தொழிற்சங்க அவசியம் பற்றிய நாவல் “ பனியன் ” – தி.வெ.ரா

This entry is part 6 of 23 in the series 11 அக்டோபர் 2015

பஞ்சப்படிக்காக 1984ல் திருப்பூரில் 127 நாட்கள் நடந்த பனியன் தொழிலாளர்களின் எழுச்சிமிக்கப் போராட்டத்தை திருப்பூரின் எந்த எழுத்தாளரும் இது வரை ஏன் எழுதவில்லை. அதை ” பனியன் “ நாவலாக திருச்சியில் உள்ள தி.வெ.ரா. ஏன் எழுதியுள்ளார் என்பதுதான் முதலில் மனதில் வந்தது.தொழிலாளர்களின் போராட்டம், சிரமங்கள், வெற்றி என்ற வகையில் இதை சோசலிச எதார்த்த வகை நாவலாகக் கொள்ளலாம்.திருப்பூரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்களும் நிகழ்வுகளின் தொகுப்புகளும் அடுக்கப்பட்டுள்ள அளவில் இதை ஒரு டாக்கு நாவல் என்றும் சொல்லலாம். திருக்குறள் சார்ந்த குறளியல் நெறியை எப்போதும் முன்வைக்கும் தி.வெ.ரா. மார்க்சியம் சார்ந்து இந்த நாவலை எழுதியிருக்கிறார்.,கோவை பூசாகோ கல்லூரியில் நான் முதுகலை கணிதம் படிக்க அவர் முதுகலை தமிழ் படித்தவர். அப்போது அவர் தி. க. ஆதரவாளர். இன்று ஆன்மீகச் சொற்பொழிவு செய்கிறார். ஓரடி முன்னே ஈரடி பின்னே என்று., இப்போது மார்க்சியம் சார்ந்த ஒரு படைப்பை உருவாக்கியிருக்கிறார். உலகமயமாக்கல் சூழலில் தொழிற்சங்க இயக்கங்கள் வலுவிழந்து கொண்டிருக்கும் நிலையிலும், இளைஞர்களின் கவனம் அரசியலுக்கு மாறாத நுகர்வுச் சூழலிலும் இந்நாவலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது.

தொழிற்சங்கங்கள் அரசியலுக்குள் வரவேண்டும்.அரசியல் அதிகாரம் இல்லாமல் தொழிற்சங்கங்கள் செயல்பட முடியாது. தொழிலாளர்களைப் பாதுகாக்க முடியாது. பொருளாதார இயல்பில் எல்லாம் மாறும், வளரும். ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வுகளின் எல்லா வடிவங்களையும் எதிர்த்துப் போராடுவது புதிய சமூகத்தை நிர்ணிக்கும் என்பதை இப்போராட்ட நாவல் ஒரு வகையில் சித்தரிக்கிறது. பாத்திரங்கள் லட்சிய கதாநாயகர்களாக வார்க்கப்பட்டிருக்கிறார்கள். சுப்பையா என்ற பொதுவுடமை இயக்கம் சார்ந்த தோழரின் தொழிற்சங்க ஈடுபாடும், பின்னால் தொழிற்சங்க தலைவனாகி பனியன் தொழிலாளர்களுக்காகப் போராடுவதும் காட்டப்பட்டிருக்கிறது. திண்டுக்கல்லிலிருந்து வந்து அவருடன் சேரும் இஸ்மாயில், அவரின் தம்பி, ஒரு தலித்- குன்னான் போன்றவர்கள் முக்கிய கதாபத்திரங்களாக உள்ளார்கள். வழக்கமான போராட்ட நிகழ்வுகள், பேச்சுவார்த்தைகள், காட்டப்படுகின்றன.பிறகு போராட்டம் தொடர கருங்காலியான ஒரு தொழிற்சங்கத்தலைவர் வெளியேற்றப்பட உத்வேகம் பெற்று வெற்றியும் பெறுகிறது. 18 ஆண்டுகால நிகழ்வுகளை மையமாகவும், 127நாட்கள் போராட்டத்தை பிரதானப்படுத்தியும் கொண்டிருக்கிறது இந்த மார்சிய நாவல் இழப்பதற்கு எதுவுமில்லை அடைவதற்கு பொன்னுலகம் உண்டு என்று முடிகிறது. மூன்று கொள்கைகளை மனதில் கொண்டிருப்பவர் சுப்பையா . அதில் முக்கியமான சுய ஒழுக்கமுள்ளவனே தலைமைப் பதவிக்கு தகுதியுள்ளவன் என்பது வலியுறுத்தப்படுகிறது. வறுமைப் பெருகெடுத்தவர்களெல்லாம் புகும் ஊர் திருப்பூர். உழைப்பிற்கு மரியாதை உண்டு. உழைப்பவனுக்கு நிலம் சொந்தம் என்று கொடுக்கிற பாத்திரமும் இதில் உள்ளது. இலக்கியம் சமூகத்தின் வெளிபாடாக வர்க்கரீதியாக ஒன்றுபடுவது, வெற்று பிம்பங்களாய் இல்லாமல் செயல்மனிதர்களாக சிலர் காட்டப்படுகிறார்கள். ஆரம்பத்தில் சுப்பையா முரட்டுதனமானவன்தான். காலப்போக்கில் தொழிற்சங்க, அரசியல் அறிவால் அற்புதமான உழைக்கும் வர்க்கப் பிரதிநிதியாக அவன் மாறுகிறான்.போராட்டங்களே அவனை அப்படி உருவாக்கியிருக்கிறது. அவர் அம்மா அதிகம் படிக்காதவள் என்றாலும் பொதுவுடமை தத்துவத்தில் நம்பிக்கை கொண்டவள் . ஆனால் சுப்பையா தங்கையை ஒரு முசலமானுக்கு திருமணம் செய்து தர கேட்கும் போது அவள் பின்வாங்குகிறாள். இன்னும் முதிர்சியடையாமல் ஜாதிக்குள்ளே இருக்கிறாள்.பண்ணையத்தில் வேலை செய்யும் குன்னான் என்னும் தலித் அந்தக் குடும்பதோடு ஒன்றியிருக்கிறான். மனிதர்களின் கந்து வட்டித் தொல்லையும், அதனால் தற்கொலைளும், பிரதான வீதியில் நடைபெறும் விபச்சாரமும் வெளிச்சமாகின்றன.தொழிலாளனின் கேளிக்கையில் இருக்கும் குறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன். போராட்ட காலத்தில் திருப்பூரைச் சுற்றி பார்க்கலாம் வாங்க என்று சொல்லியே பல இடங்களுக்கு ஆசிரியர் கூட்டிப்போகிறார்.சுப்பையா அடிபடுகிறார். கடைசியில் செத்துப் போகிறார். திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், முதுபெரும் தலைவர் நல்லகண்ணு, சுப்ரபாரதிமணியன் ஆகியோர் கதா பாத்திரங்களாகவும் வருகிறார்கள்.தொழிலாளர் பண்பாடும், செய்தி அறிக்கை போல் திருப்பூர் பற்றியத் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. சுப்பையாவால் வளர்க்கப்படும் இஸ்மாயிலும், அவர் தம்பி முத்தையாவும் தொழிற்சங்க வாதிகளாக மாறாமல். குட்டி முதலாளிகள் ஆகி சமரசவாதிகளாகவே இருக்கிறார்கள். 1969ல் நடந்த 60 நாள் போராட்டம், வார விடுப்புக்கான போராட்டங்களும் முன்னோடியாக வருகின்றன.முதல் மேதினக் கொண்டாடம், இயந்திரங்கள் பனியன் தொழிலில் ஆட்களைத் துரத்துவது,முதலாளிகளின் இரக்கமற்றத் தன்மைபோராட்ட காலங்களில் கை விடப்பட்ட கடவுள்கள், கை விடப்பட்ட விபச்சாரப் பெண்கள், போராட்ட நிகழ்வுகளில் பாரதி, பட்டுக்கோட்டை, ஜீவா பாடல்கள், புளிச்ச ஏப்பக்காரனுக்கும் , பசி ஏப்பக்காரனுக்குமான போராட்ட முரண்கள் சித்திகரிக்க்ப்பட்டிருக்கின்றன.. கடவுள்கள், கதாப்பாத்திரங்கள் குறிக்கோள் மாந்தர்களாக படைக்கபட்டிருக்கிறார்கள். தமிழ் ஆசிரியர் என்ற அளவில் நல்ல தமிழில் எழுதுகிறார். ஆனால் மேடை பேச்சுக் கவர்ச்சியால் உரைநடை தடுமாறும் இடங்கள் உள்ளன,கொங்கு மொழி லகுவாகக் கையாளப்பட்டுள்ளது. கொங்கு மனிதர்களின் விருந்தோம்பல், அன்பு குறித்த நிரம்ப சாட்சியங்கள் உள்ளன. தொழிற்சங்க தொடர்புகள் இல்லாமல் தன்மைப்படுத்தப்பட்டிருக்கிற திருப்பூர் தொழிலாளர்களோ, எந்த தொழிலின் மனிதர்களோ இதைப் படித்தால் தங்களுக்கான சமூகப்பாதுகாப்பீற்காக தொழிற்சங்கம் ஏன் தேவை, அதைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் பற்றிய சிந்தனைகள் சுலபமாக தெரியவரும்.

( பனியன் நாவல் –தி.வெ.ரா-விலை ரூ 200, 304 பக்கங்கள், அருணா பதிப்பக்ம, சென்னை வெளியீடு )

Series Navigationதொடுவானம் 89. பெண்மை என்றும் மென்மைதி மார்ஷிய‌ன் – திரைப்படம் விமர்சனம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *