பந்தம்

This entry is part 17 of 24 in the series 9 ஆகஸ்ட் 2015

எஸ்ஸார்சி

நேற்று எம் ஜி ஆர் நகர் மாரி அம்மன் கோவில் பூசாரி எங்கள் வீட்டிற்கு வந்தார்.எம் ஜி ஆர் நகர் என்றால் அது ஒன்றும் சென்னையிலுள்ள அண்ணா நகர் போன்றது இல்லை.முதுகுன்றமே ஒரு சிறு நகரம்தான்.இப்போதுதான் அது தன் கால்களை அகலமாக்கி ‘இதோபார் என்னை ‘என்கிறமாதிரி வளர்ந்துவிட்டிருக்கிறது. அந்த முதுகுன்றத்து கிழக்குப்பகுதியில்தான் இருக்கிறது இந்த எம் ஜி ஆர் நகர். ஒரு நூறு சலைத்தொழிலாளர்க்கு அன்றைய முதல்வர் இனாமாக மனை ப்பட்டாவழங்கியதுதான் இதன் ஆரம்ப வரலாறு.
.நம் நாடே கொஞ்சம் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்பதுண்மை.முதுகுன்றம் மட்டும் விதிவிலக்கா என்ன.இல்லையென்றால் பேருந்திலும் ரயிலிலும் பிச்சை எடுப்பவர்கள் சட்டமாக பிச்சை கொடு என்று கேட்பதும், அவர்களே நூறு ரூபாய் நோட்டினை சர்வ அலட்சியமாக பார்ப்பதும் பிரத்யட்சமான பின்னே நாம் என்னத்தைச் சொல்வது.
செல் போன் இல்லாத பிச்சைக்காரர்களை எனக்குக் காட்டுங்களேன். பார்ப்போம்.இல்லை அய்யா. .அது எப்படி இதுகள் சாத்தியமா என்று கேட்கா தீர்கள்.நான் காலில் மாட்டிக்கொண்டிருக்கும் செருப்பைவிடவும் அணிந்திருக்கும் சட்டையைவிடவும் என் தோளில் தொங்கும் பேக்கைவிடவும் நான் தெருவில் சந்திக்கும் பிச்சைக்காரர்கள் நன்றாகவே வைத்துக்கொண்டு இருப்பதை நான் பார்த்த பிறகுதான் உங்களுக்குச் செய்தி சொல்கிறேன்.
. எம் ஜி ஆர் நகருக்கு அருகிலேதான் நாங்கள் குடியிருக்கும் திருவள்ளுவர் நகர். அதனில் மூன்றாவது தெருவில் ஒன்பது எண் கொண்டது என் வீடு.நேற்று இரவுதான் என் வீட்டில் பூட்டியிருந்த பீரோவில் இருந்த நகையும் பணமும் திருடுபோனது. முதுகுன்ற கடைதெருவுக்குப் போய் கொஞ்சம் மளிகைசாமான்கள் வாங்கி அந்தக் கொளஞ்சி அப்பனை த்தரிசித்துவிட்டு வீடு திரும்பி வருவதற்குள்ளாக இப்படி எல்லாமா நடக்கும் என்றால் நடந்து விட்டதே. வீடு திரும்பிய நான் வீட்டின் கதவைத்திறக்க சாவி எடுத்தால் வாயில் கத்வு உள் புறமாக தாளிடப்பட்டு இருந்தது. ஏதோ ஞாபகத்தில் வீட்டில் யாரோ நம்மவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் நான் காலிங் பெல்லை வசமாக அமுக்கினேன். வீட்டின் கதவுபடார் எனத் திறந்து கொண்டது. வீட்டின் உள்ளிருந்து ஜட்டி மட்டுமே போட்டிருந்த இரு திருடர்கள் வீச்சென்று எங்களைத்தாண்டிக்குதித்து புயலாகச் சென்று மறைந்தனர். வீட்டின் உள்ளே சென்றேன். என் மனைவி வாசலிலிருந்து திருடன் திருடன் என் அலறினாள்.நான் தினம் சோறு போட்டு ஜீவிக்கும் நாயொன்று தனக்கு எதுவும் தெரியாது என்கிறபடிக்கு வாசலில் படுத்துக்கிடந்தது.அக்கம் பக்கத்துக்காரர்கள் நான்கு பேருக்கு வந்து வாசலில் நின்றனர். காலிங்க் பெல்லை அமுக்கி நான் இமாலயத்தவறு செய்துவிட்டதாகச்சொன்னார்கள். வாயில்கதவை அப்படியே நாதாங்கி போட்டிருந்தால் திருடனை லட்டு மாதிரி பிடித்திருக்கலாம் என்றும் இலவச யோசனை சொன்னார்கள்.பாப்பான் வீட்டு நாயும் அரிவாளும் எதுக்கும் தேறாது என்றுகூடப் பேசிக்கொண்டார்கள்.
மறு நாள் முதுகுன்ற நகரத்துப் போலிசுகாரர்கள் என் வீட்டிற்கு விஜயம் செய்தார்கள். நான் போய்ச்சொல்லிதான் அழைத்து வந்தேன். அவர்கள் வீட்டை ஒரு சுற்று வந்து பிறகு எங்களை விசாரித்தார்கள். என்னையும் என் மனைவியையும்தான். விசாரணையை எப்படி எனக்கேட்டால் அசந்துபோவீர்கள்.என் மனைவி மிகவும் பயந்தே போனாள்.திருடுபோன நகை வைத்திருந்த இரும்பு பீரோவின் சாவிக்கொத்து எங்கே வைப்பீர்கள் அந்த சாவிக்கு டூப்ளிகேட் உண்டா எப்போதும் பீரோ பூட்டி இருக்குமா இரவில் மட்டும் பூட்டுவதா கடைத்தெருவுக்குப்போனால் பூட்டுவீர்களா வெளியூர் போனால்தான் பூட்டுவீர்களா,வேலைக்காரி வைத்துக்கொண்டு வீட்டு வேலை செய்கிறீர்களா இல்லை நீங்களே வீட்டு வேலை செய்துகொள்கிறீர்களா திருடு போன இரண்டு தங்க வளையல்களை எங்கே வாங்கினீர்கள்,அதற்கு ரசீது இருக்கிறதா அவை உங்களுடையது தானா இல்லை இரவல் நகையா. உங்களுக்கு கவரிங் நகை அணியும் பழக்கம் உண்டா இப்படிக் கேள்வி மேல் கேள்விகள். வீட்டில் திருடு போய்விட்டது என்று போலிசில் சொன்னால் அவர்கள் நம்மோடு சேர்ந்துகொண்டு கண்ணை கசக்கிக்கொண்டு நிற்பார்கள் என நான் முதலில் நினைத்ததுண்டு. போகட்டும் விடுங்கள்.. விசாரணை ஒரு வழியாகமுடிந்தது. தடய சாஸ்திரம் பயின்ற விரல் ரேகை வித்துவான்கள் தாம் கொணர்ந்த வெள்ளை நிற பவுடர் ஒன்றை பீரோவின் மேலும் கீழும் இடுக்கிலும் கைப்பிடியிலும் தடவித்தடவி ஒரு நோட்டு புத்தக விஷய்த்தோடு ஒத்து பார்த்தார்கள்.
அப்புறம்தான் அந்த நாய் வருகை.போலிசு இலாகாவின் செல்ல மோப்ப நாயை சமுத்திரகுப்பத்திலிருந்து ஒரு கருப்பு வேனில் அழைத்துக்கொண்டு வந்தனர். அதனை என் வீடெல்லாம் சுற்றி வந்து காண்பித்து பின் ஓட விட்டார்கள். ‘ரன்’ ‘ரன்’ என்று ஆங்கிலத்தில்தான் நாயிக்கு க்கட்டளைதந்தார்கள். மோப்ப நாயின் பெயர் ‘ரோஸ்’. அதன் உயரம் நம் இடுப்பு வரைக்கும் இருந்தது. அது ஓயாமல் காதுமடல்களை மடக்கி மடக்கி த்திறந்தது கண்கள் ஏதோ செய்தி சொல்வதுபோல இருந்தன.
.அது என்னவோ பாருங்கள் நான் பார்த்தவரையில் நாய்களுக்கு யாரும் தமிழில் பெயர்வைப்பது இல்லை.ஜெனி,ஜூலி,பிரவுனி,ஜில்ஸ்,ஃபெர்ரோ,டார்கி, ரைனி., சைனி,இவை எல்லாம் நாய்களுக்கு வைத்திட்ட திருப்பெயர்கள். ஏனோ தமிழ்ப்பெயர் ஒன்று கூட இல்லை.ஒருக்கால் தமிழில்பயர்வைத்தால் நாயின் மதிப்பு கன்னாபின்னா என்று குறைந்துபோவிட்டால் என்னசெய்வது என்கிற அச்சம் ஒரு இருக்கலாம்.சரியாக வேட்டை கீட்டை பிடிக்காவிட்டாலும்தான் என்ன செய்வது.ராமு மணி அப்பு அம்மு இவைகூட நாய்களின் பெயர்கள்தான் இவை ‘ட்ரோதா’ என்று கூப்பிட்டால் நாம் விட்டெறியும் எச்சிலையை நக்கி விட்டு வால் மட்டும் ஆட்டி க்காண்பிக்கும் பீ யைத்தின்னும் நாட்டு நாய்கள்.
நேற்று அதான் இப்படித் திருடு போவதற்கு முதல் நாள் என் வீட்டில் ஒரு சமாச்சாரம் நடந்தது. மீண்டும் அதனைச்சொல்ல ஆரம்பிக்கிறேன்.
எம்ஜியார் நகர் மாரியம்மன் கோவில் பூசாரி என் வீட்டிற்கு வந்திருந்தார்.எங்களை சத்தம்போட்டு ‘சார்’ என அழைத்தார்.
‘கோவிலுக்கு திருவிழா வருது மாரியாத்தாளுக்கு என்ன காணிக்கை செலுத்துறீங்களோ செலுத்திடுங்க. நானும் தே இருக்கே அந்த எம் ஜி ஆர் நகர்தான்.அந்த நகருல மெயின் ரோடுல இருக்குற அந்த ஆத்தா கோவில்லதான் நான் பூச செய்யுறேன்’
‘வேற எதாவது சேதி இருக்கா’ என் மனைவி கேட்டாள்.பூசாரியை நன்கு அறிந்தவள் மாதிரி. எனக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை..
‘ நான் இப்ப என்ன கேட்டுட்டன் நீங்க ஏன் மூஞ்சில அடிச்சமாதிரி பேசுறீங்க’
‘வேற ஒண்ணும் சேதி இல்லன்னா நீரு போயிகிட்டே இருக்கலாம் பூசாலியாரே’
‘இது நல்லா இல்லே’
‘எது’
பூசாரி என் வீட்டிலிருந்து இறங்கி விறு விறு என நடந்துகொண்டிருந்தார்.இப்படி என் மனைவி பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.வருத்தமாகவும் இருந்தது.நான் குறுக்கே புகுந்து எதுவும் பேசிவிடலாம்.ஆனால் நாம் ஒன்று நினைத்துக்கொண்டு பேச அது அடுத்தவர்களுக்கு அனேக நேரங்களில் தப்பாகவும் போய்விடுகிறதே.என் அம்மாதான் சொல்வார் நாம் ‘தாயே’ என்றுதான் அழைத்து இருப்போம் ஆனால் எதிரே இருப்பவர்கள் ‘யாரைபார்த்து நாயே என்கிறாய்’ என்று சொல்லி பிலி பிலி என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள்.ஆக நான் மவுனமாகவே இருந்தேன். பிறகு ஆரம்பித்தேன்.
‘ஏன் இப்படி பூசாரியிடம் பேசினாய் இது சரியா உன்னிடம் இருந்தால் கொடு இல்லையென்றால் எதற்கும் ஒரு மரியாதை இல்லையா என்ன’
‘எனக்குத்தெரியும் நீங்கள் உங்கள் வேலை ப்பாருங்கள்’
‘இது சரியா என்கிறேன்’
‘நான் அந்த மாரி கோவிலுக்கு சென்ற வெள்ளிக்கிழமை சென்று வந்தேன்.அங்கு இந்த பூசாரியை ப்பார்த்தேன்’
‘என்ன பார்த்தாய்’
‘அது உங்களுக்கு வேண்டாம் விட்டு விடுங்கள்’
‘நீ செய்ததுதான் சரி என்று சாதிக்கிறாயா’
‘வீட்டிற்கு வந்த கோவில் பூசாரியிடம் எப்படி ப்பேசுவது என்பது அறியாதவளா நான்’
எனக்கு ஒன்றுமே பிடிபடவில்லை.ஏதோ ஒரு உறுத்தல் மனத்தில் இருந்துகொண்டே இருந்தது. அன்று இரவேதான் என் வீட்டில் திருடு போனதும் போலிசு காரர்கள் வந்ததும் பின் அந்த விரல் ரேகைக்காரர்களைத், தொடர்ந்து மோப்ப நாய் வந்ததும் என் கண் முன்பாக நடந்துகொண்டிருந்தது.
போலிசுகாரர்கள் கொணர்ந்த சமுத்திரகுப்பத்து மோப்ப நாய் ‘ரன்’ என்ற கட்டளையைப் பெற்றுக்கொண்டவுடன் மின்னலென ஓடியது.ஓடியது ஓடிக்கொண்டே இருந்தது.. எம் ஜி ஆர் நகர் மாரியம்மன் ஆலயம் வரை ஓடியது. கோவில் பூசாரி அம்மன் சன்னதி முன்பாக நின்று ஏதோ சேவார்த்திகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.மோப்ப நாயோடு ஒடிய இரண்டு காவலர்கள் அந்த நாய் நிற்க அவர்களும் நின்று கொண்டார்கள்.நான் மெதுவாக என் சைக்கிளை எடுத்துக்கொண்டு மாரியம்மன் கோவில் வாசலில் போய் நின்று கொண்டேன்.
‘இதுவரைக்கும் திருடன் நடந்து அல்லது ஓடி வந்து இதற்கு ப்பிறகு ஏதோ ஒரு வெய்கிளில் ஏறி சென்று இருக்கவேண்டும். அதுதான் இப்பத்திக்கு சொல்லமுடியும்’ என்றனர் நாயுடன் ஓடிவந்த காவலர்கள். வேறு ஒன்றும் அங்கு நடந்துவிடவில்லை.முதுகுன்ற நகர் எங்கும் சுற்றி என் வீட்டில் திருடிய அந்தத் திருடனை மோப்ப நாய் ரோஸ் கையைக்கவ்வி என் முன்னால் கொண்டுவந்து நிறுத்தி விடும் என எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.
திருடு போன தங்கவளையல்கள் இரண்டும் என் அண்ணன் மனைவியுடையவை.அண்ணன் அதனை வங்கியில் வைத்து பணம் வாங்கித்தரும்படி என்னிடம் கேட்டிருந்தார்.பிரோவில் இருந்தபணம் பத்தாயிரமும் என் அப்பா கொடுத்தது. நான் பாதுகாப்பாகத்தானே வைத்திருந்தேன். வரவிருக்கும் அவரின் சதா அபிஷேகச்சிலவுக்கு அது என அவர் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார்.
அண்ணனுக்கு அவர் மனைவியின் தங்க வளையல்கள். அதுவும் அவை என் வீட்டில் வைத்து திருடுபோனது எனக்கு என்னவோ போல் இருந்தது.நான் ஒன்றும் செய்வதற்கில்லை. என் அண்ணன் ‘சரி விடு இதற்கு யார்தான் என்ன செய்வது’ என்றார்.அப்பாவின் சதாபிஷேக ச்செலவுக்குத்தான் நான் பத்தாயிரம் கடன் வாங்க வேண்டியதாயிற்று.
எனக்குள் இன்னும் அந்த மாரிகோவில் விசேஷத்துக்கு காணிக்கை கேட்டு என் வீடு தேடிவந்த பூசாரியிடம் அன்று என் மனைவி பேசியவிதம் ரணமாய் உறுத்திக்கொண்டே இருந்தது.
போலிசின் மோப்ப நாய் திருடுபோன என் வீட்டிலிருந்து ஓடியது. அது சரி. ஏன் அந்த நாய், மாரியம்மன் கோவில். வாசல்வரை ஓடி பின் நின்றுகொண்டது.இதனை அடிக்கடி யோசித்துப்பார்த்துக்கொள்வேன்..
இந்த இரண்டிற்கும் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாதுதானே…

Series Navigationஎன் வாழ்வின் வசந்தம்நிலாமகள் கவிதைகள்
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *