= சிறகு இரவிச்சந்திரன்
0
இத்தாலிய பிரபுவின் ஆவி துரத்தும் இளைஞர் பட்டாளம். அசத்தல் ஹாரர் ஓவியம்.
சீனிவாசனும் அவன் நண்பர்கள் ராகவன், விமல், சப்பையும், டிமான்டி பிரபுவின் ஆவி புகுந்த பழைய மாளிகையிலிருந்து, ஒரு தங்கப் பதக்கத்தை எடுத்து வந்து விடுகிறார்கள். அதற்காக அவர்களை விரட்டி பழி வாங்குகிறது வெள்ளைக்கார ஆவி!
சீனிவாசனாக அருள்நிதி நடித்தாலும், இந்தப் படத்தின் நிஜ ஹீரோ ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்தான். அவரோடு கைக் கோர்க்கிறார் கலை இயக்குனர் சந்தானம். டிமான்டி பிரபுவின் மாளிகையை வெள்ளைக்கார ஆட்சியில் இருந்தது போல, வாகனங்கள், லாந்தர் விளக்குகள், பணியாளர்களின் உடை, மேசை நாற்காலிகள் என மெனக்கெட்டு வடிவமைத்திருக்கும் அவர், இன்றைய காலத்தில், அது பாழடைந்து இருப்பதை, திகிலாக கண் முன் காட்டும்போது, தண்டு வடத்தில் ஏறும் சிலிர்ப்பு அவருக்கான பாராட்டு. சோடியம் தெரு விளக்குகளை வைத்தே பீதி வரவழைக்கிறார் அரவிந்த். அதோடு மழையும் அவருக்கு சலாம் போட்டு, சைத்தான் வேலை காட்டுகிறது. வாவ்! பேயின் சிரிப்புக்கு பாதரசம் போன பாத்ரூம் கண்ணாடி ஆடுவது சூப்பர் காட்சி!
ஏழடி உயரமுள்ள அந்த வெள்ளைக்கார டிமான்டியை எங்கேயிருந்து பிடித்தார்களோ? மனிதர் தலையை சாய்த்து பார்க்கும்போதெல்லாம் ‘ஜிலீர்’ என்கிறது.
விமலாக வரும் ரமேஷ் திலக் ( சூது கவ்வும் ‘சரக்கு’ மாஸ்டர்) இந்தப் படத்தில் காட்டியிருக்கும் பாவங்கள், அவரது நண்பர் விஜய் சேதுபதிக்கு பெருமை சேர்க்கும். மனிதர் பீதியில் பல பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார். புதுமுகம் சதானந்த் இதில் ராகவன். அவருக்கு இனி தனி நாயக வேடங்கள் கிடைக்கும். நல்ல அறிமுகம்.
ஓரிரு காட்சிகளில் தலைகாட்டும் காமெடி நடிகை மதுமிதா தவிர, பெண் பாத்திரங்களே இல்லை. அதனால் டூயட் போன்ற வேகத்தடைகளை விலக்கியிருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இழுத்துப் பிடிக்கப்பட்ட மாஞ்சா நூல் போல் இருக்கிறது திரைக்கதை. எதிர்பாராத திருப்பங்களுடன் பிரமாதமாக பயணிக்கிறது படம். நிமிர்ந்து உட்காருவதற்குள் படம் முடிந்தே போய் விடுகிறது.
ஜப்பானிய பேய் படத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது, அதற்கு பதிலாக பின்னால் நடக்கப் போகும் விபரீதங்களை, அருள்நிதி பார்வையில், அதே தொலைக்காட்சி பெட்டியில், ரசிகனுக்கு காட்டுவது ஒரு புதிய உத்தி. ஆனால் அது ரிபீட் ஆகும்போது நமக்கு ரிவிட் ஆகிவிடுவது உண்மை.
பீதியை அதிகரிக்க மௌனம் கூட போதும். இப்படி அண்டா குண்டாவையெல்லாம் உருட்டுவது, சின்னாவின் பின்னணி இசைமீது வெறுப்பு வரச் செய்கிறது. குழந்தைகளின் காதுகளைப் பொத்திக் கொண்டு படம் பார்க்கிறார்கள் பெற்றோர்கள். பாடல்களில் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் இசைஞர் கெபா ஜெரெமய்யா. “ இங்கி பிங்கி பாங்கி “ வித்தியாச குரலுடனும் இசையுடனும் கவர்கிறது. ஆச்சர்யமாக இந்தப் படத்தில் கொடூரக் குரலில் பேய் கூட ஒரு பாட்டு பாடுகிறது. வியாபாரத்திற்காக சேர்க்கப்பட்ட “ வாடா வா மச்சி “ என்கிற டாஸ்மாக் குத்து, அருள்நிதியின் நடனத் திறமை அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
அஜய் ஞானமுத்துவின் இயக்கம், அவர் இன்னொரு கார்த்திக் சுப்புராஜாக வரக்கூடிய சாத்தியங்களைச் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
0
பார்வை : அக்மார்க் ஹாரர்
மொழி : மொணமொணன்னு பேசறதால அருள்நிதிக்கு மருள் நிதின்னு பேர் மாத்தலாமா மச்சி!
0
- வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்
- மிதிலாவிலாஸ்-20
- சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)
- தொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.
- ஒவ்வாமை
- பலவேசம்
- சாயாசுந்தரம் கவிதைகள் 3
- மயிரிழை
- அன்பானவர்களுக்கு
- ஆறு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3
- பிசகு
- நிலவுடன் ஒரு செல்பி
- சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்
- சூரிய ஆற்றல்.
- ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்
- டிமான்டி காலனி
- ஒரு வழிப் பாதை
- இடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு
- மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்