25 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் போய்க்கொண்டிருக்கிறேன். அன்று மருத்துவக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்த ஊர் இப்போது வல்லத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது. விமானம் ஓடுதளம் மாதிரி சாலைகள். அதிகமான பேருந்துகள், லாரிகள். எதையோ தேடி அலைந்து கொண்டிருக்கும் மக்கள். இதோ கந்தக நிறத்தில் சூரிய வெளிச்சத்தில் கம்பீரமாகத் தெரிகிறது பெரியகோவில். ‘இவ்வளவு நாளா எங்கடா போயிருந்தே?’ என்று கேட்பது போல் இருக்கிறது. அது சரி. நான் தஞ்சாவூருக்கு ஏன் வருகிறேன் தெரியுமா? என் வாழ்க்கையின் முகவரி எழுதப்பட்டது தஞ்சாவூரில்தான். அதை எழுதியவன் என் நண்பன் சுப்ரா என்கிற சுப்ரமணியம். அவனைப் பார்க்கத்தான் இப்போது போய்க் கொண்டிருக்கிறேன். தாடி மீசை பெரிதாக வளர்த்திருப்பானோ, முடி மொத்தமும் உதிர்ந்திருக்குமோ, அந்த அரிசிப் பற்கள் ஒருசில காணாமல் போயிருக்குமோ. ‘டேய் அதான் பாக்கப் போறியல்ல. அதுக்குள்ள என்னடா அவசரம்’ மனசுக்குள்ளிருந்து ஒரு கேள்வி என்னை அதட்டியது. ‘ஆமாம். தேவையில்லைதான்’ என்று அதற்கு பதில் சொல்லிவிட்டு அமைதியானேன். ‘தயவுசெய்து 40 ஆண்டுகள் என்னோடு பின்னோக்கி பயணியுங்கள் பிளீஸ்.’
1965. இந்த ஆண்டில்தான் சரபோசி கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்கிறேன். இப்போது பிளஸ் 2 என்கிறோமே அதுதான் அது. எனக்கு நினைவு தொடங்கிய காலம் முதல் அவர் கட்டியிருந்த ஃபேவர்லூபா கடிகாரத்தை என் கையில் கட்டிவிட்டு அனுப்பிவைத்தார் அத்தா. கூரிய நாசியும் எம்ஜியார் சிவப்புமாய் ராதாகிருஷ்ணன் என்ற ஆசிரியர் கணக்குப் பாடம் நடத்தினார். அப்போதெல்லாம் ஆசிரியர்கள் நீயா நானா கோபிநாத் மாதிரி கோட்டு போட்டுக் கொண்டுதான் பாடம் நடத்த வேண்டும். ரிமைண்டர் தியரம் ஃபேக்டர் தியரம் நடத்தி முடித்துவிட்டு இரண்டாவது வாரம் ஒரு தேர்வு வைத்தார். 30க்கு 30 வாங்கியது நான்மட்டும்தான். விடைத்தாள்களைக் கொடுத்துவிட்டு ராதாகிருஷ்ணன் சார் சொன்னார். ‘நான் சொல்லிக் கொடுத்து இவ்வளவு கேவலமாக நீங்கள் தோற்றிருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது. நான் சொல்லிக் கொடுத்தது புரியவில்லையென்றால் ரஜித் {என் பெயர் இதுதான்) எப்படி 30க்கு 30 வாங்கினான். ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்வது ஹோட்டலில் சாப்பிடுவது மாதிரி. சக நண்பனிடம் கற்பது வீட்டில் சாப்பிடுவது மாதிரி. ரஜித்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மறந்துவிடாதீர்கள். இந்த வயதில் நீங்கள் கணக்கைக் கவனித்துக் கொண்டால் எதிர்காலத்தில் கணக்கு உங்களைக் கவனித்துக் கொள்ளும்.’ எவ்வளவு தீர்க்கதரிசனமான வார்த்தைகள். இப்பவும் என்னை கணக்குதான் வாழவைத்துக் கொண்டிருக்கிறது.
அடுத்த நாள் என் அருகில் வந்து அமர்ந்தான் சுப்ரா. ‘இனிமே எப்போதும் உன் பக்கத்தில் உட்காரலாமா?’ என்று முகம் குனிந்து கண்களை உயர்த்திக் கேட்டான். ஆடையால்தான் அவனை ஆண் என்று சொல்லமுடியும். சட்டையைக் கழற்றிவிட்டு ஒரு தாவணியைச் சுற்றினால் அசல் பெண்தான். பெண்ணியம் நிரம்பி வழிகிறது. கொஞ்சும் சலங்கை, பாவைவிளக்கு போன்ற படங்களில் அன்று கலக்கிய குமாரி கமலாவை நினைவுபடுத்தினான். அந்தப் பெண்ணுக்குத் தம்பியாக இருப்பானோ? அந்த நளினம் எனக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொரு வார்த்தையையும் அபிநயத்தோடு பேசினான். கட்டை வண்டியையே என்னால் கற்பனை செய்யமுடியாத காலம். அவன் காரில் வந்து இறங்கினான். வீட்டுக்குப் போக மீண்டும் கார் வரும். உடனே செல்லவேண்டுமென்றால் கார் காத்திருக்கும். தஞ்சாவூரில் பெயர் சொன்னால் புரிந்து கொள்ளும் ஒரு சிலரில் வெங்காலாட்ஜ் வெங்கட்ராமணும் ஒருவர். அவர் மகன்தான் இந்த சுப்ரா என்று பிறகு தெரிந்துகொண்டேன். எவ்வளவு பெரிய குடும்பம். அவனருகில் உட்கார நானல்லவா கெஞ்சவேண்டும். அவன் கெஞ்சுகிறான். அந்த எளிமை எனக்குப் பிடித்திருந்தது.
புதிய மாணவர்களை வரவேற்கும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் அங்கமாக ஒரு பரதநாட்டியம் இடம்பெற்றது. அரங்கு நிரம்பி வழிந்தது. தங்கமுலாம் பூசிய மெழுகு பொம்மை மாதிரி ஒரு பெண் மேடையில் தோன்றினார். இசைத்தட்டு ‘முகத்தில் முகம் பார்க்கலாம்’ என்ற தங்கப்பதுமை பாடலை இசைத்தது. பாடலே பஞ்சுமெத்தையில் தூக்கித்தூக்கிப் போடும் சுகம். அதோடு நடனமும் சேர்ந்தால்? அப்பப்பா! என்ன ஒரு உயிர்த்துடிப்பான நடனம். நடுக்கடல் அமைதியில் மாணவர்கள். நடனம் முடிந்தது. கடல் அலைகளாய் கைதட்டினார்கள். பின்னால் இருவர் பேசிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது. ‘நம்ம பி1 கிளாஸ் சுப்ரமணியம்தாண்டா அந்தப் பொண்ணு.’ அட! நம்ம சுப்ராவா? பி1 என்பது என் வகுப்புதான். கூட்டத்தை விலக்கிக்கொண்டு மேடைக்குப் பின்னால் போகிறேன். சுப்ரா ஆடிமுடித்துவிட்டு அப்போதுதான் பின்பக்கம் வந்தான். அட! ஆமாம். நம்ம சுப்ரா. இப்படி ஒரு கலை இவனிடம் இருப்பதை இவன் சொல்லவே இல்லையே. ஒரு மிகப்பெரிய கலைஞன் என்னிடம் இருக்கும் சாதாரணமான ஒரு திறமையை எப்படிப் பாராட்ட முடிகிறது? என் மனசுக்குள் அந்த சுப்ரா என்ற சுடர் மேலும் சுகமாக எரிகிறது. அந்த எளிமையை நான் வணங்கினேன். அன்றுமுதல் வகுப்பில் முகத்தில் இரண்டு கண்கள்போல் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம். ஒன்றையே பார்த்தோம்.
ஒருநாள் மிகவும் சோர்வாக சற்றுத் தாமதமாக வகுப்புக்கு வந்தான் சுப்ரா. காய்ச்சல் என்றான். அருகில் அமர்ந்தான். நெற்றியில் என் உள்ளங்கையைப் பரப்பினேன். சுட்டது. வாந்தி வருகிறது என்பதுபோல் அபிநயித்தான். என் டெஸ்கில் இருந்த எல்லாருமே தெறித்து விலகினார்கள். நான் இரு கைகளையும் அவன் வாய்க்கருகில் கொண்டுபோய் ‘வாந்தி வந்தால் எடு’ என்றேன். என் கைகளை தட்டிவிட அவன் கை உயர்ந்தது. வாந்தி வந்துவிட்டது. கொட்டாவியும் தும்மலும் கேட்டா வருகிறது. ஒரு சொட்டு கூட வகுப்பறையில் விழுந்துவிடாமல் அப்படியே வெளியே கொட்டிவிட்டு கை கழுவினேன். அவன் தோளில் கைபோட்டு அவன் காருக்கு அழைத்துச் சென்றேன். கார் அவனுக்காக அன்று காத்திருந்தது. அன்று ராதாகிருஷ்ணன் சார் தேர்வு வைத்திருந்தார். அன்று தேர்வை இருவருமே எழுதவில்லை. நானும் காரில் அவனோடு வீடுவரை சென்றேன். என் கைகளைப் பொத்திக்கொண்டு அழுதான். ‘ஒனக்குப் பெரிய கஷ்டத்தைக் கொடுத்துட்டேண்டா.’ என்றான். அந்த நிகழ்ச்சி எங்களுக்குள் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது.
அப்போதெல்லாம் மாணவர்களை இரண்டு கூறாகப் பிரித்துவிடலாம். சிவாஜி ரசிகன், எம்ஜியார் ரசிகன் என்று. நான் இரும்புத்திரை, மரகதம் போன்ற படங்களுக்குப் பின் சிவாஜியின் அசைக்கமுடியாத ரசிகனாகி யிருந்தேன். சுப்ராவின் குடும்பமே சிவாஜிக்கு வேண்டியவர்களாம். சிவாஜி சூரக்கோட்டை வந்தால் வெங்கா லாட்ஜிலிருந்துதான் சாப்பாடு. வெங்கா லாட்ஜின் நெய்தோசையை சாப்பிடுவதற்காகவே அவர் சூரக்கோட்டை வருகிறார் என்று சுப்ரா சொன்னான். அடுத்த முறை சிவாஜி வரும்போது நாள் முழுக்க நான் அவரோடு இருக்கலாமாம். சுப்ரா சொன்னான். இது சாத்தியமா? என் தலையில் கொம்பு முளைத்தாலும் நான் நம்புவேன். இதை என்னால் நம்ப முடியவில்லை. அந்த வார்த்தைகள் எனக்குள் இனித்துக் கொண்டே இருந்தது. அப்போது நீலவானம் வெளியாகியிருந்தது. எங்கள் விடுதிக் காப்பாளர் ரொம்பவும் கண்டிப்பானவர். 7முதல் 10வரை படிக்கும் நேரம். எல்லாரும் அவரவர் அறைகளில் கண்டிப்பாக இருக்கவேண்டும். நீலவானம் பலர் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலை ‘பாசமலரைத் தூக்கி சாப்பிட்டுவிட்டது’ என்று சிலர் என்னை ஏத்திவிட்டார்கள். அடுத்த நாள் ஞாயிறு. மாலைக்காட்சிக்கு 2 மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டேன். பகல் காட்சிக்கு டிக்கட் கிடைக்காதவர்கள் அப்படியே வரிசையில் நின்றுவிட்டார்கள். யாகப்பா டாக்கீஸிலிருந்து காவிரிக்கரை வரை வரிசை நீண்டிருந்தது. காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள். நானும் வரிசையில் நின்றுகொண்டேன். கிடைக்கும் என்ற நம்பிக்கையில். கவுண்டருக்குள் மூன்று கைகள் ஒரே சமயம் நுழையும். ஒரு கை வெளியானாலும் மறுகை நுழைந்துவிடும். என் முறை வந்தது. கையை உள்ளே விட்டேன். டிக்கட் கொடுத்தவர் வெளியேறிவிட்டார். டிக்கட் முடிந்துவிட்டதாம். முகத்தில் சப்பென்று அறைந்ததுபோல் வலித்தது. கையை உருவினேன். என் ஃபேவர் லூபா கடிகாரம் களவாடப்பட்டிருந்தது. தேர்வு எழுதும்போது பேனா உடைந்ததுபோல் கலங்கினேன். மேனேஜரைப் பார்க்கலாம் என்று தீர்மானித்தேன். அவர் சுப்ராவுக்கு மாமா முறை. ஒரு தடவை அறிமுகப்படுத்தி யிருக்கிறான். மேனேஜர் அறைக்குச் சென்றேன். அட, அங்கே சுப்ராவும் இருந்தான். ஓடி வந்து என் கைகளைப் பற்றினான். நான் அழுதேன். சேதியைச் சொன்னேன். ‘அந்த வாட்ச் இல்லாமல் என் அத்தாவோட முகத்தை நா பாக்க முடியாதுடா’ என்றேன். அவன் முகம் கடுமையானது. ‘மாமா, அந்தக் கவுண்டரில டிக்கட் குடுத்தது ராமசாமிதானே’ ‘ஆமாம்’ ‘அவரக் கூப்பிடுங்க’ ராமசாமி வந்தார். சுப்ரா சொன்னான். ‘கடைசியாக இவன்தான் டிக்கட் கேட்டான். அவன் கட்டியிருந்த வாட்சை யாரோ கழட்டிட்டாங்க. கவுண்டருக்குள் விட்ட இன்னொரு கை கழட்டமுடியாது. அப்புடியே கழட்டினாலும் ஒங்களுக்குத் தெரியாமல் கழட்டமுடியாது. அஞ்சு நிமிஷத்துல சொல்லுங்க. இல்லாட்டி விஷயம் எங்க அப்பாவுக்குப் போயிடும். மாமா அவரத் தனியா அழச்சிட்டுப் போங்க. கேளுங்க’ ஏதோ அவன் கடிகாரம் காணாமல் போனது மாதிரி கொந்தளித்தான் சுப்ரா. இரண்டே நிமிடத்தில் ராமசாமியோடு வந்தார் மேனேஜர். ‘ஒத்துக்கிட்டாரு. இப்ப எடுத்து வாரேங்கிறாரு. புள்ளகுட்டிக்காரரு. ஒங்க அப்பாக்கிட்ட சொல்லி வேலய விட்டுத் தூக்கிடாதீங்க’ என்றார். கடிகாரம் என் கைக்கு வந்தது. சுப்ராவுக்குள் இப்படி கெடுபிடியான ஒரு மனிதனும் வாழ்கிறான் என்பது எனக்கு அன்றைக்குத்தான் தெரிந்தது. அடேங்கப்பா! எத்தனை முகங்கள் அவனுக்கு. அன்று சுப்ராவோடு முதல் வகுப்பில் நீலவானம் பார்த்துவிட்டு ஒரு தோல்விப்படம் பார்த்த ஏமாற்றத்தில் விடுதி திரும்பினேன்.
கிட்டத்தட்ட ஆண்டு முடியப்போகிறது. அப்போதெல்லாம் தேர்வுக்கட்டணம் 15 ரூபாய். ஸ்டேட் வங்கியில் மெட்ராஸ் யுனிவர்சிடி (அப்போது அதுதான் பெயர்) செலான் கிடைக்கும். கல்லூரியில் பணம் செலுத்திவிட்டால் அவர்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிவிடுவார்கள். ‘ஹால்டிக்கட்’ என்கிற அனுமதி இருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.எல்லாருக்கும் ஹால் டிக்கட் வந்துவிட்டது. அதில் என் பெயர் இல்லை. சுப்ராவை அழைத்துக்கொண்டு ராதாகிருஷ்ணன் சாரிடம் ஓடினேன். தகவலைச் சொன்னேன். உடனே அவர் எங்களை அழைத்துக்கொண்டு முதல்வர் அறைக்குப் போனார். ‘கேப்டன் முருகையன்’ அவர்தான் அப்போது முதல்வர். ராதாகிருஷணன் சார் சொன்னார். ‘இந்தப் பையன் ரேங்க் ஸ்டூடண்ட் சார். இவனுக்கு ஹால்டிக்கட் வரல. பணமெல்லாம் கட்டிட்டான். என்ன நடந்துச்சுன்னே தெரியல’ மானேஜர் கோவிந்தராஜன் அடுத்த நிமிடம் முதல்வர் அறைக்கு வந்தார். மெட்ராஸ் யுனிவர்சிடி கண்ட்ரோலர் ஆஃப் எக்ஸாமுக்கு ட்ரங்கால் பதிவு செய்யப்பட்டது. அப்போது அப்படித்தான். உடனே தொலைபேசித் தொடர்பெல்லாம் கிடைக்காது. சில நிமிடங்களில் தொடர்பு கிடைத்தது. என் தகவல்கள் கண்காணிப்பாளருக்குப் பறந்தது. அடுத்த முனையில் அலுவலர்கள் விரட்டப்படுவதை யூகிக்க முடிந்தது. மீண்டும் கண்காணிப்பாளர் சொன்னார். ‘உடனே அந்தப் பையனை ஸ்டேட் வங்கியில் பணம் செலுத்தச் சொல்லுங்கள். இன்றே அந்தப் பையனின் ஹால்டிக்கட் பதிவுத்தபாலில் அனுப்பப்படும். நாளை சனிக்கிழமை. இன்று 5 மணிக்குள் பணம் செலுத்திவிட்டு செலான் நம்பரைச் சொல்லிவிட்டால் நிர்வாகத்திற்குச் சிரமமிருக்காது.’ இந்தத் தகவலை முதல்வர் எங்களிடம் சொன்னார். ராதாகிருஷ்ணன் சார் உடனே வங்கிக்கு ஓடச்சொன்னார். அப்போது மணி 3. சுப்ரா கேட்டான். ‘சார் ஸ்டேட் பேங்குக்கு ஒரு ஃபோன் செய்யலாமா?’ ‘ஓ. தாராளமாக.’ கோவிந்தராஜன் நம்பரைச் சுற்றிவிட்டு தொலைபேசியை சுப்ராவிடம் கொடுத்தார். சுப்ரா பேசினான். ‘கொஞ்சம் ஐயப்பனைக் கூப்பிடுங்க.’ அந்த ஐயப்பன்தான் வங்கி மேலாளர். அவரை யாரும் பேர் சொல்லியெல்லாம் கூப்பிடமுடியாது. சுப்ரா கூப்பிட்டான். ஐயப்பனுக்கு தகவல்கள் சொல்லப்பட்டன. முடிவாக ஐயப்பன் சொன்னார். ‘இன்னும் 5 நிமிடத்தில் செலான் நம்பரைச் சொல்கிறேன்.’ செலான் நம்பர் வந்தது. உடன் கண்காணிப்பாளருக்குத் தெரிவிக்கப்பட்டது. சுபம். அது சரி. யார் அந்த ஐயப்பன் தெரியுமா? சுப்ராவின் கூடப்பிறந்த அண்ணன். சுப்ராவுக்கு பெரிய பெரிய இடத்திலெல்லாம் தொடர்பு. ஆனால் அவன் எதையுமே காட்டிக் கொள்வதில்லை. ‘டேய் சுப்ரா. சலித்துச் சலித்துப் பார்த்தாலும் உன்னைப்போல் ஒருவனைப் பார்ப்பது அபூர்வமடா’ என் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.
கல்லூரியின் இறுதிநாள். இரத்தத்திலகம் படத்தின் ‘பசுமை நிறைந்த நினைவுகளே’ பாடலை இன்னொரு நண்பன் கங்கா பாடிய பொழுது அவனும் அழுதான். நாங்களும் அழுதோம். அதோடு பிரிந்தோம்.
பிறகு நான் திருச்சியில் சென்னையில் என்று படிப்பைத் தொடர்ந்தேன். பத்தாண்டுகள் ஓடிவிட்டன. அதே சரபோசி கல்லூரியில் இயற்பியல் விளக்குநராக எனக்கு வேலை கிடைத்தது. இன்னொரு சென்னைக் கல்லூரியும் கிடைத்தது. நான் தஞ்சாவூரைத் தேர்ந்தெடுத்தேன். என் சுப்ராவோடு நான் இருக்கலாமே. பத்தாண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூர் வந்தேன். நேராக வெங்கா லாட்ஜுக்குச் சென்றேன். இப்போது வெங்கா லாட்ஜ் ஒரு புதிய மாடியை இணைத்திருந்தது. வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் மாடியில் தங்கி இருந்தனர். உள்ளே நுழைந்தேன். சுப்ரா ஓடி வந்து கட்டிக்கொண்டான் ‘கிருஷ்ணா அண்ணே யாரு வந்திருக்கா பாருங்கோ. நம்ம ரஜித்.’ என்றான். கிருஷ்ணா அண்ணன் ஒரு மூத்த ஊழியர். பாதாம் கீரும் நெய்தோசையும் வந்தது. சாப்பிட்டேன். சென்ற வாரம்தான் சிவாஜி வந்தார் என்று கைசேதப்பட்டனர் கிருஷ்ணா அண்ணனும் சுப்ராவும். ‘ரஜித். நீ இங்கேயே வந்ததுல ரொம்ப சந்தோசம்டா. இங்கேயே சாப்பிடு. மேல தங்கிக்க. எல்லாரும் தர்ற காசக் குடுத்துடு. சும்மான்னா நீ ஓடிப்போயிடுவே.’ என்றான். ஒப்புக்கொண்டேன்.
அப்போது எனக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கும்பகோணத்துப் பெண் ஏறக்குறைய நிச்சயமாகி இருந்தது. அந்தப் பெண்ணின் புகைப்படம் என்னைக் கட்டிப்போட்டது. வேறு பெண் எனக்கு வாழ்க்கைத்துணையாய் ஆக முடியாதென்று எனக்குள் ஏதோ ஒன்று சொல்லிக்கொண்டே இருந்தது. அப்போது கோலப்பன் என்ற என் குடும்ப நண்பர்தான் எங்களுக்கும் பெண்வீட்டாருக்குமாக தூது போய்க்கொண்டிருந்தார். கல்லூரியில் இப்போது நான் ஆசிரியர். கோலப்பனைப் பார்த்துவிட்டால் ‘ஒரு நல்ல செய்தி சொல்லமாட்டாரா’ என்று ஏங்குவேன். முடிவாக கோலப்பன் சொன்னதையும் சொல்லிவிடுகிறேன். அடுத்த மாதம் 2ஆம் தேதி பெண்ணின் தாய்மாமா சிங்கப்பூரிலிருந்து வருகிறாராம். அவருக்குத் திருப்தி என்றால் அடுத்த இரண்டு வாரத்தில் திருமணமாம் அவர் ஒரு மாதத்திற்குள் சிங்கப்பூர் செல்லவேண்டுமாம்.
அந்த 2ஆம் தேதியை எதிர்பார்த்திருந்தேன். வீட்டிற்கும் தகவல் தெரியும் என்னைவிட என் அத்தாவும் அம்மாவும் எதிர்பார்த்தார்கள். அந்த 2ஆம் தேதி வந்தது. மாமா வந்துவிட்டதாக கோலப்பன் சொன்னார். பத்து நாட்களாகியும் என்னைப் பார்க்கவோ என் வீட்டிற்கோ மாமா வரவில்லை. அவர் பெயர் குலாம் என்று சொல்லப்பட்டது. பார்க்கவே முடியாதவரா பரிசம் போட ஏற்பாடு செய்வார்? எனக்கு நம்பிக்கை தகர்ந்தது. வேறு யாரோதான் மாப்பிள்ளை. நான் கைகழுவப்பட்டுவிட்டேன். என்றெல்லாம் நினைத்தபோதுதான் கல்லூரிக்கு கோலப்பன் வந்தார். என்ன சொல்லப் போகிறார்? நான் நினைத்ததை உறுதிப் படுத்தப் போகிறார். ஆனாலும் அவரைப் பார்த்ததில் தொலைந்துபோன வீட்டுச்சாவி கிடைத்ததுபோல் ஆறுதலாக இருந்தது.
‘சார். ஒரு நல்ல சேதி. மாமா குலாமுக்கு உங்களப் பிடித்துவிட்டதாம். வருகிற ஞாயிற்றுக்கிழமை பரிசமாம். 19ம் தேதி திருமணமாம். அடுத்த 2ஆம் தேதி அவர் சிங்கப்பூர் பயணமாம். என்றார். எங்க அத்தாவுக்கு சேதி தெரியுமா என்றேன். தெரியும் மாமா குலாமே இன்னொரு ஆள் மூலம் செய்தி சொல்லி அனுப்பிவிட்டாராம். ஒரு திகில்படம் சுபமாக முடிந்ததுபோல் இருந்தது.
திருமணம் முடிந்தது. அன்று 1அம் தேதி. நாளை இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து குலாம் சிங்கப்பூருக்குப் புறப்படுகிறார். நான் நேராக விமானநிலையம் வந்து விடுவதாகச் சொன்னேன். 8 மணிக்கு நான் விமான நிலையம் சேர்ந்த போது குலாம் காரிலிருந்து அவர் சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தார். கை குலுக்கினேன் கட்டிப்பிடித்து சலாம் சொன்னேன். அருகில் இருந்த இருக்கைகளில் அமர்ந்தோம். குலாம்தான் முதலில் பேசினார். ‘சுப்ரா மட்டும் இல்லேன்னா இந்தத் திருமணம் இவ்வளவு சிறப்பாக முடிந்திருக்காது’ என்றார். ‘சுப்ராவா. அவரை எப்படி உங்களுக்குத் தெரியும்?’ ‘நான் ஊர் வந்தவுடன் உங்களோட நெருங்கிய நண்பர் அவர் என்று தெரிஞ்சுக்கிட்டேன். அவர்ட்டே போனேன். சேதியச் சொல்லி அபிப்ராயம் கேட்டேன். எனக்குத் தெரியும். ஒங்க நண்பர் ஒங்களுக்காகத்தான் பேசுவாருண்ணு. இருந்தாலும் அவரோட வாயால எதையாவது கேக்கணும்னு ஆசப்பட்டேன். அவர் சொன்னார். பியுசி படுச்சபோது வகுப்புல அவரு வாந்தி எடுத்த கதயச் சொன்னார். ‘எங்க அம்மாகூட அருவருப்புப் படுவாங்க சார். அவன் கையேந்தினா சார்னு அழுதார். நா ஒரு சாதாரண நண்பன்தான். எனக்கு எந்தவிதமான அவமானமும் வந்துறக்கூடாது. அதே சமயம் என்னால யாருக்கும் எந்தச் சிரமமும் வந்துறக்கூடாதுன்னு அவன் அதச் செஞ்சான். நண்பனுக்கே எத்தக் கஷடமும் வந்துறக்கூடாதுன்னு நெனக்கிறவன் குடும்பத்தெ எப்புடி வச்சுப்பான் சார். அவனவிட ஒரு நல்ல மாப்பிள்ள கெடச்சா இவன விட்டுடுங்க சார்’ என்றார். சொல்லிவிட்டு அழுதார். எனக்கே என்னமோபோல் ஆகிவிட்டது. எனக்கு பந்தா பேர்வழிகளப் பிடிக்காது. நீங்க கல்லூரி ஆசிரியர் பந்தா இருக்கும்னு எதிர்பார்த்தேன். என் மனச சுப்ராதான் மாத்துனாரு’ என்றார். பிறகு பறந்துவிட்டார். என் வாழ்க்கையோட முன்னுரை மட்டுமல்ல. வாழ்க்கையையே சுப்ராதான் எழுதினான். அந்த கல்லுரி வேலையை உதறிவிட்டுத்தான் சிங்கப்பூர் சென்றேன். இன்று 25 ஆண்டுகள் ஓடிவிட்டன.
என் நினைவு நிகழ்காலத்திற்கு வந்தது. என் கார் பெரியகோயில் தாண்டி வெங்காலாட்ஜை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த 2 மாடி இப்போது 4 மாடி ஆகியிருந்தது. பக்கத்துப் பக்கத்துக் கடைகளும் வளைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தேன். சுப்ராதான் இப்போது முதலாளி. அதே குமாரிகமலா முகம். தலையில் பல வெள்ளி நூல்கள். அதுவும் அழகாகத்தான் இருந்தது. ‘சுப்ரா’ என்றேன் அவன் ‘ரஜித்’என்று கத்தினான். கிருஷ்ணாஅண்ணன் வந்து கட்டிப்பிடித்து உட்கார வைத்தார். அதே பாதாம்கீர் நெய் ரோஸ்ட வந்தது. ‘சுப்ரா வாடா’ என்றேன். பேங்குக்கு அனுப்ப பணம் இருப்பதாகவும் அதை அனுப்பிவிட்டுத்தான் வரவேண்டுமென்றும் இப்போதுதான் சாப்பிட்டேன் என்றும் சொல்லி ‘நீ சாப்புர்றா’ என்றான். என் கைபேசியை எடுத்து அவனை நாலைந்து புகைப்படம் எடுத்தேன்.
‘கிட்டவாடா. சேந்து ஒரு ஸெல்பி எடுத்துஃப்போம்’
‘நா இங்கேயே இருக்கண்டா. அப்புடியே எடுடா’
‘நம்மள மீறி யார்றா வந்து காச தொடப்போறாங்க. வாடா’
‘பொறுடா’
‘டேய் சிங்கப்பூர்லேருந்து வந்து இறங்குன ஒடனே ஒன்னப் பாக்கத்தாண்டா ஓடிவர்றேன். என்னடா. என்னோடவெல்லாம் நின்னு படம் எடுக்கக்கூடாதுன்னு… ‘
‘இல்லடா நா இப்ப வரலடா’
நான் பக்கவாட்டில் சென்று அவன் கையைப் பற்றி இழுத்தேன்.
‘என்ன விட்டுர்றா, விட்டுர்றா. விட்டுர்றா.’ குமுறிக் குமுறி அழுதான்
‘சுப்ரா என்னடா ஆச்சு ஒனக்கு’
‘டேய எனக்குக் காலு இல்லடா.’
யூசுப் ராவுத்தர் ரஜித்
- சிறார்களுக்கான கதை. சுத்தம்:
- பெண்ணே
- திருச்சி வாசகர் அரங்கு,திருச்சிநாடக சங்கம் இணைந்து நடத்தும் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட் புத்தக வெளியீட்டு விழா
- பொன்னியின் செல்வன் கல்கி படக்கதை : வையவன், ஓவியம் : தமிழ்ச்செல்வன்
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 5 )
- மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)
- கர்ணன், முதுபெரும் எழுத்தாளர்
- விலை
- ஆறுமுக நாவலரின் வாழ்வும் பணிகளும்
- த. அறிவழகன் கவிதைகள்
- சுந்தரி காண்டம் 3. வித்யா ரூபிணி சரஸ்வதி
- சுதந்திரம் என்றால் என்னவென்று என் பாட்டனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை!
- அதனினும் இனிது புத்தக வெளியீட்டு விழா
- திரை விமர்சனம் இது என்ன மாயம்
- 2011 இல் புகுஷிமா விபத்து நேர்ந்து நான்கு ஆண்டுக்குப் பின் ஜப்பான் அணுமின் உலைகளின் நிலைமை என்ன ?
- என் தஞ்சாவூர் நண்பன்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஆகத்து 2015 மாத இதழ்
- பாவேந்தரின் காதற் குற்றவாளிகள்
- முக்கோணம்
- – இசை – தமிழ் மரபு (2)
- கால வழு
- யார் பொறுப்பாளி? யாரது நாய்?
- தொடுவானம் 82. வேளாங்கண்ணி மாதா தேவாலயம்
- புத்தனின் விரல் பற்றிய நகரம் கவிஞர் அய்யப்ப மாதவனின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங்கிய தொகுப்பு. தோழமை பதிப்பக வெளியீடு நூல் வெளியீட்டுவிழா குறித்த சில மனப்பதிவுகள்
- இயக்குனர் மிஷ்கின் – தமிழ் ஸ்டுடியோ நடத்தும் இரண்டு நாள் சினிமாப் பயிற்சிப் பட்டறை
- சினிமாவுக்கு ஒரு “இனிமா”