வே.சபாநாயகம்
‘புனிதமான தொழில் – சோகமான வியாபாரம்’ என்றெல்லாம் ஆசிரியர் பணியைக் குறிபிட்டது ஒரு காலம். இப்போது ஆசிரியர் தொழில் சோகமானதல்ல. மற்ற தொழில்களை விட மிகவும் பொறாமைக்குரிய ஒன்றாகிவிட்டது. ஆசிரியப் பணிக்கு ஊதியம் வெகுவாக உயர்ந்த பின் அது சோகமான வியாபாரம் அல்ல- கொழுத்த வியாபாரம்!
ஊதியம் மிக்க் குறைவாக இருந்த போது, ஆசிரியர்களது வாழ்க்கை – வசதிக் குறைவாக இருந்தும் மனநிறைவோடு மனசாட்சிக்குப் பயந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பிள்ளைகளுக்குப் போதித்தார்கள். இப்போது தேவைக்கு அதிகமான ஊதியம் கிடைப்பதால், அர்ப்பணிப்பு எல்லாம் வருமானத்தை மேலும் பெருக்குவது, கற்பிப்பதை எப்படி வியாபாரம் ஆக்குவது என்றாகி விட்டது.
இந்நிலையில் திரு.பி.ச.குப்புசாமியின் அனுபவங்களைச் சொல்லும் இந்த ’ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியனின் குறிப்புகள்’ – ‘இப்படியும் கூட ஒரு ஆசிரியரால் பணியாற்ற முடியுமா?’ என்று புருவம் உயர்த்த வைக்கிறது!
இலக்கியவாதியான திரு.குப்புசாமி வித்தியாசமான ஆசிரியர்.. தொழிலை மிகவும் நேசித்தவர். ‘மலை வாழை அல்லவோ கல்வி’ என்று பிள்ளைகளுக்கு ருசி காட்டி அன்போடும் பரிவோடும் போதித்து பிள்ளகளின நேசத்தையும் பெற்றவர்களின் மதிப்பையும் பெற்றவர். இவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய ஆரம்ப்பள்ளியின் குறிக்கோள் ‘குறைந்த பட்ச அன்பு – அதிக பட்சம் அமரத்துவம்’. இந்த வாசகத்தை பள்ளி முகப்பில பார்த்த கல்வி அதிகாரி இதன் விளக்கத்தைக் கேட்டபோது இவர் சொன்னார் ; “முடிந்தால் நமது மாணவர்களை மகாத்மா காந்தி மாதிரியும் மகாகவி பாரதி மாதிரியும் அமரத்துவம் வாய்ந்தவர்களாக ஆக்கி விடுவது; அது இயலாத பட்சத்தில், குறைந்த பட்சம் அந்த மாணவர்களிடம் அன்பாவது செலுத்துவது” – அதிகாரிக்கு மட்டுமல்ல நமக்கும் சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது! இது சாத்தியமா? ஆம் எனறு, முழு நம்பிக்கையுடன் அந்த இலட்சியத்தை எட்ட அவர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அவரது ஒவ்வொரு அனுபவமும் காட்டுகிறது.
பாடப் புத்தகத்தில் இல்லாதவற்றைப் போதிக்கும் சுதந்திரம் ஆசிரியருக்கு வேண்டும் என நினைப்பவர். அதனால் தன் மாணவர்களுக்கு அவர்கள் 4,5 வகுப்பில் படிப்பவராக இருந்தும் படிப்பை ரசிக்கும் வண்ணம், விரும்பி பள்ளிக்கு வரும்படி ஆர்வமூட்ட பாடத்துக்கு இடையே இசையும் கவிதையும், இலக்கியமும் புகட்டி தன் மாணவர்களை மட்டுமல்ல தன்னையும் உயிர்ப்புடன் வைத்திருந்தவர்.
இவரது போதனா முறைக்கு ஒரு சான்று – இந்நூலில் இல்லாதது, தனிப்பட்ட முறையில் நானறிந்ததைச் சொல்லுகிறேன். ஆரம்ப்பள்ளி நிலையில் பயிலும் இளம் பிள்ளைகளுக்கு எளிதில் புரிகிற மாதிரி யதார்த்தமாக அவர் விளக்குவது ரசமானது. மகாபாரத்த்தில் வரும் பகாசுரனைப் பற்றி பாடம். பகாசுரன் பிரம்மாண்டமான அரக்கன். அவனது பிரம்மாண்டத்தை இளம் நெஞ்சங்கள காட்சிப்படுத்திக் கொள்ள, இவர் அறிமுகம் செய்கிறார். “ இந்தப் பகாசுரன் இருக்கிறானே அவன் பெரீய்ய மலை போல இருப்பான். அவன் எத்தனை பெரியவன் தெரியுமா? அவன் கண்களில் ஏதொ உறுத்தியது – கண் ரெப்பையை நிமிண்டினான். பார்த்தால் ஒரு கட்டை வண்டி! மூக்குத் துளையில் விரலை விட்டு இழுத்தால் ஒரு யானை புகுந்திருக்கிறது!” பிள்ளைகள் கண் அகல, அதைப் புரிந்து கொள்வார்கள் தானே?
அவர் பணியாற்றிய சின்னக் கிராமத்து மக்கள் – ஆலிவர் கோல்ட்ஸ்மித்தின் ‘வில்லேஜ் ஸ்கூல் மாஸ்டரி’ல் கிராமத்து ஆசிரியரை வியப்பது போல – தங்கள் பிள்ளைகளிடம் இவர் ஏற்படுத்தும் மாற்றங்களை வியந்து இவரை ’மநதிரக்காரர்’ என்று வியக்கிறார்கள். வீட்டில் திருடுகிற மாணவனுக்கு தினமும் ஒரு ரூபாய் தந்து திருடும் பழக்கத்திலிருந்து அவனை மீட்பதும், பள்ளிக்கு ஒழுங்காக வராத மாணவனிடம் ‘நீ நேற்று வராததால் எனக்குப் பாடம் நடத்தவே மூடு இல்லைடா’ என்று சந்தனம் பூசி அவனை தினமும் பள்ளிக்கு வரும்படி செய்வதும், விடியற்காலையில் ஒரு நாடோடிப் பெண் பாடிய மழைப்பாடலை தான் ரசித்ததுடன் தன் மாணவர்களுக்குச் சொல்லி ரசிக்க வைத்து, மாலை வீடு திரும்பும் போது கூட்டமாய் அந்தப் பாடலை உரக்கப் பாடிச் சென்றால் மழை பெய்யும் என்று சொல்ல, அதன்படி அவர்கள் பாட மழையும் பெய்கிறது என்றால் ஊர்க்காரர்கள் அவரை ‘மந்திரக்காரர்’’ என்று ஏன் சொல்ல மாட்டார்கள்?
இந்த மந்திரக்காரரின் சாதனைகள் இன்னும் பல. பணிக்காலம் முழுதும் சலிக்காமல் நிகழ்த்திக் கொண்டே இருந்திருக்கிறார்,
சின்ன கிராம்ம் ஒன்றில், கதவில்லாத ஒரு எளிய கூரை வீட்டில் குடி இருந்தபோது வீட்டுக்கு வெளியே உலர்த்தி இருந்த வாயில் வேட்டி அவர் பள்ளிக்குச் சென்ற போது திருடு போய்விடுகிறது. ஊர்க்காரர்கள் ஒரு திருட்டுப் பழக்கம் உள்ளவனை சந்தேகிக்கிறர்கள். அவனை பஞ்சாயத்தில் நிற்க வைத்து அபராதம் விதிக்க முனைகிறர்கள. அவன் மகன் சகாதேவன் இவரிடம் படிக்கிறவன். ஊர்க்கார்ர்ர்களை இவர் சமாதானப் படுத்தி அதை நிறுத்துகிறார். அன்றைய வகுப்பில் திருக்குறளில் ‘பண்புடமை’ பாடம் நடத்தும் போது, சகாதேவன் அதில் நெகிழ்ந்து தன் அப்பா திருடிய வேட்டியை அவரிடம் சேர்ப்பிக்கிறான்.
பள்ளியில் வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது சைக்கிளில் தொங்கிய பைக்குள் இருந்த 5000 ரூபாய் பணக்கட்டு திருடு போய் விடுகிறது. பள்ளி விட்டு பாதி மாணவர்கள் போய் விடுகிறார்கள். ஆசிரியர்கள் இருக்கிற மாணவர்களைச் சோதனையிடுகிறார்கள். குப்புசாமி பதற்றப் படவில்லை. ‘விடுங்கள், நாளை பார்க்கலாம்’ என்று வீட்டுக்குக் கிளம்பிப் போய் விடுகிறார். ஆசிரியர்கள் பணம் போனது போனதுதான் என்று தீர்மானிக்கிறார்கள். மறுநாள் குப்புசாமி எல்லா வகுப்பு மாணவர்களையும் உட்கார வைத்து யாரிடம் என்றில்லாமல், மாணவர் எவரையும் பார்க்காமல் சூன்யத்திடம் பேசுவது போல பேசுகிறார். ‘பணத்தை எடுத்தவன் யார் என்று எனக்குத் தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்’ என்றெல்லாம் உருக்கமாய்ப் பேசி, எடுத்தவன் இப்போது இனடர் வெல் நேரத்தில் தனித்தனியாய் போய் இருந்து, யாரும் கவனிக்காதபடி, எடுத்த பணத்தை காம்பவுண்டு சுவரோரம் போட்டு விடலாம், நான் யாரிமும் சொல்லமாட்டேன்’ என்கிறார். ஆசிரியரகளுக்கு இந்த ஜாலத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் மந்திரஜாலம் போல பணம் சுவரோரம் போடப் படுகிறது. நம்ப முடிகிறாதா? ஆனால் குப்புசாமி அதனைச் சாதித்திருக்கிறார். இது வயது முதிர்ந்த உயர் கல்வி மாணவரிடையே நடக்குமா? கபடறியாத குழந்தைகளிடம் இந்த மாயத்தை நிகழ்த்தியுள்ளார் குப்புசாமி!
கல்வி போதனையிலும் இவர் வித்தியாசமாய்ச் சிந்தித்து மாணவர் முன்னேற பல திட்டங்களை நடைமுறைப் படுத்தி வெற்றி கண்டிருக்கிறார்.
ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் நிறைவுற்றபோது அதை வித்தியாசமாகக் கொண்டாடுகிறார். தலைமை ஆசிரியர் பெரிய வகுப்பை எடுக்க வேண்டும் என்ற வழக்கத்துக்கு மாறாக ஒன்றாம் வகுப்பை எடுத்துக்கொண்டு ஐந்தாம் வகுப்புவரை அவரே போதிக்கும் நடை முறையைச் செயல்படுத்தி அதன் மூலம் அந்த குறிப்பிட்ட செட் மாணவர்களது தரத்தை உயர்த்திக் காட்டுகிறார். ‘ஆழ உழு தம்பி! அத்தனையும் பொன்னாம்’ என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை வரியைச் சொல்லி, 5 வருஷ காலதில் ஆழ உழலாம் என்று சக ஆசிரியர்களுக் கும் சிபாரிசு செய்கிறார். ஒரு குறிப்பிட்ட மேலதிகாரி அதை ஆட்சேபித்தும் அதை ஏற்காமல் அவருக்கும் மேலே உள்ள அதிகாரியின் ஒப்புதலையும் பாராட்டையும் பெறுகிறார். ஆசிரியருக்கு, போதனையில் சுதந்திரம் வேண்டும் எனபதை மீண்டும் நிலைநாட்டுகிறார்.
உயர், மேல்நிலைப் பள்ளிகளிலேயே சாத்தியப் படாத – தனக்கு இளமையில் பள்ளியில் வாய்க்காத – ‘உல்லாசப் பயண’ அனுபவத்தைத் தன் பள்ளிகளில் நிகழ்த்தி,. சஞ்சீவிராயர் குன்றில் காடும் கானாறும் தரும் பரவச உணர்வுகளைத் தன் மாணவர்களுக்குத் தருகிறார்.
பிள்ளைகளை அடிப்பதில் அவருக்கு சம்மதம் இல்லை. ‘படிப்பு வரவில்லை என்பதற்காக உங்களை அடிக்க மாட்டேன்’ என்று தன் மாணவர்களிடம் சொல்பவர் அவர். அதே சமயம் மாணவர்களை ஆசிரியர்கள் அவமதிப்பதையும் கடுமையாக எதிரத்தவர். ’ஒரு வாத்தியார் தன் மாணவனை அடிக்க்க் கூட அடிக்கலாம் ஆனால் அவனை அவமதிக்க்கூடாது’ என்கிறார்.
காந்தியடிகளைப் போலவே தன் கையெழுத்து அழகாக இல்லை என்ற ஏக்கம் காரணமாக தன் மாணவர்களின் கையெழுத்தை அழகாக ஆக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தினார். காப்பி நோட்டில் எழுதிக் கொடுபதிலும் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டார். ‘அன்பு உலகை வெல்லும்’ என்று முதல் வரி அமையும். அடுத்த வரி ‘அதையே வேதம் சொல்லும்’ என்று எழுதித் தருவார் எங்கும் எதிலும் அன்பையே ஆராதித்தார். ஒரு ஆசிரியனுக்கு அது மிக அவசியம் என உணர்ந்தவர்.
எண்ணும் எழுத்தும் கற்பிப்பதோடு அல்லாமல் வாழ்வில் கொள்ள சில மேலான மனோபாவங்களையும் பிள்ளைகளுகு ஏற்படுத்த தன்னால் முடிந்த அளவுக்கு முயன்றிருக்கிறார். பெண்களை மதிப்பதும் போற்றுவதும் அவற்றில் பிரதானமாயிருந்தன..
கிராம்ப்புரங்களில் ஆசிரியராக இருப்பவர்கள் உடல்நலக் கேட்டிற்கு சிகிச்சை அளிக்கும் அடிப்படை உபாயம் தெரிந்தவர்களாயிருப்பது எவ்வளவு உத்தமமானது என்பதை உணர்ந்திருந்த இவர், தான் பணியாற்றிய இடங்களில் பாம்பு கடித்து ஆபத்தான நிலையில் இருந்தவனையும் ‘டெட்டனஸ்’ பாதிப்பு ஏற்பட்டவனையும் உடனடியாக மருத்துவ மனைகளில் சேர்த்துக் காப்பாற்றியது – சில இழப்புகளை அவருக்கு ஏற்படுத்தினாலும் மன நிறைவைக கொடுத்திருக்கிறது.
ஆசிரியர் தொழிலை இவர் நேசித்தாலும், ‘என்னத்துக்குஇந்த வேலைக்கு வந்தோம்?’ என்ற சலிப்பும் ஒரு காலகட்டத்தில் வந்திருக்கிறது.
‘ஆசிரியரின் அந்தஸ்து பெரிது’ என்ற ஒரு அந்தரங்கச் செருக்கு இவருக்கு எப்போதுமே உண்டு. ஆசியர்களை இழிவு படுத்துபவர் யாராக இருந்தாலும் இவருள் இருக்கும் புரட்சியாளன் பொங்கி எழுவான். மேலதிகாரிகள் – குறிப்பாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை, அவர்கள் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்த போது துச்சமாக எண்ணி அவமதிக்கும்போது, தைரியமில்லாத பலரும் வாய் மூடி மௌனம் காத்த போது குப்புசாமி சீறி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அதனால் இவருக்கு பணப் பயன்கள தாமதிக்கப் பட்டாலும் அற்ப பணத்துக்காக இவர் கவலைப் படவில்லை.
அரசாங்கத் திட்டமான குடும்பக் கட்டுப்பாட்டுக்கு ஆள் பிடித்தல், பல திட்டங்களுக்கு போதனைப் பணியைக் கவனிக்க விடாமல் ஈடு படுத்துதல் போன்றவற்றிற்கு இவர் காட்டிய தார்மீக எதிர்ப்பும், தர்க்கமும் அதிகாரிகளைப் பதில் சொல்ல முடியாமல் நழுவி விலகச் செய்துள்ளது. அதனால் அவரது பள்ளிக்கு பார்வையிடச் செல்வதை ஊழல் அதிகாரிகன் தவிர்த்தனர். நேர்மையான அதிகாரிகள் இவரது பணி அர்ப்பணிப்பையும் நியாயத்துக்குப் போராடும் தீரத்தையும் பார்ராட்டி அங்கீகரித்ததும் நேர்ந்திருக்கிறது.
மேலே நான் சொன்னவை வெறும் தகவல்கள்தாம். அவற்றை உயிர்த்துடிப்புடன் அனுபவிக்க நீங்களே தொகுப்பை .படித்தால் தான் முடியும். குறிப்பாக குப்புசாமியின எழுத்துத் திறனை, பரந்துபட்ட அவரது நூலறிவை, வாசிப்பு சுகமளிக்கும் நடையழகை முழுவாசிப்பில் தான் உணரமுடியும். வாசிப்பினிடையே, கவித்துவம் மிக்க ஆசுகவியாய் அவர் பாடிய வெண்பாக்களையும், கம்பர், பாரதி, கவிமணி ஆகியோரின் கவிதை வரிகளையும் ரசிக்கலாம். கலிங்கத்துப்பரணியும் காரல்மார்க்ஸும் சிந்தனைக்கு விருந்தளிப்பார்கள். அவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்பதையும் அறியலாம்.
போதனைப் பணியில் அர்ப்பணிப்பும், குழந்தைகளிடம் பாசாங்கற்ற நேசமும், சுய கௌரவத்தைப் பேணிய அந்தரங்கச் செருக்கும் மிக்கவராக திரு.குப்புசாமி எனகிற ஆசிரியரின் இருப்பு கல்வித்துறையில் ஒரு அசாதாரணமான அரிய நிகழ்வு (a rare phenomenon) என்றே சொல்வேன். 0
வே.சபாநாயகம்.
- பொன்னியின் செல்வன் படக்கதை -3
- கவிஞர் வைதீஸ்வரனின் கவிதைகள் சில(அவருடைய வலைப்பூவிலிருந்து)
- கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்
- தமிழ் இலக்கண உருவாக்கத்திற்கான கோட்பாடுகளும் சமஸ்கிருத இலக்கணங்களின் தாக்கமும்
- உயிர்க்கவசம்
- குடிக்க ஓர் இடம்
- சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி
- ராசி
- கோணல் மன(ர)ங்கள்
- காலணி அலமாரி
- இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீட்டு விழாவும்.-மலேசியா
- ஆசிரியப் பணியில் ஒரு அபூர்வ அசாதாரண நிகழ்வு.
- பூகோளச் சூடேற்றத்தால் நாசா எச்சரிக்கும் கடல் மட்ட உயரம் எவ்வளவு ? எத்தனை விரைவில் நேரும் ?
- தொடுவானம் 84. பூம்புகார்
- ஊறிவழியும் கைபேசிப் பொய்கள்
- தினம் என் பயணங்கள் – 44 மலர் அணிவது !
- பாண்டித்துரை கவிதைகள்
- கேள்விகளால் ஆனது
- மொழிவது சுகம் செப்டம்பர் 4 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -6: தன் நிகழ்பாடு படைப்பு (Automatisme psychique)
- மென்மையான கத்தி
- காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ‘புலம்பெயர் சிறுகதைப் போட்டி 2016’
- கண்டதுமெனைக் களவு கொடுத்தேன் கிருஷ்ணா!
- அமெரிக்காவில் முதன்முதல் பறந்த அபூர்வ சகோதரர்கள்
- கம்பன் கழகத்தின் அடுத்த கருத்தரங்கு அந்தமானில்
- நிஜங்களைத் தேடியவன்
- பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –
- வேலி நாடகம் – சென்னை செப்டம்பர் 19, அலயன்ஸ் ஃப்ரான்ஸேஸ்