டாக்டர் ஜி. ஜான்சன்
விடுதி திரும்பிய நான் புதுத் தெம்புடன் பாடங்களில் கவனம் செலுத்தினேன். முதல் ஆண்டு முழுதும் நான் இரசித்தது ஆங்கில வகுப்புதான். ஆனால் அங்குதான் அனைவருமே நன்றாகத் தூங்குவார்கள். நான் பெரும்பாலும் அங்கு தூங்குவதில்லை. எனக்கு அந்த நாவல் பிடித்திருந்தது.
மனைவி சூசனையும் மகள் எலிசபெத் ஜேனையும் குடி போதையில் , முன்பின் தெரியாத மாலுமியிடம் விற்றுவிட்ட ஹென்சார்ட் அவர்களைத் தேடுவதில் தோல்வி அடைந்தவனாக கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகருக்குச் செல்கிறான்.
அதன் பின்பு கதை பதினெட்டு வருடங்கள் கழித்து தொடர்கிறது. அவனைத் தேடிக்கொண்டு சூசனும் ஓர் இளம் பெண்ணும் ( எலிசபெத் ஜேன் ) அந்த பழைய சந்தை நடந்த ஊருக்கு வருகின்றனர். ( அங்குதான் அவர்கள் இருவரும் விற்கப்பட்டனர். ) இருவரும் கருப்பு உடை அணிந்துள்ளனர். அவர்களை விலைக்கு வாங்கிய கப்பல் மாலுமி நியூசன் என்பவன் கடல் பிரயாணத்தில் காணாமல் போய்விடுகிறான். அந்த ஊரில் ஒரு தூரத்து உறவைத் தேடிச் செல்வதாக சூசன் தன மகளிடம் கூறுகிறாள். அவன்தான் ஹென்சார்ட், தன்னுடைய மாஜி கணவன் என்பதை அவளிடம் கூறவில்லை. ஜேனுக்கு தன தகப்பனைத் தெரியாது. அவர்கள் விற்கப்பட்டபோது அவள் கைக்குழந்தை.
அந்த ஊர் பல்வேறு மாற்றங்கள் கண்டிருந்தாலும், அன்று நாட்டு மது விற்ற மூதாட்டி வயதான நிலையில் அதே தொழிலில்தான் ஈடுபட்டுள்ளாள். ஆனால் முன்புபோல் வியாபாரம் இல்லை. அவளிடம் ஹென்சார்ட் பற்றி வினவுகிறாள். அவளுக்கு உடன் நினைவில்லை. குடிபோதையில் மனைவியையும் குழந்தையையும் விற்ற சம்பவத்தை நினைவு படுத்தி கேட்டபோது அவளுக்கு நினைவு வருகிறது. அவன் அந்த சம்பவம் நடந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் சந்தைக்கு வந்ததாகவும், தன்னைத் தேடிக்கொண்டு ஒருத்தி எப்போது வந்தாலும் தான் கேஸ்ட்ட்டர்பிரிட்ஜ் நகரில் உள்ளதாகச் சொல்லச் சொன்னதாகக் கூறுகிறாள். இருட்டிவிட்டதால் அவர்கள் இருவரும் அந்த ஊரிலேயே தங்கிவிட்டு மறுநாள் கேஸ்ட்டர்பிரிட்ஜ் நோக்கி பயணம் மேற்கோள்கின்றனர்.
இப்போது கதையில் புதுத் திருப்பம் உண்டாகிறது. அவனுடைய முன்னாள் மனைவி அவனை மீண்டும் தேடிவருவதில் நிச்சயம் எதோ ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. ஆனால் அவனை மீண்டும் கண்டபின்னால் என்ன ஆகும் என்ற ஆவலும் உண்டாகிறது. ஒரு வேளை அவன் வேறொருத்தியை மணந்திருந்தால் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுகிறது. இங்கு மற்றொரு செய்தியும் உள்ளது. அந்த நாட்டு மது விற்கும் மூதாட்டியிடம் சூசன் பேசுவதை தான் விரும்பவில்லை என்பதை ஜேன் வெளிப்படுத்துகிறாள். அதை தரக்குறைவாகக் கருதுகிறாள். தன்னை உயர்வாக எண்ணுபவள் என்பதும் கூறப்பட்டுள்ளது.
எவ்வளவுக்கு எவ்வளவு நான் இந்த ஆங்கிலப் பாடத்தை இரசித்தேனோ, அவ்வளவுக்கு அவ்வளவு கரிம வேதியியலும் உயிர் இயற்பியலும் பாடத்தை வெறுக்கலானேன். இதில் இல்லாததையும் இருப்பதாக கற்பனை செய்துகொண்டு படித்து புரிந்துகொள்ளவேண்டியிருந்தது.அதனால்தான் அந்த சிரமம். ஒரு வேளை நான் இயற்கையிலேயே இலக்கியத்தில் ஈர்ப்பு உள்ளவன் என்பதால் கூட ஆங்கிலப் பாடத்தில் அத்தகைய நாட்டம் உண்டாகியிருக்கலாம்.
ஞாயிறுக்கிழமைகளில் நாங்கள் கல்லூரி பேருந்தில் ஏறி வேலூர் கோட்டையிலிருந்த செயின்ட் ஜான் ஆலயம் சென்று திரும்பியபின்பும் சில வேத கலந்துரையாடல்கள் நடைபெறும். இவை கல்லூரி வளாகத்தில் குடியிருந்த சில மருத்துவர்களில் இல்லங்களில் நடைபெறும். இதில் இரண்டு விதமான இயக்கங்கள் இருந்தன. ஒன்று கிறிஸ்துவ மாணவர் இயக்கம். இது மிதமானது. இன்னொன்று சுவிசேஷ இயக்கம். இது கொஞ்சம் தீவிரமானது.நான் இரண்டிலும் சேராமல் மாலைகளில் வேலூர் டவுனுக்குச் சென்று அங்கு அரசியல் கூட்டங்களைக் காண்பதையே விரும்பினேன். இதில் வேறு யாருக்கும் நாட்டம் இல்லாதிருந்தது. தனியாகத்தான் சென்றுவருவேன். அவ்வப்போது செல்வராஜ் என்ற ஆசிரியர் நண்பரும் வருவார்.
கொஞ்ச நாட்களில் அந்த இரண்டு கிறிஸ்துவ இயக்கங்களுக்கும் அவ்வப்போது சென்று வருவேன். ஆனால் ஏனோ நான் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. ஆனால் பெஞ்சமின் என்பவன் எனக்கு மிகவும் நெருக்கமானபின்பு அவன் என்னை கட்டாயம் சுவிசேஷ கூட்டங்களுக்குக் கூட்டிச் செல்வான். அப்போதெல்லாம் எனக்கு காலையில் ஆலயம் சென்றாலே போதுமானது என்று தோன்றியது. அதோடு அன்றாடம் பரிசுத்த வேதாகமத்தில் தினம் ஒரு அதிகாரம் படித்தாலே போதுமானது என்றும் தோன்றியது.
வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகமாக இருந்தனர். சிலர் எல்லாரிடமும் கிண்டலடித்து பேசுவார்கள். சிலர் அதிகம் பேசாமல் சாதுவாகவே இருப்பார்கள். அதிகம் பேர் மலையாளிகள் என்பதால் அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் இயற்கையிலேயே மிகவும் கெட்டிக்காரர்களாகவே விளங்கினார்கள். பணம் செலவு செய்வதிலும் சிக்கனத்தையே கடைப்பிடித்தனர்.அவர்களில் பெரும்பாலோர் கேரளாவைச் சேர்ந்த மார்த்தோமா சபையைச் சேர்ந்தவர்கள். ஆலயம் செல்வதிலும் அன்றாட நடவடிக்கையிலும் பக்தி கொண்டவர்களாகத்தான் தோன்றினார்கள். அவர்களிடம் நன்கு பழகிப் பார்த்ததில் அவர்கள் அனைவருமே செல்வாக்கான குடும்பங்களிளிருந்துதான் வந்திருந்தனர். எப்படி அவர்கள் மட்டும் ஒவ்வொரு ஆண்டிலும் அதிகமானோர் தேறுகின்றனர் என்பதை நானும் என் நண்பன் பெஞ்சமினும் ஆராய்ந்தோம். அப்போதுதான் அந்த உண்மை தெரிந்தது. அதனால் அவர்கள்மேல் குற்றம் சொல்ல முடியாது.
இந்த மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைப்பது முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில்தான் என்பதை முன்பே நான் கூறியிருந்தேன். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆனால் அப்படியிருந்தும் மலையாள மாணவர்கள் எப்படி ஒவ்வொரு வருடமும் அதிக எண்ணிக்கையில் இடம் பெறுகின்றனர் என்று ஆராயும்போது அதிலும் திறமையே முன்னிலை வகிக்கிறது. தமிழ் மாணவர்கள் தமிழகத்திலிருந்தே வருகின்றனர். அவர்களை தமிழகத்திலுள்ள கிறிஸ்துவ திருச்சபைகள் பரிந்துரை செய்து அனுப்புகின்றன. அதனால் அவர்களில் மொத்தத்தில் தமிழ் மாணவர்கள் இடம் பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அந்த நிலை இல்லை. மலையாளிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் குடி புகுந்து நல்ல வேலைகளில் உள்ளனர். அவர்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். கேரளா மாநிலத்து அத்தனை இடங்களும் அவர்களுக்கே. அதோடு மற்ற மாநில இடங்களுக்கும் அவர்கள் அங்குள்ள திருச்சபைகளின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு, திறமை காரணமாக வென்று இடம் பெறுகின்றனர். இதனால்தான் வேலூர் சி.எம்.சி.யில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது!
மலையாளி மாணவர்களிடம் இன்னொரு உண்மையையும் அப்போது தெரிந்துகொண்டேன்.ஒரு மலையாளி இன்னொரு மலையாளியைச் சந்தித்தால் மலையாளத்தில்தான் பேசுகின்றனர். ஆனால் தமிழ் மாணவர்கள் அப்படியில்லை. அவர்கள் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள்!
இத்தகைய உலகின் புகழ்மிக்க ஒரு மருத்துவக் கல்லூரியை நிறுவியவர் ஒரு அமெரிக்க பெண்மணி என்பது எனக்குத் தெரியும். அவருடைய பெயர் ஐடா ஸ்கடர் என்பது. அவர் தம்முடைய இளமைப் பருவத்திலேயே இந்த சாதனையை எப்படி செய்தார் என்பதை அறிந்துகொள்ள ஆவல் கொண்டேன். அது பற்றிய நூல் உள்ளதெனக் கூறினார்கள். அது மருத்துவமனையில் கிடைக்கும் என்றார்கள். சி.எம்.சி. மருத்துவமனையின் பிரதான கட்டிட நுழைவாயிலில் தகவல் இலாக்கா இருந்தது. அங்கு அது விற்கப்பட்டது. நோயாளிகளின் உறவினர்கள் பலர் அதை அங்கு வாங்கிச் செல்வதுண்டு. நானும் அங்கு சென்று ஒரு நூலை வாங்கிக்கொண்டேன். அது அவருடைய வாழ்க்கை வரலாறு நூல். இந்த மருத்துவமனை அவருடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளதால் அதையே மருத்துவக் கல்லூரியின் வரலாறு எனலாம். அதை வாங்கியதும் உடன் படித்து முடிக்கவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அது ஒரு அருமையான வரலாறு. அதிலுள்ள அனைத்துமே கடவுளின் செயல் என்றே கூறலாம். கடவுளுக்காக எழுதப்பட்டுள்ள அருமையான சாட்சி கூறும் நூல் என்றுகூட அதைக் கூறலாம்.( அது பற்றி அடுத்த பகுதியில் கூறுவேன். )
நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. காலாண்டு விடுமுறைகளும் நெருங்கிக்கொண்டிருந்தன. அந்த அரை மாத விடுமுறையில் தெம்மூர் செல்ல முடிவு செய்தேன். ஏனோ தெரியவில்லை நான் தாம்பரம் செல்லவில்லை. கள்ளக்குறிச்சிக்கும் செல்லவில்லை. கிராமம் சென்று நன்றாக ஓய்வெடுக்கவே விரும்பினேன். ஊர் செல்வது சுலபம். நீண்ட நேரம் பேருந்து தேவையில்லை. வேலூரிலிருந்து விழுப்புரம் வழியாக சிதம்பரம் செல்லும் ” திருப்பதி துரித பிரயாணி ” புகைவண்டி மாலை ஆறு மணிக்கு வந்து சேரும். அதில் ஏறி படுத்து தூங்கினால் போதும். விடிந்ததும் சிதம்பரத்தில் இறங்கிவிடலாம். அங்கிருந்து பேருந்து மூலம் தெம்மூர் சென்றுவிடலாம்.
அந்த விடுமுறையிலும் அண்ணன் கள்ளக்குறிச்சி வரச் சொல்லி கடிதம் எழுதியிருந்தார். நான் முதலில் கிராமம் சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு மறுவாரம் அங்கு வருவதாக பதில் எழுதிவிட்டேன். அந்த முடிவுடனே விடுமுறைக்காக காத்திருந்தேன்.
( தொடுவானம் தொடரும் )
- வளவ. துரையன் படைப்புலகம் – நிகழ்வு – கடலூர்
- மிதிலாவிலாஸ்-20
- சும்மா ஊதுங்க பாஸ் – 4 (நகைச்சுவை தொடர் முடிவு)
- தொடுவானம் 70. மனங்கவர்ந்த மாணவப் பருவம்.
- ஒவ்வாமை
- பலவேசம்
- சாயாசுந்தரம் கவிதைகள் 3
- மயிரிழை
- அன்பானவர்களுக்கு
- ஆறு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 8
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை – 3
- பிசகு
- நிலவுடன் ஒரு செல்பி
- சொற்றுணை வாழ்க்கை – பசுவய்யா கவிதைகள்
- சூரிய ஆற்றல்.
- ப.க.பொன்னுசாமியின் “ நெடுஞ்சாலை விளக்குகள் “ நாவல் வெளிச்சம் காட்டும் அறிவியல் அறம்
- டிமான்டி காலனி
- ஒரு வழிப் பாதை
- இடிமுகில் மின்னலில் மர்மமான பாஸிட்டிரான் பரமாணுக்கள் உண்டாவதை முதன்முறைக் கண்டுபிடிப்பு
- மேற்கு பர்மாவில் ரோஹிஞ்யா போராட்டம்