தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்

This entry is part 5 of 23 in the series 14 ஜூன் 2015

தீண்டத்தகாதவன் – ரஸ்கின் பாண்ட்
[ ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் – வளவ.துரையன் ]

our-trees-still-grow-in-dehra-original-imad99cczb5uyzdpதரையைப் பெருக்கும் பையன் வந்து வாசல் வழியில் இருந்த தரை விரிப்பில் தண்ணீரை விசிறியடிக்கக் காற்று இப்போது குளிர்ச்சியாக வீசத் தொடங்கியது.
நான் என் படுக்கையின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாகத் தெருவை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தேன். மதிய வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்த புழுதி மண்ணாலான தெருவைப் பார்த்துக் கொண்டே யோசனை செய்து கொண்டிருந்தேன். ஒரு கார் வேகமாகப் போக புழுதி புரண்டெழுந்தது.
என் அப்பா மலேரியாவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் தெருவுக்கு அப்பக்கம் இருப்பவர்கள்தான் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுடன் இருக்கவும் படுத்துத் தூங்கவும் நேர்ந்தது. ஆனால் உணவுண்ணும் போது விலகி இருந்தேன். நான் அவர்களை விரும்பவில்லை. அவர்களும் என்னை விரும்பவில்லை.
சுமார் ஒரு வாரமாகக் காட்டிற்கு ஓரமாக புறநகர்ப் பகுதியில் சிவப்புக்கற்களால் கட்டப்பட்ட பங்களாவில் இருந்து கொண்டிருக்கிறேன். இரவில் எனக்குப் பாதுகாப்பாகப் பெருக்கும் பையன்தான் வந்து சமையலறையில் வந்துபடுத்துக் கொள்வான். .அவன் துணையைத் தவிர சுற்றுப்புறத்தாரும் குழந்தைகளும் இருந்தனர். நான் அவர்களை விரும்ப வில்லை அவர்களும் என்னை விரும்பவில்லை.
அவர்களுடைய அம்மா “பெருக்கும் அந்தப் பையனுடன் விளையாடக் கூடாது. அவன் சுத்தமாக இல்லை, அவனைத் தொடாதீர்கள்,அவன் வேலையாள் என்பது நினைவிருக்கட்டும். நீ வந்து எங்கள் குழந்தைகளுடன்விளையாடு “ என்று கூறுவாள்.
நான் அந்தப் பையனுடனோ, அவர்களுடைய குழந்தைகளுடனோ விளையாட விரும்பவில்லை. வாரம் முழுதும் என் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு என் அப்பாவின் வருகைக்காகக் காத்திருந்தேன்.
அந்தப் பெருக்கும் பையன் நாள் முழுதும் வீட்டிற்கும் நீர்த் தேக்கத்தொட்டிக்கும் இடையில், முழங்காலில் பட்டு ஒலி எழுப்பும் வாளியுடன் சட சடவென்று போய் வருவான்.
முன்னும் பின்னுமாகப் போகும் போது நட்புடன் கூடிய பெரிய புன்சிரிப்பைச் சிந்துவான். நான் அவனைப் பார்த்து முகம் சுளிப்பேன்.
அவன் ஏறக்குறைய என்னைப் போலவே பத்து வயது உடையவன். ஒட்ட வெட்டப்பட்ட முடியுடன், வெள்ளை வெளேரென்ற பற்களுடன், அழுக்கான பாதங்கள், கைகள் முகமென இருந்தான் . பழைய காக்கி டிராயர் மட்டுமே அவனுடைய பழுப்பு நிற உடம்பின் மேல் இருந்தது..
ஒவ்வொரு முறையும் நீர்த் தேக்கத் தொட்டிக்கு அவன் போய் வரும்போது குளித்து விடுவான். கால் முதல் பாதம் வரை தண்ணீர் சொட்டச் சொட்ட வருவான். என் இருப்பிடத்துக் கீழேதான் அந்தத் தொட்டி இருந்தது. அங்குதான் தோட்டவேலை செய்பவர், தண்ணீர் கொண்டு வருபவர்,சமையல்காரர், பெருக்குபவர், ஆயாக்கள், அவர்களுடைய குழந்தைகள் எல்லாரும் கூடுவார்கள். நான் ஒரு முதலாளியின் மகனாக இருப்பதால் வேலையாள்களின் குழந்தைகளுடன் விளையாடக் கூடாது என்ற வழக்கம் இருந்தது.
ஆனால் நான் அடுத்த முதலாளிகளின் குழந்தைகளுடனும் விளையாடக் கூடாது என்ற முடிவில் இருந்தேன். நான் அவர்களை விரும்பவில்லை, அவர்களும் என்னை விரும்ப வில்லை.
நான் ஜன்னல் வழியாகப் பூச்சிகள் சத்தத்துடன் பறப்பதையும், மேலே தராய்களின் மீது பல்லிகள் ஓடுவதையும், காற்றில் உதிர்ந்த பூவின் இதழ்கள் புரண்டோடுவதையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
பெருக்குபவன் வந்து புன்னகைத்தான். விளையாட்டாகச் ‘ சல்யூட்’ அடித்தான். அவன் கண்களைத் தவிர்த்தேன். “ போ, போ “ என விரட்டினேன்.
அவன் சமையலறைக்குப் போனான்.
நான் எழுந்து அறையைக் கடந்து, சூரிய ஒளியைத் தவிர்ப்பதற்காகத் தொப்பியை எடுக்கப் போனேன்.
மரவட்டை ஒன்று சுவரை விட்டிறங்கித் தரைக்கு வந்தது.
நான் அலறி அடித்துக் கொண்டு படுக்கையின் மீது குதித்து உதவிக்குச் சத்தமிட்டேன்.
அந்தப் பையன் விரைவாக ஓடிவந்தான்.
படுக்கையின் மீது இருந்த என்னையும், தரையின் மீது இருந்த மரவட்டையையும் பார்த்தான். என் புத்தக அலமாரியிலிருந்து ஒரு பெரிய புத்தகத்தை எடுத்து அதை ஓங்கி அடித்தான்.
நான் படுக்கையின் மீதே பயத்துடன், நடுங்கிக் கொண்டிருந்தேன்.
அவன் பற்கள் வெளியே தெரியுமாறு என்னைப் பார்த்துச் சிரித்தான். நான் அவமானத்தினால் முகம் சிவந்து “ வெளியே போ “ எனக் கத்தினேன்.
என்னால் தொப்பியைப் போய் எடுக்க முடியவில்லை. படுக்கையில் உட்கார்ந்து கொண்டு அப்பாவின் வருகைக்குக் காத்திருந்தேன்.
என் காதருகில் கொசு வந்து ரீங்காரித்தது.அதை அடிக்கப் போய் தவறிவிட, அது அலங்கரித்துக் கொள்ளும் மேசையின் பின்னால் சென்று விட்டது
அதுதான் என் அப்பாவுக்கு மலேரியா வரக் காரணமான கொசு என்றும், இப்போது எனக்கும் வரவழைக்க முயற்சி செய்கிறது என்றும் நினைத்தேன்.
பக்கத்து வீட்டுப் பெண்மணி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சுற்றுச் சுவரைத் தாண்டிச் செல்வது ஜன்னல் வழியேதெரிந்தது. அவளை முறைத்துப் பார்த்தேன்.
பெருக்கும் பையன் கையில் வாளியுடன் பல்லிளித்துக் கொண்டு சென்றான். நான் இரவில் விளக்குகளை எரியவிட்டுப் படுக்கையில் படிக்க முயன்றேன்.புத்தகங்கள் என் மனக்கவலையைத் தணிக்கவில்லை.
பெருக்கும் பையன் வெளியில் செல்வதற்காக ஜன்னல்களை ச் சாத்திக் கதவைத் தாளிடும் போது ‘ ஏதாவது வேலை இருக்கிறதா ‘ என்று கேட்டான்.
நான் ஒன்றுமில்லை எனத் தலையசைத்தேன்.
அவன் விளக்கை அணைத்துவிட்டு அவனுடைய தங்குமிடத்திற்குச் சென்றான்.
வெளியே ஒரே இருட்டாக இருந்தது. அவனது அறையின் கதவில் இருந்த சந்து வழியாக வெளிச்சம் சிறிது வந்தது.அதுவும் மறைந்து போனது
அக்கம் பக்கத்தாருடன் போய் தங்கிக் கொள்ளலாமா என எண்ணத் தொடங்கினேன். எதையோ எதிர்பார்ப்பது போன்ற அமைதியான இருட்டு பயமுறுத்தியது.
ஜன்னலுக்கு வெளியே ஒரு வௌவ்வால் பறந்து போனது.எங்கோ ஓர் ஆந்தை அலறியது. ஒருநாய் குரைத்தது. பங்களாவிற்கு வேளியே இருந்த காட்டினுள் ஒரு குள்ள நரி மறைந்துகொண்டு கேலியாக ஊளையிடுவதாக உணர்ந்தேன். ஆனால் அசைவற்றஅந்த ஆழ்ந்த அமைதியை எதுவும் குலைக்கவில்லை.
உலர்ந்த காற்று வீசியது.அது சல சலவென்ற ஒலியுடன் மரங்களை அசைத்தது அந்த ஓசை உலர்ந்த சருகுகள் மற்றும் குச்சிகள் மீது ஒரு பாம்பு நழுவிச் செல்வது போல என்னை நினைக்க வைத்தது. தூங்குகின்ற ஒருபையனை நல்ல பாம்பு கடித்து விட்டதாக நீண்ட நாள்களுக்கு முன் கேட்ட கதை என் நினைவிற்கு வந்தது
என்னால் தூங்க முடியவில்லை. என் அப்பாவைக் காண ஏங்கினேன்.
ஜன்னல் கதவுகள் ஓசை எழுப்பின. அறைக் கதவுகள் ‘கிறீச்’ எனச் சத்தமிட்டன. அது பேய்களின் இரவாக இருந்தது.
பேய்கள்………………..
கடவுளே, நான் ஏன் அவற்றை நினைக்கிறேன்.
ஓ, கடவுளே; அதோ, குளியலறைப் பக்கம் நிற்பது……………………என் அப்பா…; மலேரியா நோயினால் இறந்துவிட்ட என் அப்பா என்னைக் காண வந்துள்ளார். துள்ளி எழுந்து விளக்கைப் போட்டேன். அறை வெளிச்சமானது. மிகுந்த களைப்புடன் படுக்கையில் விழுந்தேன். என் இரவு உடை வியர்வையில் நனைந்து போனது.
நான் பார்த்த அது என் அப்பா இல்லை. குளியலறைக் கதவில் தொங்கிக் கொண்டிருந்த அவரது இரவு உடைதான் அது. அது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவில்லை.
நான் இப்போது விளக்கை அணைத்தேன்.
வெளியில் கேட்ட சிறு சத்தம் நெருங்கி வருவது போல் இருந்ததது. மரவட்டை, வவ்வால், நல்ல பாம்பு, தூங்கும் பையன் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தன. தலைவரை போர்வையால் இழுத்து மூடிக் கொண்டேன். நானும் எதையும் பார்க்கவில்லை. என்னையும் எதுவும் பார்க்க முடியாது.
நிலவிய ஆழ்ந்த அமைதியை ஓர் இடி முழக்கம் கலைத்தது. பிளவு பட்ட கவை போல மின்னல் வெளிச்சக் கொடியாய் வானத்தில் ஓடியது.
அது ஒரு மரத்தையும், எதிர் வீட்டின் சாயலையும் பொன் நிறத்தில் மின்னும் அளவிற்கு நெருக்கமாகக் காட்டியது.
நான் படுக்கையில் மீதிருந்த துணிகளுக்கு அடியில் புதைந்து போனேன். தலையணையை எடுத்துக் காதின் மீது சேர்த்து வைத்துக் கொண்டேன்.
ஆனால் அடுத்து வந்த இடி நான் இதுவரை கேட்காத அளவிற்கு இருந்தது. நான் படுக்கையிலிருந்து குதித்தேன் என்னால் நிற்க முடிய வில்லை. பெருக்கும் பையனின் அறைக்குப் பாய்ந்து சென்றேன்.
அந்தப் பையன் தரையில் உட்கார்ந்திருந்தான்.
” என்ன ஆயிற்று “ என்றவன் கேட்டான்.
அப்போது மின்னிய மின்னலின் வெளிச்சத்தில் அவன் பற்களும் கண்களும் பளிச்சிட்டன. அந்த இருட்டில் அவன் மங்கலாகத் தெரிந்தான்.
” எனக்குப் பயமாக இருக்கிறது “என்று கூறினேன்.
நான் அவனை நோக்கிச் சென்று அவனது குளிர்ந்த தோள்களை என் கைகளால் தொட்டேன்.
” இங்கேயே தங்குங்கள், நானும் பயந்திருக்கிறேன் “ என்று அவன் சொன்னான்.
சுவரில் சாய்ந்து உட்கார்ந்தேன். பக்கத்தில் தீண்டத்தகாத, சமூகத்தால் நிராகரிக்கப்பட்டவன்…………………..
இடியும் மின்னலும் நின்று போய் மழை பெய்யத் தொடங்கியது. மேடு பள்ளங்களாலானத் தகடுகளால் அமைந்த மேற்கூரையில் அது தாளமிட்டுக் கொண்டிருந்தது.
“மழைக் காலம் தொடங்கி விட்டது.” வெளியில் கவனித்த அவன் என் பக்கம் திரும்பிச் சொன்னான். இருட்டை நோக்கி அவன் சத்தமாகச் சிரித்தான். நானும் மெல்லச் சிரித்தேன்.
ஆனால் நான் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக இருந்தேன். நனைந்த பூமியின் மணம் மேற்சாளரங்களின் வழியாய் வீச மழை இன்னும் அதிகமாகப் பெய்யத் தொடங்கியது..
[ இது ‘ ரஸ்கின் பாண்ட் ‘ அவரின் பதினாறாவது வயதில் எழுதியது ]

[ரஸ்கின் பாண்ட்டின் Our Trees still Grow in Dehra எனும் தொகுப்பில் உள்ள ‘ ‘Untouchable’ எனும் கதை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வெளியீடு: Penguin books India Pvt. Ltd, 11 Community centre,Panchsheel Park, New Delhi. 110 017, India ]
Ruskin-Bond ’ ரஸ்கின்பாண்ட் ‘
1934—இல் இமாசலப் பிரதேசத்தில் கௌலியில் ரஸ்கின் பாண்ட் பிறந்தார். குஜராத்தின் ஜாம்நகரிலும்,டேராடூனிலும், ஷிம்லாவிலும் வளர்ந்தார். Room on the roof எனும் தன் முதல் நாவலை பதினேழாவது வயதில் எழுதினார். 1957—இல் ”ஜான் லியுலைன் ரைச்” நினைவுப் பரிசைப் பெற்றார். அதன் பிறகு முன்னூறு சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் எழுதினார்.
குழந்தைகளுக்கான முப்பது நூல்கள் எழுதி உள்ளார். தன் சுயசரிதையை இரண்டு பாகங்களாக எழுதி உள்ளார். 1992—இல் அவரின் ஆங்கில எழுத்திற்காக அவருக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப் பட்டது. 1999—இல் அவர் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

Series Navigationமுகநூல்தமிழின் முதல் நூலான தொல்காப்பியத்தை உலக அளவில் பரப்பும் முயற்சி தொல்காப்பிய மன்றம் நோக்கமும் செயல்பாடுகளும்
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ” தீண்டத்தகாதவன் ” மொழிபெயர்ப்புச் சிறுகதை சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் வளவ. துரையன் அவர்களே…டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *