ஆச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட மனோரமா மறைந்துவிட்டார். ஆழ்ந்த இரங்கல்களை அவர்தம் குடும்பத்தினருக்கும் பர்ந்த தமிழ் சமூகத்துக்கும் தெரிவித்துகொள்கிறேன்.
தமிழ் சினிமா பார்க்க ஆரம்பித்த அனைவரும் அறிந்த முகம் மனோரமா. சுமார் 1300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா வரலாற்றின் இன்றியமையாத அங்கமாகவே மாறிப்போனவர் அவர்.
அவரது தமிழ் சினிமா பங்களிப்பு வெறுமே நகைச்சுவை காட்சிகளில் வந்து சென்றது மட்டுமல்ல. அவரது கலாச்சார பங்களிப்பும், அதன் விளைவுகளும் தமிழ் கலாச்சார சூழலில் நாம் பிரித்தறிய முடியாத அளவுக்கு ஆழமாக பதிந்துள்ளதை ஆராய முற்படுகிறேன்.
பெண்கள் போது வாழ்வில் இடம் பெற முடியும், இடம் பெறவேண்டும் என்ற நம்பிக்கையையும், துணிவையும் அளித்தது காந்தியும், காந்தி தலைமையிலான காங்கிரசும். அதை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றது திராவிட இயக்ககத்தின் நாடகப் பங்களிப்பு. ஸ்த்ரீ பார்ட்டைத் தாண்டி பெண்களுக்கு நாடகங்களில் ,சுயமும் அளித்தது நாடக இயக்கம். பெண் விடுதலை குறிக்கோளை நோக்கிய ஒரு பயணத்தில் மிக முக்கியமான மைல்கல் இது.
பெண்கள் மிக அதிகமாக நாடகத்திலும், பிறகு சினிமாவிலும் பங்கு கொண்டது, பெண்களை விடுவித்தது.
தமிழ் சினிமாவின் ஆரம்பகால படங்களில் அதன் மையக் கதையும், நகைச்சுவையாக வரும் உப கதையும் பெண்களைப்பற்றிய பொதுவான ஆண் மைய பார்வையை கொண்டவை. மனைவிக்கு கட்டளை இடும் ஆண், உடனே கீழ்ப் படிந்து கேட்கும் மனைவி என்பது சாதாரணமான எதிர்ப்பார்ப்பை நிறைவு செய்யக்கூடிய காட்சிகள் அமைந்திருப்பதை பார்க்கலாம். கதாநாயகரின் தந்தை தன் மனைவியை அதட்டுவதும், அவர் உடனே அடிபணிந்து கேட்பதும் சாதாரணமான காட்சிகள். இதே நகைச்சுவை உப கதைகளிலும் உண்டு. என் எஸ் கே – மதுரம் உருவாக்கிய நகைச்சுவை காட்சிகளிலும் முட்டாள் மனைவி, புத்திசாலி புருஷன் என்பது உண்டு. தங்கவேல்-சரோஜா நகைச்சுவையில் “அதுதான் எனக்கு தெரியுமே” என்ற பிரபல வசனமும் இதே வகையையே முன்னுக்கு வைத்தன.என் எஸ் கே – மதுரம் ஜோடி நகைச்சுவை காட்சிகளுக்கும் பின்னர் வந்த மனோரமாவின் நகைச்சுவை காட்சிகளுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
ஆண் மைய பார்வையை கொண்ட திரைப்படங்கள் இன்றும் கூட வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், மனோரமாவின் நகைச்சுவை காட்சிகளில் அவரது அசால்ட்டான தன்னம்பிக்கையான மனைவியும், அசட்டுக் கணவனும் இருப்பார்கள். தன்னுடைய தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்கிற பெண் கதா பாத்திரங்கள் நகைச்சுவை நடிகைகளே இருந்தனர். அந்த வரிசையில் மனோரமாவிற்கு மிக முக்கிய இடம் உண்டு. இதன் நீட்சியே வடிவேலுவை துவம்சம் செய்யும் கோவை சரளா காட்சிகள்.
இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் நீட்சியாகக்கூட காணலாம். அவர் காட்சி படுத்திய பெண்களில், சுதந்திரமான தன் முனைப்பு கொண்ட தன முடிவுகளை தானே எடுக்கிற , தன்னம்பிக்கை கொண்ட பெண்ணை காட்டியவர் மனோரமா.
தமிழ் சினிமாவின் தோற்றம் முதற்கொண்டு பெண்களுக்கான இடம் தாராளமாகவே இருந்துள்ளது. பத்மினி, பானுமதி, சாவித்திரி போன்றவர்கள் அன்றைய ஸ்டார் நடிகர்களான சிவாஜி எம்ஜியார் போன்றோருக்கு இணையான ஸ்டார் அந்தஸ்துடனேயே இருந்துள்ளார்கள்.
சொல்லப்போனால், கதாநாயகர்கள் தம் வீர-ஆவேச பிம்பத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தினால் இறுக்கத்துடன் இருந்தபோதும், நடிகைகள் விடுபட்டு தனித்த அடையாளம் கொண்டனர். மனோரமா பல படங்களில் தனித்தே இயங்கினார் என்பதையும் காணலாம்.
மனோரமாவின் தோற்றமும், வளர்ச்சியும் தமிழ் சினிமா மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் வரலாற்றுக் கண்ணிகள் .
அவருக்கு நம் அஞ்சலி. நினைவு கூரும் வகையில் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
- மனோரமா ஆச்சி
- மிதிலாவிலாஸ்-17
- கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……
- பொன்னியின் செல்வன் படக்கதை – 8
- தொடுவானம் 89. பெண்மை என்றும் மென்மை
- தொழிற்சங்க அவசியம் பற்றிய நாவல் “ பனியன் ” – தி.வெ.ரா
- தி மார்ஷியன் – திரைப்படம் விமர்சனம்
- அவன், அவள். அது…! -5
- மிதிலாவிலாஸ்-18
- மிதிலாவிலாஸ்-19
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015
- கொலஸ்ட்ரால் கொழுப்புகள் பலவிதம்
- அந்தரங்கங்கள்
- உதிர்ந்த செல்வங்கள்
- குட்டிக் கவிதைகள்
- மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை
- அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….
- ஒத்தப்பனை
- தன்னிகரில்லாக் கிருமி
- நியூடிரினோ ஆராய்ச்சியில் 2015 ஆண்டு நோபெல் பரிசு பெற்ற கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டானல்டு
- வலி
- செங்கண் விழியாவோ
- மனோரமா- தமிழ் சினிமாவின் அடையாள பெண்ணிய வடிவம்