இளம் தமிழ்க் கவிதை மனம்: பூ.அ. இரவீந்திரன் கவிதைத் தொகுதி பவுர்ணமி இரவின் பேரலை : சுப்ரபாரதிமணியன்

This entry is part 10 of 24 in the series 25 அக்டோபர் 2015

தமிழாசிரியர்களின் கவிதைகளைப் படிக்கையில் கொஞ்சம் பயம் ஏற்படும் எனக்கு. புறக்கணித்து வசவாய் சிலர் தள்ள முற்படுவார்கள். என் பயம் அப்படியல்ல. மொழியை நன்கு கற்றுணர்ந்தவர்கள் மொழியைப் பிரயோகிப்பதிலும் இறைச்சி, திணை என்று என்னென்னவோ பாகுபாட்டில் அவர்கள் கவிதையை  சங்க  விளக்கத்தில் நிறுத்தி விடுவார்கள். அப்படி இனம் காண முடியாத சிக்கலில் வேறு வகையான விமர்சன பாதிப்பில் இன்னோரு புறம் நின்று அவர்களின் கவிதைகளைப் பார்ப்பது சவுகரியமாகப்படுகிற பட்சத்தில் அவர்களின் பிரத்யோகப் பார்வை மனதில் பிடிபடாமல் போகிறதே  என்ற பயம் இருக்கும். இலக்கியம் மொழியால் கட்டமைக்கப்பட்டது . மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆழ்ந்தத் தொடர்பு உள்ளது என்று உளவியலாளர்களும் மொழியாளர்களும்  நிரம்ப நிருபித்திருக்கிறார்கள். இந்த வகைச் சிக்கல்களுக்குள் உள்ளாகும்போது  தமிழாசிரியர்களின் கவிதைத் தொகுப்புகளை அணுகுவதில் நிரம்ப சிக்கல்கள் உள்ளன. தமிழில் செய்யுளுக்கும் அதை இயற்றிய தமிழாசிரியர்கள், புலவர்களுக்கும் என்று நீண்ட வரலாறு உண்டு.  தமிழ் உரைநடையின் 300 வருட   ஆயுசை  மிஞ்சிக் கொண்டு தமிழில் செய்யுள் தன் உயரம் காட்டியிருக்கிறது.   அந்தச் சிரமத்தைப் புரிந்து கொள்ள  நீண்ட உயரம் வளர வேண்டியிருக்கிறது. இந்தச் சிரமங்களைத் தவிர்த்து விட்டு இத்தொகுப்பை  அணுகுகையில் வாழ்க்கை என்பதே மொழியை கையாளும் கலை என்ற  வித்தையிலிருந்து  அனுபவ சாரங்கள் கொண்டு செல்லும் பாதைக்குப் போக ஆசைப்பட்டிருக்கிறேன். வாழக்கையின் இருண்ட அம்சங்களை, நிராசைகளை ஏமாற்றங்களை  மனித மனத்தின் அந்நிய உணர்வுகளைக் கொண்டாடும் ஒரு பக்கத்தில்  நம்பிக்கைகளையே கவிதைகளாக  விதைத்து வருபவர். பூ.அ. இரவீந்திரன்.செயல்பாட்டிலும் அவ்வாறே இருப்பவர்.

நவீன இளைஞன் முந்திய தலைமுறையினர் கண்டு கொள்ளாத,  கண்டுணராத தொழில்நுட்பம், விஞ்ஞானம், பெரும் இணைய அறிவு  ஆகிய விசயங்களை நவீன கவிதையின் மூலாதரமாகக் கொண்டு வந்தபின் நவீன கவிதைகள் நவீன அறிவியலால்  அளக்கப்படும் விசயமாகி விட்டது.  கவிதைப்படைப்பில் இரவீந்திரன் இதுவரை தான் பெற்ற அனுபவங்களை குறித்து நம்முடன் உரையாடுகிறார்.  அந்த உரையாடல் ஒர்றைத் தன்மையற்றதாய் பன்முகங்களைக் கொண்டதாயும் அமிந்து விடுகிறது. கொஞ்சம் தத்துவமாகவும் பிடிபடுகிறது.  சமூக உளவியலை சமூக அனுபவங்களுடன் விஸ்தாரம் செய்கிற போக்காய் இக்கவிதைகள்  நம்மை நிழலாய் பின் தொடர்கின்றன.ஒரு முதுபெரும் தமிழாசிரியர் உலகப் போக்கினையொட்டி நவீன கவிதைகளுடன் பயணித்திருப்பது ஒரு முக்கிய தருணம் என்று தோன்றுகிறது.  நம்முடன் அவர் உரையாடும் மொழி அன்றாட அனுபவங்களிலிருந்து பெற்றது. புனைவுத் தன்னமையை நிராகரித்தே இதை முன் வைக்கிறார்.. எங்கும் வினோதமான உறவு நிலை என்று எதுவும் இல்லை. எல்லாம் யாதார்த்தம் சார்ந்த அனுபவ்ங்களாக குறியீடுகளாகவும் அமைந்திருந்திருக்கின்றன். சிதைந்த மனதின் செயல்பாடுகளை கண்டு வருந்தும் மனம் இன்றைக்கு  அதைக் கொண்டாட்டமாக்கி   வாழ்க்கையின் இன்னொரு புறத்திற்கே சென்று விடுகிறது.  அனுபவத்திற்கெட்டிய அளவு பெரும் கனவுகள் உருவானதில்லை. ஆனால் வாசிப்பு இன்பம் தரும் கனவுகள் மிக பிரமாண்டங்களாக விரிந்து கிடக்கின்றன.

அம்மாவின் பூனை போன்ற கவிதைகளில் இதன் உட்சத்தைக் காணலாம்.வீடு, அறை , பெரு நகர மாலை நேரத்து ராச வீதி, என்று அனுபவங்களை விரித்துக் கொண்டே போகிறார். இசை இரவுப் பேரலையும், மவுன மொழிபெயர்ப்புகளும் கவிதைகளோடு இணைந்து வருகின்றன. முது பெரும் தமிழாசிரியர்  இன்றைய தலைமுறை இளைஞர்களின் நவீன கவிதை அனுபவ வீச்சோடு செயல்படுவது தமிழுக்கு ஆரோகியமானது.. 5 ஆண்டு இடைவெளிக்குப்பின் வந்திருக்கும் இத்தொகுப்பில் அந்த அடையாளங்களைத் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம். (  ரூ 100, கீதா பதிப்பகம், கோவை ).

Series Navigationஅற்புத மலருக்கு ஒரு அஞ்சலிகவிதைகள் – நித்ய சைதன்யா
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *