வல்லிக்கண்ணன் எனும் ரசிகர்

This entry is part 8 of 24 in the series 7 ஜூன் 2015

சிறகு இரவிச்சந்திரன்.
Vallikannan-198x300ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் ஒரு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சகோதரர் குடும்பத்துடன் பிரம்மச்சாரி இலக்கியவாதி வல்லிக்கண்ணன். திருப்பூர் கிருஷ்ணன் குறிப்பிடுவது போல அவர் தோற்றத்தால் ஒரு ஒல்லிக்கண்ணன். பூஞ்சை உடம்பு. குரல் அதைவிட சன்னம்.
சிறகு இதழை அவருக்கு அனுப்பியிருந்தேன். அப்போது என்னுடன் வங்கியில் பணிபுரிந்த வெங்கட்ராமன் ஒரு இலக்கிய ரசிகர். சிறகின் நிரந்தர நன்கொடையாளர். அவரும் அதே லாயிட்ஸ் காலனியில் வேறொரு குடியிருப்பில் இருந்தார்.
“ வல்லிக்கண்ணன் இங்கேதான் இருக்கார்! தெரியுமா? “
அவரது கேள்வி என்னை ஆர்வப்படுத்தியது. அதற்கு முன் வல்லிக்கண்ணனை ஒரு இலக்கிய ஆளுமையாக அறிந்திருந்தேன். தி.க.சி. போல கடிதப் பிரியர் அவர். யார் அவருக்கு இதழோ நூலோ அனுப்பினாலும், உடனே படித்து விட்டு ஒரு அஞ்சலட்டையில் அதற்கு பதில் எழுதி விடுவார். எனக்கும் எழுதினார்!
“ சிறகு இதழ் வந்தது. உள்ளடக்கம் நன்றாக உள்ளது. தொடருங்கள். வாழ்த்துக்கள். “
இவ்வளவுதான்! ஆனால் அதில் கிடைத்த பேருவகை சொல்லி மாளாது!
கைக்கெட்டும் தூரத்தில் ஒரு பழுத்த இலக்கியக்கனி இருந்தால் பறிக்காமல் போகுமோ மனது.
ஒரு மதிய நேரத்தில், அரை நாள் வேலையை முடித்துக் கொண்டு ராயப்பேட்டை கிளையிலிருந்து வல்லிக்கண்ணன் வீடு தேடிப் போனேன். முழித்திருப்பாரா? தூங்கிக் கொண்டிருப்பாரா? வீட்டில் இருப்பாரா? வெளியில் போயிருப்பாரா? இதைப் பற்றியெல்லாம் என்னிடம் கேள்விகளே இல்லை. என் ஒரே நோக்கம் வ.க.வின் வீட்டைத் தெரிந்து கொள்வது தான். பிறிதொரு சமயம் போய் பார்த்துக் கொள்ளலாம். இப்போது வயிறு பசிக்கிறது. அதற்கு ஆகாரம் வேண்டும். இலக்கிய விசாரமெல்லாம் வயிறு குளிர்ந்தால் தான்.
வீட்டைக் கண்டுபிடித்து, கதவைத் தட்டி ஊர்ஜிதம் செய்து கொள்ள நினைத்து, தட்டினேன். திறந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி, “ இது வல்லிக்கண்ணன் சார் வீடுதானே?”
“ஆமாம்! உள்ளே வாங்க! இருக்காரு!”
வேறு வழியில்லாமல் நான் உள்ளே போனேன். வெற்றுடம்புடன் வல்லிக் கண்ணன் தேசலாக வெளியே வந்தார். ஒற்றை அறையே அவரது உலகம். அவரைச் சுற்றி சஞ்சிகைகள், நூல்கள் எனக் கோள்கள்.
ஒரு சிறு மேசை. அதை ஒட்டிய சிறுவர் நாற்காலி. மேசையின் உயரம் அப்படி. அங்கு உட்கார்ந்து தான் வ.க. எழுதுவாராம். எனக்கு இன்னொரு நாற்காலி கொடுத்தார்கள் அந்தப் பெண்மணி.
அறிமுகம் முடிந்தது.. சன்னக் குரலில் பாதி காதில் விழவில்லை. பசி மயக்கம் வேறு. மெல்ல கண்கள் அறையை நோட்டம் விட்டன.அனாவசிய பொருட்கள் இல்லை. அலமாரி கூட இல்லை. வரிசையாக சுவரோரம் புத்தகங்கள் சயனித்துக் கொண்டிருந்தன. ஒரே ஒரு சாளரம். அதுவும் தெரு பார்த்தது. அதனால் வெளிச்சம் போதுமானதாக இருந்தது. முக்கியமாக மின்விசிறியே இல்லை. அவரது பொருளாதார நிலைமை பளிச்சென்று தாக்கியது.
“ தி.க.சி. கடிதம் போட்டிருக்காரு. வாரம் நான் ஒரு கடிதம்.. அவர் ஒரு கடிதம் எழுதிக்குவோம். போய்ல்லாம் பாக்க முடியாதில்லா”
பொருளாதார நிலையை உத்தேசித்து நகலச்சு இதழ் கொண்டு வருவதாக சிறகைப் பற்றி சொன்னேன்.
“ தப்பில்லே! வரணும். அதான் முக்கியம். மொதல்ல கையெழுத்து பிரதியாத்தானே இலக்கிய இதழ்கள் எல்லாம் வந்துட்டிருந்தது”
கவிதைகள் தான் அதிகமாக வருகின்றன. அவையும் உன்னதமாக இல்லை என்றேன்.
“ அது சுலபம். மூணு வரி, நாலு வரி.. இலக்கியத்துக்கு யாரும் இப்ப உழைக்கறதில்லே!”
“ தண்ணீ சாப்பிடறீங்களா?” என்று கேட்டார். மதிய உணவும் காபி நேரமும் இடைப்பட்ட ரெண்டுங்கெட்டான் நேரம். அதனால் நீர் குடித்துவிட்டு மனசு குளிர்ந்து வெளியேறினேன்.
மீண்டும் ஒரு முறை அவரைப் போய் பார்க்க வேண்டும் என்கிற என் ஆசை நிராசையானது. சடுதியில் அவர் மறைந்து விட்டார்!
0.

Series Navigationஅப்பா 2100வரைமுறைகள்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *