ஆறுமுக நாவலரின் வாழ்வும் பணிகளும்

This entry is part 9 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

பாச்சுடர் வளவ. துரையன்

தமிழ் மொழியில் பண்டைக் காலம் தொட்டே உரைநடை என்னும் வகைமை இருந்து வந்துள்ளது. தொல்காப்பியர்,
“பாட்டிடை வைத்த குறிப்பி னானும்
பாவின் றெழுந்த கிளவி யானும்
பொருண்மர பில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளொடு புணர்ந்த நகைமொழி யானுமென்று
உரைநடை வகையே நான்கென மொழிப”
என்று குறிப்பிடுவதிலிருந்து உரைநடையின் இருப்பை நாம் உறுதியாக உணர முடிகிறது. ஆனால் உரைநடை நூல்கள் தொடக்கத்தில் இல்லை. அக்காலத்திய நூல்கள் எல்லாம் பெரும்பாலும் செய்யுள் வடிவில்தான் இருந்தன. சில காலம் கழித்து செய்யுளும் உரை நடையும் கலந்த நூல்கள் வெளி வரத் தொடங்கின. பிற்காலத்தில் ஐரோப்பியர் வருகையின் காரணமாகத்தான் தமிழ் உரைநடை புத்தொளி பெற்றது எனலாம். காலப்போக்கில் வளர்ந்து வந்த உரைநடை பத்தொன்பதாம் நூற்றாண்டில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில்தான் அது செழுமை பெறத்தொடங்கியது எனலாம். தமிழ் உரை நடை வளர்ச்சியில் ஆறுமுக நாவலரின் தொண்டு அளப்பிடற்கரியதாகும்.
ஆறுமுக நாவலரின் உரைநடை ஆற்றலைக் கண்டு வியந்த பரிதிமாற் கலைஞர் “ஆங்கில உரைநடைக்கு டிரைடன் [Dryden] போன்று தமிழ் உரைநடைக்கு ஆறுமுக நாவலர் சிறந்து விளங்கினார்” என்று போற்றுகிறார். மேலும் அவர் நாவலரை “வசன நடை கை வந்த வள்ளலார்” என்றும் கூறிப் புகழ்கிறார்.
ஆறுமுக நாவலர் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் என்ற ஊரில் தோன்றினார். அவர் 1822- ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 18- ஆம் நாள் அதாவது தமிழ் ஆண்டாம் சித்திர பானு மார்கழி மாதம் 5- ஆம் நாள் அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை மற்றும் சிவகாமி அம்மையார் என்பாருக்கு கடைசி மகனாகப் பிறந்தார். அவருக்கு நான்கு சகோதார்களும் மூன்று சகோதரிகளும் உடன் பிறந்தாராக இருந்தனர். நாவலரின் தந்தையார் கந்தப்பிள்ளை அரசுப்பணியில் இருந்ததோடு தமிழ் அறிஞராகவும் திகழ்ந்தார். நாவலருக்குப் பெற்றோர் இட்ட பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும்.
ஆறுமுக நாவலரை அவர்தம் ஐந்தாம் அகவையில் கல்வி கற்கப் பணித்தனர். அவர் அப்போது நல்லூரில் சிறந்த ஆசிரியராக இருந்த சுப்பிரமணியம் என்பாரிடம் தமிழ் மொழி பயின்றதோடு, நீதிநூல்களையும் கற்றார். நாவலரின் ஒன்பதாம் வயதில் அவர் தந்தையர் கந்தப்பிள்ளை காலமானார். பிறகு நாவலரின் மூத்த அண்ணன் அவரை சரவணமுத்துப் புலவரிடம் கல்வி கற்க அனுப்பினார். சில காலம் கழித்து சரவணமுத்துப் புலவரின் ஆசிரியராகிய சேனாதிராச முதலியாரிடம் நாவலர் உயர் கல்விக்காகச் சேர்ப்பிக்கப்பட்டார். ஆறுமுக நாவலர் தம் பன்னிரண்டாம் வயதிலேயே தமிழ் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்து புலமை பெற்றார்.யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் மெதடிஸ்த ஆங்கிலப் பள்ளி என்பது முன்னணியில் சிறந்து விளங்கிய பாடசாலையாகும். அதுவே பிற்காலத்தில் யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரி என்றாகிற்று. அங்கு பயின்ற நாவலர் ஆங்கில மொழியிலும் வல்லுனரானார். மேலும் அவர் தம் இருபதாவது வயதில் அப்பள்ளியிலேயே ஆசிரியரானார். அப்போது அப்பள்ளியை பேர்சிவல் பாதிரியார் என்பவர் நிறுவி நடத்தி வந்தார். அந்தப் பாதிரியார் விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்க்க முனைந்தபோது அப்பணிக்கு நாவலர் பெரும் உதவி புரிந்தார். பாதிரியாருடன் சென்னை சென்று அம்மொழிபெயர்ப்பை அச்சிடவும் அவர் துணை நின்றார்.
