மிதிலாவிலாஸ்-22

This entry is part 19 of 23 in the series 14 ஜூன் 2015

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com

sulochanaraniமறுநாள் மாலை, மைதிலி சோபாவில் உட்கார்ந்து முதல் நாள் இரவு டின்னரில் போட்டோகிராபர் எடுத்த போட்டோக்களை வரிசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். கம்பெனி சார்பில் மீட்டிங்கோ, டின்னரோ, வேறு ஏதாவது விழாவோ நடந்தால் அபிஜித் பைலில் வைப்பதற்காக ஸ்டாப் போட்டோகிராபரைக் கொண்டு போட்டோ எடுக்க வைப்பான். சற்று முன்தான் கவரைக் கொடுத்துவிட்டு போனான் போட்டோகிராபர்.
மைதிலியின் கண்கள் சித்தார்த்தாவுக்காக தேடிக் கொண்டிருந்தன. ஒரு போட்டோவில் அபிஜித் அவன் தோளில் கையை பதித்து யாருக்கோ அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தான். இன்னொரு போட்டோவில் மைதிலி நடுவில் இருக்க இருபுறமும் சித்தார்த்தாவும், அபிஜித்தும் இருந்தார்கள். சித்தார்த்தா அன்று ஆஸ்பத்ரிக்கு தான் வாங்கிச் சென்ற உடைகளைத்தான் போட்டுக் கொண்டிருந்தான். அதற்கு முன்னால் விழா நடந்த போதும் அதையே போட்டிருந்தான்.
மைதிலி தானும், அபிஜித், சித்தார்த்தா சேர்ந்து இருந்த போட்டோவை எடுத்து தனியாக வைத்தாள். அந்த போட்டோவை எத்தனை நேரம் பார்த்தாலும் மனம் நிறையவில்லை. அந்த நிமிடம் இந்த உலகமே அழகான சரோவரமாக தோன்றியது.
அபிஜித்திடம் சித்தார்த்தாவின் விஷயம் சொல்லிவிட வேண்டும் என்று அவள் எந்த அளவுக்கு தவிக்கிறாளோ அந்த அளவுக்கு தாமதம் ஆகிக் கொண்டிருந்தது. புதிய ஆடைகளை மார்கெட்டில் ரிலீஸ் பண்ணும் மும்மரத்தில், அந்த ஏற்பாடுகளில் அபிஜித்துக்கு ஒய்வு இருக்கவில்லை. புதிதாக கைப்பற்றி இருந்த பார்மாஸ்யூடிகல் கம்பெனியிலும் வேலை அதிகமாக இருந்தது. மைதிலி பெருமூச்சு விட்டுக் கொண்டாள். பர்சனல் விஷயம் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு என்று ஒரு தனியான நேரம் வேண்டும். தான் ஒருத்தி மட்டுமே இந்த சந்தோஷத்தை அனுபவித்து வருவது அபிஜித்தை ஏமாற்றுவதுபோல் வேதனையாக இருந்தது.
அதற்குள் போன் ஒலித்தது. பக்கத்திலேயே இருந்த போனை எடுத்தாள் மைதிலி. மிசெஸ் மாதுர் பண்ணி இருந்தாள்.
“போட்டோக்கள் வந்தது. பார்த்தாயா மைதிலி?”
“இப்பொழுது தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
“அதில் சோனாலி இருந்த போட்டோக்கள் பார்த்தாயா?”
“பார்த்தேன். நிறைய போட்டோக்களில் இருக்கிறாள். உண்மையைச் சொல்லணும் என்றால் அன்றைக்கு சென்டர் ஆப் அட்ராக்ஷன் அவள்தான்.”
“சோனாலி, அபிஜித் தனி அறையில் இருந்த போட்டோவை பார்த்தாயா?”
“பார்த்தேனே.” எல்லா போட்டோக்களையும் பார்த்து இருந்தாலும் மைதிலிக்கு அந்த போட்டோ தனிப்பட்ட முறையில் நினைவு இருக்கவில்லை.
“இன்னொருமுறை அதை எடு.” மிசெஸ் மாதுர் சொன்னாள்.
“எதுக்கு?” மைதிலி தேடி அதை எடுத்தாள்.
அழகான மேஜைவிரிப்பு இருந்த வட்டமான மேஜையின் நடுவில் வேலைபாடு செய்திருந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் இருந்தது. மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சோனாலி, அபிஜித் எதிரெதிரே உட்கார்ந்து இருந்தார்கள்.
அபிஜித் இரண்டு உள்ளங்கைகளையும் கோர்த்து முகவாய்க் கட்டையின் மீது வைத்துக் கொண்டு லயிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். சோனாலி மேஜை மீது சற்று குனிந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அழகான கூந்தல் அவளுடைய கன்னத்தை பாதி மறைத்துக் கொண்டிருந்தது. அறையில் நிலவிய மங்கலான வெளிச்சம், இருவர் மட்டுமே உட்கார்ந்திருந்த அந்த தனிமை, போட்டோகிராபர் தனிப்பட்ட சிரத்தையுடன் எடுத்தது போல் இருந்தது.
“பார்த்தாயா?”
“ஊம்” என்றாள்.
“சோனாலி அங்கே எதற்காக போக வேண்டும்? நிஷாவும், அபிஜித்தும் அங்கே பேசிக் கொண்டிருந்த போது சோனாலி வேண்டுமென்றே அங்கே சென்று அங்கேயே சாப்பிட்டு இருக்கிறாள்.”
மைதிலி கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போ என்னவாகி விட்டது என்று அந்தம்மாளுக்கு வேதனை!
“மைதிலி! நான் உன்னை எச்சரிக்கிறேன். சோனாலி விஷயத்தில் நீ ஜாக்கிரதையாக இருக்கணும். சோனாலி ரொம்ப பாஸ்ட். அபிஜித்துடன் அவள் உரிமையாய் பழகுவது எனக்குப் பிடிக்கவில்லை.”
மைதிலி சிரித்துவிட்டாள். “மிசெஸ் மாதுர்! இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கும் பயந்து கொண்டிருந்தால் உலகத்தில் நம்மால் வாழ முடியாது.”
“சில விஷயங்களில் கவனமாக இருக்கவில்லை என்றாலும் வாழ முடியாது. எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ யாருக்கு தெரியும்? யாருடைய தலையில் எந்த வேண்டாத யோசனைகள் வருமோ நமக்கு எப்படி தெரியும்?”
“சரி, அபிஜித்திடம் சொல்கிறேன்.”
“அவனிடம் சொல்வது முக்கியம் இல்லை. நீ தான் ஜாக்கிரதையாக இருக்கணும். உனக்குத் தெரியாதடி பெண்ணே! இந்த உலகில் பிசினெஸில் வெற்றிபெற்ற, நாற்பது வயது கடந்த நபருக்கு மனைவியிடம் ஈர்ப்பு குறைவாகவும், மற்ற பெண்களிடம் அதிகமாகவும் இருக்கும். அது ரொம்ப ஆபத்தானது.”
மைதிலி திரும்பவும் சிரித்தாள். “இந்த செய்தியைக் கூட அபிஜித்திடம் சொல்லட்டுமா?”
“உன்னை கவனமாக இருக்கச் சொல்லி நான் எச்சரித்துக் கொண்டிருத்தால் அவனிடம் சொல்லட்டுமா என்று கேட்கிறாயே?” அந்தம்மாள் புலம்பினாள்.
“மிசெஸ் மாதுர்! நீங்க சொன்ன ஆபத்துகள் அபிஜித்துக்கு முப்பது வயது ஆன போதே நான் சந்தித்து இருக்கிறேன். அந்த பிரச்சினை எல்லாம் அவனுடையது தான். எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை. பயமும் இல்லை.” வாய் விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது அபிஜித் வந்து விட்டான்.
“என்ன? எந்த விஷயத்தில் உனக்கு பயம் இல்லை என்று சொல்கிறாய்?” என்றான்.
“மிசெஸ் மாதுர் போனில் இருக்கிறாள்.”
“நான் அவளிடம் கொஞ்சம் பேசணும்.” அவன் போனை எடுத்துக் கொண்டு உடைகளை தயாரிப்பதில் எடுத்துக்கொள்ள வேண்டிய கவனத்தைப் பற்றி சொன்னான், “மிசெஸ் மாதுர்! இன்னொரு மாடலையும் நீங்கள் பார்த்து வைக்கணும். சோனாலி ஒருத்தி மட்டும்தான் என்றால் மக்களுக்கு சலிப்பு ஏற்படலாம்” என்று போனை வைத்துவிட்டான்.
மைதிலி சொனாலியும், அவனும் இருந்த போட்டோவை காண்பித்துவிட்டு, “ரொம்ப நன்றாக இருக்கு இல்லையா?” என்றாள்.
”ஊம்.” அவன் அதை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு அவள் அருகில் உட்கார்ந்து கொண்டே, “மைதிலி! நாளை மறுநாள் நாம் சிங்கப்பூர் போகிறோம். இதோ டிக்கெட்டுகள்” என்று ப்ரீப்கேஸை திறந்து கொடுத்தான்.
அதுவரையில் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருந்த மைதிலியின் முகம் திகைத்துப் போனாற்போல் மாறியது.
அபிஜித் போட்டோக்களை டீபாய் மீது தள்ளி வைத்துவிட்டு சோபாவில் கால்களை தூக்கி வைத்துக் கொண்டு அவள் மடியில் தலையை வைத்து படுத்தவன் கண்களை மூடிகொண்டான்.
“வாழ்க்கை ரொம்ப பிசியாகி விட்டது. கொஞ்சம் ஒய்வு வேண்டும். அதான் சிங்கப்பூர் போகிறோம்” என்றான்.
“இத்தனை வேலைகளை வைத்துகொண்டு எப்படி போவது?” என்றாள் மைதிலி.
“வேலை என்ன வேலை? எல்லோரிடமும் பொறுப்பை ஒப்படைத்து விட்டேன். இதைவிட அதிகமாக வேலைகள் இருக்கும் போது கூட நாம் போயிருக்கிறோம்.”
மைதிலி அவன் தலையை வருடிக் கொண்டிருந்தாள். சித்தார்த்தாவின் விஷயம் அபிஜிதுக்கு தெரிவிக்காமல் ஒவ்வொரு நாளும் கழிய கழிய தான் அவனை ஏமாற்றிக் கொண்டிருப்பது போல் இருந்தது.
“நான் வரும்போது மிசெஸ் மாதுருடன் எனக்கு பயம் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாயே? என்ன விஷயம்?” என்று கேட்டான்.
மைதிலி முறுவலுடன் அந்தம்மாள் எச்சரித்த விஷயத்தைச் சொன்னாள்.
“ஓ காட்!” என்றான். அதற்குள் திரும்பவும் போன் ஒலித்தது. மைதிலி எடுத்தாள். சொனாலிதான்.
“அடுத்த ஞாயிறு எங்கள் வீட்டில் லஞ்ச். பேமிலி நண்பர்கள் வருகிறார்கள். நீங்களும், சாரும் வரவேண்டும்.”
மைதிலி ரிசீவரை பொத்திவிட்டு அபிஜித்திடம் விஷயத்தைச் சொன்னாள். “முடியாது என்று சொல்லிவிடு” என்றான். “அவருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வர முடியாது என்று சொல்லச் சொன்னார்” என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.
டின்னர் டேபிள் அருகில் அவனும் சோனாலியும் இருந்த போட்டோவைக் காண்பித்தாள் மைதிலி. “இதைப் பார்த்துவிட்டுத்தான் அந்தம்மாள் என்னை பயமுறுத்திக் கொண்டிருதாள்” என்றாள்.
“ஊம்!” அந்த பேச்சை நிறுத்து என்பது போல் அவன் கண்ணாலேயே கடிந்து கொண்டான். போட்டோவை பார்த்துவிட்டு “நல்ல போட்டோஜெனிக் பேஸ். ஷி ஈஸ் யங் அண்ட் பிரைட்!” என்றான்.
“புத்திசாலி என்பதுடன் நன்றாக படித்திருக்கிறாள்” என்றாள் மைதிலி.
“இந்த காலத்து மாடல்களுக்கு இந்த தகுதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.” அவன் போட்டோவை டீபாய் மீது வைத்துக் கொண்டே, “சாரதா மாமியுடன் பேசினேன். சித்தார்த்தாவுக்கு அவர்கள் வீட்டில் அறையைக் கொடுப்பது மட்டுமே இல்லை. அவனை பேயிங் கெஸ்ட் ஆக வைத்துக் கொண்டு கவனமாக பார்த்துக் கொள்வதாகச் சொன்னாள்.”
“நிஜமாகவா?” மைதிலி குனிந்து அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்தாள். “தாங்க்யூ அபீ!” என்று அவள் எழுந்துகொள்ள போகும் போது கையை அவள் தலைமீது வைத்து நிறுத்தினான்.
“தாங்க்ஸ் சொல்கிறாயா? இதில் நான் உனக்கு பர்சனலாக செய்த உதவி என்ன இருக்கிறது? சித்தார்த்தாவின் தேவை நம் கம்பெனிக்கு இருக்கிறது. நாம் அவனுக்கு சும்மாவே உதவி செய்யவில்லை. இன்று மாலை அவன் நம் ஆபீசுக்கு வந்தான். கம்பெனி அவனை அடாப்ஷன் செய்துக் கொள்வதற்கு சம்மதித்து கையெழுத்து போட்டான்.” மைதிலி அபிஜித்தை நோக்கி குனிந்தாள். அவள் குரல் வளையத்தில் ஏதோ அடைத்துக் கொண்டது போல் இருந்தது.
அபிஜித் மேலும் சொல்லிக் கொண்டிருந்தான். “அவனிடம் ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. ரொம்ப குறைவாக பேசுவான். மனதில் இருப்பதை லேசில் வெளியில் சொல்லவும் மாட்டான். அவனிடம் பேசி விஷயத்தைத் தெரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டம். முதலில் கையெழுத்து போடாமல் மௌனமாக இருந்து விட்டான். ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா என்று கேட்டால் சொல்லவும் இல்லை. இறுதியில் நான்தான் அந்த அக்ரிமென்டை திரும்பவும் படித்து கடைசியில், ‘சித்தார்த்தாவுக்கு எப்போது வேண்டுமானாலும் ரிசைன் செய்துவிட்டு போகும் உரிமை இருக்கிறது. விளக்கம் சொல்லவோ, நோட்டீஸ் கொடுக்கவோ தேவை இல்லை’ என்ற வரிகளை சேர்த்தேன். உடனே கையெழுத்து போட்டுவிட்டு, “தாங்க்ஸ் சர்” என்றான்.
அவன் திறமையாக, ரொம்ப அனாயாசமாக வேலை செய்வான். ஆனால் எதிராளிக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும் விதமாக இருக்கும் அவன் நடவடிக்கை. எந்த நிமிடம் வேண்டுமானாலும் அவர்களை விட்டு ஓடிவிடும் மனிதனை போல் தென்படுவான். திங்கள் கிழமை நாள் நன்றாக இருப்பதாக சாரதா மாமி சொன்னாள். அவனுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து அந்த ஏற்பாடுகளை கவனி.”
மைதிலிக்கு சந்தோஷத்தில் வாயில் வார்த்தை வரவில்லை. அவள் முகம் அபிஜித்தின் நெற்றியில் படிந்தது..
அபிஜித் முறுவலுடன் சொன்னான். “ஒன்று மட்டும் எனக்கு தெரிந்துவிட்டது. சித்தார்த்தாவுக்கு ஏதாவது நல்லது செய்தால் உனக்கு சந்தோஷம். உனக்கு சந்தோஷம் ஏற்பட்டால் நான் கேட்காமலேயே எனக்கு பரிசுகள் கிடைத்து வருகிறது. உன்னை இவ்வளவு உற்சாகமாய் நம் திருமணம் ஆன பிறகு எப்போதும் பார்த்தது இல்லை. என் கண்களுக்கு புதிதாக காட்சி தருகிறாய். சிங்கப்பூருக்கு உன்னுடன் எப்போ போகலாமா என்று துடித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றபடி மைதிலியின் கன்னத்தை தன்னுடைய கன்னத்துடன் இணைத்துக் கொண்டான்.
“என்ன எது? கன்னம் சூடாக இருக்கிறதே? ஜுரம் வந்துவிட்டதா?” கவலையுடன் கேட்டாள் மைதிலி.
“வந்திருப்பது போல்தான் தோன்றுகிறது. தலைவலி, உடல் வலியும் இருக்கு. அதான் சீக்கிரம் வந்துவிட்டேன்.” மைதிலி எழுந்து கொண்டு பேமிலி டாக்டருக்கு போன் செய்தாள்.
*******
இரவு ஆகி விட்டது. அபிஜித் கட்டில் மீது உறங்கிக்கொண்டிருந்தான். அவனுக்கு நல்ல ஜுரம் வந்து விட்டது. டாக்டர் வந்து பார்த்தார். இந்த சீசனில் வரும் ஜுரம்தான் என்றும், சீக்கிரமாகவே குணமாகி விடும் என்றும் சொன்னார்.
“நாளை காலையில் நான் வெளியூருக்கு போக வேண்டும்” என்றான்.
“நீ இருக்கும் நிலையில் பயணமாவது?” என்றாள் மைதிலி.
மைதிலியின் கட்டாயத்தின் பெயரில் அபிஜித் பிரட்டையும் பாலையும் சாப்பிட்டுவிட்டு சீக்கிரமாகவே படுத்துக் கொண்டு விட்டான். மைதிலி அவனுக்கு கம்பளியை போர்த்திக்கொண்டே நினைத்துக் கொண்டாள்.
“எனக்கு கொஞ்சம் உடல்நலம் சரியாக இல்லையென்றாலும் எத்தனையோ ஜாக்கிரதைகளைச் சொல்லி இல்லாத ரகளை செய்வான். தனக்கு ஏதாவது வந்தால் மட்டும் ஒன்றுமில்லை என்று தள்ளிவிடுவான். எப்போதும் எதிராளியை சந்தோஷப்படுத்துவது தான் தன்னுடைய கடமை என்று நினைப்பான். கேட்கும் உரிமை தனக்கும் இருப்பதை ஒப்புக்கொள்ள மாட்டான். வித்தியாசமான சுபாவம்.”
மைதிலி அவன் மீது கையை வைத்து கட்டில் மீது உட்கார்ந்து இருந்தாள். தூக்கத்தில் களங்கமற்று இருந்த அவன் முகத்தைப் பார்க்க பார்க்க அவள் மனம் தவியாய் தவித்தது. சித்தார்த்தாவின் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று கவலையாக இருந்தது. அவனிடம் சொல்ல முடியாமல் கழிந்து கொண்டிருந்த ஒவ்வொரு நாளும் குற்றம் செய்து விட்டது போல் இருந்தது. சித்தார்த்தாவைப் பற்றியச் செய்தி தன் வாயிலிருந்து வெளியேறியதும் அவனுக்கும் தனக்கும் இடையே இனம் தெரியாத இடைவெளி உருவாகி விடுவது நிச்சயம் என்று அவள் மனம் அரண்டு விட்டிருந்தது. சொல்லி விட வேண்டும் என்று மனம் எவ்வளவு தவியாய் தவிக்கிறதோ, விவேகமானது அந்த அளவுக்கு பின் வாங்கச் செய்து கொண்டிருந்தது.
இந்த விஷயத்தைச் சொல்லிவிட்டு அவனை தனியனாக்கி விடுவதை விட மௌனமாய் இருப்பது உத்தமம் என்ற பயம்தான் வாயைத் திறக்க முடியாமல் செய்து கொண்டிருந்தது.
தூக்கத்தில் கவர்ச்சியாய் தென்பட்ட அவன் முகத்தைப் பார்க்கும் போது மிசெஸ் மாதுர் செய்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. சோனாலி, அபிஜித் இருவரும் இருந்த போட்டோ கண்முன்னால் நிழலாடியது. அவள் மனதில் புதியதொரு எண்ணம் தோன்றியது. சோனாலிக்கு அபிஜித் என்றால் ஹீரோ வர்ஷிப் என்று அவள் அறிமுகம் ஆன சில நாட்களிலேயே புரிந்து விட்டது. இது போன்ற பெண்கள் அவனுடைய முப்பதாவது வயது முதல் தனக்கு அவ்வப்பொழுது எதிர்ப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களை விடுவித்துக் கொள்ள அவன் செய்யும் முயற்சிகளை அவன் பக்கத்தில் இருந்தபடி ரசித்து இருக்கிறாள். அவன் எரிச்சலைக் கண்டு சிரித்துக் கொள்ளவும் செய்தாள். இதுவரையில் அப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. சோனாலியை அபிஜித் கல்யாணம் செய்து கொண்டால்? அவ்விருவருக்கும் மகனோ, மகளோ பிறந்தால்? மைதிலி அபிஜித் பக்கம் பார்த்தாள். அந்த எண்ணமே அவள் இதயத்தை இரும்பு இடுக்கியால் கசக்கிப் பிழிவது போல் இருந்தது.
தன்னுடைய முடிவில் எங்கேயோ பிடி தளர்ந்து கொண்டிருந்தது. எண்ணங்கள் தன்னை சரியான பாதையில் செலுத்துவதாகத் தெரியவில்லை. அவள் மனதில் வேதனை சூழ்ந்து இருந்தது.
அவளுக்கு அபிஜித், சித்தார்த்தா இருவரும் வேண்டும்.
ஆனால் இது சாத்தியமா? தனக்கு நன்றாகத் தெரியும். இந்த விஷயத்தில் அபிஜித் தலையிட மாட்டான். அறிவுரை வழங்கவும் மாட்டான். முடிவை தன்னிடமே விட்டு விடுவான்.
பத்தொன்பது வருடங்களுக்கு முன் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் அர்பணிக்க வேண்டும் என்று நினைத்திருந்த மகன் காணாமல் போய் இப்போது திடீரென்று தென்பட்டு அவள் இதயத்தை வெளிச்சத்தால் நிரப்பி விட்டான்.
ஆனால் பத்தொன்பது வருடங்கள் அன்னியோன்னியமாக, ஒரே இதயமாக அபிஜித்துடன் பிணைத்து விட்டிருந்த வாழ்க்கை இனிமேலும் அதே போல் நீடிக்குமா என்று பயமும், சந்தேகமும் மைதிலிக்கு ஏற்பட்டது.

Series Navigationதிரை விமர்சனம் – காக்கா முட்டைகல்பீடம்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *