”
“ அதுக்காக எப்பவும் பச்சையா? நீங்க பச்சை சட்டை, பச்சை பேண்ட். நான் பச்சை புடவை, பச்சை ரவிக்கை.. முதியோர் பள்ளி சீருடை மாதிரி இருக்குதுங்க!”
ஆனாலும் சங்கமேஸ்வரன் மாறியதே இல்லை. யாரோ வெள்ளையில் பூப்போட்ட புடவையைப் பரிசாக அளித்த போது மெனக்கெட்டு அதை சாயமிட்டு, பச்சையாக மாற்ற வைத்தபின் தான் ஓய்ந்தார்.
இப்போது சங்கமேஸ்வரன் ஓய்வு பெற்று விட்டார். ஊரில் இருந்த பூர்வீக வீடு சிதிலமாகிப் போனதில் அதை விற்க வேண்டிய கட்டாயம் வந்தது. தவிரவும் கோமளாவுக்கு மூச்சு திணறல் நோய் வந்து படுத்தியது. நகரின் மையத்தில், மருத்துவ மனைக்கு அருகில் ஒரு குடியிருப்பில் தங்க வேண்டிய கட்டாயமும் வந்தது. தோட்டம் வைக்க எல்லாம் அந்த குடியிருப்பு வீட்டில் இடமில்லை.
ஆனால் சங்கமேஸ்வரன் மனம் தளரவில்லை!
0
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் இருந்தது அந்தக் குடியிருப்பு. சங்கமேஸ்வரன் குடியிருக்கும் வீடு அது. சங்கமேஸ்வரன் அரசு உத்யோகத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். வயது அறுபத்தி நான்கு. வேளாண்மைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று ஆறு வருடங்கள் ஆயிற்று. சங்கமேஸ்வரனுக்கு ஒரு மனைவியும் இரண்டு மகள்களும் உண்டு. மகள்களுக்கு திருமணம் ஆகி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்கள். அவர் இன்னமும் அங்கு போகவில்லை. ஆனால் அவரது மனைவி கோமளவல்லி இரண்டு முறை அங்கு போய் விட்டு வந்திருக்கிறார். அவர் சொன்ன விசயங்கள் அவரது ஆவலை மேலும் தூண்டின.
‘ பதிமூணாவது மாடிங்க.. எதிரே பூங்கா.. என்ன விதமான செடிகள், மலர்கள்.. இன்பா கிட்ட கூட சொன்னேன்.. அப்பா வந்திருந்தா திரும்பியிருக்கவே மாட்டாருன்னு..’
வானை நோக்கி கட்டிடங்களைக் கட்டிவிட்டு, பூங்காக்களை உயிர்ப்போடு வைத்திருக்கிறார்கள்.
அடுக்குமாடி கட்டிடம் கட்டும்போதே தீர்மானமாக சொல்லிவிட்டார், தனக்கு ஒரு படுக்கை அறை போதும் என்றும், மீதமுள்ள இடத்தில் மாடித் தோட்டமாவது அமைக்க வேண்டும் என்று.
‘ ரெண்டு மகளுங்கன்னு சொல்றீங்க.. அவங்க வந்தா தங்க இடம் இருக்காதே? ‘ கட்டிடக்காரன் அதீதமாகக் கவலைப்பட்ட்டான்.
‘ தேவைன்னா ஹால்ல படுத்துக்கறேன்.. அதுவும் வேணுமின்னா இருக்கவே இருக்குது என் பூங்கா.. மாடிப்பூங்கா. ‘
அவரது பிடிவாதத்திற்கு முன்னால் கோமளவல்லியின் வாதம் எடுபடவில்லை. பூங்கா அமைத்தே விட்டார். நூலகத்திற்கு சென்று, தோட்டக்கலை நூல்களை வாங்கி, பிரதி எடுத்து, தினமும் ஒரு செடி என்று சேர்த்து இன்று அவரிடம் இருபத்தி ஐந்து செடிகள் இருக்கின்றன. சில அழகுக்கு, பல மருத்துவத்திற்கு.
0
இரண்டாவது மகள் இன்பா என்கிற இன்பவல்லி நாளை வருகிறாள். அவளுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறாள். குடும்பத்தின் முதல் ஆண் வாரிசு. முதல் பெண்ணுக்கு இன்னமும் கருத்தரிக்கவில்லை.
காலையிலிருந்தே ஒரே களேபரம். கோமளவல்லி ஏக உற்சாகத்தில் இருந்தாள். பேரனை பார்க்கப்போகும் சந்தோஷம்.

0
காலை ஆறுமணிக்கு விமானம் தரையிறங்குமாம். ஏழரை மணிக்கு வந்து விடுவார்களாம். இன்பாவுக்கு பிடித்த பிடிக்கொழுக்கட்டை, சின்ன வெங்காய சாம்பார் என்று காலை நாலு மணிக்கே எழுந்து செய்ய ஆரம்பித்து விட்டாள்.
சங்கமேஸ்வரன் ஐந்து மணிக்கு எழுந்து வாக்கிங் போய் விட்டு, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு, கொஞ்ச நேரம் அவைகளை வருடி கொடுத்து விட்டு, குளிக்கப் போனார். ஆறு மணிக்கு மகிழுந்து வந்து விடும். அவர்தான் விமான நிலையம் போகப் போகிறார்.
0
மகிழுந்துவில் இருந்தபோது, இன்பா எப்படி தன் தோட்டத்தைக் கண்டவுடன் குதிக்கப் போகிறாள் என்று கற்பனை செய்து பார்த்தார். சிறு வயதிலிருந்தே அவள் இயற்கை பிரியை. தினமும் சைக்கிளில் பூங்கா போக வேண்டும் என்று அடம் பிடிப்பாள். அவள் ரசனைக்கேற்றாற்போல் வெளிநாட்டில் அவள் வீட்டருகிலேயே பூங்கா அமைந்தது அதிர்ஷ்டம் தான் என்று எண்ணினார். அவள் மகனுக்கு பூங்கா பிடிக்குமா?
பேரனைக் கைப்பிடித்து, ஒவ்வொரு தொட்டியாக அழைத்துச் சென்று, செடிகளையும் அதன் வாசத்தையும் குணங்களையும் விளக்க வேண்டும். சிறு மூளை. ஒரே நாளில் அத்தனையும் திணிக்கக் கூடாது. ஒரு நாள், ஒரு தாவரம்.
0
விமானம் தரையிரங்கி அரை மணி நேரத்தில் அவர்கள் வந்து விட்டார்கள். இன்பா கொஞ்சம் சதை போட்டிருந்தாள். அவள் பின்னால் டிராலியைப் பிடித்துக் கொண்டு ஒரு வெள்ளைக்காரக் குழந்தை.. அட அது வெள்ளைககாரக் குழந்தை இல்லை. அவர் பேரன் தான்.
சாமான்களை பின்னால் ஏற்றிய பிறகு சங்கமேஸ்வரன் சொன்னார்:
‘ போரூர்.. கெளம்பினோமே அங்கதான்.. ‘
‘ அப்பா.. இப்ப வீட்டுக்கு வேணாம்பா.. நான் நட்சத்திர ஓட்டல்ல அறை போட்டிருக்கேன். சட்டுனு கிளைமேட் மாறினா இவனுக்கு ஒத்துக்காது.. அதுவுமில்லாம வீட்டுல தோட்டம் போட்டிருக்கீங்களாமே? அம்மா சொன்னாங்க.. பூ வாசம், டஸ்ட் அலர்ஜி, ஏதாவது ஒத்துக்கலைன்னா, இவங்க அப்பா என்னை கொன்னுடுவாரு..’
0
இப்போதெல்லாம் சங்கமேஸ்வரன் தெருவிலிருக்கும் பூங்காவுக்கு போய் மணிக்கணக்கில் உட்கார்ந்திருக்கிறார். அவரது மாடி தோட்டம் அறையாகிவிட்டது. பேரன் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் கோமளவல்லி, இரண்டு வருடங்களாக.
0

Series Navigationதொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.பலவேசம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *