விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு

This entry is part 7 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சுப்ரபாரதிமணியன்

இறையன்புவின் மொத்த சிறுகதைகளின் இயல்பை தத்துவதரிசனங்களால் மனிதர்களின் வாழ்க்கையை வளப்படும் செயல்கள் பற்றிய எண்ணங்கள்,விலங்குகள் மீதான கரிசனம், முதியோர்களின் உலகம், காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையின் கீறல்கள் என்று சிலவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த சட்டகத்தினையே இறையன்புவின் பூனார்த்தி சிறுகதைத் தொகுப்பிலும் காண நேர்ந்தது. எளிமையான கதைகள், செய்திகளைச் சொல்லும் இயல்பில் பூடகத்தன்மை, தீவிரமான அனுபவங்களைச் சொல்கிறபோதும் வெகு இறுக்கமானகதை சொல்லல் பாணியையும் வாக்கிய அமைப்புகளையும் கொண்டிராமல் எளிமையாகவே சொல்லும் இயலபு ஆகியவற்றையே அவரின் சிறப்புத்தன்மை என்று சொல்லலாம்.

தத்துவார்தத நெறிகளை நெறிப்படுதும் செயல்கள் , எண்ணங்களை முதன்மைப்படுத்துகிறார். உலக நெறிகளைச் சுட்டிக் காட்டி நமக்கு வாய்க்கும் அனுபவங்களின் மூலமான அனுபவத் தெளிவிற்குக் கொண்டு போகிறார். அதிலும் அற்றிணை உயிர்களையும் தத்துவ நெறிக்குள் உட்படுத்து படைப்பு எண்ணங்களை இவரிடமிருது பெறும் போது அவை மனிதர்களுக்கானது என்றே தோன்றுகிறது. தத்துவார்த்த நெறிகளை தாவரங்கள், பிராணிகள், பறவைகள் போன்றவற்றின் இயல்புகளோடு சில சம்பவங்கள், உரையாடல்களைக் கொண்டு வடிவமைத்து கதைகளையும் சொல்லியிருக்கிறார். பறவைகள், பிராணிகள் மூலம் சிக்கல்களை எதிர்கொள்கிற மனிதன் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்வதற்கான வழிகளைச் சொல்கிறார்.

அவற்றை உருவகக் கதைகள் என்று வைத்துக் கொள்ளலாம். உலகப்பொது நியதிகளை மனிதர்கள் மேலேற்றிச் சொல்வதை விட பறவைகள், பிராணிகள் மேலேற்றி சொல்வதில் நிறைய சவுகரியங்கள் இருக்கின்றன. பிரச்சாரத் தொனி அத்ற்குள் உள்ளடங்கிப் போகும். குழந்தைகள், இலைஞர்களுக்கான பல செய்திகளை அழுத்தமாகவும் முன் வைக்கலாம். ஆனால் யதார்த்த அனுபவக்கதைகளில் அவர் கொள்ளும் பயணம் வேறு வகையிலானது.( பயணங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகள் நிறையவும் எழுதியிருக்கிறார் என்பதும் இன்னொரு தகவல் ) இதில் உள்ள விடுதலைக் கதையில் கொடுமைப்படுத்தப்படுத்தப்பட்ட ஆடுகள். அவற்றை பல சம்யங்களில் தவற விட்டுவிடுகிற ஆட்டிடையன். அதனால அவனுக்கு ஏற்படும் மன உளைச்சல் ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டல்லவா. கொம்பு முளைத்த ஆடுகள் மனிதர்களை முட்டித்தள்ளி தங்கள் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்கின்றன.மனிதர்கள் கைக்கொள்ள வேண்டிய விடுதலை உணர்வும், கட்டுக்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் ஒரு வகையில் குறியீட்டுதன்மையோடு இக்கதை வெளிப்படுத்துகிறது. கல்விகற்றுக்கொடுக்கிறவர்கள், ஆசான்கள் இவர்களைப் பற்றிச் சொல்லும் வகையில் அவர்கள் நினைனிக்கப்படுதலை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துபவர் அவர். புதிய தலைமுறைகளின் வழிகாட்டுதலுக்காகத் தூண்களாக அவர்கள் காட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். அந்த வகையில் சேவியர் என்ற வாத்யாரின் வாழ்க்கையை முன்வைக்கிறார். அவரின் சாவு கொண்டு வரும் நினைவுகளும் , ஆசிரியர் பணியின் சேவை மனப்பான்மையும் மெல்லிய இழைகளாக ஓடிக் கொண்டே இருக்கிறது. நண்பர்களைப் பற்ரி நிறைய பேசுகிறார். நட்பு என்பது குடும்பச் சூழல்கள் போலவே போறிப் பாதுகாக்க வேண்டியது என்பதும் சாசுவதமாகிறது. கல்லூரி காதலுக்கென்றே கட்டமைகப்பட்ட ஸ்தலம் போலாகிவிட்டது.

இதில் பிரிவு என்பதும் சகஜம். இந்த சகஜத்தை சகஜம் என்று ஏற்றுக் கொள்கிறார்களும் இருக்கிறார்கள். நவீன கலாச்சாரசூழல் இந்த சகஜசூழலை எப்படியோ கொண்டு வந்து திணித்து விடுகிறது. இந்த சகஜத்திற்குள் இருக்கும் சவுகரியங்கள் மாணவர்களின் வழ்க்கையை ஒரு வகையில் வெகு இயல்பாக்குகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து போகச் செய்கிறது. இதை கதைகளில் சொல்கிறார். உயிர்த்தெழல் போன்ற கதைகளில் மகனின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அப்பாவின் சோகம் தொற்றுகிறது. ஒரு தலைமுறை அப்படியும் இருந்துதான் பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இன்றும் வெகுஜனதளத்தில் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தாலும் இலக்கிய இதழ்களில் இறையன்புவின் படைப்புகள் வெளிவருவதில அக்கறை கொண்டிருக்கிறார் இறையன்பு அவர்கள். அந்த வகையில் தூரிகை என்ற இலக்கிய இதழின் பணி பற்றியும் அதன் தொடர்ந்த செய்ல்பாடுகள் பற்றியும் ஒரு சிறுகதை உள்ளது. அது நின்று போகிறது. வேறு ஒருவரின் கைக்குப்போகிறது. வேறொருவர் எடுத்து நடத்தி அதை ஆரம்பித்தவரிலிருந்து முரண் பட வேண்டுமா என்ற் கேள்வியும் எழுகிறது. இலக்கிய இதழ்களின் சிரமம், ஆனாலும் அதற்கான தனித்துவமான இடம் பற்றி இக்கதை குறிப்பிடுகிறது எனலாம். சிறுபத்திரிக்கை சூழலில் இருக்கும் அரசியல் குழுக்கள், அவர்களின் செயல்படுகளின் மீதான விமர்சனத்தையும் ஒரு வகையில் இக்கதை கோடிடுகிறது. பூனார்த்தியில் கடுவன் பூனை உறவு நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தனிமையைத் தவிர்ப்பதற்காக பூனை ஒரு உயிரி போல் செயல்படுகிறது.

மனைவி கர்ப்பமான சூழலில் அவளின் மூச்சிறைப்பிற்கு பூனையின் நடமாட்டம் ஒரு காரணம் என்பதை கண்டடைகிற கணவன் அதை அவளிடம் சொல்வதில்லை. அதன் மீதான் அவளின் அன்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. பூனை பிரசவத்தில் இறந்து போகிறது. பூனை இறந்த்து பற்றி மனைவியிடம் அவன் சொல்வதில்லை. பூனார்த்தியின் நினைவுகளோடு அவளின் குழந்தை வளர்வதைச் சொல்லும் கதை மிக உயர்ந்த சிகரங்களைத் தொட்டு கதை சொல்லும் முறையிலும், நுணுக்கமானத் தன்மையிலும் தனித்து நிற்கிறது. தியாகராஜன் கற்பகம் தம்பதிகள் 60 வயதைக் கடந்தவர்கள். ஆனால் மூளை வளர்ச்சியில்லாத ஒரு உயிரை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தை இயல்பாகவே ஏற்றுக்கொள்கின்றனர்.

அந்த இயல்பு அந்த முதிய வாழ்க்கையும், வயதின் முதிர்ச்சியும் கொண்டு வந்த வரப்பிரசாதங்களாக இருக்கிறது. இதை விவரிக்கும் போது எந்த இளைய மனமும் அவ்வகை சேவைக்கு தன்னை ஈடுபடுத்த விளையும் என்பதே இக்கதையின் நோக்கமாகவும் கூட கொள்ளலாம். குழந்தை மனங்களோடு வெகுளித்தனைத்தையும், வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சாதாரண் மனிதர்களின் பாசமும் , நெகிழ்வு எண்ணங்களால் சிந்தனைகளை நிறைக்கிறார். இந்த நோக்கங்களையோ, பல சமயங்களில் சில செய்திகளையோ, தான் கண்டுணர்ந்த அனுபவங்களையோ இந்தக் கதைகளை மூலம்விரித்துச் சொல்வதில் சுவாரஸ்யமான வாசிப்பும் படிப்பும் நோக்கமும் ஒருங்கே தட்டுப்படுகிறது.

( பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு ரூ 80 விஜயா வெளியீடு, கோவை)

Series Navigationகற்பு நிலைஅப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *