தெரு முனையில் நின்று பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் வயல்கள் பச்சைப் பசேலென்று வரைந்த ஓவியம் போன்று காட்சி தந்தன. அவற்றை மூடியிருந்த இளம் நாற்றுகள் காலைக் காற்றில் சீராக ஒரு பக்கம் சாய்ந்தபடி அசைந்தாடின. சிறிது நேரம் அப்படியே நின்று இயற்கையுடன் செயற்கை கலந்த அழகில் லயித்துப்போனேன்.
வயல்வெளி வேலைகளெல்லாம் முடிந்து விட்டதால் ஆள் நடமாட்டம் அறவே இல்லை. தூரத்தில் வரப்பின் மீது ஒரு பெண் உருவம் மட்டும் தெரிந்தது. அவள் கோகிலம்தான் அவள் புறப்படுமுன் என்னைப் பார்த்து சைகை செய்துவிட்டுதான் சென்றாள். ஆண்டவர் கோவில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வரப்பின் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டும். வயல்களில் ஈரம் இருந்ததால் வரப்பிலும் சில இடங்களில் ஈரம் இருக்கும். அதோடு இரவில் பெய்த பனியில் வரப்பில் புல் நனைந்திருக்கும். கவனமாகச் செல்லாவிடில் வழுக்கிவிழ நேரிடும்
ஆற்றங்கரையில் பார்ப்பது போதாதென்று எதற்கு இப்படி தனிமையில் யாரும் செல்லாத ஆண்டவர் கோவிலுக்கு இன்று வரச்சொல்கிறாள் என்று குழம்பிய நிலையில்தான் வரப்பில் நடக்கலானேன்.
சின்னத் தெரு வழியாக சென்றபோது ஓரிருவர் காலையிலேயே எங்கே என்று கேட்டனர். கிழக்கு வெளியில் எங்களுடைய வயல்களைப் பார்க்க என்று பதில் சொல்லிவிட்டு தொடர்ந்து வரப்பில் நடக்கலானேன்.
அதோ ஆண்டவர் கோவிலும் நெருங்கிவிட்டேன். அவள் உள்ளே சென்றுவிட்டாள். நான் நெருங்க நெருங்க அந்த மயான அமைதியைக் கலைத்துக்கொண்டு இனிமையான குரலில் ஒரு கீதம் கேட்டு வியந்து நின்றேன். அது கோவிலினுள்ளிருந்து ஒலித்தது. கோகிலம் இவ்வளவு அருமையாகப் பாடுவாளா? எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது!
” ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்
ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடிஎன் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்உள்ளமெங்கும் தேடினேன் உறவினைக் கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன் பிரிவினைக் கண்டேன்
ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்
கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ
கைகொடுத்த தெய்வம் இன்று எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்துவிட்டு எங்கே நின்றதோ
இன்று கண்கலங்க நின்றிருந்தேன் சேதி வந்தது
நான் கடந்து வந்த வானில் விடிவெள்ளி முளைத்தது
ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்
காண வந்த மாளிகையின் கதவு திறந்தது
பெரும் கருணையோடு அருள் விளங்கும் கண் திறந்தது
ஆற்று வெள்ளம் போல நெஞ்சின் மடை திறந்தது
நல்ல அமர தீபம் போல வாழ்வில் ஒளி பிறந்தது
ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்
தாழ்வினிலும் வாழ்வினிலும் உங்கள் கையினிலே
என் சஞ்சலமும் நிம்மதியும் உங்கள் கண்ணிலே
வாழ்க என்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம்
வாழ்க என்று நீங்கள் சொன்னால் வாழும் என் மனம்
இல்லை மறைக என்று வரம் கொடுத்தால் மறைய சம்மதம். ”
பாடலின் கடைசி வரிகளைப் பாடியபோது அழுதுகொண்டு பாடியது தெரிந்தது. எனக்கும் அந்த பாடல் சோகத்தை உண்டுபண்ணியது. அது ஜிக்கி பாடிய புகழ் பெற்ற பாடல். அதன் இனிமையான இசையை அமைத்தவர் ஏ. எம். ராஜா. படம் தேன்நிலவு. கவிஞர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத அந்த கவிதை வரிகளை அப்படியே மனதில் வைத்து இவள் பாடுகிறாளே. இத்தனை காலமும் இவள் பாடுவாள் என்று எனக்குத் தெரியாதே. அவளும் அது பற்றி சொல்லவே இல்லையே!
கோவிலின் வாசலுக்கு வந்து விட்டேன். உள்ளே எட்டிப் பார்த்தேன். லேசான இருட்டு. சுவர்களில் சன்னல் இல்லை. உள்ளே நுழைந்தேன்.
என்னைக் கண்ட அவள் கதறியபடி என் காலடியில் விழுந்தாள்! நான் செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நின்றேன். அவளில் கண்ணீர் என் கால்களை நனைத்தது.
” கோகிலம்! என்ன இது? ” என்று குனித்து அவளைத் தூக்க முயன்றேன். அவள் எழவில்லை. இறுக்கமாக என் கால்களைப் பற்றிக்கொண்டாள்.
” மொதல்ல என்ன ஆசீர்வதியுங்க . ” அவள் கெஞ்சினாள்! என் கண்கள் கலங்கின.
” எனக்கு விடை கொடுங்க. ” அவள் என்னை அண்ணாந்து பார்த்துக் கேட்டாள்.
” எதற்கு ஆசீர்வாதம்? எங்கே போகிறாய் விடை தர? ” அவளுடைய தோள்களைப் பற்றி தூக்க முயன்றபடி கேட்டேன்.
” மொதல்ல ஆசீர்வாதம். அப்புறம் சொல்றேன். ” அவள் அழுத்தமாகச் சொன்னாள்.
” சரி சகலவிதமான ஆசீர்வாதங்களுடன் வாழ்வாயாக. போதுமா/ ” என்றவாறு தலையைத் தொட்டேன்.
” நான் இனி நிம்மதியா போவேன். ” என்றவாறு எழுந்தாள்.
” கோகிலம். இதெல்லாம் என்ன? எனக்கு ஒன்றும் புரியலை.” பரபரப்புடன் அவளிடம் கேட்டேன்.
” ஒங்களுக்கு ஒண்ணுமே புரியாது. ஒங்கள நம்பியது போதும். நான் போகவேண்டிய எடத்துக்குப் போறேன்.”
” அதுதான் எங்கே என்று கேட்கிறேன். ”
” அது நாளைக்கு ஒங்களுக்குத் தெரியும். பின்னாடி ஒங்க வாழ்நாள் முழுசும் இந்த கோகிலத்த நீங்க மறக்கமாட்டீங்க! ” அது கேட்டு என் உடல் நடுங்கியது.
” கோகிலம். இது என்ன விபரீத முடிவு? நாளை நான் கல்லூரிக்குத் திரும்பணும். நீ இப்படியெல்லாம் செய்வது சரியா? நம் உறவு தவறானது என்றுதானே சொன்னேன். அதற்கு இப்படியா? நாளைக்கு நீ என்ன செய்யப்போகிறாய்? தயவு செய்து அப்படி ஏதும் செய்துவிடாதே. வாழ்க்கை வாழ்வதற்கே! நன்றாக யோசித்துப்பார்.” அவளை சமாதானம் செய்ய முயன்றேன்.
” நான்தான் சொல்லிட்டேனே. எனக்கு இந்த வாழ்க்க கொஞ்சமும் பிடிக்கல… அதனால…..”
” அதனால்? தற்கொலை செய்துகொள்ளப் போகிறாயா? ”
” எனக்கு எது சரி எனப்படுதோ அதத்தான் செய்யப்போறேன்.இனியும் என்னால் ஒங்களுக்குப் பெரச்ன வேண்டாம். நானும் நீங்க வருவீங்க வருவீங்கன்னு இனி காத்திருக்க வேண்டியதில்ல. ”
” நீ முட்டாள் தனமாக முடிவெடுக்கிறாய். நான் உன்னை சாகவிட மாட்டேன். உனக்கு அன்புதானே வேண்டும்? அதை வேண்டுமானால் நான் தருகிறேன். வேறு எதையும் என்னால் தர முடியாது. … ”
” ஒங்க அன்பு ஒண்ணே போதும். அந்த நெனப்போடு நான் போறேன்.எனக்கு விட கொடுங்க ”
அப்போது கோவிலின் வெளியில் யாரோ இருமுவது கேட்டது.
பால்பிள்ளை வந்துவிட்டான் என்பது தெரிந்தது. அவனை நான்தான் கொஞ்ச நேரம் கழித்து ஆண்டவர் கோவிலுக்கு வரச் சொன்னேன். அது ஒரு முன்னெச்சரிக்கை செயல்.
நான் அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். பால்பிள்ளை எங்களைப் பார்த்து சிரித்தான்.
மூவரும் வீடு நோக்கி நடந்தோம்.
( தொடுவானம் தொடரும் )
- நான் ஒரு பிராமணன்?
- தொடுவானம் 106. சோக கீதம்
- அ. கல்யாண சுந்தரம் என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் -ஆவணப்படம்
- கானல் வரிகள்
- ஒப்பற்ற பொறியியல் சாதனை பனாமா கடல் இணைப்புக் கால்வாய்
- இரு கவிதைகள்
- காதலர் தினம்
- ‘நறுக்’ கவிதைகள்
- இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…
- கதை சொல்லி .. நிகழ்ச்சி
- சி. கு. மகுதூம் சாயபுவின் பன்முக ஆளுமை
- “நியாயம்”
- ஒத்திகைகள்
- “ஒரு வார்த்தை ஒரு லட்சம்”
- “எஸ்.எம்.ஏ.ராம் நாடகங்கள்”-புதிதாக வெளி வந்திருக்கும் நாடகத் தொகுப்பு நூல்
- இறுதி விண்ணப்பம்
- பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…
- இனிய மணம் வீசும் இருவாட்சி மலர்
- மெக்காவை தேடி -1