மிதிலாவிலாஸ்-21

This entry is part 3 of 24 in the series 7 ஜூன் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

Yaddana_profile_0அபிஜித் ஹோட்டல் கிராண்ட் பேலஸில் எல்லோருக்கும் டின்னர் கொடுத்தான் கம்பெனி போர்ட் ஆப் டைரக்டர்ஸ், அவர்களுடைய குடும்பத்தாருடன், மாதுர் குடும்பம், சோனாலி, சித்தார்த்தா, ஆபீஸ் ஸ்டாப் எல்லோரும் வந்தார்கள். நிஷாவை டின்னருக்கு கட்டாயம் வரச் சொல்லி அபிஜித் தானே சுயமாக போன் செய்து அழைத்தான். சாரதா மாமியும் டாக்டரும் வந்தார்கள்.
“மைதிலி! நான் நிஷாவுடன் கொஞ்சம் பேச வேண்டும். சித்தார்த்தாவைக் கவனித்துக் கொள். அவன் யாரிடமும் அதிகமாக கலந்து பழக மாட்டான்.” அபிஜித் முன்னாடியே சொல்லிவிட்டான்.
மைதிலி தலையை அசைத்தாள்.
டின்னர் தொடங்கிவிட்டது. கூப்பிட்டவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். ஜாலியாக பேசிக் கொண்டு இருந்தார்கள். சோனாலி எல்லோரையும் ஈர்க்கும் அளவுக்கு அழகாக காட்சி தந்தாள்.
அவள் அதிகமாக மேக்கப் பண்ணிக் கொள்ளவில்லை. கூந்தலை அப்படியே விட்டுவிட்டாள். காதுக்கு நீளமான தொங்கட்டானை அணிந்திருந்தாள். கழுத்தில் முத்துமாலை மட்டும் இருந்தது. அவள் நடை, உடை, பாவனை எல்லாமே சிறப்பாக இருந்தன. எடுப்பாக இருந்த அவள் உடல்வாகு எல்லோருக்கும் நடுவில் அவளை சிறப்பாக காட்டியது. முக்கியமாக பெண்களை விட ஆண்களுக்கு இடையே அவள் நல்ல கவனத்தைப் பெற்று விட்டிருந்தாள். எல்லோரும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். பேசாதவர்களை அவள் வலுவில் போய் விசாரித்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி ஏதோ ஒரு சாக்கு வைத்துக் கொண்டு அபிஜித் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாள். மிசெஸ் மாதுர் ஒருத்தி மட்டும் சோனாலியின் நடத்தையைக் கண்டு பொறுமையற்றவளாய் சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள்,
மைதிலி சித்தார்த்தாவின் அருகில் உட்கார்ந்து கொண்டாள். அவள் வருவதைக் கவனித்த சித்தார்த்தா எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து விட்டு வேறு டேபிள் பக்கம் போகப் போனான். அவள் அவன் கையைப் பற்றி உட்கார வைத்து தானும் அமர்ந்து கொண்டாள்.
கடந்த ஒரு வாரமாக சித்தார்த்தா மிசெஸ் மாதுருடன் பிசியாக இருந்தான். மீதி நேரத்தில் அபிஜித்துடன் டிசைன் விஷயமாக பேச்சுக்கள். எப்போதும் யாரோ ஒருத்தருடன் வேலையில் மூழ்கி போயிருந்த சித்தார்த்தாவை மைதிலி எவ்வளவு முயன்றாலும் சந்திக்க முடியவில்லை. மிசெஸ் மாதுர் வீட்டில் இருக்கிறான் என்று தெரிந்த போது அங்கே போனாள். சித்தார்த்தாவின் கழுத்தில் துணியை அளக்கும் டேப் தொங்கிக் கொண்டு இருந்தது. கையில் பேட், பென்சில் இருந்தன. மிசெஸ் மாதுருடன் அவன் டிசைனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.
‘மைதிலி சற்று நேரம் இருந்துவிட்டு வந்துவிட்டாள். அவளுக்கு நாளடைவில் ஒரு விஷயம் புரிந்தது. தான் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவசரப்படக் கூடாது. சித்தார்த்தா எங்கேயும் போய் விடமாட்டான்.
மெள்ள மெள்ளமாக தங்களுடைய வாழ்க்கையின் பிரவாகத்தில் இணைந்து வருகிறான். அபிஜித் அவனை அப்படி கொண்டு வருகிறான்.
மார்கெட்டில் விளம்பரம் போன பிறகு ஆர்டர்ஸ் வருவது அதிகமாகி விட்டது என்று மார்க்கெட்டிங் மேனேஜர் தெரிவித்தார். மிசெஸ் மாதுர் மேலும் பத்து ஆட்களை தைப்பதற்கு அமர்த்திக் கொண்டாள். அவர்களால் கூட வேலையை சமாளிக்க முடியவில்லை. மேலும் ஆட்களை சேர்ந்துக் கொள்ள சொல்லி அபிஜித் அறிவுரை வழங்கினான்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து சித்தார்த்தா கொஞ்சம் ஓய்வாக தென்பட்டான். வேலை அதிகமாக இருந்ததினால் கொஞ்சம் இளைத்தாற்போல் காட்சியளித்தான்.
மேஜையில் அபிஜித், சோனாலி வருவதற்காக இரண்டு நாற்காலிகள் காலியாய் இருந்தன. அந்த இருவரும் வரவில்லை. மைதிலி அவர்களைத் தேடினாள். அபிஜித் தனியறையில் நிஷாவுடன் பேசிக் கொண்டிருந்தான். மாதுர் தம்பதியர் வந்து மைதிலி அருகில் உட்கார்ந்து கொண்டே, “அபிஜித், நிஷா ரூமில் உட்காருவதாகச் சொன்னார்கள். எங்களை இங்கே உட்காரச் சொன்னார்” என்றாள் மிசெஸ் மாதுர்.
“கட்டாயம். வாங்க உட்காருங்க” என்றாள் மைதிலி.
நான்கு பேரும் பேசிக் கொண்டே சாப்பிடத் தொடங்கினார்கள்.
சித்தார்த்தாவுக்கு நடுவில் புரை ஏறிவிட்டது. மூச்சு திணறும் அளவுக்கு இருமல் வந்தது. மைதிலி உடனே எழுந்து கொண்டாள். தண்ணீரைக் குடிக்கச் செய்தாள். புடவைத் தலைப்பால் முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை ஒற்றினாள்.
சித்தார்த்தா அவளிடமிருந்து விலக வேண்டும் என்பது போல் நாற்காலியில் ஒரு பக்கமாக ஒதுங்கினான். அவன் தலையை வருடிக் கொடுத்தாள். இரண்டு கைகளாலும் அவன் முகத்தை அருகில் எடுத்துக் கொண்டு வயிற்றுடன் அழுத்திக் கொண்டாள். “சித்தூ! சித்தூ!” என்று சமாதானப் படுத்தினாள். “பேரர்! சட்டுன்னு தண்ணீர் கொண்டுவா” என்று பெரிதாக குரல் கொடுத்தாள்.
சுற்றிலும் இருந்த மேஜைகளில் உட்கார்ந்து இருந்தவர்கள் கூட சாப்பிடுவதை நிறுத்திவிட்டு தங்களையும் அறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சித்தார்த்தாவை அவள் தன் வயிற்றுடன் அழுத்திக்கொண்டு தோளைச் சுற்றி கையைப் போட்டு நெருக்கமாக இருந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த காட்சி அவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது. மைதிலி யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக பழகியதை அவர்கள் பார்த்தது இல்லை.
பேரர் தண்ணீர் தம்ளருடன் ஓடி வந்தான். மைதிலி சித்தார்த்தாவின் வாயருகில் கொண்டு போன போது அவனே டம்ளரை வாங்கிக் கொண்டு குடித்தான்.
“என்ன நடந்தது ஸ்வீட் பாய்?” என்றபடி சோனாலி வந்தாள்.
“ஒன்றுமில்லை. சித்தார்த்தாவுக்கு புரை ஏறிவிட்டது” என்றால் மிசெஸ் மாதுர்.
தொலைவில் தனி அறையில் அபிஜித் நிஷாவுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “நிஷா! உண்மையைச் சொல்லு. அவரை மனப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாயா?”
நிஷா தலையை உயர்த்தினாள். “உங்கள் தலைமுறையில் எத்தனை பேர் மனம் ஒப்பி திருமணம் செய்து கொண்டு இருப்பார்கள்? சொல்லுங்கள் அங்கிள்.”
“என்னைப் பொறுத்த வரையில் நான் மைதிலியை மனதார விரும்பித்தான் கல்யாணம் செய்து கொண்டேன்.”
“பின்னால் ஒரு போதும் வருத்தப்பட்டுக் கொண்டது இல்லையா?”
“வருத்தப்பட்டது இல்லை. படவும் மாட்டேன்.”
“எப்படி சொல்ல முடியும்?”
“திருமணம் செய்துகொள்ளும் முன் மைதிலியின் தனித்தன்மை என்னவென்று முழுவதுமாக புரிந்துகொண்ட பிறகுதான் பிரபோஸ் செய்தேன். அது என்னுடைய அதிர்ஷ்டம் என்று பின்னால் ருசுவாகி விட்டது.”
“உங்களுக்குள் எந்த அட்ஜெஸ்ட்மென்ட்ஸ் இருந்தது இல்லையா?”
“இல்லை.” திடமாக ஒலித்தது அவன் குரல்.
“உங்களுக்கு குழந்தைகள் இல்லை.”
“ஆனால் அது எங்கள் தவறு இல்லை. அது ஒரு குறையும் இல்லை.”
“……….”
“நான் ஏன் உன்னிடம் இவ்வளவு விவரமாக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் தெரியுமா?” அவன் மேஜை மீது முழங்கையை ஊன்றி நிஷாவின் கண்களுக்குள் பார்த்துக் கொண்டே சொன்னான். “மனிதனின் வாழ்க்கையில் திருமணம் என்பது ரொம்ப முக்கியமான திருப்பம். பின்னால் வரும் எத்தனையோ விஷயங்களுக்கு இது திருப்புமுனையாக இருக்கும். நீ வயது அதிகமான ஒருவருடன் திருமணத்திற்கு தயாராகிறாய். உங்கள் இருவருக்கும் இடையே உண்மையாகவே காதல் மலர்ந்து இருந்தால் நான் மறுக்கப் போவதில்லை.”
“எங்கள் இருவருக்கும் இடையில் காதல் என்ற வார்த்தையே இல்லை.” நிஷா கச்சிதமான குரலில் சொன்னாள்.
அபிஜித் பின்னால் சாய்ந்து கொண்டான். அவளை கூர்ந்து பார்த்தான். “பின்னே அவரை காதலிப்பதாக முன்பு சொன்னாயே?” என்று கேட்டான்.
“எங்க அப்பா அம்மாவின் வாயை மூட வைப்பதற்காக அந்த வார்த்தையை நான் பயன்படுத்தி வருகிறேன். அதைச் சொல்லிவிட்டால் இனி யாரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்,” நிஷா சற்று நிறுத்தினாள்.
அபிஜித் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பின்னே உங்கள் இருவருக்கும் இடையில் இருப்பது என்ன? என்றுதானே கேட்கப் போறீங்க? எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது ஒரு வியாபார ஒப்பந்தம்!”
“என்ன சொல்ல வருகிறாய்?”
“நான் அவருக்கு இருக்கும் சொந்த விவகாரங்களை சரி செய்வதற்கு உதவி செய்யணும். அதற்காக அவர் எனக்கு பணம் தருவார். அந்தப் பணம் என் கைக்கு வந்ததும் நான் அவரை டிவோர்ஸ் செய்துவிட்டு, நான் காதலிக்கும் கிரணை கல்யாணம் செய்து கொள்வேன்.”
“கிரண் என்றால்? உன் கிளாஸ்மேட்! ஒருமுறை அவன் உங்கள் வீட்டுக்கு வந்திருந்த போது உன் அப்பா அவனை அடித்தாரே?”
“கரெக்ட்! அவன்தான்! நான் காதலித்தவனை அப்பா அவமானப் படுத்திய அந்த நிமிடமே என் வீட்டாருக்கும் எனக்கும் உறவு அறுந்து விட்டது. நான் கிரணைத் தவிர யாரையுமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை.”
“இந்த விஷயம் அந்த பெரியவருக்கு தெரியுமா?”
நிஷா குறுக்கே தலையை அசைத்தாள். “தெரியாது.”
“அவர் உனக்கு விவாகரத்து கொடுப்பார் என்ற நம்பிக்கை என்ன?”
“நான் முன்னாடியே அவர் அந்த விதமாக எனக்கு எழுதித் தர வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளேன்.”
“அவர் உனக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றினால்?”
ஒருநிமிடம் யோசித்தவள், “எனக்கு அந்த யோசனை வந்தது. அப்படி மற்றும் அவர் என்னை ஏமாற்றினால்…” இதழ்களை இறுக்கினாள் நிஷா, “அந்த நபர் உயிருடன் இருக்க மாட்டார்.”
அபிஜித் நாற்காலியில் சாய்ந்து நிஷாவையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் கண்முன்னால் வளர்ந்து பெரியவள் ஆன நிஷா! இவ்வளவு கொடூரமான யோசனைகளை செய்யும் நபராக எப்போது மாறினாள்?
அவனுக்கு நிஷாவைப் பார்க்கும் போது கோபம் வரவில்லை. இரக்கம்தான் ஏற்பட்டது. இன்னும் ஐம்பது வருடங்கள் எதிர்கால வாழ்க்கை பூர்ண கும்பமாய் அவள் முன்னால் இருக்கிறது. ஆனால் அவள் தன் வாழ்க்கையை குப்பை காகிதம் போல் கசக்கி தூரப் போடும் எண்ணத்தை வளர்த்து கொண்டிருக்கிறாள். அவரைக் கொன்று விடுவேன் என்று எவ்வளவு சுலபமாகச் சொல்கிறாள்? அந்த நபர் நிஷாவின் எண்ணங்களைக் கண்டுபிடிக்க முடியாத முட்டாளா? அவன் கையில் வாழ்க்கையை ஒரு முறை ஒப்படைத்து விட்டால் திரும்பவும் அந்த முள்வேலியிலிருந்து அவளால் மீண்டு வர முடியுமா?
நிஷாவுக்கு என்ன குறைச்சல்? பார்க்க நன்றாக இருக்கிறாள். படிப்பு, பணம், பெற்றோரின் ஆதரவு எல்லாம் இருந்தும் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளும் யோசனைகளை செய்வானேன்?
“இவ்வளவு ஏன்? நீயும், கிரணும் பதிவுத் திருமணம் செய்துகொண்டு நிம்மதியாக வாழலாம் இல்லையா?”
நிஷா சிரித்தாள். அந்தச் சிரிப்பில் தோல்வியின் சாயல் தெரிந்தது. “அது முடியாது. எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் வாழ்க்கையை எப்படி நடத்துவது? கிரண் படிப்பு இன்னும் முடியவில்லை. நானும் முடிக்கவில்லை. எங்களுக்கு என்று சில செலவுகள் இருக்கு. அவற்றுக்கு பணம் வேண்டும்.”
“இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் கிரணை கல்யாணம் செய்து கொண்டு வேலை தேடிக் கொள்ளலாமே?”
“கிரண் பயந்தாங்குளி. எந்த முடிவையும் எடுக்க மாட்டான். எடுத்தாலும் அதை செயல் படுத்தமாட்டான். அதான் பணத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டேன்.”
“இது ரொம்ப கடினமான விவகாரம்.”
“அதான் நான் இதை சவாலாக எடுத்துக் கொண்டேன்.”
“கிரண் இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டானா?”
“சம்மதிக்காமல் என்ன செய்வான்? பழங்காலத்து சம்பிரதாயங்களைப் பற்றி, ஒழுக்கத்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு மனம்தான் முக்கியம். உடல் இல்லை. ஏற்கனவே இரண்டு சிநேகிதிகளுடன் பழகி உறவு கொண்டாடிவிட்டு, விட்டுவிட்ட கிரணை நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? அவன் ஏன் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டான்? ஆணுக்கொரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம் இருப்பானேன்? எங்களுக்குள் எந்த வேறுபாடும் கிடயாது. அட்ஜெஸ்ட்மென்ட் செய்துக் கொள்வதுதான் முக்கியம். அப்படி அட்ஜெஸ்ட் செய்து கொண்டால்தான் வாழ்க்கையில் சந்தோஷத்தை அடைய முடியும் என்று எங்களுக்கு தெரியும்.”
அபிஜித்துக்கு காதுகளை பொத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அந்த நிமிடம் அவனுக்கு கோபம் ஏற்பட்டது. ஆனால் அது நிஷா மீது இல்லை. அவள் பெற்றோர்கள் மீது. இருப்பது ஒற்றை மகள். அவள் மீது அதிகாரம் செலுத்துவது தம் உரிமை என்று பழங்காலத்து ஆசாமிகள் போல் நடந்து கொண்டார்கள். இப்போ நிஷா தன்னை மட்டுமே இல்லை, தான் காதலித்த கிரணை, பெற்றெடுத்த தாய் தந்தையை எல்லோரையும் கஷ்டங்களில் மூழ்க வைக்கப் போகிறாள். வேகமாக பாய்ந்து கொண்டிருக்கும் இந்த பிரவாகத்திற்கு அணைக்கட்டு போட முயற்சி செய்வது கூட வெள்ளம் வந்த பிறகு அணைக்கட்டு கட்டுவதைப் பற்றி யோசிப்பது போல்தான். இந்த பிரச்சினையிலிருந்து நிஷாவை, அவள் பெற்றோரை மீட்பதற்கான முயற்சி பெரிய அளவில் நடந்தால் தவிர சாத்தியம் இல்லை.
“எக்ஸ்க்யூஸ்மி” குரல் கேட்டது.
அபிஜித் திரும்பி பார்த்தான்.
சோனாலி நின்றிருந்தாள். “நான் உங்களை டிஸ்டர்ப் செய்து விட்டேனா? ஐ ஆம் வெரி சாரி” என்று சொன்னாளே தவிர திரும்பிப் போக வில்லை.
“நோ.. நோ.. சோனாலி! கமான்” நிஷா அழைத்தாள்.
“நான் இன்னும் சாப்பிடவில்லை சர். உங்களுடன் சேர்ந்து சாப்பிடலாமா?” என்றாள்.
“இப்போ என்னவாகி விட்டது. பேச்சில் ஆழ்ந்து போனதில் நாங்களும் இன்னும் பாதி கூட சாப்பிடவில்லை. எங்களுடன் சேர்ந்துகொள்.” நிஷா பேரரை அழைத்து மேலும் ஒரு சாப்பாடு கொண்டு வரச் சொன்னாள்.
“எக்ஸ்க்யூஸ் மி. இப்பொழுதே வருகிறேன். போன் ஒன்று பண்ண வேண்டும்” என்று எழுந்தாள் நிஷா. “அங்கிள்! நான் யாருக்கு போன் செய்யப் போகிறேன் என்று கெஸ் செய்து பாருங்கள். நீங்கள் ஜெயித்தால் நான் உங்களுக்கு நூறு ரூபாய் தருகிறேன். நான் ஜெயித்தால் உங்களிடமிருந்து இருநூறு வசூல் செய்கிறேன். ஓ.கே.” என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.
சோனாலி, அபிஜித் தனியாக ஸ்பெஷல் அறையில் எஞ்சி இருந்தார்கள்.
“சர்! அபிஜித் என்ற பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களை பெயர் சொல்லி அழைக்கலாமா? இல்லை சார் என்று தான் கூப்பிடணுமா?”
“அபிஜித் என்றே அழைக்கலாம்.”
“தாங்க்யூ சர்! சாரி அபிஜித்” என்றாள்.
பேரர் சாப்பாடு தட்டு கொண்டு வந்தான்.
சோனாலி கையை மோவாய்க்கட்டையில் ஊன்றி அபிஜித்தை பார்த்துக் கொண்டிருந்தாள். “இவ்வளவு நல்ல பெயரை உங்களுக்கு யார் வைத்தார்கள்?” என்று கேட்டாள்.
“நான் பிறந்த நட்சித்திரத்திற்கு பொருத்தமாக பஞ்சாங்கத்தைப் பார்த்து ஒரு குடுமி சாஸ்த்ரிகள் வைத்தார்” என்றான் அபிஜித்.
சோனாலி பக்கென்று சிரித்துவிட்டாள்.
அபிஜித் அவள் சிரிப்பை பொருட்படுத்தாமல் சீரியஸ் ஆக சாப்பிடத் தொடங்கினான்.

Series Navigationதொடுவானம் 71. சாவிலும் ஓர் ஆசைவைகறை கவிதைகள் ‘ ஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான் ‘ தொகுப்பை முன் வைத்து…
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *