மதிய உணவு நேரத்தில் மீண்டும் நாங்கள் தேர்ந்தெடுத்திருந்த மரங்களின் நிழலில் விரிப்புகள் விரித்து அமர்ந்துகொண்டோம். நல்ல பசி. கொண்டுவந்திருந்த சுவையான கோழி பிரியாணி உண்டு மகிழ்ந்தோம். பின்பு அங்கேயே கிடைத்த இடத்தில படுத்து ஓய்வெடுத்தோம். நல்ல வேளையாக அன்று வெயில் அதிகமில்லை. குளிர்த் தென்றல் ஜிலுஜிலுவென்று வீசியது.
சுமார் மூன்று மணிபோல் சில விளையாட்டுப் போட்டிகள் நடத்தினோம். பாடங்களை மறந்து உல்லாசமாக நேரம் கழிந்தது. மாலையில் திரும்பும் வழியில் திருவண்ணாமலையில் சிற்றுண்டியும் தேநீரும் பருகினோம். திரும்பும் வழி நெடுக கைகள் தட்டி பாடி மகிழ்ந்தோம். சாத்தனூர் ஆணை இன்பச் சுற்றுலா மறக்க முடியாத அனுபவமானது!
வகுப்புகள் வழக்கம்போல் நடந்தன. காலையில் கல்லூரி செல்வதும், மதியம் விடுதி திரும்பி மீண்டும் இரண்டு மணிக்கு செல்வதும், மாலையில் ஐந்து மணிக்கு வகுப்புகள் முடிவதும் அன்றாட வாழ்க்கை முறையாகிவிட்டது.
மாலையில் சில மாணவர்கள் விளையாட்டுத் திடலில் கழித்தனர். நான் பெஞ்சமின் அல்லது சம்ருதியுடன் ஆரணி ரோட்டில் பேசிக்கொண்டு நடப்பதை வழக்கில் கொண்டிருந்தேன். அதுவே போதுமான உடற்பயிற்சியானது.
இரவில் உணவை உண்டபின் பெரும்பாலும் அறையில் படிப்பதிலும் செலவிடுவோம். சிலரின் அறையில் காசு வைத்து சீட்டு ஆடுவார்கள். அதில் நானும் கலந்து கொள்வேன். சில நாட்களில் நள்ளிரவுவரை சீட்டாடுவோம். சனி ஞாயிறுகளில் வேலூர் செல்வோம். தினகரன் தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்ப்போம். கவலைகள் ஏதுமின்றி மருத்துவக் கல்லூரியின் முதல் வருடம் நகர்ந்தது.
ஆங்கில ( தூங்கும் ) வகுப்பும் அருமையாகவே உருண்டோடியது. நீயூசன் எனும் மாலுமி சூசனையும் குழந்தையான எலிசபெத் ஜேனையும் கூட்டிக்கொண்டு கனடா நாடு செல்கிறான். சட்டப்படி அவன்தான் இனி கணவன் என்று நம்பி அங்கு சமாதானத்துடன் வாழ்கிறாள். ஜேனுக்கு பனிரெண்டு வயதானபோது அவர்கள் மீண்டும் இங்கிலாந்து திரும்பி பால்மவுத் எனும் மீனவ கிராமத்தில் குடியேறுகின்றனர்.அங்கிருந்து நியூசன் அடிக்கடி கடல் பிரயாணம் செல்கிறான். அப்போது அங்கு அவளுக்கு ஒரு தோழி கிடைக்கிறாள். தன்னைப்பற்றிய இரகசியத்தை அவளிடம் பகிர்ந்துகொள்கிறாள் அவளோ சூசனின் வாழ்க்கை சமுதாய விதிக்கும் நாட்டின் சட்டத்துக்கு புறம்பானது என்கிறாள். அன்றிலிருந்து அவள் நிம்மதி இழந்தவளாகிறாள். கடந்த காலத்தை எண்ணிப்பார்க்கிறாள். அவனிடமும் இனியும் அப்படி வாழ்வது முறையற்றது என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒருவிதமான குற்ற உணர்வால் நிம்மதி இழக்கிறாள். தன்னுடைய மனநிலையை நியூசனிடம் கூறிவிடுகிறாள். இத்தகைய குழப்பம் நிறைந்த சூழலில் நியூசன் இன்னொரு கடல் பிரயாணம் செல்கிறான்.பின்பு அவன் திரும்பி வரவில்லை. அவன் கடல் பிரயாணத்தின்போது காணாமல் போய்விட்டான் என்ற செய்தி வருகிறது. அது அவளுக்கு கவலை அளித்தாலும் ஒருவாறு நிம்மதி அடைகிறாள்.
அழகும் அறிவும் நிறைத்த மகள் எலிசபெத் ஜேனின் எதிர்காலம் பற்றி கவலை கொள்கிறாள்.தான் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஜேன் ஆவல் கொண்டுள்ளதையும் சூசன் உணர்கிறாள். அவளிடம் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி ஏதும் கூறாமல் மறைத்துவிடுகிறாள். மகளின் எதிர்காலம் கருதி ” மாஜி கணவன் ” ஹென்சார்டின் உதவியை நாடிச் செல்கிறாள்.
கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகரில் இருவர் பேசிக்கொண்டிருந்தபோது ஹென்சார்ட் பெயரை அவர்கள் பயன்படுத்தியது அவள் காதில் விழுகிறது.அவனைப் பற்றி விசாரித்து தேடலாம் என்று ஜேன் கூறினாலும் அவள் வேண்டாம் என்கிறாள். அவன் பண்டகச்சாலையில் அல்லது பண்ணையில் பணியில் இருக்கலாம் என்று கூறி தடுத்துவிடுகிறாள். அங்குள்ளவர்களின் பேச்சிலிருந்து விவசாயத்தை நம்பியுள்ள அந்த ஊரில் கோதுமை விளைச்சல் குறைந்துபோனதால், மலிவான கோதுமை விற்கப்படுவதால் தரமான ரொட்டி கிடைப்பதில் பற்றாக்குறை உண்டாகிவிட்டது என்பதையும் அறிகின்றனர்.
நாவலாசிரியர் தாமஸ் ஹார்டி டார்சஸ்ட்டர் என்ற நகரில் வளர்ந்தவர் என்பதால் கேஸ்ட்டர்பிரிட்ஜ் நகரை அவ்வாறே மிகவும் தத்ரூபமாக வர்ணித்துள்ளார். அதன் வீதிகளின் அமைப்பு, கிராமத்து மக்களின் வீடுகள், அவர்களின் நடமாட்டம், சுற்றுச் சூழல், விவசாய நிலங்கள், பண்ணைகள் போன்றவற்றை விரிவாகக் கூறியுள்ளார். கதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதில் வரும் வர்ணனைகளையும் தெரிந்துகொள்வது முக்கியம் என்று குண்டர்ஸ் வலியுறுத்தினார். தேர்வில் ஒருவேளை கேஸ்ட்டர்பிரிட்ஜ் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி கூட வரலாம் என்று கூறினார்.அது கேட்டு தூங்கிக்கொண்டிருந்த சிலரும் திடுக்கிட்டு விழித்தனர்!
என்னுடைய வகுப்பில் எட்வர்ட் ரத்தினம் என்பவன் பர்மா தமிழன். அவன் கரு நிறத்தில் நல்ல உயரத்தில் இருந்தான். நான் அவனை ” மிஸ்டர் பர்மா மேன் ” என்றுதான் அழைப்பேன். பின்பு மற்ற மாணவர்களும் அதே பெயரை அவனுக்குச் சூட்டிவிட்டனர். அவனும் தமிழன் என்றாலும் எங்களுடன் சேராமல் எப்போதும் தனித்தே இருக்க விரும்புவான். அதை அவன் பெருமை பாராட்டுகிறான் என்று தவறாக எண்ணிய சிலர் இரவில் அவனுடைய கதவை பூட்டிவிட்டனர். காலையில் வெகு நேரம் அவன் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான்.
ஜெயமோகன் என்பவனுக்கும் அதே கதிதான். அவன் மலையாளி. எப்போதும் பைபிள் படித்துக்கொண்டிருப்பான், அதனால் அவன் பெரிய பக்திமான் என்று நினைக்கிறான் என்று சிலர் எண்ணினார்கள். அவனையும் ஒருநாள் அறைக்குள் வைத்து அடைத்து வெளியில் பூட்டு போட்டுவிட்டனர்.
சிலர் வெளியில் சென்றுவிட்டு விடுதி திரும்பும்போது, இரண்டாம் மாடியில் சிலர் அவர்களுக்காக காத்திருப்பார்கள். அவர்கள் அருகில் சில பெரிய வாளிகளில் தண்ணீர் வைத்திருப்பார்கள். கீழே வந்துகொண்டிருப்பவர்கள் விடுதியின் வாயிலை அடைந்ததும் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பார்கள். அவர்கள் நின்று மேலே பார்த்த மறு கணம் அவர்கள்மீது தண்ணீரை ஊற்றிவிடுவார்கள்!
இதுபோன்று ” தவறு செய்பவர்களை ” தண்டிக்க ஒரு கோஷ்டி விடுதியில் செயல்பட்டது. இது ஒரு வேடிக்கை விளையாட்டுதான். விடுதி வாழ்க்கை உற்சாகமாக இருக்க இதுபோன்ற “விளையாட்டுகள் ” தேவைப்பட்டன.
மாரிட் என்பவர் எனக்கு சீனியர்.வடநாட்டவர். அவருக்கு மலையேறுவதில் அலாதிப் பிரியம். அதற்கான வடகயிறு வைத்திருப்பார். கைலாஸ் மலை தூரத்தில் இருந்தது. அதன் உச்சிக்கு நடந்தே ஏறிவிடலாம். கயிறுகள் தேவையில்லை. அதை ஈடுசெய்யும் வகையில் மூன்றடுக்கு விடுதியின் உயரத்தில் இருந்த நீர்த் தொட்டியில் கையிற்றை இணைத்துவிட்டு அதன் உதவியோடு கீழேயிருந்து சுவற்றில் கால் வைத்து மேலே ஏறிவிடுவார். அவ்வாறு அந்தரத்தில் அவர் தொங்குவதைப் பார்க்க பயமாக இருக்கும். ஆனால் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் ஏறிவிடுவார். வேறு சிலரும் முயற்சித்து தோல்வி அடைவார்கள்.
வேலூரில் ஓட்டேரி என்ற குளம் உள்ளது. அங்கு சைக்கிளில் சென்றுவிடலாம். சிலர் அங்கு தூண்டில் போட செல்வார்கள். அப்படியே நீச்சல் அடித்துவிட்டு திரும்புவார்கள்.இரண்டாம் ஆண்டில் பயின்ற சாமுவேல் என்பவன் சிறந்த விளையாட்டாளன்.நல்ல உயரமும் நீண்ட கால்களையும் உடையவன். அவன் சிலருடன் அங்கு நீச்சல் அடித்தபோது சுழலில் சிக்கி மூழ்கிவிட்டான். உடன் சென்றவர்களால் உதவமுடியாமல் போனது. அவன் பரிதாபமாக உயிரிழந்தான்! அன்று விடுதியில் பெரும் சோகம். அவனுக்காக நாங்கள் அழுதோம்.மறுநாள் அவனின் உடல் தென்னிந்திய திருச்சபையின் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று வகுப்புகள் நடைபெறவில்லை.
வேலூரில் மழைக்காலங்கள் மனதுக்கு இதமானவை. எப்போதுமே கற்பாறைகளிலிருந்து வீசும் அனல் காற்றில் வெந்துகொண்டிருந்த எங்களுக்கு மழையுடன் கூடிய குளிர் காற்று மகிழ்ச்சியை உண்டுபண்ணும். அப்போதெல்லாம் விடுதியின் நடுவில் உள்ள செயற்கைக் குளத்தில் தவளைகள் பெருகிவிடும். இரவு நேரங்களில் அவை உரக்க கத்தி கொடூர கீதங்கள் எழுப்பும். அப்போதெல்லாம் நள்ளிரவு நேர இருட்டில் ஓர் உருவம் மட்டும் கையில் நீண்ட கழியுடன் தனியாக குளத்தருகில் அமர்ந்திருக்கும். அப்போது தவளைகள் கத்துவதை நிறுத்திவிடும்! அந்த உருவம் வேறு யாருமல்ல.அவர்தான் விடுதியிலேயே மிகவும் மூத்த மாணவர் விக்டர் வேதமாணிக்கம்!
( தொடுவானம் தொடரும் )
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்