ஆறுமுக நாவலர் தமிழில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்ததோடு, சைவ சமயத்திலும் தீவிர கவனம் கொண்டிருந்தார். தமிழையும் சைவத்தையும் தம் இரு கண்களாகக் கருதினார். சைவ சமய வளர்ச்சியில் மிகுந்த ஆர்வம் காட்டினார். சைவ சமயத்தின் மேன்மையை அனைவரும் உணரும் வண்ணம் சொற்பொழிவுகள் ஆற்றத் தொடங்கினார். அவரது முதல் சொற்பொழிவு வண்ணார் பண்ணை என்னும் ஊரிலிருந்த வைத்தீஸ்வரன் கோவிலில் 1847- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் நாள் நடைபெற்றது. அதற்குப் பிறகு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அவர் தொடர்ந்து சொற்பொழிவாற்ற மக்களுக்கு சைவத்தின் பெருமை தெரிய ஆரம்பித்தது.
மேலும் சைவ சமயத்திற்குத் தொண்டாற்று முகத்தான் அவர் வண்ணார்பண்னையில் சைவப்பிரகாச வித்தியாசாலை எனும் பெயரில் ஒரு சைவப்பாடசாலை தொடங்கினார். அதன் பின்னர் அவர் தம் முழு நேரத்தையும் சைவ வளர்ச்சிக்காகவே செலவிடத் தீர்மானித்தார். அதன் பொருட்டு 1848- ஆம் ஆண்டு செப்டம்பரில் தம் ஆசிரியப் பணியைத் துறந்தார். சைவ சமயம் தொடர்பான பாட நூல்கள் அப்போது பிள்ளகளுக்குத் தேவையாயிருந்தன. நாவலர் அப்புத்தகங்களைத் தாமே அச்சிட எண்ணம் கொண்டார். எனவே அச்சு இயந்திரம் ஒன்று வாங்கக் கருதினார். அதற்காக நல்லூர் சதாசிவம் பிள்ளை என்பாருடன் 1849 –ஆம் ஆண்டு ஆடி மாதம் சென்னை சென்றார். அப்போது திருவாடுதுறை ஆதீனத்தில் அவர் சைவச் சொற்பொழிவாற்றினார். அதைப் பாராட்டிய திருவாடுதுறை ஆதீனகர்த்தர் நாவலர் எனும் பட்டத்தை அவருக்கு வழங்கினார். அப்போது நாவலருக்கு அகவை 27 ஆகும். சென்னையில் அவர் சில காலம் தங்கி இருந்தார். அப்போது சூடாமணி மற்றும் நிகண்டுரையும் பதிப்பித்ததோடு சௌந்தர்யலகரி உரையையும் அச்சிட்டார். பிறகு ஓர் அச்சியந்திரம் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.
தம் இல்லத்திலேயே ’வித்தியானுபாலனயந்திரசாலை’ எனும் பெயரில் அச்சுக்கூடம் ஒன்று நிறுவினார். அந்த அச்சுக் கூடத்தில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் உரை, சிவாலயதரிசனவிதி, சைவசமயசாரம், கொலைமறுத்தல், நன்னூல் விருத்தியுரை, திருச்செந்தினிரோட்டக யமகவந்தாதி உரை, திருமுருகற்றுப்படை உரை, போன்ற நூல்களை அச்சிட்டார். மேலும் திருத்தொண்டர் பெரியபுராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஞானக்கும்மி, ஏசுமத பரிகாரம், வச்சிரதண்டம் ஆகிய நூல்களையும் வெளியிட்டார். சென்னையிலும் அவர் தங்கசாலைத்தெருவில் வித்தியானுபாலன இயந்திரசாலை எனும் பெயரில் ஓர் அச்சுக்கூடம் தொடங்கினார். அதன்மூலம் திருவாசகம், திருக்கோவையார் போன்ற நூல்களை 1859- ஆம் ஆண்டு வைகாசி மாதம் வெளியிட்டார். மேலும் மூன்றாண்டுகள் தமிழ் நாட்டில் தங்கியிருந்த நாவலர் சென்னை, திருவாவடுதுறை, திருநாகைக்கோராணம் ஆகிய இடங்களில் சைவச் சொற்பொழிவுகள் ஆற்றினார். 1862 பங்குனியில் யாழ்ப்பாணம் சென்றார்.
பின்னர் 1863 –இல் மீண்டும் தமிழகம் வந்த நாவலர் இராமநாதபுரம் சமஸ்தானம் சென்று அங்கு சொற்பொழிவுகள் ஆற்றினார். பிறகு மதுரை சென்ற அவர் மீனாட்சியம்மன் கோயிலில் சொற்பொழிவு ஆற்றினார். அங்கே அவர் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கப் பெற்ற பரிவட்டமும், பூமாலையும் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் சென்று அவர் சொற்பொழிவு ஆற்றிய போது அவரைச் சிறப்பிக்க எண்ணியவர்கள் அவரைப் பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள் ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல வாத்தியங்கள் முழங்க பட்டணப்பிரவேசம் செய்வித்தார்கள். பிறகு திருப்பெருந்துறை, திருப்பள்ளிருக்கு வேளூர் சீர்காழி ஆகிய ஊர்களுக்குச் சென்று வணங்கிய பின்னர் சிதம்பரம் சென்றார். அங்கு 1864 ஐப்பசியில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். அதுவே ஆல்போலப் பெருகி இன்றும் 150 ஆண்டுகள் கடந்து ஆறுமுக நாவலர் புகழைப்பேசி வருகிறது.
1864 மார்கழியில் மீண்டும் சென்னை வந்த நாவலர் நூல்கள் அச்சிட்டும் சைவச் சொற்பொழிவுகள் ஆற்றியும் தமிழ்த்தொண்டு புரிந்தார். இக்காலக்கட்ட்த்தில்தான் அவர் வள்ளலார் எனப்படும் இராமலிங்கம் பிள்ளையின் திருவருட்பாவை ஒரு சில ஆலய உற்சவங்களில் திருமுறைகள்ளுக்குப் பதிலாகப் பாடுவதைக் கண்டித்து போலியருட்பா மறுப்பு எனும் நூலை வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்ற போது சிலர் தம்மைத் தாக்கியதாக நாவலர் மீது மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க அந்த வழக்கில் தொடுத்தவர்களுக்கே அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. நாவலர் பிறகு தருமபுரி, திருவிடைமருதூர், திருவேட்டக்குடி, காரைக்கால் கோடிக்கரை ஆகிய தலங்களுக்குச் சென்ற பிறகு 1870 பங்குனியில் யாழ்ப்பாணம் திரும்பினார்.
அதே ஆண்டில் கோப்பாயில் ஒரு பாடசாலையைத் தொடங்கித் தம் சொந்த செலவில் அவர் நடத்தினார். 1872 இல் வண்ணார்பண்ணையில் சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றைத் தொடங்கினாலும் போதிய நிதி வசதி இல்லாததால் அதை நான்கு ஆண்டுகள்தாம் நடத்த முடிந்தது. இத்தனை ஆண்டுகளாய்த் தாம் பெற்ற அனுபவங்களை எல்லாம் தொகுத்து நாவலர் யாழ்ப்பாணச் சமயநிலை எனும் நூலை 1872 ஐப்பசியில் வெளியிட்டார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் நிறைய நூல்கள் எழுதினார் எனலாம்.
அவையாவன : நன்னூல் விருத்தியுரை, நைடத உரை, திருவிளையாடற் புராணம், நன்னூல் காண்டிகை உரை, சிவ பூசாவிதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம் பண்ணும் விதி, சிரார்த்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சம்ஸ்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி,
ஆறுமுக நாவலரின் உரை மிகத்தெளிவாகவும், அதே நேரம் மனத்தில் இடம் பெறக்கூடிய வகையில் எளிதாகவும் இருக்கும். சான்றாக ஒன்றைப் பார்க்கலாம். இது நீதி வெண்பாவின் பாடல் :
“நன்றறியாத் தீயோர்க் கிடங்கொடுத்த நல்லோர்க்குத்
துன்று கிளைக்கும் துயர்சேரும்—குன்றிடத்தில்
பின்னிரவில் வந்தமரும் பிள்ளைக் கிடங்கொடுத்த
அன்னமுதற் பட்டதுபோ லாம்”
இதற்கு நாவலரி உரை இது:
“எவராலும் ஏற முடியாத ஒரு பெரிய மலைக்குகையில் ஓர் அரச அன்னம் அன்னப்பட்சிகளோடு வாசம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் இரவு பெருமழையினால் வருந்திய ஒரு காக்கை, தான் இருக்க இடம் கேட்டது. மந்திரியாகிய அன்னம் காக்கைக்கு இடம் கொடுக்கலாகாது என்று சொல்லவும், அரச அன்னம் அதன் சொல்லைக் கேளாமல் காக்கைக்கு இடம் கொடுத்தது. காக்கை அன்று இரவில் அங்கே தங்கி எச்சமிட அவ் எச்சத்தில் இருந்து ஆலம் வித்து முளைத்து எழுந்து பெரிய விருக்ஷமாகி, விழுதுகளை விட்டது. ஒரு வேடன் விழுதுகளைப் பற்றிக்கொண்டு அம்மலையிலேறிக் கண்னி வைத்து அன்னங்களைப் பிடித்தான்.”
ஒருமுறை ஆறுமுக நாவலர் வழக்கு ஒன்றில் நீதி மன்றத்தில் சாட்சியம் அளிக்க வேண்டியிருந்தது. நாவலர் தம் சாட்சியத்தை ஆங்கிலமொழியில் பதிவுசெய்ய ஆரம்பித்தார். ஆனால் குறுகிய எண்ணம் கொண்ட நீதிபதியோ தமிழில் சொல்ல உத்தரவிட்டார்.
உடனே நாவலர், “எல்லி எழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி” என்று தொடங்கினார். அதை ஆங்கில் நீதிபதிக்கு மொழிபெயர்க்க இருந்த மொழிபெயர்ப்பாளர் திணறினார். சினம் கொண்ட நீதிபதி ஆங்கிலத்தில் பேசக் கூறினார். மறுத்த நாவலர் மீண்டும் தமிழிலேயே பேச நாவலரின் மாணவர் ஒருவர் அதை மொழிபெயர்த்தார்.
”சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது” என்பது அவர் கூறியதன் பொருளாகும். எல்லி, ஆழிவரம்பு, கால் ஏற்று, காலோட்டம், புக்குழி எனும் சொற்களுக்கு முறையே சூரியன், கடற்கரை ஓரம், காற்று வாங்க, சிறுநடை, புறப்பட்டபோது என்பவை பொருள்களாகும்.
போர்த்துகீசியரால் அழிக்கப்பட்ட நகுலேஸ்வரம் என்னும் ஒரு தொன்மையான சிவன் கோயிலை அவர் யாழ்ப்பாணத்தில் மீண்டும் உருவாக்க பெருமுற்சி செய்தார்.
ஆறுமுக நாவலர் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் 1879- ஆம் ஆண்டு சுந்தரமூர்த்தி சுவாமிகளின் குருபூசை நடந்த ஆடிச்சுவாதியன்று நிகழ்த்திய உரையே அவரின் இறுதிச் சொற்பொழிவாகும்.
1879 –ஆம் ஆண்டு அதாவது பிரமாதி வருடம் கார்த்திகை மாதம் 18 –ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அவரது உடல்நலம் குன்றத்தொடங்கியது. தொடர்ந்து அவரால் குளிக்க முடியவில்லை. எனவே அவர்தம் நித்திய பூசை முதலானவை வேதாரண்யத்தைச் சார்ந்த ஒரு சிவாச்சாரியாரால் நடத்தப்பட்டது.
1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 05 ஆம் நாள் வெள்ளிக்கிழமை நாவலர் தேவாரம் ஓதச்செய்தார். அதைச்ச் செவிமடுத்துக்கொண்டே சிதம்பரம், காசி, மதுரை. திருச்செந்தூர், முதலான தலங்களின் விபூதி தரித்துக்கொண்டார்.
உருத்திராட்சம் பூண்டார். தம் கைகளைச் சிரசின் மேல் வைத்து அன்று இரவு ஒன்பது மணியளவில் ஆறுமுக நாவலர் இவ்வுலக வாழ்வை நீத்து சிவபெருமானின் திருவடி சேர்ந்தார்.
யாழ்ப்பாணத்தில் அவதரித்துச் சைவம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டையும் தம் கண்களாகப் போற்றிய ஆறுமுக நாவலர் ஆற்றிய சொற்பொழிவுகளும், எழுதிய நூல்களும், பதிப்பித்த நூல்களும் அவரால் தொடங்கப்பட்டு இன்றுவரை நடந்து வரும் பள்ளிகளும் அவரை என்றும் நம் மனத்தில் இருத்திக்கொண்டே இருப்பதால் அவர் என்றும் நம்மிடையே வாழ்கிறார் என்று உறுதியாகக் கூறலாம்.

பாச்சுடர் வளவ. துரையன்
தலைவர், இலக்கியச்சோலை,
20, இராசராசேசுவரி நகர்,
கூத்தப்பாக்கம் கடலூர், 607 002.
பேசி : 9367631228

Series Navigationவிலைத. அறிவழகன் கவிதைகள்
author

வளவ.துரையன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    ஸ்ரீ வளவ துரையனார் ஸ்ரீ வைஷ்ணவபரமாகவே வ்யாசங்களைச் சமர்பிப்பதாக எண்ணியிருந்தேன். அல்லது நான் வாசித்தவை அனைத்தும் அப்படியோ தெரியவில்லை.

    இந்த வ்யாசத்தை வாசிக்கையில் நினைவெலாம் நாவலர் பெருமானின் திருவடித்தாமரைகளில் ஆழ்ந்திருந்தன என்றால் மிகையாகாது. இவரது பெருமை மிக்க மாணாக்கர்களில் ஒருவர் காசிவாசி செந்திநாதைய்யர். இவரும் தமிழ் மொழிக்கும் சைவ சமயத்துக்கும் பெருந்தொண்டாற்றிய பெருந்தகை.

    தமிழ் மொழிக்கும் சைவ சமயத்துக்கும் சிதம்பரேசன் அருளிய அருட்கொடை போலும் ஆறுமுக நாவலர் பெருமான்.

    திருச்சிற்றம்பலம். சிவசிதம்பரம்.

  2. Avatar
    BS says:

    //இக்காலக்கட்டத்தில்தான் அவர் வள்ளலார் எனப்படும் இராமலிங்கம் பிள்ளையின் திருவருட்பாவை ஒரு சில ஆலய உற்சவங்களில் திருமுறைகளுக்குப் பதிலாகப் பாடுவதைக் கண்டித்து போலியருட்பா மறுப்பு எனும் நூலை வெளியிட்டார். 1869 ஆனியில் சிதம்பரம் சென்ற போது சிலர் தம்மைத் தாக்கியதாக நாவலர் மீது மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க அந்த வழக்கில் தொடுத்தவர்களுக்கே அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. //

    திருவருட்பாவை ஆறுமுக நாவலர் வெறுத்து நகையாடினார் என்று வளவ துரையன் எழுதுகிறார். என்ன காரணமாகவிருக்கும்? திருமுறைகளுக்குப் பதிலாகத்தானே பாடினார்கள்? வள்ளலாரும் சைவக்கடவுளரைத்தானே போற்றினார்! என்ன தவறு இருக்க முடியும்? அவரவருக்குப் பிடித்ததைப் பாடும்போது நாவலருக்கு ஏன் கடுப்பு ஏற்பட்டது? சிலர் தாக்கினார்கள்! அவர்களெல்லாம் வள்ளலார் சப்போர்ட்டர்களா>

    இலக்கியவாதிகள் மோதிக்கொள்கிறார்கள்; அரசியல் வாதிகள் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக மோதுகிறார்கள். எல்லாருக்கும் அன்பைப்போதிக்கவேண்டிய‌ ஆன்மிகவாதிகளும் அரசியல்பண்ணுகிறார்கள். யாரைதான் நம்புவது என்று தெரியவில்லை.

    வளவதுரையனின் சொற்களைக் கவனியுங்கள்: ” வள்ளாலார் எனப்படும் இராமலிங்கம் பிள்ளை. அதாவது இவருக்கு வளளலார் இல்லை. இவரைப்பொறுத்தவரை அவர் வெறும் பிள்ளை ஜாதிக்காரர் மட்டுமே.”

    ஒருதடவை நான் இலக்னோ போயிருந்த போது அங்குள்ளவர்கள் சொன்னாரகள்: இங்கே எல்லாமே அரசியல்தான். டீ குடித்தாலும் அரசியல், குடிக்கவிட்டாலும் அரசியல். நடந்தாலும், ஓடினாலும் நின்றாலும் அரசியல், தொட்டவிடமில்லாம் நீக்கமற அரசியல்.

    அதைப்போல நம்மூர் ஆன்மிகத்தை கூட அரசியல் விடவில்லை.

  3. Avatar
    ஷாலி says:

    இந்து மதத்தில் ஆறுமுக நாவலரின் மிக முக்கிய பாத்திரம் மனு தர்ம சித்தாந்தத்தை வெள்ளாள மயப்படுத்தி சைவ சித்தாந்தமாக்கியதே. நாவலர் சூத்திரரான வெள்ளாளரை சைவ சித்தாந்த முறைப்படி தூய்மைப்படுத்தும் கருத்தியலை மேற்கொண்டு வெற்றியும் கண்டார். நாவலரின் சைவ வினா விடை மனுதர்மத்தின் யாழ்ப்பாண வடிவமே. நாவலர் சைவசமயிகளை ஆதிசைவர், மகாசைவர், அநுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்தியசைவர் என அறு வகையாக பிரிக்கிறார். இங்கு அவாந்தர சைவராக வரிசைப்படுத்தப்படும் சூத்திரர் சிவதீட்சை மூலம் தெய்வீகப்படுத்தப்படும் முறையை நாவலர் அறிமுகப்படுத்துகிறார். இது மனு சாத்திரத்தின் சிந்தனைமுறையை கையாண்டு சூத்திரரான வெள்ளாளர் ஆன்மீக தளத்தில் உயர்த்தப்பட்ட விடயமே.

    அது தவிர, சிறு தெய்வ கண்ணகி வழிபாடு போன்ற சமய நடவடிக்கைகளை எதிர்த்ததன் மூலம் நாவலர் வெள்ளாளருக்கான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட சமய கலாச்சார மேலாதிக்கத்தை உருவாக்கினார். சைவ ஆகம மயப்பட்ட சமயாசாரங்கள், விரதங்கள் போன்றவை இந்தியாவை விட அதிகப்படியாக யாழ்ப்பாணத்தில் இன்றும் தொடர்வதற்கு நாவலரின் நவீனத்துவ சைவ வழிமுறை அடிப்படை.

    நாவலரின் பங்கு வெள்ளாளரின் சாதிய தூய்மையாக்கலுடன் சேர்ந்து கலாச்சார தளத்தில் அவர்களுக்கான புதிய அந்தஸ்தை கொடுத்தது. சாதிய அடுக்கு முறையும் காலனித்துவ நிறவாத சிந்தனையும் எவ்வாறு ஒத்தோடின என்பதற்கு தேசவழமை சட்டமூலமாக்கப்பட்ட்மை சிறந்த உதாரணம்.

    தேசவழமை சரத்து இல.5 (1869) – 4 ( தற்போது நடைமுறையில் இல்லை) இவ்வாறு கூறுகிறது: “இம்மாகாணத்தின் உரித்துகள் உரிமைகள் சம்பந்தமான முடிவுகளானது இம்மாகாணத்தில் தொன்று தொட்டு கடைப்பிடித்துவரும் வழமைகள், நடைமுறைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். இந்த உரித்தும் உரிமையும் உயர்சாதியினருக்கும் -குறிப்பாக வேளாளருக்கும், தாழ்ந்த சாதியினருக்கும் –குறிப்பாக பள்ளர், நளவர், கோவியர் போன்றாருக்கும் இடையே நிலவும் உறவு முறையிலிருந்தே எழுகிறது.

    தேசவழமை காலனித்துவ காலத்தில் சட்டமூலமாகி வெள்ளாளரின் அரசியல், பொருளாதார மேலாதிக்கத்தை வலுப்படுத்தியதும் கலாச்சார தளத்தில் வெள்ளாளர் ஆன்மீக அந்தஸ்து அடைந்ததும் வெள்ளாளரின் அரசியல் சமூக அந்தஸ்தை மேலும் உரமாக்கியது.

    நாவலர் எழுதிய “சைவ வினா-விடை” என்ற நூலில், விபூதி பூசும் போது பின்பற்ற வேண்டிய விதிகளைக் கூறுகிறார். அதில் ஒன்று. “விபூதி பூசும் போது எதிரே கீழ் சாதியினர் வரக் கூடாது.” பிராமணர்கள் வேதம் ஓதும் பொழுது சூத்திரர்கள் எதிரே வரக் கூடாது என்று எழுதி வைத்த மனுவுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்? மனு சூத்திரர்களை பிராமண (இந்து) மதத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை. அதே போல ஆறுமுக நாவலரும் தாழ்த்தப்பட்ட சாதியினரை சைவ சமயத்தை சேர்ந்தவர்களாக கருதவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *