காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் ( 5 )

This entry is part 5 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

( 5 )
பாலா…இன்னைக்கு நா உன்னோட ஆபீசுக்கு வந்திருந்தேன் தெரியுமா…?
சற்றுத் தயங்கியவன்….ம்ம்…..தெரியும்ப்பா…என்றான்.
யாரு சொன்னா?
பியூன்தாம்ப்பா…
யாரு ராமலிங்கமா? அவன் நம்ம பய ஆச்சே…..
அப்பா எல்லோரையும் பழகி வைத்துக் கொண்டிருக்கிறார். இது தன் மாறுதலுக்காக முயன்ற நாட்களிலிருந்து ஆரம்பித்த வேலை. உங்க ஆபீசுக்குப் போயிட்டு வந்தேன், போயிட்டு வந்தேன் என்று அடிக்கடி போனில் சொல்லுவார். ஒரு காரியத்தை எடுத்தார் என்றால் முடிப்பதுவரை ஓய்வதில்லை. அப்படித்தான் இன்று அரசியலிலும் கால் பதித்திருக்கிறாரோ! வெறும் ஜவுளி வியாபாரியாயிருந்தவர் இன்று அரசியல் முக்கியப் புள்ளி. தன்னின் சிறு பிராயத்தில் உணவகம் வைத்து நடத்தியிருக்கிறார் என்று அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஏதோ ஓரிரு முறை அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய்வந்ததாகக் கூட லேசாக நினைவிருக்கிறது. இன்னொருவரும் அப்பாவின் பாகஸ்தராக இருந்ததாகவும் செழிப்பாகத்தான் நடந்தது என்றும் அன்றெல்லாம் வீடு கொழித்தது என்றும் அம்மா உற்சாகமாகச் சொன்ன நாட்களில் அம்மாவின் முகத்தில் பரவியிருக்கும் செழுமையைக் கவனித்திருக்கிறான் இவன். பின் ஏன் தொழில் மாறிற்று. ஜவுளி எப்படிப் புகுந்தது? இரண்டுக்கும் சம்பந்தமேயில்லையே என்றான். அது தாத்தாவின் தொழில் என்றும் அது அப்படியே ஒட்டிக் கொண்டது என்றும் மேலாகச் சொல்லியிருக்கிறாள் அம்மா. பாகஸ்தர்கள் பிரியவேண்டியதாயிற்று என்பதால் தொழில் மாறிற்று என்பதாக அறிந்திருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை எல்லாவற்றிலும் ஆழமாகப் பொருத்திக் கொள்கிறார் அப்பா. அது அவர் பிறவிக் குணம். இன்னும் கூட அப்பாவுக்கு இந்த அரசியல்வாதி வேஷம் பொருந்தவில்லைதான். இவனால் அவரை முழுதுமாக அப்படிப் பார்க்க முடியவில்லை. என்னவோ வித்தியாசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது அவரிடம். யாரு நம்ப ராமலிங்கம்தானே? என்கிற பாணியில் அவர் சொன்னது கூட அத்தனை பொருத்தமில்லாமல் செயற்கையாயிருந்தது இவனுக்கு.
அப்பா எல்லாரையும் இப்படித்தான் சொல்லிக் கொள்கிறார். அவர்கள் காரியத்திற்கு ஏற்றாற்போல் யாரையெல்லாம் மாற்றுகின்றார்களோ அவர்களெல்லாம் நம்ம பய, நம்ம ஆளு… முதலில் இந்தமாதிரிப் பேச்சுக்களே தவறு என்று நினைத்தான் இவன். இப்படியான பேச்சுக்கள்தான் ஊழலுக்கே வழி வகுக்கின்றன. எதையாவது செய்து, எல்லோரையும் விஷமாக்கி, தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இதைத்தான் இன்று சாமர்த்தியம் என்கிற பதத்தால் .பாராட்டுகிறார்கள். மாப்பிள்ளைப் பையனுக்கு மேல் வரும்படி உண்டா? என்று கேட்பதுபோல. மேல் வரும்படி என்றாலே அது லஞ்சம்தானே? தவறுதானே? என்கிற எண்ணமெல்லாம் கப்பலேறிப் பல வருடங்கள் ஆயிற்று. யாரும் எதற்கும் வெட்கப்படுவதில்லை. ஊருக்கும் வெட்கமில்லை. உலகுக்கும் வெட்கமில்லை.
வந்துட்டு ஏன் என் இடத்துக்கு வரல்லே…ன்னு கேட்கமாட்டியா? நீதான் கேட்கமாட்டியே….எனக்கு உங்கிட்ட என்ன பேச்சு? உன் சீட்டுக்கு வந்து உன் வேலையைவேற கெடுக்கணுமான்னு தோணிச்சு. அதனால வாசலோட முடிச்சிக்கிட்டேன்….உன் பாஸ் நல்லாப் பேசுறார்டா….மனுஷன் படு விபரமான ஆளு…..அதுதானே நமக்கு வேணும்….அதிகாரிகள அவங்க இடத்துலயே உட்கார்த்தி வச்சு அவுங்க கௌரவத்துக்கு இடஞ்சல் இல்லாம நம்ம காரியத்தை சாதிச்சுக்கப் பார்க்கணும். நானென்ன பண்றது? அந்தக் காண்ட்ராக்டர் பய என்னைப் போட்டு நெருக்கிறான். என்னால முடியாதுன்னு சொன்னா நீ என்னய்யா ஆளுன்னுடுவான்…அப்புறம் நமக்கு மேல, நமக்கு மேலன்னு போவானுங்க…அப்டி விட்ரக் கூடாதுல்ல…அப்புறம் என்னதான் மதிப்பு இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நம்ம சாமர்த்தியத்தைக் காண்பிச்சாதானே மதிப்பானுங்க…நம்மாலையும் ரெண்டு காரியம் சாதிக்க முடியும்னு செய்து முடிச்சாத்தானே நாளைக்கு ஒரு ஆளு இருக்குன்னு தேடி வருவானுங்க…
அப்பாவின் பேச்சு ஸ்டைலே மாறிப் போனது சமீப காலமாய்த்தான். வருவானுங்க, போவானுங்க என்றெல்லாம் அவர் பேசிப் பார்த்ததேயில்லை இவன். அதுவும் வீட்டில் அம்மாவிடம் பேசும் போது அத்தனை அமைதியாய் மதிப்பாய்ப் பேசுவார். அம்மாவையே அடிக்கடி வாடீ, போடீ, கிடக்குடீ, விடுறீ….என்று ஏகவசனத்தில் அவர் இப்போது பேசுவதை உன்னிப்பாய் இவன் கவனித்திருந்தான். தான் திருச்சியில் இருந்தபோது இருந்த அப்பா வேறு. இப்போது சொந்த ஊருக்கு வந்தபின்பு இருக்கும் அப்பா வேறு.
அப்பாவை இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று தன்னால் கூற முடியாது. அந்த அளவுக்கான வயசும் அனுபவமும் தனக்கிருப்பதாக இவன் நினைக்கவில்லை. இன்னும் தான் தன்னின் வேலை சார்ந்து சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. மேலும் மேலும் உயர் பதவிக்குச் செல்ல நிறையப் படிக்க வேண்டியுள்ளது.. எத்தனையோ தேர்வுகள் எழுத வேண்டியுள்ளது. காலம் பூராவும் இந்த உத்தியோகத்திலேயே கழித்து விடுவோமா அல்லது கமிஷன் தேர்வுகள் எழுதி உயர் கிரேடுத் தேர்ச்சிக்கு ஆஜராகி வெளியேறுவோமா என்றெல்லாம் யோசனைகள் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொள்வதை அப்பா விரும்புவாரா மாட்டாரா என்பதில் ஒரு குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த வேலைக்கு வந்து அஞ்சு வருஷம் முடியப்போகுது. பேசாம இதுலயே மேல மேல போக முயற்சி செய்றதை விட்டிட்டு இன்னும் வேறே எங்க போகப் போறே…இருக்கிறதை விட்டுட்டுப் பறக்குறதைப் பிடிக்க முயற்சி செய்யாதே….இப்பத்தான் உள்ளுருக்கு வந்திருக்கே…இங்கயே நின்னு நிலைக்கப் பாரு….அத விட்டிட்டு….
அப்பா தடுப்பதைப் போலவே கற்பனை செய்து கொண்டான் இவன்.
என்னடா நாம்பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன்…நீபாட்டுக்கு எங்கயோ பார்த்திட்டு இருக்கே…எங்க இருக்க நீ?
எங்கயும் இல்லப்பா…இன்னைக்கு வேலை ஜாஸ்தி….அதான்….
டயர்டா இருக்கா…? சீக்கிரம் சாப்டுட்டுப் படு…புஸ்தகம் படிக்க உட்காராதே…உடம்புதான் முக்கியம்…
அப்பாவின் பேச்சில் தன்பால் எங்கேனும் ஒரு மூலையில் கருணை ஒட்டிக்கொண்டே இருக்கும். அதை நன்றாக உணர்ந்திருக்கிறான் இவன்.
அவன்தான் இந்தக் குடும்பத்துக்கு ராஜா…என்று இவன் காது கேட்கவே பலமுறை அம்மாவிடம் சொல்லுவதைக் கேட்டிருக்கிறான். அலுவலரைப் பார்த்துப் பேசியதாக அப்பா சொல்கிறார். அதுபற்றிக் கேட்போமா வேண்டாமா என்று யோசித்தான். தன்னைப் பார்க்கக் கூடாது என்றுதான் நேரே அவரை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். தன்னை இந்த விஷயத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என்கிற எண்ணம் வந்திருக்கலாம். அல்லது நான் இதில் ஒத்துழைக்க மாட்டேன் என்று தோன்றியிருக்கலாம். அல்லது இம்மாதிரியான காரியங்கள் எல்லாம் தன்னோடு போகட்டும் என்ற நினைப்பிருக்கலாம். எதற்குக் கேட்டுக்கொண்டு அதில் தலையைக் கொடுத்தமாதிரி ஆக்கிக் கொண்டு? அவரே பார்த்துக் கொள்ளட்டுமே!
அது சரி பாலா…உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் மட்டும் கேட்கணும்னு நினைச்சேன்…அப்பா கேட்டா சொல்லுவியா…?
என்னப்பா இப்டிக் கேட்குறீங்க…தாராளமா சொல்லுங்கப்பா…
புதுசாக் கான்ட்ராக்ட் கிடைச்சா செக்யூரிட்டியெல்லாம் வாங்குவாங்கல்ல…?
ஆமாம்ப்பா….
அதுக்கு என்ன செய்யணும்?
செய்ற வேலைக்குத் தகுந்தமாதிரி போஸ்ட்டாபீஸ்ல பத்திரங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டிர்க்கும்ப்பா…
அப்புறம் அது திரும்ப எப்பக் கிடைக்கும்?
வேலையெல்லாம் முடிச்சு, ரெண்டு வருஷத்துல ஆடிட்டெல்லாம் முடிஞ்சபின்னாடி திருப்பிக் கொடுத்திடுவாங்க…
அப்போ அதுவரை…?
அதுதான் செக்யூரிட்டி…குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் மேலே பணப்பிடித்தம் ஏதும் வந்திச்சின்னா? ஒரு பிடி வேண்டாமா? ரெகவ்ரி இருந்தா, கட்டச் சொல்லுவாங்க…கட்டலைன்னா இந்தப் பத்திரங்களை போஸ்டாபீஸ்ல சப்மிட் பண்ணி பணமாக்கி ரெகவ்ரியை நேர் செய்திடுவாங்க…ஆகையினால உடனே மறுவருஷம் திரும்பப் பெற முடியாது. .
நிச்சயமாவா சொல்றே?
இதுல நிச்சயத்துக்கு என்னப்பா இருக்கு? ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். எல்லாத்துக்கும் ஒண்ணுதான்.
நாகநாதன் அமைதியானார். பிறகு அன்று அப்படிச் சொன்னானே பிச்சாண்டி? உள்குத்து வேலைகள் ஏதாவது நடக்குமோ? படு விஷப்பயலாச்சே அவன்…
ஒவ்வொரு வருஷமும் புதுசா வேலை செய்றதுக்கு புதுசாத்தான் செக்யூரிட்டி கொடுத்தாகணும்…அது சரி, யாருக்காகப்பா கேட்குறீங்க…?
இல்லல்ல…சும்மாத்தான் கேட்டேன்….அந்தக் கான்ட்ராக்ட் கிடைச்சிதுன்னா என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கணும்ல…அதுக்காகத்தான்…
அதுக்கு நீங்க ஏம்ப்பா கவலைப்படுறீங்க…அது கான்ட்ராக்டர் பாடுல்ல…நீங்களா செய்யப் போறீங்க…?
இல்லல்ல…சும்மாத்தான் கேட்டேன்…..
அப்பாவின் பேச்சு புரியாமல் இருந்தது. எதற்காக இப்படித் திரும்பத் திரும்பக் கேட்கிறார்? யாருக்கோ தகுதியில்லாத ஒருவருக்கு சிபாரிசுக்கு அலைகிறார். அவன் பயனடைய இவர் மெனக்கெடுகிறார். அரசியலில் பிரபலமாக வேண்டும் என்கிற எண்ணமுள்ள அப்பா இம்மாதிரி ஆட்களையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று ஏன் நினைக்க மாட்டேன் என்கிறார். தவிர்க்க நினைத்து முடியவில்லையா? அல்லது எல்லோரையும்தான் கை கோர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற தவறான கணிப்பா? அல்லது யாருடனும் சேர்ந்து கொண்டாலும் நான் என் காரியத்தில் கண்ணாக இருப்பேன் என்கிற தன்னம்பிக்கையா? அப்பா ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்வாரோ என்பதாக இவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது. என்னவோ நடக்கப்போகிறது என்று ஒரு எண்ணம் மனதுக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தது.
குழப்பத்தோடேயே படுக்கைக்குப் போனான் பாலன். உறாலில் அப்பா யாருக்கோ போன் பண்ணிப் பேசிக் கொண்டிருந்தார். வழக்கத்திற்கு மாறாக அவர் சத்தத்தைக் குறைத்துக் கொண்டு பேசுவது இவனை உறுத்தியது. இப்படியெல்லாம் வீட்டில் உள்ளவர்களை ஒதுக்கிவிட்டு, அல்லது தான் மட்டும் ஒதுங்கி அவர் காரியங்கள் என்றுமே பார்த்ததில்லை. ஆனால் இப்பொழுது ஒளிவு மறைவும், ரகசியங்களும் அப்பாவின் வாழ்க்கையில், நடவடிக்கைகளில் நிறையப் புகுந்திருக்கின்றன
. தன் வயதுக்கு ஒரு அளவுக்கு மேல் அவரிடம் பேச முடியாத நிலைமையும், அப்படிப் பேசாததனாலேயே நிறைய விஷயங்கள் தெளிவு படாமல் போய்க்கொண்டிருப்பதையும், உள்ளுருக்கு வந்து விட்டதனால் வீட்டுக் காரியங்களை முழுப் பொறுப்போடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தனக்கு இது புதுச் சங்கடமாக இருப்பதுபோலவும் நினைக்க ஆரம்பித்தான் பாலன். சிவனே என்று ஜவுளித் தொழிலை மட்டும் அவர் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம் எழுந்தது அவனுக்குள்.
எண்ணங்கள் தந்த குழப்பங்களுக்கிடையில், மனம் ஒரு நிலையிலில்லாமல் உறாலில் படுத்திருக்கும் அம்மாவை அந்த மங்கிய விளக்கொளியில் அமைதியாய் நோக்கினான். அருகிலே தங்கைமார்கள். ராகினி, ரோகிணி, கல்யாணி. எல்லாவற்றிலும் ஏதோவோர் ரசனை இருக்கத்தான் செய்திருக்கிறது அப்பாவுக்கு. எப்படி அழகாகக் கோர்வையாக இப்படியான பெயர்களைத் தேர்வு செய்தார்? குதிர் குதிராக மூவரும் எப்பொழுது எங்களுக்குக் கல்யாணம் என்று கேட்காமல் கேட்பது போல் தோன்றியது இவனுக்கு. வரும் தையிலாவது பெரிய தங்கைக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஒரு உறுதி பிறந்தது அப்போது. அதுநாள் வரை சேமித்து வைத்திருக்கும் பொதுச் சேம நலநிதிப் பணம் எவ்வளவிருக்கும் என்று மனது கணக்குப்போட்டது திடீரென்று. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்பதுபோல் ஒரு வேகம் கிளர்ந்தது. அந்த எண்ணத்தோடேயே, உறக்கம் வராமல் புரண்டுகொண்டேயிருக்கும் அப்பாவைப் பார்த்தவாறே தன்னை மீறிக் கண்ணயர்ந்து போனான்.

Series Navigationபொன்னியின் செல்வன் கல்கி படக்கதை : வையவன், ஓவியம் : தமிழ்ச்செல்வன்மொழிவது சுகம் ஆகஸ்டு 15 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -5 : சுயபுனைவு (Autofiction)
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *