தொடுவானம் 97. பிறந்த மண்

This entry is part 8 of 17 in the series 6 டிசம்பர் 2015
 

தரங்கம்பாடியில் தங்கியிருந்தபோது அண்ணியும் நானும் வேளாங்கண்ணி கோயில் சென்றுவந்தோம். அண்ணி மாதா மீது நம்பிக்கை கொண்டவர். நாங்கள் மெழுகுவர்த்தியும் மாலையும் வாங்கிச் சென்றோம். எனக்கு தேர்வில் வெற்றி கிட்டவேண்டும் என்று என்று அண்ணி வேண்டிக்கொண்டாராம். இதெல்லாம் ஒருவிதமான நம்பிக்கைதான். தேர்வில் தேறுவது நம் கையில் உள்ளது. ஒழுங்காகப் படித்தால் தேறலாம். படிக்காமல் சாமிக்கு காணிக்கைப் படைத்தால் போதுமானது என்று படிக்காமல் தேர்வுக்குச் சென்றால் தோல்வி நிச்சயம்தான்!

          கோயிலிலிருந்து கடல்கரை வரை உள்ள வீதியின்  இரு பக்கமும் இருந்த கடைகளைப் பார்த்துக்கொண்டு நடந்தோம். கடல் மணலில் சிறிது நேரம் அமர்ந்து இளைப்பாறினோம். அங்கிருந்து கோயிலின் கோபுரத்தைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி!
          நாங்கள் திரும்பும்போது அண்ணியிடம்   பள்ளி ,விடுமுறையின்போது அண்ணனுடன் கிராமத்துக்கு வரச் சொன்னேன்.அதுவரை கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தவரின் முகம் மாறியது. அங்கு வருவதற்கு பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.

அண்ணி திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். அங்கேயே படித்து ஆசிரியையானவர். கிராமத்து வாழ்க்கை அவருக்குப் பிடிக்கவில்லை. முன்பு முடியனூர் என்ற கிராமத்தில் கொஞ்ச காலம் பணிபுரிந்தபோதுதான் பெரும் பிரச்னை உண்டாகி அந்த கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டனர். நான் தெம்மூரில் பிறந்து சிறு வயதில் வளர்ந்தவன். சிங்கப்பூரில் பத்து வருடங்கள்  இருந்தவன். இருப்பினும் எனக்கு கிராமம் பிடித்திருந்தது. சிங்கப்பூரில் இல்லாத அழகு தமிழக கிராமங்களில் காண்கிறேன்.அனால் அவர் அப்படியில்லை. அண்ணனை அவர் திருமணம் செய்தபோது கிராமத்தில் இருக்கவேண்டும் என்று அவர் எண்ணிப்பார்த்திருக்க மாட்டார். நகர்ப்புரத்தில்தான் இருவரும் பணி புரியவேண்டும் என்றுதான் எண்ணியிருப்பார்.  நான் விடுமுறையைக் கழிக்கத்தான் அண்ணியைக் கூப்பிட்டேன்.

அவரைக் கவனிப்பதைத் தெரிந்துகொண்ட அண்ணி, ” நான் திருச்சி சென்று பாப்பாவைப் பார்க்கவேண்டுமே? ” என்று காரணம் கூறினார். அவர் கூறுவது சரிதான். சில்வியா குழந்தை திருச்சியில் அவருடைய தாயார் வீட்டில்தான் உள்ளது.  திருச்சி சென்று சில்வியாவையும் கிராமத்துக்கு கொண்டு வரலாமே என்று கேட்டேன்.  அங்கு வசதிகள் குறைவு என்று மழுப்பினார்.

அண்ணியை எப்படியாவது வசப்படுத்தி கிராமத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்தேன்.அண்ணன்  இதுபற்றி ஆர்வம் கொண்டதாகத் தெரியவில்லை. இதுதான் நீண்ட விடுமுறை. இந்த வாய்ப்பை  நழுவவிட்டால் மீண்டும் இதுபோல் மீண்டும் ஒன்றுகூட முடியாது. தாத்தா பாட்டி இருவருக்குமே வயதாகிவிட்டது. இருவருக்கும் சேர்ந்தாற்போல் இப்போதே கல்லறை கட்டிவைத்துக்கொண்டு காத்துள்ளார் தாத்தா. அவர்களுடன் அம்மா தங்கைகளுடன் குடும்பமாக இருக்கவேண்டும் என்ற ஆவல். இதுதான் எங்கள் மூவருக்கும் நீண்ட விடுமுறை.. ஆனால்  இது பற்றி அண்ணனிடம் தனியே எப்படி பேசுவது? இன்னும் எங்களுக்குள்ள கூச்சம் போகலையே. அதற்கும் அண்ணிதானே  தேவைப்படுகிறார்?

இதுவரை அண்ணி கிராமம் பற்றியோ, மாமியார் ( அம்மா ) இருப்பதாகவோ கவலை கொள்ளாமல் இருந்துள்ளார். அவரை எப்படியாவது என் வழிக்குக் கொண்டுவரவேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் அவரிடம் நிறைய பேச ஆரம்பித்தேன். அவருக்கும் என்னுடன் பேசுவது பிடித்திருந்தது.

பள்ளி விடுமுறைக்கு இன்னும் மூன்று தினங்கள்தான் இருந்தன. அதற்குள் அண்ணியை சரி செய்தால்தான் என்னுடைய திட்டம் நிறைவேறும். அதில் ஓரளவு வெற்றியும் கண்டேன்.

விடுமுறை விட்டதும் மூவரும் மாயவரம் சென்றோம். அவர்கள் இருவரும் திருச்சி சென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு கிராமத்துக்கு வருவதாக கூறிவிட்டு திருச்சி செல்லும் பேருந்து எடுத்தனர்.   சிதம்பரம் செல்ல காத்திருந்த பேருந்தில் நான் ஏறி அமர்ந்தேன்.

இந்த முறை மன மகிழ்ச்சியுடன் ஊர் சென்றேன். நீண்ட விடுமுறை. அதோடு அண்ணன் அண்ணி, தங்கைகளுடன்  கழிக்கப்போகும் விடுமுறை. மருத்துவப் படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்ந்துவிட்ட ஓர் உணர்வு வேறு!

எனக்கு வரவேற்பு பலமாக இருந்தது! வீட்டு வாசலில் எனக்கு ஆரத்தி எடுத்தார்கள்! எடுத்தது கோகிலம்! முதலாண்டு தேர்வு முடிந்ததும் மருத்துவப் படிப்பே முடித்துவிட்டதாக எண்ணிக்கொண்டார்கள்!

கோகிலத்தின் அந்த குறும்புப் பார்வை கொஞ்சமும் குறையவில்லை. அவளுக்கு இனி கொண்டாட்டம்தான்! அவசரப்படாமல் அவளிடம் நிதானமாகப் பேசலாம். ஆனால் அண்ணி வந்துவிட்டால் ஆபத்து! அவள்மீது அப்போதே அண்ணிக்கு ஒரு கண்!

கிராமத்தில் ஒரு முக்கிய மாற்றம் கடைசி வீட்டு சித்தப்பா மோசஸ் குடும்பத்தினர் நிரந்தரமாக சிங்கபூரிலிருந்து திரும்பியிருந்தது. அவரின் மூத்த மகன் ஜெயபாலன் கோயம்புத்தூரில் இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்துள்ளான். தங்கைகள் நேசமும் மதுரமும் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.

தேவசித்தம் சித்தப்பாவும் சிங்கப்பூரிலிருந்து குடும்பத்துடன் திரும்பிவிட்டார். அவருடைய மகன்கள் தானியேலும் தாசும் பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பணிபுரிந்த நடேசன் சித்தப்பாவும் குடும்பத்துடன் திரும்பிவிட்டார்.

முனைவீட்டு வேலாயுதமும் குடும்பத்துடன் மலாயாவிலிருந்து திரும்பிவிட்டார். அங்கு அவர் பிரஜா உரிமை எடுக்க விரும்பவில்லை.

கூடிய விரைவில் பெரியப்பாவும் குடும்பத்துடன் மலாயாவிலிருந்து திரும்பப்போவதாக தெரிந்துகொண்டேன். அப்பா பணியில் ஓய்வு பெற்றவுடன் திரும்பிவிடுவார். நான் மருத்துவம் படித்து முடிப்பதற்கும் அப்பா திரும்புவதற்கும் சரியாக இருக்கும். அதன்பின் அவர் சிங்கப்பூரில் இல்லாதபோதுதான் நான் அங்கு சென்று வேலை செய்வதாக இருக்கும். அவர் பெயரில் உள்ள வீட்டை வைத்திருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்.

முன்பு பணம் சம்பாதிக்க மலாயா  சிங்கப்பூர் சென்ற உறவினர்கள் அனைவருமே இப்படி ஒவ்வொருவராக ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அங்கு வாழ்க்கை சொகுசாக இருந்தாலும் ஏனோ அங்கேயே நிரந்தரமாக தங்க இவர்களுக்குப் பிடிக்காமல் வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் ஊர் திரும்பிவிடுகின்றனர்.கடைசி காலத்தை பிறந்த மண்ணில் உற்றார் உறவினரோடு கழிக்க விரும்புகின்றன. பிறந்த மண் அவைகளை அவ்வாறு ஈர்த்துள்ளது!
இவர்கள் பல வருடங்கள் அங்கு இருந்தபோதிலும் யாரும் பெரிதாக சம்பாதித்து ஊருக்கு பணம் அனுப்பி சிறப்பாக இருந்ததாகத் தெரியவில்லை. நிலங்கள் வேண்டுமானால் கொஞ்சம் அதிகமாக வாங்கியுள்ளனர். ஊர் திரும்பிய இவர்கள் இனி விவசாயம் பார்க்கப்போகின்றனர். சொந்த நிலம் என்ற திருப்தி இருந்தது. ஆனால்  இவர்களில் யாரும் கல் வீடு கட்டவேண்டும் என்ற முயற்ச்சியில் ஈடுபடவில்லை. அவர்கள் முன்பு விட்டுச்சென்ற அதே கூரை வீட்டுக்குத்தான் திரும்பினர். நிலம் வாங்குவதில் காட்டிய ஆர்வத்தை வீடு கட்டுவதில் காட்டவில்லை. இது ஏன் என்று தெரியவில்லை. திரும்பிய சில காலத்தில் இவர்கள் ஊருடன் ஒன்றித்துப்போனார்கள்.
ஆனால் அவர்கள் இப்படி திரும்பியபோது பிள்ளைகளையும் உடன் கூட்டிவந்தது பெரும் தவறு என்று கருதுகிறேன். அவர்களை அங்கேயே விட்டு விட்டு இவர்கள் திரும்பியிருக்கலாம். அங்கு அவர்களின் எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இவர்கள் ஏன் இப்படி பிறந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்? ஒரு புகழ்பெற்ற ஆங்கிய கவிதைதான் என் நினைவுக்கு வருகிறது!

Breathes there the man, with soul so dead,
Who never to himself hath said,
This is my own, my native land!
Whose heart hath ne’er within him burn’d,
As home his footsteps he hath turn’d,
From wandering on a foreign strand!
If such there breathe, go, mark him well;
For him no Minstrel raptures swell;
High though his titles, proud his name,
Boundless his wealth as wish can claim;
Despite those titles, power, and pelf,
The wretch, concentred all in self,
Living, shall forfeit fair renown,
And, doubly dying, shall go down
To the vile dust, from whence he sprung,
Unwept, unhonour’d, and unsung.

இதை எழுதியர் சர். வால்டர் ஸ்காட். இதை அவர் எழுதிய வருடம் 1805! ஆனால் இது ஒரு சாதாரண கவிதை அல்ல ! நாட்டுப்பற்று பற்றி பேசப்படும்போதெல்லாம் இன்றும் எல்லாராலும் எடுத்தாளப்படும் அற்புதமான கவிதை இது!

இதை இவ்வாறு தமிழில் கூறலாமா?

          வேற்று மண்ணில் சுற்றித் திரிந்து
          வீடு திரும்பி காலடி பதித்து
          இதயத்தில் தணல் இன்றி

இது எனக்குச் சொந்தம், என் பூர்வ மண்

என்று தனக்குத்தானே சொல்லாது

ஆன்மா இல்லாத ஒருவன் சுவாசிக்கிறானா?

அப்படி ஒருவன் சுவாசித்தால் அவனை அடையாளம் கொள்;

          அவனுக்காக பாணர்களின் பூரிப்பு  எழாது
          உயர்வான பட்டமும், பெருமையான பெயரும்
          தேவைக்கு அதிகமான செல்வமும்  இருந்தும்
          இந்த பரிதாபத்துக்குரியவன்,
தன்னையே சுற்றி வாழ்பவன்
          வாழ்ந்தாலும், சிறப்பை இழந்தவன்
          யாரும் அழாமல், பாடாமல் புகழாமல்
          இருமுறை இறந்து கீழிறங்கி அவன் தோன்றிய
          புழுதிக்கே திருப்புவான்.
          ( நான் கவிஞன் இல்லை )

        ( தொடுவானம் தொடரும் )
Series Navigationநித்ய சைதன்யா – கவிதைகாடு சொல்லும் கதைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *