மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை

This entry is part 16 of 23 in the series 11 அக்டோபர் 2015

0

“ கிக்குஜீரோ” என்னும் ஜப்பானிய படத்தைத் தழுவியது என்று மீடியாக்கள் வெளிச்சம் போட்ட படம் தான் நந்த்லாலா! இதற்கு முன்னால் வந்த விஷ்ணுவர்தனின் ‘சர்வம்’, ராதா மோகனின் ‘ அபியும் நானும்’ தழுவலைத் தாண்டி தாம்பத்தியமே நடத்தின! அப்போது எந்தக் கூக்குரலும் இல்லை. ஏனென்றால் அவை ஃப்ளாப்! இது எங்கே ஓடி விடப் போகிறதோ என்கிற காழ்ப்பில் குரல் எழும்பி ஒலித்தன. அதனாலெல்லாம் படம் ஓடி விடவில்லை. ரசிக்கப்பட்டது. பின் பாக்ஸ் ஆபிஸ் பூட்சுகளால் நசுக்கப்பட்டது.

தழுவலோ இல்லை அதைத் தாண்டி வன்புணரலோ, ‘நந்தலாலா’ ஒரு கிளாசிக். எத்தனை பேர் ‘கிக்குஜீரோ’வை பார்த்திருப்பார்கள்? நான் பார்க்கவில்லை. ஆனால் நந்தலாலாவை நிறைய பேர் பார்த்தார்கள். இத்தனைக்கும் ஒரு சில அரங்குகளில் பகல் காட்சியாக மட்டுமே அது ஓடியது.

வணிகத்திற்காக சமரசம் செய்து கொள்ளாத மிஷ்கினை எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனாலும் சில குறைகள் தெரியத்தான் செய்கின்றன.

மன வளர்ச்சி குன்றியவன் ஒருவனோடு ஒரு சிறுவன் கைக்கோர்க்கும் கதை. இருவருக்கும் ஒரே தேடல்! அம்மா! பெரியவன் தாயை தண்டிக்கப் போகிறவன். சிறியவன் தாயை முத்தம் கொடுக்கப் புறப்படுகிறவன். தவறே செய்யாத தாயை தண்டிக்கச் செல்பவன் மனம் மாறுவதும், அணைக்கச் செல்லும் சிறுவன், விட்டு விலகிய தாயை புரிந்து கொள்வதுமான கவிதையான கதை.

மூளையின் எந்திரம் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வேலை செய்யவில்லை என்றால் அவனை ஸ்லோ லேர்னிங் என்று சொல்வார்கள். அவனுக்கு பேச வரும். எழுத வராது. சொன்னதையே திருப்பிச் சொல்வான். ஆனாலும் அவனுக்கு அழகுணர்ச்சி உண்டு. கலைகள் மீது ஈடுபாடு இருக்கும். மார்கழிக் கச்சேரிகளில் இம்மாதிரி ஆட்கள் வருவதுண்டு. ஆனாலும் அவர்கள் பெரிய பலசாலிகள். அறைந்தால் கோட்டறைதான். தாங்க முடியாது.

இன்னொரு வகை ஸ்பாஸ்டிக். ஐம்பது விழுக்காடுகளுக்கும் கீழே! ஏறக்குறைய விலங்கு. ஜொள்ளு ஒழுகிக் கொண்டே இங்குமங்கும் நடக்கும். சரியாக உடுத்தாது. சாப்பிடும். தூங்கும். சம்போகம் உண்டு. இதில் கட்டுப்படுத்த முடியாத கேஸ்களை, மனநல விடுதியில் போட்டு விடுகிறார்கள்.

மிஷ்கினின் பாத்திரம் இரண்டும் சேர்ந்த கலவையாக இருக்கிறது. பல இடங்களில் தெளிவாக இருக்கிறான். ஆனாலும் சில இடங்களில் ஸ்பாஸ்டிக் மாதிரி நடந்து கொள்கிறான். இயக்குனர் தவற விட்ட இடம் இது.

சிறுவன் அதீத புத்திசாலி. வயதுக்கு மீறிய பேச்சு. ஆனாலும் முன்பின் தெரியாத மப்பு ஆளுடன் எப்படி சேர்கிறான் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.

அப்புறம் மெகா சைசில் ஒரு ராணுவ வீரன். இந்த உருவம் ராணுவத்திற்கு ஏற்றதா? தின்றே தீர்த்துவிடுவான் போலிருக்கிறதே!

இளையராஜாவின் இசை படத்திற்கு பலம் தான். ஆனாலும் பாடல்கள் கேட்டது மாதிரியே

இருப்பது யார் குற்றம்?

படம் முழுவதும் விரவிக் கிடக்கும் யதார்த்த நகைச்சுவை, வேறொரு தளத்திற்கு இதை இட்டுச் செல்கிறது.

கால் மாறிய பூட்சுகள். பெல்ட் கட்டத் தெரியாமல் பேண்டை தூக்கிக் கொண்டே நடப்பது என்று மிஷ்கின் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். முக்கியமாக மஞ்சள் புடவை, லுங்கி ஆட்டம் இல்லை.

கிக்குஜீரோவை பார்த்தால் இந்தளவுக்கு புரிந்திருக்குமா? இப்படி எல்லாம் விமர்சனம் எழுத முடியுமா என்று யோசித்துப் பார்க்கிறேன். நமக்கு புரிந்த மொழியில் சிறந்த படங்களை எடுப்பதில் என்ன தவறு இருக்கீறது. மிஷ்கின் ஒன்றும் இதை தன் சொந்தக் கதை என்று மார் தட்டிக் கொள்ளவில்லையே. !

“ என்னை மிகவும் பாதித்தவை அகிரா குரோ சோவா படங்கள் தான்! அவைகளை என்றாவது நோக்கத்தில் அவைகளின் பாதிப்பில்தான் என் படங்களை எடுக்கீறேன் “ என்று தைரியமாக சொல்ல அவரால் முடிகிறது. விஷ்ணு ராதா ஜோடிக்கு அந்த திராணியில்லை.

பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் மகள் தொலைதூரத்தில் இருக்கும் கல்லூரிக்கு செல்லும்போது பாசத்தகப்பன் படும் அவஸ்தையை நகைச்சுவையாக சொன்னது ஒரு அமெரிக்க ஆப்பிரிக்க படம். இதில் வந்த அம்மா படு யதார்த்தம். அவள் அலட்டிக் கொள்ளவே இல்லை. அப்பன் தான் கிடந்து துடிக்கிறான். மகளை வேவு பார்க்கிறான். பின்னாலேயே காரில் தொடர்கிறான். மகள் கெட்டிக்காரி. நடுவில் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு வேறு காருக்கு மாறிவிடுகிறாள். இப்படி போகும் ஆங்கிலப்படம். அபியில் பிரகாஷ்ராஜைப் போட்டு மெலோடிராமை லிட்டர் கணக்கில் ஊற்றி சொதப்பி விட்டார்கள்.

மிஷ்கினுக்கு மெலோடிராமா எல்லாம் ஒவ்வாமை போலிருக்கிறது. கடைசி காட்சியில் பலூன் விற்றுக் கொண்டே போகிறார். கூடவே பயணித்த சிறுவன் அம்மாவுடன் நிற்கிறான். கண்ணீரோ கட்டி தழுவதலோ அந்தக் காட்சியில் இல்லை. லேசாக ஒரு புன்னகை. லாங் ஷாட்டில் அவர் பலூன்களுடன் செல்வதுடன் படம் முடிகிறது.

க்ளிஷேக்கள் கூடாது என்று புரியாத புதிர்களைப் போடுவது மிஷ்கினின் வழக்கம். சம்பந்தமே இல்லாமல் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து போகிறது. படத்தின் வேகத்தை சுட்டுகிறாரோ இயக்குனர்!

இன்னும் யாரும் பார்க்காத ஜப்பானிய படங்களை மிஷ்கின் பார்க்கட்டும். அதை தழுவி தமிழில் எடுக்கட்டும். நாம் எல்லோரும் பார்க்கலாம். எத்தனை பேருக்கு ஃபிலிம் பெஸ்டிவலுக்கு போய் படங்கள் பார்க்கும் வசதியும் தெம்பும் இருக்கிறது?

Series Navigationகுட்டிக் கவிதைகள்அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *