பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ – குணா.கவியழகனின் ‘விடமேறிய கனவு’ –

This entry is part 26 of 27 in the series 6 செப்டம்பர் 2015

பாவண்ணன்

முதல் உலகப்போரையும் இரண்டாம் உலகப்போரையும் தொடர்ந்து வெளிவந்த இலக்கியங்களும் திரைப்படங்களும் அப்போர்களின் சாட்சியங்களாக இன்றும் விளங்குகின்றன. இரு தரப்பினரும் கொன்று குவித்த மக்களின் வலியையும் துயரங்களையும் இன்றளவும் அவை உலகத்துக்கு பறைசாற்றியபடி இருக்கின்றன. சீனப்புரட்சியையும் ரஷ்யப்புரட்சியையும் தொடர்ந்து அந்நாடுகளில் நிலவிய கடுமையான கண்காணிப்புகளையும் மீறி புரட்சியின் விளைவுகளைப்பற்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் மானுடத்தின் உலராத கண்ணீர்த்தடத்தை அடையாளப்படுத்தியபடி இருக்கின்றன. ரத்தத்தையும் கண்ணீரையும் சிந்தவைத்த போர்களும் புரட்சிகளும் அதிகாரத்தை அடைந்துவிட்டால் வெற்றியின் வரலாறாக மாறிவிடும். அதிகாரத்துக்கு அடிபணிந்துவிடும்போதோ அல்லது தன்வசம் இருக்கும் அதிகாரத்தை இழந்துவிடும்போதோ, அனைத்தும் தோல்வியின் வரலாறாக மாறிவிடும். உலகம் உருவான காலத்திலிருந்து மீண்டும்மீண்டும் நிகழும் மாறாத உண்மை இது.
வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவரும் அரசியல்வழிகளையும் கலைவழிகளையும் கற்றுத் தேர்ந்தால்மட்டுமே ஓரளவு சமநிலையான சித்திரத்தைக் கண்டடைய முடியும். அரசியல் கொள்கைகளால் ஆனவை. கலைகள் மனஎழுச்சிகளால் உருவானவை.
சேரசோழபாண்டியர்களின் வீரத்தையும் வெற்றியையும் பற்றிய ஏராளமான சித்திரங்கள் சங்ககாலச் செய்யுள்களில் தீட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் ஆட்சிமுறையைப்பற்றிய தகவல்கள், இன்று கண்டெடுக்கப்பட்ட ஏராளமான கல்வெட்டுகளில் அடங்கியுள்ளன. இவை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ என்னும் பாடலை எப்படி மறக்கமுடியும். எல்லா அறங்களையும் மீறி, தன்னைவிட மிகமிகச்சிறிய ஒரு வேளிர்குலத்தவன்மீது மூவராக இணைந்து போரிட்டுக் கொன்றழித்த கொடுமையின் கண்ணீர்க்கதையை அப்பாடல் முன்வைக்கிறது. எது மூவேந்தர்களின் உண்மையான முகம்? முன்சொன்ன தகவல்களிலிருந்து திரண்டெழும் முகமா? பாரிமகளிரின் கண்ணீர்க்கதையிலிருந்து திரண்டெழும் முகமா? இரண்டுமே உண்மை. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்போல.
நாம் அனைவரும் சாட்சியாக நின்று பார்க்க, ஓர் இன அழிப்புப்போரை நிகழ்த்திமுடித்துவிட்டது இலங்கை அரசு. நம் சகோதரர்கள் லட்சக்கணக்கில் மாண்டுபோனார்கள். இலங்கை அரசின் தாகம் அப்போதும் அடங்கவில்லை. போர்த்தருணங்களில் கைதிகளாக பிடித்தவர்களையும் அடைக்கலமாக வந்தவர்களையும் வேலிமுகாம், கண்காணிப்பு முகாம், மறுவாழ்வு முகாம், சீர்திருத்த முகாம் என வெவ்வேறு பெயர்களில் ஆண்டுக்கணக்கில் அடைத்தும் வதைத்தும் சிறுகச்சிறுக கொன்றொழித்து தன் தாகத்தைத் தணித்துக்கொள்கிறது. இந்தப் பின்னணியில் விரிகிறது குணா.கவியழகனின் புதிய நாவலான ‘விடமுண்ட கனவு’. ஏற்கனவே ’நஞ்சுண்ட காடு’ நாவலை எழுதியவர். விசாரணைக்காக பிடித்துவரப்பட்டு முகாமில் அடைக்கப்பட்ட முன்னாள் போராளியான உருத்திரன், நேரடி விடுதலை என்பது வெறும் பொய்யுரை என்பதை அனுபவங்களால் உணர்ந்து, நண்பர்களுடன் திட்டம் தீட்டி தப்பித்துச் செல்லும் கதை.
உருத்திரன் அசைபோடும் பால்யகால நினைவுகள் வழியாக நாவலின் தொடக்கத்தில் ஒரு காட்சி இடம்பெறுகிறது. குழந்தைப்பள்ளியில் ஓடிப் பிடித்து விளையாடும் விளையாட்டில் தடுமாறி விழுந்து தோல்சிராய்ப்பால் ரத்தக்கசிவுடன் அழுகிறாள் ஒரு சிறுமி. அவளை அமைதிப்படுத்தி அழுகையை நிறுத்தி வகுப்புக்கு அழைத்துச் செல்கிறான் சிறுவனான உருத்திரன். தற்செயலாக அவர்களைக் காண்கிற ஆசிரியை அவள் அழுகைக்குக் காரணம் அவனே என பிழையாகப் புரிந்துகொண்டு அவன் கன்னத்தில் அடித்துவிடுகிறாள். ஆசிரியை முன்னால் உண்மையைச் சொல்லாத சிறுமி, தனிமையில் அவனுக்கு சாக்லெட்டுகள் கொடுத்து ஆறுதல் சொல்கிறாள். அவள் மனத்தில் தன்னைப்பற்றி உருவாகும் முக்கியத்துவத்தை அவன் மனம் விரும்புகிறது. ஆசிரியையிடம் வாங்கிய அடிகளையும் வசைகளையும் அந்த முக்கியத்துவம் மறக்கவைத்துவிடுகிறது. இப்படி பள்ளிவாழ்விலும் சமூகவாழ்விலும் பல அனுபவங்கள். தனக்கு அருகில் இருப்பவர்களை ஆறுதல்படுத்த, அவர்களுக்கு துணையாக நிற்க, அவர்களைக் காப்பாற்ற என பல காரணங்களுக்காக அடிகளும் வசைகளும் பெற்று, அந்தந்தத் தருணங்கள் வழங்கிய முக்கியத்துவங்களில் திளைத்த இளமையனுபவங்கள் கொஞ்சம்கொஞ்சமாக நாட்டைக் காக்கும் போராட்டத்துடன் அவனை இணைத்துவிடுகின்றன.
விசாரணைமுகாம்களின் காட்சிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் மனத்தை நடுங்கவைக்கின்றன. தந்திரமான கேள்விகளை மாற்றிமாற்றிக் கேட்டுக் குழப்பி, சொல்லப்படும் பதில்களை ஆய்ந்து, வாய்தவறி விழுந்துவிடும் ஏதேனும் ஒரு சொல்லைப் பிடித்துக்கொண்டு அடித்தும் உதைத்தும் துப்பாக்கியால் மிரட்டியும் மேலும்மேலும் சொல்லென வதைக்கும் விசாரணைமுறைகள் மனமுருகும் வகையில் தீட்டப்பட்டுள்ளன. காவலர்களின் அடிகளால் கைகளும் கால்களும் உடைந்தவர்களாகவும் உடல்காயங்களால் அவதிப்படுகிறவர்களுமே சிறைக்கொட்டடிகளில் நிறைந்திருக்கிறார்கள். சிறுநீர் கழிக்க இயலாமல் வயிற்றுவலியால் துடிப்பவனை நடிப்பதாகச் சொல்லிப் புறக்கணித்து மரணமடைய வைத்துவிடுகிறார்கள். மருத்துவமனைக்கோ, அடுத்தகட்ட விசாரணைக்கோ அழைத்துச் செல்லப்படும் மனிதர்கள் ஒருபோதும் அறைகளுக்குத் திரும்பி வருவதில்லை. பதிவே இல்லாமல் அவர்கள் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். மரணம் ஒரு தினசரிக் காட்சியாக நகர்ந்துபோகிறது.
ஒவ்வொரு நாளும் குடிதண்ணீர் பாட்டில்களும் உணவுப்பொருட்களும் அவர்களைநோக்கி வீசியெறியப்படுகின்றன. சுகாதாரமற்ற அறைகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். பத்து பேர்கள் தங்கும் அறையில் ஐம்பது பேர்கள். எப்போதும் நிரம்பிவழிந்து துர்நாற்றமடிக்கும் கழிப்பறைகள். செத்துப்போன பிரபாகரனின் உருவப்படத்தைக் காட்டி அடையாளம் தெரிகிறதா என தந்திரமாகக் கேட்டு, மாறும் முக உணர்வுகளை உற்றுக் கவனித்து, அதற்குத் தகுந்தபடி தண்டனைமுறைகளை மாற்றும் தந்திரத்துக்கு சிறையில் உள்ள அனைவருமே பலியாகிறார்கள். இயக்கத்துடன் எவ்விதமான தொடர்புமற்றவர்கள் எப்படியாவது உயிர்பிழைத்து வெளியே போனால் போதும் என்று விடுதலைக்காகக் காத்திருக்கிறார்கள். இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் தம் தொடர்பு விவரங்களை குறைத்தும் மாற்றியும் சொல்லி விடுதலைக்கான வாய்ப்புக்காக ஏங்குகிறார்கள். பிழைத்திருக்கவேண்டும், உலகத்தில் ஏதேனும் ஒரு மூலையில் உயிர்த்திருக்கும் சொந்தபந்தங்களை என்றேனும் ஒருநாள் சந்தித்து ஒன்றுசேர்ந்துவிடவேண்டும் என்று ஒவ்வொரு கணமும் கனவுகளில் திளைத்திருக்கிறார்கள். அதன்பொருட்டு ஆபாசமான வசைகளையும் அடிஉதைகளையும் துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கிக்கொள்கிறார்கள். ராசு அண்ணர், சுரேன், சஞ்சயன், வர்மன், ரகு, பசீலண்ணை, சீலன், ஜீவா, வெடி பாலன் என ஒரு சிலருக்கு முகமும் பேரும் கொடுத்து நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார் கவியழகன். வதைபடும் லட்சக்கணக்கான மனிதர்களின் அடையாளமாகவே அவர்களை நினைக்கத் தோன்றுகிறது.
தீதும் நன்றும் பிறர்தர வாரா என நாவலின் பிரதான பாத்திரமான உருத்திரன் அசைபோடும் வரிகள் முன்வைக்கும் ஒரு கேள்வி நாவலின் மையத்தை நோக்கி நம்மைச் செலுத்தும் ஒரு வழியாக விரிகிறது. விடுதலை இயக்கம் ஏன் தோற்றது என மாறிமாறி நண்பர்கள் தமக்குள் விவாதித்துக்கொள்ளும் அத்தியாயம் நாவலில் முக்கியமான ஒரு பகுதி. எல்லாவிதமான தரப்புகளையும் இந்த அத்தியாயம் தொகுத்து முன்வைத்திருக்கிறது. ”இயக்கம் என்பது வீட்டைப் பாதுகாக்கும் என்பதற்காகத்தான் நாட்டுக்காக போராளியானோம். ஆனால் கட்டாய ராணுவச்சேவை என்னும் பெயரில் வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் அழைத்துச்சென்ற இயக்கம் எவ்விதமான பயிற்சியுமின்றி அவர்களை போர்முனையில் நிறுத்தி உயிர்துறக்கவைத்துவிட்டது. இயக்கத்தாலேயே வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் எப்படி களத்தில் போரிடமுடியும்?” என்னும் கேள்வி ஒரு தரப்பு. “போதிய ஆயுதங்களும் ஆட்களும் இல்லாமல் சண்டையைத் தொடங்கியிருக்கக்கூடாது” என்பது மற்றொரு தரப்பு. “நாம் பாதுகாப்புச் சண்டையிலேயே தொடர்ந்து நீடித்தது பெரிய பிழை. நாம் தாக்கும் சண்டையை நிகழ்த்தியிருக்கவேண்டும்” என்பது இன்னொரு தரப்பு. “பலம்தான் வெல்லும் பலம்தான் வெல்லும் என்று நொடிக்கொரு முறை சொல்லும் இயக்கம் நம்மைவிட ஆயிரம் மடங்கு பலமும் பல நாடுகளின் ஆதரவும் கொண்ட சிங்களப்படையை தவறாகக் கணித்தது பெரும்பிழை” என்பது மற்றுமொரு தரப்பு. ”போராட்டம் நியாயமானது. நான் நேர்மையானவன் என்ற எண்ணம் வந்துவிட்டால் நான் எடுக்கும் முடிவை மக்கள்மீது திணிக்க தயங்கவே மாட்டேன். என் நேர்மை மீது நான் கொள்ளும் கர்வம் இது. இது வந்தால் என் தீர்மானம் அவர்களுக்கானதுதானே என்னும் பெருமையுணர்வு தோன்றும். இது பிழையாக என்னை வழிநடத்தும்” என்பது பிறிதொரு தரப்பு. சிங்களக் களப்பணியாளரான றுவான் முற்றிலும் புதிதான ஒரு கோணத்தில் இன்னுமொரு தரப்பைக் கட்டியெழுப்புகிறார். “எப்போதெல்லாம் தெற்கில் சிங்கள அடித்தட்டு மக்கள் அதிகாரத்துக்கு எதிராக குரலெழுப்புகிறார்களோ, அப்போதெல்லாம் அதை தமிழர்களைநோக்கி திசைதிருப்புவதில் வெற்றிகொள்கிறது சிங்கள அரசாங்கம். அங்கு தமிழர்கள் நசுக்கப்படும்போது இங்கு சிங்களர்கள் நசுக்கப்படுகிறார்கள். ஆனால் அது செய்தியாகிறது. இது செய்தியாவதில்லை. போர் என்பதே அரசாங்கம் நிகழ்த்தும் ஒரு பெரிய நாடகம்” என்பது அவர் தரப்பு. கலைநேர்த்தி குன்றாமல் எல்லா விமர்சனங்களையும் கச்சிதமான உரையாடல்கள் வழியாக முன்வைத்திருக்கும் கவியழகன் பாராட்டுக்குரியவர்.
ராணுவத்தினர் அனைவரையும் ஒரே வார்ப்பாகக் காட்டவில்லை கவியழகன். வன்னிப்போருக்குப் பிறகு கைக்குக் கிடைத்த தமிழ்ப்பெண்களை கதறக்கதற இழுத்துச் சென்று இன்பம் துய்த்ததை கைப்பேசியில் படம்பிடித்துவைத்துகொண்டு, மதுவிருந்துக்குப் பிறகான இரவுகளில் மீண்டும்மீண்டும் பார்த்து ரசிக்கும் ராணுவத்தினனும் இந்த நாவலில் இடம்பெறுகிறான். மாற்றுமுகாம்களில் வசிக்கும் சொந்தபந்தங்களை வாரத்துக்கு இரண்டு நாட்கள் சந்தித்துப் பேசவும் முள்வேலிகளை அகற்றவும் கைதியின் மனைவியோடு கைப்பேசியில் தொடர்புகொண்டு படுக்க வருமாறு அழைப்பு விடுக்கும் போலீஸ்மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சி செய்யும் ராணுவத்தினனும் இடம்பெறுகிறான். இறுதிக்காட்சிகளில் கைதிகள் தப்பித்துச் செல்ல உதவும் ஒரு சிங்களப்பெண் போலீஸ்துறையைச் சேர்ந்தவள். பாதுகாப்பாக அவர்களை அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றிவிடுபவன் ஒரு சிங்கள ஆட்டோ டிரைவர். இறுதியாக, அவர்கள் அடைக்கலம் தேடிச் செல்வதுகூட ஒரு சிங்களப்போராளியின் வீட்டைநோக்கி.
கைதிகளில் மூத்தவரான ராசு அண்ணர் இடம்பெறும் காட்சிகள் நாவலின் முக்கியமான சித்தரிப்பு அடங்கிய பகுதியாகும். விவேகம் நிறைந்த அவருடைய பேச்சு எல்லோரையும் கவனிக்கவைக்கத் தூண்டும் தன்மை உடையது. சிங்கள மொழி அறிந்தவர் என்பதால் பல சமயங்களில் அவர் அதிகாரிகளுக்கும் விசாரணை மனிதர்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார். அவருடைய வாதம் ஒருசில நன்மைகளை அதிகாரிகளிடமிருந்து பெற்றுத் தருகிறது. இயக்கம் பற்றியும் போர் பற்றியும் அவருக்கும் விமர்சனம் இருக்கிறது. அதிகாரிகள்மீது அவரும் கோபமுற்றவராக இருக்கிறார். ஆயினும், எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டுவது தன் மரணத்தைத் தானே தேடிக்கொள்வதற்குச் சமம் என நினைக்கிறார். எவ்வகையிலேனும் உயிர்த்திருப்பதே இத்தருணத்தில் முக்கியம் என்பது அவர் எண்ணம். முகாமுக்கு வரும் ஒவ்வொருவரிடமும் இதையே அவர் திரும்பத்திரும்பச் சொல்லி அமைதிப்படுத்துகிறார். என்றேனும் ஒருநாள் காலத்தின் கட்டாயத்தால் விசாரணைமுகாம் நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வரும் என்பதில் அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. முகாமிலிருந்து தப்பித்துச் செல்பவர்களை அவர் தடுப்பதில்லை. அதே சமயத்தில் அதைத் தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்வதும் இல்லை.
கடுமையான துயரங்களுக்கு நடுவிலும் அவர் காட்டும் ஆழமான விவேகமும் அமைதியும் அவரை மிகப்பெரிய மனிதராக எண்ணவைக்கிறது. துயர்தோய்ந்த இரவுத் தருணங்களில் அவர் பாடும் பாடலைக் கேட்டு சிறைக்கொட்டடியில் எல்லோரும் ஆறுதல் கொள்கிறார்கள். ’தர்மம் ஒரு வாழ்வின் பொய்யோ- சூதே அதன் உள்ளின் மெய்யோ’ என்று தொடங்கும் அந்தப் பாடல் கண்ணீர் வரவழைப்பதாக உள்ளது. ’பொய்யொன்றே வாழ்வின் மெய்யோ- இல்லை பொய்யே விதிதானோ‘ என்பது சரணத்தில் இடம்பெறும் ஒரு வரி. பொய்க்காரணங்களுக்காக ஆண்டுக்கணக்கில் நிகழும் விசாரணைகளையும் அவற்றை மேலும்மேலும் நீட்டி உலகத்தை நம்பவைப்பதற்காக அரசாங்கம் கட்டியுரைக்கும் பொய்களையும் மெல்லமெல்ல உயிர்துறக்கும் மனிதர்களையும் தினசரி வரலாற்றுச்சம்பவமாக கையறுநிலையில் நின்றபடி பார்க்கும் நம் மனத்தில் அந்த வரிகள் ஏற்படும் அதிர்வுகள் அளவற்றவை. அதுவே நாவலின் வெற்றி.

(விடமேறிய கனவு. குணா கவியழகன். நாவல். அகல் வெளியீடு, 348-ஏ, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை- 14. விலை. ரூ.240)

Series Navigationநிஜங்களைத் தேடியவன்வேலி நாடகம் – சென்னை செப்டம்பர் 19, அலயன்ஸ் ஃப்ரான்ஸேஸ்
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    valavaduraiyan says:

    நாவலைப் படிக்கத்தூண்டும் நல்ல விமர்சனம். போரின் இறுதி பற்றியும் போரின் காரணங்கள் பற்றியும் காட்டியுள்ளவை குறி
    ப்பிடத் தக்கன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *