மாதவன் ஸ்ரீரங்கம்
இதை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனாலும் அதுதான் உண்மை. இந்த வீட்டில் பேய்களின் நடமாட்டம் இருக்கிறது. நடமாட்டம் என்ன நடமாட்டம் பேய்கள் இருக்கின்றன.
பத்துவருடங்களாக நாங்கள் இந்தவீட்டில்தான் குடியிருக்கின்றோம். நாங்கள் என்றால் நானும் கண்பார்வையில்லாத என் மனைவியும் மூன்று வயது மகளும்.
நான் சொந்தமாக கம்பெனி வைத்திருக்கிறேன். பெரிய மண்ணார் அன் கம்பெனி. அதெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை.
நான் வாங்கி விற்கும் கம்பெனி வைத்திருக்கிறேன். இது அதுவென்று இல்லாமல் எதுகிடைத்தாலும் வாங்குவேன். விற்பேன். பொருளுக்கு ஏற்ற கமிஷன்.
சொந்தத்தொழில் என்பதால் நேரம் காலம் எதுவும் கிடையாது. பத்துமணிக்கு ஆபீஸ் சென்று வாங்கவோ விற்கவோ யாரும் வரவில்லையென்றாலும். நல்லதாய் ஒரு வியாபாரம் முடிந்தாலும் மதியம் பூட்டிவிட்டு வந்துவிடுவேன்.
நேற்று அப்படித்தான் பூட்டிவிட்டு வந்துவிட்டேன். நேற்று திருப்தியான வியாபாரம்.
ஒரு நல்லநிலையிலுள்ள வெளிநாட்டு இறக்குமதி கார் வாங்கி விற்றேன்.
வீட்டிற்கு வந்து மனைவியையும் மகளையும்… பெயர் சொல்ல மறந்துவிட்டேன் பாருங்கள். ‘முகிழினி’. பெயர் போலவே பேரழகி என் செல்லமகள்.
இருவரையும் சாப்பிடவைத்து நானும் சாப்பிட்டுவிட்டு இரவு ஏழரை மணிக்கெல்லாம் மாடியிலுள்ள எங்கள் அறைக்கு சென்று படுத்துவிட்டோம்.
தினமும் முகிழினிக்கு ஏதேனும் கதைசொல்லி கிச்சுகிச்சு மூட்டி விளையாடிச் சிரிக்கவைத்து, அவள் சொல்லும் கதையைக் கேட்பதுபோல் பாவனைசெய்து, கட்டியனைத்து தூங்கவைப்போம்.
ஆனால் நேற்றிரவு இவையெதுவும் நடந்தாற்போல நினைவில்லை.
திடீரென்று விழித்துக்கொண்டு பார்த்தால், என் மனைவிதான் என்னை எழுப்பியிருக்கிறாள். மணி பார்த்தேன் பதினொன்று.
மெல்ல அவள் கைதொட்டு என்னவென்று கேட்க நினைத்த என் உதடுகளைத் தேடிப்பிடித்து தன் கைகளால் மூடி என் காதோரம் கிசுகிசுத்தாள்.
” அது என்னங்க சத்தம் “?
அப்போதுதான் எனக்கும் கேட்டது.
… டமால்… டமால்.. என்று கதவை உடைக்கும் சத்தம்.
சில விநாடிகள் நின்றது. இப்போது மீண்டும் அதே சத்தம்.
என் கைகளை இறுக்கிப்பிடித்திருந்த மனைவியின் விரல்களில் வியர்வை பிசுபிசுப்பு.
பாவம் பயந்துபோயிருக்கிறாள்.
பக்கத்தில் முகிழினி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.
” பயப்படாதம்மா. நான் போயி யாருன்னு பார்த்துட்டு வறேன்” என்றபடி நகர்ந்தேன். எனக்கு பயமில்லை குழப்பம்தான்.
சுற்றுப்புறங்களில் ஏதும் வீடுகள் கிடையாது. பக்கத்துவீட்டு எதிர்வீட்டுகாரர்களெல்லாம் வந்து கதவைத் தட்ட வாய்ப்புகளில்லை.
படியிறங்கி கீழே செல்லும்போது எந்த சத்தமும் வரவில்லை. மெல்ல கதவை நெருங்கினேன்.
கதவில் காதுவைத்துக் கேட்டேன்.
இரவின் அமைதியில் என் இதயத்துடிப்பு மட்டும் கேட்டது. பக்கத்து ஜன்னல் கதவைத்திறந்து பார்த்தேன். யாரும் இருப்பதற்கான சுவடேயில்லை. குழப்பத்தோடு திரும்பியவன் தூக்கிவாரிப்போட திடுக்கிட்டு நின்றேன்.
ஹால் வெறிச்சோடியிருந்தது. அங்கிருந்த டிவி பிரிட்ஜ் சோபா சேர்கள் என ஒன்றையும் காணவில்லை. கிச்சனுக்கு ஓடிச்சென்று பார்த்தேன் துப்புறவாக இருந்தது.
அந்த நிமிடம்வரை திருடனாயிருக்குமென்றுதான் நினைத்தேன். அவசரமாக படிகளிலேறி மாடிக்கு சென்றால்..
நல்லவேளை என் மனைவியும் மகளும் பத்திரமாக இருந்தார்கள். ஆனால் இதென்ன, இருவரும் வெறும் தரையில் கிடக்கிறார்கள்?!!!!
அங்கிருந்த கட்டில் மெத்தைகளெல்லாம் என்னாயிற்று ?
முதல் முறையாக எனக்கு அந்த சந்தேகம் வந்தது. ஒருவேளை பேயாக இருக்குமோ? ஆமாம் அதுபேய்தான் என்பதன் நிருபணமாய் அடுத்த சம்பவம் நிகழ்ந்தது. கீழே கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஆனால் பேயால் பூட்டிய கதவைத் திறக்க முடியுமா?
ஏன் முடியாது, துளி சத்தமின்றி வீட்டிலுள்ள சாமான் களையெல்லாம் காணாமல் போக்கிய பேயிற்கு இது பெரிதா என்ன?
என் மனைவி மகளை நெருங்கினேன். முகிழினி தூக்கம் கலைந்துபோய் மலங்க விழித்தாள். கீழே பேச்சுக்குரல் கேட்டது.
என் மனைவியிடம் சென்று ” எதுவும் பேசாதே. எதற்கும் பயப்படாதே. நான் வரும்வரை இங்கிருந்து வெளியே வராதே ” என்று சொல்லி, மாடியிலிருந்த ஸ்டோர் ரூமில் ஒரு மூலையிலிருந்த காலுடைந்த மரமேஜைக்குப் பின்னால் ஒளிந்து உட்காரவைத்தேன்.
அங்கிருந்த தட்டுமுட்டுச் சாமான்கள் மட்டும் அப்படியே இருந்தது.
எனக்கு புழுக்கத்தில் வேர்த்துக்கொட்டியது. முகிழினியை அழைத்துக்கொண்டு மாடி காரிடாருக்கு வந்தேன். அங்கிருந்து பார்த்தால் ஹால் முழுவதும் தெரிந்தது.
சினிமாக்களிலும் கதைகளிலும் சந்தித்த பேய்களை நேரில் பார்த்தபோது என் நியூரான் களில் பல்பு எரிந்தது.
அவர்களில் கிழட்டு தம்பதிகள், அவர்களோடு இளம் தம்பதிகள் மற்றும் ஒரு சிறுவனும் சிறுமியும். அவர்கள் உடல்கள் வெளுத்துக்கிடந்தன. உடைகள் மிக நாகரீகமாக இருந்தன. அவர்களை பேயென்று சொன்னால் யாராலும் நம்பமுடியாது.
அந்த குட்டிப்பேய்களைப் பார்த்தால் எனக்கே பாவமாகத்தானிருக்கிறது. அதிலும் அந்தப்பையன் பெரிய குறும்புக்காரன்போல் தெரிகிறான்.
எனக்குத்தெரிந்தவரை பேயென்றால் வெள்ளையாக வெளிச்சமாக இருக்கும், கால்களிருக்காது. எதிர்பட்டால் படாரென்று பிடரியிலடித்து ரத்தம்கக்கிச்சாவோம் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். முருங்கை மரத்திலோ புளியமரத்திலோ தொங்கிக்கொண்டிருக்கும் என்று படித்திருக்கிறேன்.
ஆனால் இந்தப் பேய்கள் என்னடாவென்றால் பளிச்சென்று உடையுடுத்தி நன்றாக கால்களை நிலத்திலூன்றி நடக்கின்றன. பொருட்களை கைகளால் தொட்டு நகர்த்துகின்றன. இதெல்லாம் எந்த இயற்பியல் விதிப்படி சாத்தியமென்று தெரியவில்லை.
இருந்தும் இவர்கள் சகஜமாக புழங்குவதை பார்த்தால், ரொம்பகாலம் வாழ்ந்து இறந்திருக்கவேண்டும் என்று நினைக்கத்தோன்றுகிறது.
ஆனால் பாவம் பரிதாபம் பார்க்க இது நேரமல்ல. இது எங்கள் வீடு. என் குருட்டு மனைவியும் குட்டி முகிழினியும் பயந்து கிடக்கிறார்கள். கொஞ்சம்போல நானும்தான். முதலில் இவர்களை இங்கிருந்து விரட்டவேண்டும். பார்வைக்கு இந்த பேய்கள் சாத்வீகமாகத்தான்தெரிகின்றன.
போய்விடச்சொன்னால் போய்விடுமென்றே நினைக்கின்றேன். ஆனால் எப்படி சொல்வது ? நல்லவேளை தமிழ்ப்பேய்களாக இருக்கின்றன.
வேற்றுமொழி பேய்களாக இருந்து தமிழ்புரியாத கோபத்தில் குதறிவைக்கும் சாத்தியமுண்டு.
தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் இருந்த இடத்திலிருந்து குரல் கொடுத்தேன்.
” யார் நீங்கள் ? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் ? இது எங்கள் வீடு.”
அவைகளில் யாரும் கண்டுகொள்ளவேயில்லை. எதுவுமே நடக்காததுபோல அவை தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தன.
எனக்குவந்த கோபத்திற்கு அளவேயில்லை. என் வீட்டில் புகுந்துகொண்டு என்ன ஆர்பாட்டம் செய்கின்றன !
நான் இருந்த இடத்திலிருந்த ஒரு கதவை ‘தடார் தடார் ‘ என்று நாலுதரம் தட்டினேன்.
ம்ஹுஹும் ஒன்றும் பலனில்லை.
ஒருவேளை இந்த பேய்களுக்கு காதுகேட்காதோ என்னவோ ! யார்கண்டது ?
முகிழினி என்னை பார்த்த பார்வையில் ‘அய்யோ பாவம்’ இருந்தது.
இப்போது அந்த சிறுவனும் சிறுமியும் மேலேறி எனக்கு அருகிலிருந்த அறைக்குள் நுழைந்தன. நான் முடிவு செய்துவிட்டேன். இந்த குட்டிப்பிசாசுகளை பயமுறுத்திவிட்டால் மொத்தப்பேய்களும் ஓடிவிடுமல்லவா?
சரியாக அவர்கள் வெளியே வரும்போது சத்தம்போட்டு பயமுறுத்தும் முடிவில் அறை வாசலில் காத்திருந்தேன்..
காத்திருந்தேன்.. காத்திருந்தேன்..
வெளியே பயங்கரமான இடியுடன் மழைபெய்யத் தொடங்கியது.
பெரிய அலறலோடு சிறுவனும் சிறுமியும் வெளியே ஓடிவந்தபோது நான்தான் பீதியடைந்தேன்.
நேராகச்சென்று இரண்டில் ஒன்று பார்த்துவிடலாமென்று நான் முகிழினியை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். எதிரில் அந்த சிறுவன் வந்துநின்றான்.
கொஞ்சம்கூட இமையசைக்காமல் என்னையே நேராக உற்றுப்பார்த்தான். என் முழங்கால்கள் லேசாக நடுங்கின.
நான் பயத்தை காட்டிக்கொள்ளாமல் மிடுக்காக கேட்டேன்.
” இங்க என்ன பண்றீங்க “?
” விளையாடிகிட்டிருக்கேன் “.
” இது எங்க வீடு தெரியுமா “?
” so what “?
” ஹோ உனக்கு இங்லிஷ் கூட தெரியுமா? மொதல்ல எல்லாரும் இங்கிருந்து போயிடுங்க.”
” வெளியதான் மழை பெய்யுதே !”
” ok அப்ப மழைவிட்டதும் போயிடுவிங்களா ?”
” தயவுசெஞ்சு என்னைக்கொஞ்சம் விளையாட விடுங்களேன் ப்ளீஸ்”.
இப்படியே உரையாடல் செல்ல, அந்த இளம்பெண் மேலே வந்துவிட்டாள். சிறுவனின் அம்மா என்று நினைக்கின்றேன்.
பளாரென்று அவனை அறைந்து ” இடியட். டாடிபேச்சை கேட்காம எதிர்த்து பேச எங்க கத்துக்கிட்ட? கீழே போய் சாப்பிடு.” என அவனை விரட்டிவிட்டு, இங்கு முழுதாக நான் நின்றிருக்கவேயில்லை என்பதுபோல நகர்ந்து சென்றுவிட்டாள்.
அப்படியென்றால் அவன் இத்தனைநேரமும் பேசியது என்னோடு இல்லையா!!!??
எல்லைகடந்த குழப்பங்களோடு என் மனைவிருந்த அறைக்குள் முகிழினியோடு நுழைந்தேன்.
அவள் அழுதுகொண்டிருந்தாள்.
முகிழினியும் புரியாமல் அழத்தொடங்கினாள்.
மெல்ல நெருங்கி என் மனைவியை அனைத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டேன்.
“பயப்படாதம்மா.. விடிஞ்சதும் போயி நாம மந்திரவாதிய கூட்டிட்டுவந்து இதுங்களையெல்லாம் விரட்டிடுவோம்.”
அவள் பெரிதாக வெடித்துகதறி முகிழினியை அனைத்துக்கொண்டு அழுதாள்.
என்ன செய்வதென்று தெரியாமல் எதிரில் சாய்த்துவைத்திருந்த பெரிய நிலைக்கண்ணாடியை எதேச்சையாக பார்த்தேன்.
ஏனோ அதில் எங்கள் உருவங்கள் தெரியவேயில்லை
- இஸ்லாமுக்கு சீர்திருத்தம் தேவை இல்லை. ஏன்?
- தொடுவானம் 72. கற்பாறைக் கிராமத்தில் கலவரம்
- இங்கே எதற்காக – ஜெயபாரதியின் திரையுலக வாழ்க்கைக் குறிப்புகள்
- முகநூல்
- தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்
- தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்
- உதவும் கரங்கள்
- ஒர் இரவு
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -10
- பொறி
- மூன்றாம் குரங்கு
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- எழுதவிரும்பும் குறிப்புகள் நயப்புரை, மதிப்பீடு, விமர்சனம் முதலான பதிவுகளில் வாசிப்பு அனுபவம் வழங்கும் எண்ணப்பகிர்வு
- இளைய தலைமுறை மறந்துபோன சோத்துப்பாறையும்-ஊன்சோறும்
- விழிப்பு
- நான் அவன் தான்
- யானையின் மீது சவாரி செய்யும் தேசம்
- திரை விமர்சனம் – காக்கா முட்டை
- மிதிலாவிலாஸ்-22
- கல்பீடம்
- ஒரு நிமிடக்கதை – நிம்மி
- தெருக்கூத்து
- பூகோளப் பருவ மாறுதலின் எதிர்காலக் கணிப்பீடுகளை விளக்கமாக இப்போது நாசா வெளியிடுகிறது