மூத்த எழுத்தாளர் விக்கிரமனுக்கு அஞ்சலி

author
0 minutes, 4 seconds Read
This entry is part 3 of 14 in the series 13 டிசம்பர் 2015

Late.Vikaramanமுருகபூபதி — அவுஸ்திரேலியா

சரித்திரக்கதை எழுதியவர்களின் வரிசையில் விடைபெற்றவரின் மரணமும் சரித்திரமானது

இயற்கையின் சீற்றத்துடன் இயற்கை எய்தியவரின் இலக்கிய வாழ்வும் பணிகளும்

                   Nanthipurathu-nayagi

யுத்தங்களினாலும்  இயற்கை  அநர்த்தங்களினாலும் பேரழிவுகள் நேரும்பொழுது தொலைவில் இருப்பவர்கள் அதனையிட்டு கலங்கினாலும்,  முதலில் அவர்களின் மனக்கண்களில் தோன்றுபவர்கள்  அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்களுக்கு என்ன நடந்ததோ, எங்கிருக்கிறார்களோ  என்ற மனஅவதியில் மணிப்பொழுதுகளை கடந்துகொண்டிருப்பார்கள். இயலுமானால் ஏதும் வழியில் தொடர்புகொண்டும் அறியவிரும்புவார்கள்.

தொலைத்தொடர்பு சீராக இருந்தால்தான் அதுவும் சாத்தியம்.

சென்னையில் வரலாறு காணாத மழையும் வெள்ளப்பெருக்கும் மனதை பேதலிக்கச் செய்யும் காட்சிகளாக ஊடகங்களில் தென்பட்டதும் எனக்கும் அந்த மனித இயல்புதான் வந்தது.

மழை – இடி – மின்னல் இருப்பின் தொலைபேசியூடாக தொடர்புகொள்வதும்  ஆபத்து என்கிறார்கள்.  தமிழ்நாட்டில் சில நண்பர்கள்   உறவினர்களின் மின்னஞ்சல்களும்  செயல் இழந்திருந்தன.

எனினும்  முடிந்தவரையில் தொடர்புகொண்டவாறு   இருக்கும்பொழுது    வந்த செய்தி ஆழ்ந்த கவலையைத்தந்தது.

சரித்திரக்கதைகளையே எழுதிவந்த படைப்பாளியும் இந்த கடும்மழைக்காலத்தில் உயிரிழந்துவிட்டார். அவருடைய வயது 87 ஆகிவிட்டது.    அவர் விடைபெறும் காலம்தான் என்று அவருடைய ஆத்மாவுக்கு  அஞ்சலி செலுத்தினாலும் அவர் மரணித்தபொழுதும் அவருடைய இறுதிநிகழ்வுகள் நடந்தேறியபொழுதும் அவருடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பட்டிருக்கும் துயரம்கூட ஒரு சரித்திரமாகியிருக்கிறது.

சென்னை  சர்வதேச விமான நிலையம்  நீரில் மூழ்கியது. வீதிகள் வெள்ளக்காடுகளாயின.    சுமார் ஆறு இலட்சம் விவசாய பயிர் நிலங்கள்    கடும்பாதிப்புக்குள்ளாகி சில விவசாயிகளும் இறந்தனர். அடுத்து  என்ன செய்வது என்பதையும் தீர்மானிக்க முடியாமல் கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு வேறு இடம்தேடிச்சென்ற மக்கள்  மத்தியில் பெண்களும்,  குழந்தைகளும், கர்பிணித்தாய்மாரும் நோயாளிகளும்    முதியோர்களும் எதிர்நோக்கிவரும் கடும் சிரமங்கள்  ஒருபுறம், தமிழ் நாட்டின் பொருளாதாரத்திற்கே வேட்டுவைக்கும்    இயற்கையின் சீற்றத்தின் மீதும் கடும்கோபம், சீரான  வடிகால் திட்டங்களை  உருவாக்காமல் காலம் பூராவும் கட்அவுட்    கலாசாரத்திலேயே  காலத்தை செலவிட்ட அரசுகள் மீதும் எரிச்சல்.

சென்னை கோயம்பேடு மத்திய பஸ்நிலையத்தில் இரவுப்பொழுதில் தரையில் ஆள்பார்த்து விழிப்போடு நடக்கவேண்டும்.    நூற்றுக்கணக்கான மக்கள் தரையில் உறங்குவார்கள்.    தலையில் அவர்களின் பயணப்பொதி இருக்கும். சகலவயதிலும்    இருக்கும் அவர்களின் ஆழ்ந்த உறக்கத்தை களைக்காமல்    கவனமாக அடியெடுத்துவைத்து  நகரவேண்டும்.

தமது நிரந்தர முகவரியாக வீதியோரங்களையே  பலவருட காலமாக வைத்திருக்கும் மக்கள் எல்லோரும் இந்த மழையின் சீற்றத்தால்    எத்தனை இடர்களை எதிர்நோக்குகிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறும். ஆனால் அந்த வீதியோரக்குடியிருப்புகளின் காட்சிகள் மாறாது.

நதிநீர் திட்டத்திற்காகவும் கால்வாய்களுக்காகவும் வரவழைக்கப்பட்ட    நீண்ட உயர்ந்த சீமெந்து குழாய்களில் மக்கள் குடித்தனம் நடத்தும் காட்சியும் பார்த்தோம்.

கொட்டும்  மழையில் தமது  உறவினர்களின் பூதவுடலை தகனம்செய்வதற்கோ,    அடக்கம் செய்வதற்கோ உரிய கடமைகளை செய்வதற்கோ  முடியாமல் திணறிய மக்களின் அவலம் கண்ணீரை வரவழைக்கிறது.

அவ்வாறு மழையோடு தம் ஆத்மாவை  இழந்தவர்கள் விடைபெற்றாலும்,    அவர்களின் உறவுகள் எதிர்நோக்கிய நெருக்கடி நினைவுகள் விடைபெறக்கூடியவையல்ல.

சமூகத்தில் நன்கு அறியப்பட்டவர்கள் இயற்கை அநர்த்தங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாகவோ அல்லது சற்று தாமதமாகவோ வெளியே  தெரியவந்துவிடும். ஆனால், தெரியாத செய்திகள் மழைவெள்ளத்துள் மூழ்கிவிடும்.

அவ்வாறு  மூழ்காமல் வெளியான செய்திதான் மூத்த படைப்பாளி சரித்திரக்கதை  ஆசிரியர் அமுதசுரபி இதழின் முன்னாள் ஆசிரியர் கலைமாமணி  விக்கிரமனின்  மரணம்.

முன்னர் ஒருகாலகட்டத்தில் இலங்கை – தமிழக வாசகர்களை பெரிதும் கவர்ந்தவை  சரித்திரக்கதைகள்தான். கல்கி கிருஷ்ணமூர்த்தி,  சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன், கருணாநிதி, கொத்தமங்கலம் சுப்பு, நா. பார்த்தசாரதி  முதலானோர் வரிசையில்  சரித்திரக்கதைகளை  எழுதியவர் விக்கிரமன்.

இன்றும்  கல்கியின் பொன்னியின் செல்வன் கல்கியில் மீண்டும் வெளியாகிறது.    சித்திரக்கதைத் தொடராகவும் வருகிறது. அவருடைய  கதைகளுக்கு ஓவியம் வரைந்த பிரபல மூத்த ஓவியர்  அமரர் மணியம் அவர்களின்  வாரிசாக அவருடைய புதல்வர்  மணியம் செல்வன் (ம.செ.) இதழ்களில் கதைகளுக்கும் நூல்களின் முகப்புகளுக்கும் படம் வரைந்துகொண்டிருக்கிறார்.

கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவாகாமியின்  செல்வன், சாண்டியல்யனின் யவனராணி, கடல்புறா, ஜீவபூமி,  அகிலனின் வெற்றித்திருநகர், கயல்விழி, வேங்கையின் மைந்தன்,    கருணாநிதியின் ரோமபுரிப் பாண்டியன், பொன்னர் சங்கர், ஜெகசிற்பியனின்  மதுராந்தகி , நந்திவர்மன் காதலி, மகரயாழ் மங்கை, பத்தினிக் கோட்டம்    ந. பார்த்தசாரதியின் மணிபல்லவம், பாண்டிமாதேவி,    வாஞ்சி மாநகாரம்,  கொத்தமங்கலம் சுப்புவின் பொன்னிவனத்துப்பூங்குயில்,    பின்னாளில் கவிஞர் மு. மேத்தாவின் சோழ நிலா,    பாலகுமாரனின் உடையார் என்பனவற்றை  படித்த வாசகர்களின்    மனதில் இன்றும் அந்தக்கதை மாந்தர்களின் பெயர்களும்   சம்பவக் காட்சிகளும் – அக்கதைகளுக்கு வரையப்பட்ட  ஓவியங்களும் நிலைத்து நிற்கின்றன.

மேற்குறிப்பிட்டவர்களின் வரிசையில் மற்றும் ஒருவர் விக்கிரமன். நந்திபுரத்து நாயகி, பரிவாதினி, யாழ் நங்கை , பராந்தகன் மகள், வந்தியத் தேவன் வாள் , ராஜராஜன் சபதம் முதலான  தொடர்கதைகளை எழுதியவர். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்  சங்கத்தின்  தலைவராகவும்          இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியராகவும் சுமார் அரைநூற்றாண்டு காலம் அமுதசுரபி மாத இதழின்  ஆசிரியராகவும்    இருந்தவர்.

இதழியல்  வாழ்வில் தான் பெற்றதையும் கற்றதையும் தமது நினைவிலிருத்தி  நீண்ட தொடரையும் தமது இலக்கியபீடம் இதழில் எழுதியவர்

தமிழில் பயண இலக்கியங்கள் படித்தவர்களுக்கு சோமலே என்ற எழுத்தாளரின் பெயர் தெரிந்திருக்கலாம்.

அவருடைய  இயற்பெயர் சோம. இலக்குமணன் செட்டியார்.  அவர் தமது பயண இலக்கியக்கட்டுரையை அந்தப் பெயரில் எழுதிக்கொண்டு  விக்கிரமனைச்சந்திக்க வந்தபொழுது, அவருக்கு சோமலெ  என்ற புனைப்பெயர்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும்  என்று சூட்டியவர்தான் விக்கிரமன்.

19 மார்ச் 1928 ஆம்  திகதி பிறந்த விக்கிரமன், தமது  87 வயதில் உடல்நலக்குறைவினால்  கடந்த 1 ஆம் திகதி சென்னை மாம்பலத்தில் மறைந்தார்.

அவ்வேளையில் இயற்கையின் சீற்றத்துடன் இவரும் இயற்கை எய்திவிட்டார்.

அவருடைய பூதவுடலை  வைத்துக்கொண்டு நான்கு நாட்கள் அவருடைய  மகன் கண்ணன்  பட்ட அவதியை  அவருடைய வாய்மொழியினாலேயே இங்கே  கேளுங்கள்

” கடந்த 1 ஆம் தேதி மதியம் எனது தந்தை  விக்கிரமன் இறந்த செய் தியை  உற்றார் உறவினர் அனைவ ருக்கும் செல்போன் மூலம் தெரியப் படுத்தினேன்.  வெளியே மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்தது.    இவர் மீது பற்றுக்கொண்டவர்கள் தமிழகமெங்கும்  உள்ளனர். அவர் களில் பலர் இவரது இறப்பு செய்தி  அறிந்தும் கூட, மழை வெள்ளம் கார ணமாக வரமுடியாமல் போனது.

என்னோடு  கூடப் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், மூன்று சகோதரிகள். சகோதரரும் சகோதரிகளும் வரும் வரையில் உடலை  பாதுகாக்க பிரீசர் பாக்ஸுக்காக நாங்கள்   அலையாத இடமில்லை.  அப்படியே கிடைத்தாலும் மின்சாரம் இல்லாததினால் எந்த பிரயோஜனமும் இல்லாமல் போனது. ஐஸ் பாரும் எங்கும் கிடைக்கவில்லை. 2 ஆம் தேதி மதியம் எங்களுக்கும் வெளி உலகுக்கும்  முற்றிலும் தொடர்பு இல்லாமல் போனது.  செல்போன் இயங்கவில்லை.

எவரையும்  தொடர்பு கொண்டு எந்த உதவியும் பெற முடியவில்லை.    மின்சாரம் இல்லாததினால் வீடு இருளில் மூழ்கியது.  ஏரி உடைந்து வெளியேறிய தண்ணீர் காரணமாக எங்கள்  வீடு இருக்கும் மாம்பலம் பகுதியை  வெள்ள நீர் சூழ்ந்தது. கழுத்தளவு தண்ணீரில் நீந்திச் சென்று எப்படியாவது உடலை இடுகாட்டுக்குக் கொண்டு செல்ல முயற்சித்தோம். எங்கள் நம்பிக்கை வீணானது.

திருவான்மியூர், கண்ணம்மா பேட்டை, கிருஷ்ணாம் பேட்டை இடுகாடுகளைத் தண்ணீர்  சூழ்ந்ததால் புதைக்கவும் வழியில்லை. மரபுரீதியாக  எரியூட்ட விறகும் கிடைக்கவில்லை. மின்மயானத்தில் எரியூட்டவோ மின்சாரம் இல்லை. நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானோம்.

இந்த    இக்கட்டான சூழலில் ம.நடராசன் மற்றும் தொழிலதிபர் மாம்பலம்  சந்திரசேகர் ஆகிய இருவரும் எங்கள் துயருக்குத் தோள்கொடுத்தனர்.

மயானம்  கிடைக்கும் வரையில் உடலை படகு மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பாதுகாக்க, ம.நடராசனின் உதவியாளர்கள் சென்னையில் இருக்கிற  தனியார் மற்றும் அரசாங்க  மருத்துவமனைகளை  எல்லாம் அணுகினர். இறந்து 2 ஆம் நாள் ஆன உடலை மற்ற உடல்களுடன் வைக்க முடியாது என்று  எல்லா  மருத்துவமனைகளும் கைவிரித்துவிட்டன.

இதற்கிடையில்  15577 என்கிற  தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கும் என்று யாரோ சொல்ல, தொடர்பு கொண்டோம்.  அந்த எண்ணில் இருந்தவர்கள் ” உங்கள் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கடிதம் வாங்கி வந்துவிடுங் கள்.  உடலை  நாங்கள் பாதுகாப் பில் வைக்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷன் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்துதான் வைப்போம்” என்றார்கள்.    எங்களுக்கெல்லாம் பேரதிர்ச்சி.

சரியென்று  மனதை  திடப் படுத்திக்கொண்டு, போஸ்ட் மார்ட்டத்துக்கு சம்மதித்து, எங்கள் பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று கடிதம் கேட்டோம். ஆனால், அவர்கள் தர மறுத்துவிட்டனர்.    அதன் பிறகு திருவல்லிக்கேனியில் இருந்த ‘ பென் அண்ட் கோ என்கிற தனியார் அமைப்புக்குக் கொண்டுச் செல்ல  முயற்சித்தோம். அதுவும் தோல்வி அடைந்தது.

மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு 3 ஆம் தேதி இரவு ராமசந்திரா மருத்துவமனைக்கு  ஒரு  ஆம்புலன்ஸில் விக்கிரமனின் உடலைக் கொண்டு சென்றோம். நாங்கள் கொண் டு சென்ற ஆம்புலன்ஸிலேயே எம்பார்ம் செய்து உடலை  பாது காக்க முன்வந்தார்கள்.

4 ஆம் தேதி மதியம் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நேரடியாக  திருவல்லிக்கேணியில் இருக்கும் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்குக் கொண்டுசென்று பயோகேஸ் முறையில் என் தந்தை  விக்கிரமனின் உடலுக்கு எரியூட்டினோம்.

(நன்றி: இந்து)

——————————

விக்கிரமன்  அவர்களை 1984 இல்  இலங்கைக்கு அழைத்துவந்தார் நண்பர்  காவலூர் ஜெகநாதன். அச்சமயம் விக்கிரமன் அமுதசுரபியில்  ஆசிரியர்.  ஜெகநாதன்,  அக்காலப்பகுதியில்  தமது குடும்பத்தினரை  சென்னை மேற்கு அண்ணா நகரில் வைத்துக்கொண்டு , தமிழக இதழ்களில் தொடர்ந்து எழுதினார். அமுதசுரபியிலும் எழுதினார். இந்த நட்புறவினால் அவர் இலங்கைக்கு அழைத்துவந்தவர்கள் இருவர். ஒருவர் கவிஞர் மேத்தாதாசன்,    மற்றவர் விக்கிரமன்.

வீரகேசரிக்கு வருகைதந்த  விக்கிரமன் அங்கு ஆசிரியபீடத்திலிருந்தவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். மிகவும் எளிமையான மனிதர்.  கதர்வேட்டி அணிந்து, அந்தநாளைய தமிழ் ஆசிரியர்கள் போன்று காட்சியளித்தார்.

அதிர்ந்துபேசாமல்  அமைதியாக மற்றவர்களின் உரைகளையே செவிமடுத்தார்.    இலங்கையில் 1983 வன்செயல் சம்பவங்களை அறிந்து கலங்கினார். அதனால் நண்பர் காவலூர் ஜெகநாதனுடன் கொழும்பு புறக்கோட்டையில் நடமாடுவதற்கும் அவருக்கு சற்றுத்தயக்கம் இருந்தது. முக்கிய காரணம் மொழிப்பிரச்சினை. எனினும்  காவலூர் ஜெகநாதன்    அவருடன் எப்பொழுதும் உடனிருந்து  இலக்கிய நண்பர்களிடம் அழைத்துச்சென்றார்.

அவர் சரித்திர நாவலாசிரியராக இருந்தமையாலோ  என்னவோ அந்த இலக்கியத்துறை, எனக்கு  1970 இற்குப்பின்னர் அந்நியமாகியிருந்தது.    அதற்கு முன்னர் பலருடைய சரித்திரக்கதைகளை    படித்துவிட்டு அவற்றில் ஆர்வம் குறைந்துவிட்டது.

அவ்வேளையில்  ஜெயகாந்தன் எம்மை ஆக்கிரமித்துவிட்டார். அவர் ஒரு  சந்தர்ப்பத்தில் தனக்கு சரித்திரக் கதைகளைவிட அம்புலிமாமா கதைகள்தான்  பிடிக்கும் என்றார்.

அதேபோன்று  சுந்தரராமசாமியும் தமது ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலில் – அதன் நாயகன் ஜோசஃப் ஜேம்ஸ் என்ற எழுத்தாளன் – ” உங்கள்  சிவகாமி தனது சபதத்தை முடித்துவிட்டாளா…? ” என்று ஓரிடத்தில் எள்ளலாகக் கேட்பான்.

சரித்திரக்கதைகள்  மீதான வாசிப்பு அனுபவத்தை அதிகரித்தவை வணிக  இதழ்கள்தான். அன்றைய கல்கி, ஆனந்தவிகடன், அமுதசுரபி  என்பன சரித்திரக்கதை வாசகர்களுக்கு தீனி வழங்கின.

கல்கி கிருஷ்ணமூர்த்தியும்  அகிலனும் தமது கதைகளுக்காக இலங்கைவந்து  அநுராதபுரம், கண்டிக்கெல்லாம் பயணித்தனர். கல்கி தம்முடன்  ஓவியர் மணியம் அவர்களையும் அழைத்துவந்தார்.

இலங்கையில் முன்னர் செங்கை ஆழியானும் முல்லைமணியும் சரித்திர  நாவல்கள், நாடகங்கள் எழுதினார்கள். விஹாரமாதேவியும் துட்டகைமுனுவும்,   எல்லாளனும் குவேனியும் சங்கிலியனும் பண்டாரவன்னியனும் காக்கை வன்னியனும் அவர்களின்  பிரதான பாத்திரங்களாக விளங்கியதுபோன்று தமிழக சரித்திரக்கதை ஆசிரியர்களுக்கு மூவேந்தர்களும் அவர்களின் வாரிசுகளும் விளங்கினார்கள்.

இலங்கையில்  தாத்தாமார் பாட்டிமார் எப்பொழுது கல்கி, அமுதசுரபி,   ஆனந்தவிகடன், கலைமகள் வரும் என்று காத்திருந்த காலம் இருந்தது. அவர்களின் வாசிப்பு அனுபவத்தில் அது பொற்காலம்தான்.

ஒவ்வொரு அத்தியாயமும் திருப்பங்களுடன், அடுத்து என்ன என்று  காத்திருக்கச் செய்யும் – சமகாலத்து தமிழக தொலைக்காட்சி சீரியல்களுக்கு  ஒப்பானதாக அன்று வாசகர் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தன.

தற்காலத்தில் முன்னர் வெளியான பொன்னியின் செல்வனின் நீட்சியாக  பாலகுமாரன்   உடையார் எழுதுகின்றார்.

வியாசர்  விருந்து, ராஜாஜியின் மகாபாரதத்தின் நீட்சிக்கு முற்றிலும்  மாற்றாக ஜெயமோகன் வெண்முரசு எழுதுகிறார்.

அதேபோன்று  கல்கி, விக்கிரமன், சாண்டில்யன், ஜெகசிற்பியன்,     நா. பார்த்தசாரதி முதலானோர் விட்டுச்சென்ற சரித்திரக்கதைகளின் மரபை எவரேனும் தொடரலாம்.

கருணாநிதி தனது சரித்திரக்கதைகளுக்கு திரைப்பட – தொலைக்காட்சி சீரியல் வடிவம் கொடுத்துவிட்டார். உளியின் ஓசை, பொன்னர் சங்கர் என்பன வெளியாகிவிட்டன.

உண்மையும்  கற்பனையும் இணைந்து புனையப்பட்;ட சரித்திரக்கதைகளை    எழுதிய மூத்தவர்களின் வரிசையில் நின்ற விக்கிரமனும்    அவர்களைத் தொடர்ந்து சென்றுவிட்டார். எனினும் அவர்களின்    பாத்திரங்கள் வாசகர்களின் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பெரியவர்  விக்கிரமனின் ஆத்மா சாந்தியடையட்டும். இயற்கையின் சீற்றம் தணியட்டும்.

—-0—-

 

Series Navigationஇடுப்பு வலிதொடுவானம் 98. குடும்பமாக கிராமத்தில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *