சுந்தரி காண்டம் 4. ஜதி தாள சுந்தரி

This entry is part 7 of 27 in the series 6 செப்டம்பர் 2015

சிறகு இரவிச்சந்திரன்.
0

பதினாறு குடித்தனங்களில் பக்க வாத்தியங்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் வீடு ஒன்று உண்டென்றால் அது கமலா டீச்சர் வீடுதான். கமலா டீச்சர் ஒல்லியாக இருப்பாள். சராசரிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். ஒல்லி உடம்பு அதை இன்னும் கூடுதல் உயரமாகக் காட்டியது. கமலா டீச்சர் கல்யாணம் ஆகாத முதிர்க் கன்னி. கிட்டத்தட்ட நாற்பது வயதைக் கடந்து கொண்டிருப்பவர். சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சாஸ்திரங்கள் சொல்லும் எதையும் அவளிடம் பார்க்க முடியாது. கொஞ்சம் களையான முகத்தைக் கூட வெளிர் ப்ரேம் போட்ட பெரிய கண்ணாடி போட்டு மறைத்திருப்பாள். சாதாரணமாகச் சொல்வார்கள்: கண்ணாடி போட்டால் கொஞ்சம் அறிவுக் களை வரும் என்று. ஆனால் கமலாவிடம் அப்படியெல்லாம் ஏதும் களை வந்து விடவில்லை. ஏற்கனவே திருமணம் செய்யாத வெறுப்பு மொத்தமும் முகத்தில் குடியேறி இருந்தது. பெரிய ப்ரேம் மூக்குக் கண்ணாடி அதை இன்னும் பெரிதாக்கிக் காட்டியது.
கமலாவிடம் எல்லோருமே ஒப்புக் கொண்ட விசயம் அவள் மிகச் சிறந்த ஒழுக்கங்களை உள்ளவள் என்பதுதான். எந்த வளைவுகளும் மேடுகளும் இல்லாத ஒல்லிக் குச்சி உடம்பைக் கூட அங்குலம் வெளியே தெரியாமல் போர்த்திக் கொண்டுதான் அவள் வெளியே கிளம்புவாள். ராமகிருஷ்ண மடம் நடத்திய சாரதா பள்ளியில் அவள் பாட்டு மற்றும் நாட்டிய ஆசிரியை. முதல் முறையாக அவளைப் பார்ப்பவர்கள் கடவுளின் சிருஷ்டி மேல் நம்பிக்கை கொண்டு விடுவார்கள். சிறுவர்கள் எடுத்துப் போகும் குடை போல் மடித்து கூடைக்குள் வைக்கும் அளவில் இருக்கும் கமலா டீச்சரின் குரலில் ஆண்டவன் அற்புதத்தை அள்ளி வைத்திருந்தான். அவள் ஜதி சொல்லுவதும், நட்டுவாங்கம் செய்வதும், நாட்டியப் பாடல்களை குரலெடுத்துப் பாடுவதும் ஒரு நாள் பூராவும் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
கமலா டீச்சர் ஆண்களை வெறுப்பவளாக இருப்பாள் என்று அந்தக் காலனி பூராவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதனாலேயே அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் பேசிக் கொண்டார்கள். அவள் வீட்டிலேயே நடத்தும் பாட்டு மற்றும் நடன வகுப்புகளில் பெண்களுக்கு மட்டுமே அனுமதி. அவள் அந்தக் குடித்தனத்தில் ஒரு போர்ஷனின் தனியாகத்தான் இருந்தாள். காலை எட்டாவது மணிக்கு அவள் சாப்பிட்டுவிட்டு, ஒரு கையில் குடையும், மறு கையில் கறுப்புத் தோலால் செய்த ஹேண்ட் பேக்கும் எடுத்துக் கொண்டு கிளம்பினாள் என்றால் மாலை ஆறு மணிக்குத்தான் உள்ளே நுழைவாள்.
அவள் உடைகள் பளிச்சென்று இருக்கும். பெரும்பாலும் ஆரஞ்சு வண்ண உடைகளை ஏறக்குறைய காவி நிறத்தில் தான் அவள் அணிவாள். கிளாஸ்கோ மல்லில் செய்த ரவிக்கைதான் எப்போதும். நாயுடு ஹால் சமாச்சாரமெல்லாம் வந்துவிட்ட காலத்தில் கூட அவள் இன்னமும் ரவிக்கைக்கு ஒரு அங்குலம் குறைந்த இடைவெளியில் உள்பாடி அணிந்து கொள்வாள்.
இஸ்திரி போடுபவர்கள் தெருவுக்கு தெரு இப்போது இருப்பதுபோல் எல்லாம் அப்போது கிடையாது. சலவை செய்பவர்களே கரியால் சூடாகும் இஸ்திரிப் பெட்டிகளை வைத்திருப்பார்கள். ஒரு பேட்டைக்கு ஒன்று அல்லது இரண்டு கடைகள்தான் இருக்கும். அங்கேதான் துணிகளை இஸ்திர்க்கு கொடுக்க வேண்டும். பெரிய வீடுகள் என்றால் டோபி வீட்டுக்கே வருவார். “ அம்மா டோபி வந்திருக்கேன் “ என்று குரல் கொடுத்தவுடன் நல்ல தேக்குமரத்தில் செய்யப்பட்ட கூண்டு போன்ற பெட்டியிலிருந்து, துணிகளை எடுத்துப் போடுவர். சலவைக் கணக்கிற்கு என்று தனியாக டைரியோ நோட்டுப் புத்தகமோ வைத்திருக்கும் வீடுகள் அனேகம். AK, MC என்று முதல் எழுத்துக்களைப் போட்டு வண்ணான் மார்க் மையில் எழுதுவர். துணிகள் தொலைந்து போகாமல் இருக்கவும் வேறு வீடுகளுக்கு மாறிப் போகாமல் இருக்கவுமே இந்த ஏற்பாடு. அதுவும் தவிர அனைத்து சலவைத் தொழிலாளர்களும் பொதி மூட்டைகளைக் கழுதைகள் மேல் ஏற்றிக் கொண்டு சைதாப்பேட்டை ஆற்றுக்குப் போய் வெளுத்து காயப்போட்டு மடித்து எடுத்து வருவர். சைதாப்பேட்டை பாலத்தில் மேல் பேருந்தில் மதிய நேரத்தில் சென்றால், ஒரு பிரம்மாண்ட திரைப்படக் காட்சிபோல் கலர் கலரான துணிகள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும்.
கமலா டீச்சர் சலவைக்குத் துணிகளைப் போட்டு யாரும் பார்த்ததில்லை. ஆனாலும் அவள் உடுத்தும் உடைகள் பளிச்சென்று சுருக்கம் இல்லாமல் இருக்கும். ஒரு குறும்புக்கார சிறுமி அந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் தயங்கி தயங்கி ஒரு நாள் கமலா டீச்சர் வீட்டுக்குள் போனாள்.
டீச்சர்.. அவசரமா வெளியே போகணும். என் பாவாடை எல்லாம் கசங்கி இருக்கு. கொஞ்சம் இஸ்திரி பெட்டி தாரீங்களா! ”
கமலா டீச்சர் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“ எங்கிட்ட இஸ்திரிப் பெட்டி இருக்குதுன்னு யாரு சொன்னா ? “
“ இல்ல ஒங்க உடையெல்லாம் நீவி விட்டாமாதிரி நறுக்குன்னு இருக்கு.. அதான்.. “
கேட்ட சிறுமிக்கு தன் கையைக் கிள்ளிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. காரணம் கமலா டீச்சர் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
“ இஸ்திரிப் பொட்டியா கேக்கறே. . இதோ இதான் என்னோட இஸ்திரிப் பெட்டி.. “
அகலமான ஒரு பித்தளை செம்பை எடுத்துக் காண்பித்தாள் கமலா டீச்சர். அதன் அடிபாகத்தின் வெளிப்புறம் தட்டையாக இருந்தது. மேல் பாகம் ஒரு கூஜாவைப்போல் திருகு மூடி கொண்டதாக இருந்தது. அந்த மூடிக்கு ஒரு கைப்பிடியும் இருந்தது.
“ இந்தா இதுதான் என் இஸ்திரி பொட்டி வேணுமா “ என்று கேட்டு மீண்டும் சிரித்தாள் கமலா டீச்சர்.
“ இதுவா இதுல எப்படி டீச்சர் ? “
“ உள்ளாற சுடுதண்ணிய ஊத்தினா சொம்பு சூடாவும் இல்ல. அப்ப இத வச்சு துணிய இஸ்திரி பண்ணிக்க வேண்டியதுதான் “
கமலா டீச்சர் தன் துணிகளை தானே இஸ்திரி பண்ணிக் கொள்வதும் அவளது ஆண் எதிர்ப்பு உணர்வு காரணமாகத்தான் என்று எல்லோரும் நம்பினார்கள்.
கமலா டீச்சரைத் தேடி யாரும் வருவதில்லை. வழக்கமாக சனி ஞாயிறு அன்று மட்டும் பாட்டு நாட்டியம் கற்றுக் கொள்ள மாணவிகள் வருவர். அப்போதுகூட அடுத்தவர்களுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக கமலா டீச்சர் தன் வீட்டு கதவுகளை அடைத்து வைத்திருப்பாள்.
மாதம் முதல் தேதி அன்று கமலா டீச்சர் காலையில் ஒரு ஐந்து நிமிடம் முன்னதாகவே கிளம்பி விடுவாள். ரெட்டியார் சம்சாரத்தைப் பார்த்து வாடகைப் பணத்தைக் கொடுத்து விட்டு அவள் பள்ளி சென்று விடுவாள். ரெட்டியார் சம்சாரம் ஆச்சர்யமாக சொல்வாள்.
“ எந்துக்கு கங்காரு .. ரெண்டு தேதி ஆனாத்தான் ஏமி “
பதிலுக்கு ஒரு புன்னகையை சிந்திவிட்டு கமலா எக்ஸ்பிரஸ் கிளம்பிவிடும். அனாவசிய உரையாடல்களுக்கு அவள் வாழ்வில் இடமில்லை.
கமலா டீச்சர் யாரோடும் ஒட்டி உறவாடி யாரும் பார்த்ததில்லை. அப்படிப்பட்டவள் தன்னுடன் பணிபுரியும் வேறொரு டீச்சரின் கை பிடித்துக் கொண்டு நடந்து போனதைப் பார்த்த பலர் ஆச்சர்யப் பட்டுப் போனார்கள். சிலர் இன்னும் கொஞ்சம் துப்பு துலக்கி அந்த டீச்சர் பெயர் தர்மாம்பாள் என்றும், அவள் விதவை என்றும், அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்றும் கண்டுபிடித்தார்கள். கமலா டீச்சருக்கு அவர்களுக்கும் கிட்டத்தட்ட இருபது வயது வித்தியாசம் இருக்கும். தாயில்லாத கமலா டீச்சர் தர்மாம்பாளிடம் ஒரு தாய்ப் பாசத்தை எதிர்பார்த்து பழகி இருக்கலாம் என்று கணக்குப் போட்டார்கள்.
இவ்வளவு நெருக்கமான தோழிகள் ஏன் தனித்தனியாக வாழவேண்டும்? ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கலாமே என்றும் யோசனை செய்தார்கள். ஆனாலும் அதை கமலா டீச்சரிடம் சொல்ல யாருக்கும் தைரியம் வரவில்லை.
ஒரு நாள் கமலா வீட்டிலிருந்து கேவல் சத்தம் பெரிதாகக் கேட்டது. டீச்சர் பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தாள். அவளருகில் ஒரு இருபது வயது இளைஞன் உட்கார்ந்திருந்தான்.
“ அம்மா அழாதீங்க .. இனிமே ஒங்களை பிடிச்ச சனியன் விலகிட்டுதுன்னு நெனச்சுக்குங்க “
“ டேய் பாலு அப்படி சொல்லாதே .. தர்மாம்பா ஒன்னை வளத்தவங்க.. அவங்க இருக்கற வரைக்கும் வாயத் தொறக்காத நீயி இப்ப அவங்க இறந்துட்டாங்கன்ன உடனே வாய்க்கு வந்த படி பேசறதா? “
ஏம்மா பேசக்கூடாது.. தாயையும் பிள்ளையும் பிரித்த கிராதகி அவ. வெறும் சோறும் துணியும் வாங்கிக் கொடுத்தா ஆச்சா.. “
“ அது அவங்க தப்பு இல்லடா.. நான் செய்து கொடுத்த சத்தியம். அதுக்கு அவங்க என்னா பண்ணுவாங்க “
இங்கொன்றும் அங்கொன்றுமாக குழுமி இருந்த கூட்டத்திற்கு எதுவும் புரியவில்லை. ஆனால் தர்மாம்பாள் டீச்சர் இறந்து போய்விட்டார் என்று மட்டும் அனுமானிக்க முடிந்தது. அவள் வளர்த்த பிள்ளை பாலு என்பதும் புரிந்தது. ஆனால் அவன் கமலா டீச்சரை அம்மா என்று கூப்பிடுகிறான்?
தர்மாம்பாள் சாவுக்கு வந்த சாதி சனம் கொஞ்சம் கமலா டீச்சர் வீட்டில் தங்கியது. கொஞ்சம் வாய் ஓட்டையான கிழம் ஒன்று கமலா சரித்திரத்தைப் புட்டு புட்டு வைத்தது.
கமலா பூப்படையும் முன்பே திருமணம் செய்விக்கப் பட்டவள். கொஞ்சம் கட்டுப் பெட்டியான வளர்ப்பு. நெஞ்சில் நிறையப் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம். ஆனால் போய் சேர்ந்த இடம் கொஞ்சம் வக்கிரமான இடம்.
தன்னை மறந்து கமலா பாடும்போதெல்லாம் கடிந்து கொள்வார்கள் மாமியார் வீட்டில்..
“ இதென்ன தாசி வீடா நாள் முச்சூடும் பாட்டும் கூத்துமா இருக்கறதுக்கு? ”
கமலா பூப்படைந்த நாள் அவள் வாழ்க்கையிலே ஒரு திகிலான நாள். கொல்லைப் புறக் கதவிற்கு அருகில் ஒரு பழைய சாமான்கள் வைக்கும் அறையில், சன்னலில்லாத இருட்டு அறையில் மூன்று நாட்கள் அவளை வைத்து பூட்டிவிட்டார்கள். வெளிச்சம் துளிக்கூட இல்லாத அறை. சாப்பாடு தையல் இலையில் வைத்து தரப்படும். கூடவே மண் குவளையில் தண்ணீர்.
நான்காம் நாள் எண்ணை தேய்த்து குளிப்பாட்டினாள் அந்தக் கிராமத்து மருத்துவச்சி கிழவி. இரவு அவள் வலியைக்கூட உணராமல் அவள் மேல் மூர்க்கமாகப் பாய்ந்தான் அவளை விட பத்து வயது மூத்த அவளது புருசன். அவன் அபார சத்து கொண்டவனாக இருந்தான். அவனது முதல் தாக்குதலே அவளை சூலுற வைத்தது. ஏற்கனவே ஒல்லிக்குச்சி உடம்பு, கூடவே கர்ப்பத்தினால் ஏற்படும் ரத்த சோகை சேர்ந்து அவள் முகமும் உடலும் வெளிறிப் போனது. அதனாலேயே அவளது புருசனுக்கு அவளைப் பிடிக்காமல் போனது.
அவள் மீது சந்தேகக் கணைகளைத் தொடுத்து அவள் பிறந்த வீட்டிற்கே அனுப்பி விட்டார்கள் அவளது மாமியார் வீட்டுக்காரர்கள். அதன் பின் ஓரிரு மாதங்களில் அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஊரை விட்டே ஓடிப் போனார்கள்.
கமலா டீச்சருக்கு பிறந்தவன்தான் பாலு. அவன் பிறந்த பின் அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பினாள். ஆனால் அவள் பிறந்த வீட்டுக்காரர்கள் அவளுக்கு தைரியம் கொடுத்தார்கள். அவள் குழந்தை அவளுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாதே என்று தூரத்து சொந்தமான தர்மாம்பாளிடம் பாலுவைக் கொடுத்து வளர்க்கச் சொன்னார்கள்.
தர்மாம்பாள் அப்போதே கணவனை இழந்திருந்தாள். பள்ளி ஆசிரியையாக இருந்தாள். அவளுக்கும் ஒரு பிடிப்பு தேவைப்பட்டது. ஒரு நிபந்தனையுடன் அவள் பாலுவை ஏற்றுக் கொண்டாள். அவள் மூச்சு அடங்கும் வரை பாலுவைப் பார்க்க கமலா முயலக் கூடாது. கமலாவிற்கு வேறு வழி தெரியவில்லை. ஒப்புக்கொண்டாள்.
தர்மாம்பாள் இறக்கும் தருவாயில்தான் பாலுவிடம் கமாலாவைப் பற்றிய உண்மையை சொல்லியிருக்கிறாள்.
இப்போது கமலாவும் பாலுவும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். பாலு பெரிய படிப்பு படித்து வேலைக்குப் போகிறான். ஆனாலும் வழக்கம்போல கமலா டீச்சர் எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல தவறுவதில்லை. சனி ஞாயிறு கிழமைகளில் பாட்டும் ஜதியும் கேட்பது நிற்கவேயில்லை.
பாலு தன் அப்பாவைத் தேடும் முயற்சிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவன் உயிரோடு இருக்கிறானா என்பதே கண்டறியவேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஆனாலும் கமலா டீச்சர் தலை நிறைய மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு, வட்ட சிவப்பு சாந்துப் பொட்டு வைத்துக் கொண்டு காட்சி தருகிறாள். இப்போதெல்லாம் அவள் முகத்தில் சிரிப்பு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொள்கிறது. அவளும் கொஞ்சம் பூசினாற்போல்தான் ஆகியிருக்கிறாள்
0

Series Navigationகுடிக்க ஓர் இடம்ராசி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    சிறகு இரவிச்சந்திரனின் ” ஜதி தாள சுந்தரி ” கமலா டீச்சர் கதை சுவாரசியமாக இருந்தது. கதையைக் கூறியுள்ள விதமும் சிறப்பானதே…….டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *