தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
மறுநாள் முழுவதும் அபிஜித்துக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைகள் இருந்தன. ஜப்பான்லிருந்து ஒரு குழு விசிட் பண்ணுவதற்கு வருகிறது. அவர்களை அழைத்துச் சென்று தன்னுடைய பேக்டரியைச் சுற்றிக் காண்பித்து, பிறகு லஞ்ச் கொடுத்து, மீட்டிங் முடிந்த பிறகு மாலையில் அவர்களை கலாச்சார விழாவுக்கு அழைத்துச்சென்று ….. இப்படி ஏகப்பட்ட வேலைகள். முதல் நாள் இரவும் சரியானபடி தூக்கம் இல்லை. காலை முதல் ஓயாத வேலைகள். தலை பாரமாக இருந்தது. நடுநடுவில் நர்சிங் ஹோமுக்கு போன் செய்து சித்தார்த்தாவைப் பற்றி கேட்டுக் கொண்டான். நன்றாக தேறி வருவதாகவும், கொஞ்சம் சோர்வாக இருக்கிறான் என்றும், மைதிலி அருகில் இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
அபிஜித் வீட்டுக்கு வரும் போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. யாரோ கதவைத் தட்டிய சத்தம் கேட்டது.
தூங்குவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தவன் சந்தேகிப்பது போல் நின்றான். திரும்பவும் சோனாலி வந்து விட்டாளா? சலிப்பு தோன்றியதால் மெதுவாக படியிறங்கி வந்தான்.
திரும்பவும் பெல் ஒலித்தது. அபிஜித் கதவைத் திறந்தான்.
எதிரே சித்தார்த்தா! பிடுங்கிப் போட்ட கீரைத்தண்டு போல் துவண்டு விட்டிருந்தான். எப்படித்தான் வந்தானோ? மூச்சு இரைத்துக் கொண்டிருந்தது.
“சித்தூ!” தன்னையும் அறியாமல் சொன்னான் அபிஜித்.
அவன் இதழ்கள் கறுத்து இருந்தன. கைகளை ஜோடித்துக் கொண்டே சொன்னான். “அம்மா முழுவதுமாக எனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தேன். அம்மா என்னுடையவள் என்று நினைத்தேன். ஆனால் அம்மா உங்களுக்குள் பாதி என்று புரிந்து விட்டது. நீங்கள் இல்லாமல் அவள் முழுமையானவள் இல்லை. எனக்கு அரைகுறையாய் அம்மா வேண்டாம் என்று கோபித்துக் கொண்டு இந்த உலகத்திலிருந்தே போய் விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. நான் எவ்வளவு வேண்டாத வேலை செய்தேனோ, எவ்வளவு பைத்தியமாக நடந்து கொண்டேனோ அம்மா அழுது கொண்டிருப்பதைப் பார்த்தால் புரிந்தது. நான் இல்லை என்றால் அம்மாவும் இருக்க மாட்டாள் என்று புரிந்துக் கொண்டேன். எனக்கு முழுமையாய் இருக்கும் அம்மா வேண்டும். அவள் உங்களிடம் இருக்கும்போது தான் முழுமை கிட்டும். அதனால் எங்கேயாவது ஓடிப் போய் விடலாம் என்று ஸ்டேஷனுக்கு போன பிறகும், அம்மாவை தக்கவைத்துக் கொள்ளும் வழி இதுதான் என்று தோன்றியது. வந்து விட்டேன்.” பெரும் முயற்சி செய்து பேசிக் கொண்டிருந்த சித்தூ நிற்க முடியாமல் தடாலென்று கீழே சரிந்து விட்டான்.
அபிஜித் உடனே அவனை கைகளில் தூக்கிக் கொண்டான். படியேறி மாடிக்கு வந்து தன் அறையில் கட்டில்மீது படுக்க வைத்தான். கையைப் பிடித்து பல்ஸ் பார்த்தான். பயப்பட வேண்டியது இல்லை. அபிஜித் குனிந்து சித்தூவின் நெற்றில் இதழ்களைப் பதித்தான்.
போன் ஒலித்தது. அபிஜித் போய் எடுத்தான். ஆஸ்பத்திரியிலிருந்து டாக்டர் செய்தார்.
“நீங்க அட்மிட் செய்த பையன் ஆஸ்பத்திரியை விட்டு ஓடி விட்டான். மாலை முதல் உங்களுக்கு போன் செய்துக் கொண்டிருக்கிறேன். அவன் தாய் ரொம்ப ரகளை செய்கிறாள். போலீசில் புகார் கொடுத்து இருக்கிறோம்.”
“நான் இப்போதே வருகிறேன்” என்றான் அபிஜித்
*****
“மைதிலி!” அபிஜித் அழைத்தான்.
விசிட்டர்ஸ் அறையில் உடகார்ந்து அழுது கொண்டிருந்த மைதிலி நிமிர்ந்து பார்த்தாள். அவள் முகத்தைப் பார்த்ததும் அபிஜித்தின் இதயம் இளகிவிட்டது.
அவள் கண்கள் சிவந்து இருந்தன. அவள் உயிர் கண்களில் மட்டுமே கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருப்பது தோன்றியது.
“மைதிலி!” கைகளை நீட்டி அருகில் இழுத்துக் கொள்ளப் போனான். அவள் தொலைவாக நகர்ந்து கொண்டாள். அவள் கண்களில் பயம் தென்பட்டது. “நீ தான்! நீயே தான் சொத்தூவை ஏதோ செய்து விட்டாய் அவன் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே ஊசலாடிக் கொண்டு இருக்கிறான் என்றும், வந்து காப்பாற்றச் சொல்லியும் நான் அழுதுகொண்டே உனக்குப் போன் செய்தால், அம்புலன்ஸ் மட்டும் அனுப்பி வைத்தாய். ஆனால் நீ வரவில்லை. அவனைக் கண்டால் உனக்குப் பிடிக்கவில்லை. இந்த உலகத்திலிருந்து அவனை பாதுக்காக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.”
“மைதிலி!” வீட்டுக்கு போலாம் வா.”
“வீடா! எனக்கா? எங்கே இருக்கு? எந்த வீட்டுக்கு? எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனை சாசுவதமாக தொலைத்துவிட்டு உன் வீட்டுக்கு வரச் சொல்கிறாய்?” மைதிலி அழுது கொண்டிருந்தாள்.
அபிஜித் அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டான். “எழுந்துகொள் மைதிலி! உன்னை அழைத்துப் போக வந்திருக்கிறேன்.”
“மாட்டேன். நான் வர மாட்டேன்.”
“மைதிலி! எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.”
“நான் வரப் போவதில்லை. என்னை விட்டுவிடு.”
அபிஜித் வலுகட்டாயமாக அழைத்து வந்து காரில் உட்கார வைத்தான். “நான் வர மாட்டேன்.” கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கப் போனாள்.
“மைதிலி! சித்தூ இருக்கும் இடத்திற்குக் கூட வர மாட்டாயா நீ?”
“சித்தூ! எங்கே இருக்கிறான்? கண்ணில் பட்டானா?” அவள் கண்களில் திரும்பவும் உயிர் வந்தது.
“நீ பேசாமல் இருந்தாய் என்றால் நான் அழைத்துப் போகிறேன்.”
மைதிலி மௌனமாக உட்கார்ந்து இருந்தாள்.
அவன் தோளைச் சுற்றிலும் கையைப் போடப் போன போது உதறித் தள்ளிவிட்டாள். கண்களை அகல விரித்து, “நீ என்னை ஏமாற்றவில்லை இல்லையா?” என்றாள் பயந்து கொண்டே. அவள் கண்களில் அவநம்பிக்கை!
அவன் மனதை யாரோ சிதைத்தது போல் இருந்தது.
“எப்போதாவது நான் உன்னை ஏமாற்றி இருக்கிறேனா?”
“ஏமாற்றவில்லை இருந்தாலும்.. எனக்கு எதுவும் புரியவில்லை.” அழுதுவிட்டாள். “சித்தூ உண்மையில் உயிருடன்தான் இருக்கிறானா? இல்லை பிணத்தைக் காட்டுவதற்கு அழைத்துப் போகிறாயா?”
அபிஜித் கையை நீட்டி பலமாக அவள் வாயை மூடி விட்டான். கார் அதற்குள் வீட்டுக்கு முன்னால் போர்டிகோவில் வந்து நின்றது. மைதிலி மிரட்சியுடன் பார்த்தாள்.
“என்ன இது? வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாய்? நீ என்ன ஏமாற்றி விட்டாய்.” என்றபடி காரை விட்டு இறங்கிப் போகப் போனாள். அபிஜித் கையைப் பலமாக பற்றிக் கொண்டான். மற்றொரு கையை அவள் சுற்றிலும் போட்டு அருகில் இழுத்துக் கொண்டான். வலுகட்டாயமாக அவளை பிடித்துக் கொண்டு படிகளில் ஏறி, தம் படுக்கை அறைக்குள் அழைத்து வந்தான்.
“பாரு” என்றான் அறைக்குள் அழைத்து வந்து.
மைதிலி சிலையாய் நின்றுவிட்டாள்.
அறையில் கட்டில் மீது சித்தார்த்தா தலையணையில் சாய்ந்தபடி உட்கார்ந்து இருந்தான். நர்ஸ் அவனுக்கு பழச்சாறு கொடுத்துக் கொண்டிருந்தாள்.
மைதிலியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. “சித்தூ!” ஓடி அருகில் சென்று அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
“வீட்டுக்கு வந்து விட்டேன் மம்மி! இனி எப்போதும் உனக்கு வேதனையைத் தரமாட்டேன். எனக்கு என்ன வேண்டுமோ துணிந்து நீ செய்தாய். உனக்கு என்ன வேண்டுமென்று எனக்கு தெரிந்து விட்டது. அதான் துணிந்து இங்கே வந்து விட்டேன்.””
“ஷ்! அதிகம் பேசாதே. ரெஸ்ட் எடுத்துக் கொள்” என்றான் அபிஜித். அருகில் வந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்து, “தாங்க் காட்! ஜுரம் இல்லை.”
சித்தூ அவன் பக்கம் பார்த்து விட்டு, “என்னுடைய கடவுள் நீங்க தான். உங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்” என்றான். “எனக்கு ஒரு அறையைக் கொடுத்தால் நான் நீங்கள் விரும்பியதைவிட அற்புதமாக டிசைன்ஸ் போட்டுத் தருவேன் என்று தோன்றுகிறது” என்றான்.
“அப்படியே ஆகட்டும். நான் இந்த வீட்டைக் கட்டும் போதே உனக்கு அறையை தனியாக ஏற்பாடு செய்தேன்” என்றான் அபிஜித்.
“ஒஹ்! பத்தொன்பது வருடங்கள் தாமதம் ஆனாலும் நான் அந்த அறையை கண்டுபிடித்து விட்டேன். மம்மி! நான் அதிர்ஷ்டசாலி இல்லையா?” தாயிடம் கேட்டான்.
மைதிலி சந்தோஷமாக தலையை அசைத்தாள். குனிந்து சித்தூவின் நெற்றியில் முத்தம் பதித்தாள். அபிஜித் கையை எடுக்கப் போன போது மைதிலி அந்தக் கையைப் பற்றிக் கொண்டாள். நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.
அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். பரஸ்பரம் எதிராளியின் மனதில் இருந்த சந்தோஷத்தை உணர்ந்து விட்டது போல் திருப்தியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சித்தூ முறுவலுடன் இதழ்களை லேசாக விரித்து அவ்விருவரையும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களில் சந்தோஷம் கண்ணீராய் திரையிட்டிருந்தது.
“நர்ஸ்! இனி நீ போகலாம்.” அபிஜித் அவள் கையில் இருந்த பழச்சாறை வாங்கிக் கொண்டான். நர்ஸ் போய்விட்டாள். \அபிஜித் டம்ளரைக் கையில் பிடித்துக் கொண்டு மைதிலியின் பக்கம் பார்த்தான். மைதிலி டம்ளரிலிருந்து ஸ்பூனால் எடுத்து சித்தூவுக்கு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
சித்தூ தன் இருகைகளாலும் அவிவிருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான். “தாங்க்யூ மம்மி! தாங்க்யூ!” என்றான்.
அபிஜித் முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். “தாங்க்யூ டாடீ!” என்றான் சித்தார்த்தா.
‘மம்மி! நான் அப்படித்தானே அழைக்க வேண்டும்?’ என்பது போல் தாயின் பக்கம் பார்த்தான்.
மைதிலியின் மனம் லேசாகிவிட்டது. சந்தோஷமாக மகனின் தலை மீது கையை வைத்து நெற்றியில் முத்தமிட்டாள். அதே சமயத்தில் அபிஜித்தும் சித்தூவின் கன்னத்தின் மீது இதழ்களை பதித்தான். மூவரின் வாழ்க்கையில் புதிய உற்சாகம் நுழைந்து விட்டது போல் கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது.
நிறைவடைந்தது
- பாகிஸ்தான் இளைஞர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல்களா ?
- கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது
- கோணல் மன(ர)ங்கள்
- மொழிவது சுகம் -ஆகஸ்டு 2 -2015
- இருதலைக்கொள்ளி
- காதலிக்கச்சொல்லும் வள்ளுவர் 1
- மிதிலாவிலாஸ்-29 (நிறைவு)
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 3
- உதவிடலாம் !
- பயன்
- சுந்தரி காண்டம் (சாமர்த்திய சுந்தரிகளின் சாகச கதைகள் ) 1.சிவகாம சுந்தரி
- அப்துல் கலாம்
- சுப்ரபாரதிமணியனின் ஆதாரக் கவலைகள் -தேநீர் இடைவேளை நாவல் மறுபதிப்பு : என்சிபிஎச் வெளியீடு
- இரா. பூபாலன் கவிதைகள்
- பரிசு
- என் வாழ்வின் வசந்தம்
- பந்தம்
- நிலாமகள் கவிதைகள்
- பொ கருணாகர மூர்த்தி நூற்கள் அறிமுகம்
- மாரித்தாத்தா நட்ட மரம்
- இசை: தமிழ்மரபு
- அமெரிக்கா ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- தொடுவானம் 80. ஓர் இறைத்தொண்டரின் தமிழ்த்தொண்டு
- அரபு தீபகற்பத்தில் ஜாதிகளும் ஜாதியமும்