கால வழு

author
0 minutes, 1 second Read
This entry is part 21 of 26 in the series 23 ஆகஸ்ட் 2015

கா.ஆனந்த குமார்

“தாத்தா..வா..தாத்தா ..வூட்டுக்குப் போலாம்….” என்று சத்தமிட்டுக்கொண்டே கைகளைக் காற்றில் அசைத்தபடி வந்து கொண்டிருந்தாள் காவேரி. சலனமற்று வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கிலியாண்டிக் கிழவன் தலையைக் குனிந்து கொண்டான்.கரிய மேகங்கள் வானில் சூழ்ந்த்தைப் போன்று மனசெங்கும் துக்கம் பரவியிருந்தது.தலை கவிழ்ந்து நிலத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

“தாத்தா உன்ன எங்கெல்லாம் தேடறது…? ஆயாவுக்கு மேலுக்கு முடியலயாம்..! அம்மா உன்ன கூட்டியாரச் சொல்லுச்சு…வா தாத்தா போலாம்….அருகில் வந்து கையைப் பற்றிக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தாள் காவேரி. சங்கிலியாண்டிக் கிழவன் எழுந்து கவேரியுடன் நடக்க ஆரம்பித்தான்..வழியெங்கும் காவேரி பேசிக் கொண்டே வந்தது எதுவும் கிழவனுக்கு எட்டவில்லை.அவன் நினைவு முழுவதும் அங்குத்தாயைப் பற்றித்தான்.

இன்றோடு இந்த ஊருக்கு வந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது. இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் எவ்வளவோ வலிகள், சந்தோஷ தருணங்கள் அனைத்திலும் ஒன்றானவள் அங்குத்தாய். சங்கிலியாண்டியும் அங்குத்தாயும் இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த ஊருக்குப் புதியவர்கள். கணவன் மனைவியாக வந்தவர்கள் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர். ஆரம்பத்தில் குடும்பம் நடத்த கடினமாக இருந்தபோதெல்லாம் ஆறுதலும் தைரியமும் அளித்தவள் அங்குத்தாய் தான். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே அங்குத்தாயின் பெற்றோர் மறைந்து விட்டனர். கூடப் பிறந்த ஒரே தம்பியும் வட மாநிலத்திற்கு வேலைக்குச் சென்றவன் பின்னர் தொடர்பின்றிப் போனான். திருமணம் முடிந்த ஒரு வருடத்திற்குப் பின்னர் இங்கு வந்தனர். அங்குத்தாய் நல்ல உழைப்பாளி. அவளின் சுறுசுறுப்பும் உழைப்பும் நன்கு வாழ்வதற்கான சூழலை அளித்தது. சங்கிலியாண்டியின் வருமானமும் சேர சொந்த நிலத்திற்கு உரிமை உடையவர்களாக ஆனார்கள்.

சங்கிலியாண்டி மீது அளவுகடந்த அன்புடையவளாக அங்குத்தாய் இருந்தாள். நேரத்திற்கு உணவு பரிமாறுவது, நோய் நொடி என்றால் பார்த்துக் கொள்வது என எப்போதும் ஒரு வித அனுசரணை அவளிடம் உண்டு. கணவன் என்ற பந்தத்தையும் மீறிய பற்றுதல் உணர்வு அவளிடம். நாதன் துணை என்பதே வாழ்வு முழுமைக்கும் என்றானவளாக வாழ்ந்து வந்தாள் அங்குத்தாய்.
கெங்கலட்சுமி தனது கணவனோடு தாழையூத்து வந்தபோது அங்கு அவர்களுக்கு எவரும் அறிமுகமாவில்லை.அங்குத்தாய் தான் தனது நிலத்திலேயே குடிசை போட அனுமதி அளித்து தோட்ட வேலைகளுக்கு ஒத்தாசையாக இருத்திக் கொண்டாள். அன்றிலிருந்து கெங்கலட்சுமியை தனது மகளைப் போலவே நடத்தி வந்தாள். “எம் மக நிலக்கடலைனா உசுர விடுவா…இத அவளுக்கு கொடுத்துரு..”.,“சோறு பொங்கி வச்சுருக்கேன் எம் மகளுக்கு கொண்டுபோய் கொடுத்துரு….என்று தனது வீட்டில் எது செய்தாலும் அவளுக்கு கொடுக்காமல் இருக்க மாட்டாள். கெங்கலெட்சுமியும் தாய் போலவே பார்த்துக் கொண்டாள். உடம்புக்கு முடியாது போனால் மருத்துமனைக்கு கூட்டிச் செல்வது,சரியான நேரத்திற்கு மருந்து கொடுப்பது என அருகிருந்து அனைத்து உதவிகளும் செய்வாள். அப்போதெல்லாம் அங்குத்தாயின் மனசு நெகிழ்வாய் உணர்வாள்.

சங்கிலியாண்டி-அங்குத்தாய், கெங்கலட்சுமி,காவேரி எனக் கூட்டாக வாழந்த காலம் மகிழ்வின் உச்சமாக இருந்தது. வசதிகளுக்குக் குறைவென்றாலும் வாழ்வு பொருளுடையதாக மாறிப் போயிருந்தது. மகிழ்ச்சி என்பது பொருளிலா உள்ளது?..உணர்வில் உள்ளதுதானே.?..ஆறுதலான வார்த்தைகளும் அன்பான மனமும் வாழ்வின் நிமிடங்களைக் அழகாகக் கடக்க உதவும் சக்திகளாக அமைவதில் வியப்பென்ன?..

வயல் வரப்புகளில் நடந்து கொண்டிருந்த சன்கிலியாண்டியின் மனதில் பல்வேறு நினைவுகள் அலைக் கழித்தன.காவேரி சங்கிலியாண்டியின் கையை இறுகப் பற்றியபடி நடந்து கொண்டிருந்தாள்.வீடு பக்கத்தில் வர வர நடையில் வேகம் கூடியது.
சங்கிலியாண்டிக்கு கால்கள் தரையில் பாவாமல் காற்றில் கால்களை வைப்பது போல் தோன்றியது.வீட்டின் முன்புறம் கயிற்றுக் கட்டிலில் கோரைப் பாயின் விரிப்பின் மேல் அங்குத்தாய் படுத்திருந்தாள்.

வீடு என்பதை விட குடிசை என்றே அதை குறிப்பிட வேண்டும்.ஓலை வேய்ந்து சுற்றிலும் செம்மண்ணால் கட்டியது. குடிசையினுள் கெங்கலட்சுமி இருந்தாள்.காவேரியும் சங்கிலியாண்டியும் குடிசையை நெருங்கினர்..

“ஆயா..ஆயா…தாத்தா வந்தாச்சு பாரு ஆயா”…சங்கிலியாண்டியின் விரல் பிடித்து கட்டிலின் அருகே இழுத்துச் சென்றாள் காவேரி. காவேரியின் குரல் கேட்டு கஞ்சி செய்து கொண்டிருந்த கெங்கலட்சுமி வெளியில் வந்தாள்.

திடகாத்திரமாக இருந்த அங்குத்தாய் கடந்த ஆறு மாதங்களுக்குள்தான் உடல் நலம் குன்றியவளானாள். சங்கிலியாண்டி பொறுப்பற்றவனாக தன் மனம் போன போக்கில் வாழ்ந்த காலத்தில் குடும்பத்தைப் பொறுப்புடன் பார்த்துக் கொண்டவள் ,உடல் மட்டுமன்றி மனதிலும் வலிமை மிக்கவளாக இருந்தாள். ஆனால் இன்று எழ முடியாத நிலையில், படுக்கையில் விழுந்து கிடக்கிறாள். சேகோ பேக்டரிக்கு தனது நிலத்தை விற்றதிலிருந்தே மனங்குன்றியவளாக மாறிப்போனாள். சங்கிலியாண்டியின் முரட்டுப் பிடிவாத குணத்தால் நிலத்தை விற்க நேரிட்டது. அந்நிகழ்விலிருந்து, ஒவ்வொரு நாளும் தான் பாடுபட்டுச் சேர்த்த நிலம் பறிபோனதை எண்ணி மனம் வருந்தினாள். நாள்பட நாள்பட அது மனதில் நீண்ட வடுவாக மாறிப் போனது. நிலம் என்பது வெறும் சடப்பொருளாக மட்டுமல்லாமல் தன் வாழ்வின் ஒன்றிய உறவாகவே அவள் நினைத்தாள். தனது உறவொன்று விலகிய துயரம் ஈடு செய்ய இயலாதது என்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்தாள். தனது வீட்டருகே தலை உயர்ந்து நிற்கும் சேகோ பேக்டரியைப் பார்க்கும் போதெல்லாம் ஆற்றாமை உணர்வு மேலிட பெருமூச்செறிவாள்.
காலம் ஒன்றே மனிதர்களின் குணங்களை அளவிட உதவும் கருவி என்பது சங்கிலியாண்டிக்குப் புரிந்தது. தனது தவறை உணர்வதற்குள் காலம் கடந்திருந்தது. மாற்று வழி எதுவெனப் புரியாமல் இருந்தான்.

கயிற்றுக் கட்டிலில் நைந்து போன துணியைப் போல் படுத்திருந்தாள் அங்குத்தாய்.உடல் சோகையாய் மெலிந்து காணப்பட்டது.உடல் கூடு மெலிதான மூச்சின் இயக்கத்தில் ஏறி ஏறி இறங்கியது. “அங்கு….அங்கு….சங்கிலியாண்டி அருகில் சென்று கூப்பிட்டான்….ம்ம்….ம்ம்ம்……..அங்குத்தாய் கண்ணைத் திறக்க முயற்சித்து முடியாமல் ஈனஸ்வரத்தில் முனகினாள். கண்களிலிருந்து நீர் கோடாய் வழிய உடல் துவண்டு கிடந்தது.சங்கிலியாண்டி கீழே அமர்ந்து ஆதரவாய்க் கைகளைத் தடவிக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினான் .அவன் மனமெங்கும் வெம்மையாய் தோன்றியது.குடிசையினுள் இருந்து வெளிவந்த கெங்கலெட்சுமி இருவரையும் பார்த்துக் கண்கலங்கினாள். முந்தைய நாள் முழுதும் உறங்காமல் அழுதிருப்பாள் போலும். முகமெல்லாம் வீங்கியிருந்தது. காவேரி குடிசைக்கருகில் இருந்த மணல்மேட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

சங்கிலியாண்டி முதன்முறையாக வாழ்நாள் கால மொத்த நிகழ்வினையும் சுற்றிவரச் செய்து பார்த்தான். நினைவெங்கும் அங்குத்தாய். துலாபாரத்தின் தட்டுக்களில் வைத்து அளவிட்டுப் பார்க்க தான் மேல போவதாக உணர்ந்து மனதிற்குள் குமைந்தான்.அங்குத்தாயின் உடல் கொஞ்சம் இயல்பாக இருப்பது போல் தெரிய சங்கிலியாண்டி மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்தான். .. “யப்போவ்…! சாப்புட்டுப் போங்க…! கெங்கலட்சுமி சாப்பிடக் கூப்பிட்ட குரலைக் கேட்டுக் கொண்டே ஏற்காதவனாக நடக்க ஆரம்பித்தான்.

வரப்புகளின் வழியே நடக்கத் துவங்கியபோது வீட்டுக் கொல்லையில் ஆடுகளும் மாடுகளும் கோழிகளுமென அங்குத்தாய் வளர்த்த உயிர்கள் வளைய வந்தன.பசுமை மாற வயல்வெளியும் தென்னை மரங்களும் அங்குத்தாயின் நினைவுகளைக் கிளறின.இவற்றோடு தானும் ஒருவனாக வளர்க்கப்பட்டவன் என்பதை நினைத்து ஆற்றாமையும் இயலாமை உணர்வும் பொங்கியது.இன்றோ நளையோ அவள் இறப்பு நேரிடும். வாழ்வின் பொருளை அவள் சுமந்து சென்றுவிடக் கூடும்…ஆனால் என் நிலை…??? கேள்விகளை மனதில் திரும்பத் திரும்பத் தொடுத்தபடியே நடந்தான் சங்கிலியாண்டி. கருத்த மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிறியபடி வேகமாகக் கரைந்து கொண்டிருந்தன. வீட்டின் கொல்லையிலிருந்த ஆடுகளும் மாடுகளும் பெருஞ்சத்தமிடத் துவங்கியிருந்தன.

-கா.ஆனந்த குமார்,
தொடர்பு எண்: 9843997965
tamizhananth@gmail.com

Series Navigation– இசை – தமிழ் மரபு (2)யார் பொறுப்பாளி? யாரது நாய்?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *