நீண்ட விடுமுறையை கிராமத்துச் சூழலில் கழித்தது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. தனிமையிலேயே வாழ்ந்து பழகிப்போன நான் உற்றார் உறவினருடன் உல்லாசமாக இருந்தேன். வயல்வெளி. தோட்டம், வைக்கோல் போர், ஆடுமாடுகள், கிராம மக்கள், குளம், ஆறு, குடிசைகள், கோவில் மத்தியில் பொழுது போனது இதமானது. நேரம் வாய்த்தால் கூண்டு வண்டியில் பால்பிள்ளையுடன் குமராட்சி சென்று வருவேன், அப்போது நான்கூட வண்டி ஓட்டுவேன். காளைகள் இரண்டும் பழகிவிட்டதால் என் சொல்லுக்கு கட்டப்பட்டன! அங்கு மீன் இறால் காய்கறிகள வாங்கி வருவோம். ஆற்று மீன்கள் ருசியாக இருக்கும். அதில் விரால் மீன்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
சில நாட்களில் பேருந்து ஏறி சிதம்பராம் செல்வோம்.அங்கு கடைத்தெருவைச் சுற்றி வருவோம். தேவைப்படும் பொருள்களை வாங்கிக்கொள்வேன். என்னிடம் கை நிறைய அப்பாவின் பணம் இருந்ததால் கவலையின்றி செலவு செய்தேன். கிராமத்தில் இருந்தாலும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டால் எந்த குறையும் இல்லாமல் இருக்கலாம்.
அண்ணி வந்தபின் இராஜகிளியின் வருகை கூடியது. கோகிலத்தின் வருகை குறைந்தது. ஆற்றங்கரையில் அவளைப் பார்க்கும்போது மிகுந்த கவலையுடன் காணப்படுவாள். நான் ஆறுதல் கூறுவேன்.அவளோ சமாதானம் ஆகமாட்டாள். அவ்வப்போது அழுவாள். அது எனக்கு பழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்லசெல்ல அவளின் சோகம் கூடியது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அண்ணன் அண்ணி மீண்டும் திருச்சி கிளம்பிவிட்டனர். கோகிலத்தின் முகம் கொஞ்சம் மலர்ந்தது. மீண்டும் வீட்டுக்கு அடிக்கடி வந்து அம்மாவுக்கு உதவியதோடு எனக்கும் பணிவிடை செய்தாள். அப்படிச் செய்வதில் அவளுக்கு ஒருவகையான மனநிறைவு.
” அடுத்த லீவு எப்போது? ‘ இப்படி அடிக்கடி கேட்பாள்.
” மூன்று மாதங்கள் கழித்து. ”
” இன்னும் மூணு மாசமா? ” சொல்லிவிட்டு எதையோ யோசிப்பாள்.
” நான் எங்கும் போய்விட மாட்டேன். கவலையை விடு. ” சமாதானம் சொல்வேன்.
” எனக்கு தீராத கவலைதான். ஏன்தான் இந்த வாழ்க்கையோ? ” விரக்தியுடன் கூறிவிட்டுச் செல்வாள்.
ஒருவாறாக அந்த நீண்ட விடுமுறை முடிவுக்கு வந்தது. மீண்டும் கல்லூரிக்குப் புறப்பட்டேன்.
அந்த இரயில் பிரயாணம் முழுதும் ஊர் நினைவாகவே இருந்தது. நள்ளிரவுக்குப்பின் புகைவண்டி விழுப்புரம் தாண்டி திருவண்ணாமலை நோக்கி ஓடியது. நல்ல நிலவொளி. உறங்கிய ஊர்களையும் பறந்து கிடந்த விளை நிலங்களையும் காண்பது பரவசமானது. அந்த வட்ட நிலாகூட பின்தொடர்ந்து ஓடி வருவது போன்றிருந்தது. வெறும் வெட்டவெளியில் உயர்ந்த பனைமரங்கள் ஆடாமல் அசையாமல் நின்று உறங்குவது போன்றிருந்தது. நிலவொளியில் அந்த காட்சி தீட்டிய ஓவியம் போன்றிருந்தது! புகைவண்டி ஓடும் சத்தம் தவிர சன்னல் வெளியில் மயான நிசப்தம். எங்கும் ஏகாந்தம்! உறக்கம் கண்களைத் தவழும் வரையில் அந்த இரவின் அழகில் கிறங்கிப்போனேன்.
கண்விழித்துப் பார்த்தபோது வேலூர் கண்டோன்மென்ட் நிலையத்தின் பெயர்ப்பலகை தெரிந்தது. துரிதமாக வெளியேறினேன்.
விடுதியை வந்தடைந்ததும் முற்றிலும் வேறு மனிதனானேன். இனி நான் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவன்! ஐந்தரை வருட மருத்துவக் கல்வியில் மேலும் ஒரு படி ஏறிவிட்டேன்! என்னுடைய அறை நண்பர்கள் சம்ருதி, கணேஷ், தாமஸ் மாமன் ஆகியோர் முன்பே வந்துவிட்டனர். மூவரும் தேர்ச்சியுற்றனர். கைகொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.. நலன் விசாரித்தனர். எங்கள் வகுப்பில் சார்லஸ் பிரேம்குமார் மட்டுமே ஆங்கிலப் பாடத்தில் தொல்வியுற்றுள்ளான். இவ்வளவுக்கும் அவன் நன்றாக ஆங்கிலம் பேசுபவன். ஏனோ ” த மேயர் ஒப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவலை அவன் சரியாகப் படிக்கவில்லை. ஆங்கில வகுப்பில் அனைவரும்தான் தூங்கினோம் – அவன் உட்பட! அப்படி தூங்கினாலும் தேர்ச்சி பெறுவோம் என்று சாதனை புரிந்த எங்களில் அவன் மட்டும் தேர்ச்சி பெற முடியாமல் போனது பெரும் அதிர்ச்சியாகும்! ஆனால் பரவாயில்லை. அவன் எங்களுடன் இரண்டாம் ஆண்டு வகுப்பில் இருந்துகொண்டே ஆறுமாதம் கழித்து மீண்டும் ஆங்கிலம் எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்.
காலை உணவின்போது நாங்கள் அனைவருமே புதுத் தெம்புடன் கலகலவென்றிருந்தோம். இரண்டாம் ஆண்டுக்குள் நுழையும் பெருமிதமும் உற்சாகமும் அனைவரின் முகத்திலும் பிரதிபலித்தது. இரண்டாம் ஆண்டு மிகவும் கடினமானது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதையும் வெல்வோம் என்ற மன தைரியத்துடன் புது வகுப்புக்குப் புறப்பட்டோம்.
அது அனேட்டோமி வகுப்பு. அனேட்டோமி என்பது உடற்கூறு. மனித உடலின் எல்லா பகுதிகளும் எவ்வாறு அமைந்துள்ளது என்பது பற்றிய படிப்பு. இதை இரண்டு வருடங்கள் பயில வேண்டும். மூன்றாம் ஆண்டு சென்றுவிட்டாலும் இதைத் தொடர்ந்து படிக்கவேண்டும். இதில் தேர்வு பெற்றால்தான் அடுத்த வகுப்புக்கு போகமுடியும். இல்லையேல் ஆறு மாதங்கள் காத்திருந்து மீண்டும் தேர்வு எழுதவேண்டும்.
அனேட்டோமி அவ்வளவு சுலபமானது இல்லை. ” த கிரெய்ஸ் அனேட்டோமி ” என்ற மொத்தமான ( பாரமான ) நூல் வாங்கியிருந்தோம். அதில் மனித உடலின் அனைத்து பாகங்களும் படங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கும். அதை முழுதும் படித்தாகவேண்டும். அது மட்டுமல்ல. அதைப் படிக்கும்போதே அந்தந்தப் பகுதியை மனித உடலில் ( பிணத்தில் ) அறுத்துப் பார்க்கவும் வேண்டும். அதற்கு ” டிசக்ஸ்ஷன் ” என்று பெயர். இதற்கு அறுப்பது என்று பொருள்.
காலையில் முதல் வகுப்பு அனேட்டோமிதான். அது தனி கட்டிடத்தில் இருந்தது. அதற்கு ” அனேட்டோமி புளோக் ” என்று பெயர். வகுப்பறை அங்குதான் உள்ளது. அதைச் தாண்டிச் சென்றால் ” டிசக்ஸ்ஷன் ஹால் ” உள்ளது. அங்குதான் மனிதப் பிரேதங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை அறுத்துப் பார்த்து உடல் கூறு பயீலும் கூடம் அது.
அங்கு உடன் சென்று பார்க்க ஆவல்தான். ஆனால் ஒருவித பயமும் குடிகொண்டது.
வகுப்பு ஆசிரியை கிரேஸ் கோஷி. மலையாளிதான். நல்ல நிறத்தில் ஒல்லியாக இருந்தார். எங்களை அறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார்.அதன்பின் எங்களை அறுவைக் கூடத்துக்கு இட்டுச் சென்றார்.
மனம் பதைபதைக்க அவரைப் பின்தொடர்ந்தோம். அது பெரிய கூடம். அங்கு வெள்ளை நிறத்தில் நீண்ட மேசைகள் காணப்பட்டன. ஒவ்வொன்றிலும் ஒரு பிரேதம் கிடத்திவைக்கப்பட்டிருந்தது! ஆண்களும் பெண்களும் கருகிய உடலுடன் விறைத்துப்போன நிலையில் நிர்வாணமாக ஆடாமல் அசையாமல் கிடந்தன! அதைக் கண்ட எனக்கு ஒரு கணம் மூச்சு நின்றுபோனது! இத்தனை பிணங்களா? என்னால் நம்ப முடியவில்லை! இங்குதான் நாங்கள் தினமும் காலையில் உடற்கூறு பயிலவேண்டும் என்றார் கிரேஸ்.
இவற்றை எவ்வாறு பாதுக்காகின்றனர் என்பதை விவரித்த அவர் அந்தக் கூடத்தின் கடைசிப் பகுதிக்குக் கூட்டிச் சென்றார். அங்கு சென்றதும் மூக்கைத் துளைக்கும் ஒரு நெடி ஏறியது. அங்கு பெரிய கிணறு இருந்தது. அதனுள் பல பிரேதங்கள் மூழ்கிக் கிடந்தன. அந்தக் கிணற்றில் ” போர்மலின் ” திரவம் நிறைந்திருந்தது. அதில் பிரேதங்களைப் போட்டுவிட்டால் எத்தனை மாதங்கள் ஆனாலும் உறுப்புகள் கேடாமல் இருக்குமாம்!
இவ்வளவு பிரேதங்கள் ஏது என்று கேட்டோம். அவை அனைத்தும் அனாதைப் பிரேதங்களாம். சில அரசு மருத்தவமனைகளில் கிடைப்பவையாம். அங்கு இறந்துபோகும் அனாதைகளை இங்கு கொண்டுவந்துவிடுவார்களாம். சில வீதிகளில் இறந்து கிடக்கும் அனாதைப் பிரேதங்களாம். அதோடு வேறு சில இடங்களிலிருந்தும் பிரேதங்கள் கிடைக்குமாம்.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே தள்ளு வண்டியில் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட ஒரு பிரேதத்தைக் கொண்டுவந்தனர். அது அன்று காலையில் வேலூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டதாம்! துணியை விலக்கினர்.. அது ஒரு ஆண். அதன் மூக்கிலும் வாயிலும் நுரையும் இரத்தமும் வழிந்தது.!
மருத்துவம் பயில வந்துவிட்டேன். இனிமேல் சாவு பிணம் போன்றவற்றைக்கண்டு அஞ்சக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாலும் மனதுக்குள் எதோ ஒன்று உறுத்தியது!
( தொடுவானம் தொடரும் )
- திண்ணையில் வெளியான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் வெளியீடு
- எனது ஜோசியர் அனுபவங்கள் – பகுதி 3
- புத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .
- 13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)
- தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
- திருமதி ஒல்காவின் “விமுக்தா” என்ற படைப்பிற்காக அவருக்கு சாகித்ய அக்காதமி விருது
- இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்
- பூகோளச் சுற்று அச்சின் சாய்வு மாறுதல் பூமியின் சூடேற்ற நிலையைப் பேரளவு பாதிக்கிறது
- யார் இவர்கள்?
- ஓவியக்கவி கலீல் கிப்ரான் கவிதை நூல் வெளியீடு
- ஞானத்தின் ஸ்தூல வடிவம்
- பசியாக இருக்குமோ…
- ஆ.மாதவனுக்கு வாழ்த்துகள்
- ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்
- மழை நோக்கு
- பறந்து மறையும் கடல்நாகம் – வெளியீடு
- அடையாளம்
- சொல்வனம் – விருட்சம் சேர்ந்து நடத்தும் கூட்டம் கலந்து உரையாடல் – 02.01.2016